(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி)
தீரன் திண்ணியன் தேசத் தலைவன்
“களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,
எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்
எண் தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87)
“நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!”
பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும் வண்ணம் இத்தகைய இலக்கியச் சான்றுகள் எத்தனை எத்தனை!
தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் – ஔவை சொன்னவாறான ஒற்றைப் போர்வீரன் அல்லன். அவ்வாறான பல்லாயிரம் வீரர்களுக்குத் தலைவீரன்! கொடும்பகைக்கு முகங்கொடுத்து விடுதலைக்காகப் போரிடும் தேசிய இனத்தின் தலைவன் வீரனாய், பெருவீரனாய், வீரமுதல்வனாய் இருந்தாக வேண்டும். அதற்கும் மேலே எண்ணிய எண்ணியாங்கு எய்தும் திண்ணியனாகவும் இருத்தல் வேண்டும்.
எழுபதுகளின் பிற்பகுதியிலும் எண்பதுகளின் முற்பகுதிகளிலும் – அப்போது சிறையில் அடைபட்டிருந்த எனக்கும் தோழர்களுக்கும் – பிரபாகரன் அறிமுகமாகி அறியப்பட்டது வீரனாகவும் புலிப்படையின் வீரத் தலைவனாகவுமே!
தமிழகத்தில் கருவிப் போராட்டவழி புரட்சி நடத்தும் கருத்தில் துணிந்து செயல்பட்டு இளம்வயதில் சிறைப்பட்டிருந்த எங்களுக்குத் தமிழீழத்தில் ஓர் இளைஞன், இளந்தலைவன் வெற்றிகரமாக விடுதலைப் போர் தொடுத்து வீரம் விளைத்து வரும் செய்திகள் பெரிதும் ஈர்ப்பாயின.
மறுபுறம் தமிழீழ மக்கள் மீது சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இன ஒடுக்குமுறையும் அடக்குமுறையும்பற்றிய செய்திகள் வெளியில் போலவே சிறைக்குள்ளேயும் கொந்தளிப்பு உண்டாக்கின. இந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் எதிராகப் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் நடத்தி வந்த வீரஞ்செறிந்த போராட்டத்தில் நாங்கள் கொண்டிருந்த ஈடுபாடும் வளர்ந்தது.
வந்தது ’83. இன அடக்குமுறை இன அழிப்பாகி, அரச பயங்கரவாதம் கொலைத் தண்டவமாடிற்று. கருப்பு – (இ)யூலையில் வெளிக்கடைச் சிறையில் நடந்த கொடுவதைகளும் கோரக் கொலைகளும் நாகரிக உலகை அதிரச் செய்தன. தமிழகத்தைக் கொதிக்கச் செய்தன. கொதிப்பின் உச்சநிலை சிறைகளிலேதான். இங்கே சிறைத் தமிழர்களைப் பொறுத்த ஆத்திரத்தோடு ஆற்றாமையும் சேர்ந்து கொண்டது – சட்டத்தால் தலையிடப்பட்டு அடைபட்டுக் கிடக்கிறவனால் சுவர் தாண்டிக் கடல் கடந்து கை நீட்டிக் கண்ணீரைத் துடைக்க முடியுமா?
தசையெலும்பைப் பூட்டி வைக்கலாம். தளும்பும் மனவுணர்ச்சிகளைக் கூடவா பூட்டி வைக்க முடியும்? மதுரைச் சிறையில் சிங்கள அரசதிபருக்குக் கொடும்பாவி கட்டிக் கொளுத்தினார்கள். திருசிராப்பள்ளிச் சிறையில் சிறைபட்ட அனைவரும் திரண்டு மௌன ஊர்வலம் நடத்தி மையத் திடலில் பொதுக்கூட்டமும் நடத்தினோம்.
