1. மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3. +++ 2. அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்!

0 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Oct 10, 2021, 7:22:11 PM10/10/21
to thiru thoazhamai, தமிழ் மீட்சிப் பாசறை, 119maa27s...@gmail.com, Raghavendra A, Headmaster - MM Higher secondary school, Thirunagar, 40. Anuragam Kalaignaan, ap.a...@gmail.com, ayyanathan k, Balakrishnan Thirugnanam, Bharathy S, sivakumar pandari, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, ymha.vaddukoddai, Kanagu Chandran, manjula.k, mkindu, Mumbai Kumanarasa Lemuriya Publications, lankasri, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, poongundran, kunathogai kunathogai, SENTHIL KUMARAN, Dhinasari, drtami...@gmail.com, Gnanam Magazine - ஞானம், hills...@gmail.com, IE Tamil, Murugesan M., in...@tyouk.org, jeyamohan....@gmail.com, kambane kazhagam, kanagad...@gmail.com, Karthikasa...@gmail.com, 156. karu Murugesan, KaviMari Kaviarasan, kavitha directions, Kaviyodai, kovai...@gmail.com, Lakshmi Kumaresan, manaa lakshmanan, me...@tyouk.org, mgayat...@gmail.com, Mu.ilangovan ??.?????????, mullaicharamtamil, nagg...@yahoo.com, Vairamuthu, pandiya raja, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, pulavar...@gmail.com, puviya...@hindutamil.co.in, r.divyar...@gmail.com, sa...@thehindutamil.co.in, Sarala M.S, Seetha Ramachandran, Arivukkarasu Su, tamizham...@gmail.com, Thakatuur Sampath, thamizhmu...@gmail.com, thi...@journalist.com, Viduthalaidaily Viduthalai, vaanila sri, Elangkumaran Nallathambi, Vijaya Raghavan, riaz66 ahmed, tamilnesan, பொழிலன், p.kalai...@gmail.com, poova...@gmail.com, pon malar, Anitha Law, ldml...@gmail.com

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4




துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

விளக்க உரை:

பேராசிரியர் வெ.அரங்கராசன்

                1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.

                 அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.   

   அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.

 உலகம் சார்ந்தது:

அகச்சான்று:

                சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்; அதனால்,

                உழந்தும் உழவே தலை                                                  [குறள்.1031]

  

புறச்சான்று – 1, மேற்கோள் உரை:

 துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை                                                              [குறள்.669]

 

    நாம் எத்தகைய வினைகளைச் செய்ய முற்படுதல் வேண்டும்; செய்யும் வினைகளால், செய்பவருக்கும்  குடும்பத்திற்கும் சுற்றத் தார்க்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நிறைவில் உலகிற்கும் நன் மை இருக்க வேண்டும்; வளர்ச்சி இருக்க வேண்டும்; முன்னேற்றம் இருக்க வேண்டும்; புகழும் பெருமையும் கிட்ட வேண்டும்; சுருங்கச் சொன்னால், இன்பமாகிய பயன் கிடைக்கும் வினைகளையே செய்ய வேண்டும்.

 நன்றி: புலவர் மு.படிக்கராமு,

வள்ளுவ வளம், பொருட்பால், பகுதி — 2, பக்.106, 

வளவன் பதிப்பகம், 2, சிங்கார வேலர் தெரு,

தியாகராயர்நகர், சென்னை — 600017.

 

புறச்சான்று – 2, மேற்கோள் உரை:

                உலகில் இன்று நடைபெறும் தொழில்கள் வகைகள் இத்தனை என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குத்  தொழில்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றன.

               உலகில் வாழ்வாரும் அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்தே வாழ்ந்துவருகின்றனர். அவ்வாறு மக்கள் செய்துவரும் தொழில்களின் இயக்கத்தாலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக் கின்றது.

 தன் இயக்கியத்தில் சுழன்றுகொண்டிருக்கும் உலகம் தொழிலாலும் சுழனறுகொண்டிருக்கின்றது. அவ்வாறு உலகில் சுழன்று கொண்டிருக்கும்  அனைத்துத் தொழில்களுக்கும் அடிப்படையா னதும் முன்னணியானதும் உயர்வானதாகவும் விளங்கும் தொழில் உழவுத் தொழிலே.

 உழவுத் தொழில் எளிமையாக உடல் அலுப்பு இன்றியும் செய்யக் கூடிய தொழில் அன்று. காடு மேடு, மழை வெயில், பகல் இரவு, பனி – காற்று, ஊண் உறக்கம் என்றெல்லாம் பாராமல், உட லை வருத்திச் செய்யக் கூடிய தொழிலாக  இருந்தாலும் அதுவே தலைமையான தொழிலாகும்.

               பிற தொழில்களைச் செய்து தேடிய பின்பும் உயிர் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத உணவின் பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியதிருக்கின்றது. அதனால்தான், சுழன்றும்  ஏர்ப் பின்ன[து] உலகம் என்றார் செந்நாப் போதார். 

பிற தொழில்களில் பல வருத்தப்பாடு இல்லாமல் செய்ய இயலும். எனினும் அவை கடைப்பட்டவையே என்பதைப் புலப்படுத்தும் நோக்கத்துடனே உழந்தும் உழவே தலை எனவும் உ ரைத்துள்ளார். 

சீரைத் தேடின், ஏரைத் தேடு” என்னும் பழமொழியும் எண்ணிப் பார்க்கத் தக்கது. ஏர் நிலத்தை உழுது பண்படுத்தப் பயன்படுத்தப்படும். அது கலப்பை என்னும் கருவியைக் குறிக்கும். ஏர் அழகும் பெருமையும் ஆகும்..

 எல்லை இன்றி மிகுபொருளை

ஈட்டிஉயர்ந்[து] இருந்தாலும்

தொல்லை இன்றி உயிர்வாழா

நீ[டு]ஆழி உலகத்தே

 என்னும் சான்றோர் மொழியும் ஒப்பு நோக்கத் தக்கதே.

 புறச்சான்று [மேற்கோள் உரையில் உள்ளது]

                ஒரு முறை மதுர கவியார், வள்ளல் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களைக் கண்டு, பொருள் பெற்றுவரப் புதுச்சேரி சென்றார். புலவர் சென்றபோது ஆனந்தரங்கனார் வீட்டில் இல்லை. அவர் வயலுக்குச் சென்றிருக்கின்றார் என அறிந்தார். புலவரும் வயலுக்குச் சென்றார். 

அறுவடையான வயல்களில் சிதறிக் கிடந்த நெல் மணிகளை அவர் பொறுக்கிக்கொண்டிருந்தார். மதுர கவியாரைக் காத்திருக்கும்படி சொன்னார். மீண்டும் நெல் மணிகளைப் பொறுக்கத் தொடங்கிவிட்டார்.

தாம் பசியோடு காத்திருக்க, உதிர்ந்து கிடக்கும் அற்பமான நெல்மணிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கின்றாரே என மனத்துக்குள் எண்ணினார்; பொறுமையை இழந்த நிலையில் அவ ரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் புலவர்.     

         வேலை முடிந்தது. புலவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு  வந்தார் ஆனந்தரங்கனார். புலவர்முன் தலைவாழை இலை விரிக்கப்பட்டது. அதில் வெள்ளித் தட்டு நிறையத் தங்கக் காசுகளைக் கொண்டுவந்து கொட்டினார். புலவர் மதுர கவியாரை  உண்ணும்படி  வேண்டினார்.

 புலவர் தங்கக் காசுகளை எப்படி உண்பது எனத் திகைத்தார். ஆனந்தரங்கனார்,

 நான் சிதறிக் கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கியபோது  அற்பமாக நினைத்தீர்களே..! நான் பொறுக்கியவை நெல் மணிகள் அல்ல. பசிப் பிணிக்கு மருந்து. அவை  பசியைப் போக்குமா..? இத்தங்கக் காசுகள் பசியைப் போக்குமா? என வினவினார்.

 பிழையை உணர்ந்தார் புலவர். தம்மைப் பொறுத்தருளும்படி வேண்டினார். ஆனந்தரங்கனார் வேறு ஓர் இலையைக் கொண்டு வந்து விரித்தார். அதில் சுவையான உணவைப் படைத்தார். அன்போடு உண்ணச் செய்தார்.

 புலவர் புறப்படும்போது, தாம் முன்னர் இலையில் கொட்டிய தங்கக் காசுகளைக் கொண்டுவந்தார். அவற்றைப்  புலவர் மதுர கவிராயர் மகிழும்படி வழங்கினார், அன்புடன் வழியனுப்பிவைத்தார் என்னும் வரலாற்று நிகழ்வும் குறளுக்குச் சிறந்த ஒருவழி எடுத்துக்காட்டு ஆகும்.   

