சிலப்பதிகாரம் காட்டும் தமிழுணர்வு

271 views
Skip to first unread message

bala murali

unread,
May 1, 2009, 11:25:20 AM5/1/09
to தமிழ் அமுதம், வேந்தன் அரசு

சிலப்பதிகாரம் காட்டும் தமிழுணர்வு

கடல் கடந்து வந்தாலும் உடலோடு பிறந்த தமிழுணர்வு ஒருக்காலும் ஒடுங்குவதில்லை. தமிழகத்தை விட்டு நீங்கி வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழும் கலை, இலக்கியப் பண்பாட்டு விழாக்களே இதற்குச் சான்று. ஆனால், தமிழர்களுக்குத் தமிழுணர்வு போதுமான அளவு இல்லை என்பதே காலங் காலங் காலமாய் இருந்து வரும் நீங்காக் குறை. அதனால்தான் பாவேந்தன் பாரதிதாசனும், 'மொழிப்பற்றெங்கே, விழிப்புற்றெழுக' எனப் பாடினார்.

தமிழ் மொழியைப் பற்றியும் தமிழுணர்வைப் பற்றியும் மிகப் பழந்தமிழ் இலக்கியங்கள் பேசவில்லை. தமிழ் மொழியின் நலன்களை எல்லாம், இலக்கண வளங்களை எல்லாம் எடுத்துக் கூறும் பழந்தமிழ் இலக்கண நூல் தொல்காப்பியம். இதில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை! தமிழ் உணர்வு பற்றிய குறிப்பும் இல்லை!! சங்கத் தமிழ் நூல்களான பத்துப் பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் ஒன்றில் கூடத் தமிழ் என்ற சொல் கிடையாது!!! தமிழ் உணர்வு பற்றிய குறிப்பும் கிடையாது!!! அடுத்து வந்த திருக்குறள், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி அழகாகப் பல கருத்துகளை இயம்புகின்றதே தவிர தமிழ் பற்றியோ தமிழ் உணர்வு பற்றியோ வாயே திறக்கவில்லை! ஏன்? ஏன்? ஏன்?

அந்த அந்த இலக்கண இலக்கியங்கள் தோன்றிய காலங்களில் எல்லாருமே தமிழ் நன்கறிந்திருந்தார்கள், அனைவருக்குமே மொழிப் பற்று நிறைவாக இருந்தது! அதனால் தனியாகத் தமிழ் என்றும் தமிழ்ப் பற்று என்றும் பேச வேண்டிய நிலை, சூழல் இல்லாமல் போயிருக்கலாம். மேலும், அனைத்தையும் உலகளாவிய நோக்கிலே பார்த்த பரந்த நோக்கு இருந்திருக்கிறது, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று. எனவே, தமிழ் மொழி, தமிழ் நாடு என்ற குறுகிய வட்டத்தினை, கண்ணோட்டத்தினைப் பழந்தமிழர்கள் தவிர்த்திருக்கக்கூடும்.

இந்தச் சூழ் நிலையில், கி.பி. 2 ஆம் நூற்றாண்டிலே எழுகிறது தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். அதற்கும் முன்னால் பல காப்பியங்கள் இருந்திருக்கக் கூடும், ஆனால் தமிழில் நமக்குக் கிடைத்திருக்கும் முதல் காவியம் சிலப்பதிகாரமே! இந்தக் காவியத்துக்குப் பல சிறப்புகள். அரசகுல இளவல் ஒருவர் படைத்த இக்காவியம் மூவேந்தர்களைப் பாடினாலும் அரச குலத்தைச் சேராத இருவரே காவியத் தலைவனாகவும் தலைவியாகவும் அமைகின்றனர். அதனால் இதனைக் குடிமக்கள் காவியம் என்று அழைப்பதும் உண்டு. அக்காலத் தமிழர்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் காவியமாகவும் இது திகழ்கிறது.