எல்லாச் சிறைகளிலும் ஒரு நாள் உணவு மறுத்து அந்த உணவின் மதிப்பைத் தமிழக முதல்வரின் தமிழீழ ஏதிலியர் உதவிநிதிக்கு அனுப்பி வைத்தோம். அதிகார வருக்கம் வறட்டு விதிமுறைகளைக் காட்டி இதற்கெல்லாம் தடையிட்ட போது எதிர்த்துப் போராடினோம். 1983 ஆண்டிறுதியில் தமிழக அளவில் எல்லா மையச் சிறைகளும் சேர்ந்து போராடிய போது, முதல் கோரிக்கையே இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் உரிமை வேண்டும் என்பதுதான்.
தமிழீழ விடுதலைக் குறிக்கோளை ஆதரிப்பவர் களாகவும், புலிப்படையோடு ஒருமைப்பாடு கொண்டவர்களாகவும், தம்பியை நேசிப்பவர்களாகவும் நாங்கள் மாறிப் போனதில் ஒரு முரண்பாடு இருக்கவே செய்தது – எங்களின் நிலைப்பாடு நாங்கள் சார்ந்திருந்த மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சிக்கு அடியோடு ஒவ்வாதது.
இந்தியாவில் தேசிய இனச் சிக்கல் குறித்தும், தமிழ்த் தேசிய இனத்தின் தன்தீர்வுரிமை (சுயநிர்ணய உரிமை) குறித்தும் கட்சித் தலைமையோடு எங்களுக்கு மாறுபாடுகள் இருந்தாலும், தமிழீழப் போராட்டம்தான் எங்கள் புரிதலைக் கூர்மையாக்கி முடிவை விரைவுபடுத்தியது. தமிழீழப் போராட்டத்தின் வரலாற்று நியாயத்தைக் காண விடாமல் மறைக்க சிவப்புத் திரைகளுக்கும் கூட உரிமையில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து ஆழ்ந்தகன்ற விவாதங்கள் நடைபெற்றன. எங்களுக்குள்ளே மட்டுமன்றித், தமிழீழம் தொடர்பான கோரிக்கைகளுக்காகவும் வேறு கோரிக்கைகளுக்காகவும் அறப்போராட்டம் நடத்திச் சிறைக்கு வந்த வேறு பல கட்சித் தலைவர்களோடும் கூட விவாதித்தோம். விடுதலையாகி வெளியே வந்த பிறகும் விவாதித்தோம். இதனால் தமிழீழ விடுதலை ஆதரவு நிலைப்பாடு உறுதிபட்டதோடு, தம்பி மீதான மதிப்பும் உயர்ந்தது. வீரத்துக்காக வியந்து வணங்கும் நிலை மாறி, விடுதலை அரசியல் பற்றிய தெளிவு வளர்ந்தது.
விடுதலை அரசியலின் நீட்சியே விடுதலைப் போர். விடுதலை அரசியல் என்பது வரலாற்று நோக்கில் விடுதலை தேவைப்படும் நிலையிலுள்ள வெகுமக்களை அறிவும் உணர்வும் ஊட்டி அணிதிரட்டிப் போராடச் செய்வதும், நட்பைச் சேர்த்துக் கொள்வதும், பகையைத் தனிமைப் படுத்துவதுமான முயற்சிகளைக் குறிக்கும். இம்முயற்சிகளைத் தொடரக் கருவியெடுக்கும் கட்டாயம் நேரிடும் போது விடுதலை அரசியல் விடுதலைப் போராக வடிவெடுக்கும்.
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.” (திருக்குறள் 471)
அரசியலுக்கும் அதே போல் போருக்கும் வழிகாட்டும்படியான இந்த இலக்கணத்துக்கு இலக்கியமாக அன்று முதல் இன்று வரை பிரபாகரனின் வழிநடத்தல் விளங்கி வருகிறது எனலாம்.
