தினம் ஒரு சிவஸ்தலம் - வசிஷ்டேஸ்வரர் கோவில், தென்குடித்திட்டை

161 views
Skip to first unread message

Balaji Ramanujam

unread,
Feb 19, 2010, 7:10:13 AM2/19/10
to தமிழ் நண்பர்கள், tamila...@googlegroups.com, kaadhalki...@googlegroups.com
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்தென்குடித்திட்டை
இறைவன் பெயர்வசிஷ்டேஸ்வரர், பசுபதிநாதர், பசுபதீஸ்வரர்
இறைவி பெயர்உலகநாயகி, சுகந்த குந்தளாம்பிகை, மங்களேஸ்வரி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது தஞ்சாவூரில் இருந்து மெலட்டூர் வழியாக கும்பகோணம் செல்லும் சாலை மார்க்கத்தில் தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கி.மி. சென்றால் இத்தலத்தை அடையலாம். தஞ்சாவூர் - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் உள்ள பசுபதிகோவில் என்ற ரயில் நிலையத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம்.
ஆலய முகவரி அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
திட்டை
பசுபதிகோயில் அஞ்சல்
தஞ்சை மாவட்டம்
PIN - 614 206

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Thittai temple front gopuram

தென்குடித்திட்டை
ஆலய கோபுரம்

காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில் உள்ள திட்டில் இவ்வாலயம் இருப்பதால் திட்டை என்றும் தென்குடித்திட்டை என்றும் வழங்கப்படுகிறது. புராண காலத்தில் பிரளயம் ஏற்பட்ட போது பூலோகமே நீரில் அமிழ்ந்திருந்த போது திட்டை என்னும் இவ்விடம் மட்டும் நீரில் மூழ்காமல் இருந்தது. இவ்விடத்தில் சிவபெருமான் சுயம்புவாக ஒரு லிங்க உருவில் எழுந்தருளினார். இக்கோவிலின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவர் வசிஷ்டேஸ்வரர் ஐந்தாவது லிங்கமாக சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார். இவ்வாறு ஐந்து லிங்கங்கள் இருப்பதால் இத்தலத்தை பஞ்சலிங்க ஷேத்திரம் என்று கூறுவர். இந்த ஒரு தலத்தை வழிபட்டால் சிதம்பரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருஆனைக்கா மற்றும் காஞ்சீபுரம் ஆகிய பஞ்சபூத தலங்களுக்கு சென்று வந்த புண்ணியம் கிட்டிவிடும். சம்பந்தர் சிவபெருமானை விட அவர் சுயம்பு லிங்கமாக காட்சி தரும் இத்தலம் மேலானது என்று குறிப்பிடுகிறார்.

சூரியன் இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறான். இதன் அடையாளமாக சூரிய ஒளி ஆண்டிற்கு இரண்டு முறை மூலவர் லிங்கத் திருமேனியில் விழுகிறது. ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளிலும், பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளிலும் சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுகின்றன.

மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கியது. மூலத்திருமேனி சுயம்பு. சதுர ஆவுடையார் மீது உள்ள சிவலிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. திருமேனியின் மீது வரி வரியாகக் கோடுகள் சுற்றிலும் உள்ளன. நான்கு பட்டையாக உள்ளது. முன்னால் செப்பினாலான நந்தி பலிபீடம் உள்ளன. மூலவர் கருவறையின் மேல் விதானத்தில் ஒரு சந்திர காந்தக் கல் பொருத்தப்பட்டிருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பசையை உறிஞ்சி சுமார் 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை மூலவர் சிவலிங்கத் திருமேனியில் ஒரு சொட்டு நீர் விழும்படி இக்கல் பொருத்தப்பட்டிருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். பிரம்மா, விஷ்ணு, சுப்பிரமணியர், பைரவர், சூரியன், யமதர்மன், சனீஸ்வரன், தேவேந்திரன், ஆதிசேஷன், வசிஷ்டர், ஜமதக்னி முனிவர் ஆகியோர் இத்தலத்தில் வசிஷ்டேஸ்வரரை வழிபட்டுள்ளனர். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், இலிங்கோத்பவரும், பிரம்மாவும், துர்க்கையும் உள்ளனர். சண்டேஸ்வரர் சந்நிதியும் உள்ளது.