வள்ளுவனின் திருக்குறளைப் போல மூன்று பகுதிகளாக, மூன்று காண்டங்களாக அமைந்த இக்காவியத்தில் எல்லாமே மூன்று மூன்றாக அமைகின்ற சிறப்பைக் காணலாம். தமிழுக்கே உ¡¢ய இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழ், நூலின் உட்பொருளாக மூன்று கருத்துகள், சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர்கள், சேர சோழ பாண்டிய நாடுகள், பூம்புகார், மதுரை, வஞ்சி என்ற மூன்று தலை நகரங்கள், காவி¡¢, வைகை, போ¢யாறு என்ற மூவாறுகள் என இப்படி எல்லாமே மூன்று! பழந்தமிழர்களின் வீர வரலாறு, தமிழர்கள் வாழ்ந்த விதங்கள், தமிழிசை, தமிழ்க் கலைகள், வணிகங்கள் பற்றிய நுணுக்கங்கள் என இப்படி சிலப்பதிகாரச் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இத்தயை சிறப்புக்களுள் இதுவரை எவரும் சொல்லாத, எடுத்துக்காட்டாத மற்றொரு சிறப்பும் சிலப்பதிகாரத்துக்கும் இளங்கோவடிகளுக்கும் உண்டு. பிற்காலத்தில் தோன்றிய பலவற்றுக்கும் முனனோடியாக, வழிகாட்டியாக விளங்குகின்ற சிறப்புதான் அது. பல வகைப் பாடல்களின் இலக்கணங்களைத் தொல்காப்பியம் எடுத்துக் கூறினாலும், கலித்தொகைப் பாடல்கள் மட்டும் கலிப்பாவில் அமைந்துள்ளன. ஏனைய சங்கப் பாடல்கள் பெரும்பாலும் அகவல் என்னும் பாடல் வகையாகவோ, ஆசிரியப் பாவாகவோ அமைகின்றன. வெண்பாவும் அதிகமாகப் புழங்கவில்லை. அதன் பின் வந்த திருவள்ளுவர் குறள் வெண்பாக்களை மட்டுமே தம் நூலில் பயன்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகளோ, வகை வகையான யாப்பினங்களைத் தம் நூலில் கையாண்டு பிற்காலப் புலவர்களுக்கு முன்னோடியாக, வழிகாட்டியாக அமைந்துவிடுகிறார். அது மட்டுமல்ல, 'சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்' எனக் கூறி அதுவரை எவருமே கையாளாத உத்தியான உரையும் பாட்டும் விரவி வரும் புது நடையை அறிமுகப்படுத்திவிடுகிறார். ஆகவே, "உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்" என்ற உத்திக்கு முன்னோடி இளங்கோவடிகளே!

'சோதிடந்தனை இகழ்' எனச் சொன்னவர் பாரதியார், 20ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்தவர். இதனை நடைமுறையில் நடத்திக் காட்டியவர் பாரதிக்கு 1800 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த இளங்கோவடிகளேதான். ஆம், தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அரசவையிலே செங்குட்டுவனும் இளங்கோவும் அமர்ந்திருக்கிறார்கள். அங்கு வரும் சோதிடன் ஒருவன், ஆட்சியிலே அமரும் பேறு இளங்கோவுக்கே உண்டென்று சோதிடம் கூறுகிறான். கேட்ட செங்குட்டுவன் முகம் மாறுகிறது.

அதனைக் கண்ட இளவல், உடனடியாக எழுந்து,
'அகல்இடப் பாரம் அகல நீக்கிச்
சிந்தை செல்லாச் சேண்நெடுந் தூரத்து
அந்தமில் இன்பத்து அரசாள் வேந்தாகி'த் துறவு பூண்டுவிடுகிறார்.

பிற்காலத் தமிழ் இசைக்கு முற்காலத்திலேயே அடித்தளம் அமைத்துக் கொடுத்தவரும் இளங்கோவடிகளே! இவர் நூலில்தான் எத்தனை எத்தனை விதமான இசைப் பாடல்கள், நாட்டுப் புறப் பாடல்கள். அத்தனையும் தமிழிசைப் பாடல்கள்! இவற்றை வா¢ப் பாடல்கள் என்று அழைப்பது வழக்கம். ஆற்று வரி, சார்த்து வரி, முகம் இல் வரி, கானல் வரி, நிலைவரி, முரிவரி, திணை நிலைவரி, மயங்குதிணை நிலைவரி, சாயல்வரி, அம்மானை வா¢, ஊசற்வா¢, கந்துகவா¢, வள்ளைப் பாட்டு, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என்று அவர் அடுக்குவதைக் கேட்டால் நமக்கு மலைப்பாக இருக்கிறது.

மேலும் மிகப் பிற்காலத்தே எழுந்த பரணி, அம்மானை, போன்ற சிற்றிலக்கியங்களுக்கும் கடைக்கால் இட்டுக்கொடுத்தது சிலப்பதிகாரம்தான். பிறகாலப் பரணி என்ற சிற்றிலக்கியத்தில் காணும் பல காட்சிகளுக்கு முன்னோடியான காட்சிகளை அமைத்துச் சென்றவரும் இளங்கோவடிகளேதான்.

'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி ' எனப் பரணிக்கு இலக்கணம் கூறுவர்.

இந்தப் பரணிகளிலே தலை சிறந்தது கலிங்கத்துப் பரணி. பாடியவர் செயங்கொண்டார். சிற்றிலக்கியங்கள் தலைவன் பெயராலோ, தலைவி பெயராலோ, வென்றவர் பெயராலோ அழைக்கப்படும். ஆனால் பரணி இலக்கியத்துக்கு மட்டும் தோற்றவர் பெயரையே சூட்டுவது மரபு.

இனி, கலிங்கத்துப் பரணியில் இடம் பெறும் பாடல்கள் சிலவற்றுக்குச் சிலப்பதிகாரமே முதல்நூல் ஆவதைக் காண்போம்.