இந்தத் தலைவன் வெறும் வீரனல்லன் என்பதை 1987 நிகழ்சிகள் மெய்ப்பித்தன. அப்பம் பிரித்த குரங்கின் வேலையைச் செய்ய முற்பட்டது இந்திய அரசு. இராசீவ் காந்தி – செயவர்த்தனா உடன்படிக்கையின் பேரால் இந்தியப் படை யாழ்ப்பாணத்தில் கனத்த கால் பதித்தது. ஈழ விடுதலைப் போராட்டத்தைச் சூழ்ந்தது ஒரு புதிய நெருக்கடி – இந்தியா நண்பனா? பகைவனா?
தமிழீழப் போராட்டம் தொடர்பான இந்திய அரசின் அணுகுமுறைக்கு இரு பக்கங்கள் உண்டு. இந்திய மக்களின் நலனையும், தமிழக மக்களின் உணர்வையும் பிரதிபலிப்பதாக இருக்கும் வரை இந்திய அரசு தமிழீழ மக்களின் நண்பனாய் இருக்க முடியும். ஆனால் தேசிய இனங்களை ஒடுக்கும் இந்திய ஆளும் சக்திகளின் நலனையும், தெற்காசியா மீதான மேலாதிக்க நோக்கத்தையும் பிரதிபலிக்கிற அளவில் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கெடுக்கவே முற்படும். அடுத்தும் கெடுக்கலாம். எதிர்த்தும் கெடுக்கலாம்.
காலங்காலமாய் இந்தியாவை நண்பனாகவே பார்த்துப் பழகிய தமிழீழ மக்கள் இப்போது 1987இலும் இந்தியப் படைகளின் வருகையைத் தங்கள் மீட்சிக்குத் துணை என்றே பார்ப்பது போலிருந்தது. இந்திய அரசின் உள்நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்ட பிரபாகரனின் தலைமை மக்களின் நாடித் துடிப்பை அறிந்து செயல்பட்டது. சுதுமலை அம்மன் திடலில் பிரபாகரன் ஆற்றிய உரை விடுதலை அரசியலில் அவரது தெளிவான தொலைநோக்கைக் காட்டியது.
கருவிமேல் காதலில்லை. மக்களின் பாதுகாப்புக்காகவே கருவி என்பதால் கருவியைப் பாதுகாப்பதற்காக மக்களை இழக்க வேண்டியதில்லை. கருவியைக் கையளிக்கிறோம் என்றால் எமது மக்களின் பாதுகாப்பைக் கையளிக்கிறோம் என்று பொருள். முதிர்ச்சியின் முத்திரை தாங்கிய இந்த அணுகுமுறை பழுத்த அரசியல் நோக்கர்களையே வியந்து நோக்கச் செய்தது. சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் இவனே எனப் போற்றினோம்.
இந்தியப் படையின் செயல்பாடு… இது மீட்க வந்த படையா? மிதிக்க வந்த படையா? என்று மக்களைச் சிந்திக்க வைத்தது. புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிருவர் சிங்களப் படையால் சிறைபிடிக்கப்பட்டு நஞ்சுண்டு மாண்ட போது இந்தியா வேடிக்கை பார்த்த அவலம் தமிழீழ மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. உடன்படிக்கையைச் செயலாக்குவதில் ஒப்புக்கொண்ட சிற்சிலவற்றைக் கூட நடைமுறைப்படுத்தாமல் இந்திய அரசு இழுத்தடித்ததை அம்பலமாக்கும் வகையில் புலிகளின் அழைப்பை ஏற்று தமிழீழ மக்கள் அறப்போராட்டம் நடத்தினார்கள். கொல்ல வந்தவரைக் கொஞ்ச வந்தவராகப் பார்க்கச் செய்த பனிப்படலம் விரைந்து விலகலாயிற்று. இந்த அறப்போராட்டத்தின் உச்சம்தான் திலீபனின் பட்டினிப் போர். அது இறுதியாகவும் உறுதியாகவும் தில்லிக் கழுகின் புறாச் சிறகைக் கழற்றிப் போட்டது.
