(வெருளி நோய்கள் 514-518: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 519-523
எளிமைபற்றிய வரம்பற்ற பேரச்சம் எளிமை வெருளி.
எளிய நிலையில் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அதனாலும் எளிமை வெருளிக்கு ஆளாவர்.
00
எறும்பு குறித்துக் காரணமில்லாமலே அஞ்சுவது எறும்பு வெருளி.
எறும்பு குமுக ஒழுக்கம் உடைய செய்தியைத் தம்மிடையே நேர்த்தியாகப் பரிமாறிக் கொள்ளும் திறன் மிக்க உயிரியாகும். எனினும் இது கடித்தால் வலிக்கும் என அஞ்சுவர். கட்டெறும்பு, செவ்வெறும்பு முதலான சில வகை எறும்புகள் கடித்தால் நீண்ட நேரம் வலி இருக்கும். எனவே, எறும்பைக் கண்டால், சில இடங்களில் அல்லது பாதைகளில் எறும்பு இருக்கும் என்று கருதினால் அளவு கடந்த அச்சம் கொள்வர்.
பூச்சிகள் குறித்துக் காரணமின்றி அஞ்சும் பூச்சி வெருளியர் போன்றவர்களே எறும்பு வெருளியரும். [பூச்சி வெருளி (Entomophobia/Insectophobia)]
myrmex என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எறும்பு.
00
.
என்புருக்கி நோய்/காசநோய் குறித்த இயல்புமீறிய பேரச்சமே என்புருக்கிநோய் வெருளி.
என்புருக்கி நோய்த்தடுப்பு முறைகளும் நலப்படுத்தும் மருத்துவமும் பரவலாக உள்ளன. இருப்பினும் என்புருக்கியரைப் பார்த்தாலே, அவர்கள் அருகில் இருந்தாலே என்புருக்கி நோய்க்கு ஆளாகி, உடல் சீர் குலைந்து மரணம் நேரும் என அஞ்சுவோர் உள்ளனர். இயல்பான இருமலைக்கூட என்புருக்கி நோயின் அடையாளமாகக் கருதி அஞ்சி அஞ்சிச்சாவர்.
Phthisis / Tuberculo என்றால் என்புருக்கி நோய் / காசநோய் எனப் பொருள்.
00
வீட்டு நினைவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஏக்க வெருளி.
கல்வி, பணி, மண வாழ்க்கை முதலான பல காரணங்களால் வீட்டை விட்டுப் பிரிந்து இருப்பவர்களுக்கு ஏற்படும் ஏக்க உணர்வு மீள் சந்திப்பு குறித்த கவலையாகிப் பேரச்சமாக மாறுகிறது.
புலம் பெயர் மக்கமளிடையே ஏக்க வெருளி காணப்படுவது இயற்கையாக உள்ளது.
‘பதிபக்தி’ படத்தில் முதலில் படைத்துறை வீரர்கள் விட்டிற்குத் திரும்ப இருப்பதால்,
“வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே” என மகிழ்ச்சியாகப் பாடுவார்கள். ஏக்கம் தீரப்போகும் மகிழ்ச்சி என்றாலும்
“தேனைப்போலப் பேசினாலும் பேசலாம் – கண்ணில்
சேற்றை வாரி வீசினாலும் வீசலாம்”
என்று ஏக்கமும் இருக்கும்.
வீடுதிரும்பிய கதை நாயகன் சோகத்தில்
“வீடு நோக்கி ஓடி வந்த என்னையே”
எனப் பாடுவான். அதில்,
“நான் எண்ணி எண்ணிக் கதறியென்ன உலகிலே,
ஓர் இனிப்புமில்லை கசப்புமில்லை, வாழ்விலே”
எனப் பாடுவதும் ஒரு வகை ஏக்க வெருளியின் விளைவே.
00
ஏணறை [மின்னேணி(Elevator/Lift)] தொடர்பான அளவுகடந்த பெருங்கவலையும் பேரச்சமும் ஏணறை வெருளி.
ஒரு தளத்திலிருந்து மேல் தளங்களுக்குச்செங்குத்தாகத் தூக்கிச் செல்லவும் பின் இறங்கிவரவும் பயன்படுவதைப் பிரித்தானியர் LIFT என்றும் அமெரிக்கர் ELEVETOR என்றும் கூறுகின்றனர். Lift என்பதையே முதலில் தமிழில் பயன்படுத்தி வந்த நாம் பின்னர் மின்னேணி என்றோம். சிலர் ‘உயர்த்தி’ என்றனர். ஆனால், இச்சொல் பொதுச் சொல்லாக உள்ளது. பொருள்களை உயர்த்தக்கூடிய மனிதர்களை உயர்த்திக் கம்பங்களில் பணியாற்ற உதவக்கூடிய வேறு சில உயர்த்திகளும் உள்ளன.
அறைவடிவில் அமைந்து ஏணிபோல் உதவுவதால் ஏணறை என நான் குறிக்கின்றேன்.
மின்னேணி எனப்படும் ஏணறை திடீரென்று இடையில் சிக்கிக் கொண்டால் என்னாவது? மின்சாரத்தடை ஏற்பட்டுவிட்டால் எப்படி மீள்வது? திடீரென்று பழுதானால் எப்படித் தப்பிப்பது என்பன போன்ற கவலைகளுக்கு ஆட்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர்.
பிறர் இதுபோன்ற சூழலில் சந்தித்த இடர்களை அறிய வருவதாலும் பேரச்சம் கொள்கின்றனர்..
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
(சட்டச் சொற்கள் விளக்கம் 1006-1010 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 1011-1015
1011. Automated teller machine | தானியங்கிப் பணப் பொறி teller – கூறுபவர் என்னும் பொருளில் குறி சொல்பவர், வருவதுரைப்போர், கதை சொல்பவர், கதைஞர், கதைகூறு கலைஞர், கதை கூறுவோர்,, கதை எழுத்தாளர், கதையளப்பவர் எனப் பல பொருள்கள் உள்ளன. குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பொருள்கள் உள்ளன. விரைவு காசாளர்(teller) என்பவர் பணப்பரிமாற்றங்களைக் கையாளும் வங்கி ஊழியர். காசாளர்(cashier) என்பவர் கடைகள், உணவகங்கள் போன்ற வணிக மனைகளில் இதுபோல் பணப்பரிமாற்றப் பணிகளைச் செய்பவர். இவ்விரு சொற்களையும் மாற்றியும் கையாளுவதுண்டு. மேலும் விரைவு காசாளர் என்னும் சொல் வட அமெரிக்காவில் கையாளும் சொல்லாகவும் காசாளர் என்பது பிரித்தானியாவில் பயன்படுத்தும் சொல்லாகவும் உள்ளன. தானியங்கிப் பணப்பொறி என்பது பணம் எடுப்பதற்குரிய பொறி மட்டும் அல்ல. வங்கிக் கணக்கு விவரம், பணம் எடுத்த செலுத்திய விவரங்கள், இறுதி இருப்பு விவரம், கடைசியாகப் பணம் எடுத்த அல்லது செலுத்திய விவரம், பிற வங்கிக் கணக்கு விவரங்களையும் அறியச் செய்யும் பொறியாகவும் உள்ளது. தானியங்கிப் பொறியில் அல்லது இப்பொறி இருக்கும் மையத்தில் தனியாகக் கணக்கேட்டில் பண விவரங்களைப் பதியும் வசதியும் உள்ளது. |
1012. Automatically | தன்னியல்பாக சட்டத்துறையில் ஏதேனும் ஒரு நிகழ்வால் தூண்டப்படுவதற்கு முன்பே இருக்கும் செயல்பாட்டின் மூலம் நிகழ்வதை அல்லது உள்ளதைக் குறிக்கிறது. தானாகவே – 1959 ஆம் ஆண்டு அரசு சேமிப்புச் சான்றிதழ்கள் சட்டத்தின் பிரிவு 6(4)(Section 6(4) of the Government Savings Certificates Act, 1959), பரிந்துரைக்கப்பட்ட முறையில் சேமிப்புச் சான்றிதழை மாற்றுவது, முந்தைய எந்த வொரு வழிமுறைப் பரிந்துரையையும் (nomination) தானாகவே நீக்கும் என்று கூறுகிறது. |
1013. Autonomous body | தன்னாட்சி அமைப்பு தன்னாட்சி அமைப்பு என்பது தற்சார்பு அரசு அமைப்பாகும். இது பெரும்பாலும் அரசாங்கத்தால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்படுவது. எனினும் அரசின் மேற்பார்வைக்கும் நிதியுதவிக்கும் உட்பட்டது. தன்னாட்சி அமைப்புகள் இவை நிறுவப்படும் குறிப்பிட்ட சட்டம் அல்லது தனியுரிமை ஆவணத்தின் மூலம் வரையறுக்கப் படுகிறது. தன்னாட்சி அமைப்பினை அரசு சார் அமைப்பு என்றும் கூறுவர். |
1014. Autonomy | தன்னாட்சி தன்னதிகாரம் தற்கட்டுப்பாடு தன்னுரிமை சுயாட்சி என்றும் சொல்வர். இது தமிழ்ச் சொல்லல்ல. சிந்தனை, விருப்பம், செயல் அடிப்படையில் முழு உரிமையுடையது. வெளிப்புறக் குமுக அல்லது அரசியல் ஆற்றல்களிடமிருந்து சட்ட அமைப்பின் உள் தற்சார்புரிமையைக் குறிப்பது. தனியர் அல்லது குழுவின் தன்னாட்சி, தன்வரையறை உரிமையையும் குறிப்பது. தன்னளவில் அதிகாரம் கொண்ட தன்னுரிமை யமைப்பையும் குறிப்பது. |
1015. Autopsy | பிண ஆய்வு பிணக் கூறாய்வு சட்டத்தில், பிண ஆய்வு என்பது நோய்வாய்ப்பட்டோ கொல்லப்பட்டோ நேர்ச்சியி(விபத்தி)னாலோ இறந்தவரின் உடலை மருத்துவ-சட்ட அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதாகும். இஃது ஒரு தடயவியல் நோயியல் வல்லுநரால் மரணத்திற்கான காரணம், விதம், நேரத்தைத் தீர்மானிக்க உதவுவது. செய்யப்படுகிறது. இது குற்றவியல் உசாசல்களில் ஒரு முதன்மைப் பகுதியாகும். குறிப்பாக ஐயத்திற்கிடமான அல்லது இயற்கைக்கு மாறான மரணங்களில், இறந்தவரை அடையாளம் காணவும் காயங்களை ஆவணப்படுத்தவும் இறந்த முறையை உறுதி செய்யவும் நீதிமன்றத்தில் ஆதாரமாகப் பயன்படுத்த உதவுவது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்