 நன்றி: புலவர் மு.படிக்கராமு,

வள்ளுவ வளம், பொருட்பால், பகுதி — 3, பக்.333-334,   

வளவன் பதிப்பகம், 2, சிங்கார வேலர் தெரு,

தியாகராயர்நகர், சென்னை — 600017.

 புறச்சான்று:

தண்ணீரை நம்பி வாழுகின்ற உழவர்தம்

கண்ணீர் வாழ்வில் இன்பம் விளையுமா..? 

 ஆஈன மழைபொழிய, இல்லம் வீழ,

                                அகத்தினளும் மெய்நோவ, அடிமை சாவ,

மாஈரம் போகு[து]என்று விதைகொண்[டு] ஓட,

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,

கோவேந்தன் உழு[து]உண்ட கடமை கேட்க,

குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க,

பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் 

பாவிமகன் படுதுயரம் பார்க்கொ ணாதே..!

                      -விவேக சிந்தாமணி(பாடல் – 77)

 

பொருள் உரை விரிவாக்கம்:

ஓர் உழவர் வீட்டில் பசு மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அதைப். பராமரிக்க முடியவில்லை. பெருமழை பெய்தது. அதனால்,  அவரது எளிய குடிசை இடிந்து வீழ்ந்துவிட்டது.

 உழவரின் அன்பு மனைவியோ மகப்பேற்று வேதனையைப் பட்டுக்கொண்டிருக்கின்றாள். அவளுக்கும் உடனிருந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய முடியவில்லை.

 வேலையாளும் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அது கேட்டுக் கண்கலங்கி நிற்கிறார். இதற்கிடையில் நிலத்தில் ஈரம் போகின்றது. அதற்குள் விதைக்க வேண்டும். அதற்காக விதை நெல்லை எடுத்துக் கொண்டு வயலுக்கு விரைந்து ஓடுகிறார்.

 போகும்போது வழியில் ஏற்கெனவே உழவுப் பணிக்குக் கடன் கொடுத்தவர் தடுத்து நிறுந்துகின்றார். கடன் தொகையை வைத்து விட்டுப்போ எனக் கண்டிப்புடன் வெகுண்டு கேட்கின்றார்.

 அவரிடம் கெஞ்சிக் கூத்தாடிவிட்டுச்  செல்கின்றார். அப்போது அரசுக்குச்  செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக்கொள் ளவரி திரட்டும் அரசுப் பணியாளர்கள் வந்து முன்நிற்கின்றனர்.

 அதையும் தாண்டி விரைந்து செல்கின்றார். அந்த உழவர். செல்லும் போது, திருக்கோயிலில் வழிபாடு செய்யும் குருக்கள் வந்துவிட்டார். தமக்கு உரிய தட்சணையைப் பெறுவதற்காக எதிர் நிற்கின்றார். .

 இந்தத் தாங்கொணாத் தொடர்துன்ப நிலையில் உழவர் மனம் நொந்து, வருந்தித் திகைத்துச் செய்வதறியாது   நிற்கின்றார். அப்போது, பாவாணர் ஒருவர் பைந்தமிழ்க் கவிகளைப் பாடிக் கொண்டு, அவர் முன்னர் வந்து நின்றார்.  தமக்கான பரிசுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

 இச்சூழ்நிலையில் அந்த உழவர் எத்துணைத் துன்பங்களை அடைந்திருப்பார்..? அந்த அப்பாவி உழவர் படுகின்ற துன்பங் களை எல்லாம் பார்க்கவே முடியவில்லை  என உழவர் படும் பெரும்பாடுகளைக் கண்டு பொறாது உள்ளம் வெந்து, நொந்து பாடுகின்றது அந்தப் பெருந்துன்பப் பாடல்.  

 புறச்சான்று:

 

உயிர் கொடுக்கும் உழவரது உயிர்.?

 

உழு[து]உழுது,  பாத்தி பலகட்டி,

                உறங்காமல், விழித்திருந்து நீர்பாய்ச்சிப்

பழு[து]இலா விதைகளைப் பார்த்துப்,

                பார்த்துத், தேர்ந்[து]எடுத்து வித்தி,மேகம்

அழுத கண்ணீர் அவ்வப் பொழுது

                மழையென விழுந்தபோது மகிழ்ந்து,

களைஎடுத்[து]  உரம்போட்டுக் காலம்தோறும்

                களிப்போடு மருந்தும் தெளித்தோம்.

