"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!
இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!
ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!
ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.
அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.
இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.
திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-
ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).
அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!
இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).
இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:
"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."
இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:
"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.
அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."
இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-
"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.
வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!
(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)
http://tamil498a.blogspot.com/2009/08/blog-post_06.html