போ¡¢ல் எழும் ஒலிகளைச் சந்த நயத்தோடு கலிங்கத்துப் பரணி பாடும்:
எடுமெடு மெடுமென வெடுத்ததோர் ?இகலொலி கடலொலி யிகக்கவே
விடுவிடு விடுபா¢ கா¢க்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. (பாடல் 404)

வெருவர வா¢சிலை தொ¢த்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே (பாடல் 405)

சேரன் செங்குட்டுவன் நிகழ்த்திய வடநாட்டுப் போ¡¢ல் எழுந்த ஒலிகள் திசைகளை அதிரச் செய்தனவாம். இதனை இளங்கோவடிகள்,

"வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர்
வடித்தோற் கொடும்பறை வால்வளை நெடுவயிர்
இடிக்குரல் முரசம் இழுமென் பாண்டில்
உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து
மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிர" (கால்கோள் காதை 192-195) என்று பாடுவார்.

இதனைச் சந்தத்தோடு பாடிப் பார்த்தால் புரியும் செயங்கொண்டா¡ பாடலுக்கு மூலம் எது என்று!

தமிழ் நாட்டு வீரர்களின் வீரத்தால் வெட்டுண்ட வடநாட்டு வீரர்களின் தலை அறுபட்ட உடல்கள் பேய்மகள் பாட்டுக்குப் போடுகின்ற ஆட்டத்தை இளங்கோவடிகள்,

"தோளுந் தலையுந் துணிந்துவே றாகிய
சிலைத்தோள் மறவர் உடற்பொறை யடுக்கத்து
எறிபிணம் இடறிய குறையுடற் கவந்தம்
பறைக்கட் பேய்மகள் பாணிக் காடப்
பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியில்
கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட" (கால்கோள் காதை 205-210) என வருணிப்பார்.

இதே காட்சியைக் கலிங்கத்துப் பரணி இதே பாணியில் பாடும் :

குறையுடல்களும் பேய்களும்
கவந்த மாட முன்பு தங்க ளிப்பொடாடு பேயினம் ?
நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. (பாடல் 432)

இளங்கோவடிகள் காட்டும் இன்னொரு காட்சியைச் செயங்கொண்டார் அப்படியே காட்டுவார் : முடி புனைந்த மன்னர்களின் தலைகளை அடுப்புக் கற்களாக அடுக்கி, அதன் மேல் யானைத் தலையை அண்டாவாக வைத்துத் தொடி அணிந்த தோள்களைத் துடுப்பாக்கி ஊன் சோறு சமைத்துப் பதம் அறிந்து ஊட்டுகின்றதாம் சமையற்காரப் பேய். இதனை அடிகளார் இனி வருமாறு பாடுகிறார் :

"முடித்தலை யடுப்பிற் பிடர்த்தலைத் தாழித்
தொடித்தோள் துடுப்பின் துழைஇய ஊன்சோறு
மறப்பேய் வாலுவன் வயினறிந் தூட்ட" (கால்கோள் காதை 242- 244)

இதனையே செயங்கொண்டாரும்,

கொற்றவாண் மறவ ரோச்சக் குடரொடு தலையு?ங் காலும்
அற்றுவீ ழானைப் பானை அடுப்பினி லேற்று மம்மா. (பாடல் 518)

சேரனின் சினமென்னும் வலைக்குள் அகப்பட்ட வடநாட்டு வீரர்கள், சடைமுடி முனிவர்களாகவும் சாம்பல் பூசிய தவசிகளாகவும் பீலிகை கைக்கொண்ட சமண மதத் துறவிகள் போலவும் பாணர்கள் ஆடுகள மக்களாகவும் வேடம் பூண்டு தப்பி ஓடினர் என்பதைச் சிலம்பு,

"செங்குட் டுவன்றன் சினவலைப் படுதலும்
சடையினர் உடையினர் சாம்பற் பூச்சினர்
பீடிகைப் பீலிப் பெருநோன் பாளர்
பாடு பாணியர் பல்லியத் தோளினர்
ஆடு கூத்த ராகி யெங்கணும்
ஏந்துவா ளொழியத் தாந்துறை போகிய
விச்சைக் கோலத்து வேண்டுவயிற் படர்தர" (கால்கோள் காதை 224-230) என்று கூறும்.

இது போன்ற காட்சியைச் செயங்கொண்டாரும் காட்டுவார் :

வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி
வன்றூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
அரைக்கலிங்க மு¡¢ப்புண்ட கலிங்க ரெல்லாம்
அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே. (பாடல் 466)

இதனைத் தொடர்ந்து இத்தகைய காட்சிகளை மேலும் நான்கு பாடல்களில் காணலாம். வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்குத் தமிழில் சந்தப் பாடல்கள் உண்டு. வள்ளுவர் முதற் கொண்டு பாவேந்தன் பாரதிதாசன் வரை பாடாத சந்தம் இல்லை! கம்பனின் சந்தப் பாடல்களில் சிந்தை பறிகொடுக்காதவரும் உண்டோ. பிற்காலத் தமிழ்ப் புலவர்களின் சந்தப் பாடல்களுக்கு முன்னோடியாகத் திகழும் பெருமை சிலப்பதிகாரத்துக்கே உண்டு.

http://www.thuvarakai.com/index.php?q=OTEz
--
அன்புடன் பாலமுரளி
துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
http://vetrinadai.blogspot.com/
http://groups.google.com/group/tamilamutham?hl=ta
Reply all
Reply to author
Forward
0 new messages