திலீபனின் ஈகம் உலக வரலாற்றிலேயே தனித்துவமானது. இந்தத் தனித்துவமான தியாக மறவனை வளர்த்தெடுத்த தலைமையின் மகத்துவத்தை என்னென்பது! இறந்தும் வென்ற திலீபனின் போராட்டம் இந்தியாவின் அரசியல் தோல்வியைக் குறித்தது. அந்த அரசியல் தோல்வியை இராணுவத் தோல்வியாக மாற்றத்தான் ஒன்றரை ஆண்டுக்கு மேல் பிரபாகரன் தலைமையில் புலிப்படை வீரப் போர் புரிந்தது. மண்ணையும் மக்களையும் சார்ந்து நின்று போர் புரிந்தால் எவ்வளவு பெரிய வல்லடிப் படையையும் முறியடிக்க முடியும் என்ற வரலாற்றுப் படிப்பினையை வியத்துநாமுக்குப் பிறகு உலகுக்குணர்த்தியது தமிழீழம்.
திலீபனின் ஈகம் ஏற்படுத்திய தாக்கம் கருதியும், தமிழீழப் போராட்டத்தைக் கொள்கைவழி நின்று ஆதரிக்கும் நோக்கம் கருதியும் 1990 செட்டம்பரில் என்னை அமைப்பாளராகக் கொண்டு தமிழகத்தில் திலீபன் மன்றம் நிறுவப்பட்டது. அதன் மூன்று நிலைப்பாடுகள்:
· தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை.
· இராசீவ் – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத்தமிழர் நலனுக்குப் பகை.
· தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!
அரசும் காவல் துறையும் செய்த கெடுபிடிக்கும் நெருக்கடிக்கும் இடையில் திலீபன் மன்றம் தனக்குரிய பங்கினை ஆற்றிவந்தது.
திலீபன் மன்றமும் விடுதலைக் குயில்களும் தமிழ் தமிழர் இயக்கமாக இணைந்த பிறகும் மேற்கூறிய நிலைப்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. தடைச் சட்டம்கள், அடக்குமுறை நெருக்கடிகள், அதிகாரக் கெடுபிடிகள் யாவற்றுக்குமிடையே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து நிற்கிறோம். பிரபாகரனின் தலைமை மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம். எந்நிலையிலும் இதில் எமக்கு ஊசலாட்டமில்லை.
இது வெறும் வீரவணக்கமோ நாயக வழிபாடோ அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். வரலாற்றை உருவாக்குபவர்கள் வெகுமக்களே.எவ்வளவு பெரிய தலைவனாயினும் வீரனாயினும் வரலாற்றின் கருவியே என்பதில் ஐயமில்லை.தமிழீழ விடுதலைப் போர் வரலாறு கண்டெடுத்த தலைசிறந்த கருவி பிரபாகரனே.வரலாற்றால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றை வடிப்பவராகத் திகழ்வதால் அவரே வரலாற்று நாயகன்.
தேசியத் தலைவர் என்பது அலங்காரப் பட்டமன்று.அது கடினமான பெரும் பொறுப்பு.இந்தப் பொறுப்பை உணர்ந்து இன்னல்களையும் இடர்மிகுந்த திருப்பங்களையும் கடந்து தன் மக்களை வழிநடத்தி வருவது பிரபாகரனின் தலைமைச் சிறப்பே.
தமிழகத்தில் தமிழ்த் தேசியப் புரட்சிக்காக உழைத்துவரும் எம்மைப் போன்றோர் பிரபாகரனின் போராட்ட வரலாற்றிலிருந்து நிறையக் கற்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டியதிருப்பதாகக் கருதுகிறோம். ஒரு சிலவற்றை ஈண்டு குறிப்பிடலாம்.
