100% சரியான சொல் வேண்டும் என்பதில்லை. "Emotional Inteligence" பற்றிய
ஒரு தமிழ் நூலில் ("இட்லியாக இருங்கள்", சோம. வள்ளியப்பன்), "இட்லி"
என்று மொழி பெயர்த்திருந்தனர். பயன் படுத்த சொற்கள் இல்லை என்பதை விட,
சொல் அவ்வளவாக சரியில்லை என்பது ஒன்றும் பெரிய தவறில்லை.
http://en.wikipedia.org/wiki/Tamil_language - ல் இருந்து பின்வரும்
வரியைக் கவணிக்கவும்.
"A strong sense of linguistic purism is found in Modern Tamil"
purism வளர்ச்சிக்கான வழி இல்லை.
பழயன கழிதலும் புதியன புகுதலும் வழு இல்லை.
உதாரணமாக, ரகர, லகர வரிசையில் துவங்கும் சொற்களைப் பயன் படுத்துவதும்
தவறில்லை. முன்னொரு காலத்தில் சகர வரிசையில் சொற்கள் துவங்காது (?) என்று
இருந்திருக்கிறது.
தனித்தமிழ் தேவையா இல்லையா சரியா தவறா என்பது முடிவிலாத வாதம். அதை வேறு
உரையாடலில் பார்க்கலாம்.
தற்போதைக்கு, நான் மேலே குறிப்பிட்டுள்ள சொற்களைத் தமிழில் எப்படிச்
சொல்லலாம், ஏற்கனவே சொற்கள் புழக்கத்தில் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள
விரும்புவது என் தனிப்பட்ட ஆவல். அதைப் பயன்படுத்துவதும் விடுவதும்
அவரவர் தெரிவு தான்.
கூடவே, gherao - http://en.wikipedia.org/wiki/Gherao - என்ற வினைக்கு
சுற்றி வளை என்று சொல்லலாம். பெயர்ச்சொல்லாக எப்படிச் சொல்வது?
ரவி
அது தனித்தமிழ் சொற்கள் தேவையா, இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கும்
பதிவு இல்லை. தூய தமிழ் சொற்களைத் தேடிக் கொண்டிருந்தால், தேடிக்
கொண்டேயிருக்க வேண்டியது தான். வாக்கியங்களில் அமைக்கும் போது இயல்பாக
அமையும் எந்த ஒரு சொல்லும் சரியான சொல் தான். தவறு என்று தெரிந்தால் பின்
திருத்துவது எளிது, ஆனால் நான் சொற்களைத் தேடிய போது பெரும்பாலும் அவை
கிடைத்ததில்லை.
சில மொழிகளில் இரண்டு மூன்று சொற்கள் சேர்ந்து உணர்த்தும் பொருளை தமிழில்
ஒரே சொல்லில் கூறி விடலாம். இது போன்ற நிலை தமிழுக்கும் ஏற்படும்,
அதாவது, பிற மொழிச் சொற்களை தமிழில் சொல்ல இரண்டு அல்லது மூன்று சொற்கள்
தேவைப் படலாம்.
gherao - http://en.wikipedia.org/wiki/Gherao
"கெரோ" என்றவாறு தமிழ் தினசரிகளில் கூட பயன் படுத்தியிருக்கின்றனர்,
இல்லை, "சுற்றி வளைத்து மறியல் செய்தனர்", "சுற்றி வளைத்தனர்" என்றவாறும்
பயன் படுத்தலாம். "சுற்றி"யும் "வளை"யும் ஒன்றுதானே என்று நினைத்தால்
இரண்டில் ஒன்றை பயன் படுத்துங்கள்.
Picketing - http://en.wikipedia.org/wiki/Picketing
"எல்லை கடந்த" / "வரம்பு மீறிய" என்றவாறு பொருள் கூறப் பட்டுள்ளது.
