திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions பொதுக்காலம் 2ம் வாரம் (2026-01-18)

0 views
Skip to first unread message

HolyMassReadings

unread,
Jan 14, 2026, 1:42:26 AMJan 14
to read...@tamilcatholicdaily.com
 
 
 

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions
பொதுக்காலம் இரண்டாவது வாரம்
(2026-01-18)
திருவழிபாடு ஆண்டு –1
(இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3, யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34)

(PDF Format இணைக்கப்பட்டுள்ளது)
www.tamilcatholicnews.com



திருப்பலி முன்னுரை

அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலம் இரண்டாவது வாரம் -ஞாயிற்றுக்கிழமை திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். திருமுழுக்கு யோவானுக்கு இயேசுவை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் இயேசுவை இவ்வாறு அறிமுகம் செய்கிறார். இவர் ஒரு பலி கடா. அப்பாவி. எதார்த்தவாதி. பிறருக்காக எதையும் இழப்பதற்கு தயாராக இருப்பார். அடுத்தவன் வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தன் நேரம், பணம், உழைப்பு அனைத்தையும் பொதுப்பணிக்கென செலவிடுவார். இதுபோன்ற அனைத்தையும் உள்ளடக்கி, அவர் ஒரு ஆட்டுக்குட்டி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டார். என்னையும் உங்களையும் ஒரு மேடையில் ஒருவரை அறிமுகப்படுத்தச் சொன்னால், நம்மைப்பற்றி என்ன சொல்வார்? அடுத்ததாக, நீங்களும் நானும் ஒருவரை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி செயல்படுவோம்?. என்ன சொல்வோம்? இன்று நாம் மேடைகளில் பார்க்கின்றோமே அதுபோல வானளாவப் புகழ்வோமா? அல்லது எதார்தமாக, உள்ளதை உள்ளவாறு சொல்வோமா? திருமுழுக்கு யோவான்போல நெஞ்சில் உரமும் நேர்மை திறனும் இருந்தால் நெத்தியடியாக நாம் அறிமுகப்படுத்துவோம். தீர்மானிப்போம். செயல்படுவோம். வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல்வாசகம்
உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 3.5-6

ஆண்டவர் என்னிடம், `நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார். ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப்பாடல்
உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40: 1,3. 6- 9

1 நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். 3யb புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். பல்லவி

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி

7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி


இரண்டாம் வாசகம்
இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-3

கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிட மிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 1: 14a, 12b
அல்லேலூயா, அல்லேலூயா! வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 29-34

இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ``இதோ! கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப் பற்றியே சொன்னேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்'' என்றார். தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ``தூய ஆவி புறாவைப் போல வானிலிருந்து இறங்கி இவர்மீது இருந்ததைக் கண்டேன். இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் `தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறி வருகிறேன்.''

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


சீயோனிலிருந்து நல் ஆசீர் வழங்கும் எம் இறைவா!
உம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் தூயஆவியில் புத்துணர்வுப் பெற்று எம்மீட்பராம் இயேசுவின் மாட்சிமையை உணர்ந்துத் தங்கள் வாழ்க்கையின் மூலம் அனைவரையும் இயேசுவின் சீடர்களாய், அன்பைப் பகிர்ந்துடும் மக்களாய் வாழ்ந்திட அருளாசீர் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உம் திருமலையிலிருந்து எமக்குப் பதிலளிக்கும் எம் இறைவா!
எங்கள் குடும்பங்களின் தேவைகளை அறிந்து எம்மன்றாட்டுகளுக்குச் செவிசாய்தருளும். நாங்கள் உம்மிடம் வேண்டிக்கேட்பதைவிட மேலானவற்றைப் பொழிந்து எம்குடும்பங்களில் அன்பும் நட்பும் மலர அனைவரும் ஒன்றிணைந்துச் செயல்பட வேண்டிய ஞானத்தையும் விவேகத்தையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்களைச் சூழ்ந்திருக்கும் எம் அன்பு இறைவா!
இந்த நல்ல நாட்களில் பொங்கல் விழாவைக் கொண்டாடி மகிழும் எம் உழைக்கும் மக்களின் வாழ்வில் விவசாயம் பெருகவும், அதன் மூலம் ஏழை எளியோர்கள் பொருளாதரம் பல்கிப்பெறுகிடவும், அவர்தம் பிள்ளைகள் கல்விச்செல்வங்கள் நிறைவாய் பெற்றிடவும், இயேசுவின் வருகையால் மாற்றங்கள் பெற்றிடவும் அருள் வரம் தர வேண்டுமென்று இறைவாஉம்மை மன்றாடுகிறோம்.

