திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (2026-03-29)

0 views
Skip to first unread message

HolyMassReadings

unread,
Mar 25, 2026, 6:01:49 PM (2 days ago) Mar 25
to read...@tamilcatholicdaily.com
 
 
 

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions
ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
(2026-03-29)
திருவழிபாடு ஆண்டு –1
(இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7, திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11, மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 26:14 - 27:66)

(PDF Format இணைக்கப்பட்டுள்ளது)
www.tamilcatholicnews.com



திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவுக்குரியவர்களே, நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு திருவழிபாட்டு நிகழ்வுகளுக்கு உங்களை வரவேற்கின்றோம். "தாவீதின் மகனுக்கு ஓசன்னா!" - "ஆண்டவரே எங்களை விடுவித்தருளும்!" என்ற ஆர்ப்பரிப்போடு தொடங்கிய இயேசுவின் எருசலேம் பயணம், "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை" என்ற ஏளனப் பேச்சோடு முடிவுக்கு வந்ததை இன்று நாம் தியானிக்க இருக்கிறோம். அமைதியின் அரசராய் கழுதை மீது பவனி வந்த இயேசு, கடவுளின் ஆட்டுக்குட்டியாய் கல்வாரியில் தம்மை பலியாக்குவதை காண்கிறோம். மரக்கிளைகளை வெட்டிப்போட்டு, தங்கள் மேலாடைகளை வழியில் விரித்து இயேசுவை வரவேற்ற அதே இஸ்ரயேல் மக்கள், அவரது ஆடைகளைக் களைந்து சிலுவை மரத்தில் தொங்கவிட்ட கொடூரக் காட்சியை நினைவுக்கு கொண்டு வருகிறோம். இறைத்தந்தையின் திட்டப்படி இறைவாக்கினர் உரைத்தது நிறை வேறுமாறு, நமது பாவங்களுக்காக இறைமகன் இயேசு மரணம் வரை கீழ்ப்படிந்தார். கடவுளின் திட்டத்தை செயல்படுத்த நம்மை முழு மனதோடு அர்ப்பணிக்கும் வரம் கேட்டு, இந்த திருவழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்போம்.



முதல்வாசகம்
அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7

நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.
நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப்பாடல்
என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திருப்பாடல் 22:7-8, 16-17, 18-19, 22-23

7 என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர். பல்லவி

16 தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். 17aஎன் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

18 என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19 நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

22 உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23 ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி


இரண்டாம் வாசகம்
தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11

கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
பிலி 2:8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 26:14 - 27:66

வாசிப்பவர் : பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,

யூதாஸ்: இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான். புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து,

சீடர்கள்: "நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?"

வாசிப்பவர் : என்று கேட்டார்கள். இயேசு அவர்களிடம்,

இயேசு: "நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், "எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்" எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்; "

வாசிப்பவர் : என்றார். இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள். மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர்,

இயேசு: "உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய்,

சீடர்கள்: "ஆண்டவரே, அது நானோ?"

வாசிப்பவர் : என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு அவர்,

இயேசு: "என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்"

வாசிப்பவர் : என்றார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும்

யூதாஸ்: "ரபி, நானோ?"

வாசிப்பவர் : என அவரிடம் கேட்க இயேசு,

இயேசு: "நீயே சொல்லிவிட்டாய்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து,

இயேசு: "இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்"

வாசிப்பவர் : என்றார். பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து,

இயேசு: "இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள். அதன்பின்பு இயேசு அவர்களிடம்,

இயேசு: "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில் "ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்" என்று மறைநூலில் எழுதியுள்ளது. நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்"

வாசிப்பவர் : என்றார். அதற்குப் பேதுரு அவரிடம்,

பேதுரு:: "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்"

வாசிப்பவர் : என்றார். இயேசு அவரிடம்,

இயேசு: "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். பேதுரு அவரிடம்,

பேதுரு:: "நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்"

வாசிப்பவர் : என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள். பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர்,

இயேசு: "நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்"

வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறி, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர்,

இயேசு: "எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்"

வாசிப்பவர் : என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து,

இயேசு: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்"

வாசிப்பவர் : என்று கூறி இறைவனிடம் வேண்டினார். அதன் பின்பு அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம்,

இயேசு: "ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்"

வாசிப்பவர் : என்றார். மீண்டும் சென்று,

இயேசு: "என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்"

வாசிப்பவர் : என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். பிறகு சீடர்களிடம் வந்து,

இயேசு: "இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்"

வாசிப்பவர் : என்று கூறினார். இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்நது. அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், "நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று,

யூதாஸ்: "ரபி வாழ்க"

வாசிப்பவர் : எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம்,

இயேசு: "தோழா, எதற்காக வந்தாய்?"

வாசிப்பவர் : என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குரவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம்,

இயேசு: "உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?"

வாசிப்பவர் : என்றார். அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து,

இயேசு: "கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன"

வாசிப்பவர் : என்றார்.அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். பேதுரு தொலைவில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். அவர்கள்,

இருவர்: "இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம்,

தலைமைக்குரு: "இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?"