ஒரு மக்களினத்தை ஒன்றுபடச் செய்து பகைவனுக்கும் எதிராக அணிதிரட்ட வேண்டுமானால் அவ்வினத்திற்குள்ளான முரண்பாடுகளையும் பூசி மெழுகுவதன்று வழி. அவற்றுக்கு முறையாகத் தீர்வு காண வேண்டும். பிரபாகரனின் தலைமை சிங்களப் பேரினவாதத்தையும், அதற்கு துணைவந்த பிறரையும் எதிர்த்துப் போராடும் போதே, தமிழீழ மக்களின் ஓர்மையைச் சிதைத்து ஒற்றுமையைக் கெடுக்கும் சாதியத்தையும் ஆணாதிக்கத்தையும் எதிர்த்துப் போரடியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் கண்டுள்ளது. தமிழீழ மக்களின் வெல்லற்கரிய வலிமைக்கு இந்தப் புரட்சிய ஒற்றுமையே அடித்தளமாகும். தமிழ்த் தேசியத்துக்கான போராட்டம்,சாதியொழிப்பு அல்லது சமூகநீதிக்கான போராட்டம் இவ்விரண்டின் இடையுறவையும் புரிந்து உள்வாங்கிக் கொள்ள தமிழீழம் நமக்குதவும்.
பிரபாகரன் மிக சிறந்த படைத் தளபதி என்பதை மாற்றாரும் மறுக்க மாட்டார். ஆனால் வெறும் படைத் தளபதியல்லர், மக்கள் விடுதலைப் போரின் தலைவர் அவர் என்பதை அவரின் போருத்திகளே காட்டும். ஆள் வலிமை, அறிவியல்–தொழில்நுட்ப வலிமை, ஆயுத வலிமை என்று அனைத்து வகை வலிமையோடும் அடக்கி ஒடுக்கும் ஆதிக்கத்தை எதிர்த்து மக்களாதரவை மட்டுமே சார்ந்து போராடுவதற்கான உத்தியாக உலக வரலாற்றில் கெரில்லாப் போர் முறை வளர்த்தெடுக்கப்பட்டது. நெல்லியடியில் மில்லர் தொடக்கி வைத்த தற்கொடைப் போர் முறை கெரில்லாப் போர்முறையின் உச்சக்கட்ட வளர்ச்சியாகும்.
ஒரு சிறுபான்மைத் தேசிய இனம் தன்னந்தனியாக நின்று பேரினவாத அரசையும் அதற்குத் துணையாக வரும் வல்லாதிக்க ஆற்றல்களையும் எதிர்த்துப் போராடுவது எளிதன்று. தன் தரப்புக்கு ஆகக்குறைந்த இழப்போடு பகைத் தரப்பை ஆகப் பெருமளவுக்கு நொறுக்கிச் சிதறடிக்கும் தற்கொடைப் போர்முறையே இந்தக் கடினமான பயணத்தில் திறமிகு தடைநீக்கி என்பதை தமிழீழப் போராட்ட வரலாறு மெய்ப்பிக்கிறது. எந்தப் படையாலும் கரும்புலிகளின் உயிராயுதத்திற்கு எதிர்நிற்க முடியாது. இதுவே தற்கொடைப் போர்முறை. இந்தப் போர்குறையை வகுத்து வழிநடத்துவதில் பிரபாகரனின் போர்த்திறன் மட்டுமல்ல, விடுதலை அரசியலின் வித்தக நோக்கும் முன்னிற்கிறது.
விடுதலைப் போராளிகள் அமைதியையே விரும்புகின்றனர் – அது இடுகாட்டு அமைதியாய் இருந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு! உரிமைகளோடு சேர்ந்து வரும் மெய்யமைதிக்காகவே அவர்கள் போராடுகிறார்கள். விடுதலைப் போராளி தன் இரு கைகளையும் உயர்த்திக் காட்டுகிறார். ஒரு கை அமைதிக்காக! ஒரு கை போருக்காக! எந்தக் கை வேண்டுமென்று பகைவரே முடிவு செய்யட்டும். அமைதி என்றால் அமைதி! போர் என்றால் போர்! எது வேண்டும் சொல் பகையே! இதுவே விடுதலைப் போராளியின் அணுகுமுறை.
பிரபாகரன் சண்டைப் பிரியர், சமாதானத்தின் பகைவர் என்றெல்லாம் பாக்கு நீரிணையின் அப்பக்கமும் இப்பக்கமும் வறட்டுத் தவளைகள் போல் கத்திக் கொண்டிருந்தவர்கள் எங்கே? பிரபாகரனின் இப்போதைய அமைதி முயற்சி மெய்யான சண்டைப் பிரியர்களைக் காட்டிக் கொடுத்து விட்டது.
தமிழீத் தாயகத்திற்கான போராட்டம் போர்வழி நடந்தது. இப்போது அமைதி வழி தொடர்கிறது. எப்படியும் அது முன்னேறிச் செல்கிறது. வீரனாகவும், அதற்கும் மேலே விடுதலைப் போர் வித்தகனாகவும் மக்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வழிகாட்டுதலில் இறுதி வெற்றி உறுதி. அது ஒரு தேசத்தின் வெற்றி. விடுதலை நாடும் அனைவரின் வெற்றியும் கூட!
ஒளிக் கதிர்களுக்கு எல்லைகள் உண்டோ?
[தலைவர் பிராபகரன் 50ஆம் பிறந்த நாள் (2004) மலருக்காக எழுதிய கட்டுரை]
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 20
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி)
‘பழந்தமிழ்’
7. பழந்தமிழ் நிலை
தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன. ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன என்பது ல்+ந சேருங்கால் தோன்றக் காண்கின்றோம். புல்+நீர்=புன்னீர்.
ஐ, ஔ என்பவற்றை உயிர் எழுத்துகளின் கடைசியிலும், ற, ன, என்பவற்றை மெய்யெழுத்துகளின் கடைசியிலும் வைத்துள்ளமை இவ் வெழுத்துகளின் தோற்றக் காலத்தின் பிற்பட்ட தன்மையை அறிவிப்பதாகும். ஆயினும் தொல்காப்பியர் காலத்துக்குப் பன்னூறு ஆண்டுகட்கு முன்பே இவை தோன்றி எழுத்து வரிசையில் இடம்பெற்றுவிட்டன என்பதில் ஐயமில்லை.
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பு பன்னிரண்டு உயிரும், பதினெட்டு மெய்யும் நெடுங்கணக்கில் இருந்துள்ளன. மொழி வழக்கில் காணப்படும் ஒலிமாற்றங்களை நுட்பமாய் அறிந்த தொல்காப்பியர் குற்றிய லிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றையும் சார்பொலிகளாகக் கருதி அவற்றையும் தமிழ் நெடுங்கணக்கில் சேர்த்துள்ளனர் என்று கருதவேண்டியுள்ளது. ஏனெனில் பன்னிரண்டு உயிர், பதினெட்டு மெய் ஆய முப்பது எழுத்துகளையும் முன்னோர் காலத்தில் இருந்தனவாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தெனப் படுப
அகரம் முதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப (தொல்&எழு&1)
என்று கூறியுள்ளார்.
குற்றியலிகரம், குற்றிய லுகரம், ஆய்தம் என்ற மூன்றும் சார்ந்து வரும் என்று கூறித் தம் கூற்றாகவே கூறுகின்றார். அவைதாம்
குற்றிய லிகரம், குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன (தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,2)
தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இவை எழுத்து வரிசையில் சேர்த்து எண்ணப்பட்டிருப்பின், என்ப, என்மனார் என்று கூறியிருப்பார். அவ்வாறு கூறாது தம் கூற்றாகவே கூறுவதனால் மொழியாட்சியில் இருந்த ஒலிகளை அறிந்து சார்பு ஒலிகள் எனப் பெயர் கொடுத்து நெடுங்கணக்கில் சேர்த்த பெருமை தொல்காப்பியரைச் சாரும்.