உம் இறக்கைகளின் பாதுகாப்பில் எம்மை அரவணைக்கும் எம் இறைவா!
உலகெங்கும் உள்ள இளையோர்களை மாற்றங்களால் நாளுக்குநாள் மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகச் சுகபோகவாழ்க்கையிலிருந்து மீட்டுத் தன்னலமற்ற சேவை வாழ்க்கையில் ஈடுபடவும், சமுதாயத்தில் தங்களின் தூயவாழ்வால் இயேசுவின் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா!
எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



இன்றைய சிந்தனை

''இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்...' என்றார்'' (யோவான் 1:29) இயேசு யார் என்பதை மக்களுக்கு அறிவிக்கும் விதத்தில் சான்றுபகர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவ்வாறு சான்று பகர்ந்தவர்களில் மிகச் சிறந்தவர் திருமுழுக்கு யோவான் என்றால் மிகையாகாது, யோவான் இயேசு யார் என்பதைப் பல உருவகங்கள் வழியாக விளக்கினார். அவற்றுள் ஒன்றுதான் ''ஆட்டுக்குட்டி'' என்பதாகும். இதன் பொருள் என்ன? கால்நடைகளை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த அக்கால மக்கள் நடுவே ''ஆட்டுக்குட்டி'' என்பதற்கு ''அன்பார்ந்த குழந்தை'' என்றொரு பொருள் உண்டு. நாம் ''செல்லப் பிள்ளை'' என்பது இதைப் போன்றதுதான். இயேசு உண்மையிலேயே கடவுளின் அன்பார்ந்த மகன் என்பது இதனால் உணர்த்தப்படுகிறது. ஆட்டுக்குட்டி யூதர்கள் நடுவே இன்னொரு சிறப்புப் பொருளையும் கொண்டிருந்தது. அதாவது, கோவிலில் பலி செலுத்துவதற்காகப் பயன்பட்ட சிறந்த பலிப்பொருள் ஆட்டுக்குட்டி. இயேசு இப்பெயரால் அழைக்கப்படுவது அவர் தம்மையே கடவுளுக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பார் என்பதைக் குறிக்கிறது.
ஆட்டுக்குட்டி பலியாக்கப்படுவது கடவுளிடமிருந்து பாவ மன்னிப்பை இறைஞ்சுவதற்காக. எனவே, இயேசு என்னும் ஆட்டுக்குட்டி பாவங்களைப் போக்குபவர் ஆவர். ஆக, யோவான் இயேசுவைக் கடவுளின் ஆட்டுக்குட்டி என்று அடையாளம் காட்டியதன் மூலம் இயேசு ஆற்றவிருந்த பணியைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறிவிட்டார்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.







***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse in...@tamilcatholic.de.

www.tamilcatholicnews.com
என்ற இணையத்தளகுழுவினரால்இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த மின்னஞ்சல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பாவிடில் அல்லது இவ் மின்னஞ்சல்களில் ஏதாவது அசௌகரியங்கள் இருப்பின், in...@tamilcatholic.de என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தரவும்.

This Email is sent by the web design team of www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list or if you have some difficulties with this email, please contact us via our email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************



Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.



http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge

20260118_full.pdf
20260118_short.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages