அபிராமி அந்தாதி
அன்பர் திரு. வேணு அவர்களது ஆணையை சிரமேற்கொண்டு அடியேன் இவ்விடம் அபிராமி அந்தாதி பற்றி மொழிகிறேன். நான் கல்லூரி பயிலும் வேளையில்தான் அபிராமி அந்தாதி முழுதும் கற்றேன். மனப்பாடமாக அவற்றைப்பாடுதற்கும் அன்னை அருள் புரிந்தாள். அதற்கு முன்னர் "தனந்தரும் .." எனத்தொடங்கும் பாடலும், "ஆத்தாளை .." எனத்தொடங்கும் நூற்காப்பும், பள்ளியில் மனப்பாடச்செய்யுளாகக் கற்றது. இவ்விடம் நாம் தரும் விளக்கத்தில் பிழையிருப்பின், அறிந்தோர் திருத்தம் செய்க... பிள்ளையார்க் காப்பும், அந்தாதியின் முதல் இருபாடல்களும் இம்மடலிற்காண்க.. தொடர்ந்து அன்னையின் அருளோடு விளக்கம் எழுதுவோம்...
பிள்ளையார் காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
விளக்கம்.
எச்செயலைத் துவங்கும்போதும் முதற்கடவுள் கணபதியை வணங்கி துவங்குவது மரபு. இவ்விடத்தும் அபிராமிப் பட்டர் "முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறை ரதம் அச்சதைப்பொடி செய்த அதி தீரன்" பிள்ளையாரை வணங்கித் தம் அந்தாதியைத் துவங்குகின்றார். கொன்றைப்பூமாலையும், செண்பகப் பூ மாலையும் அணிந்த தில்லையம்பதி வாழ் நாயகன் சிவனது இடப்பாகத்தைத் தன்னிடமாகக் கொண்ட உலகம் ஏழுக்கும் அன்னையான உமையாளின் மகனே... கரிய நிறங்கொண்ட எங்கள் கணபதி பெருமானே... அன்னையின் சிறப்பை விளக்கும் இந்த அபிராமி அந்தாதியானது எப்போதும் என் சிந்தையில் நின்று நான் இதனை மறவாதிருக்க அருள் செய்வாயாக....
(அன்பர்களுக்கு அந்தாதி என்பதன் விளக்கம் தெரியும் என்று நம்புகிறேன்.
முதல் பாடல்
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.
விளக்கம்.
காரிருளை அகற்றவல்ல செங்கதிரோனின் கதிர்களைப் போன்றது அன்னை அபிராமி தன் நுதலில் அணிந்திருக்கும் திலகம். இவ்விடத்து எங்ஙனம் கதிரவன் உலகத்து இருள் நீக்கி இன்பந்தருகின்றானோ... தாயே.. உன் குங்குமம் என் மனவிருளை நீக்கி அறிவையும் ஆற்றலையும் என் வாழ்விற்கு ஒளியையும் தந்திடும்.. (இது அடியேனின் கருத்து). அறிவுநிறை ஆன்றோர்களால் போற்றப் படும் மாணிக்கம் போன்றவள் என் அன்னை அபிராமி. மாதுளை மொட்டின் நிறங்கொண்ட கமலத்தின் மீது வீற்றிருந்து அருள்புரியும் திருமகளால் போற்றப்படும் மின்னல் கொடியினைப் போன்றவள் என் அன்னை அபிராமி. மெல்லிய மணம் கமழும் குங்குமம் கரைத்த நீரைப்போன்ற மேனியினைக் கொண்ட அன்னை அபிராமியே எனது இன்பத்திலும், துன்பத்திலும் சிறந்த துணையாக இருக்கின்றாள்.
இரண்டாம் பாடல்
துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
விளக்கம்
என் வாழ்வின் எல்லா நிலைகளிலும் எனக்குத் துணையாக, நான் என்றென்றும் தொழுதேத்தும் தெய்வமாக, என்னைப் பெற்ற அன்னையாக, உலகத்தின் ஆதாரங்களான வேதங்களின் கிளைகளாக, அவற்றின் இலைகளாக (சாராம்சமாக) , அவை இப்பூமியில் நிலைபெற வேதங்களின் வேறாக இருப்பவள் குளிர்ந்த மலர்க்கணையும், கரும்பினாலான வில்லையும், மெல்லிய பாசத்தையும், அங்குசத்தைய்ம் கையில் ஏந்தியிருக்கும் திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியே என்பதை நான் அறிந்து கொண்டேன்..
அந்த இருபாடல்களையும் பாடிப் பாருங்கள் நண்பர்களே... நம் மனத்தைக் கொள்ளை கொண்டது தமிழின் இனிமையா, அபிராமிப் பட்டரின் புலமையா, அன்னை அபிராமியின் பேரருளா என்பதில் நமக்கெழும் ஐயத்திற்கு அளவே இல்லை...
தொடரும் இருபாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்...
நண்பர்கள் இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும் படிக்கலாம். தங்களின் மேலான கருத்தினை அவ்விடமும் பதிவு செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.
நவராத்திரி...
நண்பர்களே...
தேவியின் வழிபாட்டுக்குகந்த நவராத்திரி விழா நாளை ஆரம்பிக்க இருக்கிறது. பக்தர்களைக் காக்கவும், துன்பங்களிலிருந்து விடுவிக்கவும் அன்னை பல்வேறு அற்புதங்களை நமக்காகச் செய்கிறாள். அன்னையின் பெருமைகளை அறியவும், அவள் பற்றிய தமிழிலக்கியங்களை இவ்விடம் பகிர்ந்து கொள்ளவும் இவ்விழையினை ஆரம்பிக்கின்றேன். நண்பர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம்...
நன்றி
--
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
அன்பர்களே... அவ்விரு பாடல்களையும் மனனம் செய்துவிட்டீர்களா? இன்றும் இரு பாடல்களைப் பார்ப்போம்....
பாடல் மூன்று
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
விளக்கம்.
என் தாயே... தமது முன்வினைப் பயனால், உனது அருள் பெற்ற அடியார்களின் பெருமைகளை அறியாமல், உன்னைத் தொழாமல், தீய செயல்கள் புரிந்து நரகத்தில் மந்தையாக விழக் காத்திருக்கும் இம்மனிதர்க் கூட்டங்களை நான் வெறுத்து விலகி விட்டேன். அன்பர் விரும்பும் அனைத்தும் அருளும் செல்வமே... என் தாயே அபிராமியே... மனிதராய்ப் பிறந்த எல்லோரும்அறிய இயலாத மறைபொருளை உனது பேரருளால் அறிந்து கொண்டேன். அதை அறிந்து கொண்டு உனது திருவடிகளே சரணமென்று சரணடைந்தேன்.
அன்பர்களே... அபிராமிப் பட்டர் அன்னையின் திருவருளால் தான் ஒரு மறை பொருளை அறிந்து கொண்டதாகக் குறிப்பிடுகிறார். அது என்னவாக இருக்கும்?? இதனை நாம் ஆராயுங்கால், அதற்கான விளக்கத்தை அவரே ஒரு மறைபொருளாக அடுத்த அடியில் வெளிப்படுத்துகிறார். இன்று நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது நமது முன்வினைப் பயனே. அவையே நாம் செய்கின்ற பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கின்றன. ஆனால் இப்பிறப்பில் நாம் செய்கின்ற தீய செயல்கள நம்மை நரகத்தில் தள்ளிவிடக் காரணியாக அமைகின்றது.. ஆகையால்தான் நாம் அன்னையின் அடியவர் பெருமையை எண்ணாது நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளாக உள்ளோம்.. இத்தகைய மனித மந்தையை வெறுத்து விலகி விட்டதாகக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் பின்னொன்றும் குறிப்பிடுகிறார். அன்பர் விரும்புனவெல்லாம் அளித்து அருட்செய்யும் செல்வமே... என அன்னை அபிராமியை விளிக்கும் அபிராமிப் பட்டர் அன்னையின் திருவடிகளே சரணமென்று சரண்புகுந்ததாகக் குறிப்பிடுகிறார். இவ்விடத்து நமக்கு ஒரு ஐயம் எழுகிறது.. எது மறைபொருள்? அன்னையின் அன்பர் பெருமையை எண்ணுவதா?? அல்லது எண்ணாது நரகில் விழும் மனித மந்தைகளை விட்டு விலகுவதா?? அல்லது அனைத்தும் அருளும் அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுவதா?? எது மறைபொருள்? அவர் எதை அறிந்து கொண்டார்??? ஒன்றைத் தொடர இன்னொன்று தானே தொடரும் செயல் இது... அன்னையின் அன்பர் பெருமையை அறிந்து கொண்டால், தானாகவே நம் மனது அவள் அடியவர் பெருமை எண்ணாத மனிதரை விட்டு விலகுகிறது. நரகுக்குத் தொலைவாகிறது. நரகில் விழக் காத்திருக்கும் மனித மந்தைகளை விட்டு விலகி விடும் மனது தானாகவே அபிராமியின் பொற்பாதங்களைச் சரண்புகுகிறது...
வார்த்தைகள் விளையாட்டில் ஒரு மறைபொருளை உலகறியச்செய்த அபிராமிப் பட்டரின் புலமை நம்மை வியக்க வைக்கிறது. அன்பர் திரு. மோகனரங்கம் அவர்கள் கேட்டுக் கொண்டதைப் போல் வார்த்தைக்கு வார்த்தை எம்மால் விளக்கம் தர இயலவில்லை.. ஏனெனில் இப்பாடல்களை ஆரம்பித்தால் அதன் முழுப்பொருள்தான் என் எண்ணத்திலிருந்து வெளிப்பட்டு விழுகிறது. கண்முன்னே அபிராமியின் திருவுருவம் நின்று வழிகாட்டுவதைப் போன்று உணர்கிறேன்.. இந்த விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் அன்பர்கள் தயவு செய்து பொறுத்தருள்க.. எமது சிற்றறிவுக்கு எட்டியவரை விளக்கம் தந்துள்ளேன்... தங்களது விளக்கங்களையும் அன்பர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பாட்ல நான்கு
மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
விளக்கம். :
மனிதர்களும், அமரர்களும், மாயாமல் வாழும் தவமுனிகளும் தலைகுனிந்து வணங்கும் செம்மைப்பாதங்களைக் கொண்ட கோமளவல்லியே.... கொன்றைப்பூவை அணிந்துள்ள தனது சடைமுடியில் மேல் குளிர்ச்சி தரும் நிலவினையும், பாம்பையும், பகீரதியான கங்கையையும் அணிந்த புனிதரான சிவபெருமானும், உமையவளான நீயும் எனது மனத்தில் என்றென்றும் நீக்கமற நிறைந்தருள வேண்டும்.
கடந்த பாடலில் மனிதர்களெல்லாம் உனது அன்பரது பெருமையை உணராது நரகுக்கு உறவானவர்களாக உள்ளார்களே எனக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர் இவ்விடத்து மனிதர்கள் தலைவணங்கும் செம்மைப் பாதம் கொண்ட கோமளவல்லியே என்று குறிப்பிடுவது சற்றே முரண்பாடாகக் காட்சியளிக்கின்றது அல்லவா? அன்னையைச்சரண்புகுவதற்காக மனிதர்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகின்றனரா? தனக்கென்று வேண்டுவனவற்றைத் தந்தருள்தாயே என்று வழிபாடு நடத்தவே ஆலயம் புகுகின்றனர். சிலர் மட்டுமே. அன்னையே... உன்பாதங்களின் சரணத்தை எனக்குத் தா என்று உள்ளன்போடு வேண்டுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணம் எழவேண்டுமாயின் அன்னையின் அன்பர்கள் துணை வேண்டும். யாராவது நமக்குக் கற்றுத்தந்தால்தானே நமக்கு இதன் மகிமை விளங்கும்? அன்னையை அனைவரும் வழிபடுகின்றனர். ஆனால் அன்னையின் பெருமையை உணர்ந்தோர் சிலர். அப்பெரியோர்களது அருளாலேயே நாம் அன்னையின் மகிமைகளை உணர முடிகின்றது. ஆக அப்படி வழிகாட்டும் பெரியோர்களது பெருமைகளை எண்ணாத மனிதர்களைப்பற்றித்தான் கடந்த பாடலில் குறிப்பிட்டார். இப்பாடலில் அன்னையும் தந்தையும் எந்நாளும் எம்மனதில் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும் என்று வேண்டுகிறார். மனிதர்கள் வந்து உன்னை வணங்குகின்றார்கள் தாயே... அமரர்களும் உனைத் தேடி வந்து வணங்குகின்றார்கள். மரியாது வாழும் வாழ்வு பெற்ற தவசீலர்களும் உன்னை வந்து வணங்குகின்றார்கள். தலைகுனிந்து உனது செம்மை நிறப் பாதங்களை வணங்குகின்றார்கள் தாயே... அப்படிப்பட்ட சேவடிகளைப் பெற்ற தாயே... கோமளவல்லியே... என்று அன்னையை அழைக்கிறார் அபிராமிப் பட்டர். கொன்றைப்பூக்களை அணிந்த சடையிலேயே குளிர்தரும் நிலவையும், பாம்பையும், வற்றாத உயிரூற்றான கங்கையையும் அணிந்த புனிதரும் என்று அபிராமிப் பட்டர் சிவனைக் குறிப்பிடுங்காலை "மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த ..." என்று தென்னாடுடைய சிவனைக் கொண்டாடிய சம்பந்தரின் வரிகள் இவ்விடத்து நினைவுக்கு வருகின்றன. இப்படித் தொடர்ந்தால் பதிவு எப்படியெல்லாமோ நீண்டு விடும். எனவே... அபிராமி அந்தாதியை மட்டும் தொடர்வோம்.. அப்புனிதரான சிவனும், நீயும் எந்நாளும் எக்கணமும் என் புத்தியில், எனது மனத்தில் நீக்கமற நிறைந்தருள வேண்டும் என்று அன்னையைத் தொழுகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்....
சபாஷ் அன்பரே! ஒன்றும் அவசரப் படாமல்தமிழின் நயம் சுவைத்து எமக்கும் தருவீர்!:-)))
நன்றி
... அய்யா...நான்
வெறும் விளக்கம் மட்டும் தந்துவிட்டுப் போகலாமென்றிருந்தேன்.. தங்கள் மொழியால்தான் நீண்ட விளக்கம் வந்துதித்தது. அன்னையின் அருளால் தமிழ் சிறக்கப் பணி செய்வோம்...நன்றி
..2010/10/8 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>
--
தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்
--
தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்
அடுத்த
பாடலைப் படிப்பதற்கு முன்னர் சில துளிகள்.அன்னையின்
புகழ்பாடும் அபிராமி அந்தாதியைப் பற்றிய நமது இந்த மடல்களுக்கு ஆதரவளித்து வரும் அன்பர்களுக்கு நன்றி.நம்மை அபிராமிப் பட்டர் என்று தவறாக விளித்த
அன்பருக்கு...மன்னிக்கவும்
. அபிராமிப் பட்டர் கொண்டிருந்த பக்தி கடலளவு என்றால் எமது பக்தி அதில் ஒரு துளி மட்டுமே... அவரது பக்தியின் ஒரு சிறு வெளிப்பாடுதான் அபிராமி அந்தாதி.. ஆனால் நமக்கோ அது மாபெரும் பொக்கிஷம். அவற்றை நான் சுவைத்த நோக்கில் மட்டுமே உங்களுக்குத் தருகின்றேன்.. எனவே இத்தகைய அழைப்பிற்கு வருந்துகிறேன்.மேலும்
ஒரு அன்பர் அந்தாதி பற்றி விளக்குங்களேன் என்று தனிமடலில் கேட்டிருந்தார். அந்தாதியின் விளக்கம் அச்சொல்லிலேயே நமக்குக் கிடைக்கின்றது. அந்தம்+ஆதி = அந்தாதி. அந்தாதிப் பாடல்களில் முதல் பாடலின் ஈற்றுச்சீர் மறு பாடலின் முதன்மை சீராக வரும். அப்படிப் பாடப் படும் பாடல்களில் இறுதிப் பாடலின் ஈற்றுச்சீர் முதல் பாடலின் முதற்சீராக அமைந்திருக்கும். தமிழிலக்கியத்தில் அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி, கம்பன் எழுதிய சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, அருணகிரி நாதரின் கந்தரந்தாதி போன்றவை முக்கியமானவை. இவற்றுள் கம்பனின் சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் மேலே நான் குறிப்பிட்ட நடையில் உள்ளன. ஆனால் அருணகிரியின் கந்தரந்தாதியோ வேறு நடையில் உள்ளது. ஒரு பாடலின் நான்கு அடிகளுக்கும் முதற்சீர் பொதுச்சீராக அமைந்துள்ளது.கம்பன்
வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று கம்பனின் புலமையை நாம் மெச்சுகிறோம். கம்பனோ.. கலைமகளை அல்லும் பகலும் துதித்தால் கல்லும் கவி பாடும் என்று தன்னடக்கம் பேசுகிறான்... அபிராமி அந்தாதி நிறைவு பெற்றதும் சரசுவதி அந்தாதியைத் தொடருவோம்...காலத்திற்கேற்ற மடல். தொடர்க அபிராமி பட்டரே! மன்னிக்கவும், கந்தசாமி நாகராஜன் உருவில் விளிக்கும் அபிராமி பட்டரே!சந்திரா--
"தமிழ் பிரவாகம்"
"தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"
Pira...@googlegroups.com
அபிராமி அந்தாதி
தொடர்ந்து
விளக்கங்களைக் காணலாம்..பாடல்
ஐந்து.பொருந்திய
முப்புரை, செப்புரை செய்யும் புணர் முலையால்வருந்திய
வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார்சடையோன்அருந்திய
நஞ்சு அமுதாக்கிய அம்பிகை, அம்புயமேல்திருந்திய
சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதேவிளக்கம்
:மூன்று
நிலைகளிலும் பொருந்தியிருப்பவளே, புகழுரை செய்வதற்கேற்ற அழகுடன் கூடிய முலைகளும், அதன் பாரத்தால் வருந்துவது போன்ற மெல்லிய இடையும் கொண்ட மனோன்மணியே... நீண்ட சடையைக் கொண்ட சிவபெருமான் அன்று அருந்திய நஞ்சினை அமுதமாக்கிய அம்பிகையே... தாயே அபிராமியே... அழகிய தாமரை மலர் மீது மிக அழகாக அமர்ந்திருக்கும் தாயே... ஆதியும் அந்தமுமானவளே... உன் திருவடிகளை என் தலைமேல் ஏற்கிறேன்...எத்தனை
அழகிய வரிகள் காணுங்கள்...முப்புரைக்கும்
பொருந்தியவள்... என்ற சீர்களைக் காணுமிடத்து... எம்முப்புரை எனும் வினா எழுகிறது... எல்லாவற்றையும் நாம் அதிக இடங்களில் மூன்றாகக் காண்கிறோம்.. பிரம்மா, திருமால்., சிவன் ஆகிய மும்மூர்த்திகள், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெருந்தேவியர்கள், படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில்கள், கடந்த காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்கள். இவ்வாறு பல மூன்று நிலைகளைக் காண்கிறோம்... இதில் அம்மை அபிராமி எம்மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள்...??? அபிராமிப் பட்டருக்கு மட்டுமல்ல... நமக்கும் தெரிந்த உண்மை அதுதான்... அன்னை அபிராமி எல்லா மூன்று நிலைகளுக்கும் பொருந்தியவள். அல்லது அவற்றைத் தனக்குள்ளே அடக்கியவள் என்று பொருள் கொள்ளலாம். பிரம்ம சக்தி, விஷ்ணு சக்தி, சிவ சக்தியாக நிற்பவளும் அவளே... முப்பெருந்தேவியராகி அவர்கட்குத் துணை நிற்பவளும் அவளே. படைப்பவளும் அவளே... காப்பவளும் அவளே... அழிப்பவளும் அவளே... முக்காலத்திலும் பூலோக மாந்தர்க்குத் தெய்வமாய் இருப்பவளும் அவளே...அதைத்தான் அபிராமிப் பட்டர் "பொருந்திய முப்புரை" என்று ஒரே சொல்லில் குறிப்பிடுகின்றார்."
செப்புரை செய்யும் புணர் முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி.." புகழ்ந்து பாடக்கூடிய அழகுடன் கூடிய முலைகளின் பாரத்தால் வருந்தும் மெல்லிய இடையக் கொண்ட மனோன்மணித் தாயே... என்பது இதன் பொருள்... ஒருமுறை நமது நண்பர் ஒருவர் எழுப்பிய வினா இது..."ஒரு தெய்வதத்தைப் பக்தன் இப்படிப் புகழலாமா? இதைப் போன்ற அங்க வர்ணணை செய்யலாமா?" என்று.. ஒரு ஆபாசக் கதையைப் படிக்கும்போது இதைப் போன்ற வரிகளால் அல்லது இதைப் போன்ற அங்க வர்ணனைகளால் நம் மனத்தில் ஏற்படும் உணர்வுகளுக்கும், அபிராமி அந்தாதியைப் படிங்குங்காலை நம் மனத்தில் எழும் உணர்வுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் கவனித்துப் பாருங்கள்.. ஓர் அரசனை அவன் தரும் பொருளுக்காகப் புகழும் புலவனே என்னென்னவோ கற்பனை செய்து பாடுகிறான்.. ஆனால் உலகையாளும் லோக மாயா அன்னை அபிராமியைத் தன் கண்குளிரக் கண்ட அபிராமிப் பட்டரால் அவளை அவள் அங்கங்களை வர்ணணை செய்யாது இருக்க இயலுமா?? கண்களை மூடி இப்பாடலைத் தியானித்துப் பாருங்கள்... அன்னையின் அழகிய உருவமே தோன்றுமன்றி அவ்விடம் காமத்திற்கிடமில்லை."
வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை" கடந்த பாடல்களிலும் சரி இந்தப் பாடலிலும் சரி அபிராமிப் பட்டர் சிவபெருமானை நினைத்தருள அவரது நீண்ட சடைகளை நினைவு படுத்துகிறார். நீண்ட சடைமீது அவருக்கிருந்த காதலோ..?? அமரர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒற்றுமையின் விளைவால் அவர்கள் கடைந்த பாற்கடலில் இருந்து நஞ்சு வெளிப்பட்டதல்லவா?? அவ்வமயம் உலகம் அழியும் நிலை ஏற்பட்டது.. அந்தக் கொடிய நஞ்சின் வலிமையை யாராலும் தாங்கிங்க் கொள்ள இயலவில்லை.. அனைவரும் கயிலை சென்று அப்பனை வழிபட்டனர். பக்தர்கள் குறை கண்டு பொறுப்பாரா ஈசன்? உடனே எழுந்து அந்நஞ்சைத் தம் கைகளில் எடுத்துக் குடித்து விட்டார். "ஐயஹோ... இதென்ன சோதனை... உலகைக் காக்க பரம்பொருள் நஞ்சருந்தி விட்டாரே... அவருக்கு என்ன ஆகுமோ?" என்று எண்ணிய உமையவள் தனது திருக்கரங்களால் அவரது கழுத்தைப் பிடிக்க அக்கொடிய நஞ்சி அவ்விடமே தங்கிற்று.. சிவனுக்குப் புதியதோர் அணிகலனாக, பாம்பாக அது கிடைத்தது. மேலும் அந்நஞ்சின் பாதிப்பால் அவரது கழுத்து நீல நிறமாக மாறித் திருநீலகண்டன் என்ற புதியதொரு பெயரும் வழக்கில் வந்தது. அப்பெருமைக்குக் காரணமான அம்பிகையே... அபிராமித் தாயே.. என்கிறார் அபிராமிப் பட்டர்."
அம்புயமேல் திருந்திய சுந்தரி" நீரில் மீது காணப்படும் அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் சுந்தரியே... பேரழகியே.... தான் காணும் பெண்டிரையெல்லாம் அன்னை அபிராமியாகக் கண்டது அபிராமிப் பட்டரின் சிறப்பு.. அப்படிக் கண்ட பெண்டிரிலெல்லாம் அபிராமியே பேரழகி என்று குறிப்பிடுகிறார்."
அந்தரி பாதம் என் சென்னியதே" ஆதியும் அந்தமுமான என் அபிராமித் தாயே... உன் பாதங்களை என் தலைமேல் அணிகிறேன்... அத்தனை பணிவு.... பாடலை முழுதும் படித்துப் பாருங்கள். நண்பர் எழுப்பிய வினா ஞாயிறு கண்ட பனி போல் காணாது ஓடிவிடும்..பாடல்
ஆறுசென்னியது
உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளேமன்னியது
உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!முன்னிய
நின் அடியாருடன் கூடி முறை முறையேபன்னியது
உந்தன் பரமாகமப் பத்ததியே!விளக்கம்
:செந்தூர
வண்ணங்கொண்ட அழகிய என் அழகிய அபிராமித் தாயே... தாமரை மலர் போன்ற அழகுடைய உன் பொற் பாதங்களை எப்போதும் என் தலைமேல் வைத்துள்ளேன்.. எப்பொழுதும் என் சிந்தையில் நிலைத்திருப்பது உனது திருமந்திரமே... நான் எப்போதும் கூடியிருப்பது உன் அன்பர்களையே... எமது செயல்கள் அவர்களை முன்னிட்டே நிகழ்கின்றன. நாள்தோறும் நான் முறையாகத் தவறாது படிப்பது உனது மேலான ஆகம வழிமுறைகளையே...தாயே
... என் தலையைப் பார்... உனது அழகிய பொற்தாமரைப் பாதங்கள் அவ்விடத்து உள்ளன... அன்னையின் பாதங்களை சிரத்தில் கொள்வது எத்தகைய புண்ணியம்... கடந்த பாடலில் உனது திருவடிகளை என் தலைமீது ஏற்கிறேன் என்றுரைத்த அபிராமிப் பட்டர், இப்பாடலில் என் தலை மீது எப்போதும் உன் பொற்பாதங்களை வைத்திருக்கிறேன் தாயே எனக் குறிப்பிடுகின்றார். மேலும் எனது சிந்தையுள்ளே எப்போது நிறைந்திருப்பது உனது திரு மந்திரம்தான். உன் புகழ் பாடும் மந்திரங்கள் தவிர எனக்கு வேறு மந்திரங்களே தெரியாது தாயே... பார் என் சிந்தைகளைப் பார்.. அவை உனது திருமந்திரங்களால் நிறைந்திருக்கின்றன. அவையே எனது வாயின் வார்த்தைகளாக வெளிப்படுகின்றன. செந்தூர வண்ணங்கொண்ட அழகிய பெண்ணே... என் அபிராமித் தாயே... இங்கே பார்... நான் கூடியிருப்பது உன் அடியார்களிடம் மட்டும்தான்... அவர்களை முன்னிட்டே நான் செயல் புரிகின்றேன்... இதனை வேறுவிதமாகவும் பொருள் கொள்ளலாம்.. அன்னையின் அடியார்கள் மட்டுமே அபிராமிப் பட்டரைக் கூடியிருப்பார்கள். அறியாதோர் அவரைப் பித்தரென்று இகழ்ந்து கொண்டல்லவா இருந்தார்கள்... எனவே அவர் கூடியிருந்ததெல்லாம் அன்னையின் அடியார்க் கூட்டத்தோடுதான்.. அவர் செய்த செயல்களெல்லாம் அவர்களை முன்னிட்டு அன்னையின் புகழ் பாடும் செயல்கள்தான்... பின்னர் எதற்காக அவர் தன்னை நிருபிப்பதற்காக சரபோஜி மன்னரிடம் நிலவைக் கொண்டுவருவேன் பிரயத்தனம் செய்ய வேண்டும்..? அங்கும் வெளிப்பட்டு நின்றது அன்னையின் திருவருள் அல்லவா?? பக்தன் தனது பக்தியை வெளிப்படுத்துகிறானோ இல்லையோ... அன்னையானவள் உண்மைப் பக்தனின் பக்தியைப் பாரறியத் தானே வெளிப்படுகிறாள்.. தன்னை வெளிப்படுத்தி நிலவினைக் காட்டிய அபிராமியின் கதை அனைவரும் அறிந்ததுதான் அல்லவா?? அந்தக் கதையை அன்னைத் தன்னை வெளிப்படுத்திய பாடல் வரும் வேளை காண்போம். இங்கே பாருங்கள்... அபிராமிப் பட்டர் தன் செயல்களெல்லாம் அன்னையின் அன்பர்களை முன்னிட்டே நடைபெறுவதாகக் கூறுவது அவரது பரந்த பக்தியினைக் காட்டுகிறது. மேலும் அவர் குறிப்பிடுவது தான் முறையாகக் கற்கும் அன்னையின் ஆகம விதிகளை... தாயே... அபிராமியே... நான் நாள்தோறும் படிப்பது எல்லாவற்றிற்கும் மேலான உனது ஆகம நெறிமுறைகளையே....இன்று இருபாடல்கள்
. மொத்தம் ஆறு பாடல்களைப் பார்த்திருக்கின்றோம்.. இந்த ஆறு பாடல்களையும் தினமும் தவறாது படியுங்கள்... விளக்கத்தில் ஏதேனும் பிழையிருப்பின் தயவு செய்து தெரியப் படுத்துங்கள். மீண்டும் தொடரும் பாடல்களின் விளக்கங்களோடு நாளை சந்திப்போம்...
பாடல்
ஏழுததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
விளக்கம் :
தாமரை
மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், திங்களைத் தன் சடையில் அணிந்திருக்கும் உனக்கன்பான சிவனும், திருமாலும் என்றும் வணங்கித் துதிக்கும் சிவந்த பாதங்களைக் கொண்ட செந்தூரம் அணிந்த பேரழிகியே, மத்தின் சுழற்சியில் அகப்பட்டு அங்கும் இங்கும் சுழலும் தயிரைப் போல் எனது உயிரும் பிறப்பு, இறப்பு என்னும் வாழ்க்கைச்சுழலில் அகப்பட்டுத் துன்புறுகிறது. தளர்வுறுகிறது. அப்படித் தளர்ச்சியடையாத ஒரு நல்ல கதியை எனக்கு அருள்வாயாக....ததியுறு
மத்தின் சுழலும் என் ஆவி... இப்பதத்திற்குப் பல்வேறு பொருள் கொள்ளலாம். நான் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியை அபிராமிப் பட்டர் எண்ணியிருக்கலாமோ என்று எண்ணி இவ்விடம் விளக்கமளித்துள்ளேன்.. வேறு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அன்னையின் தியானத்தில் மூழ்கி இன்பமெய்து வந்த அபிராமிப் பட்டர் சரபோசியின் அதிகாரத்தால் துன்பங்கொள்ள நேர்ந்தது. அச்சமயம் அன்னையை வரவழைத்து உண்மையை நிருபிப்பதற்காக எழுந்த பாடல்களல்லவா அபிராமி அந்தாதி..? இதே நாளில் காலையில் உன்னை எண்ணி, தியானித்து, தரிசனம் செய்து மகிழ்வடைந்திருந்தேன்.. இப்போது பார் துன்பத்தில் கிடந்து உழல்கிறேன்.. என்றும் பொருள் கொள்ளலாம். என் ஆவி, என் மனது தளர்ச்சியடையாத ஒரு கதியை எனக்குத் தந்தருள்தாயே... வெளிப்படு... உன்னை எண்ணி நான் மனம் மகிழ்ந்திருந்த வேளையில் நான் அளித்த ஒரு பதிலால் எனக்கேற்பட்ட இழுக்கினைப் போக்க ஓடிவா என்றும் அழைத்திருக்கலாம். பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளால் என்றென்றும் வணங்கித் துதிக்கப் படும் சேவடிகள் கொண்ட செந்தூரத் திலகம் அணிந்த பேரழகியே என்று அன்னையை விளிக்கிறார்.சரியப்பா
.. பிரம்மன் அன்னையை வழிபடட்டும். அவள் அண்ணன் திருமால் அவளை வணங்கட்டும். அதென்ன அவளது கணவன் சிவன் அவளை வணங்குவது??? இது எப்படியாகும்?? என்ற ஒரு வினா இவ்விடத்து எழுகிறது... சக்தி வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கை அவளே ஆதி சக்தி என்பதுதான். அவள்தான் மும்மூர்த்திகளைப் படைத்து அவர்களுக்காத் தன் சக்திகளை மூன்றாகப் பிரித்து முப்பெருந்தேவியராக அருளிச்செய்தாள். எனவே அவளை எருதேரறும் எங்கள் பரமன் வணங்குவதில் வியப்பொன்றுமில்லை.. இன்னொன்றும் சொல்லலாம். ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்று பேசுகின்ற இக்காலத்தில் கணவனை மனைவி வணங்கும் போது, மனைவியைக் கணவன் வணங்குவதில் தவறேது.. அந்தக் காலத்திலேயே எங்கள் பரமர் உமையவளுக்கு சக உரிமை கொடுத்தார் என்றும் கொள்ளலாம்... அன்பர்களின் கருத்து இவ்விடம் என்னவோ....???பாடல்
எட்டுசுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே
விளக்கம்
..என்
தந்தையான சிவபெருமானின் துணையாக விளங்கும் பேரழகியான அபிராமித் தாயே... செந்தூர வண்ணங்கொண்டவளே... அன்றொருநாள் உன் அன்பர்களுக்கெல்லாம் துன்பம் விளைவித்த மகிடனின் தலைமேல் நின்று அவனை அளித்த காளியே.. நீல நிறமாய் நின்ற துர்க்கையே... இந்த உலகுக்கே நீ தாயாக இருந்தாலும், என்றும் அழியாத கன்னிகையாய் இருப்பவளே... வேதங்களைத் தம் கரத்தில் தாங்கும் பிரம்மதேவனின ஒரு முகத்தைத் தனது கரத்தில் தாங்குபவளே... உனது மலர்ப்பாதங்களே என் சிந்தையுள் நீங்காது நிறைந்துள்ளன.. எனக்கு என்றென்றும் துன்பத்தைக் கொடுக்கும் உலகத்தின் மீதான பாசம் எனும் தொடரை வந்து துண்டித்து எனக்குக் கருணை செய்....கடந்த
பாடலில் சிவன் வந்து வணங்கும் சேவடிகளைக் கொண்ட அபிராமியே என்று விளிக்கும் அபிராமிப் பட்டர், இப்பாடலில் நீ என் தந்தையின் துணையாக நிற்கிறாய் என்று போற்றுகின்றார். பேரழகு கொண்டு என் தந்தைக்குத் துணையாய் என்றென்றும் நிற்பவளே... (மனைவி வேறு துணைவி வேறு அல்ல என்பதை இவ்விடத்து நினைவிற்கொள்க...இருவரும் ஒருவரே....) நீ என் பாசத்தொடரையெல்லாம் வந்து அரி.... இங்கே பார் இந்த உலகம் துன்பமயமானது... இத்துன்பங்களுக்குக்கெல்லாம் காரணம் என்னவென்று ஆராய்ந்துபார்த்தேன் தாயே... நான் உலகம் மீது கொண்ட பற்றும் பாசமும் தொடர்வதால்தான் துன்பம் என்னைத் தொடர்கிறது.. தாயே நீ வந்து என் துன்பங்களையெல்லாம் வேறோடு அறுத்துவிடு... செந்தூரத் திலகம் அணிந்தவளே... செந்தூர வண்னங்கொண்டவளே.... அன்றைக்கு ஒருநாள் உனது அன்பர்களையெல்லாம் துன்பம் செய்தான் மகிடன் என்றொரு அசுரன்.. தனது அளவுக்கு அதிகமான அகந்தையால் அவன் அப்படிச் செய்தான். நீ அப்போது என்னசெய்தாய்.. துர்க்கையாக அவதரித்தாய்... அவனை வதம் செய்தாய். அவன் தலைமேல் நின்றாய்... நீலி... நீல நிறங்கொண்ட காளியே.... அழியாத கன்னிகை... உலகத்து மாந்தரனைவரையும் பெற்றெடுத்த தாயல்லவா நீ... ஆனாலும் என்றென்றும் அழியாத கன்னிகையாய்க் காட்சி தருகிறாய்.... ஆரணத்தோன் கம் தரி கைத்தலத்தாள்... வேதநூல்களைத்தன் கையில் தாங்குகின்ற பிரம்மதேவனுக்கு ஒருமுறை ஏற்பட்ட அகந்தையை நீக்கியருள அவனது ஐந்து முகங்களுள் ஒன்றைப் பிரித்தெடுத்து உன் கையில் வைத்திருக்கிறாயே.... உனது மலர்ப்பாதங்கள் எப்போதும் என் சிந்தையில் நீங்காது நிற்கின்றன...இருவேறு
உண்மைகள் இப்பாடலில் வெளிப்படுகின்றன. துன்பத்திற்கடிப்படை பாசம், அந்த பாசத்தை அறுத்துவிடவேண்டி அன்னையிடம் முறையிடுகிறார். மேலும் இவ்விடத்து எதற்காக அகந்தை கொண்ட மகிடனைப் பற்றிய நினைவூட்டல்... ? தாயே... அன்று அகந்தை கொண்ட மகிடனை அழித்தாயே... இன்றைக்கு என் மனத்தில் இருக்கின்ற அகந்தைகளை அழித்துவிடம்மா என்று வேண்டுகிறார்... பிரம்மனின் அகந்தையை அழித்தவள் அவனது ஒரு திருமுகத்தைத் தன் கையில் தரித்தாள்... பிரம்மனை சக்தியானவள் படைக்கும் போது அவனுக்கு ஐந்து திருமுகங்களைத் தந்தருளினாள்... ஆனால் பிரம்மதேவனுக்கேற்பட்ட செருக்கினை அவரிடமிருந்து பிரித்தெடுக்க அவனது ஒரு திருமுகத்தைக் கொய்து தன் கையில் தரித்தாள்... பிரம்மனின் அகந்தைக்கும், மகிடனின் அகந்தைக்கும் என்ன வேறுபாடு... ? மகிடன் தனக்கேற்பட்ட தலைச்செருக்கால் மானுடர்க்கும், தேவர்க்கும் சொல்லொண்ணா துன்பமளித்தான்.. தன் அன்பர்களை அவனிடமிருந்து காக்க அன்னை துர்க்கையாக அவதரித்தாள் அவனை அழித்து அருட்செய்தாள்... ஆனால் பிரம்மனின் அகந்தையால் யாருக்கும் துன்பமேற்படவில்லை. அது அவருக்கே துன்பமாய் இருந்தது... கர்வம் தலைக்கேறியதால் யாரையும் மதியாதிருந்த அவரது செருக்கினை அடக்கியருள அவனது ஒரு திருமுகத்தை மட்டும் பிரித்தெடுத்துக் கொண்டாள் அன்னை....எனவே
எனது அகந்தையால் எனக்கும் துன்பம் வேண்டாம், அது மிகுதிப்பெற்று அயலாருக்கும் துன்பம் வேண்டாம், பாசத்தின் தொடர்ச்சியால் வருந்துன்பமும் எனக்கு வேண்டாம் தாயே... என்னைக் காத்தருள்.... என்பது அபிராமிப் பட்டரின் வேண்டுதல்..தொடரும்
பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி..நண்பர்கள்
இந்தத் தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும் படிக்கலாம். தங்களது மேலான கருத்துக்களையும், திருத்தங்களையும் அவ்விடமும் பதிவு செய்யுங்கள்... நன்றி...
On 10/9/10, மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com> wrote:
On 10/9/10, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:திரு கந்தசாமி நாகராஜன்,
நீங்கள் நன்கு ரசித்துச் செய்யும் இந்தச் செயல் இனிமையாக இருக்கிறது.
பொருந்திய முப்புரை -- திரிபுர சுந்தரிதானே?இப்படியும்
காணலாம்...
செப்பு உரைசெய்யும் -- குமிழ் முடி மாணிக்கச் செப்பை அழகியரின் முலையழகிற்கு உவமையாகச் சொல்லும் தமிழ்.செப்பு
உரை என்பது புகழுரையைக் குறிப்பதாக எண்ணுகிறேன்...எனினும் நான் குறிப்பிட்டது பிழையாக இருப்பின் மன்னிக்கவும்... நன்றி.. இதைப் போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர் நோக்குகிறேன்..
‘செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்’:-)நன்றி
ஐயா...நானும்
இத்தனை நாள் இத்தனை சுவையாக இதைப் பாடியதில்லை... அதற்கான பொருள் தெரியும். கண்மூடி மெய்மறந்து பாடுவேன்... விளக்கம் எழுத அமரும்போது அவை தானாகவே வெளிப்படுகின்றன... அவற்றை வெளிப்படுத்தும் அன்னைக்கு நன்றி...இதனை
சுவைக்கும் உங்களுக்காகத்தான் தமிழ் வெளிப்படுகிறதோ...????தொடர்ந்து
காணலாம்..
2010/10/9 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>
--
தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாடல் ஒன்பது
கருத்தன
, எந்தைதன் கண்ணன, வண்ணக் கனகவெற்பின்பெருத்தன
, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்
முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்து என் முன் நிற்கவே
விளக்கம்
எமது தந்தையான சிவபெருமானின் கண்ணாகவும், கருத்தாகவும் இருப்பவளே... (இவ்விடத்து கரிய நிறங்கொண்டவளே என்றும் பொருள் பகர்வோர் உண்டு) வண்ணம் நிறைந்த பொன்மலையான மேருமலையைவிட பெரிதானதும், தாயைச்சிறிது நேரம் பிர்ந்து அழுத திருஞானசம்பந்தனுக்கு பாலை வழங்கியதுமான பாரமாகிய உனது திருமுலைகளுடனும் அதில் படரும் நீ அணிந்துள்ள மாலைகளுடனும் செம்மையாகிய உனது திருக்கரத்தில் நீ ஏந்திய வில்லுடனும், அம்புடனும் உன் அழகிய புன்னகையுடன் என் முன்னே வந்து காட்சியளித்திடுவாய் என் அபிராமித் தாயே...
கருத்தன எந்தைதன் கண்ணன
... இப்பதத்திற்கு விளக்கமாக ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கூறுவதுண்டு. கரிய நிறங்கொண்ட துர்க்கையே... என் தந்தையான சிவனின் கண்ணாக இருப்பவளே என்றும் பொருள் பகர்வர். உலகின் தாய் அல்லவா என் அபிராமித் தாய்... உலகில் படைக்கப்பட்ட அனைந்து மைந்தர்களுக்கும் பால் வழங்கும் அன்னையின் திருமுலைகள் மிகவும் பெரிதானது என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். அது எவ்வளவு பெரிதென்றால் மேருமலையை விட மிகப் பெரிது... அவளை லோகமாயா என்றும் மகாமாயே என்றும் வணங்குகின்றனர். ஏழைகளும், குடிசைகளில் வாழ்பவர்களும், மகமாயி என்று விளிக்கின்றனர். மகமாயியோ, மகாமாயேயோ... அன்னையவள் உலகின் தாய்... அழுகின்ற பிள்ளைகட்கு ஓடிவந்து அருட்செய்யும் உமையவள்.. அதனால்தான் அன்று பசித்து அழுத திருஞானசம்பந்தனுக்குத் தானே நேரில் வந்து தனது திருமுலைகளால் அமுதூட்டினாள்.. அத்தகைய பாரம் நிறைந்த உனது திருமுலைகளுடனும், அதில் படரும் உன் கழுத்தில் நீ அணிந்த மாலைகளுடனும், உனது செம்மைத் திருக்கரத்தில் நீ ஏந்தும் வில்லுடனும், அம்புடனும் அழகிய புன்னகையுடனும் நீ வந்து என் முன்னே காட்சியளித்திடுவாய் என்று அன்னையை அழைக்கின்றார் அபிராமிப் பட்டர். அன்னையின் புன்னகையைப் பற்றி அவர் செய்த வர்ணனை ரசிக்கத் தக்கது. முருத்தன மூரலும்.... மொட்டொன்று விரிவதைப் போன்ற புன்னகை... அன்னையே... நீ வாய் மூடி நிற்கும்போது உனது அதரங்கள் அழகிய மொட்டைப் போன்று காட்சியளிக்கின்றன... நீ புன்னகை சிந்தும்போது... அம்மொட்டு மலராக விரிவதைப் போன்று அழகாகக் காட்சியளிக்கிறது தாயே... என்று அன்னையைத் தன் முன் வந்து காட்சியளிக்குமாறு அழைக்கின்றார்.... எத்தனை அழகிய கற்பனை வளம் காணுங்கள்... கண்கள் மூடி அந்த அபிராமி அன்னையை இப்பாடல் பாடி அழைத்துப் பாருங்கள். உங்கள் குரல் கேட்டு அன்னை ஓடோடி வந்து உங்கள் சிந்தையில் புகுவாள்...பாடல் பத்து
.நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே
விளக்கம்
அருளே வடிவான உமையவளே
... அபிராமித் தாயே... அன்று இமயத்து அரசன் இமவான் பெற்றெடுத்த செல்வமே... எழுதப்படாத வேதங்களில் ஒன்றி நிற்கும் அரும்பொருளே. என்றும் அழியாத முக்தி ஆனந்தமாக விளங்குபவளே... நான் நிற்கும் பொழுதும், அமரும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், எல்லா நிலைகளிலும் நான் நினைப்பது உன்னைத் தான்.... நான் வணங்குவதோ உனது மலர்ப்பாதங்களையே...இமவான் செய்த பேறு அவனுக்கு உமையவள் மகளாகப் பிறந்தது
. ஆகையால்தான் அவள் மலைமகளென்று பெயர் பெற்றாள். மலையரசன் பெற்றெடுத்த மலைமகளே... என்று அபிராமிப் பட்டர் அன்னையை விளிக்கின்றார். எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.... வேதங்கள் எழுதப் பட்டவை, செவி வழி நின்றவை என்ற இருபெரும்பிரிவுகளாகத் தென்படுகின்றன. (இவற்றைப் பற்றிய அறிவு எமக்கு அதிகம் இல்லை.. அறிந்தோர் எழுதுங்கள்..) தாயானவள் எழுதிய மறைக்கும் எழுதப் படாத மறைக்கும் மூலமானவள்... இவ்விடம் எழுதா மறையின் ஒன்றும் அரும்பொருளே.. என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது... அந்த வேதங்கள் அல்ல என்று நான் கருதுகிறேன்... என்றும் எழுதாத மறைபொருள் அன்னையின் திருநாமமே... அந்தண குலத்திற்பிறந்து அன்னைக்குரிய மந்திரங்கள் ஓதுவோரை மட்டும்தான் அன்னை காத்தருள்கிறாளா?? இல்லவே இல்லை.. யாரொருவர் அவள் திருநாமத்தை கொச்சைமொழியில் உச்சரித்தாலும் ஓடிவந்து அருள்வது அன்னையின் பெருங்கருணை அல்லவா?? அத்தகைய எழுதா மறையில் ஒன்றியிருக்கும் அன்னையே... அரும்பொருளே என்று அன்னையை அபிராமிப் பட்டர் அழைக்கின்றார்.. அழியாத முக்திநிலையானவளே..... நான் நிற்கும் போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் அமரும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் படுத்திருக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். நான் நடக்கும்போதும் என் சிந்தையெல்லாம் உன் நினைவுதான். என்று தனது எல்லா நிலைகளிலும் அன்னையின் நினைவுகளே தன் சிந்தையில் குடிகொண்டிருப்பதாக அபிராமிப் பட்டர் தெரிவிக்கின்றார். மேலும் நான் என்றென்றும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களைத்தான்..... அன்னையே..... எனக்கு அருளிச்செய்....... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர். தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..நண்பர்கள்
இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும் படிக்கலாம். தங்களது மேலான கருத்துக்களை அவ்விடமும் பதிவு செய்யுங்கள்..அதனால்தான் அன்று பசித்து அழுத திருஞானசம்பந்தனுக்குத் தானே நேரில் வந்து தனது திருமுலைகளால் அமுதூட்டினாள்
..
ஐயா,
உங்கள் பாடல்களும் விளக்கங்களும் படித்து வருகின்றேன்.மிக அருமையான பணி!.
பொற்கிண்ணத்தில் வைத்து முலைப்பாலை ஊட்டியதாகத்தான் பாடல்கள் சொல்கின்றன.
www.thevaaram.org
திருத்தியமைக்கு நன்றி ஐயா... நமக்கு கேள்வி ஞானம் மட்டுமே உண்டு... தங்கள் பதிலால் எமது உள்ளத்துள் உள்ள ஒரு கருத்தைத் திருத்திக்கொண்டேன்.. நன்றி...
2010/10/11 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாடல்
பதினொன்றுஆனந்தமாய்
என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்வானந்தமான
வடிவுடையாள் மறை நான்கினுக்கும்தானந்தமான
சரணாரவிந்த தவள நிறக்கானந்தம்
ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதேவிளக்கம்
:அபிராமித்தாயே
எங்கள்
அபிராமித் தாயே... எனக்கு ஆனந்தம் அளிப்பவளும் நீயே... என் ஆனந்தமும் நீயே.. பாருங்கள் அபிராமிப் பட்டரின் பக்தியை....! தன் ஆனந்தமே அன்னைதான் என்று பகர்கிறார்... ஆனந்தமாகவும் தனது அறிவாகவும், நிறைந்த அமுதமாகவும் அம்மையே இருப்பதாகக் குறிப்பிடுகிறார். மேலும் வானந்தமான வடிவுடையாள்... வானமே அந்தமான வடிவுடையாள்... வானுக்கு அந்தமுண்டோ???? அதே போல் தாயே உன் வடிவழகிற்கு எல்லையுண்டோ..... அன்னையின் அழகிற்கெல்லையில்லை என்பதை எத்தனை அழகிய சொற்கள் கொண்டு பாடுகிறார்... தின்னத் தின்ன தெவிட்டாத தமிழமுது அபிராமிப் பட்டரின் அபிராமி அந்தாதி... மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண அரவிந்தம் .... ரிக், யசூர், சாம, அதர்வணம் எனப்படும் நான்கு மறைகளுக்கும் எல்லையாக , முடிவாக இருப்பது எல்லோருக்கும் சரணமளிக்கும் உன் பொற்பாதங்கள்.... இப்பாதங்கள்... தவள நிறக் கானம் .... வெண்மை நிறக் காடு... வெண்மை நிறக்காடு யாது??? அப்பன் சிவன் ஆடும் காடு எது??? பிணங்கள் எரியும் சுடுகாடு... பிணங்களின் சாம்பல்களாலான வெண்மை நிறமான சுடுகாட்டைத் தம் ஆடரங்காம் - தனது ஆடற்கலைக்கு அரங்கமாக்கிக் கொண்ட எங்கள் பிரான் சிவ பெருமானது தலைமுடி மேல் நின் பாதங்கள் உள்ளன.... அபிராமிப் பட்டர் ஒரு சக்தி வழிபாடு செய்யும் சித்தர் என்பார்கள்... இவ்விடத்து தமிழ் வார்த்தைகளால் விளையாடி தாம் ஒரு எழுத்துச் சித்தர் என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.மீண்டும்
இவ்விடத்து ஈசனார் தலைமீது தேவியின் திருப்பாதங்களா? என வினவுவோர் உண்டு... அன்னையும் ஈசனும் ஒரே அம்சம் என்பதைக் கருத்திற் கொள்க,.... அன்னையில்லையேல் ஈசன் இல்லை... ஈசன் இல்லையேல் அன்னை இல்லை... சக்தி வழிபாடு புரிவோருக்கு அவளே தெய்வம்... சக்தியே உலகத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள்... முப்பெருந்தேவியராக அவதரித்தாள்.. (முன்னர் ஒருமுறை இதைப் பற்றி எழுதியிருக்கின்றேன்)... எனவே இவ்வடிகளில் வியப்பொன்றும் இல்லை....
பாடல்
பன்னிரெண்டுகண்ணியது
உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்திபண்ணியது
உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவாநண்ணியது
உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்தபுண்ணியம்
ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே!!விளக்கம்
.ஏழுலகும்
பெற்றெடுத்த என் அபிராமித்தாயே... என்றென்றும் நான் பாடுவது உன் புகழைத்தான்... நான் கற்பது உன் திருநாமமே... நான் மனங்கசிந்து பக்தி செய்வதோ, பக்தியால் பாடுவதோ... உனது இரு திருவடித் தாமரைகளைத்தான்... பகலும் இரவும் நான் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான். எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேன் என் அபிராமித் தாயே....கண்ணியது
உன் புகழ்.... நான் என்றென்றும் பாடுவது உன் புகழைத்தான்... அபிராமிப் பட்டருக்கு அன்னையைத் தவிர வேறு நினைவு இருப்பதாகத் தெரியவில்லை... அவரது நினைவுகள் அன்னையைச்சுற்றியே வட்டமிடுகின்றன... எப்போதும் அன்னையின் நினைவாலேயே அவர் நின்றிருப்பதால் அவருக்கு வேறேதும் தோன்றவில்லை... அதனால்தான் பலர் அவரைப் பித்தனென்று இகழ்ந்தனர். காணும் பெண்டிரையெல்லாம் அவர் அன்னையாகவே கண்டார். அதனால் அவரைப் பெண்பித்தர் என்றும் இகழ்ந்தனர்... ஆனால் அவர் அதைப் பொருட்படுத்தவே இல்லை... அன்னையின் புகழைப் பாடுவதிலேயேயும் அவளைத் தியானித்திருப்பதிலேயுமே தன் வாழ்நாளைக் கழித்தார்.. நான் கற்பதும் உனது திருநாமத்தைத் தான்... என்று பகர்கிறார்.. அன்னையின் திருநாமத்தைக் மீண்டும் மீண்டும் கற்பதில் உள்ள இன்பத்தை அனுபவித்து எழுதிய வரிகள் இவை.. கண்கள் மூடி அவள் திருநாமத்தைத் தியானித்துப்ப்பாருங்கள்.. உங்கள் மனத்துள் எழும் ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. நான் மனங்கசிந்து பக்தி செய்து பாடுவது உன் இரு திருவடித் தாமரைகளைத்தான். நான் பகலும் இரவும் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியவர் கூட்டத்தைத்தான்... எனது இப்படிப் பட்ட செய்கைகளுக்கு என்ன காரணம் தாயே... நான் என்ன புண்ணியம் செய்தேன் ஏழுலகையும் பெற்றெடுத்த என் அபிராமித் தாயே...தொடரும்
பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.... மீண்டும் சந்திப்போம் நன்றி...நண்பர்கள்
இந்தத் தொடரை www.chithiram.blogspot.com என்ற வலைப்பதிவிலும் படிக்கலாம். தங்களது மேலான கருத்துக்களை அவ்விடமும் பதிவு செய்யுங்கள் ...பாடல்
பதின்மூன்றுபூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே
விளக்கம்
: பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த அபிராமித்தாயே... ! அப்பதினான்கு உலகங்களையும் பெற்றெடுத்த வண்ணம் காத்து வருபவளே... பின் அவற்றை உன்னுள் மறைத்துக் கொண்டவளே... நீலநிறங்கொண்ட கழுத்தினையுடைய சிவனுக்கும் மூத்தவளே... என்றென்றும் இளமையாகக் காட்சியளிக்கும் கண்ணனுக்கும் இளையவளே.. மாபெரும் தவம் செய்பவளே... உன்னையன்றி மற்றோர் தெய்வத்தை நான் வணங்குவது முடியுமா????கடந்த
பாடலில் ஏழுலகையும் பெற்றெடுத்தவளே என்று அபிராமியன்னையை விளிக்கும் அபிராமிப் பட்டர் இப்பாடலில் புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று விளிப்பது சற்றே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது.. நமது சிற்றறிவுக்குத் தோன்றிய சிறு விளக்கத்தை இவ்விடத்துத்தந்துள்ளேன்... அன்பர் மோகனரங்கம் போன்ற பெரியோர் இது தவறெனில் திருத்தி, சரியான கருத்தைப் பதிவிடுக (வலைப்பதிவிலும்தான்...) நாம் சிறுவயதில் பள்ளியில் பயிலும் நேரத்தில் கதை சொன்ன பெரியோர்களெல்லாம் ஏழு என்ற எண்ணைக் கணக்கில் கொண்டனர். ஏழு கடல், ஏழு மலை... என்றெல்லாம் இளவரசியைத் தேடும் கதைகள் அவை... அவை போல் அச்சமயத்தில் மாந்தர் வாழும் பூவுலகம் ஏழு என்ற கணக்கு வழக்கில் வழக்கில் இருந்தது.. மேலும் அமரலோகம் ஏழு என்ற கணக்கும் வழக்கில் இருந்திருக்கலாம் என்பது நமது கணிப்பு... எனவேதான் மாந்தர் வாழும் ஏழுலகையும் படைத்தவளே என்று கடந்த பாடலில் குறிப்பிடும் பட்டர்... இவ்விடத்து மாந்தர் வாழும் பூலோகம் ஏழு, அமரர் வாழும் தேவலோகம் ஏழு என்று கருதி புவனங்கள் பதினான்கையும் பெற்றெடுத்த தாயே... என்று பாடியிருக்கலாம்... இது எமது ஒரு கணிப்புதானேயன்றி, இதைத்தாண்டி விளக்கமளித்திட தேர்ந்த வேத ஞானம் எமக்கு இல்லை... அறிந்தோர் பெரியோர் அறிவித்தால் அறிந்து கொள்வோம்.... (ஈரேழுலகும் எனக்குறவாக... கந்தர் சஷ்டி கவசம்)பூத்தவண்ணம்
காத்தவளே... ஈரேழு பதினான்குலகையும் எங்ஙனம் பெற்றெடுத்தாயோ... அவ்வண்ணவமே காப்பவளே.... முன்னர் ஒரு பாடலில் குறிப்பிட்டது போல் உலகைக்காக்க நஞ்சுண்டு, தமது கழுத்து நீல நிறமானதால், திருநீலகண்டர் எனப் பெயர் பெற்ற சிவபெருமானுக்கும் மூத்தவளே.... அவ்விடத்துச் சொல்ல மறந்ததொரு செய்தியை (?) இவ்விடத்துத் தருகிறேன்... கல்லூரி பயிலும்போது மொழிப்பாடத்தில் கோளறு திருப்பதிகத்தின் "வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்.." எனும் பாடல் இருந்தது... இதற்கு விளக்கமளிக்கும்போது எமது தமிழாசிரியர் திரு. பெரியநாயகம் ஜெயராஜ் ஒரு தமாசான செய்தியைக் கூறினார். வேடிக்கைக்காக மட்டுமே.. சிவனையும் சக்தியையும் இன்றைய தம்பதியருக்கு ஒப்பிட்டுக் கூறினார் ஒரு முறை சிவனுக்கும் சக்திக்கும் ஏதோ கருத்து வேறுபாடு... அவ்வமயம் சிவனை சக்தி துரத்தி கொண்டு வர (அதே சமயம் அங்கே பாற்கடலைக் கடைந்த விடம் துரத்திவர அமரர்களும் அசுரர்களும் சிவலோகத்தை நோக்கி ஓடி வர... ) அவ்விடத்து வந்த நஞ்சைக் கையால் அள்ளி சக்தியின் தொல்லையிலிருந்து மீண்டு விடலாம் என்று குடித்து விட்டார். நின்று விட்டார். இதையறியாத அன்னையோ... சிவனை மாய்த்துவிட அவர் கழுத்தை நெறித்தாள்... இதனால்தான் அந்த நஞ்சு அவ்விடத்து நின்று சிவனுக்குத் திருநீலகண்டர் என்ற அழகியதொரு பெயரைப் பெற்றுத் தந்தது....விடமும் ஒழிந்தது. அனைவரும் காப்பாற்றப் பட்டனர்... சக்தியும் சிவனும் சிரித்து மகிழ்ந்தனர்... என்று குறிப்பிட்டார்...ஆக
அப்படிப்பட்ட சிவனுக்கும் மூத்தவள் என் அபிராமி அன்னை என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர் (பலமுறைக் குறிப்பிட்ட செய்திதான்... அன்னை சக்தியே அகிலத்தைப் படைத்தாள்.. அவளே ஆதிசக்தி என்பது சக்தி வழிபாடு செய்வோரின் கருத்து).என்றும்
மூவா முகுந்தற்கு இளையவளே... இவ்விடத்துப் பாருங்கள்... என்றும் ஆனந்தமளிக்கும் திருநாமத்தைக் கொண்ட கண்ணபிரானை நினைவூட்டுகிறார். ஊழிக்காலத்து உலகம் அழியும் வேளையில் கண்ணபிரான் சிறு குழந்தையாக ஆலிலையில் மிதந்து வருவார் என்பது வைணவர்களின் நம்பிக்கை... எனவே என்றென்றும் இளமையாகத் தோற்றமளிக்கும் முகுந்தனுக்கு மலைமகள் தங்கைமுறையாவாள்... எனவேதான் என்றும் மூப்பெய்தாத முகுந்தனுக்கு இளையவளே... என்று விளிக்கின்றார்...இவ்விடத்தும்
ஒரு முரண்பாடு... சிவனுக்கு மூத்தவளாம், முகுந்தனுக்கு இளையவளாம்... எப்படி இது திண்ணம்?? என்று வினவுவோர் உண்டு... மீண்டும் பழைய பல்லவிதான்... ஆதிசக்தியே அகிலத்தைப் படைத்தாள்... மும்மூர்த்திகளைப் படைத்தாள். அவர்களுக்குத் துணையாகத் தாமே முப்பெருந்தேவியராக உருவெடுத்தாள்...புரிந்ததல்லவா???மாத்தவளே
... மா தவம் புரிபவளே.... மாபெரும் தவ வலிமை கொண்ட என் அபிராமி அன்னையே.... உனைவிடுத்து வேறொரு தெய்வத்தை நான் வணங்க முடியுமா??? உன்னை மட்டும்தான் வணங்க இயலும் என்று இப்பாடலை முடிக்கிறார் அபிராமிப் பட்டர்...பாடல்
பதினான்குவந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே
விளக்கம்
: எங்கள் பிராட்டியான அபிராமி அன்னையே... என்றும் உன்னை வணங்கும் தேவர்கள், அரக்கர்கள் . உன்னை என்றும் தியானத்தில் கொண்டு திசைகொரு முகம் கொண்டிருக்கும் பிரம்மன், நாராயணன், உன்னைத் தன் அன்பால் பந்தமெனக் கொண்ட என்றும் அழிவில்லாத பரமானந்தரான பரமசிவன் இவர்களெல்லாம் தவமிருப்பது உன்னைத் தரிசனம் செய்வதற்காகத்தான். உன் கருணையைப் பெறுவதற்காகத்தான்... ஆனால் இவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு இந்த பூவுலகில் உன்னை வணங்கித் தரிசனம் செய்பவர்களுக்கு அல்லவா உன் கருணை எளிதாகக் கிடைக்கிறது. அது வியப்பிற்குரியது.அன்னையே
.. அபிராமித்தாயே... பார்... அமரர் அனைவரும் உன் கருணையைப் பெற்வதற்காக உன்னை எண்ணித் தவமியற்றுகின்றனர். அவர்களைப் போலத்தான் அசுரகுலத்துதித்தோரும் உன் கருணைக்காகக் காத்திருக்கின்றனர். சிந்திப்பவர் நற்றிசை முகர்... என்றென்றும் உன்னை எண்ணியே தியானம் செய்யும் நல்திசை முகர்... நான்கு திசைகளுக்கும் ஓரொரு முகமாகக் கொண்ட நான்முகர் பிரம்மரும் உன் கருணைக்காகத்தான் காத்திருக்கின்றார்... காத்தற்கடவுளான அத்திருமாலும் காத்திருப்பது உனது அருளுக்காகத்தான். தனது அன்பால் உன்னைப் பந்திப்பவர்... கட்டிப் போடுபவர்... என்றும் அழியாப் பரமானந்தரான பரமசிவனும் உன்னருளைப் பெறக் காத்துக் கிடக்கின்றார்.. ஆனால் இவர்களையெல்லாம் விட இந்தப் பாரில் உன்னைச் சந்திப்பவர்க்கு - உன்னைத் தரிசனம் செய்வோருக்கு...வணங்குவோருக்கு.... எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே... மிக எளிதாக உன் கருணை கிடைக்கின்றது எங்கள் பிராட்டியான அபிராமியே....காணுங்கள்
.. யாருக்குமே கிடைத்திடாத அருமையான தேவியின் கருணை இவ்வுலகில் பிறந்த மாந்தருக்குக் கிடைப்பதை எண்ணி அபிராமிப்பட்டர் வியப்பதை....! அதுதான் அபிராமி அன்னையின் பெருங்கருணை... அவள் அருளைப் பெறுவதற்கு மந்திரங்கள் செபிக்க வேண்டாம்... மறைகள் ஓத வேண்டாம்... விரதங்கள் காக்க வேண்டாம்... அன்னையின் திருநாமத்தையே மனத்தில் தியானித்து அவளது உருவைத் தரிசித்தாலே போதுமானது.. அவளது கருணை மிக எளிதில் நமக்குக் கிடைத்துவிடும்... இது அபிராமிப் பட்டரின் வாக்கு... நாமும் நம் மனத்தில் இவ்வழகிய நவராத்திரி நாட்களில், அன்னையைத் தியானித்து அபிராமி அந்தாதியைப் பாடி அவள் அருளைப் பெறுவோமாக...தொடரும்
பாடல்களுக்கு விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்... நன்றி... தங்களது மேலான கருத்துக்களைப் பின்னூட்டம் இடுங்கள்... எங்கேனும் நமது விளக்கத்தில் தவறு இருப்பின், தயவுசெய்து தெரியப் படுத்துங்கள்.. திருத்திக்கொள்ளலாம். நன்றி...அன்பர்கள்
இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பதிவிலும் படிக்கலாம். தங்களது மேலான கருத்துக்களை அவ்விடமும் பதிவு செய்யுங்கள்... நன்றி..--You received this message because you are subscribed to the Googletamil_ulagam...@googlegroups.com
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
For more options, visit this group at
மிக அருமையான கோர்வை....
மிகவும் சிறந்த பதிவு இது .........
வாழ்த்துகள் நண்பரே ..............
நன்றி
அய்யா...
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பாடல்
பதினைந்துதண்ணளிக்கு என்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதி வானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முக்தி வீடும் அன்றோ
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே
விளக்கம்
: இன்பமான பாடல்களைத்தரும் சொற்களின் பிறப்பிடமாகிய எங்கள் அபிராமித் தாயே.... நறுமணம் வீசும் தன்மை கொண்டவளே... ஈசனின் தோழியான பசுங்கிளியே... மலைமகளே... உனது குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்களைச் செய்ய்யும் தவமுனிகள், இந்த மண்ணுலகம் கொடுக்கும் செல்வங்களை மட்டுமா பெறுவார்? அறிவுடைய அமரர்கள் வாழும் விண்ணுலகம் தன்னில் வாழக்கூடிய செல்வத்தையும், என்றும் அழியாத முக்தியையும், வீடுபேற்றையும் அல்லவா பெறுவார்...இவ்விடத்து அன்னையின் திருவருளை தண்ணளிக்கும் என்று அபிராமிப் பட்டர் மொழிவது சிறப்பு
... அன்னை என்றென்றும் தாம் வெப்பமுடன், ஆங்காரத்தோடு இருந்தாலும், அவள் தன் மக்களான உலகின் மாந்தருக்கு அருளும் அருளோ குளிர்ச்சியானது... மிக மிக குளிர்ச்சியானது... இதனால்தான் அவள் தமிழகத்தில் மழையின் பெயரால் மாரியம்மன் என்றழைக்கப் பட்டாள்.. வெம்மை நோயை நீக்கி குளிர்ச்சியான இன்பத்தைத் தருபவள் அன்னை அல்லவா? அதனால்தான் அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவளது திருவருளை மிகக் குளிர்ச்சியானது என்று குறிப்பிடுகிறார். அக்குளிர்ச்சியான திருவருளைப் பெறுவதற்காகப் பல கோடி தவங்கள் செய்யும் மாமுனிகள் இவ்வுலகத்தின் இன்பத்திற்காக அத்தவங்களை இயற்றுகின்றனரா??? அவர்களது எண்ணமெல்லாம் வீடு பேற்றை அடைவதென்னாளோ என்பதல்லவா?? ஆயினும் மண்ணுலகில் தன் மைந்தர் படும் துயரங்கள் கண்டு அன்னை பொறுத்திடுவாளோ??? அவர்களுக்கு இவ்வுலகில் தேவையான செல்வங்களையும் ஈந்திடுவாள்... அறிவுடைய அமரர் வாழும் விண்ணுலகில் அவர்கள் வாழக்கூடிய தகுதியையும் அதற்கான செல்வங்களையும் வழங்கிடுவாள்.. அவர்கட்கு முக்தியை அளித்து வீடுபேற்றையும் அளித்திடுவாள் எங்கள் அபிராமி அன்னை... மேலும் இவ்விடத்து அன்னையைக் குறிப்பிடும் சொல் "பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே" என்பது... இச்சொற்களை இவ்விடத்து ஆய்ந்து நோக்குவோம்... பண்ணளிக்கும் சொல்.... பண் + அளிக்கும் சொல்... இனிமையான பாடல்களைத் தரும் சொல்லே.... சொல்லின் பிறப்பிடமே... என்று அன்னையைத் தமிழாக வடிக்கிறார்... பரிமள யாமளைப் பைங்கிளியே... என்பதை நோக்கினால்.... யாமளை என்பதற்கு பச்சை நிறங்கொண்ட இளமையான ஈசனின் தோழி என்று பொருள் கூறுவர்... நறுமணங்கொண்டவள்... பச்சை நிறங்கொண்ட மலைமகள் (மீனாட்சி), சிவனின் தோழி, என்றும் பைங்கிளியே.. என்றும் அன்னையை வர்ணனை செய்கிறார் அபிராமிப் பட்டர்....
பாடல் பதினாறு
கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே
விளக்கம்
: கிளியைப் போன்ற நிறங்கொண்ட (பச்சை நிறங்கொண்ட) எங்கள் அபிராமி அன்னையே... உன்னை எப்போதும் சூழ்ந்திருக்கும் அன்பர்கள் மனத்தில் எப்போதும் ஞானமாய் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் ஒளியும் நீயே... அவ்வொளிக்கான இடமும் நீயே... (ஆன்மாவும் நீயே) எண்ணிப் பார்த்தால் ஒன்றுமில்லாத சூன்யமாய் இருக்கும் வெளியானவளே! வெட்ட வெளியாகிய வானம் முதலாய் உள்ள ஐம்பூதங்களாய் விரிந்து நின்ற எங்கள் அபிராமித் தாயே! எளியவனான என் அறிவுக்கும் எட்டும் அளவிற்கு நீ நின்றது அதிசயமே!அன்னையின் திருஅவதாரங்கள் பலவற்றை இவ்வந்தாதியில் நினைவூட்டுகிறார் அபிராமிப் பட்டர்
... கருமை நிறக் காளி, நீல நிறத் துர்க்கை, பச்சை நிற மீனாட்சி என்று பல்வேறு அவதாரங்களையும் நினைவூட்டுகிறார். இவ்விடத்து பச்சை நிறங்கொண்ட மீனாட்சியே... என்கிறார். அவளும் அபிராமியும் ஒருவளே... சக்தியின் அம்சங்களே... அதனால்தான் அன்னையைக் கிளியே என்று விளித்தார்.. கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்த்தொளிரும் ஒளியே... இவ்விடத்து கிளைஞர் என்றால் என்னவென்று முதலில் எமக்குப் புரியவில்லை... இளைஞர் என்ற பதம் உண்டு, இதென்ன கிளைஞர் என்று ஒரு பெரியவரைக் கேட்ட சமயம் அவர் சொன்ன பதில் இது... இவ்விடத்துக் கிளைஞர் என்பது அன்னையின் அடியவரைக் குறிக்கும். அன்னை ஒரு மரமெனில் அதன் கிளைகளாக அவளது அன்பர்கள் உள்ளனர்... எனவே அவளது அடியவரை கிளைஞர் என்று அபிராமிப் பட்டர் குறிப்பிட்டிருப்பதாக விளக்கம் அளித்தார்... அப்படிப் பட்ட அடியவர் மனத்தில் என்றும் சுடர்விடும் ஞான ஒளியாக இருப்பவளே... என்று அபிராமி அன்னையை வர்ணணை செய்கிறார் அபிராமிப் பட்டர்... அவ்வொளி ஒளிரும் இடமான அத்தனை உள்ளங்களின் ஆன்மாவும் நீயேதான்...... உன்னை என்னதான் சொல்லி வர்ணணை செய்தாலும், உன்னை நான் தியானம் செய்யும் செய்ய எண்ணும் போது நீ ஒன்றும் இல்லாதவளாக அரூபியாக அல்லவா காட்சியளிக்கிறாய்... மனிதர்கள் தங்கள் மனத்திற்கேற்ப பற்பல வடிவங்களில் அன்னையைக் கண்டாலும், ஆன்மீகத்தில் நாம் முன்னேறிச் செல்லச் செல்ல இறைவடிவம் என்பது ஒன்றுமில்லாததாக வெளியாகத் தென்படுவதை நாம் அறிய இயலும்... இதனை ஏற்கெனவேக் கண்டவர் அல்லவா அபிராமிப் பட்டர் ஆகையால்தான் அன்னைய் "எண்ணில் ஒன்றுமில்லா வெளி" என்கிறார். இவ்விடத்து இரு பெரும் மகான்களின் கருத்துக்களை முன்வைக்க விழைகிறேன்.. இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகர் இறைவனைக் காண்பி என்று கேட்ட பொழுது அவர் இறைவனைக் காற்றுக்குவமையாக்கினார். காற்றுக்கு வடிவமில்லை... ஆனால் அது எல்லாவிடத்திலும் பரவியிருக்கிறது. அதனை நம்மால் உணர முடிகிறது... அதையே நாம் வெவ்வேறு வடிவ பலூன்களில் அடைக்கும் பொழுது, காற்றின் வெவ்வேறு வடிவ நிலைகளைக் காண இயலுகிறது... இறைத் தன்மை என்பது இதுதான். அதுவே எல்லாமானது... எல்லாவிடத்தும் உள்ளது... ஆனால் அதற்கென்று குறிப்பிட்ட வடிவமில்லை... வடிவங்களில் காண்பதும் இறைத்தன்மையே.... என்பதுதான்... காஞ்சி மகா பெரியவர் மின்சாரத்தை தன் உவமையாக்கினார். மின்சாரத்துக்கு வடிவமில்லை... ஆனால் அதன் சக்தி பல்வேறு வடிவங்களில் நமக்குத் தென்படுகிறது.. விளக்காக, விசிறியாக, இன்னும் பல சாதனங்கள் வடிவில்... இவ்விடத்தும் அதேதான் அபிராமிப் பட்டரின் கருத்து..."
வெளி முதல் பூதங்களாகி விரிந்த அம்மே.." வெளி முதலான ஐம்பூதங்களாகி விரிந்து நிற்கும் என் தாயே... அண்டசராசரங்களையெல்லாம் படைத்த அகிலாண்ட கோடி நாயகி அன்னை அபிராமியே ஐம்பூதங்களாகவும் அருள்பாலிக்கிறாள்.. விண், மண், நீர், காற்று, தீ என்று விரிந்து நிற்கின்றாயே... என் தாயே.. அப்படி விரிந்த பெரும் பரம்பொருளான் நீ.... நிற்க... இவ்விடத்து அன்னையின் பெருங்கருணையை ஓர் அதிசயம் என்று குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... "அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே" என்கிறார். என்னைப் போன்ற எளியவன், சிறியவன் அறிவுக்கும் எட்டுமளவுக்கு நீ உன்னைக் குறுக்கி என்னை உன்பால் ஈர்த்தாயே... பஞ்சபூதங்களாகி விரிந்த அன்னை, இந்த எளியவன் அறிவுக்கும் எட்டுமளவிற்கு சிறியவளானது ஓர் அதிசயம் என்று வியக்கும் அபிராமிப் பட்டர் நம்மையும் வியப்பில் ஆழ்த்துகிறார். அன்னையின் பெருங்கருணையைப் பெற பக்தி மட்டுமே போதுமானது... பக்தி வந்திடில் மற்றன எல்லாம் தொடரும்... அன்னை நம்க்கு அருளிச்செய்த அருமறைகள் எல்லாம் தாமே புலப்படும்... இதுதான் அன்னையின் கருணை... அன்னை அபிராமி நம் அறிவுக்கும் எட்டுவாள் என்பதை இப்பாடல் நமக்கு புலப்படுத்துகிறது... அன்னையின் மீது பக்தி கொள்ளுங்கள்.. அவள் அருள் நம்மெல்லாருக்கும் கிட்டட்டும்...தொடரும்
பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. நன்றி..நண்பர்கள்
இந்த விளக்கத்தினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பதிவிலும் படிக்கலாம், தங்களின் மேலான கருத்துக்களை அவ்விடமும் பதிவு செய்யுங்கள்... நன்றி...பாடல் பதினெட்டு
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என் மேல் வரும் போது வெளி நிற்கவே.
விளக்கம் : அபிராமி அன்னையே... ஈசனது இடப் பாகத்தை கவர்ந்து
கொண்டாயல்லவா? அவ்விறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செம்மையான
தோற்றத்துடனும், உங்கள் திருமணக் கோலத்துடனும், என் மனத்துள் இருக்கும்
அசுத்தங்களைத் தீர்த்து என்னை ஆற்கொண்ட பொற்பாதங்களுடனும் வந்து, என்
உயிரைக் கவர காலன் கோபத்துடன் வரும் வேளை தோன்றி அருள வேண்டும்.
இவ்விடத்து அபிராமிப் பட்டர் தனது மரணவேளை எவ்வாறு இருக்க வேண்டும்
என்பதைக் குறிப்பிடுகிறார்.. இவ்வமயம் அங்கேயும் காலன்
காத்திருக்கின்றான்... அபிராமிப் பட்டர் குறிப்பிட்டது போல் இவ்விரவில்
முழு நிலாத் தென்படாவிடில் காலன் கட்டிய கயிற்றால் பிறவியை
முடித்துக்கொள்ள வேண்டிய நிலை பட்டருக்கு... ஆனால் அவருக்கோ அன்னை
தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.. .நூறு பாடல்கள் முடிந்த
பின்னரும் அன்னையின் பதில் வராவிடில் தானே மரணத்தைத் தழுவிக்கொள்வதாக
ஆணையிட்டுள்ள அபிராமிப் பட்டர் "வெவ்விய காலன்" தன் மேல் வரும்போது அன்னை
இப்படிப் பட்டத் திருக்கோலத்தோடு தன்னருகே தோன்ற வேண்டும் என்று
பட்டியலிடுகிறார்...
எப்படிப் பட்ட தோற்றமாம்??? கடந்த பாடலில் சொன்னாரல்லவா ஈசனது
இடப்பாகத்தை நீ கவர்ந்து கொண்டாய் என்று? அவ்வீசனும் நீயும்
மகிழ்ந்திருக்கும் செம்மையான தோற்றத்துடன் வா.... என்றழைக்கிறார். ஏன்?
காலன் வரும் வேளை மனித மனது இன்பத்துடன் இருப்பதில்லை... ஊழ் பிடித்த
இவ்வூணுடலை விட்டு வெளியேறும் வேளை நாம் அதன் மீது கொண்ட பந்தத்தால்
ஈர்க்கப் பட்டு அவதியுறுகிறோம்.. அழுகிறோம்... ஆனால் தாயே... நான்
அழக்கூடாது... அதற்கு என்ன செய்ய வேண்டும்... நீ அந்த ஈசனோடு
மகிழ்ந்திருக்கும் திருக்கோலத்தோடு வந்து அருள் செய்... நான்
மகிழ்வேன்... என்னை அக்காலன் கவர்ந்து செல்லட்டும் என்கிறார்.. மேலும்
உங்களது திருமணக் கோலத்தோடு காட்சியளியுங்கள் என்கிறார்... அம்மை மற்றும்
அப்பனின் திருமணக் கோலத்தைக் காணக் கண்கோடி வேண்டுமல்லவா? மதுரை மாநகரில்
நடைபெறும் சொக்கநாதார் - மீனாட்சியின் திருமணக் கோலத்தைக் கண்டு
வாருங்கள் அவ்வின்பம் என்னவென்பது உங்களுக்குப் புரியும்... அப்படிப்
பட்ட திருமணக் கோலத்தை முன்னரே தமது தியானத்தில் கண்டு மகிழ்ந்தவர்
அபிராமிப் பட்டர். எனவே அப்படிப் பட்டத் திருக்கோலத்தைத் தனது
மரணவேளையில் கண்டு இன்புற வேண்டும் என்கிறார்... மேலும் " சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும்" வேண்டுமென்கிறார். தாயே உனது
பொற்பாதங்களைக் காணும் முன்னர் என் மனது அசுத்தங்களால்
நிறைந்திருந்தது... உனது அழகிய பொற்பாதத்தை நான் கண்ட பின்னர்
அப்பாதங்களால் அடியெடுத்து வைத்து நீ என் மனத்துள் புகுந்தாய்... என்
மனத்தில் இருந்த அசுத்தங்களெல்லாம் தீர்ந்து போயின.. நீ என்னை
ஆண்டாய்........ அப்படி என்னை நீ ஆள்வதற்குக் காரணமான உனது
பொற்பாதங்களையும் காலன் என்னைக் கவர மிகுந்த கோபத்தோடு வரும் வேளை நான்
காண வேண்டும்... நீ காட்சி தந்தருள வேண்டும் என்பது அபிராமிப் பட்டரின்
வேண்டுகோள்..
தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காணலாம். துர்காஷ்டமி அன்று
மனத்தில் எழுந்த ஆனந்தத்தோடு இம்மடலை வரைந்திருக்கின்றேன்... நீங்களும்
அவ்வானந்ததோடு பாடல்களைப் படித்து இன்புறுங்கள்.. மீண்டும் சந்திப்போம்..
அன்பர்கள் இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப் பதிவிலும்
காணலாம். தங்கள்து மேலான பின்னூட்டங்களை அவ்விடமும் பதிவுசெய்யுங்கள்..
நன்றி..
--
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
--------------------------------
விளக்கம் : ஒளிரும் ஒன்பது கோணங்களின் நாயகியாக நவசக்தியாய் விளங்கும்
அபிராமி அன்னையே.. காலன் வரும் வேளையில் நான் வேண்டியவுடன் வான வெளியில்
திருமணக் கோலத்தில் தோன்றிய உன் திருமேனியைக் கண்டு என் விழிகளும்
நெஞ்சமும் அடைந்த ஆனந்த வெள்ளம் கரையற்றுப் புரண்டோடுகிறது... எனது
சிந்தையுள்ளும் தெளிவான ஞானம் திகழ்கின்றது. இப்படிப்பட்ட ஆனந்தத்தையும்
அறிவையும் ஒருங்கே அளித்த உன் அருள் உள்ளத்தை எண்ணி வியக்கிறேன்..
"ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.." அன்னை அபிராமியானவள்
நவராத்திரி தினங்களில் நாளொன்றுக்கொரு சக்தியாக ஒன்பது திருஅவதாரங்கள்
எடுக்கிறாள்... இவ்விடத்து ஒளிநின்ற கோணங்கள் ஒன்பது என்று அபிராமிப்
பட்டர் குறிப்ப்டுவது சக்தி வழிபாட்டில் யாகம் செய்யப்படும் ஒன்பது
யாகக் குண்டங்களாக இருக்கலாம். அப்படி யாகம் செய்யப் படும்போது
வெளிப்படும் ஒன்பது குண்டங்களின் சக்தியாகத் திகழும் அபிராமி அன்னையே....
என்று அன்னையை நவராத்திரி நாயகியாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்.
கடந்த பாடலில் தன்னை அழைத்துச்செல்ல கொடுங்கோபத்துடன் காலன் வரும்
வேளையில் அன்னை தனது திருமணக்கோலத்துடன் காட்சியளித்து அருள வேண்டும்
என்று வேண்டிக் கொண்டாரல்லவா?? அவ்வாறு வேண்டியதுமே அன்னையின்
திருக்கோலம் அவருக்குக் காட்சியளித்து விட்டது... வான வெளியில் அன்னையின்
திருமேனியைக் கண்டதும் அவர் விழிகளிலும் மனத்திலும் ஆனந்த வெள்ளம்
கரைகடந்து ஓடுகின்றது.. அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம்
தென்படுகின்றது.. இது அவருக்கு வியப்பை ஏற்படுகின்றது... கவனியுங்கள்...
நாம் அரிதானதொரு காட்சியைக் கண்டு விட்டாலோ அல்லது நமது மனது ஆனந்தத்தால்
நிறையும்படியானதொரு நிகழ்வு நடந்து விட்டாலோ, சிந்தை தெளிவானதாக
இருப்பதில்லை... ஆனந்தத்தில் குதித்துக் கொண்டே இருக்கும்... சிரித்துக்
கொண்டே இருப்போம்.. அவ்வமயத்தில் நாம் செய்கின்ற செயல்களைப் பின்னர் ஆற
அமர்ந்து நினைவு படுத்திப் பார்த்தால், நமக்கே அது முட்டாள்த்தனமாவும்,
சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும்.. ஆனால் இவ்விடத்து அன்னையின்
திருமேனியைக் கண்டதும் அபிராமிப் பட்டரின் கண்கள் ஆனந்த வெள்ளத்தை
அடைகின்றன. அவரது மனதும் ஆனந்த வெள்ளத்தில் திளைக்கின்றது... "விழியும்
நெஞ்சும் களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை" என்கிறார்... கரையற்று ஓடும்
காட்டாற்றைப் போன்ற ஆனந்த வெள்ளம் அது... மனமும் விழிகளும் இப்படிப் பட்ட
ஆனந்தத்தில் திளைக்கும் வேளையில், அவரது சிந்தையுள்ளோ தெளிவான ஞானம்
திகழ்கின்றது... இதென்ன அதிசயம்.. ? என்று அபிராமிப் பட்டர்
வியக்கிறார்.. உனது திருவுளமே இதற்குக் காரணம் அம்மா... உனது திருவுள்ளம்
அத்தனை அளப்பரிய ஆற்றல் கொண்டதம்மா என்கிறார்..
பாடல் இருபது
உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
விளக்கம் : அங்கிங்கெனாதபடி எங்கும் பூரணாமாய் நிறைந்திருந்து
மங்கலமளிக்கும் அபிராமி அன்னையே... நீ உறைகின்ற திருக்கோயில் யாது?? உன்
தோழரான சிவபெருமானின் ஒரு பக்கமா? அல்லது ஓதப் படும் நால்வகை வேதங்களின்
தொடக்கமா அல்லது முடிவா? அமிழ்தத்தால் நிறைந்து குளிர்ச்சியைத் தருகின்ற
வெண்மதியா? ஆயிரம் இதழ்களைக் கொண்ட வெண்தாமரை மலரா? அல்லது அடியேனின்
உள்ளமா?? அல்லது செல்வங்களெல்லாம் மறைந்திருக்கின்ற திருப்பாற்கடலா???
அன்னை எவ்வெவ்விடத்திலெல்லாம் கோயில் கொண்டுள்ளாள் என்பதை இப்பாடல்
தெளிவாகக் கூறுகின்றது.. "நின் கேள்வர் ஒரு பக்கமோ.." உனது தோழரான ஈசனது
ஒரு பக்கமோ? கேள்வர் எனும் பதமானது மிக நெருக்கமான தோழர்களைக் குறிக்கப்
பயன்படுகிறது... அன்னைக்கும் அப்பனுக்கும் இடையேயான தோழமை அளப்பறியது
அல்லவா? ஈசனை விடுத்து உமையும், உமையை விடுத்து ஈசனும் பிரிந்திருப்பது
மிக மிக அரிது... பிரிந்திருந்தாலும் அவர்தம் மனத்தளவில் ஒன்றியிருப்பதே
வாடிக்கை... அப்படிப்பட்ட ஈசனைத் தான் அம்மையின் கேள்வர் என்று அபிராமிப்
பட்டர் குறிப்பிடுகின்றா. ஒரு தமிழாசிரியர் வேடிக்கைக்காகக் கூறிய
செய்தி... ஈசனை என்ன காரணத்தால் அபிராமிப் பட்டர் கேள்வர் என்று
குறிப்பிட்டார் தெரியுமா? அன்னை சொல்வதையெல்லாம் சரி சரி என்று கேட்டுக்
கொண்டிருக்கிறார் அல்லவா? அதற்காகத்தான் என்று... ஆம் அன்னையின்
திருச்சொல்லை அப்பன் கேளாதிருந்திடுவாரோ? அந்த ஈசனின் ஒருபக்கத்தில்,
இடப் பாகத்தில் இருக்கின்றாயல்லவா?? அதுதான் நீ உறையும் திருக்கோவிலா??
"அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ?" ஆலயம்தோறும் உன்னை வழிபடுவதற்காக
நால்வகை வேதங்களை ஓதுகின்றார்களே.... அந்த வேதங்களில் நீ எவ்விடத்துக்
கோயில் கொண்டுள்ளாய்? அதன் தொடக்கத்திலா? அல்லது முடிவிலா? அமுதத்தால்
நிறைந்திருக்கும் வெண்மை நிற நிலவிலா? "கஞ்சமோ?" கஞ்சம் எனும் பதம்
ஆயிரம் இதழகளைக் கொண்ட வெண்தாமரை மலரைக் குறிக்கின்றது... நீ அந்த தாமரை
மலரில் கோயில் கொண்டுள்ளாயா? அல்லது என்றென்றும் உனையே எண்ணித் தவிக்கும்
இந்த அடியவனின் நெஞ்சத்திலா? "மறைகின்ற வாரிதியோ?" செல்வங்கள் எல்லாம்
மறைந்திருக்கக் கூடிய திருப்பாற்கடலோ? "பூரணாசல மங்கலையே!" எங்கும்
முழுமையாய் நிறைந்திருக்கும் மங்கலையே... மங்கலத்தை அருள்பவளே...
இவ்விடத்துப் பாடலினை இன்னொரு நோக்கிலும் காணலாம்... அம்மையே நீ
எங்கெங்கோ உறைகிறாய் என்று பட்டியலிட்டுக் குறிப்பிடும் அபிராமிப் பட்டர்
அவள் எங்கும் நிறைந்தவள் எனவே அவளைத் தேடி எங்கெங்கோ எதற்காக அலைய
வேண்டும் என்று குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்....
தொடரும் பாடல்களின் விளக்கத்தோடு அடுத்த மடலில் சந்திப்போம்... நண்பர்கள்
இந்தத் தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும்
படிக்கலாம். தங்களது மேலான பின்னூட்டத்தை அவ்விடத்தும் பதிவு
செய்யுங்கள்.. நண்பர் பிரசாத் வேணுகோபால் அவர்கள் இத்தொடர் முடிந்தவுடன்
அவற்றைத் தொகுத்து பின்னூட்டங்களுடன் கூடிய ஒரு மின் நூலாகத் தருவதற்கு
முயற்சியை மேற்கொண்டிருக்கின்றார். எனவே தனி இழை ஒன்றும்
உருவாக்கியின்றார். அவ்விடத்திலும் தங்களது மேலான கருத்துக்களையும்,
திருத்தங்களையும் பதிவு செய்யுங்கள்... நன்றி....
--
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
விளக்கம் : என்றென்றும் மங்கலத்தை வழங்கக் கூடிய மங்கலையான அபிராமி
அன்னையே... செம்மையான கலசம் போன்ற திருமுலைகளை உடையவளே, மலைமகளே,
வருணபகவான் அளித்த சங்காலான வளைகளை அணிந்த செம்மையான திருக்கரங்களை
உடையவளே.. அனைத்துக் கலைகளும் அறிந்த மயிலே... பாயும் கங்கையின் பொங்கு
அலைகள் தங்கும் சடைமுடிகளைக் கொண்ட ஈசனைத் தன் துணையாகக் கொண்டவளே..
அவ்வீசனைத் தன் உடையவனாகக் கொண்ட உமையவளே... பொன் போன்று ஒளிர்பவளே...
நீல நிறங்கொண்ட நீலியே... செம்மையானவளே... வெண்மை நிறங்கொண்டவளே, பச்சை
நிறமான பெண் கொடியே....
இந்த பாடல் அன்னையின் வெவ்வேறு குணங்களையும், நிறங்களையும் போற்றிப்
பாடுகிறது... மங்கலையே... என்பதற்கு என்றும் மங்கலமாக இருப்பவளே....
என்றும் பக்தர்களுக்கு என்றென்றும் மங்கலத்தை வழங்குபவளே... என்றும்
பொருள் கொள்ளலாம்.. செம்மையான கலசம் போன்ற திருமுலைகளைக் கொண்டவளே...
இவ்விடத்து அன்னையின் தாய் நிலையைக் குறிப்பிடுகிறார் அபிராமிப்
பட்டர்... மலையாள்... மலைமகளே... இமவானிடத்துதித்த மலைமகளே... "வருணச்
சங்கு அலை செங்கைச் சகலகலாமயில்" சங்கின் பிறப்பிடம் எது? கடல்... கடலின்
அதிதேவதை...? வருணபகவான்... அன்னைத் தன் திருக்கையில் சங்காலான வளைகளை
அணிந்திருக்கின்றாள்.. அவ்வளைகள் நீ பக்தருக்கு அருளும்போது அங்கும்
இங்கும் அலைகின்றன... அப்படிப்பட்ட செம்மையான கரங்களைக் கொண்டவளே...
அனைத்துக் கலைகளும் அறிந்தவளே... மயிலைப் போன்றவளே...."தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்" பாய்கின்ற கங்கையின்
பொங்கு அலைகள் தங்கும் நீள்முடிகளைப் பிரித்துக் கட்டக்கூடிய ஈசனைத் தன்
புடையாக... துணையாகக் கொண்டவளே... அவ்வீசனைத் தன் உடையவனாக............
கணவனாகக் கொண்டவளே..... "பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்
பெண்கொடியே" இவ்விடத்து அன்னையின் ஐந்து நிறங்களைக் கொண்டு
காட்சியளிப்பதாகக் குறிப்பிடுகிறார் அபிராமிப் பட்டர்... பிங்கலை
என்பதற்கு பொன்போன்று ஒளிர்பவளே... சுவர்ண தேவியே.... என்று பொருள்
கொள்ளலாம்.. நீல நிறங்கொண்ட நீலியே.. துர்க்கையே...செய்யாள் - செம்மை
நிறமானவளே... அருணாதேவியே... வெளியாள்... வெண்மையானவளே.... ஸ்வேதா
தேவியே.... பசும் பெண்கொடியே - பச்சை நிறங்கொண்ட பெண்கொடியே... அன்னை
மீனாட்சியே... அன்னையின் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறு பெயர் உண்டு...
வடமொழியில் காணப்படும் அன்னையின் ஆயிரத்திருநாமப் போற்றிகள் இதைப்
பற்றித் தெளிவாகக் கூறுகின்றது.. நமக்கு அதைப் பற்றிய ஞானம் குறைவு...
நமக்குத் தெரிந்தவற்றை இவ்விடத்துப் பதிவு செய்துள்ளேன்.. அன்னையின்
ஆயிரந்திருநாமங்களைக் கற்றோர் இவ்விடத்துத் தங்கள் கருத்துக்களைப் பதிவு
செய்ய வேண்டுகிறேன்.. மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தில் ஈசனை
"நிறங்களோர் ஐந்துடையாய்" என்று குறிப்பிடுவதும் இவ்வைந்து நிறங்களையே...
ஈசன் கொண்ட நிறங்களுக்கு வெவ்வேறு திருநாமங்கள் உண்டு....
மேலும் இப்பாடல் அன்னையைத் துதி செய்யத் தகுந்த பாடல்... வேறெந்த
நினைவுகளும் இன்றி வேறெந்த வேண்டுதலும் இன்றி அன்னையைத் துதிப்போருக்கு
இப்பாடல் மகிழ்வு தரும்...
பாடல் இருபத்திரண்டு
கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே பனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.
விளக்கம் : கொடியைப் போன்ற மென்மையான என் அபிராமி அன்னையே... இளமையான
வஞ்சிக் கொம்பே, தகுதியற்ற எனக்குத் தானே வந்து கனிந்த கனியைப்
போன்றவளே... வேதங்களின் நறுமணமே, பனி உருகும் இமயத்துதித்த பெண்யானையைப்
போன்றவளே... பிரம்மன் முதலான அனைத்து தேவர்களையும் பெற்றெடுத்த என்
அபிராமி அம்மையே...உனக்கு அடியேனாகிய நான் மரித்த பின்னர் இனிமேல்
இவ்வுலகில் பிறவி எடுக்காத வண்ணம் நீ வந்து என்னை தடுத்தாட்கொள்ள
வேண்டும்..
பிறவிப் பெருங்கடல் நீந்துதலின் கொடுமை அபிராமிப் பட்டருக்குப்
புரிந்திருக்கின்றது.. எத்தனை துன்பம் அம்மா... பிறந்தது முதல் இறப்பு
வரை இன்பங்களாலும், துன்பங்களாலும் அல்லாடும் மனது...என்செய்வதென்று
புரியவில்லை.. பிறப்பை நீத்த பின்னர் மீண்டும் பிறவாத வரம் வேண்டுமென்றே
ஆன்றோர்கள் வேண்டியிருக்கின்றனர்... அவ்வண்ணமே அபிராமிப் பட்டரும் தான்
மரித்த பின்னர் மீண்டும் பிறவாதிருக்க அன்னை வந்து தன்னை ஆண்டுகொண்டருள
வேண்டும் என்று வேண்டுகிறார்...
கொடியே... கொடியைப் போன்ற மென்மையானவளே... இளவஞ்சிக் கொம்பே... வஞ்சி
என்பது ஒருவகைச் செடி... (வஞ்சிப்பூ...?) அதன் இளங்கொம்பைப் போன்றவளே...
மிக மிக மென்மையானவளே... என்பது இதன் பொருள்..."எனக்கு வம்பே பழுத்த
படியே.." தானாக வந்து கனிந்த கனியைப் போன்றவளே... உனது அருளைப்
பெறுவதற்கு எவ்விதத் தகுதியும் எனக்கில்லை....ஆயினும் நீயே வந்து உனதருளை
என் மீது பொழிந்தாய்.. யாம் விரும்பிய காலையில், காலம் மறந்து தானே
கனிந்த கனியைப் போல அருள் பொழிந்த அபிராமி அன்னையே... "மறையின் பரிமளமே"
வேதங்களின் நறுமணம் ஆனவளே... இறையருள் பெற்றிட வேதங்கள் ஓதுகின்றனர்...
ஆனால் அவ்வேதங்களின் சாரம்சம் உனது திருநாமமே... நீயே அவ்வேதங்களை
உள்ளடக்கியிருக்கிறாய்.. உன்னை வணங்கினாலே போதும்.. உனது திருநாமத்தை
உச்சரித்தாலே போதும்... அவ்வேதங்களை ஓதும் பலன், உன்னைத் தொழுவதாலேயே..
உன் திருநாமத்தை உச்சரிப்பதாலேயே கிட்டுகிறது.... "பனி மால் இமயப்
பிடியே" பனி உருகும் இமயமலையில் நீ ஒரு பெண்யானையாகக்
காட்சியளிக்கிறாய்.. மென்மையானவளே என்று அன்னையை வர்ணித்த அபிராமிப்
பட்டர் வலிமை பொருந்திய பெண் யானைக்கு அம்மையை ஒப்பிடுகிறார்...
மென்மையானவளும் நீ... வலிமையானவளும் நீ... என் போன்ற அடியவரைத் தன்பக்கம்
ஈர்த்து அருள் செய்யும் மென்மையானவள் நீ... எமக்குத் துன்பம் வரும்
வேளையில் அதைத் துடைத்தழிக்கும் வலிமையானவளும் நீயே... என்றுரைக்கிறார்
அபிராமிப் பட்டர்.. பிரம்மன் முதலிய தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த
அபிராமி அம்மையே... எனக்கு இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று
வேண்டுகிறார்... "இன்னுமோர் தாய் கருப்பையூர் வாராமல் கா" என்று ஈசனை
வேண்டினார் பட்டினத்தார். ஆனால் அபிராமிப் பட்டரோ.... பிரம்மன் முதலிய
தேவர்களையெல்லாம் பெற்றெடுத்த அம்மையே... எனக்கு இனிப் பிறவி வேண்டாம்.
என் பிறவியைத் தடுத்து என்னை ஆண்டருள்புரி என்று வேண்டுகிறார்..
பிறவியைக் கொடுப்பவளிடம் நீயே அனைவரையும் பெற்றெடுத்தாய்.... எனவே ...
எனக்குப் பிறவியளிப்பதும், அளியாதிருப்பதும் உன் திருவருளே... தாயே...
போதும்... என்னை தடுத்தாட்கொள்... நான் இறந்த பின்னர் மீண்டும்
பிறவாதிருக்க வரமளி..... என்று அன்னையிடம் தன் பிறவிவேண்டா விருப்பத்தைத்
தெரிவிக்கிறார் அபிராமிப் பட்டர்...
அன்பர்களே... தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில்
காணலாம்...மீண்டும் சந்திப்போம் நன்றி...
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com
பாடல் இருபத்து மூன்று
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
விளக்கம் : எளியேன் எனக்கு எந்தன் கண்மணியைப் போன்ற என் அபிராமித்
தாயே....மூவுலகுக்கும் உள்ளே இருந்து அதனை இயக்குபவளே.. அம்மூவலகையும்
தாண்டி வெளியிலும் இருப்பவளே... என் உள்ளத்துள் விளைந்த கள்ளே...
அமுதமே... ஆனந்தமே ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... என் மனத்தில் நின்
திருவுருவையன்றி வேறொன்றும் நினைக்க மாட்டேன். உனக்கு அன்பான அடியவர்
கூட்டத்தை விட்டு என்றும் விலக மாட்டேன். உனை விடுத்து வேறொரு தெய்வத்தை
வணங்கும் பிற சமயங்களை நான் விரும்ப மாட்டேன்.
அன்னையின் திருவுருவத்தை மனத்தில் நிலை நிறுத்தி தியானத்தில் ஈடுபடத்
துவங்கி விட்டால், அவளின் உருவமன்றி எந்த நினைவுகளும் மனத்தில் எழாது...
இது அன்பர்களுக்கு அன்னை வழங்கும் திருவரம்.. அவ்வரத்தைத் தன்
வாழ்க்கையாகப் பெற்ற அபிராமிப் பட்டர் தன் மனநிலையை இவ்விடத்துத் தெளிவு
படுத்துகிறார். உன் உருவம் மட்டுமே என் மனத்தில் நிலை நிற்கிறது. வேறெந்த
உருவும் அவ்விடத்து வர இடமில்லை... உன்னடியார்களை விட்டு நான் என்றும்
விலகவே மாட்டேன்.. எனக்கு உற்றார்கள், சுற்றார்கள் எல்லாரும் நின்
அடியார்களே... என்னருகே யார் வந்தாலும் அவர்களெல்லாம்
உனக்கடியார்களாகத்தான் இருக்கின்றார்கள்.. மகாபாரத்தின் ஒரு சம்பவம்
நினைவுக்கு வருகிறது. ஒருமுறை தர்மன் உலகில் உள்ள கெட்டவர்களைத் தேடிப்
புறப்பட்டானாம். ஆனால் அவன் கண்ணில் யாரும் கெட்டவர்களாகத் தென்படவே
இல்லையாம். துரியோதனன் உலகில் உள்ள நல்லவர்களைத் தேடிப் புறப்பட்டானாம்.
ஆனால் அவன் கண்ணில் யாருமே நல்லவர்களாகப் படவில்லையாம்... ஆக அவரவர்
மனத்தில் எழும் எண்ணங்களாகவே இவ்வுலகம் தென்படுகிறது. இவ்விடத்து
அபிராமிப் பட்டர் அன்னையின் அன்பராகவே இருப்பதால், காண்போரெல்லாம்
அவருக்கு அன்னையின் அடியவராகவேத் தோற்றமளிக்கிறது. அப்படிப்பட்ட
அடியவரின் கூட்டத்தை விட்டுத் தான் என்றும் விலகுவதில்லை என்று
அன்னையிடம் தெரிவிக்கிறார். "பர சம்யம் விரும்பேன்" வேறு சமயங்களை நான்
விரும்புவதில்லை.. .எத்தனையோ சமயங்கள் இந்த உலகில் உள்ளன தாயே...
ஒவ்வொன்றும் ஒவ்வொருவரை இறைவன் என்று உரைக்கின்றன... ஆனால் என் கண்ணிற்கு
உன்னை விடுத்து வேறு யாரும் தெய்வமாகத் தோன்றாததால், உன் சமயத்தை விட்டு
வேறு சமயத்தை நான் விரும்ப மாட்டேன். "வியம் மூவுலகுக்கும் உள்ளே" என்ன
இது குழப்பம்.? ஓரிடத்து ஏழுலகங்கள் என்றார். பிரிதோரிடத்தில் பதினான்கு
உலகங்கள் என்றார்.. இப்பாடலிலோ மூவுலகம் என்று பாடுகிறாரே... இதென்ன?
என்ற ஐயம் நம் மனத்தில் எழுகின்றது.. ஆனால் அவ்விடத்திருந்து நீ
இயக்குகின்றாய் என்ற விளக்கம் நம்மைத் தெளிவு படுத்துகின்றது.. பூவுலகின்
இயக்கங்களுக்குக் காரணமாக மூன்று உலகங்கள் உள்ளன.. அவை பிரம்மனின்
சத்தியலோகம், திருமாலின் வைகுண்டம், சிவபெருமானின் கயிலாயம்.
இவ்வுலகங்களே உலகின் முக்கிய இயக்கங்களான படைத்தல், காத்தல், அழித்தல்
என்ற முப்பெருந்தொழில்களை இயக்குகின்றன... ஆனால் தாயே.. நீ அந்த
மூவுலகினையும் இயக்குபவள் அல்லவா....? என்கிறார்... மேலும் அங்கு
மட்டுமல்ல, அண்டசராசரங்கள் எல்லாவிடத்தும் நிறைந்து நிற்பவளே... என்
உள்ளத்தே விளையும் கள்ளே... அமுதமே... "களிக்கும் களியே.." ஆனந்தமே
ஆனந்திக்கும் பேரின்ப வடிவானவளே... நீ இன்பத்திற்கும் இன்பம்.. கள்ளை
அருந்துவோருக்கு அது மயக்கத்தை இன்பத்தைத் தருகின்றது... ஆனால் அக்கள்ளே
களிக்கும் களி... அக்கள்ளையே இன்பத்தால் மயங்க வைக்கும் பேரின்பம் நீயே
அம்மா..... எளியவன் எனக்கு நீ என் கண்ணின் மணியைப் போன்றவள்....
பாடல் இருபத்து நான்கு
மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.
விளக்கம் : மாணிக்கமாக விளங்குபவளே... அம்மாணிக்கம் உண்டாக்கும் ஒளியாக
விளங்குபவளே.. ஒளிரும் மாணிக்கங்களால் ஆன அணிகலனாக விளங்குபவளே.. அவற்றை
நீ அணிவதால் அவ்வணிகளுக்கே அழகு சேர்ப்பவளே.. உன்னை வணங்காது விலகி
நிற்பவர்களுக்குப் பிணியானவளே... உன்னைத் தேடி ஓடிவரும் பக்தருக்கு
அப்பிணிக்கான மருந்தைப் போன்றவளே.. அமரர்களுக்கும் மாபெரும் விருந்தாய்
தோன்றி நிற்கும் என் அபிராமி அன்னையே... அழகிய தாமரை மலரைப் போல்
விரிந்திருக்கும் உனது பாதங்களை வணங்கிய பின்னர், இன்னொருவரை நான் வணங்க
மாட்டேன்..
இந்த பாடலைத்தான் ஆதிபராசக்தித் திரைக் காவியத்தில் திரு. சௌந்தரராஜன்
பாடுவார். இப்பாடலைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் இயற்றிய "சொல்லடி
அபிராமி" எனத் துவங்கும் பாடல் வரும். கண்ணதாசனுக்கு மிகவும் பிரியமான
பாடல் இது... (அபிராமி அந்தாதிக்கு, கவியரசர் அவர்கள் உரை எழுதியிருப்பது
குறிப்பிடத் தக்கது). ஆனால் அப்பாடலில் மணியே... என்று தனது சிம்மக்
குரலில் சௌந்தர ராஜன் துவங்குவதற்கு முன்னர் ஒரு மணி ஒலி கேட்கும்...
அபிராமி அந்தாதியைக் கற்பதற்கு முன்னர் நான் அம்மணியொலியைத்தான் மணியே...
மணியின் ஒலியே... என்று பாடுவதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.. பின்னர்
அபிராமி அந்தாதியைக் கற்ற பின்னர் அவ்வெண்ணம் நகைச்சுவையாகி விட்டது..
மணியே - மாணிக்கமே... மணியின் ஒளியே... மாணிக்கம் சிந்தும் ஒளியைப்
போன்றவளே... அவ்வொளிதரும் மாணிக்கங்களால் செய்யப் பட்ட அணிகலனைப்
போன்றவளே... "அணியும் அணிக்கு அழகே" அவ்வணிகலன் அணிவதால் அணிகலனுக்கு
அழகு சேர்ப்பவளே... உன்னை அழகு செய்ய மாந்தரெல்லாம் உனக்கு மாணிக்கத்தால்
அணிகலன் செய்தார்.. ஆனால் தாயே... அவ்வணிகலன்களால் உனக்கு அழகு அல்ல...
உன்னால் அணியப் பட்டதால்தான் அவ்வணிகலனே அழகு பெற்றது.... எத்தனை அழகிய
உண்மை..... அன்னையை மட்டுமே எண்ணும் கண்களுக்கு அவளை விடுத்து வேறெந்த
ஒன்றும் திருப்தியைத் தராது.. அன்னை.. அன்னையின் திருநாமம்... அவளது
புகழ்... இவை மட்டுமே அபிராமிப் பட்டருக்கு அழகாய்த் தோன்றுகிறது..
ஆகையால்தான் அம்மையால் அவ்வணிகலன் அழகு பெற்றதாய்ப் பாடுகிறார்.
"அணுகாதவர்க்குப் பிணியே" உன்னை அணுகாதவர்க்கு, உன்னைத் தொழாதவர்களுக்கு,
அவர்களது கர்மவினைப் பயனால் ஏற்படும் பிணி நீதான்... நம் கிராமப்
பகுதிகளில் வெப்பு நோயை "அம்மை நோய்" என்றழைப்பது வழக்கு... "ஆத்தா
வந்திருக்காப்பா..." என்றுதான் குறிப்பிடுவார்களே விடுத்து அதற்கு வேரொரு
பெயரைத் தருவதில்லை... இவ்வாறு உன்னை அணுகாதவர்களுக்கு ஏற்படும்
பிணியானவளே... அப்பிணிக்கும் மருந்தானவளே... வெப்பு நோயினால் ஏற்படும்
துன்பத்தைத் தீர்க்க அனைவரும் மீண்டும் அன்னையையே நாடி வருகின்றனர்.
இதனால் பிணியுமானாள்... அப்பிணிக்கு மருந்துமானாள் அன்னை அபிராமி...
அமரர்களுக்கெல்லாம் பெரும் விருந்தாக விளங்கக் கூடியவளே... அழகிய தாமரை
மலர் போன்று தோற்றமளிக்கும் உன் அழகிய பொற்பாதங்களை வணங்கிய பின்னர்
இன்னொருவரை நான் பணிவது இல்லை... எத்தனை வைராக்கியம் அபிராமிப்
பட்டருக்கு... அன்னை அபிராமி மட்டுமே தன் தெய்வம் .. அவள் விடுத்து
வேறொரு தெய்வத்தை அவரால் கற்பனை கூட செய்ய இயலாது... அப்படிப்பட்ட
வைராக்கிய பக்தி நிலையில் நின்றிருந்தார் அபிராமிப் பட்டர்... பிற
தெய்வங்களை மட்டுமல்ல... யாரையுமே வணங்க மாட்டேன்... உலகில் பிறங்கு உலக
இன்பங்களால் துன்புற்றிருக்கும் மாந்தர், தம் இன்பங்களுக்காக மாந்தரை
வணங்குகின்றனர்.. பிற கடவுள்களையும் வணங்குகின்றனர்.. ஆனால் நான் உன்னைத்
தவிர வேறொருவரையும் வணங்குவதில்லை ... என்று தன் உறுதிநிலையைத் தெளிவு
படுத்துகிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களுக்கான விளக்கம் அடுத்த மடலில்... அன்பர்கள் நமது
விளக்கத்தில் ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்து, அவற்றை திருத்தித்
தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி...
நண்பர்கள் இவ்விளக்கங்களை www.chithiram.blogspot.com என்ற
வலைப்பதிவிலும் படிக்கலாம்..
அன்பினிய கந்தசாமி நாகராசன்,
அன்பர்களுக்கு வணக்கம்.. அன்பு மகள் பிறந்த மகிழ்ச்சியுடன் இன்றைய பதிவை
எழுதிக் கொண்டிருக்கின்றேன்.. நேற்றைய திருநாளைப் பற்றி உற்சாகத்துடன்
பேசிக்கொண்டிருக்கும் போது, எமது துணைவியாருக்கு பிரசவ வலி வந்தது.
அச்சமயம் நானும் அவரது இல்லத்தில்தான் இருந்தேன். மருத்துவமனைக்கு
விரைந்தோம். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கழித்து, அறுவை சிகிச்சை
செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட அன்னையைப் பிரார்த்தனை
செய்து கொண்டே கையெழுத்திட்டேன். உலகத்தைக் காத்து ரக்ஷிக்கும் அன்னையின்
திருவருளால் இன்று அதிகாலை மணி 01.43 அளவில் எங்கள் திருமகள் பூவுலகில்
உதித்தாள். பிரசவ சமயத்தில் என் மனைவி பட்ட பாட்டை அருகில் இருந்து கண்ட
கலக்கம், மகளது திருமுகத்தைக் கண்டவுடன் உடனடியாக நீங்கியது. குட்டி
முகம், பிஞ்சு விரல்கள்... அடடா... மழலைச்செல்வத்தின் இன்பத்தை எங்கனம்
உரைப்பது... முன்னர் ஒருமுறை நமது பதிவில் தமிழ் இலக்கியத்தில் மழலையர்
பற்றிய கட்டுரையை எழுதியிருந்தோம். அது இலக்கியங்களை ரசித்து எழுதியது..
அதன் உண்மையான இன்பத்தை இன்று அதிகாலை அடைந்தோம்.. இதைப் பற்றிய ஒரு
நுகர்வை இன்னொரு பதிவில் தெளிவாக எழுதலாம். இப்போது அதே மகிழ்ச்சியுடன்
அபிராமி அந்தாதியைக் கவனிப்போம்.
பாடல் இருபத்து மூன்று
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
. நன்றி...
நண்பர்கள் இவ்விளக்கங்களை www.chithiram.blogspot.com என்ற
வலைப்பதிவிலும் படிக்கலாம்..
--
என்றும் அன்புடன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
--
You received this message because you are subscribed to the Google
Groups "tamil_ulagam" group.
To post to this group, send email to tamil_...@googlegroups.com
To unsubscribe from this group, send a blank email to
tamil_ulagam...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/tamil_ulagam?hl=en
விளக்கம் : மும்மூர்த்திகளுக்கும் அன்னையான அபிராமித் தாயே... இந்த
உலகத்தாருக்குக் கிடைத்த அரிய மருந்தான என் அபிராமியன்னையே...
இப்பிறவியில் உன்னடியார்களைப் பின் தொடர்ந்து அவர்களுக்கு வேண்டிய
திருப்பணிகளைச் செய்து என் பிறவித் துன்பத்தை வேரறுக்கும் வாய்ப்பினை
நான் முற்பிறப்பில் செய்த தவங்களின் வாயிலாக அடைந்தேன். என்னே உன்
பெருமைகள்... ! இப்பொழுது மட்டுமல்ல... இனிமேல் எக்கணமும் உனை நான்
மறவாது தொழுது கொண்டிருப்பேன்.
"பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று
கொண்டேன்"... உலகத்தோர் இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் அடுத்த
பிறப்பில் தமது தகுதியை நிர்ணயம் செய்யும் என்று நம்புகிறார்கள்..
இதற்கெனவே தான தர்மங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள்..
ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடும் போது இப்பிறப்பின் எதிர்கால
நன்மைகளுக்காக வேண்டுகின்றனர்.. இனி எனக்கு பிறவி கிடையாது என்று
முழங்கும் அபிராமிப் பட்டர், அதற்கான காரணத்தையும் விளக்குகிறார். உன்
திருவடியைப் பற்றியிருக்கக் கூடிய உனது அடியார்களைப் பின் தொடர்ந்து
அவர்கட்கு வேண்டிய திருப்பணிகளை நான் செய்து வருகிறேன். எனவே எனக்கு
இனிமேல் பிறவி கிடையாது.. இத்திருப்பணிகளை நான் மேற்கொள்ள வேண்டிய
புண்ணியம் எனக்கு எங்ஙனம் கிடைத்தது தெரியுமா? நான் முற்பிறப்பில் பல
தவங்களை இயற்றி இவ்வரத்தினைப் பெற்றேன். பொருட்செல்வம் மிகப் பெற்றோர்,
தாம் முற்பிறப்பில் செய்த புண்ணியத்தால் இந்நிலையை அடைந்ததாகப் பெருமைப்
பட்டுக்கொள்கின்றனர்.. ஆன்மீக வழியில், உயர்ந்த நிலையை அடைந்த பெரியோர்
யாரும் தமது முற்பிறவிப் பயனால் இது எமக்குக் கிட்டியது என்று
முழங்கியதில்லை.. ஆனால் அபிராமிப் பட்டர் மிக உறுதியாக தனது கருத்தைத்
தெளிவுபடுத்துகிறார். மூன்று உண்மைகள்.. ஒன்று. தான் முற்பிறப்பில் செய்த
தவங்கள். இரண்டு. அத்தவங்கள் வாயிலாக இப்பிறப்பில் அபிராமி அன்னையின்
அடியார்களுக்குச் செய்யும் திருத்தொண்டு. மூன்று. அத்திருத்தொண்டின்
வாயிலாக இப்பிறப்புத் துன்பத்தை நீக்குதல். வேறெந்த பிறப்பும் ஏற்படாத
உன்னத நிலையை அடைதல். இம்மூன்று உண்மைகளுக்கும் நடுநாயகமாக விளங்குவது
அன்னையின் அடியாருக்குச் செய்யும் திருத்தொண்டுதான். எங்கள் குருதேவர்
பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறுவார் கடந்த காலம், நிகழ்காலம்,
எதிர்காலம். இவற்றுள் நிகழ்காலம் மட்டுமே நிதர்சனமான உண்மை. எனவே நீ
எக்கணமும் இக்கணத்தில் இரு.. என்று... அபிராமிப் பட்டரும் தன் நிகழ்கால
நிலைக்குக் காரணத்தையும், அதனால் வருங்காலத்தில் தனக்கு ஏற்பட இருக்கும்
உன்னத நிலையையும் இவ்விருவரிகளில் தெளிவுபடுத்திவிடுகிறார். முன்னர் ஒரு
பாடலில் "நான் முன் செய்த புண்ணியம் எது என் அம்மே" என்று பாடிய
அபிராமிப் பட்டர் இவ்விடத்துத் தான் செய்த புண்ணியம் என்ன என்பதை
உணத்துகிறார்.
"முதல் மூவருக்கும் அன்னே" அன்னை அபிராமியே மும்மூர்த்திகளைப்
பெற்றெடுத்தாள் என்பதை இன்னுமொருமுறை தனது பாடலின் வாயிலாகக் கூறுகிறார்.
"உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே" எதுவும் தேவையில்லை அன்னை
அபிராமியை விடுத்து... என்னும் தன் நிலையில் உறுதியாக இருக்கும்
அபிராமிப் பட்டர் அன்னை அபிராமி உலகத்தாருக்குக் கிடைத்த ஒரு அரிய
மருந்து என்கிறார். அபிராமியை எண்ணித் துதித்தால் எந்தவித காயமும்
ஆறிப்போகும். எல்லாவித நல்நிலையும் தேடிவரும் என்பதே நிச்சயமான உண்மை.
உலகத்தார் செய்த புண்ணியம் அவ்வருமருந்தினைப் பெற்றிருப்பது. "என்னே.?"
உனது பெருமைகளையெல்லாம் எங்ஙனம் உரைப்பேன்...? "இனி உன்னை யான் மறவாமல்
நின்று ஏத்துவனே" அன்னையை மறப்பது அபிராமிப் பட்டரால் இயலுமா? எக்கணமும்
உன்னை மறவாது தொழுவேன் என்று பறைகிறாரே.... துன்பத்தில் இறைவனை
நினைப்பது, இன்பத்தில் இறைவனை மறப்பது .. இதுதான் உலகத்தார் வாடிக்கை..
எனவேதான் குந்தி தேவி, கண்ணனிடம் தனக்கு எப்பொழுதும் துன்பங்கள் வந்து
கொண்டேயிருக்க வேண்டும் என்று வேண்டினாள். அத்துன்பங்கள் தொடர்ந்து
கொண்டேயிருந்தால், இறைவனை என்றும் மறவாது தேடிக்கொண்டே இருப்போம் என்பது
அவரது கருத்து.. ஆனால் அபிராமிப் பட்டரால் அன்னையை மறப்பது முடியுமா?
என்றும் மறப்பதில்லை... ஆயினும் தொழுதல் என்பது வேறு... மறவாதிருத்தல்
என்பது வேறு.. அன்னையை மறவாது நினைப்பது மட்டுமே புண்ணியம் தரும்
செயலல்ல... நாத்திக அன்பர்கள் தினம் ஒருமுறையாவது "இறைவன் இல்லை" என்று
சொல்லி இறைவனை நினைவுகூர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு
இறைவனின் திருவருள் கிட்டுமா? எனவே தொழுதல் முக்கியம்.. இனிமேல்,
எக்கணமும் உன்னைத் தொழுது கொண்டேயிருப்பேன் என் அன்னை அபிராமியே... என்று
அபிராமிப் பட்டர் மொழிகின்றார்.
பாடல் இருபத்தாறு
ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே
விளக்கம் : அபிராமித் தாயே... உன்னை என்றும் தொழும் அடியவர் யாரெனில்
பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழித்துத் தொழில் புரியும் அந்த
மும்மூர்த்திகளான பிரம்மா, திருமால் மற்றும் சிவபெருமான். நறுமணம்
வீசும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும் அழகிய என்
அபிராமித் தாயே... மணம் வீசுகின்ற உனது திருவடிகளில் எளியேனான என்
நாவிலிருந்து தோன்றிய கீழான சொற்களை சாத்துகிறேன். அக்கீழான சொற்கள் நின்
திருவடிகளில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது நல்லதொரு நகைச்சுவை..
"ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும்
திரிபவராம்" கடந்த பாடலில் அன்னையின் அடியவர்க்கு திருத்தொண்டு புரிதலைப்
பற்றிப் பேசிய அபிராமிப் பட்டர் அவ்வடியவர்களில் சிறந்த மூவரைப் பற்றி
இவ்விடம் பேசுகிறார். பதினான்கு உலகையும் படைத்து, காத்து, அழிக்கும்
தொழில் புரியும் அம்மும்மூர்த்திகள். நீ அவர்களைப் படைத்தாய்.. அவர்கள்
இவ்வுலகினைப் படைத்தனர். அவர்கள் படைத்த உலகோரும் உன்னைத் தொழுகின்றனர்.
நீ படைத்த அம்மும்மூர்த்திகளும் உன்னைத் தொழுகின்றனர்...
மும்மூர்த்திகளும் உனக்கு அடியவர்கள்... "கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்
அணங்கே" நறுமணம் கமழும் கடம்பப் பூவினை கூந்தலில் சூடிக்கொண்டிருக்கும்
அழகிய பெண்ணே... " மணம் நாறும் நின் தாளிணைக்கு" மும்மூர்த்திகள் உனக்கு
அடியார்கள்.. உன் கூந்தலில் இருப்பதோ நறுமணம் வீசும் கடம்பப் பூ.. நீயோ
அழகிற்சிறந்தவள். இது போன்ற பெருமைகளால் மணம் வீசும் உன்
திருவடிகளில்..... "என் நாத் தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே" என்
நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள் உன் பாதங்களில் ஏற்பு பெற்றிருப்பது
நல்ல நகைச்சுவை... இவ்விடத்து தனது நாவில் தங்குகின்ற கீழான வார்த்தைகள்
என்று அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது அபிராமி அந்தாதியை... நமக்கெல்லாம்
அபிராமி அந்தாதியே வேதம்.. அன்னையின் புகழ்பாடும் சிறந்த பாடல் நூல்.
ஆனால் அதை எழுதிய அபிராமிப் பட்டரோ எளியவன் என் நாவில் இருந்து புறப்பட்ட
கீழான வார்த்தைகள் என்று அடக்கமாகக் குறிப்பிடுகிறார்.. ஆனால் அதையும் நீ
ஏற்றுக் கொண்டாயே... இது சிறந்த நகைச்சுவை என்கிறார்.
மும்மூர்த்திகளாலும் தொழப் படுபவள் நீ.. அவர்கள் உன்னை என்ன சொல்லித்
துதிப்பார்கள்?? நாமறியோம்... தேவாதிதேவர்களெல்லாம் உன்னை என்ன சொல்லித்
துதிப்பார்கள்?? நாமறியோம்.. எம் சிற்றறிவுக்கெட்டிய சிறு சொற்களால்,,
கீழான சொற்களால் உன்னைத் துதிக்கிறேன்... அதையும் நீ ஏற்றுக்
கொள்கிறாயே... இதென்ன நகைச்சுவை... ? என்கிறார். இவ்விடத்து அன்னை
அபிராமி எளியோர் சொல்லையும் தம் கவனத்தில் ஏற்கும் கருணையுடைவள் என்ற
அவளது பெருமையும், அன்னையைத் துதி செய்ய மிகச்சிறந்த பாடல்களைப்
பாடிவிட்டு இதெல்லாம் மிகவும் கீழான சொற்கள் என்று கூறும் அபிராமிப்
பட்ட்ரின் எளிமையும் தன்னடக்கமும் இப்பாடலின் மூலம்
வெளிப்படுகின்றன..அபிராமிப் பட்டரின் பாடல்களையே அவர் அவ்வாறு
சொல்லும்போது, அறியாது விளக்கமளிக்கும் இவ்வடியேனின் சொற்களெல்லாம்
எவ்விடம்தான் போகும்?
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம். நன்றி.
நண்பர்கள் இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற விளக்கத்திலும்
படிக்கலாம். தங்களின் மேலான பின்னூட்டங்களை அவ்விடமும் பதிவு
செய்யுங்கள்.. நன்றி..
விளக்கம் : அபிராமி அன்னையே... நீ என்னை வஞ்சனை செய்யும் இப்பிறவி நோயை
உடைத்தெறிந்தாய். என் உள்ளமெலாம் உன்னையே நினைத்து உருகும் அன்பினைப்
படைத்தாய். இந்த யுகத்தில் நின் திருவடித்தாமரைகளையே பணிந்து
கொண்டிருக்கும் பணியினையே எனக்கு அளித்தாய். என் மனத்துள் உண்டான
அழுக்கையெல்லாம் உனது அருளெனும் நீரால் துடைத்தழித்தாய். பேரழகியே... உன்
பேரருளை நான் என்னவென்று உரைப்பேன்.!!??
பிறப்பு ஒரு வஞ்சனை என்பது அபிராமிப் பட்டரின் கருத்து.. எனவேதான் பெரும்
மகான்கள் எல்லோரும் மீண்டும் பிறவியே வேண்டாம் என்றுரைத்தனர்.. பிறந்த
பின்னர் உலகில் பல்வேறு கட்டுக்களால் நாம் கட்டப்பட்டு
வஞ்சனைக்குள்ளாகிறோம். ஆசை, ஆணவம், சினம், மாயை இவற்றால் கட்டுண்டு நம்
பிறவிப் பயனை மறந்து போகிறோம்... ஆனால் என் அபிராமி அன்னையே.. நீ
இவ்வஞ்சனையை உடைத்து என்னைக் காத்தாய். "உள்ளம் உருகும் அன்பு படைத்தனை"
உன்னையே எண்ணி உருகிக் கொண்டிருக்கும் அன்பு உள்ளத்தை என்னுள்
படைத்தாய்... அன்னையை எண்ணி உருகிக் கொண்டிருக்கும் உள்ளம் அன்பு செய்ய
மறுக்குமோ? பின்னர் ஏன் அபிராமிப் பட்டர் இவ்விடத்து உருகும் அன்புள்ளம்
என்று குறிப்பிடுகிறார்.? இறைவனை வணங்குதலும், அவனுக்குத் தொண்டு
செய்தலும், அவன் ஆலயத்திருப்பணிகளை மேற்கொள்வது மட்டுமே இறைப்பணி என்றாகி
விடுமா? உள்ளத்து அன்பு வேண்டாமா? யார் மீது அன்பு வேண்டும்? எல்லார்
மீதும் வேண்டும்... அன்னையைத் தொழுவோர், அன்னையை மறுப்போர் என்று
அனைவர்பாலும் அன்பு செலுத்தும் உள்ளம் வேண்டும். இறைமறுப்புக் கொள்கையை
பரப்பிவந்த பேரறிஞர் அண்ணாவோ "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்"
என்றுரைத்தார். "இந்தச் சிறியோரில் யாருக்கு எதைச் செய்தீர்களோ அதை
எனக்கே செய்தீர்கள்" என்றுரைத்தார் இயேசு நாதர். அன்னையை உண்மையாக எண்ணி
உருகும் உள்ளத்தில் மட்டுமே இத்தன்மை கொண்ட அன்பு பெருகி வரும்.. அன்னை
மேல் அன்பு கொள்ளும் உள்ளம் எல்லார் மீதும் அன்பு செலுத்தும். "வாடிய
பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றுரைத்த வள்ளலார் உள்ளத்திலுள்ள
அன்பு கிடைக்கும். நண்பர்களெல்லாம் ஒரு முறை நவதிருப்பதி ஆலயங்களுக்குச்
சென்றிருந்தோம். எங்கும் நிறைந்த அந்த திருமாலை ஓர் ஆலயத்தில் கண்டு
(எத்திருப்பதி என்பதை நான் குறிப்பிட விரும்பவில்லை) மகிழ்ந்திருந்த
வேளை, திடீரென யாரோ யாரையோ திட்டும் குரல் கேட்டு கண் திறந்தேன்.
என்னவென்று நோக்கினால், ஒரு குருக்கள் பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரிய
துளசி மாலையைக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அப்பக்கம் நின்று
கொண்டிருந்த விதவைப் பெண்ணொருத்தி தற்செயலாகத் திரும்ப அவளது கரம்
அம்மாலை மீது பட்டுவிட்டது.. "நீ எப்படிப்பட்டவள் தெரியுமா? நீ தொட்ட
இந்த மாலையை என் பெருமாளுக்கு நான் எப்படி சாத்துவேன்?" என்று கத்த
ஆரம்பித்து விட்டார். அந்த பெண்ணோ அழத்தொடங்கி விட்டார்.. நமக்கோ
மனமெல்லாம் கோபம் பொங்கி வந்தது.. எல்லோர் மனத்திலும் குடியிருக்கும்
பெருமாள் அப்பெண்ணின் மனத்திலும் குடியிருக்க மாட்டானா? எதற்காக இத்தனை
ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று வியந்தேன். இதைப் போன்ற நிகழ்வுகளும்,
பல்வேறு சாதியினருக்கு ஆலயநுழைவு மறுக்கப்பட்ட நிகழ்வுகளுமே இறைமறுப்புக்
கொள்கையாளர்களை நம் தேசத்தில் பிறக்கச் செய்தது.. ஆனால் இறைவன் மீது நாம்
உண்மையான அன்பு கொண்டிருந்தால், நம் மனத்தில் அனைவர் மீதும் பாராட்ட
வேண்டிய உண்மை அன்பு வந்து சேரும்.. இதைப் போன்ற குருக்கள் எத்தனை காலம்
பணிசெய்தாலும், அவர்தம் பணியை இறைவன் அன்போடு ஏற்றுக் கொள்வதேயில்லை..
"பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை " நின் திருவடித் தாமரைகளுக்கே
பணிசெய்யும் பணியை எனக்கு அளித்தாய்.. எத்தனை பாக்கியம்... ! அன்னையின்
திருப்பாதங்களுக்குத் திருத்தொண்டு செய்யும் பணியை மட்டுமே தன் பணியாகக்
கொண்டிருந்தார் அபிராமிப் பட்டர். வேறெந்த பணியும் இல்லை.. காலை கண்
விழிக்கும் வேளை முதல் இரவு கண் அயரும் வேளை வரை அன்னையைக் காண்பது, அவள்
நினைவுகளால் தியானத்தில் மூழ்கியிருப்பது, அவளை அலங்கரிப்பது, அவளைத்
தொழுவது என்று என்றென்றும் அவளது திருவடிகளுக்கே திருத்தொண்டு புரிந்து
கொண்டிருந்தார். அதனை சற்றே கர்வத்தோடு இவ்விடத்து உரைக்கிறார்.
"நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருட்புனலால் துடைத்தனை" என் மனம்
பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி வழிந்தது.. கோபம், வஞ்சகம், பொறாமை,
காமம், களவு, .... இன்னுமிது போன்ற பல்வேறு அழுக்குக்களால் நிரம்பி
வழிந்த என் மனத்தை நீ உன் அருளென்னும் நீரால் துடைத்து அழித்தாய்..
அன்னையின் அருள் மனத்துள் வந்துவிட்டால், அவ்விடம் குடிகொண்ட கசடுகள்
மாயமாகி விடும்.. இதுவே அன்னை தரும் பேரருள்..
பேரழியே.. உன் பேரருளை என்னவென்றுரைப்பேன்.. !? அவள் பெருமையெல்லாம்
சொல்லிவரும் அபிராமிப் பட்டருக்கு அன்னையின் அருளாட்சியால் அவளது பல்வேறு
பெருமைகள் நினைவுக்கு வருகின்றன. இத்தனைதான் சொன்னோம்...இன்னும்
சொல்லவேண்டியன பல உள்ளனவே... அன்னையே... இதனை நான் எங்ஙனம் உரைப்பேன்.!
என்று வியந்து பாடுகிறார்..
பாடல் இருபத்து எட்டு
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
விளக்கம் : சொல்லோடு எங்ஙனம் அதன் பொருள் கூடி வருகின்றதோ, அதைப் போன்று
ஆனந்த நடனமாடும் உனது துணைவரான ஈசனோடு இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம்
வீசக்கூடிய பூங்கொடியைப் போன்றவளாகிய அபிராமி அன்னையே... அன்றலர்ந்த
மலரைப் போன்ற உன் திருவடிகளை இரவும் பகலும் எப்பொழுதும் தொழும்
அடியவர்களுக்கே, அழியாத அரச போகமும், முக்தி நிலைக்குச் செல்லவேண்டிய
தவநெறிகளும், அதன் பயனான சிவலோக வாழ்வும் கிட்டும்.
"சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப்
பூங்கொடியே." பொருளற்ற சொற்கள் சொற்களில்லை.. சொல்லெனச் சொல்ல
வேண்டுமெனில் அச் சொல்லிற்குப் பொருள் வேண்டும். ஈசனைச் சொல் என்று
சொன்னால் நீயே அதன் பொருள்.. சொல்லும் பொருளும் எவ்வண்ணம் இணைந்தே
இருக்கின்றனவோ அதைப் போன்று ஆனந்த நடனமாடும் நின் துணைவரான ஈசனுடன்
என்றென்றும் இணைந்து ஓருடலாய் நிற்கும் நறுமணம் வீசும் பூங்கொடியைப்
போன்ற என் அபிராமி அன்னையே...
"நின் புதுமலர்த் தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே" இன்று மலர்ந்த
புத்தம்புது மலரினைப் போன்று தோன்றும் உனது திருவடிகளை அல்லும் பகலும்
தொழுகின்ற அடியவர்களுக்கே.... பல பாடல்களில் அன்னையின் திருவடியைத் தாமரை
மலருக்கு ஒப்பிட்டு வந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து அவை புது மலரினை
ஒத்தவை என்பது சிறப்பு.. புத்தம் புது மலர் எவ்வாறு இருக்கும்? என் அன்பு
மகளைக் காணும்போது இவ்வெண்ணமே என் மனத்துள் தோன்றியது.. தலை முதல் பாதம்
வரை அத்தனையும் புதுத் தளிரைப் போன்றது... அத்தனை மென்மையாக
இருக்கின்றது.. என் மனைவியிடம் கூட "எவ்ளோ அழகா செஞ்சிருக்காங்க பாரு"
என்று சொல்லி சொல்லி வியந்தேன்.. எல்லாமே புதிதாய்க் காணும்போது
அழகுதான். மென்மைதான்.. அன்னை அபிராமியின் பாதங்கள் புத்தம் புது
மலரினைப் போன்று அபிராமிப் பட்டருக்குத் தோன்றுகிறது... அப்படிப் பட்ட
உன் பாதங்களை இரவென்றெண்ணாது, பகலென்றெண்ணாது எந்நேரமும் தொழுகின்ற
அடியவர்களுக்கு....
என்னவெல்லாம் கிட்டும்? அழியாத அரசு... எல்லா அரசுகளும் ஓர்நாள் அழிந்து
விடும்.. (இன்றைய மொழியில் கவிழ்ந்துவிடும்.. !!!!) பாண்டியப் பேரரசு,
சோழப் பேரரசு, சேரப் பேரரசு என்று தமிழகத்தை ஆண்ட அரசுகளும் சரி, உலகையே
ஆளப் புறப்பட்ட ஆங்கிலேய அரசும் சரி... எத்தனை பெரிய சக்தி படைத்த
அரசுகளும் ஓர் நாள் அழிந்தே போய்விடும்... ஆனால் அழியாத அரசு என்று
அபிராமிப் பட்டர் குறிப்பிடுவது யாது?? அது ஆன்மீகத்தால் உள்ளத்தை
ஆளுகின்ற அன்பு அரசு.. இன்றைக்கும் நம் உள்ளங்களையெல்லாம்
ஆண்டுகொண்டிருக்கக் கூடிய அபிராமிப் பட்டருக்குக் கிடைத்த உன்னத அரசு...
வேறென்ன கிட்டும்? செல்லும் தவநெறி.. எங்கே செல்வதற்கான தவநெறி.?
இறப்புக்குப் பின்னான உலகு சொர்க்கமா? அல்லது நரகமா? என்பதைத்
தீர்மானிப்பவை நாம் செய்யும் புண்ணிய பாவங்களே.. எனவே நல்லுலகமான
சொர்க்கத்துக்குச் செல்வதற்குரிய அரும்பணியான தவநெறிகள் அன்னையைத்
தொழுவோர்க்கு வந்து சேரும்.
வேறு? சிவலோகம்... அம்மையுடன் அப்பன் அருளாட்சி செய்யும் சிவலோகத்தில்
வாழக்கூடிய வாய்ப்பு.. சிவலோக பதவியடைந்தார் என்று நாம் மரித்த பின்னர்
நமது நினைவிடத்தில் கல்வெட்டில் எழுதிவைத்தால் மட்டும் சிவலோக பதவி
நமக்குக் கிட்டிவிடுமா? இல்லவே இல்லை... அன்னையின் கருணை நமக்குக்
கிட்டினால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் அபிராமிப் பட்டர்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... ஏதேனும் திருத்தங்கள்
இருப்பின் அறிந்தோர் தயவு செய்து மடல் எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம்
நன்றி...
நண்பர்கள் இத்தொடரினை www.chithiram.blogspot.com என்ற வலைப்பூவிலும்
படிக்கலாம். தங்களது மேலான கருத்துக்களை அவ்விடமும் பதிவு செய்யும்படி
வேண்டுகிறேன்...
விளக்கம் : அபிராமி அன்னையே... நீயே சகல சித்தியாகத் திகழ்கிறாய், சகல
சித்திகளையும் வழங்கும் தெய்வமாகிய பராசக்தியும் நீயே.. பராசக்தி
தழைக்கக் காரணமான பரமசிவமும் நீயே. அப்பரமசிவத்தை எண்ணித் தவம் செய்யும்
அடியவர்களுக்குக் கிடைக்கும் முக்தியும் நீயே.. முக்திக்குக் காரணமும்
நீயே.. முக்திக்குக் காரணமாக மனத்துள் தோன்றிய புத்தியும், புத்தியின்
உட்பொருளும் என சகலமும் ஆகி நின்று எம்மைக் காக்கும் திரிபுரசுந்தரி
நீயே அல்லவா?
சகலமும் அபிராமி... எங்கும் அபிராமி. எதிலும் அபிராமி என்று சகலத்தையும்
அபிராமி மயமாகவேக் காட்டும் பாடல் இது. எட்டுவித சித்திகளைச்
சொல்வார்கள். அணிமா (அணு அளவிற்கு சிறிய உருவை எடுத்துக் கொள்ளுதல்),
மஹிமா (பிரபஞ்சத்தின் அளவிற்கு உருவை பெரிதாக்கிக் கொள்வது), கரிமா
(எடையை அதிகரித்தல்) லஹிமா (இலகுவான எடையைக் கொண்டிருப்பது), ப்ராப்தி
(நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்வது), ப்ராகாம்யா
(எண்ணியதெல்லாம் அடைதல்), ஈசித்வா (எல்லா பொருட்கள் மேலும் ஆதிக்கம்
செலுத்துவது), வசித்வா (எல்லா பொருட்களையும் எல்லாரையும்
வசப்படுத்துவது). இவையே அவ்வெட்டு சித்திகள். தவமுயற்சியில் நெடுங்காலம்
ஈடுபட்டு வருவோர்க்கு இவ்வெண்சித்திகளில் ஏதேனும் ஒன்று கிட்டும் என்பது
நம்பிக்கை... இச்சித்திகள் பெற்றோரை சித்தர் என்றழைப்பர்... அபிராமிப்
பட்டர் அன்னை அபிராமிதான் இவ்வெட்டு சித்திகளாகக் காணப்படுகிறாள்
என்கிறார். மேலும் சித்திகளை அளிக்கக்கூடிய தெய்வமாகிய பராசக்தியும்
நீயே...பராசக்தி தழைத்தெழும் பரமசிவமும் நீயே... சக்தியும் நீயே...
சிவமும் நீயே... முன்னர் ஒருமுறை அன்னையே சிவத்தைப் படைத்தாள் என்று
பகர்ந்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து சிவத்திலிருந்து சக்தி தழைத்தாள்
என்கிறார். மேலும் அப்பரமசிவத்தை நோக்கித் தவமிருக்கும் தவமுனிகளுக்குக்
கிடைக்கக் கூடிய முக்தியும்... பிறப்பிலிருந்து விடுதலை... பந்த
பாசங்களிலிருந்து, அனைத்துக் கட்டுக்களிலிருந்தும் விடுதலையளிக்கும்
முக்தியும் அன்னை அபிராமியே... அம்முக்திக்கு வித்தும் நீயே.. முக்திக்கு
வித்தாவது யாது?? தவநெறி.. எனவே தவநெறிகளும் நீயே... "வித்தாகி முளைத்து
எழுந்த புத்தியும்..." அத்தவநெறிகளுக்குச் செல்லும்படி முனிவர்களை
அறிவுறுத்திய ஞானமும் அன்னை அபிராமியே... "புத்தியினுள்ளே புரக்கும்
புரத்தை அன்றே" ஞானத்தின் உட்பொருளும் என சகலமும் ஆகி நிற்பது என் தாயான
திரிபுர சுந்தரி அன்னை அபிராமியே... உன்னையன்றி யார்? அன்னையை விடுத்து
அபிராமிப் பட்டருக்கு வேறு யாரையும் தெரியாது.... எல்லாம் அன்னை
அபிராமியே...
"சர்வம் சக்தி மயம்" என்று எளிதில் இப்பாடலுக்கு உரை எழுதிடலாம். எல்லாம்
அன்னை... காணுமிடமெல்லாம், கவனம் உறையுமிடமெல்லாம் அன்னையைக் காண்பது
அபிராமிப் பட்டரின் பக்தி... அன்னை அபிராமியே... இவர் கொண்டிருந்த
பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்கையாவது எங்களுக்கும் அருளிச் செய்வாயாக....
பாடல் முப்பது
அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.
விளக்கம் : அபிராமி அன்னையே... பராசக்தித் திருவுருமாக ஒரே இறைசக்தியாகத்
தோற்றமளிப்பவளே... அவரவர் எண்ணங்களுக்கேற்ப பல்வேறு இறைவுருவுகளிலும்
காட்சியளிப்பவளே... இறைசக்தியை உருவமற்றது என்றென்னும் அன்பர்களுக்கு
அரூபமாக நின்று அருள்பவளே... என் தாயான உமையவளே... பாவக் கடலில்
வீழ்வதற்கு முன்னரே என்னைத் தடுத்தாட்கொண்டாய். என்னை நின் அடிமையாகக்
கொண்டபின்னர் இல்லை என்று சொல்வது உனக்குத் தகுமோ? இனி நான் என்ன
செய்தாலும், நடுக்கடலில் சென்று வீழ்ந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன்
திருவுள்ளமன்றோ....?
"அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய்" பாவம் இது புண்ணியம் எது என்று நான்
அறியாத காலத்தில், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே... நான் பாவக்
கடலில் விழவிருந்த வேளையிலே.... என்னை விழாது தடுத்து உனது பேரருளால்
ஆட்கொண்டாய்... இதனால் நான் பாவக் கடலில் விழுந்து விடவில்லை அம்மா...
உனக்கு ஆட்பட்டு உன்னடிமையாக நான் இருக்கையிலே நான் எப்படி
விழுந்திடுவேன்... "கொண்டது அல்ல என்கை நன்றே உனக்கு?" ஆனால் இன்று
பார்... உன்னை எண்ணி நான் தியானித்திருந்த வேளையில் அறியாது உரைத்த
வார்த்தைகளுக்காக என்னைக் கொடுந்தீயில் தள்ளிவிட இம்மாந்தரெல்லாம்
காத்திருக்கின்றனர்... இதோ இருபத்தொன்பது பாடல்களைப் பாடிவிட்டேன்..
இருபத்தொன்பது கயிறுகள் உரியிலிருந்து அறுக்கப் பட்டுவிட்டன.. இது
முப்பதாவது பாடல். இப்பாடல் முடிந்தபின் இன்னொரு கயிறும் அறுபடும்..
ஆனால் நீ இன்னும் வெளிப்படவில்லையே... நீ என்னை உன் அடிமை இல்லை
என்றுரைக்கப் போகிறாயா? வெளிப்படாது மறைந்தே இருக்கப் போகிறாயா? அவ்வாறு
என்னை மறுதலித்தல் உனக்குத் தகுதியான செய்கையா அம்மா? மாறுபட்ட வழியில்
வேண்டுதல் செய்யும் தந்திரம் இது... நம் பகுதியில் ஆலயத்துக்கு நன்கொடை
சேகரிக்கச் செல்வோர் செய்யும் தந்திரம் போன்றது.. "அண்ணாச்சி... இவ்ளோ
செலவு ஆகும்னு உத்தேசிச்சிருக்கு... உங்கள மாதி பெரியாளுங்கதான் இதத்
தாங்கிக்கிடனும்.. அதனால இதெல்லாம் நீங்க ஏத்துக்கிடாம யார்
ஏத்துக்கிடுவா? உங்களுக்கு மனசில்லாட்டாலும், உங்க அந்தஸ்த
காப்பத்துறதுக்காகவாவது இதச் செஞ்சே ஆவணும்" இப்படிப் பேசும்
பேச்சுக்களுக்கு உடனே பலன் கிடைப்பதுண்டு... தன்னைக் காத்திட அன்னை
விரைந்து வரவேண்டும் என்று அபிராமிப் பட்டரும் இப்படி வேண்டுகிறார்.
"இனி நான் என் செயினும் நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின்
திருவுளமோ" இனி நான் என்ன செய்தாலும், மன்னிக்கவே இயலாத
பெருங்குற்றத்தைப் புரிந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு நடுக்கடலில் சென்று
விழுந்தாலும், காத்துக் கரையேற்றுவது உன் திருவுள்ளம் அல்லவா? மிக நல்ல
வேண்டுதல் இது.. கொடிய பாவங்களிலிருந்து மீள இயலாத அன்பர்கள் இப்பாடலைத்
தொடர்ந்து பாடி வாருங்கள்.. அன்னையே உங்களைக் காத்தருள்வாள். என்னை உன்
அடிமை என்று சொன்னாயே அம்மா... இனிமேல் என்னைப் பாவங்கள் செய்யாது காக்க
வேண்டியது உன் திருவுள்ளம் அல்லவா? அப்படி நான் செய்தாலும் கூட என்னைக்
காத்துக் கரையேற்றவது அன்னையே உனக்குக் கட்மையல்லவா? நான் நடுக்கடலில்
சென்று விழுந்தாலும் கரையேற்றுவது உன் பொறுப்பு அல்லவா?? "கற்றூணைப்
பூட்டிக் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று அப்பர்
பெருமான் ஈசன் மீது நம்பிக்கை வைத்து பாடியதும், ஈசன் அருளால் அக்கற்றூணே
மிதவையாகி அவரை மீட்டு வந்த வரலாறு இவ்விடம் நினைவுக்கு வருகிறது..
இறைவன் மீது நம்பிக்கை... முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென இப்பாடல்
நமக்கு அறிவுறுத்துகிறது.. என்னதான் நடந்தாலும் சரி... நம்மைக் காக்க
அன்னை கண்டிப்பாக வருவாள் என்ற நம்பிக்கையை நம் மனத்துள் விதைக்கும்
பாடல் இது... அன்னையின் பேரருள் எல்லாவித ஆபத்துக்களிலிருந்தும் நம்மைக்
காக்க நம்மோடு இருக்கும்... "என் வாயின் வார்த்தைகள் புறப்படுகிறதுக்கு
முன்னமே நீர் அதை அறிந்திருக்கின்றீர்" புனித விவிலியத்தில் ஒரு கவிஞனது
பாடல் இறைவனைப் பற்றி மேற்கண்டவாறு உரைக்கின்றது. இறைவனை விடுத்து நாம்
எங்கும் செல்ல இயலாது... நம்மை இறைவன் எப்போதும் நம்மோடு இருந்தே
காக்கின்றான்... அபிராமிப் பட்டரின் இப்பாடல் அப்படிப் பட்ட பரிபூரண
நம்பிக்கையை நம் மனத்துள் ஏற்படுத்துகிறது.. எனது பள்ளி
வாழ்க்கையின்போது, ஒரு கிறித்தவ அன்பர் உரைத்த கருத்துக் கதை இது..ஒரு
சிறுவன் தன் தந்தையோடு திருவிழாவுக்குச் சென்றான்.. அங்கேயோ மிக அதிகமான
நெரிசல்.. புதிதாய் முளைத்த பொம்மைக் கடைகள்.. மிட்டாய்க் கடைகள்..
இராட்டினம் என்று வேடிக்கை பார்க்கவே சிறுவனுக்கு ஆர்வம். தந்தை
உரைத்தார் "மகனே. என் கைகளை இறுகப் பற்றிக்கொள்.. கூட்டத்தில் நீ
தொலைந்து விடுவாய்... என்னையே பற்றிக் கொண்டு நட" என்று.. மகனோ.."அப்பா..
நான் உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தால், ஒரு சமயத்தில் கை
வலியெடுத்து விட்டாலும் விட்டு விடுவேன்.. அல்லது வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும் போது என்னை மறந்து விட்டு விடுவேன்.. அல்லது நெரிசலில்
நாம் போகும்போது வலிவிலந்த என் கை கூட்ட நெரிசலில் தானாகவே விலகிவிடும்..
எனவே.. நீங்கள் என் கையைப் பற்றிக் கொள்ளுங்கள்." என்று உரைத்தான். மகன்
கரத்தைத் தந்தை பற்றிக் கொண்டார்..மகனோ எவ்விதக் கவலையுமின்றி வேடிக்கை
பார்த்துக் கொண்டே நடந்தான்... பாதுகாப்பாக இருந்தான்.. "இறைவா நான்
உன்னைப் பற்றிக் கொண்டேன். என்னை வழி நடத்து" என்று வேண்டும்போது, மாயை
நிறைந்த உலகில் நாம் வழி தவறிச் செல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.. இதையே
" இறைவா.. நீயே என் கரத்தைப் பற்றி வழி நடத்து" என்று வேண்டும்போது அவனே
நம் கரங்களைப் பற்றிச் செல்கிறான். எல்லாவித மாயையையும் நாம் எளிதில்
கடந்து விடலாம். பரிபூரண நம்பிக்கையை நாம் அன்னைமேல் வைத்தால் மட்டுமே
இது சாத்தியம்.. அபிராமிப் பட்டருக்கு அன்னை மேல் அப்படிப் பட்ட
நம்பிக்கை இருந்ததை இப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.
"ஒன்றே பல உருவே, அருவே, என் உமையவளே. " உலகமெல்லாம் பரவி நிற்கும் ஒரே
இறைசக்தியான அன்னை பராசக்தியே... அன்பர் விரும்புமிடத்து அவர் விரும்பும்
வடிவில், கலைமகளாக, அலைமகளாக, மலைமகளாக, நான்முகனாக, நாராயணனாக,
முக்கண்ணனாக, ஆனைமுகனாக, ஆறுமுகனாக, என பல்வேறு வடிவுகளிலும்
காட்சியளிப்பவள் நீயே... இறைவனுக்குக் குறிப்பிட்ட உருவமில்லை.. அவன்
அரூபமானவன் என்று உரைப்போரிடத்து நீயே அவ்வருபமாகத் தோன்றுகின்றாய்...
அனைத்தும் என் தாயாகிய உமையவள் நீயே.... என எல்லா சக்திகளும்,
பராசக்தியான அன்னை அபிராமியே.. நீதான் என்றுரைக்கிறார் அபிராமிப்
பட்டர்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..
பாடல் முப்பத்திரண்டு
ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுகேன் ஈசர் பாகத்து நேரிழையே
விளக்கம் : அபிராமி அன்னையே.. ஈசனின் இடப்பாகத்தில் அமர்ந்த என்
அம்மா... நான் கொடிய ஆசையெனும் கடலில் மூழ்கி, கொஞ்சம் கூட இரக்கமற்ற
எமனது கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டப்பட்டு துன்பம் மிக அடைய இருந்தேன்.
என்னை, மணம் வீசும் அழகிய தாமரை போன்ற நின் திருப்பாதங்களை நீயே வலிய
வந்து என் தலை மீது வைத்து ஆண்டு கொண்டாய். உன் பேரன்பினை நான்
என்னவென்று சொல்லுவேன்?
இவ்வுலகில் நாம் பெறும் துன்பங்களுக்கெல்லாம் காரணம் நம் மனத்தில் உள்ள
ஆசையே.. ஆசையை ஒழித்தார் மட்டுமே துன்பமின்றி வாழ இயலும். அன்னை
அபிராமியே நான் ஆசையெனும் கடலில் அகப்பட்டுக் கொண்டேன்.. அவ்வமயம் அங்கே
அருளற்ற - கொஞ்சமும் இரக்கமற்ற கூற்றுவனின் கையிலுள்ள பாசக் கயிறு
என்னைப் பிடிக்க வந்தது. நான் அப்பாசத்தில் அகப்பட்டிருந்தால் என்
துன்பம் இன்னும் மிகுதியாக இருந்திருக்கும்.. அவ்வயமம் எனக்கு அதைப்
பற்றிய எண்ணமே இல்லை.. கண் அது போன போக்கு.. கால் அது போன போக்கு...
என்றே போய்க்கொண்டிருந்தேன்... ஆனால் உனது பேரன்பு என்ன செய்தது
தெரியுமா? "நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு
கொண்ட நேசத்தை என் சொல்லுகேன் " உனது பாதங்கள் எனும் மணம் வீசும் அழகிய
தாமரை மலர்களை நீயே வலிய வந்து என் தலை மீது வைத்தாய்.. உனக்கு
அடியவனாக்கினாய்... அப்பேரன்பை நான் என்னவென்றுரைப்பேன்.. எனக்கு உன்னைத்
தெரியவே தெரியாது.. நீயே உலகைப் படைத்தவள் என்ற ஞானம் எனக்கு இல்லவே
இல்லை... நீதான் தெய்வம் என்ற உணர்வு என்னுள் இல்லவே இல்லை... ஆயினும்
நீயே வலியவந்து உன் திருவடித் தாமரைகளை என் தலைமேல் வைத்தாய். அன்னையே
உன் திருவடித் தாமரைகள் என் தலைமேல் பட்டவுடன் நான் உனக்கு அடியவனானேன்..
நீ என்னை அருளாட்சி செய்து கொண்டாய்... உனது அன்பு அளப்பறியது.. என்ன
காரணத்தாலோ நீ என்மீது இப்படிப் பட்ட அன்பினை வத்து அருட்செய்தாய். அளவிட
இயலாத உன் அன்பினை நான் எவ்வாறு உரைப்பேன்...ஈசனது இடப்பாகத்தில்
அமர்ந்திருக்கும் என் அபிராமித் தாயே......?
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
விளக்கம் : எம் தந்தையான சிவபெருமானின் சித்தமெல்லாம் குழையச்
செய்யக்கூடிய மணம் வீசும் குவிந்த திருமுலைகளையுடைய இளமையான
கோமளவல்லியே... என் அபிராமி அன்னையே... நான் செய்யும் தீய செயல்களுக்காக
எனைத் தண்டிக்க காலதேவன் வந்து அழைக்கும் போது.. அன்னையே என உன்னைத் தான்
நான் அழைப்பேன்.. நீயும் ஓடி வந்து அஞ்சாதே மகனே என்பாய்.
முன்னர் ஒரு பாடலில் தன்னை அழைக்க எமன் வந்திடும் வேளையில் அம்மையும்
அப்பனுமாகத் தனக்குக் காட்சியளித்தருள வேண்டும் என்று வேண்டிய அபிராமிப்
பட்டர் இவ்விடத்து ஓடிவந்து எம்மை அஞ்சாதே என்று சொல் தாயே என்கிறார்.
"இழைக்கும் வினை வழியே அடும் காலன் எனை நடுங்க அழைக்கும் பொழுது"
யாருக்கு அஞ்சுகிறோமோ இல்லையோ... மரண தேவனுக்கு எல்லோரும் அஞ்சுகிறோம்.
நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகளுக்கேற்ப காலதேவனும் நமக்கு மரண
நேரத்தில் தண்டனைகளைத் தருகின்றான். எனது கர்மங்களுக்கேற்ப கொடுமையான கால
தேவன் என்னை நடுங்கச் செய்ய அழைக்கும் போது... என்னை மரணம் நெருங்கும்
போது... "வந்து அஞ்சல் என்பாய்" நீ வந்து அஞ்சாதே என்பாய். "அத்தர்
சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே" என் தந்தையான
ஈசனின் சித்தத்தையெல்லாம் குழைப்பவளே... மணம் வீசும் சந்தனங்களைப் பூசிய
குவிந்திருக்கக் கூடிய உனது அழகிய திருமுலைகளால் என் தந்தையின்
சித்தத்தைக் குழைக்கும் இளமையான கோமளவல்லியே.... அபிராமித்
தாயே...."உழைக்கும் போது உன்னையே அன்னையே என்பன் ஓடி வந்தே" காலன் என்
வாயில் வந்து நிற்கின்றான். என் மனம் அஞ்சுகிறது. என் உயிர் உடலோடு
கொண்ட நட்பைப் பிரிய இயலாத வ்ண்ணம் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.
எக்கணமும் விட்டுப் பிரியலாம் என்ற நிலை... இவ்வேளையில் நான் உன்னையே
நினைத்து அன்னையே என்பேன். நீ ஓடி வந்து என்னை நோக்கி அஞ்சாதே மகனே
என்று என் மரண பயத்தைப் போக்குவாய்.
மரணவேளை மிக முக்கியமானது.. எதிர்பாராமல் மரணமடைபவர்களை விடுங்கள்.
வயதாகி மரணப் படுக்கையில் விழுந்த பெரியோர்களிடம் சென்று ஆசி வாங்குவது
நம் பகுதி மக்கள் பழக்கம். அச்சமயங்களில் அவர்களின் செவிகளிலும்
இறைவனுடைய திருநாமம் விழும்படிப் பார்த்துக் கொள்வார்கள். ஒரு வேடிக்கைக்
கதை உண்டு. ஒரு கொடியவன் தான் மரணமடையும் வேளையில் தனது இளைய மகனான
கோவிந்தனை அவன் பெயர் சொல்லி அழைத்தானாம். கோவிந்தா என்று மரண தருவாயில்
கூவிய படியால் அவனது ஆன்மா திருவைகுண்டம் சென்றடைந்ததாம். அழியும்
வேளையில் அறியாது அழைத்த ஒருவனுக்கே இறைவனது பெருங்கருணை
கிடைக்கிறதென்றால், அவனை முழுமனதோடு அழைப்பவ்ர்களுக்கு எப்பேர்ப்பட்ட
புண்ணியம் கிட்டும்? இவ்விடம் அவள் பெயரைச் சொல்லி அழைப்பேன் என்றும்
பட்டர் கூறவில்லை... 'அம்மா.." இது நாம் விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும் பயமேற்படும்போது நம் வாயினின்று புறப்படும்
வார்த்தை... அபிராமி அன்னையே... நான் மரணநேரத்தில் என்னை அறியாது அம்மா
என்றழைத்தால்... அது வேறு யாரையோ குறிப்பிடும் சொல் அல்ல... நான்
அழைப்பது உன்னைத்தான்... என்பதைப் புரிந்து கொள் தாயே என்று முன்
கூட்டியே சொல்லி வைக்கிறார் அபிராமிப் பட்டர்.
பாடல் முப்பத்து நான்கு
வந்தே சரணம் புகும் அடியாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொற்
செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே
விளக்கம் : தன்னை நோக்கி வந்து சரணம் என்று அடிபுகும் அன்பர்களுக்கு
அன்போடு விண்ணுலகம் தரும் அபிராமி அன்னை தங்கியிருக்கும் இடங்களாவன...
நான்முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனின் நான்கு முகங்களாக, கலைமகளாக...
தேன் ஊறும் மலர்கள் கொண்ட மாலைகளையும் பெரிய மாணிக்கங்களையும் தன்
மார்பின் மீது அணிந்த திருமாலின் மார்பாக... திருமகளாக... ஈசனின் ஒரு
பாகமாக... மலைமகளாக... பொன்னிறத்துடன் கூடிய சுவைமிகுந்த தேனூறுகின்ற
தாமரை மலரிலும், விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிடத்திலும்,
சந்திரனிடத்திலும் தங்கியிருக்கின்றாள்..
எங்கும் நிறைந்த அன்னை பராசக்தியை இவ்விடம் உள்ளாள் என்று குறிப்பிடத்
தேவையில்லைதான். ஆயினும் உயரிய இடத்து உன்னைக் காணும்போது அவ்விடத்தில்
நீ தங்கியிருப்பதை எங்ஙனம் உரையாமல் இருப்பது? நீயே கதி என்று உன்னைச்
சரணமடையும் உன் அடியவர்களுக்கு நீ விண்ணுலகில் இடமளிக்கிறாய். அதுவும்
மிகுந்த கருணையோடும் அன்போடும்... அவர் செய்த தீவினைகள் எல்லாம் உன்
பரிவின் முன் பலனற்றுப் போய்விடுகின்றன. நீ எங்கெங்கே இருக்கிறாய்...?
"சதுர் முகமும்" நான்முகங்களைக் கொண்ட பிரம்மதேவனின் நான்கு
முகங்களிலும்... அவரது படைப்புத் தொழிலாக.... கலைமகளாக... "பைந்தேன்
அலங்கல் பருமணி ஆகமும..." நறுந்தேன் ஊறக்கூடிய அழகிய மலர்களையும் , பெரிய
மாணிக்கங்களையும் தன் மார்பிலே அணிந்த திருமாலின் திருமார்பிலும்...
அலைமகளாக... "பாகமும்" ஈசனது இடப்பாகத்திலும்... மலைமகளாக... "பொற்
செந்தேன் மலரும்" பொன்னிற நறுந்தேனைக் கொண்டிருக்கும் தாமரை மலரிலும்...
"அலர் கதிர் ஞாயிறும்" விரிந்த கதிர்களைக் கொண்ட சூரியனிலும்... உனது
கதிர்கள் எங்கள் மனத்தில் உள்ள அறியாமையைப் போக்குகின்றன தாயே...
"திங்களுமே" சந்திரனிடத்திலும்... நீ தங்கியிருக்கின்றாய் தாயே.,..உனது
கருணை சந்திரனைப் போன்று குளிர்ச்சியானது தாயே....
விளக்கம் : அபிராமி அன்னையே... திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும்
கண்களையுடைய பாம்புப் படுக்கையின்மேல் துயில் கொள்ளும் பரம்பொருளே...
பிறைச் சந்திரனின் மணம் வீசும் உனது சிறிய பாதங்களை எந்தன் தலைமேல் வைக்க
நாங்கள் என்ன தவம் செய்தோம்...? எண்ணுதற்கியலாத அமரர்களுக்கும் இந்த
பாக்கியம் கிடைக்குமோ?
"திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி" பிறைச் சந்திரனின் மணம் வீசும்
சிறிய பாதங்கள்... அன்னை அபிராமியைக் குழந்தையாகக் காண்கிறார் அபிராமிப்
பட்டர். அபிராமிப் பெண்ணின் சிறிய திருப்பாதங்கள் பிறைச் சந்திரனின் மணம்
வீசும் தன்மை படைத்தவை.. (எங்கள் சுப்பிரமணியபுரத்தில் அருளாட்சி
செய்யும் அன்னை ஸ்ரீ முத்தாரம்மன் பலருக்கும் சிறு குழந்தை வடிவில்
காட்சியளித்துள்ளாள்.) பெருமை பெற்றுள்ள அன்னையின் சிறிய திருப்பாதங்கள்
என்ன செய்கின்றனவாம்?? "சென்னி வைக்க" எந்தன் தலைமீது வைக்கின்றாள்..
உனது அழகிய திருப்பாதங்களை எங்கள் தலைமீது வைக்க நாங்கள் என்ன தவம்
செய்து விட்டோம்?? என்று வியந்து பாடுகிறார்... அவளைத் தன் தலைமேல்
ஏற்பது... ஆனால் அபிராமிப் பட்டரைப் பொறுத்தவரையில் அன்னையே அவரைத்
தேடிவந்தாள்... அன்னையவள் தானே வலியவந்து தனது பொற்பாதங்களை அபிராமிப்
பட்டரின் தலைமீது வைத்ததாக முன்னரொரு பாடலில் குறிப்பிட்டார் அல்லவா??
இவ்விடத்து அவள்தனது திருவடிகளைத் தன் தலைமீது வைக்க என்ன தவம் செய்தேன்
என்று வியந்து பாடுகிறார்.. எண்ணிக்கையிலடங்காத அமரர்களுக்கும் இவ்வரிய
பாக்கியம் கிட்டியதில்லை... ஆனால் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் என்ன
தவம் செய்தேன்!... "தரங்கக் கடலுள் வெம் கண் பணி அணை மேல் துயில் கூரும்
விழுப்பொருளே " திருப்பாற்கடலில் வெப்பம் உமிழும் கண்கள் படைத்த
ஆதிசேடன் என்னும் பாம்பையே படுக்கையாகக் கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும்
பரம்பொருளே.... இதென்ன விந்தை.... ? திருப்பாற்கடலுள் பாம்பணை மேல் பள்ளி
கொண்டிருப்பவன் அந்தத் திருமகளைத் தன் திருமார்பில் கொண்ட திருமால்
அல்லவா?? ஆனால் ஏன் பட்டர் அன்னையை அவ்வண்ணம் விளிக்கின்றார்? என்ற வினா
எழுகின்றது... அன்னை ஆதிபராசக்தியே வைஷ்ணவி என்னும் திருநாமத்தோடு
திருமாலின் அம்சமாகக் காட்சியளிக்கின்றாள்..என்னும் விடையை அன்னை
நமக்குத் தந்தருளுகின்றாள்...அன்னை தானே திருமாலாகவும்
காட்சியளிக்கின்றாள்..
பாடல் முப்பத்தாறு
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும்
மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே
விளக்கம் : அழகிய தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் அம்பிகையே... அபிராமி
அன்னையே... நீயே பொருளாகவும் இருக்கிறாய். அப்பொருளால் மாந்தர் பெறும்
போகங்களாகவும் இருக்கின்றாய்.. அப்போகத்தால் அவர் மயங்கும் மயக்கமாகவும்
இருக்கின்றாய். அம்மயக்கத்தின்பின் உண்டாகும் தெளிவாகவும் இருக்கின்றாய்.
என் மனத்தில் வஞ்சகம் எனும் இருளை இல்லாது நீக்கிய பேரொளியான உனது
பேரருள் என்னவென்று என்னால் அறியமுடியவில்லை...
அன்னையின் பேரருள் அளப்பறியது... உலக மாந்தர்க்கு வேண்டிய
பொருட்செல்வத்தை அன்னைத் தந்தருளுகின்றாள். அன்னையே அப்பொருட்செல்வமாக
நிற்கின்றாள். ஆனால் நல்வழியில் செல்லவேண்டிய மனமானது பொருட்செல்வம்
அதிகமானதும் போகத்தை நாடுகின்றது.. அன்னையே அப்போகமாகவும் நிற்கின்றாள்.
போகம் அதிகமாகும் போது மனம் மாயையில் சிக்கி மயங்குகின்றது... அச்சமயம்
அன்னையே அம்மாயையாக நிற்கின்றாள். மயக்கத்தின் பின் தெளிவு உண்டாகிறது...
அம்மையே அத்தெளிவாகவும் இருக்கின்றாள்... நோயும் அவளே.. நோய்க்கு
மருந்தும் அவளே... இதென்ன விந்தை...! பொருட்செல்வத்தைக் கொடுத்து,
போகத்தைக் கொடுத்து, மாயையில் சிக்கவைத்துப் பின்னர் தெளிவினைத்
தருவதற்கு, முதலிலேயே அவள் தெளிவினைத் தந்தால் என்ன? எனும் வினா
இவ்விடத்து எழுகின்றது.. பட்ட பின்னர் வரும் ஞானமே சிறந்த ஞானம் என்பது
ஆன்றோர் வாக்கு... எனவே பொருளைக் கொடுத்து இறுதியில் அருளைக் கொடுத்துத்
தெளிவாக்குபவள் அன்னை அபிராமியாக நிற்கும் பராசக்தி... .
"என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன்
அருள் ஏது அறிகின்றிலேன்" உனது அருள் என்னும் பேரொளியால் என் மனத்தில்
இருந்த வஞ்சனை என்னும் இருள்... அல்லது என் மனத்தை வஞ்சித்த மாயை என்னும்
இருள்... இல்லாது போனது... அப்படிப்பட்ட உனது பேரருள் என்ன என்பது
எனக்குப் புரியவில்லையே அம்மா... மனித மனம் பல்வேறு நிலைகளில்
மாற்றமடைகின்றது. பொருளிருக்கும் மாந்தரிடத்து அதைத் தக்கோர்ர்குத்
தரவேண்டுமென்ற அருள் இருப்பதில்லை... இன்னின்னாருக்கு இதைத் தந்தருள
வேண்டும் என்ற மனம் படைத்த மாந்தரிடம் அதற்குத் தகுந்த பொருள்
இருப்பதில்லை... எவ்விடத்து பொருட்செல்வமும், அருட்செல்வமும் கூடி
வருகின்றதோ... அவ்விடத்து அன்னையின் பேரருள் உள்ளதென்று உலகம் அறியும்...
மனத்தை அடக்க வழி கற்றோரே பெரியோர் ஆவர்... மனம் அடங்குவதில்லை... ஆனால்
அது அன்னையின் பேரொளியால் நிரம்பும்போது அவ்விடத்திருந்த மாயை என்னும்
இருள் அகன்று போகின்றது. அன்னையே நம்மை அருளாட்சி செய்கின்றாள்... அன்னை
நம்மை ஆண்டு கொண்ட பின்னர் மாயை நம்மை அண்டிடுமோ?? என் மனத்தை உனது
அருளெனும் பேரொளியால் நிரப்பிய அன்னையே... உந்தன் அருள்யாது??? பொருளா??
பொருள் தந்திடும் போகமா?? அப்போகத்தால் விளையும் மருளா?? மருளழியும் வேளை
வரும் தெளிவா?? என்னால் அறியமுடியவில்லையே..... அழகிய தாமரை மலரின் மீது
வீற்றிருக்கும் அம்பிகையே... என் அபிராமி அன்னையே.....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்...
அம்மையார் கீதா அவர்களுக்கு... தாங்கள் லலிதாம்பிகையை பற்றி
எழுதியுள்ளதாக உரைத்தார்கள்..எனவே அபிராமி அந்தாதியிலும் தங்களுக்கு
மிகச்சிறந்த தெளிவு உண்டென நம்புகிறேன்... நான் மீண்டும் உரைப்பது இது
ஒன்றேதான்... அடியேனின் சிற்றறிவுக்கு எட்டியவரை மட்டுமே விளக்கங்கள்
தருகின்றேன்... இவற்றில் பிழையிருந்தால் மன்னித்து அவற்றைத் திருத்தி
வழிநடத்தும் பொறுப்பு தங்களுக்கு உண்டு என்று நம்புகின்றேன்... நன்றி....
விளக்கம் : அபிராமி அன்னையே.. எட்டுத்திசைகளையும் ஆடைகளாக அணியும், எல்லா
செல்வங்களையும் உள்ளடக்கிய சிவபெருமானின் இடப்பாகம் சேர்பவளே... நீ உன்
திருக்கரங்களில் அணிவது கரும்பும் மலர்களும்... தாமரை போன்ற உன் அழகிய
திருமேனிக்கு நீ அணிவது வெண்ணிற முத்து மாலைகள். விஷம் நிறைந்த நாகத்தின்
படம் போன்றிருக்கும் உன் இடையில் நீ அணிவது பல்வித மாணிக்கங்களால் ஆன
மேகலையும், பட்டும்.
இந்த பாடலில் அன்னை அபிராமி அணியும் அணிகலன்கள் பற்றிக் குறிப்பிடப்
பட்டுள்ளது.. கன்னல் எனும் பதம் கரும்பினைக் குறிப்பதாகும். அன்னையே.. நீ
உன் திருக்கரங்களில் அணிவது இனிமை தரும் கரும்பும் மணம் வீசும்
மலர்களும்... கரும்பினாலான வில்லைத் தமது ஆயுதங்களாகக் கொண்டவர்கள்
இருவர்... அன்னை ஆதிபராசக்தியும், மன்மதனுமாகிய இவர்களே... அன்னையானவள்
தனது கரத்தில் கரும்பு வில்லையும், ஐந்து மலர்க்கணைகளையும் வைத்திருப்பது
எதற்காக??? அன்னையின் கையிலுள்ள கரும்பு வில் நம் மனத்தினைக்
குறிக்கின்றது. மனித மனம் இனிமையானது. மேலும் இந்திரியங்களுக்காக
எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுக்கக் கூடியது.. இப்படிப்பட்ட நமது மனது
அது போன போக்கில் வளைந்து கொண்டிருந்தால் என்ன நடக்கும்? ஐம்புலன்களின்
கட்டுபாட்டில் மனம் இயங்கத் தொடங்கிவிட்டால் சிற்றின்பத்தில் திளைத்து
நாம் மானிடராய்ப் பிறந்ததற்கான காரணத்தை மறந்து போவோம்... அன்னையே... என்
மனத்தை உன் கரங்களில் சேர்ப்பிக்கிறேன்.. உன் இச்சைப்படி அதை வளைத்துக்
கொள்... என் ஐம்புலன்களை ஐந்து மலர்க்கணைகளாக உனது கரத்திலேயே
சமர்ப்பிக்கிறேன்.. நீயே அவற்றை உன் இச்சைப்படி ஏவு... என்ற
வேண்டுதல்களுக்காகத்தான் அன்னை தனது கையில் கரும்பு வில்லையும்,
மலர்க்கணைகளையும் தரித்துள்ளாள். மாறாக நம் மனம் மன்மதனின் கைக் கரும்பாக
மாறி விட்டால் என்னவாகும்?? மனம் இந்திரிய சுகங்களில் ஈடுபட்டு தன்னிலை
மறந்து போகும்.. எனவே நம் மனத்தை அன்னையின் கையில் ஒப்படைப்போம்...
"கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண் முத்துமாலை" அழகிய தாமரை போன்ற நின்
திருமேனியில் நீ அணிவது வெண்ணிற முத்துமாலை... முத்துக்களால் ஆன மாலைகளை
அன்னை அபிராமி தனது திருமேனியில் அணிவது எதற்காக? முத்துக்களைப் போன்ற
உயர்ந்த மனத்தவனாக இரு என்று நம்மை அறிவுறுத்துவதற்காகத்தான்.
"விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும்" விஷங்கொண்ட
நாகத்தின் படத்தை ஒத்திருக்கும் உனது இடையில் நீ பல்வேறு மாணிக்கங்களாலான
மேகலையையும் பட்டையும் அணிந்திருக்கின்றாய்...
"எட்டுத் திக்கே அணியும் திரு உடையானிடம் சேர்பவளே. " நீ விலைமதிப்பற்ற
அணிகலண்களை அணிந்திருக்கிறாய்... ஆனால் எல்லா செல்வங்களையும்
கொண்டிருக்கும் ஈசனோ எட்டுத்திக்குக்களையே தன் ஆடையாகக்
கொண்டிருக்கின்றான்.. அந்த ஈசனது இடப்பாகத்தில் சேரும் என் அபிராமி
அன்னையே.... நீயோ சகல ஐஸ்வர்யங்களையும் காண்பிக்கும் உயர்ந்த அணிகலன்களை
அணிந்திருக்கின்றாய்.. ஆனால் எல்லா செல்வங்களையும் உடையவனான (உன்னையும்
சேர்த்து) ஈசன் மிக எளிமையான தோற்றம் கொண்டவனாக இருக்கின்றான். நீ அவனது
இடப்பாகத்தில் சேர்ந்திருக்கின்றாய்....
பாடல் முப்பத்தெட்டு
பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும் பனி முறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே
விளக்கம் : எங்கள் அன்னை அபிராமி பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற
சிவந்த வாயினை உடையவள். முத்து போன்ற பற்கள் தெரியும் படியான குளிர்ச்சி
தரும் புன்னகை புரிபவள். தனது மெல்லிய இடை நோகும்படியான திருமுலைகளைக்
கொண்டவள்.. இவற்றின் துணையாகக் கொண்டு எங்கள் ஈசனாம் சங்கரனைத் துவண்டு
போகும்படி செய்தவள்... அவளைப் பணிந்தால் அமரலோகம் ஆளலாம்.. உலகத்தோரே...
எங்கள் அன்னையைப் பணியுங்கள்...
அன்னையின் பேரழகினை இப்பாடலில் அழகுற வர்ணனை செய்கிறார் அபிராமிப்
பட்டர். அன்னையின் பேரழகு சங்கரதேவனின் தவத்தைக் கலைத்ததாம்.. முன்னரொரு
பாடலில் அபிராமிப் பட்டர் என்ன உரைத்தார்? எல்லாவிடத்தும் வெற்றி பெறும்
மன்மதனின் வெற்றியெல்லாம் தோல்வியுற்ற சங்கரனும் உன்னிடத்துத்
தோல்வியுற்றான் என்று அன்னையைத் துதித்த அபிராமிப் பட்டர் இவ்விடத்து...
"எங்கள் சங்கரனைத் துவளப் பொருது" என்கிறார், எங்கள் தந்தையான சங்கரனைத்
துவளச்செய்தாய்...அவன் தவத்தைக் கலைத்தாய்... எவற்றின் துணையைக் கொண்டு
இதைச் செய்தாய்??? பவளக் கொடியில் பழுத்த பழம் போன்ற சிவந்த இதழ்கள்."பனி
முறுவல் தவளத் திருநகை" முத்து போன்ற பற்கள் தெரியும்படியான
குளிர்ச்சியான புன்னகை.... "துடியிடை சாய்க்கும் துணை முலை" மெல்லிய
இடையைக் கீழே விழச்செய்யும் பாரமான திருமுலைகள்... இவற்றின் துணையோடு
எங்கள் ஈசனை துவண்டு போகச் செய்தாள் எங்கள் அன்னை அபிராமி... "அவளைப்
பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே" அவளைத் தொழுங்கள் உலகத்தாரே.... ஏன்
தெரியுமா அவளைத் தொழுதால் அமரலோகம் ஆளும் பேறு பெறலாம். எனவே... அனைவரும்
எங்கள் அன்னை அபிராமியைத் தொழுங்கள்.....
என்று உலகத்தாருக்கு அன்புக் கட்டளையிடுகிறார் அபிராமிப் பட்டர்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி...
பாடல் நாற்பது
"வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. "
விளக்கம் : அழகிய ஒளிபொருந்திய நெற்றிக் கண்ணையுடைய எங்கள் அபிராமி
அன்னையை.... அமரர்கள் எல்லோரும் வந்து வணங்கிப் போற்றுதற்கு விரும்பும்
எங்கள் பெருந்தலைவியயை... அறியாமை நிறைந்த நெஞ்சத்தார் காணுதற்கு இயலாத
கன்னியை... காணவேண்டும்.. அன்பு கொள்ள வேண்டும் என்று என் மனத்தில்
உதித்த எண்ணம் என் முற்பிறப்பில் செய்த புண்ணியமாகும்..
பூமிப்பெருவெளியில் எத்தனையோ கோடி மாந்தர்கள் பிறக்கின்றனர்..
இறக்கின்றனர்.. மாந்தரல்லாத பல்வேறு உயிரினங்களும் வந்து வாழ்ந்து
மறைகின்றன... ஆனால் அன்னை அபிராமியைக் காண வேண்டும்.. வணங்கவேண்டும்..
அவள் மேல் அன்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எத்தனை பேருக்கு எழும்?
வெகு சிலருக்கு மட்டுமே... அவர்கள் யார்? முற்பிறவியில் புண்ணியம்
செய்தோர்... அன்னையைக் காண்பதற்கும், அவளை வேண்டுதற்கும்.. அவள் மேல்
அன்பு செய்தலுக்கும் அபிராமிப் பட்டரால் இயன்றது.. அதற்குத் தான் செய்த
முற்பிறவிப் புண்ணியமே என்று இவ்விடத்து உரைக்கிறார்.."வாள்-நுதல்
கண்ணியை" ஒளி பொருந்திய அழகிய நெற்றிக் கண்ணையுடைய அபிராமியன்னையை....
இதென்ன விந்தை.... ? அப்பன் ஈசனுக்கல்லவா நெற்றிக்கண் உண்டு.. இவரென்ன
இவ்வண்ணம் பாடுகிறாரே...? அம்மையும் அப்பனும் ஒரே பரம்பொருளல்லவா??
அம்மையைக் குறித்தால் அது அப்பனையும், அப்பனைக் குறித்தால் அது
அம்மையையுமன்றோ குறிக்கும்?
"விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை"
அமரர்களெல்லாம் வந்து வேண்டி துதி செய்ய எண்ணங்கொண்டனர்.. யாரை?? எங்கள்
பெருமாட்டியை... பெருந்தலைவியை... அன்பு செய்யும் அபிராமியை.... "பேதை
நெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை" அறியாமை இருள் குடிகொண்ட
பேதை நெஞ்சத்தால் காண்பதற்கு இயலாத கன்னியை.... அன்னை மேல் நாம் அன்பு
கொண்டால் நம் மனத்திருந்த அறியாமை எனும் இருள் அகலும்..அவ்விடத்து நாம்
அன்னைத் தெளிவுறக் காணும் பாக்கியம் பெறலாம்... கன்னியை... என்றும்
கன்னித்தன்மை கொண்ட எங்கள் அபிராமி அன்னையை...."காணும் - அன்பு பூணுதற்கு
எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே. " அப்படிப்பட்ட எங்கள்
அபிராமித் தாயை... காணவேண்டும், அவள் பால் அன்பு செய்ய வேண்டும் என்ற
எண்ணத்தை என் மனத்தில் விதைத்தது யார்? நான் உன்னைத் தேடிவந்தேனா?? நீயே
என்னைத் தேடி வந்தாய்.. வலிய வந்து உன் திருப்பாதங்களை எந்தன் தலைமீது
வைத்தாய்... அவ்வழகிய திருவடிகளால் என்னை ஆண்டு கொண்டாய்... எனக்குக்
காட்சியுமளித்தாய்... என்மேல் மிகுந்த அன்பையும் கொண்டாய்... உன்னைக் காண
வேண்டும், தொழவேண்டும், அன்பு செய்ய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை என்
மனத்துள் விதைத்தது யார்?? நான் முற்பிறவியில் செய்த புண்ணியம்தான்
தாயே...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. அடுத்த பாடலானது என்
மனத்துக்கு மிகவும் பிடித்த பாடல்.. குணா என்ற திரைப்படத்தைக் காணும்
வாய்ப்பு கிட்டிய போது கமல்ஹாசனது குரலில் அப்பாடலைக் கேட்டேன்.. மதி
மயங்கினேன்.. பின்னரே அபிராமி அந்தாதியைக் கற்கும் எண்ணம் எனக்குத்
தோன்றியது... அதைத் தொடர்ந்து வரும் பாடலும் இளையராஜாவின் இசையில்
அத்திரைப்படத்தில் இடம்பெற்றது.
மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
விளக்கம் : புதிதாய் மலர்ந்த குவளைப்பூவைப்போன்ற கண்களையுடை அன்னை
அபிராமியும், சிவந்த மேனியையுடைய அவளது கணவரான சிவபெருமானும் இணைந்து
நம்மைக் காணவேண்டும் என்ற காரணத்திற்காக இங்கே வந்து தமது அடியார்களின்
கூட்டத்தில் நம்மை நடுவே இருக்கச் செய்து, தமது திருவடித் தாமரைகளை நம்
தலைமீது நிலை நிறுத்திடவே என்ன புண்ணியம் செய்திருக்கின்றாய் என் மனமே...
நேற்றையதினமே இன்றைய பாடல்கள் பற்றிய சிறு குறிப்பினைக்
கொடுத்திருந்தோம். "தனந்தரும்" எனத்துவங்கும் பாடலும், "ஆத்தாளை எங்கள்
அபிராம வல்லியை" எனத்துவங்கும் நூற்ப்யனும் மட்டுமே மனப்பாடச்
செய்யுளாகக் கற்றிருந்த நமக்கு, ஒருமுறை "குணா" எனும் திரைக்காவியத்தைக்
காணும் வாய்ப்பு கிட்டியது.. எப்பொழுதும் அபிராமி அபிராமி என புலம்பும்
ஒரு கதாபாத்திரத்தை திரு. கமல்ஹாசன் அவர்கள் மிகச் சிறப்பாகச்
செய்திருந்தார்.. அத்திரைக்காவியத்தில்தான் இப்பாடலை அவர் தனக்கேயுரிய
பாணியில் சிறப்பாகப் படித்திருப்பார்.. பாடலின் இறுதியில் அவர்
ஒற்றைக்காலில் நிற்கும் காட்சி இன்றும் கண்களை விட்டு அகலாதது விந்தை...
அச்சமயம்தாம் என் மனத்தில் இதென்ன இத்தனை அழகிய கவிதை... யார் எழுதியது?
என்ற வினா எழுந்தது..என்னவென்று நோக்குங்காலை அபிராமிப் பட்டரின்
கவிதைகள் என்பது புரிந்தது.. பின்னரே அபிராமி அந்தாதியை முழுதும்
கற்றோம்... சரி பாடலுக்கு வருவோம்..
"புதுப் பூங் குவளைக் கண்ணியும்" புதிதாய் மலர்ந்த குவளை மலரையொத்த
கண்களையுடை அன்னை அபிராமியும்... "செய்ய கணவரும்" சிவந்த மேனியையுடைய
அவளது கணவரான சிவபெருமானும் "கூடி" இணைந்து "நம் காரணத்தால்" நம்மைக்
காணவேண்டும்.. நம்மைக் காக்க வேண்டும்... நம்மை அருளாட்சி செய்ய
வேண்டும்... நம்மைத் தன் மகவு என்ற உண்மையை உலகுக்குணர்த்த வேண்டும்..
என்ற காரணத்தால்... "நண்ணி இங்கே வந்து" மிகவும் விரும்பி இங்கே
வந்து... நம் பக்தி சிறப்பானதாக இருந்தால் அம்மையும் அப்பனும் நம்மைக்
காண்பதற்காக மிகவும் விரும்பி ஓடி வருவார்கள்... அபிராமிப் பட்டரின்
பக்தி அளப்பரியது.. எனவேதான் அவரைக் காண தந்தையும் தாயும் இணைந்து ஓடி
வந்தனர்... "தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி.." நம்மைத் தமது
அடியார்களின் நடுவிருக்கச் செய்து... "நம் சென்னியின் மேல் பத்ம பாதம்
பதித்திடவே" நமது தலையின் மீது தங்களின் திருவடித் தாமரைகளை நிலை
நிறுத்திடவே.... எவ்வளவு பெருமை மிகுந்த காரியம் இது?? கீழோன்... மானிடப்
பிறவி.... கடையேன்... பித்தனென்று ஊரும் உலகும் தூற்றும் பண்பு
படைத்தவன்... இப்படிப் பட்ட என்னை, அம்மையும் அப்பனும் விரும்பி இங்கே
வந்து தமது அடியார்களைக் கூடி வரச் செய்து.. அவர்களின் நடுவே நம்மை
நாயகமாக நிறுத்தி... எந்தன் தலைமீது தங்கள் திருவடித் தாமரைகளை நிலை
நிறுத்தினரே...இதற்கு... "புண்ணியம் செய்தனமே-மனமே. " நீ என்ன புண்ணியம்
செய்து விட்டாய் எந்தன் மனமே....
பாடல் நாற்பத்திரண்டு
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின்
படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பரிபுரையே
விளக்கம் : உலகத்தோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நற்கொள்கையைக் கொண்ட
எங்கள் நாயகியே.... நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலையுடையவளே...
அபிராமி அன்னையே...குளிர்ச்சியான சொற்களையுடைய அபிராமி அன்னையே...
வேதங்களை சிலம்புகளாகத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே.... தகுந்த
இடத்தைக் கொண்டு பெருமிதத்தால் விம்மும் ஒன்றுக்கொன்று இணையாக இறுகியும்
மென்மையால் இளகியும் முத்துமாலையை அணிந்துமிருக்கும் உனது கொங்கை மலைகள்,
வலிமை மிகுந்த நெஞ்சத்தைக் கொண்ட சிவபெருமானின் நெஞ்சத்தையும்
ஆட்டுவிக்கின்றன..
இந்த பாடலும் இளையராஜாவின் இசையில் குணா திரைக்காவியத்தில் இடம்
பெற்றது... யேசுதாசின் இனியகுரலில் வாலியின் வைரவரிகளைக் கேட்டுக்
கொண்டிருக்கும் போது இடையே பாடற்குழுவினர் பாடும் பாடலாக இணைத்திருப்பார்
இளையராஜா... இந்தப் பாடலும், ஐம்பதாவது பாடலான "நாயகி நான்முகி"
எனத்துவங்கும் பாடலும் இளையராஜாவின் இசையில் கேட்பதற்கு மிக அருமை..
"கொள்கை நலம் கொண்ட நாயகி" நலமிக்க கொள்கைகளைக் கொண்ட எங்கள் தலைவியே...
அபிராமி அன்னையே... அன்னையின் நோக்கமெல்லாம் அன்பரைக் காத்தருள
வேண்டுமென்ற நற்கொள்கைகளே... அன்னையின் பெருமைகளைத் திரைப்படங்கள்
வாயிலாகச் சொல்கிறோம் என்று ஒரு இயக்குனர் (யார் என்பதைப் புரிந்து
கொள்க) எடுத்த திரைப்படங்களைக் காணும் போது அன்னையின் பெயரை இப்படி ஏன்
கேவலப் படுத்துகிறார் என்று கோபம் எழும்... உலகத்தைக் கட்டியாளும்
அன்னையை எந்த ஒரு தீயசக்தியாலும் எதிர்த்து நிற்க இயலாது என்பதே
தீர்க்கமான உண்மை... நாம் அன்னைமீது பக்தி கொண்டு நற்செயல்கள்
புரிந்துவரின் எந்த வித தீய சக்தியாலும் நம்மை நெருங்க இயலாது... இது
சத்தியம்... ஆனால் அன்னையை ஒரு தீய சக்தி தடுக்க நினைப்பது போன்ற
காட்சிகள்.. அவள் எதுவுமே செய்ய இயலாதவள் போல் அமர்ந்த காட்சிகள் எல்லாம்
மனத்தை மிகவும் வேதனை செய்யக்கூடியவை... சரி நமக்கு அது வேண்டாம்...
பாடலைக் கவனிப்போம்...அன்னையே... மக்களைக் காத்தருள வேண்டும் என்ற
நல்லதொரு கொள்கையைக் கொண்ட எங்கள் தலைவியே.... "நல் அரவின் படம் கொண்ட
அல்குல்" நல்ல பாம்பின் படத்தைப் போன்ற அல்குலைக் கொண்டவளே... "பனி மொழி
" குளிர்ச்சியான சொற்களைப் பேசுபவளே... அன்னையானவள் தம் மக்களான
நம்மிடத்துப் பேசும் பேச்சுக்கள் மிக இதமானவை... மிகுந்த அன்போடும்,
அக்கறையோடும் பேசும் பேச்சுக்கள் குளிர்ச்சியானவை..."வேதப் பரிபுரையே"
வேதங்களை காலில் சிலம்பாக அணிந்தவளே... இப்பதம் அன்னையானவள் வேதங்களின்
தலைவி என்பதைக் குறிக்கும்...
"கொங்கை மலை.." உனது கொங்கை மலை.. "இடங்கொண்டு விம்மி..." தகுந்த
இடத்தினைப் பெற்று அப்பெருமிதத்தால் விம்மி... "இணை கொண்டு இறுகி இளகி"
ஒன்றுக்கொன்று இணையாக இறுகிப் பின்னர் இளகி.... வலிபொருந்திய மார்பினள்
என் அன்னை... எனவே அவளது தனங்கள் இறுகியன... எம்மைப் போன்ற பிள்ளைகள்
மேல் அன்பு மிகவுடையவள் என் அன்னை... எனவே எமக்காக அவளது தனங்கள்
இளகின.... "முத்து வடங்கொண்ட " முத்துக்களால் ஆன மாலையை உனது அழகிய
தனங்கள் சுமந்து கொண்டிருக்கின்றன.... "கொண்டு" இப்படிப் பட்ட
பெருமைகளைக் கொண்ட உனது தனங்களால்.... "இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட .."
இறைவனான எம்பெருமான் சிவனது வலிமை மிகுந்த நெஞ்சைத்தை நீ
ஆட்டிவைக்கின்றாய்.. உலகத்தை ஆட்டுவிக்கும் ஈசன், வலிமை மிகுந்தவன்...
அவனது நெஞ்சம் மிகுந்த வலிமை கொண்டது... அவனது நெஞ்சத்தை நீ
ஆட்டுவிக்கின்றாய் என் அபிராமி அன்னையே....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்...
விளக்கம் : சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளையுடைய அபிராமி
அன்னையே.... பாசத்தையும் அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்துவித
அம்புகளைக் கொண்டவளே.. இனிமையான சொற்களைப் பேசும் திரிபுரசுந்தரியே...
செந்தூரவண்ண மேனியையுடையவளே... முப்புரங்களையும் ஆண்ட தீய நெஞ்சத்தைக்
கொண்டிருந்த அசுரர்களை, அவர்கள் அஞ்சும்படியாக மேருமலையை வில்லாக ஏந்திய,
எரியும் நெருப்பினையொத்த மேனியையுடைய ஈசனது இடப்பாகத்தில் அமர்ந்தவளே...
அபிராமியே....
"பரிபுரச்சீறடி" சிலம்பினை அணிந்த சிறிய திருவடிகளையுடையவளே... உலகத்தைப்
படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது.. ஆயினும் நம் போன்ற சிறியோர்களும்
காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..
அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்.. ஆஹா...
எத்தனை அழகிய திருக்காட்சி இது... "பாசாங்குசை பஞ்சபாணி" பாசத்தையும்
அங்குசத்தையும் ஏந்தியவளே... ஐந்து வித மலர்களால் ஆன அம்புகளை உடையவளே...
அன்னையின் கையில் பாசம் எதற்காக? அங்குசம் எதற்காக?? உலகியல் பந்தங்களில்
நம்மைப் பிணைப்பதற்காக பாசத்தையும், பின்னர் அப்பந்தங்களிலிருந்து நம்மை
விடுவிப்பதற்காக அங்குசத்தையும் ஏந்தியிருக்கின்றாள்.. சரி ஐந்து வித
மலரம்புகள் எதற்காக?? முன்னரே இதைப் பற்றிப் பேசியிருக்கின்றோம்...
அவளைச் சரணடைந்தால், நமது ஐந்து வித புலன்களையும் அடக்கியாள்பவள் அவளே...
இதையே பஞ்சபாணி எனும் திருக்காட்சி உணர்த்துகின்றது. "இன்சொல்
திரிபுரசுந்தரி" இனிமையான சொற்களைப் பேசும் திரிபுர சுந்தரியே... அன்னை
என்றென்றும் மக்களிடம் அன்பு பூணுபவள்.. எனவே இன்சொல்லையுடையவள்..
"சிந்துர மேனியள் " செந்தூரவண்ண மேனியைக் கொண்டவள். "தீமை நெஞ்சில்புரி
புர வஞ்சரை அஞ்ச" தீமையான நெஞ்சம் கொண்டவர்கள்... முப்புரங்களையும் ஆண்ட
அசுரர்கள்.. வஞ்சகர்கள்.... "அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை
மேனி இறைவர்" வஞ்சகர்களான அசுரர்கள் அஞ்சும்படி மேருமலையை வில்லாக
வளைத்து ஏந்திய கையையுடையவரும்... எரியும் நெருப்பினையொத்த திருமேனியைக்
கொண்டவருமான ஈசன் சிவபெருமானின்.... "செம்பாகத்து இருந்தவளே "
சரிபாதியாக இடப்பாகத்தில் அமர்ந்தவளே... அபிராமி அன்னையே...
பாடல் நாற்பத்து நான்கு
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்
துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே
விளக்கம் : தவம்புரியும் எங்கள் அபிராமியன்னையானவள் எங்கள் சங்கரனாரின்
துணையாகி அவர் இல்லத்து மங்கலமானவள். அவளே பராசக்தியாக சங்கரனாரின்
தாயுமானவள். ஆகையால் இவளே தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமாவாள். எனவே
இனிமேல் நான் வேறு ஒரு தெய்வத்தைத் தொழுது அவர்கட்குத் தொண்டு செய்து
துவளமாட்டேன்...
அன்னையின் மூன்று வித்தியாசமான நிலைகள் வியப்பைத்தருகின்றன... அவை.
1. தவம் செய்பவள்..
2. சங்கரனாரின் மனைவி...
3. சங்கரானாரின் தாய்...
தவம் செய்யும் வாழ்க்கையை ஏற்றோர் குடும்பவாழ்வில் ஈடுபடுவதில்லை. எனவே
முதற்கூற்று இரண்டாம் கூற்றோடு முரண்படுகின்றது.. மனைவியானவன்
அக்கணவனுக்குத் தாயாக முடியாது. எனவே இரண்டாம் கூற்றோடு மூன்றாம் கூற்று
முரண்படுகிறது. ஆனால் அதுதான் அன்னை அபிராமியின் பெருமை...
ஆதிபராசக்தியான அவள் "மாத்தவளே..." என்று முன்னரொரு பாடலில் அபிராமிப்
பட்டரால் குறிப்பிடப்பட்டாள்... உலகைப் படைத்தவளும் அவளே.. தனக்குத்
துணையாக மும்மூர்த்திகளைப் படைத்து அவர்கட்குத் தாயானவளும் அவளே...
பின்னர் முப்பெருந்தேவியராக உருக்கொண்டு அம்மும்மூர்த்திகளுக்கும்
துணையாக நின்றவளும் அவளே...
"எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்" மனைவியே மனைக்கு மங்கலமானவள்..
எனவேதான் "பெண்ணிற்பெருந்தக்க யாவுள.." என்று பாடினான் அய்யன்
திருவள்ளுவன். ஆனால் உலகையே படைத்த அன்னை ஆதிபராசக்தியானவள் ஈசனது
மனைவியானாள். அவன் இல்லத்துக்கு மங்கலமானாள்.. எத்தனை பெரிய பேறு
பெற்றான் எங்கள் சங்கரன்... "அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்"
உமையவளாய் நின்ற ஆதிபராசக்தியே சங்கரானாருக்கு அன்னையும் ஆனவள்...
"ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்" உலகமே வணங்கும்
தன்மை பெற்ற சங்கரனாரைப் பெற்ற தாயாகி நின்றதால், எங்கள் அபிராமியே
தெய்வங்கள் எல்லோருக்கும் மேலான தெய்வமானவள்... தெய்வங்களையெல்லாம்
படைத்த தெய்வமானதால் இவளே மேலான தெய்வம்... "இனி ஒரு தெய்வம் உண்டாக
மெய்த் தொண்டு செய்தே" "துவளேன்" எங்கள் அன்னை அபிராமியே தெய்வம் என்பதை
உணர்ந்து கொண்ட பின்னர் நான் இனி வேறு எந்த தெய்வத்துக்கும் என் மெய்யால்
தொண்டு செய்து துவள மாட்டேன்.. எத்தனை தெய்வங்களய்யா....?? அறிவைக்
கொடுக்க கலைமகள்... செல்வத்தைக் கொடுக்க அலைமகள்... வீரத்தைக் கொடுக்க
மலைமகள்... அவர்தம் மனையோர்... முழுமுதற்கடவுளான ஆனைமுகன்.. அவனது
தம்பியான ஆறுமுகன்... நவக்கிரகங்கள்... திக்குக்களையாளும் தேவதைகள்...
பஞ்சபூதங்கள்... என்று முப்பத்து முக்கோடித் தேவர்களையும்
பட்டியலிடலாம்... ஆனால் எல்லாரையும் படைத்து நமக்களித்த அன்னை அபிராமியே
நமக்கு அன்பு செய்யும்படி அருகில் வந்த பின்னர் வேறு தெய்வங்களுக்கு நான்
ஏன் தொண்டு செய்ய வேண்டும்? ஒவ்வொரு தேவைகட்கும் ஏன் அவர்கட்கு தொண்டு
செய்து துவள வேண்டும்.. இனி இப்படி நான் துவளமாட்டேன்.. அன்னையே உன்னை
மட்டுமே வணங்குவேன் என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்
அன்பர்களே.. நன்றி...
பாடல் நாற்பத்தைந்து
தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே
விளக்கம் : அபிராமி அன்னையே... உனக்குப் பணிவிடைகள் செய்யாது, உன்
திருப்பாதங்களை வணங்காது, துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே கடமையென
பழ்ங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது...
அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ
என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல்
பொறுத்தருள் தேவி...
இறையருளைப் பெறுவதற்கு முயற்சி செய்யாமல் தங்கள் இச்சைப் படியே
ஞானமார்க்கத்திலும், கர்ம யோக மார்க்கத்திலும் நின்று முக்தியடைந்த
ஞானிகள் பழங்காலத்தில் இருந்தனர். ஆனால் பக்திமார்க்கமே இறையருள்
பெறுவதற்கு மிகவும் எளிதான மார்க்கமாகும்.. அன்னையே... உனக்கும் உனது
அன்பர்களுக்கும் பணிவிடைகள் செய்யாது, உன் திருப்பாதங்களைத் தொழாது
தங்கள் இச்சைப்படி கர்மயோகத்திலோ, ஞானமார்க்கத்திலோ பழங்காலத்தில்
நின்றோர் இன்றும் இருக்கின்றார்களோ இல்லையோ.. நான் அதனை அறியேன்...
"அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ"
அடியேனும் அவர்களைக் கண்டு மனம் மாறி அவர்கள் வழி நின்றால் அது தவறோ...
அல்லது சரியோ... கைதவம் - தவறு அல்லது அநீதி என்று பொருள் படும்..
செய்தவம் - நீதி என்று பொருள் படும்.. "செய்தவமின்றேல் கைதவம் ஆளும் "
என்பது ஔவையார் வாக்கு. முன்னரே அன்னையை விடுத்து வேறெந்த
மார்க்கத்திலும் செல்ல மாட்டேன் என்று உறுதியாகக் கூறிய அபிராமிப் பட்டர்
இவ்விடத்து வேறொருவர் வழியைக் கண்டு தானும் மனம் மாறிவிடுவோமோ என்று
அஞ்சும்படி பாடுவது வியப்பைத் தருகின்றது.. ஆயினும் அவர் என்றும்
அன்னையின் அன்பு பாலகனாகவே இருந்தார்.. மனம் மாறும் இயல்பு படைத்த
மானுடராய்ப் பிறந்து விட்டோம். நாம் அன்னையை விட்டு விலகவேண்டாம் என்று
நினைத்தாலும், நமது கர்மா - முன்வினைப் பாவங்கள் நம்மை நல்நெறியிலிருந்து
பிரித்து வேறு பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சம்தான்
அபிராமிப் பட்டரை இவ்வண்ணம் எண்ணத் தூண்டுகிறது.. அவ்வாறு நான் உன்னை
விட்டு விலகிச் சென்றாலும், அன்னையே.. .என்னை வெறுக்காது
பொறுத்தருள்வதுதான் உன் தாயன்பை உணர்த்தும்.. எனவே அன்னையே.. என்னைப்
பொறுத்தருள்,,,
பாடல் நாற்பத்தாறு
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே
விளக்கம் : அபிராமி அன்னையே... புதிதாய்த் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த
கழுத்தையுடைய ஈசனது இடப்பாகம் அமர்ந்த பொன்னே... தம் அடியார்கள்
வெறுக்கும் படியான செயல்களைச் செய்தாலும் பெரியோர்கள் அவர்களது
செயல்களைப் பொறுத்து அன்பு செய்யும் வழக்கம் புதியது அல்லவே... நான் நீ
வெறுக்கும்படியான செயல்களைச் செய்து உன்னை விட்டு விலகிப்போனாலும் நீ
வெறுக்கும்படியான செயல்களைச் செய்தாலும், உன்னையே வாழ்த்துவேன்...
அன்னையே எவ்வழி சென்றாலும் நான் உன்னையே வாழ்த்துவேன்.. நீ என்னை
மன்னித்து அருளிச் செய்வது உனது பெருந்தன்மை என மறைமுகமாக ஒரு வேண்டுதலை
இப்பாடல் தருகின்றது.
"புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான்" புத்தம் புதிய நஞ்சு...
அமரர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பிறந்த புத்தம் புதிய
விடம்.. உலகை அழிக்க வந்தபோது அப்புது நஞ்சை அருந்தி உலகைக் காத்து தன்
கழுத்தினை நீலமாக்கிக் கொண்ட... கறுப்பாக்கிக் கொண்ட ஈசன்..
சிவபெருமான்... "இடப்பாகம் கலந்த பொன்னே.." அப்பனது இடப்பாகம்
அமர்ந்தவளே... சேர்பவளே... இருந்தவளே... எனப் பாடிய அபிராமிப் பட்டர்
இவ்விடத்து இடப்பாகம் கலந்த பொன்னே என்கிறார்.. அப்பனது இடப்பாகத்தில்
கலந்து விட்டவள்... பொன்மகள்....
"வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை
புதியது அன்றே " உலகம் ஏற்றுக்கொள்ள இயலாத தவறுகளைத் தம் பிள்ளை
புரிந்தாலு, அன்னையானவள் தன் பிள்ளையை என்றும் விட்டுக் கொடுப்பதே
இல்லை.. அவனைப் பொறுத்தருள்வாள்.. தம் அடியார்கள் தாம் வெறுக்கத்தக்க
செயல்களைப் புரிந்தாலும் ஞானிகள், குருமார்கள், தங்கள் சீடர்களை
மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர்.. இது பெரியோர்களின் பெருந்தன்மையைக்
குறிக்கும்.. இது போன்ற நிகழ்வுகள் புதிது அல்ல என் அன்னை அபிராமியே...
நானும் உலகோர் வெறுக்கும் படியான செயல்களைப் புரியலாம்.. ஆனால் என்னை
மன்னிப்பது உன் கடனே... "மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை
வாழ்த்துவனே.." உன்னால் மறுக்கப் படுகின்ற செயல்களைப் புரிந்தாலும்
கூட,,, அன்னையே... நான் உன்னையே வாழ்த்துவேன்... உன்னையே சரண்புகுவேன்..
உன்னை விடுத்து எம்மைக் காக்க யார்தாம் உண்டு..? நீ எனக்கு அடைக்கலம்
தந்தருளவேண்டும்... அது உனது நீதி...
"அன்றே தடுத்து எம்மை ஆட்கொண்டாய்" என்று தவறிழைக்கும் முன்னரே என்னை உன்
அடியவனாக்கிக் கொண்டாய் என்று பாடி, உத்தமனாய் வாழ்ந்த அபிராமிப்
பட்டரே.. தான் தவறிழைக்கும் நிலை பற்றிப் பாடி வேண்டுகிறார்..
அன்னையே... எங்களது பிழைகளையும் பொறுத்தருளம்மா என வேண்டி பாடலை மீண்டும்
ஒருமுறை பாடிப் பாருங்கள்.. நம்மைப் பிடித்துள்ள பாவசுமைகள்
விட்டொழியட்டும்...
பாடல் நாற்பத்தேழு
வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே
விளக்கம் : வாழ்வதற்க்குரிய நெறிமுறையொன்றை என் மனத்தில் நான்
கண்டுகொண்டென்.. அதை அறிந்த ஒருவர் அழிவதில்லை... தாம் பிறருக்குச்
சொல்வதுமில்லை.. அது அத்தனை எளிமையான வழியுமில்லை.. கடலால் சூழப்பட்ட ஏழு
வகை நிலங்களுக்கும், பெரிய மலைகள் எட்டுக்கும், எட்டாமல், இரவையும்
பகலையும் ஒளியால் நிரப்பும் சூரிய சந்திரர்களுக்கு நடுவே நின்று சுடரும்
பேரொளியான அபிராமி என்னும் ஒளி அது...
அன்னையை, ஆதிபராசக்தியை, அன்பென்னும் பெரும் பண்பால் நம்மை ஆட்கொண்டவளை,
வேதத்தின் உட்பொருளை, எளியோரின் வேதமாய்த் திகழ்பவளை வர்ணணை செய்ய
வார்த்தைகள் ஏது? அவளே நெறி... அவளே பாதை... அபிராமிப் பட்டர் சொல்லும்
வாழ்க்கை நெறி அன்னை அபிராமி மட்டுமே... அபிராமி ... அபிராமி ...
என்றழைத்தாலே போதுமே.. வாழ்வின் வழிமுறைகளை ஏற்று நெறிப்படுத்தி நடத்திச்
செல்பவள் அவளே... அபிராமி அருகிருக்க வேதங்களை ஏன் ஓத வேண்டும்? அபிராமி
அருகிருக்க வேள்விகள் ஏன் செய்ய வேண்டும்? எல்லா நோய்களையும் தீர்க்கும்
மருந்தே நம் அருகிருக்க மருத்துவனை ஏன் நாட வேண்டும்..? அபிராமியே...
எனக்கு எல்லாமும் ஆனவள் நீ... நீயே வாழ்க்கை வழிமுறை...
"வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே" நல்முறையில் வாழ்வினை
நடத்துவதற்குரிய வழிமுறையொன்றை என் மனத்திலே கண்டு கொண்டேன்... அது
எப்படிப் பட்டது?? "ஒருவர் வீழும் படி அன்று" மனிதரை இழுத்துச் சென்று
சீரழிக்கும் அழிவு வழியல்ல அது...மேலும்... "விள்ளும் படி அன்று" அதை
அறிந்தோர் மிக எளிதாக விளக்கிச் சொல்லக்கூடிய வழியும் அல்ல அது.,...
அற்புதமான அனுபவமானவள் அன்னை... அவளைக் கண்டவர் விண்டிலர். விண்டவர்
கண்டிலர் எனச் சொல்வார்கள்.. இறை அனுபவத்தை வார்த்தைகளில் விளக்கிச்
சொல்வது என்பது எளிதானது அல்ல... மிகவும் எளிதாக இறைவனைக் கண்டேன்..
கண்டேன்... என்று பிதற்றுபவர் இறை அனுபவத்தைக் கண்டே இருப்பதில்லை...
அப்படியானால் அபிராமிப் பட்டர் இதனை எங்ஙனம் விளக்குகிறார்? அவர்
விளக்கவே இல்லை... அன்னையை நேரடியாக நம் கண்களுக்கே அனுப்புகிறார்..
இதைப் பாரடா மைந்தனே... இவளே உன் தாய்... இவளே உன்னைக் காப்பவள் என்று
அன்னையெனும் மாபரிசினை நமக்களித்தவர் அபிராமிப் பட்டர்... சர்க்கரைப்
பொங்கல் செய்வது எப்படி என்று விளக்கமளித்துக் கொண்டிருந்தார் நண்பர்
ஒருவர்.. எனக்கு அது புரியவே இல்லை.. ஆனால் என் அம்மா சர்க்கரைப் பொங்கலை
தயார் செய்து எனக்களித்த போது அதன் செய்முறைகளைப் பற்றி நான் கவலைப் படவே
இல்லை... அமிழ்தமே அருகிருக்க அதை அடைவதற்குரிய வேறு வழிமுறைகளை நாம்
எதற்காகக் கற்க வேண்டும்...?
"வேலை நிலம் ஏழும் " வேலை எனும் பதம் கடலினைக் குறிக்கின்றது.. கடலால்
சூழப்பட்ட நிலங்கள் ஏழும்... "பரு வரை எட்டும்" வரை எனும் பதம் மலையைக்
குறிக்கும். பெரிய மலைகள் எட்டும் "எட்டாமல்" அடைய இயலாமல் "இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே" இரவிலே சூழும் சுடர்
சந்திரன்... பகலிலே சூழும் சுடர் சூரியன்.. இவர்கட்கு நடுவே கிடந்து
சுடரும் சுடரொளி.... சந்திரன் தாமாகவே ஒளிர்வதில்லை என்று அறிவியல்
அறிஞர்கள் கூறுகின்றனர்.. சூரியனது ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றது
சந்திரன் என்று உரைப்பார்கள்.. பூமியின் இருளை நீக்க வந்த சுடர்களான இவை
இரண்டுக்கும் நடுவே சுடரும் சுடரொளி... அதாவது.. சந்திரன் சூரியனின்
ஒளியை வாங்கி ஒளிர்கின்றது... சூரியனுக்கு ஒளியை அளிப்பது யார்???
அதுதான் இந்தச் சுடரொளி... அபிராமி என்னும் சுடரொளி... அபிராமியின் ஒளியை
சூரியன் பிரதிபலித்து அழகிய பகலினை நமக்குத் தருகின்றது... சூரியனது
ஒளியை சந்திரன் பிரதிபலித்து இனிக்கும் இரவுப் பொழுதினைத் தருகின்றது...
அட முட்டாளே... இன்று பூரண அமாவாசை... இன்றெப்படி நிலவு தோன்றும் என்று
என்னைக் கேட்டாயே... உலகுக்கு ஒளியை வழங்கும் சூரிய சந்திரருக்கும் ஒளியை
வழங்கும் அன்னை அபிராமியே என் வாழ்க்கை நெறி... அவள் நினைத்தால்
அவளருளால் இன்று நிலவு தோன்றாதா?.. தோன்றுமடா.... அது என் அன்னையின்
பேராற்றல் முன்னே சிறு துளி...
பாடல் நாற்பத்தெட்டு
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே
விளக்கம் : சுடரும் பிறை நிலவு தங்கும் சடைமுடியையுடைய ஈசனின்மேல்
ஒன்றிப் படர்கின்ற நறுமணம் வீசும் பசுங்கொடியைப் போன்றவளான அன்னை
அபிராமியை இடர்களெல்லாம் தவிர்த்து இமைப்பொழுது நெஞ்சில் நிலை நிறுத்தி,
தியானித்து இருப்போர், குடலும், இறைச்சியும், குருதியும் தோயும் இந்த
மானுட பிறப்பினை மீண்டும் எய்துவாரோ?? இல்லவே இல்லை..
உலகம் என்பது மாயைகளால் நிறைக்கப்பட்ட ஒரு நாடகமேடை போன்றது... இதெல்லாம்
மாயை என்று புரிந்த மனத்தில் மட்டுமே ஞானம் உதயமாகின்றது.. ஞானம் உதயமான
மனது பின்னர் பிறப்பு பற்றி சிந்திப்பதில்லை. அதை விரும்புவதுமில்லை...
நம் கிராமப் பகுதிகளில் ஒரு சொல்வழக்கு உண்டு.. இப்பிறவியில் யாரொருவர்
ஆலய புணரமைப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரோ அல்லது புதிதாக ஒரு ஆலயத்தைக்
கட்டுகிறாரோ அவருக்கு இதுவே ஏழாவது பிறப்பு.. அதாவது இறுதிப் பிறப்பு.
மீண்டும் அவருக்கு பிறப்பு இல்லை.. என்று சொல்வார்கள்.. ஆலயத்
திருப்பணிகளில் அத்தனை சுலபமாக ஈடுபட்டுவிட முடியுமா? அதற்கு இறைவனின்
அழைப்பு வேண்டும்.. அது இருந்தால் மட்டுமே சாத்தியம்.. அன்னையை நம்பி
அவளது திருப்பணிகளில் ஈடுபடுவது என்பது பெரும்புண்ணியம்.. இன்றைய தினம்
தமிழகத் திருக்கோயில்களில் பெரும்பாலானவை சுற்றுலாத்தலங்கள் போன்றும்,
திரையரங்குகள் போன்றும் மாறிக்கொண்டே வருகின்றன. இறைவனை அருகிருந்து
காண்பதற்கு ஒரு கட்டணம்.. அங்கே அமர்ந்திருந்து காண்பதற்கு வேறு கட்டணம்.
சற்றே தொலைவிலிருந்து காண்பதற்கு ஒரு கட்டணம்.. மிகவும் தொலைவிலிருந்து
காண்பதற்கு கட்டணம் ஏதுமில்லை... என்னவோ இவர்களது தந்தையும் தாத்தனும்
தங்கள் சொந்தப் பணத்தில் ஆலயத்தைக் கட்டி வைத்ததைப் போன்று பேயாட்டம்
போடுகின்றார்கள்.. சரி.. அவ்வளவு பணம் வருகின்றதே.. வருகின்ற
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தருவோமே என்ற
எண்ணமும் அவர்கட்கில்லை.. செந்தூர் செல்லும் போதெல்லாம் ஆலயத்தின்
நிலையைக் கண்டு மனம் வருந்துவேன்.. கட்டணம் செலுத்தி அமர்ந்து குமரனைக்
கண்டது ஒரேயொரு முறைதான்... திருமணம் முடிந்து கடல்நீராடி ஆலயவழிபாடு
செய்யச் செல்லும்போது மட்டும்தான் அது நடந்தது. இதுபோன்ற நிலைமைகள் மாற
வேண்டும்.. என்பதுதான் நமது விருப்பம். ஆலயத்திற்கென்றே வரும் வருமானம்,
ஆலயத்திருப்பணிகளுக்கே செலவிடப் படவேண்டும்.. ஆலயங்கள் குப்பைக்
கூடாரங்களாகிவிடக்கூடாது... அங்கே திருப்பணி செய்கிறேன் என்ற பெயரில்
ஆலயத்தை அசுத்தம் செய்யும் கயவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். சரி அபிராமி
அந்தாதிக்கு வருவோம்..
"சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்" ஒளிரும் பிறைச் சந்திரன்
தங்கும் சடைமுடியையுடைய குன்றான சிவபெருமானின் மேல் "ஒன்றிப் படரும்
பரிமளப் பச்சைக்கொடியைப்" ஒன்றிப் படரும் நறுமணம் வீசும் பசுங்கொடியை....
எங்கள் அன்னையை... குன்றின் மீது பசுங்கொடி எங்ஙனம் படருமோ அங்ஙனம்
அன்னையானவள் ஈசன் மீது படர்கின்றாளாம்.. கற்பனை வளத்தைப் பாருங்கள்...
அதுவும் நறுமணம் வீசும் பசுங்கொடியாம்... அவளைப்... "பதித்து நெஞ்சில்"
நெஞ்சில் நிலைநிறுத்தி "இடரும் தவிர்த்து" இடர்களெல்லாம் தவிர்த்து...
அன்னையைத் தியானிக்க வரும்போது எழும் இடர்களையெல்லாம் தவிர்த்து....
"இமைப்போது இருப்பார்" இமைப்பொழுதாகிலும் இருக்கும் தன்மை படைத்தவர்...
"குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே" குடலும், இறைச்சியும்,
குருதியும் நிறைந்த இவ்வுடம்பினை.... மானுடப் பிறப்பினை... "பின்னும்
எய்துவரோ?" இனிமேலும் அடைவார்களோ...? அதெப்படி சாத்தியம்??
அமைதியாயிருக்கின்ற மனது தியானிக்க அமரும்போதுதான் அலைபாய ஆரம்பிக்கும்..
அலைபாயும் மனதோடு அமர்ந்து, எழுகின்ற மாற்று எண்ணங்களையெல்லாம்
தவிர்த்து, இமைப்பொழுதாவது... ஒரு நொடியாவது அன்னையை மனத்தில் நிறுத்தி
தியானிப்போருக்கு மீண்டும் பிறப்பு இல்லை... என்பது அபிராமிப் பட்டரின்
கருத்து... அப்படியாயின் அவளையே என்றென்றும் தியானித்திருக்கும்
அபிராமிப் பட்டருக்கு???
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
விளக்கம் : நரம்பைக் கொண்டு இசையை எழுப்பும் இசைக்கருவிகளின் இசையாய்
நின்ற அபிராமி அன்னையே... இந்த உடலில் குடியிருக்கும் உயிரானது காலதேவன்
கொடுத்த காலக்கெடு முடிந்தவுடன் அவன் அழைக்க வரும்போது அஞ்சி நடுங்கும்..
அவ்வமயம் நீ வளையல்கள் அணிந்த உனது அழகிய திருக்கரங்களை அசைத்து, அரம்பை
முதலிய தேவமாதர்கள் சூழ வந்து நின்று அஞ்சாதே என்பாய்..
முன்னர் பலமுறை அன்னையே.. நான் மரிக்கும் தருவாயில் உன் கணவரோடு வந்து
காட்சியளிப்பாய். திருமணக்கோலத்தில் வந்து காட்சிதருவாய்... என்னை
அஞ்சாதே என்பாய் என்று பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அரம்பை முதலிய
தேவமகளிரோடு வந்து காட்சியளிப்பாய்.. என்னை அஞ்சாதே என்பாய் என்கிறார்..
"நரம்பை அடுத்து இசை வடிவாய் நின்ற நாயகியே" நரம்பினால் ஆன
இசைக்கருவிகளில் இசையாய் நின்ற எங்கள் அபிராமி அன்னையே... "குரம்பை
அடுத்து குடிபுக்க ஆவி " உடம்பை அடிப்படையாகக் கொண்டு குடிபுகுந்த
உயிர்... ஆன்மா... ஆன்மாவுக்கு என்றென்றும் அழிவில்லை... ஆன்மாவானது
இறைவனோடு ஒன்றியிருக்கின்றது.. பின்னர் உலகத்தில் பிறப்பெடுத்து ஒரு
உடம்பில் தங்கி பூலோக வாழ்வை அனுபவிக்கின்றது... அச்சமயம் உயிரானது
உடம்போடு கொண்ட பந்தம் நெருக்கமாகிவிடுகின்றது. அவ்வமயம் உயிருக்குத்
தெரிவதில்லை.. இது நமது நிரந்தரமான இடமல்லவென்று... எனவே நிரந்தரமற்ற
இவ்வுடலைப் பேணுவதிலும், அவ்வுடலின் இச்சைகளைப் பூர்த்தி செய்வதிலுமே
உயிரின் கவனம் செல்கிறது.. எனவேதான் மரணம் நேரும்போது அச்சம் மனத்தில்
குடி கொள்கிறது. இதைத்தான் "வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து
மறுகும்" உடம்புக்கென்ற ஒரு காலக்கெடுவை காலதேவன் நிர்ணயித்துள்ளான்..
அந்த காலக்கெடு முடியும்போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவன் வந்து
அழைத்துச் சென்று விடுகிறான். கோபம் நிறைந்த காலதேவன் தான் கொடுத்த
வரம்பு நிறைவடையும்போது வந்து அழைக்கின்றான். அப்போதுதான் உயிரானது அஞ்சி
மறுகுகிறது என்கிறார்... "அப்போது " அந்த சமயத்தில் "வளைக்கை அமைத்து"
வளையல்களை அணிந்த உனது அழகிய திருக்கரத்தை அசைத்து... "அரம்பை அடுத்த
அரிவையர் சூழ வந்து " அரம்பை முதலிய தேவ மகளிர் புடைசூழ வருவாய்.. வந்து
"அஞ்சல் என்பாய்" அஞ்சாதே மகனே என்றிடுவாய்... மரணபயத்தை.. இசையாகிய
நீயே போக்குவாய்... என்று பாடுகிறார் அபிராமிப் பட்டர்.
பாடல் ஐம்பது
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே
விளக்கம் : அன்னை அபிராமியானவள் உலக நாயகி, பிரம்மசக்தியாகத் திகழ்பவள்,
திருமாலின் சக்தியுமானவள், அழகிய திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத்
தாங்குபவள், சம்புவான சிவனின் சக்தி.. சங்கரனின் மனைவி.. அழகு
நிறைந்தவள், கொடிய நச்சினை வாயில் கொண்ட பாம்பினைக் கொண்டிருப்பவள்,
பலவிதமான மாலைகளை அணிந்த மாலினி.. உலகை இரட்சிக்கும் வாராகி, திரிசூலத்தை
ஆயுதமாகக் கொண்டவள், மாதங்க முனிவரின் மகளாக உதித்தவள் என்ற பலவிதமான
புகழினைக் கொண்டவள்.. அவளது திருப்பாதங்களே நமக்கு என்றென்றும் அரண்.
அன்னையின் பல்வேறு திருநாமங்களைப் பாடும் இப்பாடல் மிகவும் அருமையானது..
மீண்டும் மீண்டும் பாடத்தோன்றுவது..
"நாயகி" உலகத்தின் நாயகியானவள்... "நான்முகி" நான்முகனான பிரம்மனின்
சக்தியாகவிளங்குபவள்.. "நாராயணி" நாரணனின் சக்தியாக விளங்குபவள்..
(நாராயணனின் தங்கையானவள் என்றும் சொல்வார்கள்) "கை நளின பஞ்ச சாயகி.."
நளினமான திருக்கரங்களில் ஐந்துவித மலரம்புகளைத் தாங்குபவள்.. அவ்வைந்து
மலரம்புகளைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கின்றோம்.."சாம்பவி" சம்புவான
சிவபெருமானின் சக்தி... "சங்கரி.." சங்கரனின் மனைவி... "சாமளை.." அழகிய
வடிவுடையவள்..."சாதி நச்சு வாயகி " கொடிய நச்சு நிறைந்த வாயையுடைய
பாம்பினைக் கொண்டவள்.. பாம்பு ரதமேறும் பார்வதியானவள்.. "மாலினி .."
பலவித மாலைகளை அணிந்தவள்.. "வாராகி" உலகைக் காக்கும் வராக உருவினள்,..
"சூலினி" திரிசூலமேந்தும் மாகாளி.."மாதங்கி" மாதங்க மாமுனிவர் செய்த
தவத்தால் அவருக்கு மகளாகப் பிறந்தவள். " என்று ஆய கியாதி உடையாள் சரணம்
அரண் நமக்கே" என்று பல்வேறு புகழ்ப்பெயர்களைக் கொண்ட எங்கள்
அபிராமியன்னையின் திருப்பாதங்களே எங்களுக்கு அரண்.. பாதுகாவல்...
இந்த பாடலை கண்கள் மூடி ஒருமுறை பாடிப் பாருங்கள்.. அன்னையின் பல்வேறு
திருவுருவங்கள் நம் கண்ணெதிரே தோன்றி வியப்பளிக்கும்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்..
--
பாடல் ஐம்பத்தொன்று.
அரணம் பொருள் என்று அருள் ஒன்றும் இலாத அசுரர் தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் என நின்ற நாயகி தன் அடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே
விளக்கம் : தாங்கள் கட்டிய முப்புரங்களை நிலையான செல்வம் என்று நினைத்து
அருளென்பதே இல்லாத அசுரர்களின் பகையை அழித்திட சினங்கொண்டெழுந்த
சிவபெருமானும், முகுந்தனான திருமாலும் சரணம் சரணம் என்று வணங்கும்படி
நின்ற அம்மையின் அடியார்கள் இந்த உலகத்தில் மரணம், பிறவி இரண்டையும்
அடையமாட்டார்கள்..
மரணமில்லா பெருவாழ்வு அடைவது எங்ஙனம்? சாத்தியமற்ற ஒன்று... ஆனால் இதை
அம்மையின் அடியார்கள் அடைவார்கள் என்று அபிராமிப் பட்டர்
உரைக்கின்றாரே... ! சிந்திப்போம்... இதையே வள்ளுவன் "வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவர்" என்றுரைத்தான்.. அபிராமிப் பட்டர் இன்றையதினம்
நம்மிடையே இல்லை... ஆயினும் அவர் தந்த அழகிய பாடல்களால், தமது பக்தி
எனும் பெருந்தொண்டால், தமிழ் உள்ளளவும், தமிழ்நாடு உள்ளளவும் என்றென்றும்
இருப்பார் இல்லையா?? அதுதான் மரணமில்லாப் பெருவாழ்வு.. அதைப்பற்றித்தான்
அபிராமிப் பட்டர் இவ்விடத்து உரைக்கின்றார்...
"அரணம் பொருள் என்று " தாங்கள் கட்டிய கோட்டைகளையே நிலையான செல்வம் என்று
நினைத்து... முப்புரங்களைக் கட்டிய அசுரர்களுக்கு அதுவே நிலையானது என்ற
எண்ணம் தோன்றிவிடுகிறது. பின்னர் அதுவே அவர்தம் அழிவுக்கும் வித்தாகி
விடுகின்றது.. "அருள் ஒன்றும் இலாத" அருளே இல்லாத... கருணையே இல்லாத...
தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் புரிந்த.... கவனிக்க வேண்டிய
செய்தி நமக்கும் இவ்வரிகளில் உள்ளது... பொருட்செல்வத்தை நிலையானது என்று
நாம் நினைக்கத் துவங்கும் வேளை நம் மனத்திலிருந்து அருளானது தானாகவே
வெளியேறிவிடுகின்றது... எனவேதான் வள்ளுவனும்
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கோர்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு" என்று பகர்ந்தான்.. திருமகள் நம் இல்லத்தைத்
தன் அருளால் நிரப்புவது, நம் மனந்தனில் குடிகொண்ட அருளை வெளியேற்றுவதற்கு
அல்ல.. தகுதியுடையோர்க்கு உதவி செய்வதற்காகத்தான்.. எனவே பொருள் வரும்
வேளை, அதை நிலையென்று நினைத்தால் அருள் போய்விடும்... அதையே நிலையானதன்று
என எண்ணித் தருமங்கள் செய்து வந்தால் நீக்கமில்லா நிலையான வாழ்வு
பெறலாம்.. "அசுரர் தங்கள் முரண் " தங்கள் கோட்டைகளே நிலையானது என்று
நினைத்த அசுரர்களின் பகைமை.... "அன்று அழிய முனிந்த பெம்மானும் " அழிய
வேண்டும் என்று சினங்கொண்டு எழுந்த சிவபெருமானும், "முகுந்தனுமே"
திருமாலுமே.. "சரணம் சரணம் என நின்ற நாயகி " சரணம் சரணம் என்று
வணங்கும்படி நின்ற அம்மை...முப்புர அசுரர்களை அழித்து மாந்தரைக் காத்தவர்
ஈசனென்றால், தசாவதாரங்களை எடுத்து தீமைகளினின்று மாந்தரைக் காத்தவர்
திருமால்... இவர்கள் இருவருமே அம்மை ஆதிபராசக்தியிடம் சரணம் சரணம் என்று
வந்து வணங்கி நின்றார்கள்.. ஏனெனில் அவர்களைப் படைத்தவளே அந்த
பராசக்திதான்... "தன் அடியார் மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த
வையகத்தே" அன்னையின் அடியார்கள்... அவளையே சரண்புகுபவர்கள் மரணம்,
பிறப்பு என்ற சுழற்சி வாழ்க்கையை மீண்டும் எய்த மாட்டார்கள்.
பிறப்பறுக்கப் படவேண்டும் என்று அன்னையை வேண்டிய அபிராமிப் பட்டர்...
மரணம் எய்தும் வேளை என் அருகே வந்து நில்லம்மா என வேண்டிய அபிராமிப்
பட்டர்... இவ்விடத்து அன்னையின் அடியார்கள் மரணமெய்த மாட்டார்கள் என்று
சொல்வதன் காரணம் என்ன?? மரணம் என்புதோல் போர்த்திய இந்த
உடம்புக்குத்தானேயன்றி, நமது ஆன்மாவுக்கல்ல... அன்னையை நம்பினார்,
அவளடியே சரணமென்று தஞ்சமடைந்தோருக்கு மீண்டும் பிறப்பில்லை... அவர்களது
ஆன்மாவுக்கு மரணமேயில்லை... அது மீண்டும் ஒரு உடலைத் தனக்கு வேண்டுமென்று
தேடிச் செல்லாது... செல்லவேண்டிய அவசியத்தையும் அது தாண்டி முக்தி பெற்று
விடுகின்றது.. அது பிறப்பறுப்பினைக் குறிக்கின்றது... மரணமில்லாப்
பெருவாழ்வு என்பது அன்னையின் அடியார்களுக்குக் கிடைத்த வரம். அன்னையையே
தஞ்சமென்று நம்பி விழுந்தோர், புண்ணியங்களை மட்டுமே புரிவாரன்றி,
பாவங்களைச் சுமப்பதில்லை... அவர்தம் புண்ணியங்களே அவர்களது பெயர்களை
இவ்வுலகத்தில் நிலைநிறுத்திவிடுகின்றது...
பாடல் ஐம்பத்திரண்டு
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே
விளக்கம் : பிறை நிலவைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமானின் திருமனையாளான
அன்னை அபிராமியின் திருவடித்தாமரைகள் மேல் அன்பு செய்து அவளை எண்ணித்
தவமியற்றுபவருக்கு கிடைக்கும் சின்னங்களாவன... வையகம், குதிரை, ஆனை,
மாமகுடம், பல்லக்கு, கொட்டும் பொன், விலையுயர்ந்த முத்து மாலைகள்...
அன்னையை எண்ணித் துதிப்போர்க்கு இம்மையில் கிட்டும் செல்வங்களை இப்பாடல்
பட்டியலிடுகிறது. இப்பட்டியலில் இடம்பெற்றவையெல்லாம் பெற்றிருப்போர்
பெரும் செல்வந்தர்களாக இருப்பார்கள்.. நாமும் இப்பாடலைப் பாடி
பெருஞ்செல்வமடைவோம்... (செல்வம் சேருங்காலை முந்தைய பாடலையும்
பாடிடுவோம். அப்போதுதான் பொருளோடு அருளும் கூடியிருக்கும்).
"பிறை முடித்த ஐயன் திருமனையாள் " பிறை நிலவைத் தன் சடையிலே அணிந்த
சிவபெருமானின் மனையாட்டியின்... அன்னை அபிராமியின்...."அடித் தாமரைக்கு
அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு " திருவடித்தாமரைகள் மேல் அன்பு
செய்யும்பொருட்டு முன்னர் தவமியற்றியவர்களுக்கு... "உளவாகிய சின்னங்களே "
கிடைக்கும் சின்னங்களாவன.... "வையம" இந்த வையகம்... இந்த வையகமே அவர்தம்
வசமாகும்... "துரகம்" குதிரைகள் கிடைக்கும்... "மதகரி" மதம் நிறைந்த
பெரிய ஆனைகள் கிடைக்கும்.. "மாமகுடம்" பெரிய மணிமகுடம் கிடைக்கும்.
"சிவிகை" அவர்களைச் சுமந்து செல்ல அழகிய பல்லக்குகள் கிடைக்கும்.
"பெய்யும் கனகம்.." கொட்டும் பொன் கிடைக்கும். தங்க மழை பெய்யும்...
சங்கரர் தேவியை வேண்டி கனக நெல்லிகளை மழையெனப் பெய்யச் செய்த வரலாறு
நினைவுக்கு வருகின்றது.. "பெருவிலை ஆரம்" அதிக விலைபடைத்த முத்து
மாலைகள், மாணிக்க மாலைகள் கிடைக்கும்...
அன்னையின் திருவடிகளை மட்டுமே எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு இதெல்லாம்
கிடைக்கும்... பின்னரும் அவர் அவள்தம் அன்பிலே நீடித்திருந்தால் அருள்
கிடைக்கும்... இந்த பாடலினை முதலிலும், முந்தைய பாடலை அடுத்தும் வரிசை
மாற்றி வாசித்துப் பாருங்கள்... அழகிய பொருள் (இவ்விடத்து அர்த்தம் என்று
அர்த்தமாகின்றது) கிடைக்கும்.. அன்னையை எண்ணித் தவமியற்றுபவர்களுக்கு
பொருட்செல்வம் மிகுதியாகக் கிடைக்கும்.. பொருட்செல்வத்தில் திளைப்போர்
அருள் மறந்து போனால் அழிவார்கள்... அவளிடம் அன்பு செய்து அவள்
அடியார்களாக இருப்பவர்கள் மரணம், பிறப்பற்ற நிலை எய்துவார்கள்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
விளக்கம் : அபிராமி அன்னையே... உனது சின்னஞ்சிறு இடையினில் அணிந்த சிவந்த
பட்டாடையையும், உனது பருத்த திருமுலைகளையும், அதன் மேல் அணிந்துள்ள
முத்தாரத்தையும், பிச்சிப்பூக்களை அணிந்த உனது அழகிய கருங்கூந்தலையும்,
உனது மூன்று கண்களையும் மனத்தில் நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி
தியானித்திருப்பதைத் தவிர சிறந்த தவம் ஏதுமில்லை...
கடந்த பாடலில் அன்னையின் திருவடிகளை எண்ணித் தவமியற்றும் அன்பர்களுக்குக்
கிடைக்கும் செல்வங்களைப் பட்டியலிட்ட அபிராமிப் பட்டர், இப்பாடலில் எது
சிறந்த தவம் என்று பகர்கின்றார். "சின்னஞ்சிறிய மருங்கினில்.." மருங்கு
எனும் பதம் இடையினைக் குறிக்கின்றது. அன்னையின் இடை சின்னஞ்சிறியது...
அச்சின்னஞ்சிறு இடையினில்... "சாத்திய செய்யபட்டும் " அணிந்த சிவந்த
நிறப் பட்டாடையையும், "பென்னம்பெரிய முலையும் " மிகப்பெரிதான திரு
முலைகளையும், "முத்தாரமும்.." அதன் மேல் அவள் அணிந்த முத்து
மாலையையும்.... "பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும்.." பிச்சிப்பூ சூடிய
உனது கருமை நிறக் கூந்தலையும், "கண் மூன்றும்" உனது மூன்று கண்களையும்
"கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு.." தமது மனத்தில் நிலை
நிறுத்தி வேறெந்த நினைவுகளும் இன்றி தனித்திருப்பாருக்கு... இப்பாடலைப்
பாடும்போது அன்னையின் அழகிய திருவுருவம் கண்ணில் தோன்றுவதை
உணர்கின்றீர்களா... ? அழகிய சின்னஞ்சிறு இடைதனில், சிங்காரமாய் செந்நிற
பட்டுடுத்தி, உலகைக் காப்பதற்காகத் தோன்றிய பெரிய திருமுலைகள் மீது
முத்தாரத்தை அணிந்து, மணம் வீசும் பிச்சிப் பூக்களைத் தன் கன்னங்கரிய
கூந்தலில் அணிந்த முக்கண்ணையுடைய அபிராமியானவள் கண்முன் தோன்றுகின்றாள்.
எத்தனை அழகிய தோற்றம்...! இத்தோற்றம் மனத்தில் தோன்றிய பின்னர் வேறெந்த
நினைவுகள் எழும்?? தவமியற்ற யாருமற்ற வனத்துக்குச் செல்ல வேண்டுமா?
இல்லவே இல்லை... கோடிக்கணக்கான மாந்தர் கூடியிருந்த போதும், வேறெந்த
நினைவுகளுமின்றி அன்னையின் திருவுருவத்தை மனத்தில் தியானித்திருந்தால்
அதுவே சிறந்த தவம்.. "இது போலும் தவமில்லையே" இதைப்போன்ற சிறந்த தவம்
இல்லவே இல்லை...
எனவே மூன்று பாடல்களையும் இறங்குவரிசையில் பாடிப்பாருங்கள்... இப்பாடல்
சிறந்த தவம் என்ன என்பதையும், முந்தைய பாடல், அத்தவமியற்றினால் என்ன
கிட்டும், என்பதையும், அதற்கும் முந்தைய பாடல், தவத்தால் கிட்டிய
பொருளோடு அருளிருந்தால் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வு, அருளற்றுப் போனால்
அழிவு...
அழகாய் இருக்கின்றது அல்லவா?
பாடல் ஐம்பத்து நான்கு
இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்
கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே
விளக்கம் : வறுமையில் துன்பப் படுபவர்களே... நீங்கள் உங்கள் வறுமையின்
பொருட்டு ஒருவரிடம் சென்று உதவி கேட்டு, பின்னர் அவரால் அவமானப்
படுத்தப்படும் நிலை இல்லாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத்
தோன்றினால், தவம் செய்யாத கயவர்களிடத்தில் உதவி கேட்டு செல்லும் நிலைமையை
எந்த காலத்திலும் எனக்கு ஏற்படாது காத்த திரிபுரசுந்தரி அன்னை
அபிராமியின் திருப்பாதங்களைச் சேருங்கள்... அவளையே தொழுங்கள்..
வறுமையைப் போக்கும் பாடல் இது... வறுமையால் துன்பப்படுவோருக்கு அன்னையின்
அன்பால் ஆறுதல் சொல்லி அவளிடத்துச் சேர்க்க அபிராமிப் பட்டர் இப்பாடலைப்
பாடுகின்றார்..
"இல்லாமை சொல்லி " எம்மிடம் இப்பொருள் இல்லை என்று சொல்லி... "ஒருவர்
தம்பால் சென்று " இன்னொருவரிடம் சென்று கையேந்தி... "இழிவுபட்டு
நில்லாமை" அவர்களால் இழிவுபடுத்தப் படும் நிலைக்குத் தள்ளப்படாமல்
இருக்கும் நிலை ... "நினைகுவிரேல்" எண்ணம் தோன்றினால்... வறுமை மிகக்
கொடியது... வறுமையில் வாடுபவர்களைப் பற்றி சற்றே எண்ணிப் பாருங்கள்..
வறுமை வந்திடில்... வறுமையில் பசி வந்திடில்... எந்த உறவுகளும் துணைக்கு
வருவதில்லை... எந்த அன்பும் நினைவுக்கு வருவதில்லை... ஒரு சம்பவத்தை
இவ்விடம் பகிர்ந்து கொள்கின்றேன்.. அதை நாண் கண்டு ஆண்டுகள் பல
ஆகிவிட்டன.. ஆயினும் இன்னமும் அக்காட்சி என் கண்களை விட்டு அகலாது
நிற்கின்றது.. அதை எண்ணும்போதெல்லாம் மனம் துடிப்பதைத் தடுக்கவே இயலாது..
நான் பெங்களூருக்கு வந்த புதிதில், ஒருமுறை ஊருக்குச் சென்று
கொண்டிருந்தேன். திருவிழாக்காலம்.. நேரடியாக நெல்லைக்குச் செல்லும்
பேருந்து கிட்டவில்லை. எனவே மாறி மாறி சென்று கொண்டிருந்தேன்.. கரூரில்
பேருந்து நின்று கொண்டிருந்த போது பேருந்து நிலையத்தில் கண்ட காட்சிதான்
இது..வயதான தம்பதியர் அப்பேருந்து நிலையத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்..
அம்முதியவர் படுத்திருந்தார். அவரால் எழுவதற்கும் இயலவில்லை.. அவர்
அருகில் இரு குடங்கள்.. சில சாமான்கள்... சில மூட்டைகள்.. மூதாட்டியோ
அருகிலிருந்த உணவகத்தில் சென்று இரந்து கொண்டிருந்தார். அக்கடைக்காரனோ
அவரை மிகவும் கேவலமான சொற்களால் திட்டிக் கொண்டிருந்தான்.. என்னால்
அவ்விடத்து இறங்கவும் இயலவில்லை.. பேருந்து மெதுவாக நகர்ந்து கொண்டுதான்
இருந்தது.. என்ன காரணத்தால் இவர்கள் இவ்விடம் வந்திருப்பார்கள்..? கடன்
தொல்லையால் யாராவது வீட்டை விட்டு விரட்டியடித்திருப்பார்களோ?? அவர்களது
புதல்வர்கள் என்ன காரணத்தாலோ அவர்களைத் துரத்தி விட்டிருப்பார்களோ???
என்ற பல எண்ணங்கள் என் மனத்தில் தோன்றின.. கடைக்காரனும் இரக்கப்பட்டு இரு
இட்லிகளை அம்மூதாட்டிக்குக் கொடுத்தான். நானும் இரண்டில் ஒன்றைத்
தனக்கும், மற்றொன்றைத் தன் கணவருக்கும் கொடுப்பார் என எண்ணிக்
கொண்டிருந்தேன்.. ஆனால் அவரோ முதியவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டு
தானே இரு இட்லிகளையும் தின்னத் தொடங்கினார். முதியவரோ "பசி.. பசி..." என
அரற்ற... "சும்மா கிடயும்யா...." என்ற படி தானே தின்று கொண்டிருந்தார்..
தின்றும் விட்டார்... முதியவர் மெல்ல எழுந்து அமர்ந்து குடத்தின்
நீரையாவது குடிக்கலாம் என்று அதைத் தொட்ட பொழுது அவைக்
காலிக்குடங்களாதலால் உருண்டு விழுந்தன... இந்த சமயத்தில் நம் பேருந்தும்
அவ்விடம் விட்டு நகர்ந்து விட்டது..தனது வாலிப வயதில் தன் மனைவியை
எப்படியெல்லாம் நேசித்திருப்பார் அவர்? தினமும் அவருக்கு என்னென்ன
இனிப்புகள் வாங்கிக் கொடுத்திருப்பார்? ஆனால் வறுமை... பசி... இன்று அந்த
அன்பு நிறைந்த கணவருக்குக் கொடுக்காமல் தானே தின்னும்படி செய்து
விட்டதே... இறைவா இதென்ன கொடுமை என்று அழுது கொண்டே பயணம் செய்தேன்... ஆக
வறுமை கொடிது... இந்த உலகில் வறுமை நிறைந்தோருக்கு எல்லாவிடத்தும்
இழிவுதான் கிடைக்கின்றது... ஆக உங்கள் வறுமை போக வேண்டுமா?? உங்கள்
வறுமையின் பெயரால் இன்னொருவரிடம் சென்று கையேந்தி, அவரால் இழிவுபடுத்தப்
படும் நிலை உங்களுக்கு வரவேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்குத்
தோன்றுமானால்.... "நித்தம் நீடு தவம் கல்லாமை கற்ற கயவர் தம்பால் "
சொற்களின் விளையாட்டைப் பாருங்கள்..ஒரு முரண்தொடை... தினமும் தவம்
செய்யும் செய்யாமல் இருப்பது எப்படி என்று கற்ற கயவர்களிடத்தில்... தவம்
செய்யாமல் இருப்பது எப்படி என்றும் கற்பார்களோ??? முரண் வாக்கியத்தை
அமைத்துப் பாடலைச் சொற்சுவை மிகுந்ததாக்குகின்றார்.. தவம் செய்வோர்
தம்மிடத்து வருவோருக்கு ஈயவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பார்கள்..
மாற்றாரிடத்துச் செல்லும்போது அவர் தருவாரோ தர மாட்டாரோ என்ற
எண்ணத்தோடேயே செல்ல வேண்டியுள்ளது.. அவரும் கைவிரித்து, நம்மை
இழிவுபடுத்தி விடில், கேவலமான நிலைக்குத் தள்ளப் பட்டு விடுகின்றோம்..
எனவே தவமற்ற அல்லது தவம் செய்யக்கூடாது என்ற விதியைக் கற்ற
கயவர்களிடத்தில்..."ஒரு காலத்தும் செல்லாமை வைத்த திரிபுரை.." எந்த
காலத்திலும் உதவி கேட்டு நான் செல்லும்படியான நிலைக்கு நான் ஆளாகாமல்
வைத்த திரிபுர சுந்தரியான அன்னை அபிராமியின்.. "பாதங்கள் சேர்மின்களே "
திருப்பாதங்களைச் சென்றடையுங்கள்..அவளைத் தொழுங்கள்..
மீண்டும் ஒரு அழகிய இறங்கு வரிசை... வறியவர்களை நோக்கி, உங்கள் வறுமை
விலகுவதற்காக அன்னை அபிராமியைத் தஞ்சமடையுங்கள் என்று சொல்வது இப்பாடல்.
முந்தைய பாடல் அவளை எண்ணுவதே பெருந்தவம் என்று சொல்லும் பாடல்.. அதற்கும்
முந்தையது... தவமுடையாருக்குக் கிடைக்கும் செல்வங்கள்.. எனவே வறுமையால்
வாடுவோர் செல்வத்தில் திளைக்கின்றார்... செல்வம் மிகுதியால் வரும்
கேடும், அத்தோடு அருள் இணைந்திருந்தால் அன்னையைத் தொழுதிருந்தால்
கிட்டும் பிறப்பு இறப்பற்ற பெருவாழ்வையும் அதற்கும் முந்தைய பாடல்
சொல்கின்றது.. அழகியதோர் இறங்குவரிசை...
விளக்கம் : ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிரும்
திருமேனியையுடைய எங்கள் அபிராமி அன்னையை, என்றென்றும் மனமகிழ்ச்சியில்
திளைத்திருக்கும் ஆனந்த வடிவானவளை, வேதங்களின் துவக்கமாய், நடுவாய்,
அவற்றின் முடிவுமாய்த் திகழும் முதன்மையானவளை, உலக மாந்தர் எண்ணாது
அழிந்தாலும், எண்ணினாலும் அதனால் அவளுக்கு ஆகவேண்டிய பொருள் ஒன்றும்
இல்லை...
உலக மாந்தர்கள் அன்னையின் முன்னால் துச்சம் என உணர்த்தும் பாடல்.. உலகைப்
படைத்த அன்னையைத் தொழுதிடல் வேண்டும் என்பது மாந்தர் விதி... ஆயினும்
அனைவரும் அதைப் பின்பற்றுவதில்லை... ஆலயங்களைப் பாதுகாக்கும்
பொறுப்புகளில் முதன்மை வகிப்பவர் இறைவன் இல்லை எனும் கருத்தையுடையவர்...
இதைப் போன்று பல்வேறு முகங்கள்... அனைத்தையும் படைத்தவள் அவள்... அவளை
நீங்கள் எண்ணித் தொழுதாலும், எண்ணாமல் அழிந்தாலும், அக்காரணத்தால்,
அவளுக்கு ஆகக்கூடிய நன்மைகள் ஏதுமில்லை.. தீமைகளும் ஏதுமில்லை என்பது
இதன் கருத்து..
"மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் " அழகிய கற்பனை
இது... ஆயிரம் மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் ஒரு வடிவத்தைக்
கொண்டவளை... எத்தனை அழகிய கற்பனை... ! ஒரு மின்னலையே கண்ணால் காண்பதற்கு
இயலவில்லை... ஆனால் ஆயிரம் மின்னல்கள்.. (நண்பர்கள் "மின்னல் ஒரு கோடி "
என்று காதலியை வர்ணித்த கவிஞரின் கற்பனை இதை விட மிகுதி என்று எண்ண
வேண்டாம்.. ) ஒன்று சேர்ந்து வந்தால் அந்த ஒளியை நம்மால் காண இயலுமா??
முன்னர் ஒருமுறை சந்திர சூரியர்களுக்கு நடுவே நின்று ஒளிரும் சுடரொளி
என்று அன்னையைப் பாடிய அபிராமிப் பட்டர் இப்பாடலில் அவள் ஆயிரம்
மின்னல்கள் ஒன்று சேர்ந்து ஒளிரும் வடிவுடையாள்.. அத்தனை பிரகாசம்...
இதைக் கண்டதால்தான் மன்னரிடம் பௌர்ணமி என்றுரைத்து விட்டாரோ.?
"அகம் மகிழ் ஆனந்தவல்லி " என்றென்றும் மனமகிழ்ச்சியில் திளைத்திருக்கும்
ஆனந்த வடிவுடையாளை... அன்னைக்கு ஏது துக்கம்?? சர்வலோகத்தையும் படைத்துக்
காத்து இரட்சிக்கும் ஆதிபராசக்தியின் மனது என்றென்றும் மகிழ்ச்சியில்
திளைத்திருக்கின்றது.. ஏனெனில் அவளே ஆனந்த வல்லி... ஆனந்தவடிவுடையாள்...
முன்னர் ஒரு பாடலில் அன்னையே என் ஆனந்தம் என்று பாடிய பட்டர் இவ்விடத்து
அகம் மகிழ் ஆனந்த வல்லி எனப்பாடுவது சிறப்பு...
"அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி " அருமையான
வேதங்களுக்குத் தொடக்கமாய், நடுவாய், முடிவாய்த் திகழும்
முதன்மையானவளை... வேதங்களின் தலைவி, வேதங்களைத் தன் பாதச் சிலம்பாய்
அணிந்தவள், வேதங்களின் தொடக்கமும் முடிவுமாய்த் திகழ்பவள் என்று பாடிய
அபிராமிப் பட்டர், இவ்வரிகளில் வேதங்களின் தொடக்கமாய்.. நடு எங்குமாய்..
முடிவாய்த் திகழும முதன்மையானவள் என்று வர்ணிக்கின்றார்.. (முதல்வி எனும்
பதத்தை இதுவரை ஏன் தமிழக பெண் முதல்வர்கள் உப்யோகிக்கவில்லை?)
எல்லாவற்றிற்கும் முதன்மையானவள் அன்னை அபிராமியே..."தன்னை.."
அவள்தன்னை... "உன்னாது ஒழியினும் " நினையாது அழிந்தாலும் ....
"உன்னினும்" எண்ணி மகிழ்ந்திருந்தாலும்... "வேண்டுவது ஒன்றில்லையே"
அவளுக்கு ஆகவேண்டிய காரியம் எதுவுமில்லையே...
புகழுக்கெல்லாம் பிறப்பிடத்தைப் புவியிற் பிறந்தோர் புகழினும் என்...?
புகழாது ஒழியினும் என்???
பாடல் ஐம்பத்தாறு
ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவாறிப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே
விளக்கம் : அன்னை அபிராமியானவள் ஒரே சக்தியாய் அரும்பி, பல்வேறு
சக்திகளாய் விரிந்து, இவ்வுலகம் எங்கும் பரந்து நீக்கமற நிறைந்து
நின்றாள்..பிற சக்திகளிடமிருந்து நீங்கி தனித்தும் நிற்பாள்.
இப்படிப்பட்ட தன்மையுடைய மஹாசக்தி... சிறியேனான என்றன் இதயத்தில்
என்றென்றும் நீங்காமல் நின்று அருளாட்சி புரிகின்றாள்.. இதன் மாயமென்ன??
இம்மறைபொருளின் உண்மையை ஆலிலையில் துயின்ற திருமாலும், எம் தந்தையான
சிவபெருமானுமே அறிவார்கள்...
அழகிய ஒப்பீடு முதல் வரியில்... அன்னை ஆதிபராசக்தியானவள் உலகத்தைப்
படைப்பதற்கு முன்னர் ஒரே சக்தியாய் நின்றிருந்தாள்... இதனை ஓர்
அரும்பிற்கும்... பின்னர் அவளே மும்மூர்த்திகளைப் படைத்து, அவர்தமக்கு
உதவிட, தானே முப்பெருந்தேவியராகப் பிரிந்த தன்மையை, அவ்வரும்பு பல இதழ்
கொண்ட மலராக விரியும் நிலைக்கும் ஒப்பிட்டிருக்கின்றார்..
"ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய் நின்றாள் "
உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் ஒரே பொருளாய்... தானே உலகாய்...
மஹாசக்தியாய் நின்றாள்... பின்னர் மும்மூர்த்திகளாக, முப்பெருந்தேவியராக
விரிந்தாள்... உலகெங்கும் தானாய் நின்றாள்...நிறைந்து நின்றாள்...
"அனைத்தையும் நீங்கி நிற்பாள்" எல்லாவிடத்தும் சக்தியாய் நின்றாலும்,
அவற்றினின்று நீங்கி ஆதிபராசக்தியாய் தனிந்து நிற்பாள்... எனவே அவளது
தன்மையை அறிய இயலாது... இவ்விடத்திலிருப்பாள்.. இல்லாமலும்
இருப்பாள்..இரண்டும் உண்மையே... எனவே இவளது தன்மையை அறிந்து கொள்ள
உலகத்தோர் தவமியற்றுகின்றனர்.. தவமியற்றுவோரும் தாம் அறிந்த தன்மையை
உலகுக்குப் புரியும்படி விளக்குகின்றனரா? இல்லை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு
விதமாக அவளை அறிந்து கொண்டதாக உரைத்தனர்... எனவே இவளது தன்மை... வடிவு...
அனைத்தும் பாரோர் அறிந்து கொள்ள இயலாதது... இப்படிப்பட்ட தன்மையுடைய
அன்னை அபிராமியானவள்.. "என்றன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று
புரிகின்றவாறு" சிறியேன்... கடையேன்... மானுடனாய்ப் பிறப்பெடுத்தவன்..
பித்தனென்று உலகோரால் இகழப்படுபவனாகிய எந்தன் நெஞ்சத்தில் நீக்கமற
நிறைந்து அருளாட்சி செய்கின்றாள்... மறை நான்கையும் தெளிவுற உணர்ந்த
பேரறிஞர்களாலும் அறிய இயலாத வடிவினலான என் அன்னை...எனது நெஞ்சத்தில்
நீங்காது நின்று அருளாட்சி புரிகின்ற தன்மையின்.... இரகசியத்தின்...
"இப்பொருள் அறிவார்" பொருளை அறிவோர்கள் யாரெல்லாம்??? எங்கும் நிறைந்து,
நீங்கி நிற்கும் ஆதிபராசக்தி என்றன் நெஞ்சத்தில் நீக்கமற நிலைத்து நின்று
அருளாட்சி புரியும் தன்மையின் மறைபொருளை அறிந்தவர்கள் யாரெனின்..."அன்று
ஆலிலையில் துயின்ற பெம்மானும் எம் ஐயனுமே" யுகங்கள் முடிவடையும் வேளையில்
ஆலிலையில் துயில் கொண்டு எழுந்தருளிய திருமாலும், எம் தந்தையான
சிவபெருமானுமே.. .வேறு யாருக்கும் இம்மறைபொருள்
தெரிவதில்லை....ஈசனுக்கும், மாலுக்கும் மட்டுமே தெரியும்...
அபிராமிப் பட்டரின் நெஞ்சில் நிலைந்து நின்று அருளாட்சி புரிந்த அன்னை
அபிராமியானவள் நம் நெஞ்சத்திலும் கொஞ்சம் நிற்க அவளின் திருப்பாதங்களை
வேண்டுவோம்..
விளக்கம் : எம் தந்தையான சிவபெருமான் அளந்து உனக்களித்த இரு நாழி
நெல்லைக் கொண்டு உலகம் எல்லாம் காக்கும்படி அறம் செய்யும் உன்னைப்
போற்றிப் பாடிவிட்டு பின்னர் வேறொருவரிடம் அதே பசுந்தமிழ்ப் பாமாலையைக்
கொண்டு சென்று அவரைப் போற்றிப் பொய்யையும் மெய்யையும் சொல்லவைத்தாயே...
இதுதான் உனது உண்மையான அருளா?
வறுமையை நம்வாழ்விலிருந்து களையும் பாடல் இது... என்ன ஆனாலும் சரி..
அன்னையைத் தவிர வேறுயாரையும் போற்றிப் பாடமாட்டேன் என்று ஒரு புலவன்
இருப்பதாக வைத்துக் கொள்வோம்.. உலக பந்தத்திலே அவன்
ஈடுபட்டிருக்கின்றான். மனைவி, மக்கள் என்று குடும்பம் பெரிதாகி
விட்டது... அன்னையை மட்டுமே துதிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கும்
வேளை.. அவன் மனைவி இல்லத்தின் வறுமையை சுட்டிக் காட்டுகிறாள். பசியால்
வாடும் குழந்தைகளின் முகம் பார்க்கும் புலவன், புரவலரைத் தேடுகின்றான்.
அவரிடம் இருப்பதை ஏற்றியும், இல்லாததை இருப்பதாகவும் பாடுகின்றான்.
பொருள் பெறுகின்றான். தன் இல்லத்து வறுமையை ஒழிப்பதற்கு அவனுக்கு அதை
விடுத்து வேறு வழி இருப்பதில்லை... அதைத்தான் சுட்டிக் காட்டுகிறார்
அபிராமிப் பட்டர்.. (விட்டலனைப் பாடிவந்த துக்காராமின் கதையைக்
கேட்டிருக்கின்றீர்களா.??)
இதை வேறு விதமாகவும் காணலாம். மானுடராய்ப் பிறந்து விட்டோம்.. கவி
எழுதும் ஆற்றலைக் கலைமகள் தந்துவிட்டாள்.. ஆனால் மனது அவளை மட்டுமா
பாடுகின்றது.? அழகுள்ள மங்கையரைப் பாடுகிறது.. அவர்தம் அன்பைப் பெற
இல்லாததையும் பொல்லாததையும் சொல்கின்றது... (அதாங்க மின்னல் ஒரு கோடி...)
காமம் விளையாடுகின்றது... அதையும் அபிராமிப் பட்டர் காண்கின்றார்..
அன்னையே... நீயே தமிழைப் படைத்தாய்.. எனக்குக் கொடுத்தாய்.. என்னைப்போல்
அவனுக்கும் கொடுத்தாய்... என்னிடம் வந்த தமிழ் உன்னைப் பாடுகின்றது...
அவனிடம் சென்ற தமிழோ எவளையோ பாடுகின்றது.., இதுதான் உன்னருளா? என்று
அவளிடமே கேட்கின்றார்..
"ஐயன் அளந்த படி இரு நாழி கொண்டு " எம் தந்தையான ஈசன் அளந்த இரு படி
நெல்லைக் கொண்டு ... அய்யன் அளந்த கதை காஞ்சியில் நிகழ்ந்தது.. அதைக்
கொண்டுதான் அன்னையானவள் உலகுக்கு அன்னமளித்தாள் என்பார்கள்.. (வரலாற்றை
அறிந்தவர்கள் விரிவாக எழுதுங்களேன்.....) "அண்டம் எல்லாம் உய்ய அறம்
செயும் உன்னையும் போற்றி " அகிலத்தைக் காப்பதற்காக அறம் செய்யும்
உன்னையும் போற்றிப் பாடிப் பின்னர்....""ஒருவர் தம் பால் செய்ய
பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு " இன்னொருவரிடத்திலும் செம்மையான
பசுந்தமிழ்ப் பாமாலையைக் கொண்டு சென்று... தனது தேவைகளுக்காக
இன்னொருவரிடத்திலே சென்று... "பொய்யும் மெய்யும் இயம்ப வைத்தாய் "
பொய்யையும் உண்மையையும் பாட வைத்தாயே... "இதுவோ உந்தன் மெய்யருளே "
இதுதான் உனது அருளா?? இது உனக்குத் தகுமா? என அன்னையை வேண்டிக்
கேட்கின்றார்.. சேர்ந்தே இருக்கும் வறுமையும் புலமையும் புலவனுக்கு
மட்டுமே புரியும்... கலைமகள் குடிகொண்ட இடத்தில் அலைமகளைக் கொணர அவன்
படாத பாடு படவேண்டியிருக்கின்றது. நல்ல தமிழ்ப் புலவரான அபிராமிப்
பட்டருக்கு இவ்வேதனை புரிகின்றது.. பார் அபிராமி... அன்றைக்கு நீ இரு படி
நெல்லைக் கொண்டு உலகுக்கு அன்னமளித்தாய். மாந்தர் வாழ அறம் செய்தாய்..
இன்று பார்.. .உன்னை மட்டுமே பாடிப் பிழைப்பதற்கு வழியில்லை...
தமிழ்நாட்டில் எத்தனையோ ஆலயங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன... ஒரு சிலரின்
பக்திப் பிடிவாதத்தால் மட்டுமே அவை உய்கின்றன... எங்கள் கிராமத்துக்கு
அருகில் வைரவம் என்றொரு கிராமம் உள்ளது.. அன்னையானவள் சிவகாமியாக
அருள்புரியும் பூமி அது... ஞானாதீஸ்வரர் உடனுறை சிவகாமி அம்மனாக
அவ்விடத்துக் கோயில் கொண்டுள்ளாள்.. மிகவும் பழமையான ஆலயம்.. பெரிய ஊராக
இருந்த இப்பகுதி பஞ்சம் காரணமாக மக்களே இல்லாத கிராமம் ஆகிவிட்டது..
ஆயினும் அவ்வாலயத்தில் அப்பனுக்கும் அம்மைக்கும் பணிவிடைகள் செய்து வந்த
அந்தணர் குடும்பம் மட்டும் அக்கிராமத்தினை விட்டு நீங்காது இருந்தது..
அவர்களுக்கும் வறுமை வந்தது.. தளரவில்லை... அம்மையையும் அப்பனையும்
விட்டு அவர்கள் நீங்கவில்லை.. யாருமே செல்லாதிருந்த அவ்வாலயத்தின்
மதிப்பு அவ்விடம் நிகழ்ந்த ஒரு களவால் வெளிஉலகுக்குத் தெரியவந்தது..
ஆலயத்திற்கென மன்னர்கள் அளித்ததாகக் கூறப்படும் பஞ்சலோகத்தால் செய்யப்
பட்ட உற்சவ மூர்த்திகள் பல.. அவை திருடர்களால் களவாடப் பட்ட பின்னர்தான்
ஆலயத்தின் மதிப்பு பிறருக்குத் தெரிய வந்தது... அந்த ஐயரும் (அவர் பெயரை
மறந்து விட்டேன்.. ஆலயத்தைப் பற்றி முன்னர் நாம் எழுதிய கட்டுரை ஒன்று
இந்து முன்னணியின் பசுத்தாய் பொங்கல் மலரில் வெளிவந்துள்ளது.
திருக்கடவூரில் அபிராமிப் பட்டருக்கு நிகழ்ந்த நிகழ்வைப் போன்று
இவ்வாலயத்திலும் கண்பார்வையற்ற புலவனுக்கு நிகழ்ந்த ஒரு நிகழ்வு உள்ளது..
அது அடுத்த பதிவில்...) காவல்துறையினரால் சித்திரவதைக்குள்ளானார்.
அவ்வமயமும் அவர் தளரவில்லை.. பின்னர்அங்கே கிடைக்கப் பெற்ற உற்சவ
மூர்த்திகள் செந்தூர் முருகன் ஆலயத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன..
இன்றைய தினம் பலரும் வந்து செல்லும் பேராலயமாக அது மாறி விட்டது... இது
நிகழ்ந்தது அந்த அந்தணக் குடும்பத்தின் பிடிவாத பக்தியினால் மட்டுமே...
பிரதோச தினத்தன்று அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே
வருகின்றது... இடைக்காலத்தில் அக்குடும்பத்தாரை வறுமையில் வாட
விட்டதுதான் உன் மெய்யருளோ?? என அபிராமிப் பட்டர் அன்னையைக்
கேட்கின்றார்... வந்து அருள் தந்திடம்மா.. உன் பக்தர்கள் வறுமையில்
வாடுவதை நீ பொறுக்கலாமா? அன்றைக்கு உலகுக்கே படியளந்தாயே... இன்றைக்கு
இவர்கள் வறுமையைக் கண் திறந்து பாரம்மா... எனப் பாடுகின்றார் அபிராமிப்
பட்டர்.
பாடல் ஐம்பத்தெட்டு
அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே
விளக்கம் : அதிகாலையில் அருணோதயத்தின் போது மலரும் தாமரையின் மீதும்,
எனது மனமென்னும் தாமரை மீதும் அமர்ந்திருக்கும் இளம் தாமரை மொட்டினைப்
போன்ற திருமுலைகளையுடைய பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே...
தகுதியுடைய உனது கண்கள் எனும் கருணைத்தாமரையும், உனது அழகிய
முகத்தாமரையும், உன் திருக்கரங்களெனும் தாமரைகளும், உனது திருவடித்
தாமரைகளும் அல்லாமல் வேறொருவரிடத்திலும் நான் தஞ்சம் புகேன்...
கடந்த பாடலில் புலவர்களது தமிழ் பொருளுக்காகவும், வேறு
காரணங்களுக்காகவும் வேறொருவரிடத்துச் சென்று பொய்யும், மெய்யும் பாடுவதை
சுட்டிக் காட்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து நான் உன்னைத் தவிர வேறொரு
இடத்தில் தஞ்சம் புகேன் எனப் பாடுவது அவரது பக்திப் பிடிவாதத்தைக்
காட்டுகின்றது.. நெருப்பின் மீது நின்று பாடுகின்றேன்.. மன்னனைச்
சரணடைந்தால் உயிர் தப்பலாம்... ஆனால் நான் உன்னை மட்டுமே சரணடைவேன்
என்பது இதன் உட்கருத்து...தாமரைகளையே எல்லாவிடத்திலும் உவமையாக சொல்வது
பாடலின் சிறப்பு..
"அருண அம்புயத்தும்" அருணன் என்பவன் சூரியதேவனின் சாரதி.. அவன் வரும்
வேளையைத்தான் அருணோதயம் என்றழைக்கின்றோம்.. அருணன் உதயமாகும் வேளையில்
மலரும் தாமரை மலரிலும்.... (அம்புயம் என்பது தாமரையைக் குறிக்கும்). "என்
சித்த அம்புயத்தும்" என் மனமெனும் தாமரையிடத்தும்... "அமர்ந்திருக்கும் "
வீற்றிருக்கும் ... "தருண அம்புயமுலைத் தையல் நல்லாள் " இளந்தாமரை...
அதாவது தாமரை மொட்டு... தாமரை மொட்டுக்களையொத்த திருமுலைகளையுடைய
பெண்களில் சிறந்தவளான அபிராமி அன்னையே... "தகை சேர் நயனக் கருண
அம்புயமும்" தகுதியுடைய உனது கண்களெனும் கருணைத்
தாமரையும்.."வதனாம்புயமும் " உனது திருமுகத் தாமரையும் "கர அம்புயத்தும்"
உனது திருக்கரங்களெனும் தாமரைகளும் "சரண அம்புயமும்" உனது திருவடித்
தாமரைகளும் "அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே" அல்லாமல் நான் வேறெந்த
இடத்திலும் தஞ்சம் புகேன்...
எத்தனைத் தாமரைகள்.. தாமரையில் வீற்றிருப்பாள்... அவளது திருவடிகளும்
தாமரைகள்... திருக்கரங்களும் தாமரைகள்... திருமுகமும் தாமரை... கருணை
நிறைந்த திருக்கண்களும் தாமரை... திருமுலைகளோ தாமரை மொட்டுக்கள்....
அழகிய திருப்பாடல் அல்லவா?? உன்னை விடுத்து வேறெந்தவிடத்தும்... வேறு
யாரிடத்தும்... தஞ்சம் புகேன்... உன் மகனான என்னை நீ காக்க வேண்டுமானால்
விரைந்து வா... வந்து நிலவைக் காட்டு...
தொடரும் பாடல்களின் விளக்கத்தை அடுத்த மடலில் காண்போம்.. அனைவருக்கும்
எங்களின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. அன்னையைத் தஞ்சமடைந்து வறுமை
நீங்கி வளமெனும் ஒளியைப் பெற அன்னையின் திருப்பாதங்களை வேண்டுகின்றேன்...
பாடல் ஐம்பத்தொன்பது
தஞ்சம் பிறிது இல்லை ஈது அல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் அறியார் எனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே
விளக்கம் : தனிப்பெருமை பெற்ற நீண்ட கரும்பு வில்லையும், ஐந்து
மலரம்புகளையும் கொண்டு நிற்கும் அபிராமி அன்னையே... உன்னை விடுத்து வேறு
தஞ்சம் இல்லையென்று அறிந்திருந்தும்,உன்னையடையும் தவநெறிகளை
நெஞ்சத்திற்கு பயிற்றுவிக்க வேண்டும் என்று நினையாமலேயே இருக்கின்றேன்..
பஞ்சை விட மெல்லிய பாதங்களைக் கொண்ட பெண்டிர், தம் மக்கள் செய்த
தவறுகளுக்காக அவர்களை அடிக்க மாட்டார்கள் அன்றோ?? அதுபோல் நீயும் என்னைத்
தண்டியாது அருள வேண்டும்.
பெற்ற தாய் தாம் பெற்ற மக்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை
அடிப்பதில்லை... அவர்களின் அன்பு மிகுதியால் அக்காரியத்தை அவர்கள்
செய்வதில்லை.. மானுடக்குலத்தில் உதித்த இப்பெண்களே இவ்வாறெனின்,
அன்னையே... நீ உலக மாந்தருக்கெல்லாம் தாய்... என்னை நீ தண்டிப்பாயோ???
இல்லவே இல்லை..அது நீ பெருங்கருணை பெற்றவள். எனவே என்னைத் தண்டிக்க நீ
விரும்புவதில்லை என்பது பாடலின் உட்கருத்து..
மனிதர்களின் அன்பு மற்றும் தெய்வத்தின் அன்பு இரண்டுக்கும் வேறுபாடு
உண்டு.. மானுடர் என்றாகிலும் ஓர்நாள் தாம் அன்புவைத்தவர் மீது, வெறுப்பு
ஏற்படும் நிலைக்குத் தள்ளப் படலாம். ஆனால் அன்னை அபிராமியானவள் நம் மீது
வைத்துள்ள அன்பு கரையற்ற கடல் போன்றது. அதனால்தான் அவளை "கருணாசாகரி.."
எனப் போற்றுகின்றனர்.. கருணைக் கடல் அவள்.. புனித விவிலியத்தில் இயேசு
நாதர் ஓர் உவமை சொல்கின்றார்.."உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில்
அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால்
அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால் பொல்லாதவர்களாகிய நீங்கள்
உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது,
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு
நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" இறைவனது அன்பு
மேலானது.. "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல" என்பது போல்
அன்னை நம் மீது வைத்துள்ள அன்பை மானுடராகிய நம்மால் அறிந்து கொள்ள
இயலவில்லை.. எனவேதான் மாற்றுப்பாதையில் சென்று விழுந்து விடுகின்றோம்..
அவ்வமயமும் அவள் நம்மைக் கைவிடுவதில்லை.. நம்மைக் கைதூக்கி விடுபவளும்
அவளேதான்.
"ஒற்றை நீள்சிலையும் அஞ்சு அம்பும் இக்கு அலராகி நின்றாய் " ஒரு நீண்ட
கரும்பு வில்லையும் - அது தனித்தன்மை வாய்ந்த வில்.. ஐந்து
மலரம்புகளையும் கொண்டு நின்றவளே..அபிராமியே... ."தஞ்சம் பிறிது இல்லை ஈது
அல்லது என்று " உன்னை விடுத்து.. உன் திருவடித்தாமரைகளை விடுத்து வேறு
தஞ்சமே இல்லை என்று அறிந்திருந்தும், "உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில
நினைக்கின்றிலேன்" உன்னை அடைவதற்குரிய தவ நெறிகளைப் பயில என் நெஞ்சத்தில்
நினையாதிருக்கின்றேன்.. "அறியார் எனினும்" அறியாதவர் ஆனபோதிலும் "பஞ்சு
அஞ்சு மெல்லடியார்" பஞ்சை விட மென்மையான பாதங்களையுடை மானுடப் பெண்டிர்
... பஞ்சும் அஞ்சும்படியான பாதங்களையுடையோர்....”அடியார் பெற்ற பாலரையே”
தாம் பெற்ற குழந்தைகளை அடிக்க மாட்டார்களே..! அன்னையே...நீயோ உலகத்திற்கே
அன்னை... நானோ தவறிழைக்கும் கடை மானுடன்.. என்னையும் நீ தண்டிக்காது
அரவணைத்திட வேண்டும்...
பாடல் அறுபது
பாலினும் சொல் இனியாய் பனி மாமலர்ப் பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின்
மேலினும் கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே
விளக்கம் : பாலினும் இனிய சொற்களையுடைய அபிராமி அன்னையே... குளிர்ச்சியான
உன் திருவடித்தாமரைகளை வைக்க, திருமாலை விட, அமரர்கள் அனைவராலும் வணங்கப்
படும் கொன்றைப் பூவை சடைக்கணிந்த சிவபெருமானின் சடையையும் விட,
உன்னடியின் கீழ் நின்று உன் புகழினைப் பாடும் நான்கு வேத பீடங்களையும்
விட, நாயைப் போன்ற அடியேனான எனது நாற்றம் வீசும் தலை சிறந்ததோ??