வாசிப்பவர் : என்று கேட்டார். ஆனால் இயேசு பேசாதிருந்தார். மேலும் தலைமைக் குரு அவரிடம்,

தலைமைக்குரு: "நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். அதற்கு இயேசு,

இயேசு: "நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்"

வாசிப்பவர் : என்றார். உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு,

தலைமைக்குரு: "இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

வாசிப்பவர் : என்று கேட்டார். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் சாக வேண்டியவன்"

வாசிப்பவர் : எனப் பதிலளித்தார்கள். பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,

மக்கள்: "இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்"

வாசிப்பவர் : என்று கேட்டனர். பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து,

பணிப்பெண்: "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே"

வாசிப்பவர் : என்றார். அவரோ,

பேதுரு:: "நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை"

வாசிப்பவர் : என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண்; அவரைக் கண்டு,

பணிப்பெண்: "இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்"

வாசிப்பவர் : என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். ஆனால் பேதுரு,

பேதுரு:: "இம்மனிதனை எனக்குத் தெரியாது"

வாசிப்பவர் : என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து,

சிலர்: "உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில் உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அப்பொழுது அவர்,

பேதுரு:: "இந்த மனிதனை எனக்குத் தெரியாது"

வாசிப்பவர் : என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. அப்பொழுது, "சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார். பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர். அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து,

யூதாஸ்: "பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்"

வாசிப்பவர் : என்றான். அதற்கு அவர்கள்,

குருக்கள்,மூப்பர்: "அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்"

வாசிப்பவர் : என்றார்கள். தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து,

தலைமைக் குருக்கள்: "இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல"

வாசிப்பவர் : என்று சொல்லி, கலந்தாலோசித்து, அன்னியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். இதனால்தான் அந்நிலம் "இரத்த நிலம்" என இன்றுவரை அழைக்கப்படுகிறது. "இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப்பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக்காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது. இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி,

பிலாத்து:: "நீ யூதரின் அரசனா?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அதற்கு இயேசு,

இயேசு: "அவ்வாறு நீர் சொல்கிறீர்"

வாசிப்பவர் : என்று கூறினார். மேலும் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீதும் குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. பின்பு பிலாத்து அவரிடம்,

பிலாத்து:: "உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?"

வாசிப்பவர் : என்றான். அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான். மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். அந்நாளில் பரபா என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து:: "நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா? அல்லது மெசியா என்னும் இயேசுவையா?"

வாசிப்பவர் : என்று கேட்டான். ஏனெனில் அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி,

பிலாத்துவின் மனைவி: "அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில் அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்"

வாசிப்பவர் : என்று கூறினார். ஆனால் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். ஆளுநன் அவர்களைப் பார்த்து,

பிலாத்து:: "இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?"

வாசிப்பவர் : எனக் கேட்டான். அதற்கு அவர்கள்

மக்கள்: "பரபாவை" என்றார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து:: "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?"

வாசிப்பவர் : என்று கேட்டான். அனைவரும்,

மக்கள்: "சிலுவையில் அறையும்"

வாசிப்பவர் : என்று பதிலளித்தனர். அதற்கு அவன்,

பிலாத்து:: "இவன் செய்த குற்றம் என்ன?" என்று கேட்டான். அவர்களோ,

மக்கள்: "சிலுவையில் அறையும்"

வாசிப்பவர் : என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து,

பிலாத்து:: "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்"

வாசிப்பவர் : என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். அதற்கு மக்கள் அனைவரும்,

மக்கள்: "இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்"

வாசிப்பவர் : என்று பதில் கூறினர். அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான். ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு,

படைவீரர்: "யூதரின் அரசரே, வாழ்க!"

வாசிப்பவர் : என்று சொல்லி ஏளனம் செய்தனர்; அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர். அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். "மண்டையோட்டு இடம்" என்று பொருள்படும் "கொல்கொதா "வுக்கு வந்தார்கள்; இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்; பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் "இவன் யூதரின் அரசனாகிய இயேசு" என்று எழுதப்பட்டிருந்தது. அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து,

மக்கள்: "கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள். நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா"

வாசிப்பவர் : என்று அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். அவர்கள்,

மறைநூல் அறிஞர், முப்பர்கள்: "பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். "நான் இறைமகன்" என்றானே!"

வாசிப்பவர் : என்று கூறினார்கள். அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள். நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு,

இயேசு: "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது, "என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?"

வாசிப்பவர் : என்று உரத்த குரலில் கத்தினார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு,

சிலர்: "இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்"

வாசிப்பவர் : என்றனர். உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். மற்றவர்களோ,

மற்றவர்கள்:: "பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்"

வாசிப்பவர் : என்றார்கள். இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

(அனைவரும் சிறிது நேரம் முழந்தாள் படியிட்டு ஜெபிப்போம்)

வாசிப்பவர் : அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி,

காவலர்கள்: "இவர் உண்மையாகவே இறைமகன்"

வாசிப்பவர் : என்றார்கள். கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள். மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர். மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். அவர்கள்,

தலைமைக்குரு, பரிசேயர்: "ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது "மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்" என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. ஆகையால் மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, "இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்"

வாசிப்பவர் : என்றனர். அதற்குப் பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து:: "உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்"

வாசிப்பவர் : என்றார். அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


மாட்சி அளிப்பவரே இறைவா,
எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் உமது திருவுளத்தை கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றி சான்றுபகரும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

நிறைவு தருபவரே இறைவா,
சிலுவையில் தம்மையே பலியாக்கிய கிறிஸ்து இயேசுவில் உமது திட்டத்தின் நிறைவினைக் கண்டுணர, உலக மக்கள் அனைவருக்கும் ஞானமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பு வழங்குபவரே இறைவா,
கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் வழியாக மனித குலத்துக்கு நீர் அளித்த மீட்பை சுவைத்து மகிழும் வரத்தை எம் நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

20260329_full.pdf
20260329_short.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages