அன்புடையீர்,
மேலே கொடுத்துள்ள சொற்களுக்கு என் பரிந்துரையையும், அங்கங்கே சில
விளக்கங்களும், கீழே கொடுத்துள்ளேன். வழக்கம் போல் இவற்றை ஏற்பதும்
ஏற்காததும் உங்கள் உகப்பு.
System - கட்டகம் (அமைப்பு, முறைமை என்பவை பல இடங்களில் சரிவராமல்
போகின்றன. அதோடு கட்டப்பட்ட நிலையை அவை உணர்த்துவதே இல்லை. கூட்டுச்
சொற்களை
அமைக்கும் போது கட்டகம் என்பது மிக எளிதாக வளைந்து கொடுக்கிறது.)
Organization - ஒருங்கானம். [ஒருவுதல், ஒருங்குதல் = ஒன்று சேருதல்.
ஒருங்கம் - organ = ஒருங்குபட்ட கூட்டில் இருக்கும் ஓர் உறுப்பு.
ஒருங்குவித்தல் (ஒருங்குதலின் பிறவினை)
>ஒருங்கேற்றல் = ஒருசேர அமைத்தல் = to organize; ஒருங்கேற்றம் = organization, ஒருங்கம் என்ற சொல்லை இதற்கு ஈடாகப் பயன்படுத்தியுள்ளேன். இங்கே கொடுத்திருக்கும்
இணைச்சொற்களை ஒருங்கு சேர வைத்து எண்ணிப் பார்க்கும் போது ஒருங்கேற்றம்
என்பதையே organization க்கு இணையாக வைத்துக் கொண்டு ஒருங்கம் என்பதை
organக்குப்
பொருத்தமாய் அமைத்துக் கொள்ளுவதே நல்லது என்று தோன்றுகிறது. ஒருங்கியம் =
organism; endemic organism - உள்ளொடு ஒருங்கியம்; endemic என்ற சொல்லை
சொற்பிறப்பு
அகரமுதலி “1662, from Gk. endemos "native," from en- "in" + demos
"people, district" (see demotic)” என்று குறிக்கும். ஒடு, ஓடு, உடன்
என்ற இடைச்சொற்களின் வேர் ஆக
ஒடுதல்/ஒட்டுதல் என்ற வினையைப் புரிந்து கொள்ளலாம். ஒரு பெரிய
கட்டகத்தின் உள்ளே அதனொடு சேர்ந்தாற்போல் உறையும் ஓர் ஒருங்கியத்தை ”உள்
ஒடு ஒருங்கியம்” என்று
சொல்லலாம். உள்ளொடுதல் = to be endemic.
Structure - தறுக்கு [தறுக்குதல் என்பது கட்டுதல் என்று பொருள் கொள்ளும்.
நெடுக்கு வாட்டில் வார்ப்பு (warp) இழையும், குறுக்கு வாட்டில் ஊடு
(weft) இழையுமாய்த் தறுக்கியவை
சேலை, துணி, வேட்டி போன்றன. தறுக்கும் வேலையைச் செய்வது தறி. நூலிற்கு
மாற்றாய், இருப்புக் கம்பிகள், மரத் துண்டுகள், போன்றவற்றைக் குறுக்கும்
நெடுக்குமாய்க் கட்டித்
தறுக்கும் அமைப்பைத் தறுக்கு என்றே சொல்லலாம். ஒருகட்டடத்தில் கற்காரை
இடும்போது இப்படித் தருக்குகளை அமைத்து பூசுகிறோம். தறுக்கும்
கற்காரையும் சேரும் பொழுது அதை
உறுதிபெறு கற்காரை (reinforced concrete) என்று சொல்லுவார்கள்.
தருக்குகள் என்பவை பல்வேறு அளவில் உள்ளவை. தறுக்குகள் இல்லாமல் கட்டடம்,
கட்டகம் போன்றவற்றிற்கு
உறுதிப்பாடு கிடைப்பதே இல்லை.]
Turn - திருகு (ஓன்றில் இருந்து இன்னொன்றிற்கு மாறி மாறித் திரும்பி
வருவது turn. ஆணியில் இருக்கும் turn களும் அப்படித்தான். அவற்றைத்
திருகு என்றே சொல்லலாம். எங்கள்
ஊர் ஆசாரிகள் இந்தச் சொல்லைக் கையாண்டதை என் சிற்றகவையில்
கேட்டிருக்கிறேன். திருகு விசையை பிறவினையில் சொல்லும் போது திருக்குதல்
என்று சொல்லுவோம். torque =
திருக்கு.
Order - ஒழுங்கு
Dicipline- ஒழுக்கம்
Methodology - முறையியல், முறைப்பாடு (method, procedure/process ஆகிய
இரண்டிற்கும் அடிப்படையில் வேறுபாடு காட்டவேண்டும். இந்த வேறுபாட்டைப்
புரிந்து கொள்ளாமல்
நினைவில் வந்தவாறு சொற்களைப் பயன்படுத்தினால் அப்புறம் நம் மொழிநடையில்
துல்லியம் கிடைக்காது. procedere என்ற இலத்தீன் வினைச்சொல்லிற்குச்
செலுத்துதல் என்றே பொருள்
இது ஒரு பிறவினைச்சொல். பல்வேறு முறைப்பாடுகளில் ஏதோ ஒன்றை
தேர்ந்தெடுத்து அதை நடத்திக் காட்டுவது (அதாவது செலுத்திக் காட்டுவது)
செலுத்தல் ஆகும்.
Procedure - செலுத்தூறு (செலுத்து உறுதல் செலுத்தூறு)
Process - செலுத்தம் (இது துணை வினை இல்லாது அம் என்னும் ஈற்றில்
முடியும். செலுத்தூறு, செலுத்தம் என்ற இரண்டிற்கும் மிகச் சிறிய வேறுபாடு
வேதிப் பொறியியல் போன்றவற்றில்
காட்டுவார்கள். சோதனைச் சாலையில் சிறிய அளவில் செய்வது செலுத்தூறு. அதைத்
திணைக்கள (plant) அளவில் பெரிதாகச் செய்தால் செலுத்தம். அம் என்பது
பெரியதைக் குறிக்கும்
தமிழ் ஈறு.
Control - கட்டுப்பாடு
Command - கட்டளை
Sequence - வரிசை
Coordinate - ஒருங்கிணைப்பு
Administer - நிருவகித்தல்
Manage - மானகைத்தல் (மேலாண்மை என்ற சொல்லைத் தவிர்க்கச் சொல்லி நான்
நெடுங்காலம் சொல்லிவந்திருக்கிறேன். ஆண்மை என்பது ஆளுமை = ruling என்ற
பொருளையும்,
ஆண்/பெண் என்ற வேறுபாட்டையும் உள்ளூறக் குறிக்கிறது. there are no rulers
and ruled in management. The method of managing can be by number of
means. What is important
is to direct humans in a particular way to accomplish certain tasks.
மாந்தரை அகைப்பது மானகைத்தல்; அகைத்தல் = செலுத்துதல். மாந்தரின்
அடிச்சொல் மான். பல்வேறு கூட்டுச்
சொற்களுக்கு மானகை என்ற சொல் மிக எளிதாக நெகிழ்ந்து கொடுக்கும். அந்த
அளவிற்கு மேலாண்மை வராது. பல்வேறு இடக்கரான இடங்கள் உண்டு.
அன்புடன்,
இராம.கி.