குரு ஸ்தலம்: ஆங்கிரசர் முனிவரின் ஏழாவது குழந்தை வியாழன். சகல கலைகளிலும் சிறந்து விளங்கிய இவர் தேவர்களுக்கு குருவானார். குருவின் வழிகாட்டலில் தேவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். ஒருநாள் குரு இந்திரனை பார்க்கச் சென்றார். ஊர்வசியின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த இந்திரன், குருவை அலட்சியம் செய்தான். குருவுக்கு ஆத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட அவர் ஒரு மறைவிடத்தில் வாழத் தொடங்கினார். சரியான வழிகாட்டல் இல்லாததால் தேவலோகமே ஸ்தம்பித்தது. அரக்கர்கள் தேவர்களை கொடுமைப் படுத்தினார்கள். தவறை உணர்ந்த இந்திரன், எங்கெங்கெல்லாம் சிவத்தலங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் சென்று குருவை தேடினான். அப்படித் தேடிவரும் வழியில்தான் திட்டைக்கு வந்தான். வசிஷ்டேஸ்வரர் கோயிலில் மனமுருக மன்னிப்பு கேட்டு வேண்டிக்கொண்டான். இனியும் அவனை சோதிக்க விரும்பாத குரு, அவனுக்கு காட்சி தந்தார். இந்த சிவாலயத்திலேயே தனி சந்நதியும் கொண்டார்.

கோவில் அமைப்பு: ஆலயத்தின் முன்புறம் பசு தீர்த்தம் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஒரு கிழக்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரம் உள்ளது. கோபுர வாயில் வழியாக சில படிகள் ஏறி உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். உள்ளே நுழைந்தவுடன் காணப்படும் முன்மண்டபத்தில் ஒரு தூணில் வலப்பால் நால்வர் வடிவங்களும் மறுபுறத் தூணில் ரிஷபாரூடர் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. கொடிமரம் கருங்கல்லால் ஆனது. உயரத்தில் பலிபீடம் நந்தி உள்ளது. மூலவர் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட நிலையில், அமபாள் சந்நிதிக்கு மேற்குப் பக்கத்தில் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய குரு பகவானின் தனி சந்நிதி அமைந்துள்ளது. எல்லா சிவாலயங்களிலும் ஞான வடிவான தட்சிணாமூர்த்தியாக குரு கோயில் கொண்டிருப்பார். ஆனால் தென்குடித் திட்டையில் இவர் ராஜ குருவாக நின்ற நிலையில் அபய ஹஸ்த முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. சந்நிதிக்கு முன்னால் செப்பாலான நந்தி பலிபீடம் உள்ளன. அம்மன் சந்நிதிக்கு முனபாக மேல் கூரையில் 12 ராசிகளுக்கும் ராசி சக்கரம் சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் ராசிக்குக் கீழே நின்று பிரார்த்தனை செய்தால் வேண்டியது கிட்டும் என்பது ஆன்றோர் நம்பிக்கை.

இவ்வாலயத்தின் தீர்த்தம் சூல தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ள இத்தீர்த்தம் சக்கர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாவம் போக்கவல்ல சிறப்புடையது. நல்ல படித்துறைகளுடன் இத்தீர்த்தம் அமைந்துள்ளது.

சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடுந்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் தன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநற்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

மகரமா டுங்கொடி மன்மத வேள்தனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரபா ணித்தலம் பன்மக ரத்தோடுஞ்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே உருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலுந்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

உண்ணிலா வாவியா யோங்குதன் தன்மையை
விண்ணிலார் அறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலார் எழில்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்திஆர் அமுதவர்க் கருள்செய்தான் அமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகந்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றிமால்
கூறினார் அமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடந்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்நெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடங்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித் திட்டையே.

நாரணன் தன்னொடு நான்முகன் தானுமாய்க்
காரணன் அடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழில் தண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.


--
பாலாஜி
மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று, பெற்றுச் சாவது.இன்னொன்று, செத்துப் பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள் - கண்ணதாசன்

sivakannan

unread,
Feb 22, 2010, 7:54:00 AM2/22/10
to tamila...@googlegroups.com
thanks...........

19 பிப்ரவரி, 2010 5:40 pm அன்று, Balaji Ramanujam <balaji...@gmail.com> எழுதியது:

--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!

sri balamurali

unread,
Apr 28, 2010, 2:45:30 AM4/28/10
to tamila...@googlegroups.com
தகவலுக்கு நன்றி!

--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!



--
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
www.vetrinadai.blogspot.com
http://groups.google.com/group/tamilamutham?hl=ta

--
தாய்மொழி தமிழினை
தழைத்திடச் செய்வோம்!
நாளைய சரித்திரம்
தமிழினில் செய்வோம்!
Reply all
Reply to author
Forward
0 new messages