(வெருளி நோய்கள் 346-350 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 351 – 355
இலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலை வெருளி.
சில இலைகள் கீரைகளாக உணவிற்குப் பயன்படுகின்றன. சில இலைகள் மருந்தாக மூலிகைகளாகப் பயன்படுகின்றன. சில இலைகள் அழகாகக் காட்சி யளிக்கின்றன. ஆனால், இலைகளின் தோற்றம், பயன்பற்றிய எண்ணம் எதுவுமில்லாமல் காரணமின்றி இலைகள் மீது அச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
இலையுதிர் காலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் இலையுதிர் கால வெருளி.
கோடைக்காலத்திற்கும் குளிர்காலத்திற்கும் இடையில் இலையுதிர்காலம் வருகிறது. இக்காலத்தில் இலைகள் பழுப்பு மஞ்சள் நிறமடைந்து உதிர்வதால் குப்பைகளாக மாறுகின்றன. இவற்றால் ஒவ்வாமை வரலாம், பூச்சிகள் மறைந்து வெளியே வந்து தொல்லைகள் தரலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாவோர் உள்ளனர்.
00
இலையூதி (leaf blower / leaf sucker) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இலையூதி வெருளி.
இலையுதிர்க் காலங்களில் குவிந்துள்ள இலைகளை அப்புறப்படுத்த உதவுவது இலையூதி. எனினும் இதைப் பயன்படுத்தும் முன்னர் இது சரியான முறையில் செயல்டாமல் இருக்கும், தவறாகப் பயன்படுத்திக் காயங்கள் ஏற்படலாம் என்பன போன்ற கவலைகளாலும் காரணம் ஏதுமின்றியும் இதன் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
வீடுதிரும்புவது குறித்த அளவுகடந்த பேரச்சமே இல்ல வெருளி.
சிலருக்கு வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றாலே பெரு வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் இருக்கும். அயல்நாட்டிலிருந்து தாயகம் திரும்புவோரில் சிலருக்கும் வீடு வெருளி உள்ளது.
சிலருக்கு வீட்டுச்சூழலால் அச்சம் வரலாம். மனைவி அல்லது கணவன், மாமனார் அல்லது மாமியார், பிள்ளைகள், பிற உறவினர்கள், இவர்களில் ஒருவர் அல்லது பலர் மீதான வருத்தம், வெறுப்பு, அச்சம் போன்றவற்றால் வீட்டுச்சூழல் பிடிக்காமல் போகலாம்.
சிலருக்கு யார் மீது வெறுப்பு அல்லது அச்சம் இல்லாவிட்டாலும் தங்களின் தோல்வி அல்லது அவமானத்தால் வீடு திரும்ப விருப்பம் இன்றி இருக்கும்.
சிறார், தங்கள் மாணவப்பருவத்தில் தாங்கள் செய்த தவறுகளால், அல்லது படிப்பில் அல்லது, விளையாட்டில் அல்லது போட்டியில் தோல்வி தழுவியமையால் கல்வி நிலையங்களிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வர அச்சம் இருக்கலாம். கண்டிப்பு மிகுந்த தாய், தந்தை அல்லது இருவரும் அல்லது மூத்தோர் செயல்பாடுகளாலும் வீட்டிற்கு வருவதற்கு எப்பொழுதும் அச்சப் போக்கு இருக்கலாம். நாளடைவில் இது குறையாமல் மேலும் மேலும் வளரலாம்.
00
இல்லி மூக்கு பற்றிய அளவுகடந்த பேரச்சம் இல்லி மூக்கு வெருளி.
தன் மூக்கிலிருந்து அல்லது பிறர் மூக்கிலிருந்து இரத்தம் வருவதைக்கண்டு ஏற்படும் அளவுகடந்த பேரச்சம். மூக்கிலிருந்து இரத்தம் வடிவதைப் பொன்னாசி என்றும் இல்லி மூக்கு என்றும் கூறுவர்.
கூடுதல் இரத்த அழுத்தம், மூக்கில் எதையாவது நுழைத்தல், மூக்குச்சில்லுக்கு ஊறு நேர்தல் போன்ற பல காரணங்களால் மூக்கில் குருதி வடிவதுண்டு. எனினும் உயிர் போவதுபோல் கற்பனையில் அஞ்சுவதும் அடுத்தவர் மூக்கில் குருதி வடிந்தாலும் தனக்கும் அவ்வாறு வடியும் எனத் தவறாகக் கற்பனை செய்து கொண்டு அஞ்சுவதும் இத்தகையர் இயல்பு.
குருதி வெருளிகளைப் (Hemaphobia / Haemaphobia/ Hematophobia / Hemophobia) போன்ற வெருளிதான் இதுவும்.
epi என்னும் சொல்லின் கிரேக்க மூலத்திற்கு மேலே / மேற்புறம் / மீது என்று பொருள்கள். staxis என்றால் நாளங்களிலிருந்து அல்லது குழல்களில் இருந்து இரத்தம் வெளியே வருதல் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5