அன்னை தனது திருவடித்தாமரைகளை அபிராமிப் பட்டரின் தலைமேல் வைத்ததாகப்
பலமுறை குறிப்பிட்ட அவர், இவ்விடத்து, என்றன் தலைமீது உந்தன்
திருப்பாதங்களை வைத்தமைக்கு அது என்ன சிறப்பைப் பெற்றதம்மா? என
வினவுகின்றார்.. “பாலினும் சொல் இனியாய்” பாலைவிட இனிமையான சொற்களைப்
பேசும் அபிராமி அன்னையே... “பனி மாமலர்ப் பாதம் வைக்க” குளிர்ச்சியான
மலரினைப் போன்ற உனது திருப்பாதங்களை வைக்க... “மாலினும் “ திருமாலை விட
“தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார்ச்சடையின் மேலினும்” கொன்றைப்பூவை தனது
சடையின் மேல் அணிந்து,அமரர்கள் அனைவராலும் வணங்கப்படும் சிவபெருமானின்
சடையின் மேல் பாகத்தை விட, “கீழ் நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் “ உனது திருவடியின் கீழ் நின்று பாடும் பண்பையுடைய வேத பீடங்கள்
நான்கை விட, “சால நன்றோ அடியேன் முடை நாய்த் தலையே” நாயைப் போன்ற
அடியேனான எனது நாற்றம் நிறைந்த தலை சிறந்ததோ? நீ உன் திருவடித்தாமரைகளை
என் தலை மீது வைத்து விட்டாயே... என் தலை நாயின் தலை போன்றது... நாற்றம்
நிறைந்தது... வேதங்களின் மேல் உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஈசனாரின்
சடைமுடி மீது உந்தன் திருவடிகளை வைத்தாய்... ஆயினும் என்றன் தலை மீதும்
வைத்து விட்டாயே.. அவற்றுடன் ஒப்பிடத்தகுந்ததா அடியேனின் தலை... ? என
அன்னையை வினவுகிறார் அபிராமிப் பட்டர்.
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்...
விளக்கம் : அபிராமி அன்னையே... மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகளே..
சிவந்த விழிகளையுடைய திருமாலின் அன்புத் தங்கையே... நாயைப் போன்ற கீழோனான
என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி, விரும்பி இவ்விடம் வந்து, நீயே
நினைவில்லாது என்னை ஆண்டு கொண்டாய். உன்னை உள்ளபடியே அறிந்துகொள்ளும்
ஞானத்தையும் எனக்குத் தந்தருளினாய்.. இதற்கு நான் என்ன பேறு பெற்றேன்..
மணிவாசகப் பெருமான் தனது திருவாசகத்தில் குறிப்பிடும் அடிகள் நினைவுக்கு
வந்தன.. "நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான
தத்துவனே"..அதன்பொருள்தான் இப்பாடலில் மறைந்திருப்பதாக உணர்ந்தேன்.
தெருக்கோடியில் உள்ள குப்பைத் தொட்டியில் ஒரு நாய் குட்டிகளை
ஈன்றிருக்கின்றது என்று வைத்துக் கொள்வோம்.. நாம் அவ்விடம் போய்
வரும்போது, "நம் வீட்டு நாய்க்குட்டி எவ்வளவு அழகாக இருக்கின்றது...
ஆனால் இந்த நாய்க்குட்டி எவ்வளவு அசிங்கமாக இருக்கின்றது" என்று
எண்ணுவோம்.. அந்நாய்க்குட்டி நம் காலைச் சுற்றி வந்தால் "தூரப்போ நாயே"
என விரட்டுவோம். மாநகராட்சிக்கு அலைபேசியில் தகவல் தந்து
அந்நாய்க்குடும்பத்தை இல்லாதபடி செய்து விடுவோம்.. மாநகராட்சி வண்டி
வந்து அந்நாய்க்குட்டிகளைத் தூக்கிச் செல்லும் காட்சியைக் கண்டு அந்த
தாய் நாய் சும்மா இருக்குமா? நாம் நமக்கென்ன என்று இருப்போம். அல்லது
தெரு சுத்தமாகிறதே என்று மகிழ்வோம்.. ஆனால் அந்த தாய் நாய்.??
குரைக்காதா?? விரட்டாதா?? நாயாக இருப்பினும் அதற்கும் ஒரு தாய்
உண்டல்லவா? அத்தாயின் அன்பு தன் குட்டி நாய்மீது குறைவதுண்டோ? இன்னொரு
உதாரணம்.. தெருவிலே பிச்சை எடுக்கின்ற அழுக்கு உடைகளை அணிந்த சிறு
குழந்தைகளைக் காணுங்கள். நம் மகிழ்வுந்தை நோக்கி அவர் வரும் வேளை, நாம்
அவர்களை விரட்டி விடுவோம்.. ஆனால் அவர்களின் தாய் அவர்களை வெறுப்பதுண்டோ?
நீ குளிக்கவில்லை.. அழுக்குப் பிள்ளை அருகே வராதே ! எனத் தடுப்பதுண்டோ?
இல்லையல்லவா?? ஆனால் இறைவன் அத்தாயை விட சிறந்த குணம் படைத்தவன். தாயின்
அன்பைவிட இறையன்பு உயர்ந்தது... அன்னை அபிராமியானவள் அபிராமிப் பட்டரை
ஏன் தேடி வந்தாள்? அவர் மீது அவள் கொண்ட அன்பினாலேயே...
"தாயே" அபிராமி அன்னையே... "மலைமகளே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த
மலைமகளே... "செங்கண்மால் திருத்தங்கச்சியே" சிவந்த கண்களையுடைய
திருமாலின் தங்கையே..."பவள வாய் கமலச் செங்கண்" என்னும் ஆழ்வார்ப்
பாசுரம் நினைவுக்கு வந்தது... தங்கையை தங்கச்சி என்று சொல்லலாம். அதென்ன
திருத் தங்கச்சி..?? ஆதிபராசக்தியாக திருமாலைப் படைத்த தேவிதான் மலைமகளாக
அவதரித்து ஈசனை மணந்து கொண்டபோது திருமாலின் தங்கையாகின்றாள்.
அச்சமயத்தில் அவளுக்குரிய மதிப்பை ஏற்றியுரைக்க "திருத்தங்கச்சி" என
அபிராமிப் பட்டர் குறிப்பிடுகின்றார். மேலும் மற்ற தங்கையரிடமிருந்து
நாராயணனின் தங்கை வேறுபட்டவள். உயர்ந்தவள் என்று குறிப்பதற்காகவும்
இவ்வண்ணம் உரைத்தார். "நாயேனையும் இங்கு ஒரு பொருளாக " நாயைப் போன்ற
கேவலமான என்னையும் ஒரு பொருட்டாக எண்ணி... இந்த காலத்தில் நாயையெல்லாம்
கேவலம் என்று எண்ணுதல் தவறு என்று நினைக்கின்றேன் (தெருநாய்களைத் தவிர..
ஆனால் அவைதான் அன்பு மிக்கவை).. நம் கிராமத்தில் ஆடுகள் நிறைய
வைத்திருப்போர் அவ்வாடுகளை மந்தையாக மேய்ப்பதற்கு அழைத்துச்
செல்வதுண்டு.. ஆனால் ஒரேயொரு ஆடு வைத்திருப்போர், அதை ஒரு கயிற்றால்
கட்டி அக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, மேய்ப்பதற்கு அழைத்துச்
செல்வார்கள்.. பெருநகரில் அதிகாலை, சங்கிலியால் நாயைப் பிடித்துக் கொண்டு
நடைபயிற்சி மேற்கொள்ளும் அன்பர்களைக் கண்டால் எனக்கு, கிராமத்துக்
காட்சிகளே நினைவுக்கு வரும்.. "ஏன் நாயை மேய்க்கிறாங்க...?" என்று
வியப்பேன். மேலும் நமக்கு வீட்டுக் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிக்
கொடுக்கக் கூட பணம் இருக்காது.. ஆனால், அவர்கள் நாயை மகிழ்வுந்தில்
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வர்... சரி.. இந்த இடத்தில் நாம
பழையகாலத்தில் நாய்களுக்கு இருந்த நிலையை மனத்தில் கொள்வோம்.. "நயந்து
வந்து" விரும்பி இங்கே வந்து "நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் " நீயே
நினைவில்லாது தன்னை மறந்து என்னை ஆண்டு கொண்டாய்...அதுதான் அபிராமிப்
பட்டர் பெற்ற பேறு "பேயேன்" பேயேனாகிய எனக்கு ... இந்த வழக்குச் சொல்
கிராமத்து மக்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.. யாரையாவது
திட்டும்போது "அட பேயா" எனத் திட்டுவதுண்டு.. எங்காவது ஏமாந்து வந்து
நின்றால், " நீ பேயன் தான.." என்று சொல்லும் வழக்கும் உண்டல்லவா? பேயேன்
என்றால் அறிவில்லாதவன்... பேயைப் போன்றவன்... என்று பொருள் கொள்க..
"நின்னை உள்ள வண்ணம்" உன்னை உள்ளபடியே...."அறியும் அறிவு தந்தாய் "
அறிந்து கொள்ளும் அறிவினை எனக்குத் தந்தருளினாய்.. "என்ன பேறு பெற்றேன்"
இதனைப் பெறுவதற்கு நான் என்ன பேறு பெற்றேனோ...?
பாடல் அறுபத்திரண்டு
தங்கச் சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கைக் கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே
விளக்கம் : மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தை அழித்து, மதங்கொண்டு
சிவந்த கண்களையுடைய யானையின் தோலை தன் மேனியில் போர்த்திய சிவபெருமானின்
திருமேனியை அடைய, உன் திருமுலைகளை அம்பாகக் கொண்டு குறிவைத்த நாயகியே...
பொன்னைப் போன்ற சிவந்த திருக்கரங்களில், கரும்பு வில்லையும்,
மலரம்புகளையும் கொண்ட உனது திருக்கோலம் எப்போதும் என் சிந்தையில்
நிற்கின்றது...
அபிராமிப் பட்டர் அடிக்கடி ஈசனை அம்மையானவள் தோற்கடித்த விதத்தைப்
பாடுகின்றார்.. யாராலும் வெல்லப்படாதவனாலும் (மன்மதனாலும்) கூட
வெல்லமுடியாத ஈசனை உன் திருமுலைகளால் வெற்றி கொண்ட அன்னையே .. எனப்
பாடிய அபிராமிப் பட்டர் இவ்விடத்து அன்னையின் கொங்கைகளை அம்புக்கு
ஒப்பிடுகின்றார்.. ஈசன் பொன் நிறைந்த மேருமலையை வில்லாக வளைத்தான்..
முப்புரங்களை அழித்தான்.. மதங்கொண்ட யானையின் தோலையுரித்து தன்
ஆடையாக்கிக் கொண்டான்.. நீ என்ன செய்தாய்.. அவனை எதிர்த்து இரு அம்புகளை
விட்டாய்.. அவை... உன் கொங்கைகள்... அவனும் வீழ்ந்தான்.. அவனது இடப்பாகம்
நீ குடியேறிவிட்டாய்.. என்று பாடுகின்றார்... அன்னையின் வெற்றி, ஈசனது
வெற்றியை ஒன்றுமில்லாதது ஆக்கி விடுகின்றதே என வியக்கின்றார்..
(இன்னிக்கு நாட்டுல பலபேர் நிலை அதானே அப்படின்னு சிலர் முணுமுணுப்பது
கேட்கின்றது)
"தங்கச் சிலை கொண்டு தான் அவர் முப்புரம் சாய்த்து" பொன்மலையாம்
மேருமலையை வில்லாக வளைத்து முப்புரங்களை அழித்து, "மத வெங்கண் கரி உரி
போர்த்த செஞ்சேவகன் " மதம் நிறைந்த, வெம்மையான கண்களைக் கொண்ட யானையின்
தோலை தன் மேனியின் மீது போர்த்திய செஞ்சேவகனான ஈசன் "மெய்யடையக்"
திருமேனியையடைய.. அவனது திருமேனியின் இடப்பாகத்தை அடைய... "கொங்கைக்
குரும்பைக் குறியிட்ட நாயகி" கொங்கையெனும் அம்பினைக் கொண்டு குறிவைத்த
நாயகியே... அபிராமி அன்னையே... ஆதிபராசக்தியே... "கோகனகச் செங்கைக்
கரும்பும் மலரும் " சிறந்த பொன்னையொத்த உனது சிவந்த திருக்கரங்களில் நீ
ஏந்திய கரும்பு வில்லும், மலர் அம்புகளும்.. "எப்போதும் என் சிந்தையதே"
எச்சமயமும் என் சிந்தையில் நீங்காதிருக்கின்றன....
அன்னையை உன் உருவம் என் சிந்தையில் நீங்காது எனக் குறிப்பிடுகின்றார்.
ஏன் கரும்பு வில்லையும், மலரம்புகளையும் குறிப்பிடவேண்டும்..? ஏற்கெனவே
சொன்னது போல், என் மனமென்னும் கரும்பை நீ வில்லாகக் கொள்... என்
இந்திரியங்களை உன் கணைகளாகக் கொள்...அப்படி உன்னைக் காணும்
திருக்கோலம்தான் நான் என்றென்றும் சிந்தையில் கொண்டிருக்கும்
திருக்கோலம். என் மனமும் உன் கையில்.. என் இந்திரியங்களும், அவற்றின்
இச்சைகளும் உன் கையில்... அபிராமி... நீயே வழி நடத்து....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி...
விளக்கம் : நற்கதிக்குச் செல்லவேண்டிய இடத்திற்கு நாம் தேறிச்
சென்றடைவதற்குரிய வழியைக் காட்டுபவள் அன்னை அபிராமியே ஆகும். ஆறு
சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள் இவளே என்று அறிந்திருந்தும், வேறு
சமயங்கள் உண்டு என்று கொண்டாடும் வீணர்களின் செயலானது ஒரு மலையை சிறு
தடியினைக் கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலைப் போன்றதாகும்..
சமயச் சண்டைகள் அக்காலத்திலேயே மிகவும் பயங்கரமானதாக
நடைபெற்றிருக்கின்றன.. பெரும்பாலும், சமண சமயத்திற்கும், சைவ
சமயத்திற்கும் இடையேயான பூசல்கள், சைவத்திற்கும், வைணவத்திற்கும்
இடையேயான பூசல்கள் என சமயப் பூசல் தொடர்ந்து
கொண்டேயிருந்திருக்கின்றன... இந்து சமயத்தை நெறிப்படுத்திய ஆதி சங்கரர்
ஆறு வகையான வழிமுறைகளை முறைப்படுத்தினார், அவை, சக்தியை முதன்மைப்
படுத்தும் சாக்தம், சிவபெருமானை முதன்மைப் படுத்தும் சைவம், திருமாலை
முதன்மைப் படுத்தும் வைணவம், கணபதியை முதன்மைப் படுத்தும் காணபத்யம்,
முருகனை முதன்மைப் படுத்தும் கௌமாரம், சூரியனை முதன்மைப் படுத்தும்
சௌரம். அபிராமிப் பட்டர் இவ்வாறு சமயங்களுக்கும் தலைவியாய் இருப்பவள்
அன்னை அபிராமியே எனக் குறிப்பிடுகின்றார்.
"தேறும்படி சில ஏதுவும் காட்டி முன் செல்கதிக்குக் கூறும் பொருள் "
நற்கதிக்குச் சென்றடைவதற்கு, தேறுவதற்குரிய நெறிமுறைகளைத் தருபவள் அன்னை
அபிராமியே.... "சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்"
அவளால் நெறிப்படுத்தப் பட்ட ஆறு சமயங்களுக்குத் தலைவியாய் இவளே இருப்பதை
அறிந்திருந்தும்... “வேறும் சமயம் உண்டு என்று” வேறு சமயங்கள் உண்டு..
அவையே உயர்ந்தது என்று ..”கொண்டாடிய வீணருக்கே..” கொண்டாடும் வீணர்களின்
செயலானது... “குன்றில் கொட்டும் தறி குறிக்கும்” மலையை சிறு தடியைக்
கொண்டு தகர்க்கும் முட்டாள்த்தனமான செயலுக்கு ஒப்பானதாகும்..
இன்றைக்கு இந்தியாவில் நிகழ்ந்து வரக்கூடிய மோசமான நிகழ்வு இதுதான்..
கல்லையும் மண்ணையும் கடவுளென்று வணங்காதீர்கள்.. எங்களிடம் வாருங்கள்..
உண்மையான கடவுளைக்காட்டுகிறேன் என்று பேசி மதமாற்றத்தை ஏற்படுத்தும்
முயற்சி பெரும்பாலும் நடந்து வருகின்றது.. அந்தக் காலத்திலேயும் இதைப்
போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.. அதைத்தான் அபிராமிப் பட்டர்..
எங்கள் அன்னை வழிப்படுத்திய சமயங்கள் ஆறு... அவை ஆறுக்கும் தலைவி இவளே...
இதை விடுத்து வேறு சமயங்களைப் பரப்ப நினைக்கும் அறிவிலிகளே... உங்களால்
அது முடியாது... உங்கள் செயல் முட்டாள்த்தனமானது.. மலையை சிறுதடியைக்
கொண்டு தகர்க்க நினைக்கும் செயலைப் போன்றது.. எனவே அம்முட்டாள்த்தனத்தை
விட்டொழியுங்கள்.. என்கிறார்...
பாடல் அறுபத்து நான்கு
வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின் புகழ்ச்சி அன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனி ப்ரகாசம் அன்றிக்
காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே
விளக்கம் : வீணாகப் பலிகளை வாங்கும் மற்ற தெய்வங்களிடம் சென்று
அவர்களிடம் அன்பு செய்ய மாட்டேன்.. உன்னிடம் மட்டுமே அன்பு செய்வேன்.
உன்னைப் புகழும் புகழ்ச்சியைத் தவிர வேறு யாரையும் புகழ மாட்டேன்..
மண்ணிலும், விண்ணிலும், நான்கு திசைகளிலும், எல்லாவிடத்திலும் உனது
திருமேனி பிரகாசத்தையன்றி வேறெதுவும் பார்க்க மாட்டேன்..
கடந்த பாடலில் வேறு சமயங்கள் உயர்ந்தவை எனப்பேசும் வீணர்களின் செயலைப்
பற்றி விமர்சித்த அபிராமிப் பட்டர் இப்பாடலில், மற்ற தெய்வங்களின்
செயல்களைப் பற்றிப் பேசுகிறார்.. தேவையான நற்பலன்களை அளிக்க இயலாத
தெய்வத்திற்கு செய்யப்படும் பூசனைகள், பலிகள் அனைத்தும் வீணே...
அதைத்தான் வீணே பலிகவர் தெய்வம் எனக் குறிப்பிடுகின்றார்.
“வீணே பலி கவர் தெய்வங்கள் பால் சென்று “ தனக்கு பலி கொடுப்பவனின்
தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் வீணாக பலிகளை வாங்கும் சிறு
தெய்வங்களிடம் சென்று “மிக்க அன்பு பூணேன் “ அவர்கள் மேல் அன்பு பூண
மாட்டேன்.. எனக்குத் தேவையானவற்றைத் தருவதற்குரிய சக்தியில்லாத வேறு
தெய்வங்களிடத்து நான் ஏன் அன்பு பூணவேண்டும். நான் அதைச் செய்ய
மாட்டேன்.. ஏனெனில் “உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் “ நான் உன்மேல் அன்பு
பூண்டு கொண்டேன்.. எனக்கு எல்லாமுமாய் இருக்கும் என் அன்பு அன்னையே...
அபிராமியே... உன்மேல் மட்டுமே அன்பு பூண்டிருக்கின்றேன்.. “நின்
புகழ்ச்சி அன்றிப் பேணேன் ஒரு பொழுதும்” எப்போதும் உன்னைப் புகழ்வதைத்
தவிர வேறெதுவும் செய்ய மாட்டேன்.. வேறு யாரையும் புகழ மாட்டேன்..
“திருமேனி ப்ரகாசம் அன்றிக் காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே”
மண்ணுலகிலும் சரி..விண்ணுலகிலும் சரி.. நான்கு திசைகளிலும் சரி...
எல்லாவிடத்திலும் சரி. உனது திருமேனிப் பிரகாசத்தையன்றி வேறெதுவும் காண
மாட்டேன்... “எங்கெங்கு நோக்கினும் சக்தியடா” எனும் முண்டாசுக் கவிஞனின்
வரிகள் நினைவுக்கு வருகின்றன... அன்னையின் திருமேனிப் பிரகாசமே
எல்லாவிடத்திலும் தனக்குத் தென்படுவதாக உரைக்கும் அபிராமிப் பட்டரின்
இப்பாடல் நம் பக்தியின் பலத்தை அதிகரிக்கும்... பாடிப் பாருங்கள்.
பக்தியில் இன்புறுங்கள்...
மீண்டும் சந்திப்போம்.. நன்றி..
--
விளக்கம் : மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட பெருவெளியும் காணும்படி
மன்மதனின் தேகத்தை தகனம் செய்த தவத்திற்சிறந்த சிவபெருமானுக்கு, நீண்ட
வலிய திருக்கரங்கள் பன்னிரண்டும், செம்மையான திருமுகங்கள் ஆறும் கொண்ட
சிறந்த அறிவுடைய திருமகனான முருகன் மகனாகப் பிறக்கும் சக்தியைக்
கொடுத்தது அபிராமி அன்னையே உன் வல்லமை அல்லவா?
காமதேவன் மன்மதனை ஐயன் தம் நெற்றிக்கண் திறந்தெரித்த திறமும், அத்திறம்
அம்மையிடம் தோற்றுப் போன விதமும் மீண்டும் மீண்டும் அபிராமிப் பட்டரால்
பாடப்படுவதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? வாழும் கலை ஆழ்நிலைத்
தியானப் பயிற்சி முகாமுக்குச் சென்றிருந்தபோது குருதேவர் கூறிய சில
செய்திகள் இதற்குப் பொருந்துகின்றன. நம் உடலின் சக்திச் சக்கரங்களைப்
பற்றி விளக்கும் போது சொன்ன சில செய்திகளின் சாராம்சம் இது.. ஒவ்வொரு
சக்கரத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு என்பதை விளக்கிய அவர் ஒன்றிருந்தால்
மற்றொன்றில்லை என்பதைத் தெளிவுபடுத்தினார். காமம் இருக்கும் இடத்தில்
ஆக்க சக்தி இருப்பதில்லை.. ஆக்க சக்தி இருக்குமிடத்தில் காமம்
இருப்பதில்லை. இது ஸ்வாதிஷ்டனா சக்கரத்தின் இருபக்கங்கள் என்பதைத்
தெளிவுபடுத்தினார்.
காமனின் தேகத்தை அழித்த ஐயனால் ஓர் அறிவுள்ள, அழகிய திருக்குமரனைப்
பெற்றெடுக்க இயன்றது. காமனை அழித்த அதே நெற்றி நெருப்பே குமரன்
பிறப்புக்கும் காரணமாய் அமைந்தது.. நம் மனத்தில் இருக்கும் காம இச்சைகளை,
மன்மதக் கணைகளை நாம் விலக்கும் போது அவ்விடத்தில், அறிவு ஒளிபெற்ற கந்தன்
பிறக்கின்றான். காமன் இடத்தைக் கந்தன் நிரப்புகின்றான்.. காமம்
முற்றிலும் குடிகொண்டிருந்தால், கந்தன் பிறப்பதில்லை. இப்பாடலின் மூலம்
நாம் பெறவேண்டிய கருத்து இதுதான். உலகம் மன்மதனுக்கு அடிபணிகின்றது..
எனவேதான் யாராலும் வெல்லப்படாத தன்மை அவனுக்குக் கிட்டியது... ஆயினும்
அவன் ஈசனிடம் தோற்றான். தோற்றவன் அம்மை மூலம் அவ்வீசனையும் வென்றான்..
அது அம்மையின் சக்தி...
"ககனமும் வானும் புவனமும் காண " மண்ணுலகமும், விண்ணுலகமும், இடைப்பட்ட
உலகமும் காணும்படி...
ககனம் எனும் பதத்தைப் பற்றி கடந்த பதிவில் நாம் விளக்கவில்லை..
இப்பதமானது சித்தர்களின் உலகத்தைக் குறிக்கின்றது. அவர்கள் மண்ணுலகிலும்
இருப்பதில்லை.. விண்ணுலகிலும் இருப்பதில்லை. இடையில் அவர்களுக்கென்று ஒரு
உலகம் உள்ளது. மண்ணுலகில் வாழ்வோருக்கும், விண்ணுலகின் அமரர்களுக்கும்
ஒரு பாலமாக இவர்கள் செயல்படுகின்றனர். ஆகவே அனைவரும், அண்டசராசரத்தில்
உள்ள அத்தனை ஜீவராசிகளும் காணும்படி... " விற்காமன் அங்கம் தகனம் முன்
செய்த தவப்பெருமாற்கு " கரும்பினாலான வில்லையுடைய காமனின் உடலை அன்று
தனது நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த, தவத்திற்சிறந்த ஈசனுக்கு...
"முந்நான்கு" "தடக்கையும்" நீண்ட வலிய பன்னிரு திருக்கரங்களும்,
"இருமூன்று" "செம்முகனும்" ஆறு அழகிய சிவந்த திருமுகங்களும், "எனத்
தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயது " கொண்ட பெருமைகளையுடைய அறிவில்
முதிர்ந்த சிறந்த மகனான முருகன் மகனாகப் பிறந்தது "வல்லி நீ செய்த
வல்லபமே" "அன்றோ" அபிராமியே... அன்னையே.... உனது வல்லமையால் அன்றோ....?
அழகிய திருக்குமரன் ஈசனுக்கு மகனாகப் பிறந்தது அம்மையின் வல்லமை என்பதை
அழகுற விளக்கும் பாடல் இது...
பாடல் அறுபத்தாறு
வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச் செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின் திருநாமங்கள் தோத்திரமே
விளக்கம் : பசும்பொன்னாலான மேருமலையை வில்லாக வளைத்த ஈசனுடன்
வீற்றிருக்கும் அபிராமி அன்னையே... நான் அருஞ்செயல்கள் செய்யும் வல்லமை
ஒன்றும் இல்லாதாவன். மிகவும் சிறியவன். நின் மலர்த்திருவடிகளை விடுத்து
வேறொன்றின் மீதும் பற்றில்லாதவன். தீவினைகள் புரிபவனாகிய நான் பாடுகின்ற
பாடல்கள் குற்றமுடையதாக இருப்பினும் அவை உன் திருநாமங்களைப் போற்றும்
துதிப் பாடல்கள் என நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்..
அபிராமி அந்தாதி எனும் களஞ்சியத்தை நமக்களித்த அபிராமிப் பட்டர் தம்
பாடல்கள் குற்றம் நிறைந்தவை எனக் குறிப்பிடுவது நமது அகங்காரத்தின் மீது
சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போன்றுள்ளது. பாடல்கள் பாடி அம்மையை நேரில்
வரச்செய்யும் வல்லமை படைத்த அவர் தான் வல்லமை ஒன்றும் அறிந்ததே இல்லை
என்கிறார். பக்தியிற் சிறந்த பெரியார் (இவ்விடத்துப் பெரியவர் எனப்
பொருள் கொள்க...), தம்மை சிறியவன் என்கிறார்.. ஆயினும் அன்னை மேல் கொண்ட
பக்தியை உரைக்கையில் மட்டும் உண்மையை உரைக்கின்றார். உனது திருப்பாதங்களை
விடுத்து வேறெந்த பொருள்மீதும் பற்றில்லை என்கிறார். தன் பாடல்கள்
குற்றம் நிறைந்தவை எனக்குறிப்பிட்டவர் அவை அன்னையைத் துதி செய்யும்
தோத்திரப் பாடல்கள் எனக் குறிப்பிடுகின்றார். "பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் " பசும்பொன்னாலான மேரு மலையை வில்லாக
வளைத்த ஈசனோடு வீற்றிருக்கும் அபிராமி அன்னையே.. "வல்லபம் ஒன்றறியேன் "
அருஞ்செயல்கள் புரியும் வல்லமைகள் ஒன்றும் அறியாதவன். "சிறியேன்"
சிறியவன்." நின் மலரடிச் செம் பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் " செம்மையான
உனது மலரடிகளை விடுத்து வேறெந்த பற்றுமில்லாதவன். "வினையேன்" தீவினைகள்
பல புரிந்தவனாகிய நான் "தொடுத்த சொல்" தொடுத்துத் தரும்
இப்பாமாலை.."அவமாயினும்" குற்றம் நிறைந்ததாயினும், " நின் திருநாமங்கள்
தோத்திரமே" அவை உனது திருப்பெயர்களை துதிசெய்யும் பாடல்களே... எனவே நீ
அவற்றை வெறுக்காது, தள்ளாது ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாடல் அறுபத்து ஏழு
தோத்திரம் செய்து தொழுது மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பார் எங்குமே
விளக்கம் : அபிராமி அன்னையே.. உன்னைத் துதித்து, தொழுது, மின்னலையொத்த
உன் திருமேனித் தோற்றத்தை ஒரு மாத்திரைப் பொழுதாவது தம் மனத்தில் வைத்து
தியானிக்காதவர்கள், தங்களின் வளமை, குலம், கோத்திரம், கல்வி, குணம்
எல்லாவற்றிலும் குறைவுற்று, உலகெங்கிலும், தினந்தோறும் வீடுவீடாக சென்று
பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்பார்கள்.
அன்னையின் அன்பர்களின் பெருமையை ஏற்றியுரைத்த அபிராமிப் பட்டர் அன்னையை
மனத்தில் வையாதவர் நிலை எங்ஙனம் ஆகும் என இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.
"தோத்திரம் செய்து " அபிராமி அன்னையே உன்னைத் துதித்து "தொழுது" வணங்கி..
"மின் போலும் நின் தோற்றம் " மின்னலையொத்த நின் திருமேனித் தோற்றத்தை
"ஒரு மாத்திரைப் போதும் " ஒரு மாத்திரைப் பொழுதாவது .. "மனத்தில்
வையாதவர் " மனத்தில் வைத்து தியானிக்காதவர் "வண்மை" தங்களது வளமை,
"குலம்" குலப் பெருமை "கோத்திரம் " கோத்திரப் பெருமை "கல்வி" கல்வியறிவு,
"குணம்" நற்குணங்கள் இவை எல்லாவற்றிலும் "குன்றி" குறைவுற்று "நாளும்"
தினந்தோறும் "குடில்கள் தொறும்" வீடுகள் தோறும், "பாத்திரம் கொண்டு"
பிச்சைப் பாத்திரமான திருவோட்டைக் கொண்டு "பலிக்கு உழலா நிற்பர் "
தேவைகளுக்காக ஏந்தி நிற்பார்கள். காத்து நிற்பார்கள்.. பிச்சைக்காக
காத்திருப்பார்கள்.. “பார் எங்குமே” உலகெங்கிலுமே....
பாடல் அறுபத்தெட்டு
பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் முருகுசுவை ஒளி ஊறு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே
விளக்கம் : நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களும்,
அவற்றின் தன்மைகளான, மணம், சுவை, ஒளி, தொடு உணர்வு, ஒலி இவையெல்லாம்
ஒன்றுபடச் சேரும் சிறிய திருவடிகளையுடைய தலைவியான அழகி சிவகாமியின்
திருவடியைச் சார்ந்திருக்கும் தவத்தினை உடையவர்களிடத்து இல்லாத செல்வம்
இல்லை...
கடந்த பாடலில் அன்னையை நினையாதோர் நிலையையும், இப்பாடலில் அன்னையின்
திருவடிகளைச் சார்ந்தோர் நிலையையும் அபிராமிப் பட்டர் விளக்கியுள்ளார்.
அன்னை சிவகாமியானவள் அழகு நிறைந்தவள். சிறிய பாதங்களையுடவள்.. ஆனால்
அவளது சிறிய பாதங்கள் ஐம்பூதங்களையும், அவைகளின் தன்மைகளையும் ஒன்று
சேரப் பெற்றவை.. அவளது திருப்பாதங்களைச் சேருவோரிடம் எல்லா செல்வங்களும்
வந்து சேரும்.. அன்னையின் திருவடி மட்டுமே போதும். வேறெந்த செல்வங்கள்
நமக்கு வேண்டும்?
“பாரும்” நிலமும், “புனலும்” நீரும், “கனலும்” நெருப்பும் “வெங்காலும்”
காற்றும், “படர் விசும்பும்” எல்லாவிடத்தும் படர்ந்த ஆகாயமும் ஆகிய பஞ்ச
பூதங்களும் “ஊரும் “ அவற்றின் தன்மைகளாக நிற்கும் “முருகு” மணம், “சுவை”
சுவை “ஒளி” ஒளி “ஊறு” தொடு உணர்வு “ஒலி” ஒலி “ ஒன்றுபடச்சேரும்”
இவையெல்லாம் ஒன்று பட்டுச் சேரும் “தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார்” சிறிய திருவடிகளைப் படைத்த உலகத்தின் தலைவி, அழகிய
சிவகாமி அன்னையின் திருவடிகளைச் சார்ந்திருக்கும் தவத்தை உடையவர்கள்,
“படையாத தனம் இல்லையே” இல்லாத செல்வம் ஏதுமில்லை.. அதாவது எல்லா
செல்வங்களும் அவர்களிடத்திருக்கும். அவர்கள் செல்வம் நிறைந்தோர்களாக,
தனம் நிறைந்தோர்களாக இருப்பார்கள்.
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..
மிகச்சிறந்த பாடல் இது.. பள்ளி நாட்களில் மனப்பாடச் செய்யுளாகக் கற்றது.
அன்பர்கள் தினந்தோறும் இத்திருப்பாடலை ஓதவேண்டும். எல்லாவளமும் பெறலாம்.
"பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே" பூவினைத் தன் கூந்தலிலே அணிந்த அன்னை
அபிராமியின் கடைக்கண்கள்.."தனம் தரும்" எல்லாவித செல்வங்களையும்
அள்ளித்தரும். "கல்வி தரும்" சிறந்த கல்வியைத் தரும். "ஒரு நாளும் தளர்வு
அறியா மனம் தரும் " ஒரு நாளும் தளர்ச்சியடையாத திடமான மனத்தினைத்
தந்திடும். "தெய்வ வடிவும் தரும் " தெய்வீகமான வடிவழகைத் தரும்.
"நெஞ்சில் வஞ்சம் இல்லா இனம் தரும் " நெஞ்சத்தில் வஞ்சமில்லா நல்ல
சுற்றத்தைத் தரும். "அன்பர் என்பவர்க்கே" அன்னையின் அன்பர்களுக்கு "கனம்
தரும்" பெருமையைத் தரும்.
இந்த கால கட்ட சூழ்நிலைக்கேற்ற பாடல் வரிகளைப் பாருங்கள்.. முதலில்
எல்லாவித செல்வங்களையும் அன்னையின் திருக்கண்களின் கடைப்பார்வை
தந்திடும். செல்வம் இருந்தால் மட்டுமே நற்கல்வி கிட்டும் இந்த
காலத்தில்... நற்கல்வியும், செல்வமும் இருந்தால், தளர்ச்சியற்ற மனது தானே
வந்து சேரும். தெய்வீகமான வடிவழகை அன்னையின் கடைக்கண்கள் தரும். தெய்வீக
வடிவுடையோரிடம் நட்பு பூணுவோர் மனத்தில் வஞ்சம் இருக்காது.. வஞ்சமற்ற
மனமுடையோரின் நட்பை அவளது கடைக்கண்களே தரும். இவை எல்லாம் கிட்டிய
பின்னர் நல்லன எல்லாம் தாமே தேடி ஓடிவரும். பின்னர் ஒரு புள்ளி
வைக்கிறார் அபிராமிப் பட்டர்.. "அன்பர் என்பவர்க்கே கனம் தரும் "
எல்லாவித செல்வங்கள், கல்வி, திட மனது, தெய்வீக வடிவு, வஞ்சமில்லா
சுற்றம், நல்லன எல்லாம் அன்னையின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டாலே
கிடைத்து விடும். அன்னையை வேண்டித் தொழுது அவள் சிறிதளவு தன்
திருக்கண்களைத் திறந்து நம்மைப் பார்த்தால், மேற்சொன்ன எல்லாம் கிடைத்து
விடும்.. ஆனால் நற்பெருமையானது யாருக்குக் கிடைக்கும்? அன்னையிடத்து
அளவற்ற அன்பு பூண்டுள்ள அடியவர்களுக்கு மட்டுமே கிட்டும். அவள் யாரிடத்து
அன்பு செலுத்துகிறாளோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும்... செல்வம்
அதிகமிருந்தால் பெருமை கிட்டும்... ஆயினும் எங்காவது ஓர் மூலையில்
யாராவது ஒருவர் நம்மைப் பற்றி குறைபட்டுக் கொண்டிருப்பார்.. நற்கல்வி
கிட்டினால் பெருமை கிட்டும். ஆயினும் அகங்காரம் மனத்தில் குடி கொண்டு
அப்பெருமையைத் தகர்த்துவிடும். தளர்ச்சியற்ற மனதிருந்தாலும் அகங்காரமே
நம் மனத்தில் குடியேறும். தெய்வீகமான அழகைப் பெற்றிருந்தால் நம் மனத்தின்
நிலையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அது அகங்காரத்தின் மொத்த உருவமாய்த்
திகழும். நெஞ்சில் வஞ்சமற்ற சுற்றம் கிடைத்தாலும், நம் மனத்தில் வஞ்சம்
புகுந்து அவர்தம்மை ஏய்க்க வாய்ப்பு தேடும்.. நல்லன எல்லாம் கிட்டிய
பின்னரும் நற்பெருமை என்பது கிடைப்பது கடினமே.. ஆனால் அன்னையின் மேல்
அளவற்ற பக்தி செய்யும் அன்பர்களுக்கு இவை எல்லாவற்றிற்கும் மேலான "கனம்"
நற்பெருமை கிட்டும்.. அபிராமிப் பட்டர் தனது செல்வங்களால் அறியப்
படுகின்றாரா? அவர் தமது கல்வியால் அறியப் படுகின்றாரா? தளர்வற்ற தம்
மனத்தால் அறியப் படுகின்றாரா? தனது தெய்வீக வடிவழகால் அறியப்
படுகின்றாரா? தனது வஞ்சமற்ற சுற்றத்தால் அறியப்படுகின்றாரா? தான் பெற்ற
நல்லன எல்லாவற்றாலும் அறியப்படுகின்றாரா? இல்லவே இல்லை... அன்னை
அபிராமியின் மீது தான் கொண்ட அளவற்ற அன்பால்... அன்னையின் அன்பன் என்றே
அறியப் படுகின்றார். அக்கனத்தைக் கொடுத்தது அன்னை அபிராமியின் கடைக்கண்
பார்வை மட்டுமல்ல... அவளும் அபிராமிப் பட்டர் மீது கொண்ட அன்பே... நாமும்
அன்னையின் கடைக்கண் பார்வையை வேண்டி எல்லாம் பெற்று அவளுக்கே அன்பு
செய்து, அவள் அன்பை நாமும் பெற்று கனம் பெற்று இன்புறுவோம். அதுவே
என்றும் நிலைத்திருக்கும்..
பாடல் எழுபது.
கண் களிக்கும் படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே
விளக்கம் : அன்னை அபிராமியே.. பாடல் இன்புறும் குரலும், இன்னிசை
எழுப்பும் வீணையைத் தாங்கிய திருக்கரங்களும், அழகிய திருமுலைகளும் கொண்டு
மண்மகள் இன்புறும் பச்சை வண்ணத்தில் மதங்க மாமுனியின் குலத்தில் தோன்றிய
எம் தலைவியே உன் பேரழகை மீனாட்சி எனும் திருவுருவில் மதுரையம்பதியில் என்
கண்கள் இன்புறும் வண்ணம் கண்டேன்..
ஆஹா... இத்திருப்பாடலைப் பாடும்போது நம்மையறியாமல் அன்னை மீனாட்சியின்
திருவுருவத்தை நம் கண்கள் கண்டுவிடுகின்றன... கடம்ப வனம் என்பது
நான்மாடக் கூடலான மதுரையம்பதியைக் குறிக்கும். அன்னையானவள் பாண்டி
நாட்டின் பெருமையை உலகறியச் செய்ய அவ்விடத்து மலையத்துவசனுக்கு மகளாக...
தடாதகைப் பிராட்டியாக அவதரித்தாள். பச்சை நிறங்கொண்ட பேரழகியான அவள்
பொருட்டு ஈசனும் சொக்கநாதனாக வந்தருளி அவளை மணம் புரிந்து மதுரை
மாநகருக்கு மாமன்னன் ஆனான். சொக்கனும், மீனாட்சியும் குடியிருக்கும்
மதுரை மாநகரத்தின் அழகே அழகு.. அவ்விடத்து அன்னை மீனாட்சியின் பேரழகைக்
காண நமக்குக் கண்கள் கோடி வேண்டும். அத்திருக்காட்சியையே தனது கண்கள்
களிக்கும்படி கண்டதாக அபிராமிப் பட்டர் உரைக்கின்றார். கண்கள் எப்போது
களிக்கின்றன? அழகிய திருக்காட்சிதனைக் காணும்போது... அதுவும் அன்னை
மீனாட்சியின் பேரழகைக் கண்ட கண்கள் வேறெவ்விடத்தும் இன்புறுவதில்லை...
"பண் களிக்கும் குரல்" பாடலே இன்புறும் குரலையும், ... பாடலைக் கேட்டால்
நாம் இன்புறுகின்றோம்.. ஆனால் அப்பாடலையே இன்புறச் செய்யும் இனிய
குரலினையுடையவள் அன்னை மீனாட்சி.... "வீணையும் கையும்"... இன்னிசை
எழுப்பும் வீணையை ஏந்திய திருக்கரங்களையும், "பயோதரமும்" அழகிய
திருமுலைகளையும், "மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி " மண்மகள் இன்புறும்
பச்சை வண்ணத்தையும் கொண்டு... மண்மகள் இன்புறும் இடமானது விவசாயம்
செய்யும் பூமி... அவ்விடத்தில்தான் மண்மகள் இன்புறுகிறாள். போற்றப்
படுகின்றாள். நமக்கெல்லாம் வாரி வாரி அன்னத்தை அளிக்கின்றாள்... அவள்
இன்புறும் வண்ணம் பச்சை வண்ணம்.. பச்சை வண்ணத் திருமேனியைக் கொண்டவள்
அன்னை மீனாட்சி... "மதங்கர் குலப் பெண்களில் எம்பெருமாட்டி தன் பேரழகே"
மாதங்க மாமுனியின் குலப் பெண்ணாகத் தோன்றிய எங்கள் தலைவி அன்னை
மீனாட்சியின் பேரழகை... "கடம்பாடவியில்" கடம்ப வனத்தில்... மதுரை
மாநகரில் "கண் களிக்கும்படி கண்டு கொண்டேன்" எந்தன் கண்கள் இன்புறும்
வண்ணம் கண்டேன்...
எத்தனை முறை பாடினாலும் சலிப்பு தட்டாமல் அன்னையானவள் மீனாட்சியாக நம்
கண்கள் களிக்கும்படி காட்சி தருகின்றாள்.. நாமும் மதுரை மாநகரம் சென்று
அன்னை மீனாட்சியின் பேரழகைக் கண்டு களிப்போம்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி
--
விளக்கம் : தன் அழகுக்கு ஒப்புமையாக யாருமே இல்லாதவள் அன்னை அபிராமி.
அருமையான வேதங்கள் எப்போதும் பழகிக் கொண்டிருப்பதால் சிவந்த
திருவடித்தாமரைகளையுடையவள். குளிர்ச்சியான இளம்பிறையைத் தன் திருமுடியிலே
அணிந்த பச்சை நிறங்கொண்ட கோமளவல்லியான அன்னை உனக்குக் கொம்பு போல்
துணையாக இருக்க, மனமே நீ எதையும் இழந்து ஏக்கம் கொள்ள வேண்டாம்.
உனக்கென்ன குறையுண்டு?
அருமையான பாடல். மனக்குறையைத் தீர்க்கும் அருமருந்தான பாடல். அன்னை
அபிராமி அருகிருக்க ஏன் அழுகிறாய் நெஞ்சே... மனமே உனக்கென்ன
குறையுண்டு...? என மனத்தினை அமைதி செய்யும் அருமையான பாடல் இது...
"அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி" தன்னுடைய பேரழகுக்கு இணையாக ஒப்புமை
கூறும்படி இவ்வுலகில் யாருமில்லாத தன்னிகரற்ற அழகுடைய அன்னை அபிராமி...
அன்னையின் பேரழகுக்கு யாரையாவது ஒப்புமை சொல்ல இயலுமா? அவளின் அழகு ஈடு
இணையில்லாதது.. "அருமறைகள் பழகிச் சிவந்த பாதாம்புயத்தாள்" அருமையான
வேதங்கள் பழகுவதால் சிவந்த திருவடித் தாமரைகளையுடையவள்.. வேதங்களைத் தனது
சிலம்பாக அணிந்தவள் என முன்னர் குறிப்பிட்ட அபிராமிப் பட்டர் இவ்விடத்து
அவை எப்போது அவளின் திருவடிகளை ஒன்றியே இருப்பதால், அன்னையின்
திருப்பாதங்கள் சிவந்தன என்று குறிப்பிடுகின்றார். "பனிமாமதியின் குழவித்
திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க "குளிர்ச்சியான இளம் பிறையைத் தன்
திருமுடியிலே அணிந்த பச்சை வண்ணக் கோமளவல்லி எனும் கொம்பு போன்ற
துணையிருக்க.. இளம் நிலவை இத்தனை அழகாக யாரேனும் பாடியுள்ளனரா என்பது
ஐயமே... "பனிமாமதியின் குழவி" குளிர்ச்சியான பெரு நிலவின் குழந்தை எனும்
பொருள் பொருள் படுகின்றது. அன்னையின் திருமுடியில் காணும் பிறை நிலவு
அபிராமிப் பட்டருக்கு பெருநிலவின் குழந்தை எனத் தோன்றுகிறது.. அதைத்தான்
இவ்வண்ணம் உரைக்கின்றார். "இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் " இழந்து
இழந்து வருத்தமுறும் என் மனமே... ஏக்கம் கொள்ளாதே... மனத்தின் இயல்பு
இது.. சிறுவயது தொடங்கி மரணமடையும்வரை மனமானது இழந்தவற்றிற்கெல்லாம்
ஏக்கம் கொண்டு அழுகின்றது. ஏ மனமே... நீ ஏன் அழுகின்றாய்...
எல்லாவற்றையும் நீ இழந்தாலும், உன்னைத் தாங்க கொம்பு போன்ற துணையாக அன்னை
அபிராமி இருக்கின்றாள்.. ஏக்கம் கொள்ளாதே... "உனக்கு என் குறையே" உனக்கு
என்ன குறையுண்டு? உன்னைத் தாங்கும் கொம்பாக அன்னை அபிராமியிருக்க
உனக்கென்ன குறையுண்டு என் மனமே... நீ கலங்காதிரு.... இளம் கொடி பற்றிப்
படரக் கொம்பொன்று அவசியம். கொம்பில்லையெனில் அக்கொடியின் நிலை
பரிதாபமே... மனமே...நீ பற்றிப் படர உனக்கு அபிராமி எனும் கொம்பு உன்
அருகேயுள்ளது. பற்றிக் கொள்.. நீ இழந்த எதை எண்ணியும் வருந்தாதே..
அழாதே.. உனக்கெந்த குறையும் இல்லை...
பாடல் எழுபத்திரண்டு
என் குறை தீர நின்று ஏத்துகின்றேன் இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண் இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்
தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே
விளக்கம் : நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றும் மின்னலை விட மெலிந்த
சிறந்த இடையையுடைய மென்மையான அன்னை அபிராமியே... தன் குறைகள் எல்லாம்
தீர்வதற்காக எங்கள் ஐயன் சங்கரனார் தன் திருமுடி மீது வைந்த உந்தன்
திருவடித் தாமரைகளையே நானும் எனது குறைகள் எல்லாம் தீர்ந்து போகும் படி
நின்று வணங்கிப் போற்றுகின்றேன். இனிமேலும் எனக்கு ஒரு பிறவி வந்தால் அது
உன் குறையே... வேறு யார் குறையுமல்ல...
அன்னை மேல் எவ்வளவு உரிமை கொண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பார்.?
உன்னை.. உன் திருவடித் தாமரைகளை நான் போற்றி வணங்குவதால் இனி எனக்குப்
பிறவி இல்லை... மீண்டும் நான் பிறந்தால், அது உன் குற்றம்தான்... வேறு
யாருடைய குற்றமுமல்ல என அன்னை மேல் தான் கொண்டிருக்கும் உரிமையைப்
பறைசாற்றுகிறார்.
"இரு நீள் விசும்பின் மின் குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாள்"
நீண்டு விரிந்த ஆகாயத்தில் தோன்றுகின்ற மின்னலையும் குறைசொல்லும்படி
மெலிந்த சிறந்த இடையினைக் கொண்ட மென்மையான அன்னை அபிராமி.. மின்னல் தனது
ஒளியின் தன்மையில் வலிமை பெற்றிருந்தாலும், அதை நாம் நோக்கும் போது அது
மிகவும் மெலிந்தது என்பதை அறிகின்றோம். எனவேதான் முன்னர் ஒருமுறை
மின்னலையொத்த இடையையுடையவளே எனப் பாடினார் அபிராமிப் பட்டர். நம்
கவிஞர்கள் பலரும், பெண்ணின் இடையை மின்னலுக்கு ஒப்பிட்டுப்
பாடியிருக்கின்றனர். ஆனால் இப்பாடலில், அம்மின்னலைக் குறை சொல்லும்படி
இன்னும் மெலிந்த சிறந்த இடையையுடைய மென்மையானவள் என்று அம்மையைப்
பாடுகின்றார் அபிராமிப் பட்டர். "தன் குறை தீர எம் கோன் சடை மேல் வைத்த
தாமரையே " தனது குறைகள் எல்லாம் தீர்ந்து போக எங்கள் தலைவனான சிவபெருமான்
தனது சடைமுடி மேல் வைத்த உனது திருவடித் தாமரைகளையே... "என் குறை தீர
நின்று ஏத்துகின்றேன் " நானும் எனது குறைகளெல்லாம் தீர்ந்து போகும்படி
நின்று வணங்கிப் போற்றுகின்றேன்.. "இனி யான் பிறக்கின்" இனிமேலும் நான்
பிறந்தால்... எனக்கு மீண்டும் ஒரு பிறவி உண்டானால்... "நின் குறையே அன்றி
யார் குறை காண்" அது உனது குறையே அன்றி வேறு யாருடைய குறை? இப்பிறவியில்
எனது குறைகளெல்லாம் தீர்ந்து போக உனது திருவடித் தாமரைகளை வணங்கிப்
போற்றுகின்றேன்.. உன்னை வணங்குவதால் எனக்கு மீண்டும் பிறவி உண்டாகாது..
நான் மீண்டும் பிறந்தால் அது வேறு யாருடைய குற்றமுமல்ல... உன்னுடைய
குற்றம்தான்.. அன்னையே.. என் குறைகளெல்லாம் தீர்த்து என் பிறவியை
அறுத்துவிடு.. மீண்டும் என்னை பிறவாமல் செய்து விடு....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.... நன்றி...
விளக்கம் : அபிராமி அன்னையே.. நீ அணியும் மாலை கடம்ப மலர்களால் ஆனது.
உனது படைகளோ ஐவகை மலரம்புகள். உனது வில் கரும்பு வில். வைரவர் உன்னை
வணங்கும் நேரம் நள்ளிரவு. நீ எனக்கென்று வைத்திருக்கின்ற செல்வங்களாவன..
உனது திருவடித் தாமரைகள், செம்மையான உனது நான்கு திருக்கரங்கள்,
ஒளிபொருந்திய செம்மையான தாயே உன் திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்,
இவற்றோடு உனது மூன்று திருக்கண்கள்.
அன்னை கொண்டுள்ள வில், அம்புகள், அவள் அணியும் மாலை, வைரவநாதர் அவளை
வணங்கும் நேரம் இவையெல்லாம் அன்னையே உன் பெருமைகள்.. எனக்கென்று நீ
தந்துள்ள செல்வம்.. நீதான்.. நீயே பெரும் செல்வம்... என அபிராமிப் பட்டர்
உரைப்பது சிறப்பு. குழந்தைப் பேற்றை வேண்டுவோர் இத்திருப்பாடலைத் தினமும்
பாட வேண்டும் எனப் பெரியோர்கள் கூறுவார்கள்.
"தாமம் கடம்பு" அன்னையே நீ அணிந்துள்ள மாலையானது கடம்ப மாலை.. "படை பஞ்ச
பாணம்" உனது படைகளோ ஐவகை மலரம்புகள்... "தனுக்கரும்பு" உனது வில்லோ
கரும்பு வில். "யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது" வைரவர் உன்னை வணங்கும்
நேரமானது நள்ளிரவு... சிவாலயங்களை இரவில் காக்க வேண்டிய பொறுப்பு
வைரவரிடமே ஒப்படைக்கப் பட்டுள்ளது. எனவே வைரவர் அன்னையை வணங்கும் நேரம்
நள்ளிரவே.. "எமக்கு என்று வைத்த சேமம்" இத்தனை பெருமைகளையுடைய அன்னையே..
நீ எமக்கென்று வைத்துள்ள செல்வங்களாவன... "திருவடி" உனது திருவடிகள்...
"செங்கைகள் நான்கு" அபயந்தந்து வரமளிக்கும் உனது செம்மையான நான்கு
திருக்கரங்கள்..."ஒளி செம்மை அம்மை நாமம் திரிபுரை " ஒளிபொருந்திய,
செம்மையான அம்மையே... உனது திருநாமமான திரிபுரசுந்தரி எனும் நாமம்..
"ஒன்றோடு இரண்டு நயனங்களே" உனது மூன்று திருக்கண்கள்.. இவையே நீ
எமக்களித்த செல்வங்களாகும்...
உனது பெருமைகள் நீ கடம்ப மாலை அணிந்து, பஞ்ச பாணங்களை படைகளாகக் கொண்டு,
கரும்பு வில்லையேந்தியிருப்பது.. அகிலத்தைக் காக்கும் உந்தன் ஆலயத்தைக்
காக்கும் வைரவர் உன்னை வணங்கும் நேரமோ நள்ளிரவு... எனக்கு நீ அளித்த
செல்வமோ... நீதான்... நீயே என் செல்வம்.... என் சேமம்.... உன்
திருவடிகள், உனது திருக்கரங்கள், உன் திருநாமம், உன் திருக்கண்கள்..
அபிராமியே... காத்தருள்வாய்....
பாடல் எழுபத்து நான்கு
நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவும் பாடவும் பொன்
சயனம் பொருந்தும் தமனியக் காவினில் தங்குவரே?
விளக்கம் : மூன்று கண்களையுடைய சிவபெருமானும், வேதங்களும், திருமாலும்,
பிரம்மனும் போற்றி வணங்கும் அபிராமி அன்னையின் திருவடிகளையே தங்கள் பயன்
என்று கொண்டவர்கள், தேவமகளிர் ஆடிப்பாட, பொற்கட்டிலுடைய பொற்காட்டில்
தங்கி மகிழும் பயனை விரும்புவரோ?
"இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்"
என்று அரங்கனைப் பாடிய ஆழ்வாரின் பாசுரம் நினைவுக்கு வருகின்றது..
பிரம்மா, திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும், வேதங்களும்
போற்றி வணங்கக்கூடிய அன்னையபிராமியின் திருவடிகளைப் பற்றினோர்க்கு எல்லா
செல்வங்களும் கிட்டும். ஆயினும் அவர்களுக்கு அச்செல்வங்கள் எல்லாம் ஒரு
பொருட்டே அல்ல... அவர்கள் அவற்றை விரும்புவதும் இல்லை...
"நயனங்கள் மூன்றுடை நாதனும் " மூன்று கண்களையுடைய சிவபெருமானும்,
"வேதமும்" நால்வகை வேதங்களும், "நாரணனும்" நாராயணனும், "அயனும்"
பிரம்மனும் "பரவும்" வணங்கிப் போற்றும் "அபிராமவல்லி அடியிணையைப்"
அபிராமி அன்னையின் திருவடிகளை... "பயன் என்று கொண்டவர்" தங்களின் பயன்
என்று கொண்ட அடியவர்கள் "பாவையர் ஆடவும் பாடவும்" மகளிர் ஆடிடவும்,
பாடிடவும், "பொன் சயனம் பொருந்தும் " பொன்னாலான கட்டிலினையுடைய
"தமனியக் காவினில்" பொற்காட்டினில், இந்திரலோகத்தில்.... "தங்குவரே?"
தங்கி இன்புறும் மகிழ்ச்சியினை விரும்புவார்களோ???
மானுட மனமானது சிற்றின்பத்தை நாடுகின்றது.. இந்திரலோகம் என்பது
சிற்றின்பத்தின் கனவு.. பொன் நிறைந்த காட்டினில், பொன்னாலான படுக்கையில்
படுத்திருக்கும் வேளையில், தேவ மகளிர் வந்து ஆடிப்பாடி நம்மை
மகிழ்விக்கும் ஒரு நிகழ்வு என்பது சிற்றின்பத்தை நாடும் மனது
வேண்டுவது... ஆனால் அதுவோ நிலையான இன்பம்? அன்னை அபிராமியின் திருவடிகளை
அபயம் எனப் பற்றி, அவளுக்கே அன்பு செய்து, அவள் அன்பைப் பெற்று அவள்
அடியாராகும் இன்பமே பேரின்பம்.. அதுவே நிலையானது.. ஆகவேதான் உலகம்
போற்றும் நால்வகை வேதங்களும் அவள் திருவடிகளே சரணமென்று பாடுகின்றன..
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலைப் புரியும்
மும்மூர்த்திகளும் அவள் திருவடிகளையே போற்றிப் பாடுகின்றனர்.. மனமே...
நீயும் அவள் திருவடிகளையே பற்று.. அவளே அபயம் என்பதை உணர்... அவளையே
சரணடை... அவளே உன்னைக் காப்பாள்.. உன்னைத் தன் அன்பர்க் கூட்டத்தில்
ஒருவனாக ஆக்கி பேரின்ப வாழ்வுதனை உனக்களிப்பாள்... அபிராமியின்
திருவடியிணைகளே சரணம்........
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த பாடலில். மீண்டும் சந்திப்போம்...
பாடல் எழுபத்தாறு
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம் நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர் வழி வண்டு கிண்டி
வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே
விளக்கம் : வண்டுகள் கிண்டுவதால் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைச்
சூடும் சிவபெருமானது உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து அவ்விடத்துக்
குடிபுகுந்த ஐவகை மலரம்புகளைக் கொண்ட பைரவித் தாயே... எங்கள்
அபிராமியே... உனது திருக்கோலத்தையே என் மனத்தில் எப்போதும் நிறுத்தி
தியானித்திருக்கின்றேன்.. உனது திருவருளால், கூற்றுவன் என்னை அழைக்க
வரும் வழியைக் கண்டுபிடித்து அதனை மறித்து விட்டேன்... இனி எனக்கு
மரணமில்லை அன்னையே...
சத்தியத்தை உரைக்கும் பாடல் இது... அபிராமிப் பட்டர் மறைந்து விட்டாரா?
இல்லவே இல்லை...தனது அழகிய தமிழ்ப் பாமாலைகளால் இன்றும் நம் இதயத்துள்
வாழ்ந்து கொண்டேயிருக்கின்றார். திருக்கடவூர் உள்ள வரை.... அகிலத்தை
ஆளும் அபிராமி இருக்கும் வரை.... என்றும் இளமை குன்றாத சங்கத்தமிழ்
இருக்கும் வரை.... அவர் என்றென்றும் நிலைத்திருப்பாரன்றோ...? ஆகவேதான்
மிகவும் தைரியமாக.. அன்னையே... உனது திருவருள் கொண்டு காலதேவன் வரும்
வழியை அடைத்து விட்டேன்.... என்று பகர்கின்றார்... இந்த பாடலைத் தினமும்
பாடிவந்தால்... நமக்குச் சொந்தமான பொருள் ஏதாவது காணாமல் போயிருந்தாலோ
அல்லது நமக்கு வந்து சேர வேண்டிய பொருள் வருவதில்
தாமதமாகியிருந்தாலோ,..அது விரைவில் நம்மை வந்து சேரும் எனப் பெரியோர்கள்
மொழிவார்கள்...
"வண்டு கிண்டி வெறித் தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் " வண்டுகள்
கிண்டுவதால் வெறியூட்டும் தேன் வெளியேறும் கொன்றைப் பூக்களைத் தன்
திருச்சடையில் அணிந்த சிவபெருமானின்.... எத்தனை அழகிய வர்ணனை... கொன்றைப்
பூக்களைச் சடைக்கணிந்த எம்பிரான் திருமுடிகள்... அப்பூக்களிடம் தேனெடுக்க
படையெடுக்கும் வண்டுக் கூட்டம்...இவற்றால் வெளியேறி வழியும் தேன்... அட..
அட... கற்பனையில் எண்ணினாலே களிப்பூட்டும் காட்சியது... "ஒரு கூற்றை
மெய்யில் பறித்தே " உடம்பின் ஒரு பாகத்தைப் பறித்து.... பெண்ணுரிமை
கேட்கும் அன்புச் சமுதாயமே...அன்று ஈசன் தானாக முன்வந்து அன்னைக்கு
அரும்பாகத்தைத் தந்து விடவில்லை...அன்னை அதனைப் பறித்து கொண்டாள்...
ஏனெனில் ஈசனைப் படைத்தவளும் அவளேயன்றோ... ? ஆனால் இன்றைக்கோ இந்தியத்
திருநாட்டில் மூன்றில் ஒரு பங்கிடத்தைக் கூட மகளிருக்குப் பெற்றுத்தர
போராட வேண்டியுள்ளது... ஆனால்... அன்றே அன்னையானவள் சரிபாதியிடத்தைத்
தனக்கெனப் பறித்துக் கொண்டாள்.."குடி புகுதும்" அவ்விடத்திற் குடி
புகுந்த... "பஞ்ச பாண பயிரவியே..." ஐவகை மலரம்புகளை ஏந்தும் பைரவித்
தாயே.. பைரவி என்பது அன்னையின் இன்னொரு திருநாமம்.. பைரவன் ஈசனது
திருவவதாரம்... அவனது இடப்பாகத்தைப் பறித்து அவ்விடத்துக்
குடிபுகுந்ததால் அன்னை பைரவி எனும் திருநாமத்தைப் பெற்றாள்.. பஞ்ச
பாணங்களை ஏந்தும் விளக்கத்தை முன்னரே கேட்டிருக்கின்றோம் அல்லவா?
"குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம்" உனது திருக்கோலத்தையே என்
மனத்தில் எப்போதும் நிறுத்தி தியானித்திருக்கின்றேன்... அன்னையும்
தந்தையும் சரிபாதியாய்த் தோன்றும் சிவசக்தித் திருவுருவை...
திருக்கோலத்தையே... எல்லா பொழுதுகளிலும் என் மனத்தில் நிலைநிறுத்தி
தியானித்திருக்கின்றேன்... "நின் குறிப்பு அறிந்து" உனது
திருவருட்குறிப்பினை அறிந்து... "மறலி வருகின்ற நேர் வழி" மரணதேவன்
வருகின்ற வழியினை... "மறித்தேன்" மறித்து விட்டேன்... காலதேவன் வரும்
வேளை உனது திருமணக்கோலத்தில் வந்து நின்று திருவருள் புரிந்து அஞ்சாதே
மகனே என்று என்னை ஆற்றவேண்டும் என வேண்டிய அபிராமிப் பட்டர் இவ்விடத்துத்
தானே மரணம் வரும் வழியை அறிந்து கொண்டு அதனை அடைத்தும் விட்டதாகப்
பகர்வது சற்றே விழியை உயர்த்த வைக்கின்றது... இதுதான் பக்தியின் பாதை...
பக்தன் தான் பக்தி செய்யும் துவக்க நாட்களில், அன்னையை இறுகப் பற்றிக்
கொள்கிறான்.. தன் பயத்தைத் தெளிவிக்க வேண்டுகின்றான்.. பக்தி நெறியில்
வளர வளர அச்சம் மறைகின்றது.. அன்னையானவள் தெளிவைத் தந்தருள்கின்றாள்..
அவ்வமயம் எல்லாம் புலப்படுகின்றது... எதிர்வருந்துன்பங்களிடமிருந்து
எங்ஙனம் தப்புவது என்பதை அன்னையின் திருவருட்குறிப்பு பக்தனுக்கு
உணர்த்துகின்றது... எனவே தனது பக்தியெனும் சக்தியால் அத்துன்பங்கள்
தனக்கு வராமல் தடுத்தும் விடுகின்றான்... உண்மையான பக்தி கொள்வோர்க்கு
இது சாத்தியமே... இதை அபிராமி அந்தாதியைக் கொண்டு உணரலாம்... மரணதேவன்
வரும் வழியைத் தானே அடைத்து விட்டதாக அபிராமிப் பட்டர் உரைப்பது அவரது
தைரியத்தை... பேராற்றலை... அப்பேராற்றல் பெற அவர் கொண்ட பெரும்பக்தியை
உணர்த்துகின்றது... நாமும் அபிராமி மேல் அளவற்ற பக்தி கொள்வோம். வரும்
துன்பங்களிலிருந்து உய்வோம்... அன்னையே நம்மைக் காத்து வழி
நடத்தட்டும்... ஓம் சக்தி...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்..
மிகச் சிறந்த கல்வி ஞானம் கொண்ட பெரியோர்களெல்லாம் இதைப் படித்து
வருகின்றீர்கள்.. அடியேனின் கருத்தில் பிழையிருந்தால் மன்னித்து...
சரியான கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.. மேலும் அபிராமி அந்தாதியின்
ஒவ்வொரு பாடல்களுக்கும் வெவ்வேறு பலன்கள் உள்ளன.. அவற்றுள் அடியேன்
அறிந்தவை சில மட்டுமே... அவற்றை இவ்வுரைகளில் தெரியப் படுத்தியும்
வருகின்றேன்.. முற்றும் அறிந்தோர் தயவு செய்து அவற்றைப் பட்டியலிட்டுப்
பதிவு செய்யும்படி அன்போடு வேண்டுகின்றேன்... நன்றி...
பாடல் எழுபத்தெட்டு
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி அணி தரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே
விளக்கம் : போற்றத்தக்க பொற்கலசம் போன்ற திருமுலைகள் மேல் மணம் வீசும்
சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... நீ அணிகின்ற முத்துக்களால் ஆன
காதணியும், வைரத்தால் ஆனக் குண்டலமும், கருணைமிகு உனது கடைக்கண்களையும்,
குளிர்ச்சியை சிந்தும் நிலவினைப் போன்ற உனது திருமுகத்தையும் கொண்ட உனது
அழகிய திருவுருவினை எனது இரு விழிகளிலும் எழுதி வைத்தேன்...
அன்னையின் அழகிய திருவுருவை வர்ணணை செய்யும் பாடல் இது.. என் கண்களில்
எப்போதும் நிலை நிற்கும் வண்ணம் உனது அழகியத் திருவுருவை என் மனத்தில்
வரைந்து வைத்தேன்.. ஆகையால் எப்போதும் நீ எந்தன் விழிகளை விட்டு
மறைவதில்லை... தாயே...உன் பேரழகுத் திருவுரு எப்படி என்னை விட்டு
நீங்கும்?
"செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்" போற்றத்தக்க பொற்கலசங்களைப்
போன்ற உனது திருமுலைகளின் மேல் "அப்பும் களப அபிராம வல்லி" மணம் வீசும்
சந்தனத்தைப் பூசிய அபிராமி அன்னையே... "அணி தரளக் கொப்பும்" நீ அணிகின்ற
முத்தாலான காதணிகளும், "வயிரக் குழையும்" வைரத்தால் ஆன குண்டலங்களும்,
"விழியின் கொழுங்கடையும்" கருணை மிகு உந்தன் கடைக்கண் பார்வையும்,
"துப்பும் நிலவும்" குளிர்ச்சியை உமிழும் நிலவையொத்த உனது அழகிய
திருமுகமும் "எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே" எந்தன் இருவிழிகளிலும்
என்றென்றும் நான் கண்டுகொண்டிருக்கும் வண்ணம் எந்தன் மனத்தில் வரைந்து
வைத்தேன்...
அன்னையின் அழகிய திருவுருவை நம் கண்களால் காணாது இருக்க இயலுமா??
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம். நன்றி.
விளக்கம் : அபிராமி அன்னையின் விழிகளிலே அருள் உண்டு. வேதங்கள்
சொல்லுகின்ற வழிமுறையில் அவளை வழிபடும் நெஞ்சம் எம்மிடத்து உண்டு. ஆகவே
அம்மையை வழிபடும் முறை தவிர்த்து, வீணான பழியையும் பாவங்களையுமே செய்து
பாழும் நரகத்தில் அழுந்தும் கயவர்களோடு இனி நமக்கு என்ன நட்பு? அது
தேவையே இல்லை...
அற்புதம் நிகழ்த்திய பாடல் இது... ஒரு தை அமாவாசை இரவில்தான் இச்சம்பவம்
நிகழ்ந்தேறியது.. அபிராமிப் பட்டரைப் பற்றி மன்னனிடம் இகழ்ந்துரைத்து
அவனை ஆலயத்து அழைத்து வந்தனர் கயவர்கள். அவனுக்கும் அபிராமிப் பட்டரின்
பக்தி மனது புரியவில்லை. பட்டர் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது மன்னன்
அன்றைய திதியைப் பற்றி வினவினான். அறியாத பட்டரோ பௌர்ணமி என்றுரைத்தார்.
கோபங்கொண்டெழுந்த மன்னனோ நிலவைக் காட்டு என்று கட்டளையிட்டான். அன்னையின்
அன்பால் இன்றிரவு நிலவைக் காட்டுவோம் எனப்பதிலுரைத்த அபிராமிப் பட்டர்,
நெருப்பின் மீது ஒரு உறியில் நூறு கயிறுகளைக் கட்டி அதன் மீது நின்று
பாடத்துவங்குகிறார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு கயிற்றினை அறுத்து,
நூறாவது பாடலிலும் அன்னை வெளிப்படவில்லையெனில், நெருப்பில் வீழ்ந்து
மாள்வது என்பது அவருடைய எண்ணம்.. ஆனால் மனத்திலோ அபிராமி உலகைப்
படைத்தவள். சூரிய சந்திரரைப் படைத்தவள். அவள் நினைத்தால் இதெல்லாம் சிறு
காரியமல்லவா என்ற அசைக்க இயலாத நம்பிக்கை.. பாடிக்கொண்டே இருக்கின்றார்.
ஒவ்வொரு கயிறும் அறுபட்டுக் கொண்டேயிருக்கின்றது.. எழுபத்தொன்பதாவது
பாடலான இப்பாடலைத் துவங்கும் போது அன்னையானவள் தோன்றுகிறாள். இப்பாடலை
அவர் நிறைவு செய்யும் வேளையில் தனது காதணியை கழற்றி வானில் வீச அது
நிலவென ஒளிர்கின்றது.. கூட்டம் ஆர்ப்பரிக்கின்றது.. கயவர்கள் முகவாட்டம்
அடைகின்றனர். மன்னனோ ஓடிவந்து பட்டரின் கால்களில் விழுந்து மன்னிக்க
வேண்டுகின்றான். நெருப்பின் நடுவிருந்து கீழிறங்குகின்றார் பட்டர். தம்
மீது விழுந்த பழியைத் தன் அளவற்ற பக்தியின் மூலம் துடைத்தார். அன்னையும்
தன் பாலகனைக் காத்தருளினாள். அவ்வதிசயம் இப்பாடலைப் பாடும்போதுதான்
நிகழ்ந்தது..
"விழிக்கே அருள் உண்டு அபிராமவல்லிக்கு" அபிராமி அன்னையின் திருவிழிகளிலே
அருள் உண்டு.. அன்னையின் அருள் அளப்பரியது.. "வேதம் சொன்ன வழிக்கே வழிபட
நெஞ்சு உண்டு எமக்கு " வேதங்கள் சொல்லுகின்ற வழிகளிலே அவளை வழிபடும்
நெஞ்சம் எமக்கு உண்டு... "அவ்வழி கிடக்க" அன்னையை வழிபட்டு அவள் அருளைப்
பெற்று உய்வதற்கு வேதங்கள் சொல்லும் நல்வழி இருக்க... "வெம்பாவங்களே
செய்து " கொடிய பாவங்களை மட்டுமே செய்து "பழிக்கே சுழன்று" பழியில்
அகப்பட்டு "பாழ் நரகக் குழிக்கே அழுந்தும்" பாழும் நரகக் குழியில்
விழுந்து அழுந்தும் "கயவர் தம்மோடு" கயவர்களோடு... கொடியவர்களோடு...
"என்ன கூட்டு இனியே" இனிமேலும் என்ன நட்பு வேண்டியிருக்கின்றது?
அபிராமியின் வழியிருக்கையில் மற்ற வழிகள் ஏன் தேவை? அவ்வழியில் சென்று
அழுந்தும் கயவர்களின் நட்பும் நமக்கெதற்கு? அன்னையின் வழியே உத்தமம்.
அவள் திருவடிகளே சரணம்...
பாடல் எண்பது
கூட்டியவா என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா என் கண் ஓடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே
விளக்கம் : பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகான என் அபிராமி அன்னையே...
நீயே என்னை உன் அடியார்க் கூட்டத்தில் ஒருவனாக இணைத்துக் கொண்டாய். எனது
கொடிய வினைகளையெல்லாம் ஓட்டிவிட்டாய். என்னை நோக்கி ஓடிவந்தாய். உன்
திருவுருவை உள்ளபடியே எனக்குக் காட்டினாய். அத்திருவுருவைக் கண்ட என்
கண்களையும், மனத்தையும் இன்புறச் செய்தாய். அக்களிப்பிலே என்னை நடமாட்டி
வைத்தாய்..
இதோ அன்னை வெளிப்பட்டாள்... தன் திருவுருவினைத் தன் அன்பனான அபிராமிப்
பட்டருக்குக் காட்டினாள். தன் காதணியைக் கழற்றி விண்ணில் எறிந்தாள். தை
அமாவாசை அன்று அன்னையின் காதணி வானில் நிலவென நின்று ஒளிர்ந்தது. இதோ
இப்பாடல்களைப் பாடும் வேளையில் நம் மனத்திலும் இத்திருக்காட்சி
தென்படுவதை நாமும் உணர்கின்றோமல்லவா? தன் அடியவர்க்கு வரும் துயரை
எல்லாம் துடைத்திட அன்னையானவள் தானே நேரில் வருகின்றாள்.. சந்திரனைப்
படைத்ததும் அன்னைதானே... அவள் ஆணையை ஏற்று சந்திரன் அன்று
வெளிப்பட்டிருக்க மாட்டானா? இயற்கையைப் படைத்தவள் அவ்வியற்கைக்கென்றே சில
நியதிகளையும் நிர்ணயித்தாள்.. அந்நியமங்களை மீறுவதற்கு அவளுக்கு அதிகாரம்
உண்டு.. ஆயினும் அவள் அதைச் செய்யவில்லை. தான் நியமித்த நியமங்களை அவள்
மீறவில்லை.. ஆயினும் நிலவினை விட ஒளி படைத்த தன் காதணியை எடுத்து
விண்ணில் எறிந்தாள்..சந்திர சூரியரைப் படைத்த அன்னையின் காதணியும் தன்
கடமையைச் செவ்வனே செய்தது. அன்றைய நாள் உலகுக்கு நிலவென நின்ற
பெருமையையும் பெற்றது.. உலகத்தோர் வியந்தனர். கள்வர்கள் வெட்கித் தலை
நாணினர். மன்னனும் அதிசயித்தான். விரைந்து ஓடி நெருப்பின் நடுவே
நின்றிருந்த பட்டரை கீழே வரச்செய்தான். அன்னையின் திருவருளை உணர்ந்து
கொண்டான். கண்கள் மூடி ஒருமுறை இப்பாடலை ஓதிப் பாருங்கள்.. அபிராமிப்
பட்டரின் உள்ளத்து நெகிழ்ச்சி அவர் பாடலில் தென்படுவதை உணர்வீர்கள்..
அத்தனை மகிழ்ச்சி... அபிராமிப் பட்டர் நெருப்பின் நடுவே தான் வீழுவதைக்
காத்ததற்காய் மகிழவில்லை.. அன்னையின் திருவருளை அகிலம் அறிந்து
கொண்டதற்காக மகிழ்ந்தார். தனக்கு அன்னையின் திருக்காட்சி கிட்டியதற்காக
மகிழ்ந்தார்... அதுதான் ஒரு பக்தனின் உண்மையான மகிழ்ச்சி...
"ஆடகத் தாமரை ஆரணங்கே" பொற்றாமரையில் வீற்றிருக்கும் பேரழகியே... அபிராமி
அன்னையே... "என்னைத் தன் அடியாரில்" "கூட்டியவா" என்னை உனது அடியார்களின்
கூட்டத்தில் சேர்த்தவளே... "கொடிய வினை ஓட்டியவா" எனது கொடிய வினைகளை
ஓட்டியவளே... "என் கண் ஓடியவா" என்னை நோக்கி ஓடி வந்தவளே.... "தன்னை உள்ள
வண்ணம் காட்டியவா" உனது திருவுருவை உள்ளபடியே காட்டியவளே... உன்
திருவருளால் உன் காதணியை நிலவெனக் காட்டியவளே... "கண்ட கண்ணும் மனமும்
களிக்கின்றவா" உன்னைக் கண்டதும் என் கண்களும் மனமும் இன்புறும் வண்ணம்
செய்தவளே... "நடம்" "ஆட்டியவா" அவ்வின்பத்தில் என்னை நடனமாடச்
செய்தவளே.... உன் கருணையே கருணை... என் விழிகளில் உன்னைக் காட்டினாய்.
என் மனத்திற்கு இன்பத்தைக் கூட்டினாய். உலகிற்கு நிலவினைக் காட்டினாய்..
நீயே தெய்வம் என்பதை அனைவருக்கும் உணர்த்தினாய்.. அன்னையே... உன் கருணைப்
பேராற்றில் என்னைக் கரைத்து விட்டவளே... அபிராமியே... உன்னை எப்படித்தான்
போற்றுவதோ...?
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி.
விளக்கம் : அழகிய அபிராமி அன்னையே... அனைத்துத் தெய்வங்களும் உனது
பரிவாரங்களே... ஆகவே அவர்கள் யாரையும் நான் வணங்க மாட்டேன். அவர்களைப்
போற்ற மாட்டேன். அறிவில்லாத சிறியேன் என் மீது நீ வைத்த பேரன்பினால்,
நெஞ்சத்தில் வஞ்சகம் கொண்ட கொடியவரோடு நட்பு கொள்ள மாட்டேன்.
தங்களுடையதெல்லாம் உன்னுடையதென்றிருப்பவர்கள் சிலரே. அத்தகைய ஞானிகளோடு
நான் சண்டையிட மாட்டேன்.
அன்னை காட்சியளித்த பின்னர் அபிராமிப் பட்டரின் பாடல்களில் உற்சாகம்
கரைபுரண்டோடுகின்றது. அதுவரை அச்சத்திலும், அரிய நம்பிக்கையிலும் பாடிய
பட்டர், இப்போது அளவற்ற ஆனந்தக் கூத்தாடுகின்றார். அதனால்தான் உன்னைத்
தவிர வேறு யாரையும், எந்த தெய்வத்தையும் வணங்க மாட்டேன். ஏனெனில் எல்லாத்
தெய்வங்களும் உனது பரிவாரங்கள்... எனவே அவர்களைப் போற்ற மாட்டேன். வணங்க
மாட்டேன். உனது பேரன்பினால் வஞ்சகரோடு நட்பு கொள்ள மாட்டேன். உன்னையே
தஞ்சமென்றடைந்த ஞானிகளிடம் பிணங்க மாட்டேன் எனப்பாடுகின்றார்.
உலகில் நம் வாழ்க்கை நல்வழியில் சென்று கொண்டிருந்தாலும், சிற்சில
சமயங்களில் வஞ்சகரின் நட்பு - கூடா நட்பு நம்மை வந்தடைகின்றது. நம்மால்
அவற்றை உதறித் தள்ள இயலாது. வல்லமையும் நல்நெஞ்சும் படைத்த கர்ணனே,
துரியோதனின் நட்பை உதறித்தள்ள இயலாது அழிந்தான். ஆயினும் அன்னையின்
பெருங்கருணையானது நம்மை அப்படிப் பட்ட நட்புக்களிடமிருந்து
காத்தருள்கின்றது. தங்களின் மெய், பொருள், ஆவி அனைத்தும் உனதே என்று உன்
மேல் பற்றுவைத்து வாழும் ஞானியரின் நட்பை அன்னை நமக்குத்
தந்தருள்கின்றாள். அந்நட்பும் அன்னையின் அன்பால் நம்மை
விட்டகலுவதில்லை...
"அணங்கே " அழகிய அபிராமி அன்னையே.... "அணங்குகள் உன் பரிவாரங்கள் "
அனைத்துத் தெய்வங்களும் உந்தன் பரிவாரங்கள்.. "ஆகையினால் வணங்கேன் ஒருவரை
" ஆகையால் அவர்களுள் யாரொருவரையும் நான் வணங்க மாட்டேன்..
"வாழ்த்துகிலேன் " அவர்கள் யாரையும் வாழ்த்த மாட்டேன். போற்றமாட்டேன்.
"நெஞ்சில் வஞ்சகரோடு இணங்கேன் " நெஞ்சத்தில் வஞ்சம் கொண்ட வஞ்சகரோடு
நட்பு கொள்ள மாட்டேன். "எனது உனது என்று இருப்பார் சிலர் " சிலர் மட்டுமே
தங்களது மெய், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது என்று இருப்பார்கள்.
அவர்கள் எல்லோரும் ஞானிகள்.. "யாவரொடும் பிணங்கேன் " அவர்கள் யாரோடும்
சண்டையிட மாட்டேன். அவர்களை விட்டு விலக மாட்டேன். "அறிவு ஒன்றும் இலேன்
" அறிவே இல்லாதவன். அடி முட்டாள் (?) (பாருங்கள்.. அபிராமிப் பட்டர்
அறிவில்லாதவராம்) "என் கண் நீ வைத்த பேரளியே" என் மீது நீ வைத்த
பேரன்பினை என்னவென்றுரைப்பேன்..
அன்னையே அறிவில்லாத எளியேன் என் மீது நீ வைத்த பேரன்பால், வஞ்சகர்
தொடர்பில்லாது ஞானியர் தொடர்பு கிட்டியது. அவர் நட்பை நான் என்றும்
விலக்கேன். உன்னைத் தவிர அனைத்துத் தெய்வங்களும் உன் பரிவாரங்களே... எனவே
அவர்களை நான் வணங்கேன். வாழ்த்தேன்.. உன்னை மட்டுமே வணங்குவேன். அழகிய
அபிராமியே... உன்னை மட்டுமே வாழ்த்துவேன்.
பாடல் எண்பத்திரண்டு
அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுந்தொறும்
களியாகி அந்தக்கரணங்கள் விம்மி கரை புரண்டு
வெளியாய்விடில் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே
விளக்கம் : வண்டுகள் மொய்க்கும் தாமரையில் அமர்ந்திருக்கும் பேரழகியே...
அபிராமி அன்னையே... இவ்வுலகமெல்லாம் ஒளியாக நின்ற உந்தன் ஒளிரும்
திருமேனியை எண்ணும்போதெல்லாம், எந்தன் ஆழ்மனது மகிழ்ச்சியுற்று விம்மி,
மகிழ்வெள்ளத்தில் கரைபுரண்டு ஆகாயத்தோடு ஒன்றி விடுகின்றது. உனது
சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன்...?
அன்னையை மறப்பதென்பது பட்டரால் இயலும் காரியமா? அவளை எண்ணும்போதெல்லாம்
அவர் ஆழ்மனங்களெல்லாம்... மகிழ்கின்றனவாம். மகிழ்ச்சி வெள்ளத்தில் விம்மி
கரைபுரண்டு, வெளியாகி - ஆகாயமாகி விடுகின்றனவாம். அதாவது வெளியெல்லாம்
பரவி நிற்கும் அன்னையோடு ஒன்றி விடும்போது அன்னையை... அவள்
சாமர்த்தியத்தை எப்படித்தான் மறக்க இயலும்? இப்பாடலைப் பாடும்போதே நமது
அந்தக்கரணங்கள் அன்னையின்பால் செல்வதை உணரலாம்... ஆயின் அதை அனுபவித்துப்
பாடிய அபிராமிப் பட்டர் எப்படிக் களித்திருப்பார்!!
"அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே" வண்டுகள் மொய்த்திருக்கின்ற தாமரையில்
அமர்ந்திருக்கும் பேரழகியே... அபிராமி அன்னையே... "அகில அண்டமும் " அகில
உலகும் "ஒளியாக நின்ற " ஒளியாய் நின்ற "நின்" "ஒளிர் திருமேனியை" உனது
ஒளிர்கின்ற திருமேனியை "உள்ளுந்தொறும்" நினைக்கும்போதெல்லாம் "அந்தக்
கரணங்கள்" எனது ஆழ்மனங்களெல்லாம்..."களியாகி" மகிழ்ச்சியுற்று "விம்மி "
விம்மி "கரைபுரண்டு" கரைபுரண்டு "வெளியாய் விடில்" ஆகாயத்தோடு
ஒன்றிவிடும்போது... ஆகாயமாய் நிற்கும் உந்தன் பேரொளியோடு ஒன்றி
விடும்போது ... "எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே" என் மனத்தை இப்படி
மகிழ்விக்கும் உனது சாமர்த்தியத்தை நான் எப்படி மறப்பேன் அபிராமியே...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி..
நாம் தரும் உரைகளில் பிழைகளோ திருத்தங்களோ இருப்பின் பெரியோர்கள்
மன்னித்து, அவற்றைத் திருத்தி இவ்விடம் பதிவு செய்யும்படி அன்போடு
வேண்டுகின்றோம். நன்றி..
விளக்கம் : தேன் சொரியும் புது மலர்களைக் கொண்டு மணம் வீசும் உன்
திருவடித்தாமரைகளை இரவும் பகலும் வணங்கும் வலிமையுடையோர், அமரர்கள்
அனைவரும் போற்றி வணங்கக்கூடிய இந்திர பதவியையும், ஐராவதம் எனும் வெண்ணிற
யானையையும், ஆகாய கங்கையையும், வலிமை மிகு வச்சிராயுதத்தையும், கற்பக
வனத்தையும் உடையவர்களாக இருப்பார்கள்..
அன்னையின் திருவடியை இரவும் பகலும் வணங்கும் வல்லமையுடையோர்
எனக்குறிப்பிடுவது அது அத்தனை எளிய காரியமல்ல என்பதைக் காட்டுகின்றது.
பாச பந்தங்கள் அறுத்து அன்னையை மட்டுமே எந்நேரமும் தொழுது கொண்டிருக்கும்
வல்லமை அவள் அடியார்களுக்கு அவள் அருளால் மட்டுமே கிட்டும். அது ஒரு
தெய்வீக அழைப்பு.. அவ்வழைப்பை அன்னை அளித்தால் மானுடன் ஒருவன் அவள்
திருவடிகளை எந்நேரமும் தொழும் பக்தன் ஆகின்றான். அவன் எந்தவொரு
சுகத்திற்காகவும் யாரிடத்தும் செல்லவோ வேண்டுவதோ வேண்டியதில்லை.. அவனே
அனைத்தும் உடையவனாகின்றான். இந்திரபதவி என்பது கிடைத்தற்கரிய வரம்.
இந்திர பதவியில் இருக்கும் இந்திரன் அமரர்கள் அனைவருக்கும்
தலைவனாகின்றான். அது ஒரு பதவி மட்டுமே.. அப்பதவியில் அவனது பதவிக்காலம்
முடிந்தவுடன் இன்னொருவன் இந்திரன் ஆகின்றான். இப்படி அது தொடர்ந்து
கொண்டே இருக்கும். அனைத்து அமரர்களும் இந்திரனது கட்டுப்பாட்டில்
வருவதால், இயற்கையின் செயல்கள் அவனது கட்டுப்பாட்டில் வருகின்றன. அத்தகைய
பதவி அன்னையை அல்லும் பகலும் இறைஞ்சுவோரிடத்துள்ளது எனப் பாடுகின்றார்
அபிராமிப் பட்டர். இதன் மறைபொருள் என்னவெனில், அன்னையின் அடியவர்களுக்கு
வேண்டுவன எல்லாம் கிட்டும். இயற்கையால் ஏற்படும் துன்பங்கள் அவர்தம்மை
நெருங்காது என்பதாகும்.
"விரவும் புது மலர் இட்டு " தேன் சொரியும் புத்தம் புது மலர்களை இட்டு
"நின் பாத விரைக்கமலம்" மணம் வீசும் உனது திருவடித்தாமரைகளை "இரவும்
பகலும் இறைஞ்ச வல்லார் " இரவிலும் பகலிலும் வணங்கிடும் வலிமை படைத்தோர்
"இமையோர் எவரும் பரவும் பதமும் " அமரர்கள் அனைவரும் போற்றி வணங்கக்
கூடிய இந்திர பதவியையும், "அயிராவதமும் " அவ்விந்திரனுக்குச் சொந்தமான
ஐராவதம் எனும் வெள்ளை யானையையும், "பகீரதியும்" ஆகாய கங்கையையும்,
"உரவும் குலிசமும் " வலிமை மிக்க வஜ்ராயுதத்தையும், (வஜ்ராயுதம்
என்பதற்கு அழகிய தமிழாக்கம் குலிசம்), "கற்பகக் காவும் " நினைத்தன
நினைத்த பொழுதில் கிட்டும் கற்பக வனத்தையும் "உடையவரே" கொண்டவர்களாக
இருப்பார்கள்... அவர்கள் என்றும் யாரிடத்தும் சென்று எதையும் இரங்கிப்
பெறவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் அனைத்தும் அவர்தம் உடைமையாக
இருக்கின்றது... இதுவே அன்னையின் அன்பர்களுக்குக் கிட்டும் பெருவரம்.
ஆயினும் அவர்கள் இதையெல்லாம் மேலாக எண்ணுபவர்களா? ஒருபோதும் இல்லை...
அவர்தமக்கு அன்னையின் திருவடிகளை விடுத்து வேறு எந்த செல்வமும்
பெரிதல்ல...
பாடல் எண்பத்து நான்கு
உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச் செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே
விளக்கம் : உலகத்தோரே.... அனைத்தையும் உடையவளும், அசையும் செம்மையான
பட்டாடை அணிந்தவளும், ஒளிரும் நிலவைனையணிந்த செம்மையான சடையைக்
கொண்டவளும், வஞ்சகர்களின் நெஞ்சத்தில் தங்காதவளும், வாடும் மெல்லிய நூல்
போன்ற இடையை உடையவளும், எங்கள் சிவபெருமானின் இடப்பாகத்தமர்ந்தவளும்,
இவ்வுலகில் இனிமேல் என்னைப் பிறக்காதிருக்கச் செய்தவளுமாகிய அன்னை
அபிராமியை நீங்களும் மீண்டும் பிறவாதிருக்கும்படி பார்த்திடுங்கள்.
வணங்கிடுங்கள்.
அழகிய வர்ணனைப் பாடல் இது... பட்டரின் மொழி அழகிய விளையாட்டை
ஆடியிருக்கின்றது.. தான் மீண்டும் பிறப்பதில்லை என்பது அபிராமிப்பட்டரின்
அழுத்தமான நம்பிக்கை. உலகின் மக்களுக்கு அறிவுரை தருகின்றார். மீண்டும்
பிறவாதிருக்கும் நிலை வேண்டுமெனில் எங்கள் அபிராமியைக் காணுங்கள். அவள்
திருவுருவைத் தியானியுங்கள். அவளை வணங்குங்கள். அவளே உங்களுக்குப்
பிறவாவரம் அருள்வாள்.
"உடையாளை " அனைத்தையும் உடையவளை..."ஒல்கு செம்பட்டுடையாளை" அசையும்
செம்மையான பட்டுடை அணிந்தவளை... "ஒளிர்மதி செஞ்சடையாளை" ஒளிரும் நிலவினை
அணிந்த செம்மையான சடையை உடையவளை.. "வஞ்சகர் நெஞ்சு அடையாளை" வஞ்சகரது
நெஞ்சத்தில் தங்காதவளை... "தயங்கு நுண்ணூல் இடையாளை " வாடும் மெல்லிய
நூல் போன்ற இடையை உடையவளை... "எங்கள் பெம்மான் இடையாளை" எங்கள்
சிவபெருமானது இடப்பாகத்து அமர்ந்தவளை... "இங்கு என்னை இனிப் படையாளை"
இவ்வுலகத்தில் இனிமேல் என்னைப் படைக்காதவளை.. என் பிறவிப் பிணியை
முடித்தவளை... "உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே" உங்களையும்
மீண்டும் படைக்காதபடிக்கு ... நீங்கள் மீண்டும் பிறவாத படிக்கு...
பாருங்கள்.. தியானியுங்கள்.. வணங்குங்கள்...
பிறவிப் பிணியை அறுக்கும் சக்தி படைத்தவள் பிறப்பைக் கொடுத்த
ஆதிபராசக்தியே... அவளையே எண்ணித் தியானித்திருக்கும் போது நம் பிறவிப்
பிணியை அவள் நீக்குகின்றாள். தமிழ்ப்பாக்கள் புனைய விரும்புவோர்
விரும்பிப் படிக்க வேண்டிய பாடல் இது. தமிழ்ச் சொற்களை எத்தனை அழகாகக்
கையாண்டிருக்கின்றார் பட்டர். காணுங்கள்.. மீண்டும் ஒருமுறை ஓதி
இன்புறுங்கள்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில். மீண்டும் சந்திப்போம். நன்றி......
விளக்கம் : பார்க்கும் திசைகளெல்லாம் பாசமும் அங்குசமும், பனி போன்ற
சிறகுகள் கொண்ட வண்டுகள் மொய்த்திருக்கும் ஐந்து மலர்க்கணைகளும், கரும்பு
வில்லும், என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுர சுந்தரி அபிராமியின்
திருமேனியும், அவளது சிறு இடையும், குங்கும நிறக்கச்சையணிந்த
திருமுலைகளும், அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையையுமே
காண்கின்றேன்...
"எங்கெங்கு காணிணும் சக்தியடா" என்று பாடினானே தமிழ்க்கவிஞன் அவனது
வரிகள் நினைவுக்கு வருகின்றன. காணும் திசையெல்லாம் உந்தன்
திருவுருவேயன்றி வேறொன்றும் காண்கிலேன் அம்மையே... என்னிலும் உன்னைக்
காண்கின்றேன்.. எல்லோரிலும் உன்னைக் காண்கின்றேன்.. அம்மையே... நீயே
எல்லாம்.. சர்வம் சக்தி மயம்.... இதுதான் அபிராமிப் பட்டரின்
எண்ணம்..பக்திக் கடலில் மூழ்கியிருக்கும் பரம பக்தனுக்கே இவ்வெண்ணம்
சாத்தியமாகும்... அவ்வண்ணம் இருந்ததால்தான் அபிராமிப் பட்டரைப்
பித்தனென்று உலகம் இகழ்ந்தது... ஆயினும் தன் பக்திநெறியினின்று பின்
வாங்காது என்றென்றும் அன்னையின் திருவுருவைத் தொழுதேத்தித் தன் பக்தியின்
பெருமையை அகிலம் அறியச் செய்தார் அவர்.
"பார்க்கும் திசைதொறும் " நான் பார்க்கின்ற திசைகளெல்லாம்
"பாசாங்குசமும்" பாசமும், அங்குசமும், "பனிச்சிறை வண்டு ஆர்க்கும்
புதுமலர் ஐந்தும் " பனி போன்ற மெல்லிய சிறகுகளைக் கொண்ட வண்டுகள்
மொய்த்திருக்கும் புத்தம்புதிய மலர்களாலான ஐந்து அம்புகளும், "கரும்பும்"
கரும்பு வில்லும் "என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்
திருமேனியும்" என் துன்பத்தையெல்லாம் போக்கிடும் திரிபுரசுந்தரி அன்னை
அபிராமியின் திருமேனியும், "சிற்றிடையும்" அவளது சிறிய இடையும்
"வார்க்குங்கும முலையும் " குங்கும நிறக்கச்சையணிந்த அவளது திருமுலைகளும்
"முலைமேல் முத்து மாலையுமே" அம்முலைகள் மேல் அவள் அணிந்த முத்துமாலையும்
ஆகிய இவற்றையே காண்கின்றேன்.. வேறெந்த காட்சிகளும் என் கண்களுக்குப்
புலப்படவில்லை..
அர்ச்சுனன் கவனமெல்லாம் குறிவைத்தடிக்க வேண்டிய பொருளின் மீதிருந்ததால்
அவன் வில்லுக்கொரு விஜயன் எனப் பெயரெடுத்தான்.. அபிராமிப் பட்டரின்
கவனமெல்லாம் அன்னை அபிராமியின் மேலிருந்ததால் அவர்தம் பக்தியால்
புகழ்பெற்றார். அர்ச்சுனன் கண்களுக்கு வேறெதுவும் தெரியவில்லை..
அபிராமிப்பட்டருக்கோ காண்பதெல்லாம் அன்னையன்றி வேறில்லை...
பாடல் எண்பத்தாறு
மால் அயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே
விளக்கம் : பாலையும், தேனையும், பாகினையும் போன்ற இனிமையான சொற்களைப்
பேசிடும் அபிராமி அன்னையே... கோபங்கொண்ட காலதேவன், விரைவாகச் செல்லும்
கிளைகளைக் கொண்ட வேலினை என் மேல் விடும்போது, திருமால், பிரம்மன்,
வேதங்கள், அமரர்கள் அனைவரும் தேடியும் காணக் கிடைக்காத உன்
திருப்பாதங்களையும், வளையணிந்த உன் திருக்கரங்களயும் கொண்டு எனக்குக்
காட்சியளிப்பாய்...
மீண்டும் ஒருமுறை தனது மரணவேளையைப் பற்றிப் பாடுகின்றார் பட்டர். ஆனால்
இப்போது அவரது பாடலின் தொனி இனிமையாகவும், குதூகலம் நிறைந்தும்
காணப்படுவதை நம்மால் உணர இயலுகின்றது. கடந்த பாடலில் எல்லாவிடத்தும்
உன்னையே காண்கின்றேன் என்றுரைத்த பட்டர் இப்பாடலில், யாருக்கும் தென்படாத
உன் திருப்பாதங்களையும், அழகிய வளையணியும் திருக்கரங்களையும் கொண்டு நான்
மரணமடையும் வேளையில் என் முன்னே வந்து நில் என்றுரைக்கின்றார். ஆஹா
எத்தனை இனிமையான பாடல் இது...கண்கள் மூடிப் பாடலைப் பாடி இன்புற்று
மகிழுங்கள்..
"பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே " பாலையும், தேனையும்,
பாகையும் போன்ற இனிமையான சொற்களைப் பேசிடும் அபிராமி அன்னையே...
"தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே" என
முருகன் மீது புதுக்கவிஞன் ஒருவன் பாடினாலில்லையா... அவனுக்கு முருகனின்
சொற்களை விடுத்து வேறெதுவும் இனிமையில்லை... அபிராமிப் பட்டருக்கு
அன்னையின் சொற்கள் பால், தேன், சர்க்கரைப் பாகு இவற்றைப் போன்ற இனிமை
நிறைந்தது.. "மால் அயன் தேட" திருமாலும், பிரம்மனும் தேடும். "மறை தேட"
வேதங்கள் தேடும் "வானவர் தேட" அமரர்கள் அனைவரும் தேடும்.. "நின்ற
காலையும்" இப்படி அனைவரும் தேடி நிற்கும் உந்தன் திருப்பாதங்களையும்,
"சூடகக் கையையும் கொண்டு" வளையணிந்த உந்தன் திருக்கரங்களையும் கொண்டு
"வெங்காலன்" கோபங்கொண்ட காலதேவன் "கதித்த கப்பு வேலை " விரைவாகச்
செல்லும் கிளைகளைக் கொண்ட வேலினை "என் மேல் விடும்போது" என்னை நோக்கி
செலுத்தும் வேளையில், நான் மரணமடையும் வேளையில் "வெளி நில் கண்டாய்" நீ
வந்து காட்சியளித்து அருள வேண்டும்.
எத்தனை அதிகாரமாக "வெளி நில் கண்டாய்" எனக் கட்டளையிடும் தொனியில்
உரைக்கின்றார். பக்தி அதிகமாகும் வேளையில் அன்னையின் மேல் உரிமையும்
அதிகமாகின்றது.. நம் தாயிடம் நாம் எதையும் கேட்பதற்காக இரந்து
நிற்பதில்லை.. "சாப்பாடு வை" என்றுதான் சொல்லுவோமே தவிர, "அம்மா..
பசிக்குது... சாப்பாடு போடுங்க" என்று சொல்வதில்லை... அதே தொனியில்தான்
அபிராமிப் பட்டரும் உலகின் தாயான அன்னை அபிராமியைத் தான்
மரணமடையும்வேளையில் வந்து நில் என்று அழைக்கின்றார்..
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம்.. நன்றி..
விளக்கம் : தமது நெற்றிக் கண்ணால் காமதேவனை அழித்த சிவபெருமானது
முடிவில்லா யோக நிலையை உலகமெல்லாம் பழிக்கும் படி செய்து அவனது
இடப்பாகத்தை இடங்கொண்டு ஆளும் சிவ சக்தியே... அபிராமி அன்னையே...
எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம்,
எளியேன் எனது கண்களிலும், செயல்களிலும் தென் படுகின்றதே... இதென்ன
அதிசயம்??
மீண்டும் மீண்டும் ஈசன் அம்மையிடம் அகப்பட்டுக் கொண்டதைக் கிண்டல்
செய்வதே அபிராமிப் பட்டரின் வழக்கமாகி விட்டது... ஆயினும் ஈசனுக்கு அது
பெருமையையே தருகின்றது.. தமிழால் வைதாலும் அருள் செய்யும் ஈசன் அவனது
மனைவியை ஏற்றிப் பாடுவதைக் கேட்டு அருள மாட்டானா? ஒரு புதுக்கவிஞன்
பாடினானில்லையா " அப்பனைப் பாடும் வாயால் தறுதலைச் சுப்பனைப் பாடுவேனோ?"
என்று... அப்பாடல் முழுக்க முருக பக்தி மணக்கும்.. ஆனால் பொருள்
புரியாதோர்க்கு, அது முருகனை நிந்திப்பது போல் தோன்றும்.. அதே போல்தான்
இவ்விடத்தும் அப்பனைப் பழித்து அம்மையை ஏற்றுவது, அம்மையப்பன்
இருவருக்குமே பெருமையைத்தான் தருகின்றது...
"விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை" தனது நெற்றிக்கண்ணால்
காமதேவனை சுட்டெரித்த சிவபெருமானது முடிவில்லாத யோக நிலையை.. அவர்தம்
தவத்தை... ஈசனது தவம் என்பது முடிவில்லாதது. பிச்சாண்டித்தேவராக வரும்
நிலையில் கொடுத்தருள்பவராகவும், தனது சுடலை உலகத் தவத்தில் தன்னை யாரும்
நெருங்க இயலாதவராகவும் இருக்கின்றார். தங்கள் இன்னலையெல்லாம்
திருவிளையாடல்கள் மூலம் இன்புறத் தீர்த்து வைத்த ஈசன் இன்றைக்கு எங்கள்
குறை தீர்ப்பாரா என்று அமரர்கள் அவர்தம் சிவலோகம் சென்று
காத்திருக்கின்றனர்.. அவரோ பாரா முகமாக, மோனதவத்தில்
மூழ்கியிருக்கின்றார்... சரி காம தேவனை அனுப்புவோம்... அப்பன் விழித்து
இன்புற்று நம் துயரைக் களையட்டும் என முடிவாகின்றது.. காமதேவனது
மலர்க்கணைகள் ஈசனுக்கு காமத்தை வரவழைக்கவில்லை... மாறாக கோபத்தை
வரவழைக்கின்றது.. விளைவு .. காமதேவன் தகனம்.... இப்படித் தனது தவநிலையில்
தன்னையாரும் நெருங்க இயலாது என்ற நிலையில் .... உயர்ந்த நிலையில்
இருக்கின்ற பரமன்.....பரமனது விரதம் என்ன ஆனது?? “அண்டம் எல்லாம்
பழிக்கும் படி “ உலகமெல்லாம் பழிக்கும் படி... இவனென்ன தவத்திற்
சிறந்தவன் என்று எண்ணியிருந்தோமே....அன்று காமனை அழித்தானே.... இன்று
இவன் செய்த செயல் இப்படியாகி விட்டதே.... என உலகத்தான் ஈசனைப்
பழிக்கும்படி அவன் என்ன செய்தான்...? அல்லது அவனுக்கு என்ன நேர்ந்தது?
“ஒரு பாகம் கொண்டு ஆளும் பராபரையே” அவ்வீசனின் ஒரு பாகத்தைக் கவர்ந்து
அவ்விடத்திலிருந்து கொண்டு அவனையும் அகிலத்தையும் ஆளும் சிவசக்தியே....
இவனைக் காமத்தால் வெல்ல இயலாது என்று எண்ணியிருந்த உலகத்தார் அவன்
அம்மையிடம் தோற்றுப் போய் தன் இடப்பாகத்தை இழந்த நிலையக் கண்டு வியந்து
அவனைப் பழிக்கின்றனர்.. அவ்வீசனுக்கே சக்தி தரும் சிவசக்தியாகி நின்றாள்
உமையாள்... “மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின் திருமூர்த்தம் “
எந்தவொரு சொல்லுக்கும், எவர்தம் நினைவுக்கும் எட்டாத உனது திருவுருவம்...
அன்னையின் திருவுருவை சொற்களால் வர்ணிக்க இயலுமா? எந்த ஒரு சொல்லால் அவளை
வர்ணித்தாலும் அச்சொல்லினையும் கடந்து நிற்கும் அவளது திருவுருவம்...
ஆனையைத் தடவிக்கண்ட குருடர் போலும் ஒவ்வொருவருவரும் ஒவ்வொரு சொற்களால்
அவளை வழிபடுகின்றனர்... ஆனால் அவளது திருவுருவோ எந்த ஒரு சொல்லிலும்
அடைபடுவதில்லை.. யார்தம் நினைவுக்கும் அவள் எட்டுவதில்லை.... அத்தகைய
பேராற்றல் கொண்டவள் அவள்.. அண்டத்தை எல்லாம் கடந்து அகிலாண்டேஸ்வரியாக
நின்றவள் அவள்... அவது திருவுருவம்..... “எந்தன் விழிக்கும் வினைக்கும்
வெளிநின்றதால்” எனது கண்களிலும், செயல்களிலும் தென்படுகின்றதே... இதென்ன
விந்தை...? அன்னையே அபிராமிப் பட்டரின் கண்களில் தென்படுகின்றாள்...
அன்னையே அவர்தம் செயலாகவும் செயல்படுகின்றாள்.. இதென்ன அதிசயம் என
அதிசயித்துப் பாடுகின்றார் அபிராமிப் பட்டர்...
பாடல் எண்பத்து எட்டு
பரம் என்று உனை அடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரம் அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரம் ஒன்று செற்ற கையான் இடப்பாகம் சிறந்தவளே
விளக்கம் : தரமற்ற செயல்கள் புரிந்த அசுரர்களின் முப்புரத்தை எரிக்க
மேருமலையை வில்லாக வளைத்தவனும், திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த
பிர்ம்மனின் சிரத்தில் ஒன்றைக் கொய்து தம் கையில் ஏந்தியவனுமான ஈசனது
இடப்பாகத்தில் சிறப்பாக இணைந்திருப்பவளே... தனியனாகிய நான் உன்னையே
கதியென்று சரணடைந்தேன்... உன் பக்தர்கள் கூட்டத்தில் தரமில்லாதவன் என்று
என்னைத் தள்ளிவிடாதே....
அன்னையின் அருள்கிடைக்க அருமருந்தான பாடல் இது... தினந்தோறும் அன்னையை
நாடி வரும் பக்தர்கள் கோடி... அப்பக்தர்கள் கூட்டத்தில் தன்னைத்
தரமற்றவன் என்று தள்ளிவிடாதே என்று அன்னையிடம் அபிராமிப்பட்டரே
கெஞ்சுகின்றார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்? தண்டிப்பது தந்தையின்
குணம்.. மன்னித்து அணைப்பது அன்னையின் குணம். தரமற்ற செயல்கள் புரிந்த
அசுரர்களின் முப்புரத்தை எரித்தவன் தந்தை... அகந்தையால் தன் உண்மை நிலை
மறந்த பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்து தண்டித்தவனும் அவனே...
நீயோ அவனது இடப்பாகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றாய்.. அவனது மனநிலை
உனக்கு வந்துவிடுமோ?? தரந்தாழ்ந்தவன் என்று என்னைத் தள்ளிவிடுவாயோ???
அப்படித் தள்ளி விடாதே... ஏனெனில் எனக்கு வேறு எந்த கதியும் இல்லை...நீயே
கதியென்று உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.. என்னைத் தள்ளிவிட்டு
விடாதே... எனப்பாடுகின்றார்...
“தரியலர்தம் புரம் “ தரமிழந்த செயல்களைப் புரிந்த அசுரர்களின்
முப்புரத்தினை “அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய” எரிப்பதற்காக
முன்பொரு நாள் மேரு மலையை வில்லாக வளைத்தவனும் ... “போதில் அயன்”
திருமாலின் நாபிக் கமலத்தில் உதித்த பிரம்மனின் “சிரம் ஒன்று செற்ற
கையான் “ சிரங்களில் ஒன்றைக் கொய்து தன் கையில் கொண்டவனுமாகிய
சிவபெருமானின் “ இடப்பாகம் சிறந்தவளே” இடப்பாகத்தில் சிறப்புற
அமர்ந்தவளே... “தமியேனும்” தனியனாகிய நானும் ... யாருமற்றவனாகிய
நானும்... “பரம் என்று உனை அடைந்தேன்” நீயே கதி என்று உன்னையே
சரணடைந்தேன்..”உன் பத்தருக்குள் தரம் அன்று இவன் என்று தள்ளத் தகாது “
உன் பக்தர்களில் தரமில்லாதவன் இவன் என்று என்னைத் தள்ளிவிடுவது தகாது...
என்னைத் தள்ளிவிடாதே தாயே.....
சுருங்கக் கூறின்
“அறமல்லது அழிப்பவன் இணையாளே...
அறமில்லா என்னைத் தள்ளாதே...
புறமொரு கதியில்லைப் பூவுலகினிலே..
மறமது மறந்தறமெனக் கருள்வாயே”
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி....
விளக்கம் : சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும் பெருஞ்செல்வமே...
அபிராமியே... தன்னிலை கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக அமரலோகம்
அருளும் உனது கணவரும், நீயும் இணைந்து வந்து, என் உடம்பிலிருந்து உயிர்
பிரியும் வேளையில் நான் சுய அறிவிழந்து நிற்கும் பொழுது உனது சேவடிகளை
எனது தலைமேல் வைத்தருள என் முன்னே வந்தருள வேண்டும் என உன்னை வருந்தி
அழைக்கின்றேன்...
தான் மரணமடையும் வேளையில் அன்னையைத் தன் முன்னே வந்து அவள் சேவடிகளைத்
தன் தலைமேல் வைக்க வருந்தியழைக்கும் அபிராமிப் பட்டர் மீண்டும் மீண்டும்
இப்படி அழைப்பதற்கான காரணமும் இப்பாடலிலேயே மறைந்துள்ளது... உடலை விட்டு
உயிர் பிரியும் வேளையில் தான் யார் என்பதை உயிரானது மறந்து போகின்றது..
மற்ற உயிர்களைப் போலவே துடிக்கின்றது... அந்த வேளையில் அன்னையை அழைக்க
இயலுமா என்பது ஐயத்துக்குரிய செயல். எனவே ... இப்போதே அவளை வருந்தி
அழைத்து அச்சமயத்தில் உன் திருவடிகளை என் தலை மேல் வைத்து அருள வேண்டும்
என்று பாடுகின்றார் பட்டர்.. எத்தனை பெரிய பாக்கியம் இது.. அன்னையின்
திருவடிகள் தலைமேல் பட்டால், அவ்வுயிர் மீண்டும் பிறப்படையுமோ???