இவ்வாறு பயன் படுத்துவது கூட, அந்தந்த சொல்லுக்கு அளிக்கும்
முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இது பெரும்பாலும் தேவையிருக்காது (?) என
நினைக்கிறேன்.
hartal
முனைவர் கு.அரசேந்திரனின் "தமிழறிவோம்" பொத்தகத்தில் (திசம்பர் 2001,
ஒன்றிய தமிழர் தோழமை வெளியீடு, உரிமை: யாழினி அரசேந்திரன், 6,
பெருஞ்சித்திரனார் தெரு, சிட்லபாக்கம், சென்னை - 600 064, தொ.பே. 2223
0882) "Hartal அடிப்படைத் தவறு" என்னும் அழகான கட்டுரையைப் படியுங்கள்.
நான் அந்தக் கட்டுரையை இங்கு தட்டச்சித் தருவது நாகரிகத்தின் படி
முறையில்லை. இது போன்ற பொத்தகங்களை எல்லோரும் காசு கொடுத்து வாங்கிப்
படிப்பதே சிறந்தது. முனைவர் கு.அரசேந்திரனின் கூற்றுப் படி hartal என்பது
"கடைதாள்" என்ற தமிழ்க் கூட்டுச் சொல்லின் அப்பட்டமான சங்கத
மறுபெயர்ப்பு. இதைச் சரியாக விளங்காமல், இந்திச் சொல் என்று எண்ணிக்
கொண்டு, அதைக் கடையடைப்பு என்று ஒப்புக்குச் சப்பாணியாய் மொழிபெயர்த்துக்
கொண்டிருக்கிறோம்.
bandh:
அதே போல பந்த் என்பதை மூடு என்று சொல்ல முயலுகிறோம். பொத்துதல் என்பது
தமிழில் மூடுதலே. வாயைப் பொத்து என்று சொல்லுகிறோம் இல்லையா? பிறகென்ன?
அந்த பொத்தே இங்கு மூக்கொலி பெற்று ஒளிந்து நிற்கிறது. தமிழை அடையாளம்
காண நாம் மறுத்தால் எப்படி?
roko
அடைத்தல்>அடைப்பு என்ற சொல் வட தமிழிய (=வட திராவிட) மற்றும் வடபுலத்து
மொழிகளில், டகரம் ரகரமாகித் தான் ஒலிக்கும். நாம் கோழி என்று சொல்லுவதை
தெலுங்கு கோரி என்று சொல்லுகிறது இல்லையா, அதைப் போல. மடிதல் என்பது
மரிதல் ஆகி, மரணம் என்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். நாம் தான் நம் வேர்
காண மறுத்து, rastha roko வை வேறு விதமாய்ப் புரிந்து கொள்ளுகிறோம். சாலை
அடைப்பு = road block (மறியல் என்ற சொல்லை நான் மறுக்கவில்லை.)
strike என்பதும் கூட ஒருவித அடைத்தல் தான். ஆனால் அடித்தல்/அடிவித்தல்
என்றும், strike = அடிதடி என்றும், பேச்சுவழக்கில் சொல்லுவோம். எழுத்தில்
எழுதுவதற்கு மட்டும் ஏனோ தயங்குவோம். தயக்கம் தவிர்த்தால், தமிழ்ச்சொல்
அகப்பட்டு விடும்.
rent strike = வாடகையில் அடிவித்தல்;
prison strike சிறையில் அடிவித்தல்;
sex strike = செகையில் அடிவித்தல்.
அய்யய்யோ! பால் என்று சொல்லுவதற்கு மாறாய் செகை என்று இங்கே சொல்லி
விட்டேனோ? :-) தமிழருக்கு இருக்கும் தயக்கம் இன்னதென்று சொல்ல முடியாது.
ஊரில் இல்லாத சொல் என்று எண்ணிக் கொண்டதால், sex என்ற ஆங்கிலச் சொல்லையே
பலரும் புழங்கிக் கொண்டு இருக்கிறார்கள். செகை என்ற சொல்லும் sex க்கு
இணையானது தான். (செகை என்ற சொல்லில் வரும் ஐகார முடிப்பு என் பரிந்துரை.)
[மறுபடியும் கு.அரசேந்திரனின் "தமிழறிவோம்" என்ற பொத்தகத்தில் வரும் செகு
என்னும் கட்டுரை படியுங்கள். உகர முடிப்பு அவர் பரிந்துரை. வள்ளுவரின்
"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று"
என்ற குறளையும் ஒழுங்காய்ப் புரிந்து கொண்ட மாதிரியும் இருக்கும்.] பால்
என்றே பதவிசாகச் சொல்லிப் பழக்கப் பட்டுப் போனவர்களுக்கு செகு/செகை
புதிதாக இருக்கலாம் :-). ஆண், பெண் என்று பிரிப்பது செகுத்தல் தான்;
பால்தல்/பகுத்தல் என்றாலும் பிரித்தல் தான்.
picket:
பொள்ளுக்கட்டு (பொள்ளுதல் என்பது குத்துதல். பொள்ளு = அம்பு. அம்பு,
அம்பாய் இருப்பதை நம் வீடுகளில் கம்பிக்கேட்டு என்று தமிங்கிலத்தில்
சொல்லுகிறோம் அல்லவா? அதைத் தமிழிலேயே சொன்னால் என்ன?
ghareo = சுற்றிவளைத்தல்
அன்புடன்,
இராம.கி.
ஐயா "பொத்தகம்" சரியான தமிழா? "புத்தகம்" என்பதில் உகரவொலியை ஒகரமாகத்
திரிபுபடுத்தும் ஒரு பேச்சு வழக்கமல்லவோ அது? எங்காவது இதைப்பற்றி
எழுதியுள்ளீர்களா?
(சிங்கள மொழியில் "பொத", "பொத்" எனபர்).
கா.சேது
உங்கள் விளக்கம் சற்று குழப்பி விட்டது. நீங்கள் சொல்வது போல் hartal,
bandh, roko ஆகியவை தமிழ் மூலமாக இருக்கக்கூடியவை என்பதால் அப்படியே
தமிழிலும் சொல்லலாமா? ஏனெனில், வட மொழி என்று சொல்லி பல நல்ல தமிழ்ச்
சொற்களை இனங்காணாமல் தொலைத்து விடுகிறோம் என்று நீங்கள் அடிக்கடி
குறிப்பதுண்டு. இல்லை, அவற்றுக்கு இணையாக நீங்கள் பரிந்துரைக்கும்
கடைதாள், பொத்து, அடைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்கிறீர்களா?
hartal,bandh, roko ஆகியவை எந்தத் தமிழ்ச் சொல்லில் இருந்து
மருவியிருக்கக் கூடும் என்பதைப் பார்த்து அந்தத் தமிழ்ச்சொலைப்
பயன்படுத்துவதைக் காட்டிலும் hartal, bandh, roko ஆகியவை இன்று என்ன
பொருளில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று அந்த சிந்தனை வழியிலேயே
சொல்லலாம் அல்லவா?
கடைதாள் என்பதை விட கடை அடைப்பு டக்கென்று புரியும் என்று எனக்குத்
தோன்றுகிறது.
பந்த்துக்கு முழு அடைப்பு என்று சில பதிவுகளில் பயன்படுத்தி இருக்கக்
கண்டேன். இன்றைய சூழலில் பொத்து என்ற சொல்லைக் காட்டிலும் மூடு என்பது
கண்ணியம் கூடிய சொல்லாகத் தோன்றுகிறதே?
