கூத்தாண்டவர்
கோவில் திருவிழா - கூவாகத்தில் குவிந்த அரவாணிகள்
விழுப்புரம்: விழுப்புரம் மாவ்டடம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர்
கோவில்
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அங்கு
ஆயிரக்கணக்கான அரவாணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து குவிந்து
வருகின்றனர்.
உளுந்தூர்ப்பேட்டை
அருகே உள்ளது கூவாகம் கிராமம். இங்குள்ள கூத்தாண்டவர் கோவிலில் நடைபெறும்
சித்திரைத் திருவிழா பிரபலமானது. இந்த விழாவுக்கு நாட்டின் பல்வேறு
பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான அரவாணிகள் வருகை தருவார்கள்.
கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா கடந்த 21-ம் தேதி சாகை
வார்த்தலுடன் துவங்கியது.
சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதில்
ஆயிரக்கணக்கான அரவாணிகள் கலந்து கொள்வர்.
மணப்பெண் போல அலங்காரமிட்டு இந்த நிகழ்ச்சியில், அரவாணிகள் கலந்து
கொள்வார்கள். அவர்களுக்கு சாமி முன்பு
கோவில்
பூசாரிகள் தாலி கட்டுவார்கள்.
பின்னர் 6ம் தேதி தேர்த் திருவிழா நடைபெறுகிறது. தேர் ஊர்வலத்தின்போது
கற்பூரம் ஏற்றி, கும்மி அடித்து மகிழ்ச்சியுடன் வழிபடுவார்கள்.
மணப்பெண் கோலத்தில் வரும் அரவாணிகள், அரவான் கடவுளின் தேர், அழிகளம்
நோக்கி செல்லும் போது ஒப்பாரி வைத்து அழுவார்கள்.
6-ம் தேதி பகல் தேர் அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு
சென்றடைந்ததும் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும்.
அப்போது
அரவாணிகள் தங்கள் தலையில் சூடியிருந்த பூக்களை பிய்த்தெறிந்தும், நெற்றி
பொட்டினை அழித்தும், வளையல்களை உடைத்து தாலிகளை அறுப்பார்கள். பின்னர்
தலைமுழுகி வெள்ளாடை அணிந்து விதவை கோலம் பூணுவார்கள்.
இதைத்
தொடர்ந்து 7-ம் தேதி விடையாத்தியும், 8-ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும்
நடைபெறும். அத்துடன் சித்திரைத் திருவிழா முடிவுக்கு வரும்.
சித்திரைத்
திருவிழாவையொட்டி கூவாகத்தில் அரவாணிகள் குவிந்துள்ளனர். பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அரவாணிகள் குழுமியிருப்பதால் கூவாகமே
கலகலப்பாக காணப்படுகிறது.
மிஸ் கூவாகம் அழகிப் போட்டி..
சித்திரைத்
திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று விழுப்புரத்தில் தாய் திட்டம் மற்றும்
தாய் விழுதுகள் பெடரேசன் சார்பில் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி சங்கமம்
மற்றும் சிறந்த திருநங்கை -2009 போட்டி நடக்கிறது.
விழுப்புரம் நகராட்சி காமராஜர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடக்கும்
நிகழ்ச்சிக்கு கவிஞர் கனிமொழி
எம்பி
தலைமை தாங்குகிறார். அமைச்சர் பொன்முடி முன்னிலை
வகிக்கிறார்.
இதேபோல்
விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் நல சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் - 2009
போட்டி விழுப்புரம் ஆஞ்சநேய திருமண மண்டபத்தில் நடக்கிறது.
நன்றி:
http://thatstamil.oneindia.in/news/2009/05/04/tn-transgenders-pour-in-koovaham-as-koothandavar.html