"சிறக்கும் கமலத் திருவே " சிறந்த தாமரை மலர் மீது அமர்ந்திருக்கும்
பெருஞ்செல்வமே.... அபிராமியே... "துறக்கம் தரும் நின் துணைவரும் "
வானுலகத்தை வரமாக அருளும் உன் துணைவரான சிவபெருமானும், .. "நீயும்"
அன்னையாகிய நீயும்... "துரியம் அற்ற உறக்கம் தர வந்து" நான்கு
நிலைகளையும் கடந்த உறக்கத்தை எனக்குத் தருவதற்காக வந்து... அதென்ன நான்கு
நிலைகள்.? மனித மனமானது நான்கு நிலைகளை அடைய இயலும்... விழிப்பு, கனவு,
ஆழ்ந்த உறக்கம், சமாதி நிலை... விழிப்பு என்பது சாதாரண நிலை... உறக்கம்
வரும் வேளையில் ஆழ்ந்த உறக்கமற்ற நிலையில் மனத்தில் உள்ள எண்ணங்கள் கனவாக
வருகின்றது.. இது இரண்டாம் நிலை.. தன்னை மறந்து உறங்கும் பொழுது ஆழ்ந்த
நித்திரை ஏற்படுகின்றது. இது மூன்றாம் நிலை.. சமாதி நிலை என்பது
விழிப்புமற்ற, கனவுமற்ற, ஆழ்ந்த உறக்கமுமற்ற நிலை... இது ஓர் ஆழ்நிலைத்
தியானம். அனுபவித்துப் பார்த்தால்தான் சமாதி நிலையின் அருமை புரியும்..
அந்நிலையில் விழிப்பும் உண்டு,,, உறக்கமும் உண்டு... நம்மைச் சுற்றி
நடைபெறும் நிகழ்வுகளை நம்மால் உணர இயலும்...ஆனால் நாம் அதைக் கடந்த ஒரு
நிலையில் இருப்போம்.. உறங்குவது போல் இருக்கும்... ஆனால் வெளி நிகழ்வுகளை
மனம் புரிந்து கொண்டுதான் இருக்கும்.. அந்நிலையில்தான் மனமானது தான் யார்
என்பதைப் புரிந்து கொள்கின்றது. இதை அனுபவித்தாலன்றி புரிந்து கொள்ள
இயலாது..ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித அனுபவங்கள் சமாதி நிலையில்
கிடைத்திருக்கும்... இது நான்காவது நிலை... இந்த சமாதி நிலையையும்
தாண்டிய நிலையை எனக்குத் தருவதற்காக நீயும் உன் கணவரும் என்னை நோக்கி வர
வேண்டும்... எனக்கு அந்த நிலையைத் தரவேண்டும் என்கிறார். "உடம்போடு உயிர்
உறவு அற்று அறிவு மறக்கும் பொழுது " உடம்போடு உயிரானது தான் கொண்ட உறவினை
விலக்கும் சமயத்தில், நான் எனது சுய அறிவினை மறக்கும் பொழுது... அந்த
சமாதி நிலையைக் கடந்த நிலையை எனக்கு நீயும் உன் கணவரும் வந்து தந்து,
என் உயிரானது பிரியும் வேளையில் என் சுயத்தை நான் இழக்கும் பொழுது....
இருவித அர்த்தங்கள் இப்பாடலில் மூலம் கிடைக்கின்றன.. ஒன்று.. எனக்கு
சமாதி நிலையையும் கடந்த உறக்கத்தைத் தந்து அதன் பின்னர் எனது உயிர் பிரிய
வேண்டும்... இரண்டு... என் உயிர் பிரியும் வேளையில் நீ அந்த சமாதி
நிலையைக் கடந்த நிலையை எனக்குத் தந்தருள வேண்டும்... வார்த்தைகள்
விளையாடுகின்றன... அபிராமிப் பட்டரின் பாடல்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர்
மனநிலைக்கேற்ற பொருளைத் தருகின்றன.... "நின் சேவடி சென்னி வைக்க" உனது
சேவடிகளை என் தலை மீது வைப்பதற்காக.. "என் முன்னே வரல் வேண்டும் " என்
முன்னே நீ வர வேண்டும்... நீயும் உன் கணவராகிய சிவபெருமானும் எனக்கு அந்த
ஐந்தாம் நிலை உறக்கத்தைத் தந்து அதன்பின்னர் என் உயிரானது என் உடம்பை
விட்டுப் பிரியும் படி செய்ய வேண்டும்... அச்சமயத்தில் உயிர் பிரிந்து
நான் என் சுய அறிவினை இழந்து கிடப்பேன்... அச்சமயத்தில் அம்மா என உன்னை
அழைக்கும் அறிவும் இருக்காது... அப்பொழுது நீ உனது சேவடியை எனது தலை மீது
வைப்பதற்காக என் முன்னே வர வேண்டும்.. "வருந்தியுமே" இதற்காக இப்பொழுதே
உன்னை வருந்தியழைக்கின்றேன் அம்மா.....
பாடல் தொண்ணூறூ
வருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே
விளக்கம் : விண்ணில் வாழும் அமரர்களுக்கு விருந்தாக பாற்கடலில் தோன்றிய
அமுதத்தைத் தந்திட்ட மென்மையான அபிராமியானவள் அவளே வந்து நான்
வருத்தமடையா வண்ணம் என் இதயக் கமலத்தில் புகுந்து அதுவே அவளது பழைய
இருப்பிடமாக எண்ணி அமர்ந்தாள்.. இனி எனக்கு கிடைக்காத பொருளென்று எதுவும்
இல்லை....
அன்னையே என் இதயத்தில் வந்து அமர்ந்த பின்னர் அதை விடப் பெரும் பொருள்
ஏது உண்டு? சகல செல்வங்களையும் உள்ளடக்கிய அபிராமி எனும் பெருஞ்செல்வம்
என் இதயத்து வந்தமர்ந்ததே...அதுவும் தானாக வந்தாள்...நான் கொஞ்சமும்
வருத்தமடையா வண்ணம் என் இதயத்தை அவள் இதுவே தன் பழைய இருப்பிடம் என்று
அமர்ந்தாள்... வேறென்ன வேண்டும் எனக்கு??
இந்த பாடலைப் பாராயணம் செய்தால் பிரிந்த தம்பதியர் கூடி வாழ்வர் என்று
பெரியோர் சொல்வார்கள்...
"விண் மேவும் புலவருக்கு" விண்ணில் வாழும் அறிவிற் சிறந்த அமரர்களுக்கு
"விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே" விருந்தாக பாற்கடலில்
கிடைத்த அருமருந்தான அமுதத்தை அளிக்கும் மென்மையானவளே... அமுதம் வேண்டி
அமரர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலைக் கடைந்தனர். அமுதம்
வெளிப்பட்ட வேளையில் சண்டையும் வரத் தொடங்கிற்று... அது அமரர்களுக்கா..
அல்லது அசுரர்களுக்கா... என... யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை...
ஏனெனில் பாற்கடலைக் கடைந்த நோக்கமே அதுதான்.. அச்சமயத்தில் அமரர்களுக்கு
நல்லுதவி புரிய திருமால் தானே மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை
வஞ்சித்து அமரர்களுக்கு நன்மை புரிந்தார். அமுதமும் தேவர்களுக்குக்
கிட்டியது... அம்மோகினியாக வந்தது திருமாலே ஆயினும், அத்திருமால்
அன்னையின் ஒரு அம்சம் அல்லவா? திருமாலைப் படைத்தவளும் அன்னை
ஆதிபராசக்தியல்லவா?? ஆக... அமரர்களுக்கு அமுதத்தை அளித்தது அன்னையே...
அப்படிப்பட்ட அன்னையாளவள்... "வருந்தாவகை என் மனத்தாமரையில் " நான்
வருத்தமடையா வண்ணம் என் மனமென்னும் தாமரையில் "வந்து புகுந்து " "பழைய
இருப்பிடமாக " "இருந்தாள் " தானகவே வந்து புகுந்து என் மனத்தைத் தனது
பழைய இருப்பிடமாகக் கருதி இருந்தாள்... அன்னையோ பேருரு கொண்டவள். நானோ
எளியவன். என் இதயக் கமலத்தில் அவள் அமரும்பொழுது அது வலிக்கும்
என்றெண்ணியிருந்தேன்.. ஆனால் நான் வருந்தாவண்ணம், எனக்கு வலியைத் தராமல்
மென்மையாக அமர்ந்தாள். அதுவும் என் மனமே அவளது பழைய இருப்பிடமாகக் கருதி
அமர்ந்தாள்... "இனி எனக்குப் பொருந்தாது ஒரு பொருள் இல்லை " இனிமேலும்
எனக்குக் கிடைக்காத பொருள் என்று எதுவும் இல்லை... எல்லாமே எனக்குக்
கிட்டி விட்டது அன்னையெனும் வடிவில்..இந்த அகிலமே அவளுக்குச் சொந்தம்.
அவளோ எனக்குச் சொந்தமானாள்.. இனி இந்த அகிலமும் எனக்கே சொந்தம்...
எனக்குக் கிட்டாத பொருளென்று எதுவுண்டு?? எதுவுமில்லை...
அன்னையானவள் தானே தன் பழைய இருப்பிடத்தைத் தேடி அமர்ந்தது போன் என்
மனத்தில் குடி கொண்டாளே... ஆனந்தம் ... ஆனந்தம்.... ஆனந்தக்
கூத்தாடுகின்றேன்.... வேறென்ன வேண்டும் எனக்கு... இவ்வுலகத்தோர்
மதிக்கும் செல்வம் எனக்குத் துச்சம்.....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம். நன்றி...
அம்மையார் கீதா அவர்களுக்கு சௌந்தர்ய லஹரி பற்றி எழுதும்படி வேண்டுகோள்
விடுத்திருந்தோம்... எமது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது
தெரியவில்லை... மேலும் காளைராசன் ஐயா மட்டுமே திருக்கடவூர் வருகையை உறுதி
செய்துள்ளார்.. வேறு யாரெல்லாம் வருகின்றீர்கள் என்பதைத் தெரியப்
படுத்துங்கள்...
நன்றி...
விளக்கம் : மெல்லிய நுண்ணிய இடையைக் கொண்ட மின்னலைப் போன்றவளும், விரிந்த
சடைகளைக் கொண்ட சிவபெருமானோடு இணைந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட
பொன்னைப் போன்றவளுமாகிய அன்னை அபிராமியைப் புகழ்ந்து வேதங்கள் சொல்லிய
படி அவளைத் தொழும் அடியார்களைத் தொழுபவர்களுக்கு, பல்வேறு இசைக்கருவிகள்
இசை முழங்க, வெண்யானையான ஐராவதத்தின் மேலேறி உர்வலம் வரும் இந்திர பதவி
வந்து சேரும்..
ஆண்டவனுக்கு சேவை செய்வதை விட அவன் அடியார்க்கு செய்யும் சேவையையே அவன்
பெரிதும் மதிக்கின்றான். அதையேதான் அபிராமிப் பட்டர் இங்கு
உரைக்கின்றான்... அன்னையின் அடியார்களைத் தொழுது அவர்கட்கு தொண்டு
செய்வோருக்கு இந்திர பதவியே கிட்டும் என்று குறிப்பிடுகின்றார்.
"மெல்லிய நுண் இடை மின்னனையாளை " மெல்லிய நுண்ணிய இடையினை உடைய மின்னலைப்
போன்றவளை... "விரிசடையோன் புல்லிய மென்முலைப் பொன்னனையாளை " விரிந்த
சடைகளைக் கொண்ட சிவபெருமான் புணர்ந்த மென்மையான திருமுலைகளைக் கொண்ட
பொன்னைப் போன்றவளை, அன்னை அபிராமியை... "புகழ்ந்து மறை சொல்லிய வண்ணம்
தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு" புகழ்ந்து வேதங்கள் சொல்லும் வழியில்
அவளை வழிபடும் அடியார்களை வழிபடுவோர்க்கு... அதாவது
அடியார்க்கடியார்க்கு.... "பல்லியம் ஆர்த்தெழ " பல்வேறு இசைக்கருவிகள்
இசை முழங்க... "வெண்பகடு ஊரும் பதம் தருமே" வெண்யானையான ஐராவதத்தில்
ஊர்வலம் செல்லும் இந்திர பதவி வந்து சேரும்... அதை அன்னையே தருவாள்...
ஆகையால்தான் குருபக்தி அவசியம் என்று நம் முன்னோர்கள் சொல்லி
வைத்தார்கள்... சாயாண்ணா என்று அன்போடு அழைக்கப் படும் சுவாமி சூர்யபாதா
அவர்கள் சொல்வார்கள்.. "ஈசனுக்குக் கோபம் வந்தால் நீ குருதேவரிடம்
அடைக்கலம் புகலாம். ஈசனது கோபத்தைத் தடுக்கும் ஆற்றல் குருவுக்கு
உண்டு... ஆனால் குருவுக்குக் கோபம் வந்தால் அதை அந்த ஈசனாலும் தடுக்க
இயலாது" என்று... ஆகவே அன்னையின் அடியார்களை வழிபடுவோருக்கு அன்னை அந்த
இந்திர பதவியைத் தருவாள்....
பாடல் தொண்ணூற்று இரண்டு
பதத்தே உருகி நின் பாதத்திலே மனம் பற்றி உந்தன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனி யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன் அவர் போன வழியும் செல்லேன்
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே
விளக்கம் : மும்மூர்த்திகள் முதலான தேவர்கள் யாவரும் போற்றும் புன்னகை
நிறைந்தவளே... அபிராமி அன்னையே... உனது சொற்களிலே உருகி உன் திருவடிகளிலே
மனம் ஒன்றி உனக்கு அன்பனாக வாழ்வதற்காக என்னை உன் அடியாக்கிக் கொண்டாய்..
நான் இனி வேறு எந்த ஒரு மதத்தைக் கண்டும் மதி மயங்க மாட்டேன்.
அம்மதத்தைச் சார்ந்தவர் சென்ற வழியிலும் செல்ல மாட்டேன்...
அழகிய சொல் "முகிழ் நகை". தமிழில் இச்சொல் வழக்கில் இல்லாவிட்டாலும்,
கன்னடத்தில் "முகிழ் நகை" எனும் சொல் வழக்கில் உள்ளது... எங்கள்
குருதேவர் தியானத்தில் எங்களை அழைத்துச் செல்லும் போது "முகதல்லி முகிழ்
நகையிரலி" என்று சொல்வது அப்படியே நினைவுக்கு வருகின்றது. அன்னையை அழகிய
புன்னகையே என வர்ணிக்கும் அபிராமிப் பட்டரின் வார்த்தைகள் நம் முகத்தில்
புன்னகையை வரவழைக்கின்றன...
"முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே" மும்மூர்த்திகள்
முதலிய தேவர்கள் அனைவரும் போற்றும் அழகிய புன்னகையே... "பதத்தே உருகி "
உன் சொற்களிலே உருகி... " நின் பாதத்திலே மனம் பற்றி " உன்
திருவடிகளிலேயே என் மனத்தை நிலை நிறுத்தி... :"உந்தன் இதத்தே ஒழுக அடிமை
கொண்டாய் " உன் இஷ்டப்படி வாழ்வதற்காக... உனக்கு அன்பனாய் வாழ்வதற்காக
என்னை உனக்கு அடிமையாக்கிக் கொண்டாய்... "இனி யான் ஒருவர் மதத்தே மதி
மயங்கேன் " இனிமேல் நான் எந்த ஒரு மதத்திலும் மதி மயங்க மாட்டேன்...
"அவர் போன வழியும் செல்லேன்" அம்மதத்தார் சென்ற வழியிலும் செல்ல
மாட்டேன்....
அன்னை அபிராமி மதம் இருக்க அடுத்த மதம் நமக்கெதற்கு....
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி.....
விளக்கம் : இந்த அகிலத்தையெல்லாம் பெற்றெடுத்த அன்னை அபிராமியின்
திருமுலைகள் மொட்டினைப் போன்றுள்ளதென்றும் அவளது திருக்கண்கள் மான்களைப்
போன்றுள்ளதென்றும் புகழ்வது நகைப்புக்குரிய செயல்.. எல்லையில்லாத
வடிவையுடைய அபிராமியை மலையரசன் இமவான் பெற்றெடுத்த மலைமகள் என்று
விளிப்பதும் வம்பே. இவளது தகைமைகளை நாம் நாடிச் சென்று அறிய
விரும்புவதும் மிகையான செயல்களே...
குருடர்கள் ஆனையைத் தடவிக் கண்ட கதைதான் மீண்டும் மீண்டும் நினைவுக்கு
வருகின்றது... தான் அன்னையைத் துதித்துப் பாடிய பாடல்கள், அவளை வர்ணித்த
வர்ணனைகள் இவையெல்லாம் நகைப்புக்குரியன என்றும், தகாதன என்றும் அவள்
குணங்களை அறிய முற்படுவது மானுடரின் சக்திக்கு மிகையான செயல் என்றும்
குறிப்பிடுவது நம்மை விழியுயர்த்த வைக்கின்றது.. ஒரு கோயிலைக் கட்டி
அதனுள் ஒரு விக்கிரகத்தை வைத்து அதுதான் அன்னை அபிராமி என்று வழிபடுவதும்
கூட ஒருவகையில் நகைப்புக்குரிய செயல்தான். ஏனெனில் அவள் முடிவற்ற
வடிவுடையவள்.. அப்படியாயின் கோவிலகள் எதற்கு?? வழிபாட்டு முறைகள்
எதற்கு??? இவை அன்னையைப் பற்றிய சிந்தனைகளை நமக்கு ஏற்படுத்தவும், அவளே
நம்மைப் படைத்தவள் என்பதை நமக்கு நினைவூட்டவும்தான்... ஆலயங்கள் மனித
மனங்களை நெறிப்படுத்தவும், மனித சிந்தனைகளை ஒரே நேர்க்கோட்டில் கொணரவுமே
கட்டப்பட்டன... ஆனால் அன்னையானவளோ இவற்றையெல்லாம் தாண்டி நிற்பவள்..
இருக்கும் இடத்திலிருந்து "அபிராமி" என்றழைத்தால், ஓடிவந்து கருணை
செய்யும் அன்னை எளியவள்... இவள் எளியவள் என்றெண்ணி இவளை நான் அறிந்து
கொண்டேன்.. என்று பெருமை பேசும் மூடருக்கு அவள் பெரியவள்.. அகிலமே
அன்னையாக இருக்கையில் அங்கென்றும், இங்கென்றும் அவளைத் தேடி, அவள் அழகை
மற்றவற்றோடு ஒப்பிட்டு வர்ணித்தல் அபிராமிப் பட்டருக்கு நகைப்பை
ஏற்படுத்துகின்றது... உலகைப் பெற்றெடுத்தவளை, இவள் மலையரசன் பெற்றெடுத்த
மலைமகள் என விளிப்பது தகாத செயல்.. அது வம்புக்குரிய செயல் என்று
பகர்கின்றார்.
பெரியோர் ஒருவரது உரையில் கேட்டது. இராமனைப் பற்றி அவர் உரைத்ததன்
சாரத்தை இவ்விடத்துப் பதிவுசெய்கின்றேன்.. "எந்த இடத்தில் பெருமையும்,
எளிமையும் இணைந்திருக்கின்றதோ அதுதான் இறைவன்.. இறைவன் பெருமை
நிறைந்தவனாகவும் இருக்கின்றான். அதே சமயம் நாம் அழைத்தால் வந்து அருள்
செய்யும் எளியவனாகவும் இருக்கின்றான்.. உலகத்து வழக்கில் பெருமை
இருக்குமிடத்தில் எளிமை இல்லை... எளிமை இருக்கும் இடத்தில் பெருமை
இல்லை... இந்த தேசத்து உயர் பதவியில் இருப்பவர் பெருமை பெற்றவர்.. ஆனால்
அவரை நம்மால் அவ்வளவு எளிதில் சந்திக்க இயலுமா? இயலாது. எனவே பெருமை
இருக்கும் இடத்தில் எளிமை இல்லை... தெருவோரம் குப்பை
நிறைந்திருக்கின்றது. எளிதில் நெருங்கி விட எளிமையாக இருக்கின்றது என்று
அதனைப் பெருமை கொண்டாட இயலுமா? எனவே எளிமை இருக்குமிடத்தில் பெருமை
இல்லை... ஆனால் இறைவனின் திருவடிகளோ மிகப் பெருமை வாய்ந்தது... அதே சமயம்
நமக்கருள் செய்யும் வகையில் அத்தனை எளிமையானது... " இது அந்த பெரியவர்
இராமனின் பெருமையையும் எளிமையையும் பற்றி உரைத்தது... அதையே இவ்விடத்து
நினைவு கூர்கின்றேன்... அன்னையானவளை நாம் எளிமையான சொற்கள் கொண்டு வர்ணணை
செய்கின்றோம்.. அது நகைப்புக்குரிய செயல்...ஆனால் அதையே ஏன் பட்டரும்
செய்தார்... ? அன்னை அத்தனை எளிமையானவளாக அவருக்குக்
காட்சியளித்ததால்தான். அவள் மலையரசனுக்கு மகளாகப் பிறந்தது தன் எளிமையை
உலகிற்கு உணர்த்துவதற்கேயன்றி வேறெதற்கும் அல்ல...
"இந்த ஞாலம் எல்லாம் பெற்ற நாயகிக்கு" இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்த
தலைவிக்கு.. அபிராமிக்கு.... "முகையே முகிழ் முலை " அரும்பும் மொட்டினைப்
போன்ற முலைகள் உள்ளன என்பதும்... "மானே முதுகண் " மருளும் மானைப் போன்ற
விழிகள் உள்ளன என்பதும் "நகையே இது" நகைப்புக்குரிய செயலே இது..
"முடிவுயில் " எல்லையில்லாத வடிவுடையவளை... எங்கள் அபிராமியை..."மலைமகள்"
"பிறவியும்" "என்பதும்" "அந்த வகையே" "வம்பே" மலையரசன் பெற்றெடுத்த
மகளல்லவா என்று மலைமகள் என்று விளிப்பதும் அதைப் போன்ற நகைப்புரிய
செயலே... மேலும் அது வம்புக்குரிய செயல்.... ஏனெனில் இந்த அகிலத்தைப்
பெற்றெடுத்தவளும் அவளே.... அவளை இன்னொரு மானுடனுக்குப் பிறந்தவள் என்பது
வம்புக்குரிய செயலல்லவா?? "நாம்" "இவள் தன் தகைமையை நாடி விரும்புவதே"
"மிகையே" எளியோர்களாகிய நாம் இவளது அருங்குணங்களையும், பெருமைகளையும்
நாடி விரும்பி அறிந்து கொள்ள முயல்வதும் மிகையான செயலே... ஏனெனில்
நம்மால் அது இயலாது.. இவள் இத்தன்மையள் என்றுரைத்தால், இன்னோரிடத்து அவள்
வேறு தன்மையளாய் நிற்கின்றாள்... ஓ அதுவே அவளது தன்மை என அவ்வழி
சென்றால், பிறிதோரிடத்தில் அவள் இன்னொரு தன்மையளாய் நிற்கின்றாள்.. ஆக
அவளை,.. அவளது தன்மைகளை வரையறுக்க இயலாது.. அவளை நம்மால் அறிந்து
கொள்ளவும் இயலாது...
பாடல் தொண்ணூற்று நான்கு
விரும்பித் தொழும் அடியார் விழி நீர் மல்கி மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவு இழந்து
கரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவர் என்றால் அபிராமி சமயம் நன்றே
விளக்கம் : அபிராமி அன்னையை விரும்பித் தொழும் அடியவர்கள் கண்களெல்லாம்
கண்ணீர் மல்கி, உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து, ஆனந்தம் ததும்பி, சுய
அறிவினை இழந்து, தேனுண்ட வண்டைப் போல் களித்து, சொற்கள் தடுமாறி இப்படிச்
சொல்லப்பட்ட செயல்கள் எல்லாம் கொண்ட பித்தரைப் போல் ஆவார்கள் என்றால்
அன்னை அபிராமியை வழிபடும் சமயம் நல்லதே....
அன்னையை முழுமனதோடு எண்ணி வழிபடும் பக்தர்கள் ஆலயம் சென்று அவளைக்
காணும்போது இது போன்ற செயல்களைச் செய்வது இயற்கையானதுதான்... குலசேகரன்
பட்டினத்தில் கோயில் கொண்டுள்ள முத்தாரம்மனைக் காணச் செல்லும் போதெல்லாம்
நானும் இது போன்ற செய்கைகளுக்குள்ளாகின்றேன்.. காரணம் புரிவதில்லை..
அதற்குரிய காரணம் அன்னை மேல் நாம் கொண்டுள்ள அதீத அன்பே... சொல்லொண்ணா
ஆனந்தம் அதிகமாகி அவளையே நேரில் கண்டது போன்ற உணர்வு மேலோங்கும்போது விழி
தானே நீரைச் சொரிகின்றது... மெய்யோ மயிர்சிலிர்த்து ஆடுகின்றது... சுய
அறிவு அற்றுப்போகின்றது... தேனுண்ட வண்டைப் போல் மனம் ஆனந்த
நடனமாடுகின்றது... இவற்றையெல்லாம் காண்போர் இவனென்ன பைத்தியக்காரனைப்
போல் செயல்படுகின்றானே என இகழ்ந்துரைக்கின்றனர். அபிராமிப் பட்டரை
அப்படித்தான் பித்தனென்றனர்.. ஆனால் பட்டரோ இப்பித்த நிலையை அபிராமி
சமயம் எனக்குத் தருமானால் அது நல்ல சமயமே... என்றுரைக்கின்றார்...
கிறித்தவ நண்பர்களும் இதைப் படித்து வருகின்றீர்கள்... இந்துக்களின்
ஆலயங்களில் தன்னை மறந்து ஆடும் பக்தர்களைப் பேய் பிடித்து ஆடுகின்றான்
எனக் கிண்டல் செய்கின்றார்கள்... ஆனால் இதையேதான் "பரிசுத்த ஆவி"
நிறைந்து ஆடுவதாக அவர்களும் அனுபவிக்கின்றனர்.. ஆக ஆழ்ந்த இறையனுபவம்
இதைப் போன்ற செயல்களைத் தருவதாகத்தான் இருக்கின்றது.. ஆனால் அது தன்னை
மறந்த ஆனந்த நிலை என்பது அனுபவிக்காதோருக்குப் புரியாது...
"விரும்பித் தொழும் அடியார்" அன்னை அபிராமியை விரும்பித் தொழுகின்ற
அடியவர்கள் "விழி நீர் மல்கி" கண்களில் கண்ணீர் வழிந்தோட "மெய் புளகம்
அரும்பித்" உடம்பெல்லாம் மயிர் சிலிர்த்து... (இதைத்தான் கிராமத்தில்
"புல்லரிப்பது" என்பார்கள்). "ததும்பிய ஆனந்தம் ஆகி" ஆனந்தம் ததும்பி
"அறிவு இழந்து" தங்கள் சுய அறிவினை இழந்து "கரும்பின் களித்து" தேனுண்ட
வண்டினைப் போல் களித்து "மொழி தடுமாறி" சொற்கள் தடுமாறி "முன் சொன்ன
எல்லாம் தரும் பித்தர் ஆவர் என்றால்" இவ்வாறு சொன்ன செய்கைகளை எல்லாம்
செய்யும் பித்தர்கள் ஆவர் என்றால்.... உலகத்தோரின் பார்வையில்
பைத்தியக்காரனைப் போல் ஆவார்கள் என்றால் "அபிராமி சமயம் நன்றே" அபிராமியை
வழிபடுவதற்கு வழிகாட்டும் இந்த அபிராமியின் சமயம் மிகவும் நல்லதே..
உயர்ந்ததே....
இந்த பாடலைப் பாடும்போதே அந்தப் பரவச நிலை ஏற்படுகின்றது... கண்கள் மூடி
அபிராமியை மட்டுமே மனத்தில் எண்ணி அவள் திருவுருவை மனத்தில் நிறுத்தி ஒரு
நொடி இருந்தால் போதும் .. நம் கண்கள் பனிக்கும்... இதயம் இனிக்கும்
(கலைஞரைக் காப்பியடித்துவிட்டேனோ?)
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்... மீண்டும் சந்திப்போம்.. நன்றி..
விளக்கம் : அழியாத நல்ல குணங்களின் குன்றாக விளங்குபவளே... அருள் நிறைந்த
கடலாக இருப்பவளே... மலையரசன் இமவான் பெற்ற கோமளமே... எங்கள் அபிராமி
அன்னையே.... எனக்கென்று உள்ளதெல்லாம் நான் அன்றே உனக்கென்று அர்ப்பணித்து
விட்டேன்.. இனி எனக்கு நல்லது நடந்தாலும் தீயது நடந்தாலும் அதனால் எனக்கு
எந்த பாதிப்பும் இல்லை.... எனக்கு நீயே கதி...
அனைத்தையும் அன்னைக்கே அர்ப்பணித்து விட்ட பின்னர் நன்மையால் வரும்
மகிழ்வும் இல்லை... தீமையால் வரும் துன்பமும் இல்லை.. அன்னையையே பரம்
என்று கொண்ட மனம் விருப்பு, வெறுப்பு அற்ற நடுநிலை கொண்டதாகின்றது..
குணங்களில் குன்றாகவும், அருட்பெருங்கடலாகவும் இருக்கும் அன்னை அத்தகைய
நல்மனத்தினை நமக்குத் தந்தருள்கின்றாள். அன்னையே நம்மை வழி நடத்தும்போது
நம் வாழ்வில் தீமைகள் ஏது..? எல்லாம் நன்மையே அல்லவா?
"அழியாத குணக் குன்றே " அழியாத நற்குணங்களின் குன்றே.... "அருட்கடலே"
அருளெனும் கடலே... "இமவான் பெற்ற கோமளமே" மலையரசன் இமவான் பெற்றெடுத்த
கோமளமே.. எங்கள் அபிராமி அன்னையே... "எனக்கு உள்ளதெல்லாம் அன்றே உனது
என்று அளித்து விட்டேன் " எனக்கென்று உரிமையுள்ள அனைத்தையும் அன்றே நான்
அவையெல்லாம் உனதே என்று அர்ப்பணித்து விட்டேன்.. என்று? என்றைக்கு நீ
என்னை உன் மகனென்று அறிந்தாயோ அன்று... "நன்றே வருகினும் தீதே விளைகினும்
நான் அறிவது ஒன்றேயும் இல்லை " இனிமேல் எனக்கு நன்மை நடந்தாலும், தீமை
விளைந்தாலும் அதனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை.. அவற்றின்
மகிழ்ச்சியோ துக்கமோ என்னைப் பாதிக்காது... "உனக்கே பரம்" ஏனெனில் எனக்கு
நீயே கதி.....
ஆழ்ந்த மனத்துயரில் இருக்கும்போதெல்லாம் அறியாமல் என் மனது பாடும் பாடல்
இது... இப்பாடலைப் பாடும் போது மனம் இலகுவாகி நான் துயரங்களிலிருந்து
எளிதில் வெளிவருவேன்.... மிக அருமையான பாடல்.
பாடல் தொண்ணூற்று ஆறு
கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
விளக்கம் : மென்மையானவளை, அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை
நிறப் பேரழகியை, குற்றமில்லாதவளை, எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக்
கொண்டவளை, சகல கலைகளிலும் வல்லமை பெற்ற மயில் போன்றவளை, எங்கள்
அபிராமியை, தம்மால் இயன்ற அளவுக்குத் தொழுபவர்கள் ஏழுலகையும் ஆளும் பேறு
பெறுவார்கள்...
ஆலயம் சென்று அன்னையை வணங்கும் போது கண்ணீர் மல்கி, கரங்கள் கூப்பி,
சிரங்குனிந்து தொழுதிடல் வேண்டும்.. ஆனால் இன்றைய கலாச்சாரமோ ஆலயத்திற்கு
வெளியில் நின்று (சிலர் நிற்பது கூட இல்லை) ஒரு கையை மட்டும் தூக்கி
வணங்கி விட்டு செல்கின்றனர்... இது முறையல்ல.. தம்மால் இயன்ற அளவுக்குத்
தொழ வேண்டும்... அதனால்தான் பெரியோர்கள் தரையில் நெடுஞ்சாண்கிடையாக
வீழ்ந்து வணங்குகின்றனர்... அப்படி அவளைத் தொழுவோர்கள் ஏழுலகையும் ஆளும்
பேறு பெறுவார்கள்... இது அபிராமிப் பட்டர் வாக்கு... இன்னோர் பொருளும்
கொள்ளலாம்.அதை இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள் உரைத்த கதை ஒன்றின் மூலம்
விளக்குகின்றேன்.... பக்தியிற் சிறந்தவர் யாரென ஒருமுறை நாரதர்
திருமாலிடம் வினவினார்.. ஓர் ஏழைக் குடியானவனைக் காண்பித்து "இவனே என்
பரம பக்தன்" என உரைத்தார் திருமால். "அல்லும் பகலும் இடையறாது "நாராயணா"
என உன் திருநாமத்தைச் செப்பும் என்னை விட இந்த ஏழைக் குடியானவன்
எவ்வகையில் உயர்த்தியானவன்?" என நாரதர் வினவ...திருமால் புன்னகை
பூத்தவாறே "நீ சென்று அவனது அன்றாட நடவடிக்கைகளை ஒரு நாள் மட்டும்
கவனித்து வா" என்று அனுப்பி வைத்தார். நாரதரும் சென்று கவனித்தார்.
அக்குடியானவன் காலையில் எழுந்தான் "ஸ்ரீ ஹரி" என்றான்.. தனது காலைக்
கடன்களை முடித்தான்.. கலப்பையை எடுத்துக் கொண்டு வயலுக்குச் சென்றான்.
வழக்கம்போல் வேலைகளைச் செய்தான்.. மாலை இல்லம் திரும்பினான்..
குளித்தான். தன் மனைவி மக்களோடு உரையாடினான். ஆட்டங்கள் ஆடி மகிழ்ந்தான்.
இரவு படுக்கையில் படுக்கச் சென்றான். "ஸ்ரீ ஹரி" என்றான்.
உறங்கிவிட்டான்.. இது நாரதர் கவனித்த தினத்தில் நிகழ்ந்தது. திருமாலிடம்
திரும்பிய நாரதர் இதை உரைத்தார். திருமாலும் சிரித்தவாறே "இன்றல்ல நாரதா.
என்றுமே அவனது வழக்கமான செயல்கள் இவைதான்" என்றுரைத்தார்.. "பின்னர்
எப்படி அவனைத் தங்களது பரமபக்தன் என்று உரைத்தீர்கள்?" என நாரதர்
வினவ...பகவான் நாரதன் கையில் ஒரு எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தைக் கொடுத்து
"நாரதா. இந்த பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு இதில் உள்ள எண்ணெய்
ஒரு சொட்டளவும் சிந்தாமல் இந்த வைகுண்டத்தை ஒரு முறை சுற்றி வா. பிறகு
பதிலுரைக்கிறேன்" என்றார். நாரதரும் சுற்றி வந்தார். "பாருங்கள் பகவானே..
ஒரு சொட்டளவும் சிந்தவில்லை.. தங்கள் ஆணையை அப்படியே நிறைவேற்றி
விட்டேன். இப்போது சொல்லுங்கள் யார் பக்தியில் சிறந்தவரென்று?" என
பகவானிடம் வினவினார் ..பகவான் "நாரதா.. இந்த வைகுண்டத்தைச் சுற்றி
வருகையில் எத்தனை முறை என்னை நினைத்தாய்? எத்தனை முறை என் நாமத்தை
உரைத்தாய்?" என பதிலுக்கு ஒரு வினாவை எழுப்பினார் "அதெப்படி... என்
கவனமெல்லாம் இந்த எண்ணெய் துளியளவும் சிந்திவிடக்கூடாது என்பதிலேயே
இருந்தது.. ஒரு முறை கூட தங்களை நினைக்கவில்லை.. அதெப்படி நினைக்க
இயலும்? என் கவனம் உங்கள் மேல் வந்து விட்டால் நான் பரவசமாகி விடுவேன்.
எண்ணெய் சிந்தியிருக்குமே?" என்று நாரதர் பதிலுரைக்க... "இந்த சிறு
பாத்திரத்தைச் சிந்தாமல் சுமக்கும் வேளையில் ஒரு முறை கூட நீ என்னை
நினைக்கவில்லை...ஒரு முறை கூட என் திருநாமத்தைச் செப்பவில்லை. ஆனால்
அவனைப் பார்.. ஏழை... அவனுக்குச் சுமைகள் பல... குழந்தைகள் பல... ஆயினும்
காலை எழுந்தவுடன் ஒரு முறை... இரவில் உறங்குமுன் ஒருமுறை ... என
நாளொன்றுக்கு இருமுறை என் திருநாமத்தையுரைத்து என்னை நினைக்கின்றானல்லவா?
தனது இல்வாழ்க்கையெனும் பாத்திரத்தையும் அவன் ஏந்தி வந்த பொழுதும் அவனது
கவனங்களெல்லாம் மனைவி, குழந்தைகள் என்றிருந்த போதும் தினமும் மறவாது என்
நாமத்தை உரைக்கின்றானே...அவனல்லவா என் பரமபக்தன்" என சிரித்தவாறே உரைத்த
திருமாலைக் கண்டு நாணிக் கொண்டே வெளியேறினார் நாரதர்..
நம்மால் இயன்ற அளவுக்கு அன்னையைத் தொழவேண்டும். உலகின் பந்தங்களில்
கட்டுண்டோம்.. சுமைகள் சுமக்கின்றோம்... அந்நிலையிலும், நம்மால் இயன்ற
அளவுக்கு அன்னையின் நினைவில் நிற்க வேண்டும்.. அவளைத் தொழுதிடல்
வேண்டும்... இவ்வாறு தன்னால் இயன்ற அளவுக்குத் தொழும் அடியவர்கள்
ஏழுலகிற்கும் அதிபர்கள் ஆவர்...
"கோமளவல்லியை " மென்மையானவளை..."அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை " அழகிய இளந்தாமரையில் கோயில் கொண்டுள்ள பச்சை நிறத்தவளை...
கற்பனையில் அன்னையின் திருவுருவைக் கண்டு மகிழுங்கள்... "ஏதம் இலாளை"
குற்றங்குறைகள் இல்லாதவளை... "எழுதரிய சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை"
எழுதுவதற்கரிய அழகுடைய கருநிற மேனியைக் கொண்ட சகலகலைகளிலும் வல்லமை பெற்ற
மயில் போன்றவளை... எங்கள் அபிராமி அன்னையை... "தம்மால் ஆமளவும் தொழுவார்"
தங்களால் இயன்ற அளவுக்குத் தொழுகின்ற அடியவர்கள்.. "எழு பாருக்கும்
ஆதிபரே" ஏழுலகையும் ஆளும் அதிபர்கள் ஆவார்கள்.. ஏழுலகும் அவர்கட்குச்
சொந்தமாகும்...
அன்னையின் வழிபடுதலால் ஏற்படும் பயனைச் சொல்லும் பாடல் இது... இப்பாடலைத்
தொடர்ந்து பாடி வந்தால் சென்றவிடத்தெல்லாம் வெற்றி பெறலாம் எனப்
பெரியோர்கள் உரைப்பார்கள்...
தொடரும் பாடல்களின் விளக்கம் அடுத்த மடலில்.. மீண்டும் சந்திப்போம் நன்றி...
பாடல் தொண்ணூற்று எட்டு
தை வந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்ததெங்கே
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒரு காலும் விரகர் தங்கள்
பொய் வந்த நெஞ்சில் புகல் அறியா மடப்பூங்குயிலே
விளக்கம் : உண்மை நிறைந்த நெஞ்சத்தைத் தவிர்த்து ஒரு போதும் வஞ்சகரின்
பொய் நெஞ்சில் புகுதற்கறியாத அழகிய பூங்குயிலே... எங்கள் அபிராமி
அன்னையே... உனது திருவடித் தாமரைகளைத் தனது தலைமேல் அணிகலனாகச் சூட்டிய
சங்கரனாரின் கையிலிருந்த அக்கினிச் சட்டியும், தலைமேலிருந்த கங்கையும்
எங்கே மறைந்தன?
அன்னையை மணம் முடிக்க சங்கரனார் வருகின்றார்.. எந்நேரமும் சுடலையில்
தியானத்தில் மூழ்கியிருக்கையில் அவர் பெருஞ்சடையில் கங்கையானவள் ஒட்டிக்
கொண்டாள். அவரது கையிலோ அவரது கோபத்தையொத்த அக்கினிச் சட்டி... அன்னையின்
திருப்பாதங்களைத் தனது சிரசில் சூடி அவளையே மணம் முடிக்க வேண்டி
வருகின்றார்.. காண்போர் என்ன பகர்வர்? இவனா மணம் முடிக்கச் செல்லும்
மணமகன்.? இதென்ன தவக்கோலம்? சுடலைக் கோலம்? என எள்ளி நகையாட மாட்டார்களா?
எனவே தனது தவக்கோலத்தை மறைத்து இராச அலங்காரத்தில் வருகின்றார்...
அவர்தம் கையில் நெருப்புச் சட்டியிருந்தால் அழகிய பூங்குயில் போன்ற
அன்னைக்குத் தகுமா? எனவே அதை எங்கேயோ மறைத்து விட்டார்... தனது
சடைமுடிமேல் கங்கையிருந்தால் அன்னை பொறுப்பாளா? இவள் எனக்குச்
சக்களத்தியா? என்று சங்கரனாரிடம் சண்டை பிடிப்பாளில்லையா? அதற்காக
கங்காதேவியையும் எங்கேயோ மறைத்து விட்டார்.. இப்போது அழகிய அரசகோலத்தில்
அன்னையை மணம் முடிக்க வந்து கொண்டிருக்கின்றார்... பட்டருக்கு
இக்காட்சித் தென்படுகின்றது.. என்னடா இது இவர் கையில் ஓர் அக்கினிச்
சட்டியைக் கண்டோமே? இவர் சடையில் கங்கை குடிகொண்டிருந்தாளே...? எங்கே
போயின அவை? என் அன்னையை நீ உன் தலையில் சூடிக்கொண்டதால் அவை எங்கே
மறைந்து போயினவோ?? என சங்கரனாரிடம் கேட்கின்றார்... நீ இப்படிச்
செய்கின்றாயே... என் அன்னையோ உண்மை பேசுவோர் நெஞ்சத்துள் மட்டுமே
குடிபுகுவாளேயன்றி ஒருபோதும் பொய்யுரைக்கும் வஞ்சசர் நெஞ்சத்தில்
குடிபுகுவதே இல்லையே... உன்னை எப்படியடா தன் கணவனாக ஏற்றாள்? என ஈசனைக்
கிண்டலடிக்கின்றார்...அகிலத்தைப் படைத்த ஆதிபராசக்தியே ஆனாலும்
அவளுக்கும் பெண்ணுக்குரிய குணங்கள் இருப்பதாலேயே நீ இப்படிச்
செய்கின்றாயோ? எனவும் வினவுகின்றார். அன்னையிடமும் நீ உண்மை பேசுவோரை
விடுத்து, வஞ்சகர்களின் பொய் பேசும் நெஞ்சத்தில் குடியிருப்பதில்லையே...
உன்னை ஏய்க்கும் பொருட்டு சங்கரனார் வேடமிட்டு வந்திருக்கின்றானே... இவனை
நீ எப்படி ஏற்றாய்? அன்னையிடமும் கேள்விக்கணையைத் தொடுக்கின்றார்.
"மெய் வந்த நெஞ்சின் அல்லால் " உண்மை பேசுவோர் நெஞ்சத்தைத் தவிர்த்து
"ஒருகாலும்" ஒருபோதும் "விரகர் தங்கள்" வஞ்சகர்களின் "பொய் வந்த நெஞ்சில்
புகல் அறியா மடப் பூங்குயிலே" பொய் பேசும் நெஞ்சத்தில் புகுவதற்கறியாத
அழகிய பூங்கியிலே... எங்கள் அபிராமி அன்னையே... "தை வந்து நின் அடித்
தாமரை சூடிய சங்கரற்கு" உன் திருவடித் தாமரைகளைத் தனது சிரசின் மேல்
அணிகலனாக சூடிய சங்கரனாரின் "கை வந்த தீயும் " கையிலிருந்த அக்கினிச்
சட்டியும் "தலை வந்த ஆறும்" சடைமேலிருந்த கங்கை நதியும் "கரந்ததெங்கே?"
எங்கே மறைந்து போயின? அன்னை உன்னைக் கோபித்துக் கொள்வாளென்று எங்கே
மறைத்து விட்டு வநதீர் சங்கரனாரே..? உம் கோலம் எல்லோருக்கும்
தெரியுமய்யா... எங்கள் தாயை நீர் எப்போதும் ஏமாற்ற இயலாதய்யா....
தொடரும் இறுதி இரு பாடல்களின் விளக்கமும், அபிராமி அந்தாதி நூற்பயனின்
விளக்கமும் நாளைய மடலில்... மீண்டும் சந்திப்போம்... நன்றி...
பாடல் தொண்ணூற்றொன்பது
குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே
விளக்கம் : கயிலை நாதன் சிவபெருமானுக்கு முன்பொருநாள் மலையரசன் இமவான்
மணமுடித்துக் கொடுத்த பெரிய குண்டலங்களை அணிந்த அபிராமி அன்னையே... நீ
கடம்பவனமாகிய மதுரை மாநகரில் குயிலாக இருக்கின்றாய்.. இமயத்தில் அழகிய
மயிலாக இருக்கின்றாய். ஆகாயத்தில் உதய சூரியனாய் இருக்கின்றாய். அழகிய
தாமரை மீது அன்னமாய் அமர்ந்திருக்கின்றாய்..
அன்னையின் திருக்கோலங்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவில்
காணக்கிடைக்கின்றன... அன்னையானவள் மதுரையில் குயிலாகவும், கயிலையில்
மயிலாகவும், சிதம்பரத்தில் ஞான ஒளியாகவும், திருவாரூரில் அன்னமாகவும்
விளங்குகின்றாள் எனப் பெரியோர்கள் பகர்வார்கள். அதையேத்தான் அழகிய பாடலாக
அபிராமிப் பட்டர் பாடுகின்றார்.
சிறு வயதில் கற்ற ஓர் பாட்ல் நினைவுக்கு வருகின்றது. "அழகிய மயிலே
அபிராமி... அஞ்சுக மொழியே அபிராமி... ஆதிக்கடவூர் அபிராமி... ஆனந்த வடிவே
அபிராமி" என்று தொடரும் அப்பாடல்... மதுரை மாநகரில் இன்னிசை பாடும்
குயிலாக இருப்பவள், இமயத்தில் அழகிய நடனமாடும் மயிலாகவும்
காட்சியளிப்பதாகப் பட்டர் பாடும் போது அவள் நம் அகக் கண்களில் அவ்வழகிய
வடிவில் தென்படுகின்றாள் அல்லவா?
"அன்று" "கயிலாயருக்கு" "இமவான் அளித்த கனங்குழையே" முன்பொருநாள்
கயிலைநாதன் சிவபெருமானுக்கு மலையரசன் இமவான் மணம் முடித்துக் கொடுத்த
பெருங்குண்டலங்களைக் காதில் அணிந்த அபிராமி அன்னையே... "கடம்பாடவியிடை "
"குயிலாய் இருக்கும்" கடம்பவனமாகிய மதுரையில் குயிலாய் இருக்கின்றாய்...
"இமயாசலத்திடை" "கோலவியன் மயிலாய் இருக்கும்" இமயத்தில் அழகிய மயிலாய்
இருக்கின்றாய். "விசும்பில்" "வந்து உதித்த வெயிலாய் இருக்கும்" விரிந்த
ஆகாயத்தில் வந்து உதித்த கதிரவனாய் இருக்கின்றாய் "கமலத்தின் மீது
அன்னமாம்" அழகிய தாமரை மீது அன்னப் பறவையாக இருக்கின்றாய்.
பாடல் நூறு
குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே
விளக்கம் : காதில் அணிந்துள்ள குண்டலங்களைத்த் தொடும்படியாகவுள்ள கொன்றை
மலரால் தொடுத்த மாலையை அணிந்து அம்மலர்களால் மணம் வீசும்
திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே. கழையை ஒத்த நின் அழகிய
நெடுந்தோள்களும், உன் கரும்பு வில்லும், இன்பப் போருக்குத் தேவையான
திறனுடைய தேன் நிறைந்த ஐந்து மலர்க் கணைகளும், வெண்ணிறப் புன்னகையும்,
மானையொத்த விழிகளும் என் நெஞ்சத்தில் எப்போதும் இருக்கின்றன...
உதிக்கின்ற செங்கதிர் என்று தொடங்கிய அந்தாதியை உதிக்கின்றவே என அழகுற
நிறைவு செய்தார் அபிராமிப் பட்டர். அன்னையின் திருவுரு எப்போதும் என்
நெஞ்சத்தில் உதித்துக் கொண்டே இருக்கும். அவளை எப்போதும் நான் தொழுது
கொண்டே இருப்பேன். இதை விடுத்து எனக்கு வேறு எதுவும் இல்லை என்பது
பட்டரின் கொள்கை...
"குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி" காதில் அணிந்துள்ள
குண்டலங்களைத் தொடும்படியான கொன்றை மாலையை அணிந்து அக்கொன்றை மலர்களால்
மணம் வீசும் திருமுலைகளையுடைய அழகியே... அபிராமி அன்னையே... தடித்ததொரு
கொன்றை மாலையை அன்னை அணிந்திருப்பதாக அபிராமிப் பட்டர்
குறிப்பிடுகின்றார். அதன் பருமனால் அது அவள் காதில் அணிந்த குண்டலத்தைத்
தொட்டுக் கொண்டிருக்கின்றது. அவளது மார்பகங்கள் கொன்றை மாலையைச்
சுமப்பதால், கொன்றை மலரின் மணம் அவளது திருமுலைகளில் வீசுகின்றது...
இவ்வரிகளை இன்னொரு நோக்கிலும் பொருள் கொள்ளலாம். கொன்றை மலரினை தன்
சடையில் அணிந்த சிவபெருமான் அழகிய குண்டலங்களை அணிந்த அன்னை அபிராமியைத்
தழுவும்போது அக்கொன்றை மலர்கள் இருவர் நடுவிலும் வீழும்போது அது
அன்னையின் மார்பில் பட்டு அதனால் அது கொன்றை மலரின் மணம் வீசுகின்றது
என்றும் பொருள் பகர்வோர் உண்டு. "கழையைப் பொருத திருநெடுந்தோளும் "
கழையை ஒத்த உனது நெடுந்தோள்களும்... கழை என்பது மூங்கிலைக் குறிக்கும்.
இது கிராமங்களில் இன்றும் வழக்கில் உள்ள சொல். "கருப்பு வில்லும்" உனது
திருக்கரத்தில் நீ ஏந்திய கரும்பு வில்லும், "விழையப் பொரு திறல் வேரி
அம்பாணமும் " இன்பப் போருக்குத் தேவையான திறன் கொண்ட தேன் நிறைந்த ஐந்து
மலர்க்கணைகளும், "வெண் நகையும்" வெண்ணிற உன் புன்னகையும்... முத்து போன்ற
உன் பற்கள் உன் புன்னகையால் வெளி தோன்றுவதால் உன் புன்னகை வெண்ணிறமெனத்
தோன்றுகின்றது... "உழையைப் பொரு கண்ணும் " மருளும் மானையொத்த உன்
திருவிழிகளும், "நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே" எனது நெஞ்சில்
எப்போதும் நிறைந்திருக்கின்றன.. ஒவ்வொரு காலையும் கதிரவன் எங்ஙனம்
புதிதாய்த் தோன்றுகின்றானோ, அது போல் உன் திருவுருவும் என் நெஞ்சத்து
எப்போதும் புதிதாய் உள்ளது... அன்னையே நீ என் நெஞ்சத்தை விட்டு
நீங்குவதில்லை... உன்னை நான் என்றும் மறப்பதில்லை...
அம்மா. அபிராமியே... அபிராமிப் பட்டரின் நெஞ்சத்தில் நிலையாகக் குடிகொண்ட
நீ எங்கள் நெஞ்சத்திலும் வந்து எங்களை அருளாட்சி செய்தருள்வாயாக...
நூற்பயன்
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே
விளக்கம் : அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம்
பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை, ஐவகை
மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன்
திருக்கரங்களில் ஏந்தியவளை, முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும்
இல்லை....
அபிராமி அந்தாதி நூலைத் தினமும் ஓதுவதால் கிட்டும் பலனை இப்பாடல்
மொழிகின்றது... அன்னையைத் தொழுவோர்க்கு ஒரு தீங்குமில்லை...
விளைவதெல்லாம் நன்மையே... ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக பலன்
சொல்வார்கள்... அனைத்தும் அறியேன்.. அறிந்தவற்றை அப்பாடல்களிலேயே
குறிப்பிட்டுள்ளேன். அறிந்தவர்கள் நமக்குரைத்தால் மகிழ்வேன்.
"எங்கள்" "ஆத்தாளை" எங்கள் அன்னையை "அபிராம வல்லியை" அபிராமியை
"அண்டமெல்லாம் பூத்தாளை" இந்த அண்ட சராசரங்களைப் பெற்றெடுத்தவளை....
"மாதுளம் பூ நிறத்தாளை" மாதுளம் பூவின் நிறங்கொண்டவளை... "புவி அடங்கக்
காத்தாளை" இப்பூமியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொணர்ந்து காப்பவளை..
"ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை " தனது
திருக்கரங்களில் ஐந்துவகை மலர்க்கணைகளையும், பாசத்தையும்,
அங்குசத்தையும், கரும்பு வில்லையும் ஏந்தியவளை.. "முக்கண்ணியை" மூன்று
நயனங்கள் கொண்டவளை... "தொழுவார்க்கு" தொழுதிடும் அடியவர்களுக்கு.. "ஒரு
தீங்கில்லையே" எந்த ஒரு தீங்கும் இல்லவே இல்லை... அவர்கட்கு
விளைவதெல்லாம் நன்மையே என்னும் உறுதியோடு தனது அபிராமி அந்தாதியை நிறைவு
செய்கின்றார் அபிராமிப் பட்டர்...
அண்டமெல்லாம் படைத்து அதனைக் காத்து, தீயனவற்றை அழிக்கும் மூன்று
நயனங்கள் படைத்த எல்லாம் வல்ல அன்னை அபிராமியே நம் அனைவருக்கும் வரும்
தீங்கினை விலக்கிக் காத்திடட்டும். எங்களைக் கடைக் கண் கொண்டு பார்
தாயே..... உன் திருவடி இணைகளே சரணம்... சரணம்......
இவ்வுரைகளை எழுதப் பணித்த ஐயா தமிழன் வேணு அவர்களுக்கும், ஐம்பது
நாட்களும் பொறுமை காத்து இதை ஓதிய அன்பு உள்ளங்களுக்கும், ஊக்கமளித்த
நல்லுங்களுக்கும், இதனை மின் நூலாகத் தொகுத்துத் தருவதற்காக
இசைந்திருக்கும் திரு. பிரசாத் வேணுகோபால் அவர்களுக்கும் இதனைத்
தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருக்கும் கூகிள் தமிழ்க்குழும
நிர்வாகிகளுக்கும் (தமிழ்த் தென்றல், தமிழ் உலகம், தமிழ்ப் பிரவாகம்,
தமிழ் ஒளி மற்றும் மின் தமிழ்) அடியேனின் சிரந்தாழ்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்... அன்னையின் ஆசி அனைவருக்கும் கிட்டட்டும்..
நன்றி.. வணக்கம்..