(வெருளி நோய்கள் 231 – 235 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 236 – 240
அற்புத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் அற்புத எண் வெருளி.
அற்புதம் என்பது பத்து கோடி (10,00,00,000) ஐக் குறிக்கும்.
00
அனல் கக்கி(flame throwers) குறித்த வரம்பற்ற பேரச்சம் அனல் கக்கி வெருளி.
பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆழமான அகழிகள், கோட்டைகள் ஆகியவற்றிற்கு எதிராக அனல் கக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த இடங்களில் இருப்பவர்கள் தீப்பிழம்புகளால் காயமடையலாம், உயிரிழக்கலாம், புகை உள்ளிழுக்கப்பட்டுக் கொல்லப்படலாம். இவற்றின் காரணமாக அனல்கக்கிகள் மீது பேரச்சம் வருகிறது. இக்காலப்போர் முறையில் இஃது ஏற்றதல்ல என 1978இல் அமெரிக்கப் படைத்துறையில் அனல்கக்கிகள் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இருப்பினும் வேறு வகையில் இது போர்களில் பயன்படுத்தப்படுகிறது. சான்றாக 1987 இல இந்திய அமைதிக் காப்புப்படை(Indian Peace keeping force) இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.
00
பார்க்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.
அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.
எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.
அனைத்தும்,
புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)
கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68)
அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16)
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)
எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க அனைத்து வெருளி
pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.
Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.
pant என்னும் கிரேக்கச் சொல்லிற்கு ஒவ்வொன்றும் என்று பொருள்..
ஒவ்வொரு பொருள்/தனித்தனிப் பொருள் தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் இவையே!
00
அனைவரும் நட்சத்திரம்(All stars) பாடல் மீதான அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் அனைவரும் நட்சத்திரப் பாடல் வெருளி
00
அன்னம் மீதான அளவுகடந்த பேரச்சம் அன்ன(ம்) வெருளி.
Kykno என்னும் கிரேக்கச் இலத்தீன் சொல்லின் பொருள் அன்னம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 அகரமுதல
அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அரிய வான
பொருளனைத்துந் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமுந்தே சமும்வகுத்துக் கருவி யாதி
இருவினையுங் கூட்டிஉயிர்த் திரளை யாட்டும்
விழுப்பொருளே யான்சொலும் விண் ணப்பங் கேளே!
பாரதிக்கு முன்னோடியாக எளிய நடையில் பாடல் எழுதிய தாயுமானவரின் இறைச்சுவை உணர்த்தும் பாடல் இது.
தாயுமானவர் பாடல் தொகுப்பில் ஆகாரபுவனம் – சிதம்பர இரகசியம் என்னும் 14 ஆவது தலைப்பில் 7ஆவது பாடலாக உள்ளது.
“உண்ண உண்ணத் தெவிட்டாத அருள்பழத்தின் இன்சுவையாய் விளங்குபவனே! கரும்பின் இனிய பிழிவே! தேனின் நற்சுவையே! கிடைத்தற்கரிய அமிழ்தே! என் இருகண்ணாய் விளங்குபவனே! அரும்பொருள் யாவற்றையும் தரும் அரிய பொருளாக விளங்குபவனே! எச்சூழலிலும் கருணை நீங்காமல் முழு அருள்வடிவாய் நிற்பவனே! தூய வாழ்வே! கருத்தினுள் கருத்தாய்ப் பரவி, காலமும் இடமும் வகுத்து, கருவி முதலிய உறுப்புகளின் நல்வினை, தீ வினைப் பயன்களைக் கூட்டி, உயிர்க்கூட்டங்களை அவ்வவ் வினைகளுக்கிணங்க ஆட்டுவிக்கும் சிறந்த பொருளே! நான் கூறப் போகும் விண்ணப்பத்தினைக் கேட்டு அருள்வாயாக!”
என இறைவனை வேண்டுகிறார் தாயுமானவர்.
துன்பக் கசப்பு நிறைந்த உலகில் கசப்பை நீக்ஙகும் நம்பிக்கை தரும் அருள்வடிவாய் உள்ளமையால் பல் சுவைகளாக இறைவன் அழைக்கப்படுகிறான்.
பூரணம் என்பது முழுமையைக் குறிக்கும் தமிழ்ச்சொல்லே! 52 சுழிகளை உடைய மிகப்பெரிய எண் முழுமையாகக் கருதப்பட்டுப் பூரியம் எனப்பெற்றது. முழுமையாக உப்பும் உணவுப் பண்டம் பூரி எனப்பட்டது. முழுமையான நிலா பூரண நிலா என்றுஅழைக்கப்பெற்று பூரணி ஆகவும் பௌர்ணமி ஆகவும் மாறியது.
இறை நம்பிக்கை உடைய யாவருக்கும் பொதுநிலையில் பொருந்தக்கூடிய பாடல்களில் தாயுமானவரின் இப்பாடலும் ஒன்று.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 101, ஐப்பசி 1, 2046 / அக்.18, 2015)