piracy, pirate, pirated ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைக்
கேட்டிருக்கிறீர்கள். வெறுமே இவற்றைத் ”திருட்டு, களவு” என்று
சொல்லுவதில் மொழிநடை வளராது.
”தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் ஏதோவொரு தொடர்பு
இருந்திருக்க வேண்டும், அந்தத் தொடர்பால் பல சொற்கள் தம்முள்ளே இணை
காட்டுகின்றன” என்று நெடுநாட்களாய்ச் சொல்லி வருகிறேன். அதை
நம்புவதற்குத் தான் பலரும் தயங்குகிறார்கள், அந்த அளவிற்கு
மாக்சுமுல்லரும், மோனியர் வில்லிம்சும், இன்னும் வெளிநாட்டு, உள்நாட்டு
மொழியியலாளர்களும் நம்முடைய மூளையைச் சலவை செய்திருக்கிறார்கள். படித்த
மக்கள் பலரும் இதை வேதவாக்காய் நம்பிக் கொள்ளுகிறார்கள். ”உருப்படியான
வகையில் இந்திய மொழிகளை இந்தையிரோப்பிய மொழிகளோடு ஒப்பிட்டுப்
பார்க்காமல், சங்கதத்தை என்னும் ஊடகத்தை உள்ளே கொண்டுவந்து அதை உச்சாணிக்
கிளையில் வைத்து, அதன்மூலமே எல்லாவற்றையும் பார்த்து, ஒரே கந்தரகோளம்
போங்கள்..... காவிக் கண்ணாடி போட்டுக்கொண்டு உலகைப் பார்த்தால் உலகம்
காவியாய்த் தான் தெரியும். அதன் பல வண்ணம் தெரியுமா, என்ன?
”பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே, மெய்போலும்மே!” என்பது
சின்னப் பிள்ளையாய் இருக்கையில் படித்தது. மேலும் மேலும் நான் பேசிப்
பலன் என்ன? ”இந்த இராம.கி.க்கு வேறு வேலை கிடையாது” என்ற எள்ளல் தான்
கிடைக்கிறது. இருந்தாலும் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். அதைக்
கேட்பதும் கேட்காததும் உங்கள் உகப்பு.
ஆங்கிலச் சொற்பிறப்பு அகரமுதலி pirate என்பதற்குக் கீழ்க்கண்டவாறு
கொடுத்திருக்கிறது.
pirate (n):
1254, from O.Fr. pirate, from L. pirata "sailor, sea robber," from Gk.
peirates "brigand, pirate," lit. "one who attacks," from peiran "to
attack, make a hostile attempt on, try," from peira "trial, an
attempt, attack," from PIE base *per- "try" (cf. L. peritus
"experienced," periculum "trial, experiment, risk, danger," see
peril). Meaning "one who takes another's work without permission"
first recorded 1701; sense of "unlicensed radio broadcaster" is from
1913. The verb is first recorded 1574.
தமிழில் பறித்தல் என்ற வினை இதே பொருளில் தான் ஆளப் படுகிறது. ”அவன்
இவனிடமிருந்து பறித்துக் கொண்டான்” “பறிப்பு” என்பது பறித்தலின் வழியான
பெயர்ச்சொல். பறி என்றும் ஒரு பெயர்ச்சொல் உண்டு. காட்டு: வழிப் பறி.
அந்தப் பறியை நடத்துபவரைப் பறியாளர் என்றும் சொல்லலாம். பறியாள்தல் என்ற
செய்வினை பறித்தல் என்ற குறுவினையின் நீட்சியாய் அமையும். (பறித்தல்
என்பது இயற்கை, மாந்தர் ஆகிய இருவருக்கும் இடையே உள்ள இடையாட்டத்தையும்,
மாந்தருக்கே உள்ளான இடையாட்டத்தையும் சேர்த்துக் குறிக்கும். காட்டு:
அவன் செடியில் இருந்து பூவைப் பறித்தான்; செழியன் நன்னனிடம் இருந்து
நாட்டைப் பறித்தான். இந்தப் பொதுமைக்கு மாறாக, பறியாள்தல் என்ற நீட்சி
வினை மாந்தருக்கு இடையே உள்ள இடையாட்டத்தை மட்டுமே விதப்பாய்க்
குறிக்கும். நண்பர்கள் இந்த நீட்சிவினையின் தேவையைப் புரிந்து
கொள்ளவேண்டும்.
பறியாள்தலில் இருந்து பிறக்கும் பெயர்ச்சொல் பறியாட்டு / பறியாள்கை.
பறியாள்தல் என்ற வினையைச் செயப்பாட்டு முறையில் சொல்லும் போது ”பறியாளப்
பட்டது” என்று அமையும். பின் “பறியாளப் பட்ட பொருள்” என்ற கருத்து
நிலைகொள்ளும். அது சரி, தமிழைச் சரியாக நாம் எங்கே புரிந்து
கொள்ளுகிறோம்? தமிழ் அகரமுதலிகளை அடிக்கடி பார்த்து நம் சொற்றொகுதியையும்
நாம் எங்கே கூட்டிக் கொள்ளுகிறோம்? வெறுமே 3000, 4000 சொற்களை வைத்துக்
கொண்டு, குண்டுசட்டிக்குள் குதிரையோட்டுவதைப் போலச் சொற்களைச் சேர்த்துக்
கூட்டுச் சொற்களை அமைத்துக் கொண்டிருந்தால், அப்புறம் அறிவியற்
கருத்துக்களைத் தமிழில் எப்படிச் சொல்லுவது? [நண்பர்களே, என் தொனியைப்
பார்த்துச் சினந்து கொள்ளாதீர்கள். கொஞ்சம் புலம்பிவிட்டேன்.]
என் பரிந்துரை:
piracy = பறியாட்டு / பறியாள்கை
pirate = பறியாளர்
pirated = பறியாளப் பட்டது
pirated software = பறியாளப் பட்ட சொவ்வறை.(சொவ்வறை என்ற சொல்லிற்கு
யாரும் கிடுக்கிக் கொண்டு வராதீர்கள். மென்பொருள், மென்கலம் போன்றவை
எனக்குச் சரியாய்த் தோன்றவில்லை. எனவே பயன்படுத்துவதில்லை. I always look
for precision and accuracy in the coinage of words, to the extent
possible, In the present case, soft and mild are different. இயக்குநர்
போல கைக்கு வந்த சொல்லை எடுத்துப் போட்டு ஆய்வில்லாமல் சொல்லப் பட்ட சொல்
மென்பொருளாகும். It is software and not mild good that we should
indicate while rendering in Tamil.)
வழக்கம் போல ”இராம.கி. ஒலியொப்புமை பார்த்துச் சொல்கிறார்; செயற்கையாய்ச்
சொல்லுகிறார்” என்று தவறான அடிப்படையில் புறம் சொல்பவர்கள் சொல்லட்டும்.
நான் கவலைப் படாமல், “எளிமையில்லாமல்” இருந்துவிட்டுப் போகிறேன். .
அன்புடன்,
இராம.கி.