(நாலடி நல்கும் நன்னெறி 22. அறிவில்லாதவனிடம் எதையும் சொல்லாதே! : தொடர்ச்சி)
பனைபோல் உயர்தன்மையுடையாரிடம் நட்பு கொள்க!
கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை
இடையாயார் தெங்கின் அனையர்; – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.
நாலடியார் 216
கருத்து: முதல், இடை, கடைநிலையில் உள்ள நட்பை உணர்ந்து பனைமரம்போன்று. தொடர்ந்து உதவாவிடினும் நட்புத்தன்மை குறையாதவரிடமே நட்பு கொள்ளல் வேண்டும்.
பதவுரை : கடையாயார் = கடைநிலையினர்; நட்பில் = தோழமை உணர்வில்; கமுகனையர் = கமுகு மரம்போன்ற தன்மையர்; ஏனை = பிறர்; இடையாயார் = இடைப்பட்ட நிலையினர்; தெங்கின் = தென்னைமரம் போன்ற; அனையர் = தன்மையர்; தலையாயார் = முதன்மை நிலையினர்; எண்ணரும் = எண்ணிப் பார்க்க இயலாத மதிப்பு மிக்க; பெண்ணை = பனைமரம்; போன்று = போன்ற; இட்டஞான்று = விதையிட்ட பொழுது; இட்டதே= நீரிட்டதே போதும் எனக் கருதும்; தொன்மை = பழைமைப் பண்புகள்; உடையார் = உடையவர்கள்; தொடர்பு = நட்பு .
பாக்குமரம் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சினால் மட்டுமே பயன்தரும். அதுபோல், தொடர்ந்து உதவினால் மட்டுமே உதவுபவர் கடைப்பட்ட நண்பர்.
தென்னைமரத்திற்கு இடையிடையே தண்ணீர் பாய்ச்சினாலும் பயன்தரும். அதுபோன்று உதவம் பொழுது மட்டும் நட்புத்தன்மையைக் கொள்பவர் இடைப்பட்ட நிலை நட்பினர்.
ஊன்றியபோது மட்டும் நீரூற்றிப் பின்னர் தண்ணீர் பாய்ச்சாமல் வளர்ந்து பயன்தருவது பனைமரம். பனைமரம் போன்ற தன்மையர் தலையாய நண்பர்.
அஃதாவது தொடர்ந்து உதவினால்தான் பயன்தரும் கமுகு மரம்போன்றவர் கீழோர். இடையிடையே கவனித்தால்தான் பயன்தரும் தென்னை மரம். இதுபோன்ற தன்மையர் இடைப்பட்டோர். விதையிட்டபொழுது மட்டும் தண்ணீர் ஊற்றினாலும் எப்போதும் பயன்தருவது பனை மரம். இத்தகைய தன்மையர் உயர்ந்த நட்பினர். கமுகிற்கும் தென்னைக்கும் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தி விட்டால் அவற்றின் பயன்கெடும். பனைமரம் அத்தன்மையதல்லை. விதையிட்ட பொழுது நீர் ஊற்றிப் பின்னர் கவனிக்காமல் விட்டாலும் பயன் தரும் சிறப்பிற்குரியது. எனவே, தொடர்ந்து உதவாவிட்டாலும் நட்புணர்வுடன் இருப்போரிடம் மட்டுமே நட்பு கொள்ள வேண்டும். நாமும் பனைமரம் போன்ற தன்மையராய் விளங்குதல் வேண்டும்.
பனை மரத்திற்கு விதை ஊன்றியபின் அல்லது பிறகு நீரூற்றல் முதலிய எதுவும செய்யாமையின், ‘இட்ட ஞான்றிட்டதே’ எனக் கூறப்பட்டது.
தொன்மை யுடையார் என்பதே பழைமை எனத் திருவள்ளுவரால் ஓர அதிகாரம்(எண் 81) வைக்கப்பெற்று உரைக்கபபட்டுள்ளது.
நாம் பனைமரம்போன்ற தலையாய தன்மையராய் நட்பு உணர்வுடன் திகழ்வோம்! அத்தகையோர் தொடர்பையே கைக்கொள்வோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்