திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions திருநீற்றுப் புதன் (2026-02-18)

3 views
Skip to first unread message

HolyMassReadings

unread,
Feb 16, 2026, 1:36:28 PMFeb 16
to read...@tamilcatholicdaily.com
 
 
 

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions
திருநீற்றுப் புதன்
(2026-02-18)
திருவழிபாடு ஆண்டு –1
(இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18, திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2, மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18)

(PDF Format இணைக்கப்பட்டுள்ளது)
www.tamilcatholicnews.com



திருப்பலி முன்னுரை

இன்று திருநீற்றுப்புதன் அதாவது தவக்காலத்தின் தொடக்க நாளாகும். மானிடமகன் இயேசு பணி வாழ்வை தொடங்குமுன் நாற்பது நாட்கள் உண்ணா நோன்பிருந்தார். இதனை அவர் எமக்கு முன்மாதிரிகையாக காட்டியுள்ளார். நோன்பு, தர்மம், செபம் ஆகிய மூன்று செயல்களையும் ஒருங்கே நடைமுறைப்படுத்தி எம்மை நாமே பக்குவப்படுத்திக்கொள்ளும் காலமாகும். முதல் வாசகத்தில் யோவேல் இறைவாக்கினர் நாம் பாவங்களுக்காக மனம் வருந்தி, நோன்பிருந்து, செபித்து இறைவனிடம்வர அழைப்பு விடுக்கின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கொருந்தியர்களுக்கு கடவுளோடு ஒப்புரவாகும் நாளே மீட்பின் நாளாகையாால் கடவுளின் அருளை வீணாக்க வேண்டாம் என கூறுகின்றார். மத்தேயு நற்செய்தியில் இயேசு எப்படி நோன்பிருப்பது என தமது சீடருக்கு கற்குக்கொடுக்கின்றார். “நான் புறப்பட்டு என் தந்தையிடம் செல்வேன்” என்று கூறிய இளைய மகனைப்போன்று நாமும் உயிர்ப்பின் மகிமையை கொண்டாடுவதற்கு இத்தவக்காலத்தில் எம்மை ஆயத்தம் செய்வோம். சிலுவையில் தொங்கிய மனம்மாறிய கள்வனைப்போல நாமும் பாவ நிலையை ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்டு, கிறிஸ்துவின் இரட்சிப்பைப்பெற இறைவனிடம் வேண்டுவோம்.



முதல்வாசகம்
நீங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொள்ளுங்கள்.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 2: 12-18

ஆண்டவர் கூறுகிறார்: இப்பொழுதாவது உண்ணா நோன்பிருந்து, அழுது புலம்பிக்கொண்டு, உங்கள் முழு இதயத்தோடு என்னிடம் திரும்பி வாருங்கள்; நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக்கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக்கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்.

அவர் அருள் நிறைந்தவர், இரக்கம் மிக்கவர்; நீடிய பொறுமையுள்ளவர், பேரன்பு மிக்கவர்; செய்யக் கருதிய தீங்கைக் குறித்து மனம் மாறுகின்றவர். ஒருவேளை அவர் தம் மனத்தை மாற்றிக்கொண்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு தானியப் படையலையும் நீர்மப் படையலையும் நீங்கள் அளிக்குமாறு உங்களுக்கு ஆசி வழங்குவார். இதை யார் அறிவார்? சீயோனில் எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்; வழிபாட்டுப் பேரணியைத் திரட்டுங்கள். மக்களைத் திரண்டு வரச்செய்யுங்கள்; புனித கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்; முதியோரைக் கூடிவரச் செய்யுங்கள், பிள்ளைகளையும் பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒருசேரக் கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும்; மணமகள் தன் மஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
ஆண்டவரின் ஊழியர்களாகிய குருக்கள் கோவில் மண்டபத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நின்று அழுதவண்ணம், ``ஆண்டவரே, உம் மக்கள்மீது இரக்கம் கொள்ளும்; உமது உரிமைச் சொத்தை வேற்றினத்தார் நடுவில் நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் ஆளாக்காதீர்'' எனச் சொல்வார்களாக! `அவர்களுடைய கடவுள் எங்கே?' என வேற்றினத்தார் கூறவும் வேண்டுமோ? அப்பொழுது ஆண்டவர் தம் நாட்டின்மேல் பேரார்வம் கொண்டு தம் மக்கள் மீது கருணை காட்டினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல் 51: 1-2. 3-4. 10-11. 12,15

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி


இரண்டாம் வாசகம்
கடவுளோடு ஒப்புரவாகுங்கள்; இதுவே தகுந்த காலம்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 20-6: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அருளை வீணாக்க வேண்டாம் என அவரோடு இணைந்து உழைக்கும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ``தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்'' எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 95: 8a, 7b
காண்க உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக்கொள்ளாதீர்கள்; மாறாக ஆண்டவரின் குரலைக் கேட்பீர்களாக.வசனங்களிலிருந்து ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்

நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது. நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்கவேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார். மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப் படுத்திக்கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள். அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்."