குற்றியலிகரம் குற்றியலுகரம் என்ற இரண்டுக்கும் தனி வரிவடிவம் இல்லை.
அவற்றுள் மெய் ஈறு எல்லாம் புள்ளியொடு நிலையல், குற்றிய லுகரமும் அற்றென மொழிப என்னும் நூற்பாக்களை நோக்குமிடத்து ஒரு காலத்தில் குற்றிய லுகரம் மெய்யெழுத்தைப் போல் புள்ளியிட்டு எழுதப்பட்டது என்று எண்ண இடம் தருகின்றது.
தொல்காப்பியர் மகரக் குறுக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்; அதற்கு மாத்திரை கால் எனவும், அதன் வடிவம் உட்புள்ளி பெறுதலாகும் என்றும் கூறியுள்ளார்.1 ஆனால் சார்பெழுத்துகளின் கூட்டத்தில் சேர்த்திலர். உயிரளபெடை, ஒற்றளபெடை முதலியவற்றையும் கூறியுள்ளாரேனும் அவற்றையும் சார்பெழுத்துகளோடு கூறினாரிலர். ஆனால், நன்னூலாசிரியராம் பவணந்தியார் இவற்றையும் பிறவற்றையும் சேர்த்துச் சார்பெழுத்துகள் பத்து என்று கூறியுள்ளார்.1+
++++
1 அரையளவு குறுகல் மகரம் உடைத்தே
இசையிடல் அருகும் தெரியும் காலை
உட்பெறு புள்ளி உருவா கும்மே (தொல்.எழு.13,14)
+++
1 + நன்னூல், நூற்பா 60
++
எழுத்துகளின் ஒலிப்பு முறையைக் கருதி குறில் என்றும், நெடில் என்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றும் கூறும் பகுப்புமுறை தொல்காப்பியர் காலத்துக்கு முற்பட்டதாகும்.
சொற்களின் எழுத்து நிலையை அறிந்து வகைப்படுத்திக் கூறியுள்ள பெருமை தொல்காப்பியரையே சாரும்.
சொற்களின் முதல் எழுத்துகளாகப் பன்னிரண்டு உயிரும் வரும் என்றார். மெய்யெழுத்துகளில் க, த, ந, ப, ம என்னும் ஐந்துமே பன்னிரண்டு உயிர்களுடன் சேர்ந்து வரும் என்றார். சகரம் அ, ஐ, ஔ என்னும் மூன்று உயிர்களுடன் சேர்ந்து வருதல் இல்லை என்று கூறியுள்ளார். சகரத்தை மொழிக்கு முதலில் உடைய தமிழ்ச்சொற்கள் பல உள்ளன. இச் சொற்கள் எல்லாம் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னரே தோன்றியிருத்தல் வேண்டும். இச் சொற்கள் தோன்றிய காலத்துக்கு முன்னரே தொல்காப்பியர் வாழ்ந்தவர் என்பதனால் தொல்காப்பியர் காலப் பழமையும் அறியப்படுகின்றது. ஞ தொல்காப்பியர் காலத்தில் மொழிக்கு முதலில் வந்திலது, ஞமலி என்ற சொல் தொல்காப்பியர் காலத்துக்குப் பின்னரே வழக்கில் வந்துள்ளது என்று அறிய வேண்டியுள்ளது.
யகரம் ஆவோடுமட்டும்தான் மொழிக்கு முதலில் வரும் என்கின்றார்.
