எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள்
? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.
*** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.
‘Possessor of the Land’ என்றால் நில உடைமையாளர் என்றும்
‘owner of the Land’ என்றால் நில உரிமையாளர் என்றும் வேறுபடுத்திக் கூற வேண்டும். இருநிலையிலும் ஒருவரே இருக்கலாம். வெவ்வேறாகவும் இருக்கலாம். எனவே, இவ்வாறு நிலத்திற்கு உரிமையாளரை உரிமையாளராகவும் உரிமையாளராக இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருப்பவரை உடைமையாளர் என்றும் சொல்லுவதே சரியாகும்.
இக்கோப்பில் பிரேத விசாரணை அறிக்கை எனக் குறிக்கப்பட்டுள்ளது.
Inquest என்பதற்கு உசாவுதல் எனப் பொருள். என்றாலும் இங்கு இச்சொல் பிண ஆய்வு குறித்துக் குறிக்கின்றது. எனவே, பிண ஆய்வு அறிக்கை எனக் குறிக்க வேண்டும்.
? ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் குறிக்கப்படுவது தமிழில் இரண்டு, மூன்று சொற்சேர்க்கையாக உள்ளதே!
*** தமிழில் ஏழு எழுத்துக்களுக்கு மேல் எந்தத் தனிச் சொல்லும் இல்லை. இயற்கைப் பெயர்கள், உயிரினப் பெயர்கள் முதலியன மரம், செடி, கொடி, வேர், கொடி, கிளை, பூ, இதழ், காய், கனி, நாய், பரி, கரி, புலி, மான், ஆடு, மாடு, கிளி, குயில், மயில், முதலை, பாம்பு, பல்லி, குருவி, காகம் என்பன போன்று மிகுதியானவை பெரும்பாலும் நான்கு எழுத்துகளுக்குள் அடங்கிவிடுகின்றன.
நாம் தமிழ்ச் சொற்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை உணராமலும் அயற்சொல் கவர்ச்சியாலும் தமிழை மறந்தமையால் சுருங்கிய சொல்லுக்கு மாற்றாக விரிந்த தொடரைக் கூறும் இழிநிலை ஏற்படுகிறது.
சுருக்கமான தமிழ்ச் சொற்கள் பல இருப்பினும் ஆங்கிலம் வழியாக எண்ணும் பழக்கம் வேரூன்றியமையால் விரிவாகத் தமிழில் கூறுகின்றோம்.
தமிழில் சொல்லுதல் என்பதற்கு இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வாங்கல், குயிலல், புகர்தல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செம்பல், அதிர்தல், பணித்தல், சொற்றல், ஆடல், எனப் பல பொருள்கள் உள்ளமையைப் பிங்கல நிகண்டு கூறுகிறது.
இவற்றில் ஒவ்வொன்றிற்கும் பல பொருள்கள் உள்ளன. சான்றாக இயம்பலைப் பார்ப்போம்.
“கதையும் நுவலும் காதையும் கிளவியும் பணுவலும் அறையும் பறையும் வாணியும் கூற்றும் மொழியும் குயிற்றும் புகறலும் மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் இசையும் இயமும் பேச்சும் உரையும் எதிர்ப்பும் என்றிவை இயம்பல் ஆகும்” எனப் பிங்கல நிகண்டு 21 பொருள்களைக் கூறுகின்றது.
? அவ்வாறு சொல்லுதலைக் குறிக்க எத்தனைச் சொற்கள் உள்ளன?
அவ்வாறு பல சொற்கள் உள்ளன. 39 சொற்களை மட்டும் பார்ப்போம். இங்கே சொல்லப்போகும் சொற்களுக்கு மேலும் பல பொருள்களும் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு பொருளை மட்டும் பார்ப்போம்.
இத்தகைய தமிழ்ச் சொல் வளம் நம் அறிவு வளத்தையும் பண்பாட்டு வளத்தையும் நன்றாக உணர்த்துகின்றது. நமக்கே உரிய சொல்வளத்தைத் துறந்து விட்டு அயல்மொழியிடம் கடன் வாங்கி நம்மை நாமே இழிவாக நடத்திக் கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும். “இனியேனும் நமது வளங்களை நாம் இழக்கக்கூடாது’ என உறுதி எடுத்துத் தமிழில் பேசும்பொழுது தமிழிலேயே பேசினாலும் தமிழில் எழுதும்பொழுது தமிழிலேயே எழுதினாலும் தமிழில் சுருக்கமாகவே விளக்க இயலும்
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்