ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 14 January 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 966-970: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 971-975
சமச்சீர் தொடர்பான தேவையற்ற பேரச்சம் சமச்சீர் வெருளி.
யாவரையும் சமமாக எண்ணாமல் தன்னை உயர்த்திக் கொள்ளும் சமச்சீர்மை காணா மனப்போக்கு குறித்துப் பிறருக்கு பேரச்சம் ஏற்படுகிறது. சமச்சீர் கல்வி தொடர்பான தேவையற்ற பேரச்சத்தையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
சமச்சீர்மையின்மையால் மூட்டுப்பகுதிகள் பாதிப்படைந்து ஏற்படும் முடக்குவாத நோய் குறித்த பேரச்சத்தையும் இவ்வகையில் சேர்ப்பர்.
sym என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அதே. metri என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அளவு.
00
சமயம்/மதம் தொடர்பான வெறுப்பும் பேரச்சமும் சமய வெருளி.
சமயம்/மதம் பெயரில் நிகழ்த்தப்பெறும் சடங்குகள், உரைகள், விழாக்கள், தொடர்பான புத்தகங்கள், படங்கள், ஒலி-ஒளி இழைகள், சமயப் பரப்புரைகள் எனச் தொடர்பாக வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
கடவுள் தண்டிப்பார் என்ற பேரச்சமும் சிலரிடம் உண்டு. இறை ஏற்பாளர்களில் இத்தகையோரைக் காணலாம். கடவுள் பெயரலால் மூடநம்பிக்கைகளைப் பரப்பி மக்களைப் பாழ்படுத்துகிறார்களே என்ற பேரச்சமும் சிலரிடம் உண்டு. இறை மறுப்பாளர்களிடையே இப்போக்கினரைக் காணலாம்.
theo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கடவுள் என்றும் இறைமை என்றும் பொருள்.
00
சமனி இயந்திரம் (bulldozer) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சமனி வெருளி.
நிலச்சமனி, நிலத்தகரி, மண்நிரவி, நிலச் சமனெந்திரம், மண்வாரி, நிலச் சமன்பொறி, நிரவல் எந்திரம், இடி வாரி, இடிப்புந்து என்றெல்லாம் பல வகைகளில் குறிப்பிடுகின்றனர்.வேண்டாத கட்டடம், மேடு முதலியவற்றை இடித்தும் இடித்த பின் அகற்றியும் அல்லது குப்பைகளை நீக்கியும் அந்தப் பகுதியைச் சமன் செய்வதால் சுருக்கமாகச் சமனி என்றே சொல்லலாம்.
00
மின் சமைப்பி (crockpot)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சமைப்பி வெருளி.
மெது சமைப்பான்(Slow cooker) என்றும் இதனைச் சொல்வர். குக்கர்(cooker) என்பதை சமைகலன், சமைகலம், சமையற் கலம், அடுகலம் என்றும் சொல்வர்.
00
சமையலறைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் சமையலறை வெருளி.
சமையல் பொருள்களை எங்கே எந்தக் கொள்கலனில் வைக்கப்பட்டுள்ளது என்று தேடுவது குறித்த கவலைும் சமையலைறத் தூய்மை தொடர்பான கவலையும் வெருளியை உண்டாக்குகிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5