ஆவோடு அல்லது யகரம் முதலாது. யவனர், யூகம், யோகம், யௌவனம் முதலிய சொற்களில் பின்னைய மூன்றும் வடசொற்கள். முன்னைய ஒன்று கிரேக்கச் சொல்லினின்றும் தோன்றியதாகும். கிரேக்கர் தொடர்பு தமிழர்க்கு உண்டாயது தொல்காப்பியர் காலத்துக்குப் பிற்பட்டதாகும். இதனாலும் தொல்காப்பியர் பழமை நிலைநாட்டப்படுகின்றது.
நாய் என்ற சொல்லைத் தொல்காப்பியர் காலத்தில் நாஇ எனவும் வழங்கினர் என்று அறியலாம்.
வினாப்பொருளை அறிவிக்க ஆ,ஏ,ஒ என்ற மூன்றையும் சொல்லில் சேர்த்து வழங்கினர்.
வந்தான் + ஆ = வந்தானா?
வந்தான் + ஏ = வந்தானே?
வந்தான் + ஓ = வந்தானோ?
கேள்விக்குறி இல்லாமல் எழுதினாலும் கேள்விப் பொருளையே உணர்த்தும்.
யாது, எவன் என்ற இரு சொற்களும் வினாப்பொருளில் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியுள்ளன.
யாது எவன் என்னும் ஆயிரு கிளவியும்
அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்
(தொல்காப்பியம், சொல்.31)
ஆனால், தொல்காப்பியர் யா, எ என்பன வினாவை உணர்த்தும் எழுத்துகள் ஆகும் என்று கூறினாரிலர். பிற்காலத்துப் பவணந்தியார் இவை இரண்டையும் வினாவெழுத்துகள் என்று கூறியுள்ளார்.
எ, யா முதலும் ஆ,ஓ,ஈற்றும்
ஏஇரு வழியும் வினாவா கும்மே
(நன்னூல். 67)
தொல்காப்பியர் காலத்தில் எம்மாடு, யாமாடு போன்ற வழக்குகள் இருந்தில போலும்.
நுந்தை என்ற சொல்லின் முதலில் உள்ள உகரம் தொல்காப்பியர் காலத்தில் குற்றியலுகரமாக ஒலித்துள்ளது.
போலும் என்ற சொல் போன்ம் என்று, தொல்காப்பியர் காலத்தில் வழங்கியுள்ளது.
ஐயர் என்பதனை அஇயர் என்றும் அய்யர் என்றும் வழங்குதலும், ஔவை என்பதனை அஉவை என்றும், அவ்வை என்று வழங்குதலும் தொல்காப்பியர் காலத்தில் உண்டு.
நிலைமொழி யிறுதியில் உயிர் எழுத்து நிற்க வரும் மொழி முதலில் உயிர் எழுத்து வருமேல் இரண்டையும் ஒன்றுபடுத்த இடையில் மெய்யெழுத்துத் தோன்றுதல் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்ததாகும். அங்ஙனம் தோன்றும் மெய்கள் யாவை எனக் குறிப்பிடப்படவில்லை. யகரம், வகரம் இரு சொற்களிடையேயும், னகரம், நகரம் ஒரு சொல்லின் அசைகளிடையேயும் தோன்றின.
பவணந்தியார் இ, ஈ, ஐக்குப் பின்னால் யகரமும், ஏக்குப் பின்னால் யகரமும் வகரமும், ஏனையுயிர்கட்குப் பின்னால் வகரமும் தோன்றும் என்று வரையறுத்துக் கூறினார். ஒரு சொல்லினிடையே தோன்றும் மெய்களைச் சாரியைகள் என்று அழைத்து, இரு சொற்களிடையே தோன்றும் மெய்களை உடம்படுமெய்கள் என்றும் பெயரிட்டனர்.
அதோளி, இதோளி, உதோளி என்பனவும் ஆண்டை யாண்டை என்பனவும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வழக்கில் உள்ள சொற்களாகும்.
(தொடரும்)
பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், பழந்தமிழ்