roko எந்தத் தமிழ்ச்சொல்லில் இருந்து வந்தது என்று எனக்கு இன்னும்
புரியவில்லை :(
பொதுவாக, சாலையில் எதையும் போட்டு அடைத்து வைப்பதைக் காட்டிலும் பெரும்
பாலும் மக்கள் தான் சாலையை மறித்து அமர்வது, நிற்பது என்பதால் சாலை
மறியல் பொருத்தமாக இருக்கலாம்..சில இடங்களில் வண்டிகளைக் கொண்டு வந்து
நிறுத்தி சாலையை அடைப்பதும் உண்டு தான்..மறியலில் தோன்றும் போராட்ட
உணர்வு (!), மனித இருப்பு, அடைப்பில் தெரியவில்லை என்று எனக்குத்
தோன்றுகிறது.
strike = அடிவித்தல் என்பதை விட அடி என்று சொன்னால் சுருக்கமாக இருக்கும்
போல் இருக்கிறதே.."வயிற்றில் அடிச்சிட்டான்" போன்ற சொற்கள் இயல்பாக
வருகின்றவை தான்..strike வினைச்சொல்லாக வருகையில் அடி என்று
பயன்படுத்தும் நாம் இந்தச் சூழலில் மட்டும் பெயர்ச்சொல்லுக்கு எப்படியோ
நிறுத்தம் என்று சொல்லத் தொடங்கி விட்டோம்.
ஆனால், என்னுள் எழும் கேள்வி - எப்போதுமே ஆங்கி, பிற மொழிச் சொல்லை
மொழிபெயர்த்தோ, தமிழ் மூலம் கண்டோ தான் தமிழாக்க வேண்டுமா? ஏனெனில்
உங்கள் பெரும்பாலான பரிந்துரைகளில் இந்த அணுகுமுறையேகாணப்படுகிறது? பிற
மொழிச் சொற்களைக் கண்டு கொள்ளாமல் நாம் இயல்பாக எப்படிச் சிந்திக்கிறோமோ
புரிந்து கொள்கிறோமோ அதன் அடிப்படையில் சொல் ஆக்கக் கூடாதா? strike என்ற
ஆங்கிலச் சொல்லே நமக்குத் தெரியாவிட்டாலும் striking என்ற நடைமுறை நம்
சமூகத்தில் இருந்திருக்கக்கூடியது தானே? அதற்கு எதற்கு ஆங்கிலச் சொல்லை
மொழிபெயர்த்து தமிழாக்க வேண்டும். ஒன்றைச் செய்து கொண்டிருப்பதை
நிறுத்துகிறோம் என்று நாம் புரிந்து கொள்வது போல் நிறுத்தம் என்றே
சொல்லலாகாதா? hunger strike போன்றவற்றை நிறுத்தம் என்ற சொல்லின்
துணையின்றி உண்ணா போராட்டம் என்று நம்மால் சொல்ல முடியும் தானே?
என்னைப் போல் வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அனைத்துத் தமிழ் நூல்களையும்
நினைத்த உடன் வாங்கிப் படிக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அதற்காகவேனும்
நீங்கள் குறிப்பிடும் நூல்களின் முக்கியமான ஒரு சில பகுதிகள்,
பக்கங்களைத் தட்டச்சு செய்தோ படியெடுத்தோ தரலாமே? உசாத்துணைக்காக
இப்படிச் செய்வது காப்புரிமை மீறலாகாது என்றுநம்புகிறேன்..
ரவி
> roko
ருக் ருக் ருக்... அரே பாபா ருக்
> strike = அடிவித்தல் என்பதை விட அடி என்று சொன்னால்
ஏனோ செயப்பாட்டு வினை (பிறவினை ?!) வாக்கியங்களை பயன்படுத்துவதில் ஒரு
தயக்கம் நம்மிடையே இருக்கிறது. பெங்களூரில் ஒரு தெலுங்கு நண்பர் "நிலுபி"
(நிறுத்து) என்றவாறு ஒரு சொல்லை பயன் படுத்தினார். தமிழில் இது போல நான்
கேட்டதே இல்லை.
http://thatstamil.oneindia.in/news/2007/10/18/tn-villagers-ghero-panchayat-chairman-free-tv.html