காலவோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும் மனிதர்களைச் சந்திக்காத தருணம் என்று
எதைச் சொல்ல முடியும். அப்படிச் சந்திக்கும் மனிதர்களில் ஒரு சிலர் நட்பாய் மனதோடு
இருக்கமாய் ஒட்டிக் கொள்வதுண்டு. தொடர்ந்து ஓடும் ஓட்டங்களில் அப்படிப் பட்ட
நட்புகளை அடிக்கடி சந்திக்காமல் இருந்தாலும் கூட, மனதை விட்டு அகலாமல் ஆணித்தரமாய்
இருக்கும் நட்புகள். அப்படிப்பட்ட ஒரு நண்பன் திருப்பூரைச் சார்ந்த “சந்துரு”.
திருப்பூர்
நகரை எதற்காக நினைத்தாலும் பளிச்சென மனதில் மின்னலடிப்பது சந்துரு என்ற அந்த நண்பன்
தான். அவரோடு சேர்ந்து திருப்பூரில் சுத்தாத வீதிகள் இல்லை, போகாத பயணங்கள்
இல்லையென்றே சொல்லலாம். எந்தவித தயக்கமும் இல்லாமல் புழங்கிய வீடு.
அன்பால் பின்னிப் பிணைந்த கணவனும் மனைவியுமாய் என் குடும்பத்தோடு மிக நெருங்கிய
உள்ளங்கள்.
திருப்பூர்
நகரத்து சந்தடியில் பரபரப்பாய் தன் தொழிலில் இயங்கிக் கொண்டிருந்தவரிடம்
எதேச்சையாய் ஒரு நாள் பேசும் போது திடீரென ஒரு வரி வீர்யமாய் வந்து விழுந்தது
“கதிர், மாட்டுப் பண்ணை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்”. ஒரு விநாடி என் காதில்
விழுந்ததை சற்றும் நம்பாமல், திரும்பத் திரும்பக் கேட்டேன் “என்ன,
உண்மையாவா?”
என்னால்
நிச்சயமாக நம்ப முடியவில்லை. கிராமம் நாலுகால் பாய்ச்சலில் நகரத்தை நோக்கி ஓடி
வரும் நேரத்தில், திருப்பூர் போன்ற தொழில் நகரத்திலிருந்து கிராமத்தை நோக்கிய
பயணத்தையும், கிராமத்து தொழிலை நோக்கிய பார்வையையும் எண்ணும் போது மிகுந்த
ஆச்சர்யமாக இருந்தது.
கோவை
சூலூருக்கு அருகே பண்ணை வேலைகள் ஆரம்பமானது, அடுத்தடுத்து அவ்வப்போது பேசும்
நாட்களில் பண்ணை வேலைகள் குறித்து பேசுவதும், மாடுகள் வாங்குவது குறித்துப்
பேசுவதும் என எங்கள் உரையாடல்கள் பண்ணை குறித்தே அதிகம் இருந்தது. கட்டிட வேலை,
மாடுகள் கொள்முதல், கறவைக்கான கருவிகள், வாகனம் என முதலீட்டில் பாரத ஸ்டேட்
வங்கியும் கை கொடுக்க இன்று சுரபி பால் பண்ணை மிக அழகாய் தன் பயணப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
காலங்கள்
கரைந்ததில் நகரத்துச் சாயல் படிந்த நண்பரின் கனவு மாட்டுப் பண்ணை மிக அழகாய்
செழித்து நிற்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாடு வகைகள், திட்டமிட்ட வளர்ப்பு முறை,
ஆரோக்கியமான தீவனம், மிகச் சிறந்த மருத்துவ கவனிப்பு என ஒரு நிபுணத்துவம் வாய்ந்த
தொழில் முறையில் விவசாயம் சார்ந்த மாட்டுப் பண்ணை நவீனத்தோடு நிமிர்ந்து
நிற்கிறது.
நகரத்துத் தொழில் நிமித்தம் சொகுசான வாழ்க்கை, சொகுசான
பயணம் என்று சொகுசாய் வாழ்ந்து பார்த்த நண்பனை, இன்று கடிகாரத்தில்
எழுப்பும் மணி வைக்காமலே அதிகாலை மூனரை மணிக்கு பண்ணைக்கு ஓடுவதை அறியும் போது
ஆச்சரியமும், பிரமிப்பும் என்னைச் சூழ்கிறது. தினமும்
காலையும் மாலையும் பண்ணை நிர்வாகம், பால் விற்பனை என சுழன்று
ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது மிக மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும்
இருக்கின்றது.
மனம் விட்டுப்
பேசும் நேரங்களில், ”எப்படி இதுல ஆர்வம் வந்துச்சு” என மனதைக் கிளறும் போது ”தினமும் மக்கள் பயன் படுத்தும் பொருளாக இருக்கவேண்டும்,
அதில் கலப்படம் இல்லாமல் மிகத் தரமாக கொடுக்க வேண்டும்” என்ற கொள்கையே இதற்குக்
காரணம் உத்வேகத்தோடு பேசுகிறார். நேர்மையான, நல்ல வியாபாரக் கொள்கை கொண்டவரின்
”சுரபி பாலு”க்கு சூலூர் பகுதியில் மிகப் பெரிய வரவேற்பு மக்கள் தரத்தின் பொருட்டு
அளித்திருக்கிறார்கள் என்பது விற்பனை முறையை உற்று நோக்கும் போது
தெளிவாகிறது.
பண்ணையில்
கறக்கும் பாலை மற்ற நிறுவனங்களுக்கு விற்காமல், நேரிடையாக தாங்களே கடைகள் அமைத்து நேரிடையாக விற்பதால் வாடிக்கையாளர் வரை தரத்தை தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்றும் கூறுகிறார். கூடவே தங்கள் பண்ணையின்
பால் மட்டுமல்லாது, அருகிலிருக்கு விவசாயிகளிடமும் ஒப்பந்த அடிப்படையில் பால்
கொள்முதல் செய்து தங்கள் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை
செய்கிறார்கள்.
|
பண்ணை முகப்பு - பதிவர்கள் ஆரூரன், பழமைபேசி மற்றும்
சந்துரு |
|
பண்ணையில் சந்துரு |
|
தீவனக் கலப்பு |
|
கறவைக் கருவிகள் |
|
உணவு, மருத்துவ திட்டமிடல் விபரங்கள் நேர்த்தியான
பண்ணை மற்றும் சிறந்த பால் விநியோகத்தைக் கண்டு பொதிகை தொலைக்காட்சி இவர்களுடைய
பண்ணைக்கு நேரில் வந்து ஒரு கலந்துரையாடலை பதிந்து ஒளிபரப்பியது குறிப்பிடத்
தகுந்தது. புதிதாய் பால் பண்ணைத் தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு தன்னுடைய
ஆலோசனைகளை மகிழ்ச்சியோடு தெரிவித்தும் வருகிறார். (தொடர்புக்கு: சந்துரு 98428-42049, e-mail :
surab...@gmail.com)
பொருளீட்டுவது
மட்டுமே நோக்கமாக இல்லாமல், பொருளீட்டுவதில் ஒரு நியாயத்தையும் கற்பிக்க நினைக்கும்
”சந்துரு” மற்றும் அவருடைய கனவுத் திட்டமான சுரபி பால் பண்ணை
வளர்ந்தோங்கங்கட்டும்.
___________________________________________ |