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


எம் இறைவா!
திருஅவையை வழிநடத்தும் உம் ஊழியர்கள் இத்தவக்காலத்தில் உம் மீட்புப்பணியை நிறைவாக செய்வதற்கு வேண்டிய உடல், உள ஆரோக்கியத்தை அவர்களுக்களித்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவராகிய இயேசுவே!
தலைக்கனம் கொண்டு இறுமாப்புடன் வாழும் எனக்கு தாழ்மையான உள்ளத்தை அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் இறைவா!
எனக்குத் தீமை செய்பவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து வாழ்ந்து உயிர்ப்பு நாளில் நானும் உம்மோடு இறையாட்சியில் பங்கேற்க வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே!
இறுதி வேளையில்; உம் அன்னையை எமக்களித்தீர்! உம் தாய் மரியாளை முன்மாதிரிகையாக பின்பற்றி இறைவனின் சித்தத்தை ஏற்று வாழும் நன்மனதை எனக்களித்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



இன்றைய சிந்தனை

''இயேசு, 'நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர்' என்றார்'' (மத்தேயு 6:2)
மத்தேயு நற்செய்தியில் இயேசு வழங்கிய ''மலைப் பொழிவு'' மைய இடம் பெறுகிறது (மத் 5:1-7:29). முற்காலத்தில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுளின் திருச்சட்டத்தை அறிவித்ததுபோல, இயேசு உலக மக்கள் அனைவருக்கும் இறையாட்சி பற்றிய நற்செய்தியை ''அதிகாரத்தோடு'' அறிவித்தார் (மத் 7:29). இயேசுவை நம்பி ஏற்போரிடத்தில் துலங்க வேண்டிய பண்புகள் யாவை? யூத சமயத்தில் முக்கியமான அறநெறியாகக் கருதப்பட்ட நோன்பு, இறைவேண்டல், ஈகை ஆகியவை எத்தகைய மனநிலையோடு செய்யப்பட வேண்டும்? இக்கேள்விகளுக்கு இயேசு ''மலைப் பொழிவின்'' போது பதில் வழங்கினார். இயேசு வாழ்ந்த காலத்தில் ஏழை மக்கள் பலர் இருந்தார்கள். ஆனால் அவர்களது தேவையை நிறைவேற்ற அரசு திட்டங்கள் இருக்கவில்லை; இலவச மருத்துவ வசதி, சத்துணவுத் திட்டம், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை நடைமுறையில் இல்லை. நிலைமை இவ்வாறிருந்ததால் பல மக்கள் பிறரிடம் கையேந்தி உதவிபெற்றுத்தான் வாழ வேண்டியிருந்தது. எனவே, தர்மம் செய்வது உயர்ந்த பண்பு எனவும், தர்மம் செய்யாதிருப்பது தவறு எனவும் திருச்சட்டம் இஸ்ரயேலருக்கு உணர்த்தியது.

இப்பின்னணியில்தான் இயேசு மக்கள் எவ்வாறு தர்மம் செய்ய வேண்டும் என எடுத்துக் கூறுகிறார். பிறருக்கு நான் தாராள உள்ளத்தோடு உதவினாலும் அதனால் பிறர் என்னைப் புகழ்ந்து பாராட்ட வேண்டும் என நான் விரும்பி அவ்வாறு செய்தால் எனக்குக் கைம்மாறு ஏற்கெனவே கிடைத்துவிட்டது. அவ்வாறு நான் செய்யும் உதவி வெறும் ''வெளிவேடம்'' என இயேசு கூறுகிறார். தர்மம் செய்வது தன்னிலேயே நல்ல செயல்தான். ஆனால் எந்த நோக்கத்தோடு அதைச் செய்கிறோம் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது நமது நோக்கமாக இராமல் கடவுள் நம் செயலைப் பார்க்கிறார், அதுவே நமக்குப் போதும் என நாம் செயல்பட வேண்டும். அப்போது கடவுள் நமக்குக் கைம்மாறு வழங்குவார். அவரது கைம்மாறு கிடைக்கும் என்பதற்காகவன்றி, நாம் செய்யும் தர்மம் கடவுளுக்கு உகந்தது எனவும் பிறருக்கு நலம் பயப்பது எனவும் நமக்குத் தெரிந்தால் அதுவே போதும் என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, பிறருக்கு உதவும் வேளையில் நாங்கள் தன்னலம் நாடாது செயல்பட அருள்தாரும்.







***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse in...@tamilcatholic.de.

www.tamilcatholicnews.com
என்ற இணையத்தளகுழுவினரால்இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த மின்னஞ்சல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பாவிடில் அல்லது இவ் மின்னஞ்சல்களில் ஏதாவது அசௌகரியங்கள் இருப்பின், in...@tamilcatholic.de என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தரவும்.

This Email is sent by the web design team of www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list or if you have some difficulties with this email, please contact us via our email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************



Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.



http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge

20260218_full.pdf
20260218_short.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages