(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 246 – 250
தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி.
சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ கண்டிததிருந்தால் தண்டித்திருந்தால் அச்சம் வளர்ந்து அளவு கடந்த பேரச்சமாக மாறுகிறது. இதன் விளைவாகப் பள்ளிக்கூட வெருளியும் உருவாகிறது. ஆசிரியர்கள் மாணாக்கர்களிடையே நம்பிக்கைய ஏற்படுத்திக் கனிவுடன் நடந்து கொண்டாலே இவ்வெருளி மறையும். ஆனால், இக்காலத்தில் மாணாக்கர்களைக்கண்டுதான் ஆசிரியர்கள் பெரிதும் அஞ்சும் சூழல் உள்ளது.
00
.247. ஆடி உரு வெருளி – Spectrophobia / Catoptrophobia
கண்ணாடியில் பார்க்கும் பொழுது தன் உருவம் பேயுருவாகத் தோற்றமளிப்பதாகத் தேவையற்றுப் பேரச்சம் கொள்வது ஆடி உரு வெருளி.
உருவம் பார்க்கும் ஆடியாகிய கண்ணாடியைக் கண்டு ஏற்படும் அளவு கடந்த அச்சம் இது.
ஆடி வெருளி என்பது கண்ணாடியில் தன் உருவத்தை மட்டும் பார்ப்பது. ஆனால் பேய்க்கதைகள், நாடகங்கள், திரைப்படங்களில் கண்ணாடியில் பார்க்கும் பொழுது பேய் உருவமாகத் தெரிவதாக அஞ்சத்தகு காட்சிகளைப் பார்த்து அஞ்சிக் கண்ணாடியில் பேயுரு தெரிவதாக அஞ்சுவது ஆடி உரு வெருளி.
ஊன வெருளி / உருத்திரிபு வெருளி(Dysmorphophobia) உள்ளவர்களில் பெரும்பான்மையர் தங்கள் உருவத்தைக் கண்ணாடியில் பார்க்க விரும்புவதில்லை.
spectrum / specio என்னும் இலத்தீன் சொற்களுக்குத் தோற்றம் / உருவம் என்பன பொருள்கள்.
catoptro என்னும் சொல் கண்ணாடி என்னும் பொருள் உள்ள kátoptron என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானது. மூக்குக் கண்ணாடி எனப் பெறும் பார்வைக் கண்ணாடியிலிருந்து வேறுபடுத்தவே ஆடி உருவம் என இங்குக் குறிக்கப் பெறுகிறது.
00
கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம் ஆடி வெருளி.
தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக அல்லது ஆடிப் பிம்பம் வெருளியாக உருவானது.
பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்
(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார். அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.
கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால் அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.
‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.
ஆடி வெருளி(Eisoptrophobia) என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா(Isopterophobia) உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
00
ஆடை அடுக்கம்(clothing rack) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆடை அடுக்கம் வெருளி
இத்தகையோர் ஆடை அடுக்கத்தில் ஆடைகள் ஒழுங்காக அடுக்கி வைக்கப்படவில்லை என்பதுபோன்ற கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
00
ஆடை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஆடை வெருளி.
குழந்தைப்பருவத்தில் உடை உடுத்துவது குறித்த எரிச்சல் விருப்பமின்மை முதலியன வளர்ந்து இத்தகைய பேரச்சத்தை உருவாக்குவதும் உண்டு.
படைத்துறை முதலான சீருடைத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஆடை வெருளி உள்ளது.
தாய் அல்லது தந்தைக்கு ஆடை வெருளி இருந்தால் பிள்ளைகளுக்கும் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
புதுவகை ஆடைகளைக் கண்டு எரிச்சலுற்று ஆடை வெருளிக்கு ஆளாவோரும் உள்ளனர்.
vestis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஆடை அல்லது மேலுடை என்பதாகும்.
Forema என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உடை எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 October 2015 அகரமுதல
எண்ணுவோர்க்கு எண்ணும் வகையிலான கடவுள் – கம்பர்
ஒன்றே யென்னின் ஒன்றேயாம்
பலவென் றுரைக்கிற் பலவேயாம்
அன்றே யென்னின் அன்றேயாம்
ஆமே யென்னின் ஆமேயாம்
இன்றே யென்னின் இன்றேயாம்
உளதென் றுரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா
கம்பரின் இறை வணக்கப் பாடல்களுள் இதுவும் ஒன்று.
“கடவுள் ஒருவரே என நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கடவுள் ஒருவன்தான்; வெவ்வேறு கடவுள்களாக நம்புவோருக்குப் பலவாகத் தோற்றமளிக்கிறார். அஃதாவது கடவுள் எல்லா உயிர்களையும் இயக்கும் ஒரு தனிப் பெரும் ஆற்றல் என்பதால் ஒன்றே என எண்ணுவோருக்கு ஒன்றாக விளங்குகிறார். பல உயிர்களிலும் உறைந்து உள்ளமையால் பல என எண்ணுவோருக்குப் பலவாகத் திகழ்கிறார். கடவுளுக்கு இன்னின்ன தன்மைகள் இல்லை என்றால் இல்லைதான். மாறாக கடவுளிடம் இன்னின்ன தன்மைகள் உள்ளன என்றால் உள்ளனவே. கடவுளே இல்லை என்றாலும் இல்லைதான். கடவுள் உள்ளதாகக் கருதினால் உள்ளவனே. இப்படி எல்லாத் தன்மையாகவும் தோன்றும் கடவுள் நிலை பெரிதே. சிற்றறிவுடைய நம்மால் இறைநிலையை உணர்ந்து பிழைக்கும் வழி யாதோ!”
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்குப் பல நாமம் சூட்டி அழைப்பதும் மக்கள் வழக்கம் அன்றோ! எனவே, கடவுளின் தன்மைகளுக்கேற்ப பொதுநிலைப் பாடலாகக் கம்பர் எழுதி உள்ளார்.
இறைவனை உருவமாகவும் அருவமாகவும் உளதாகவும் இலதாகவும் கற்பிக்கும் பாடல்களுள் ஒன்றாகக் கம்பரின் பாடலும் அமைந்துள்ளது.
– இலக்குவனார் திருவள்ளுவன்
++