 

குழந்தையைக் காக்கும் தாயைப்போலக்

                கண்ணுக்குள் வைத்துப்பயிர் வளர்த்தோம்;

விளைந்த பயிரெலாம் தலைநிமிர்ந்து,

                வாழ்வுதர நின்ற போதிலே

காற்றழுத்தத் தாழ்வு மண்டல[ம்ஒ]ன்று

                கடுகிவந்து தொலைந் தய்யா…!

மாற்றுவழி தெரியாமல், காத்தவயல்

                மூழ்கியே போன[து] அழிவானது….!

 

அழுகிப் போனபயிரைப் போலவே

                ஆனதய்யா எங்களது வாழ்க்கை;

அழு[து]அழுது புரண்டாலும் அழகுபயிர்

                வந்திடு மோ?உயிர் தந்திடுமோ?

தொழுது தொழுது நின்றாலும்

                தீர்ந்திடு மோ?துயர் மாய்ந்திடுமோ.?

எழுந்துநிற்க வழியும் இல்லையே!

                ஏன்என்று கேட்கவும் ஆளில்லையே!

 

ஊருக்[கு] எல்லாம் சோறு போடும் வீடு;

பாருங்கள் இன்று வெற்[று] எலும்புக் கூடு;

ஏங்கி நிற்குதய்யா எங்கள் வீட்டு மாடு;

ஆண்டு தோறும் எங்களுக்கேதிரு வோடு.

 

 நாட்டின் முது[கு]எலும்[பு] உழவர்கள்;

                                                என்பதால் – துயர

மூட்டைகளை முதுகிலே ஏற்றி

                                                வைத்தே – அடி

சாட்டையடி கொடுத்துச் சாய்க்குதே!

                                                இயற்கையும் – படும்

 

பாட்டைப் பாட்டினிலே பாடவும்தான்

                                                முடியலையே — ஐயா…!          

              -கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

 துணைநலக் குறட் பா:

இன்பம் வரின்செய்க யார்மட்டும் தள்ளாஅ[து]

                இன்பம் பயக்கும் வினை.

 மறுபக்கக் குறட் பா:

 இன்பம் வரினும் சிலர்செய்யார், எஞ்ஞான்றும்

                இன்பம் பயக்கும் வினை

                                                 குதிரை மனிதர்கள்

                      கொள்ளு என்றால் வாயைத்

                                      திறக்கும் குதிரை;

                      கடிவாளம் என்றால் மூடிக்

                                      கொள்ளும் அதுவே.          

               –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

++++

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 3.

 

அகரமுதல




(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 2. தொடர்ச்சி)

 

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 1 தொடர்ச்சி

“அப்பா போய்விட்டார்” என்பதற்கு ஒப்புக்கொண்டு நம்புவது மனத்துக்குக் கடுமையானதாகத்தான் இருந்தது. அந்த அழகு, அந்தத் தமிழ்க்கடல், அந்த ஒழுக்கம், அந்தப் பண்பாடு, அத்தனையும் மாய்ந்து மடிந்து மண்ணோடு மண்ணாகிப் பொய்யாய்ப் பழங்கதையாகக் கற்பனையாய் மெல்லப் போய்விட்டன. நமக்கு வேண்டியவர்களின் மரணத்தை நம்பவோ ஒப்புக்கொள்ளவோ முடிவதில்லைதான். “நின்றான்இருந்தான்கிடந்தான்தன்கேள் அலறச் சென்றான்” என்று வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரி தான் அப்பாவும் கல்லூரிக்குப் போனார். புத்தக அடுக்கிற்கு அருகில் நின்றார். இருந்தார். திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய்விட்டார்.

மரணத்தைக் கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால்! செத்துப்போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய்விட்டார்.

சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகச் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப்போய் அருகில் சென்று, “என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரி சோர்ந்து காணப்படுகிறீர்களே?” என்று கேட்டேன்.

“ஒன்றுமில்லை பூரணி; கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டு வா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

நான் வெந்நீர் கொண்டுவரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது, “திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச்சொல், அம்மா” என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.

அதைக் கேட்டு, “இதோ வந்துவிட்டேன், அப்பா” என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.

அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத்தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத் தொடங்கியதும், சமையலறையில் எனக்குக் கேட்டன. நான் வெந்நீரோடு சென்றேன். அப்பாவின் இரண்டு கைகளும் நெஞ்சை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன. வலியை உணர்ந்த வேதனை முகத்தில் தெரிந்தது. தம்பி திருவாசகத்தின் திருவண்டப் பகுதியைப் படித்துக் கொண்டிருந்தான்.

பூவில் நாற்றம் போன்று உயர்ந்தோங்கும்
ஒழிவு அற நிமிர்ந்து மேவிய பெருமை
இன்று எனக்கு எளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண்பொருள்!”

தம்பியின் சிறிய இனிய குரல் அழகாக ஒலித்துக் கொண்டிருந்தது. “அப்பா உங்கள் முகத்தைப் பார்த்தால் அதிகமாக வேதனைப்படுகிறீர்கள் போல் தோன்றுகிறது. நான் போய் மருத்துவரை(டாக்டரை)க் கூட்டிக்கொண்டு வரட்டுமா?” என்று கவலையோடு கேட்டேன்.

அப்பா மறுமொழி கூறாமல் சிரித்தார். “நான் போய் கூட்டிக் கொண்டு வருகிறேன், அப்பா!” என்று அவர் பதிலை எதிர்பாராமலே நான் புறப்பட்டேன்.

நான் மருத்துவரோடு திரும்பியபோது தம்பி ‘ஓ’வென்று அலறியழும் குரல் தான் என்னை வரவேற்றது. அப்பாவின் பதில் பேசாத அந்தப் புன்னகைதான் நான் இறுதியாக அவரிடம் பார்த்த உயிர்த்தோற்றம்.

அப்பா போய்விட்டார். துக்கத்தையும் பொறுப்பையும் பிஞ்சுப் பருவத்து உடன்பிறப்புகளையும் என் தலையில் சுமத்தி விட்டுப் போய்விட்டார். ஊரே துக்கம் கொண்டாடியது. ஆயிரக் கணக்கான கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்கள் பலரும், பழைய மாணவர்களும் அப்பாவின் அந்திம ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உள்ளூரிலுள்ள எல்லாக் கல்லூரிகளும் துக்கத்துக்கு அடையாளமாக விடுமுறைவிட்டன. அனுதாபத் தந்திகளும், கடிதங்களும் எங்கெங்கோ இருக்கிற பழைய மாணவர்களிடமிருந்து இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

அப்பா போய் பதினைந்து நாட்கள் பொய்கள் போல் மறைந்துவிட்டன. தினம் பொழுது விடிந்தால் அனுதாபத்தைச் சொல்ல வரும் கடிதங்கள், அனுதாபத்தைக் கொடுக்க வரும் மனிதர்கள், உணர்வுகளும் எண்ணங்களும் ஆற்றலும் அந்தப் பெரிய துக்கத்தில் தேங்கிவிட்டதுபோல் தோன்றியது பூரணிக்கு.

வாசலில் மாட்டின் கழுத்துமணி ஓசையை அடுத்து, பால்காரனின் குரல் கேட்டது. பூரணி துக்கத்தையும் கலங்கிய கண்களையும் தற்காலிகமாகத் துடைத்துக் கொண்டு பால் வாங்குவதற்குப் புறப்பட்டாள்.

“நெற்றி நிறைய திருநீரும் வாய்நிறையத் திருவாசகமுமாகப் பெரியவர் பால் வாங்க வரும்போதே எனக்குச் சாமி தரிசனம் இங்கே ஆகிறாற்போல் இருக்குமே அம்மா” என்று பாலை ஊற்றி விட்டுப் போகும் போது சொல்லிச் சென்றான் பால்காரன். அவள் மனதில் துக்கத்தைக் கிளறின அந்தச் சொற்கள். அப்பா இருக்கும் போது காலையில் முதலில் எழுந்திருக்கிறவர் அவரே. கையால் தாமே பால் வாங்கி வைத்துவிடுவார். பால்காரனிலிருந்து வாசல் பெருக்குகிற வேலைக்காரி வரை அத்தனை பேருக்கும், அப்பாவிடம் தனி அன்பு, தனி மரியாதை. பெரியவர், பெரியவர் என்கிறதைத் தவிர அப்பாவைப் பேர் சொல்லி அழைத்தவர்களைப் பூரணி கண்டதில்லை. அப்பாவோடு ஒத்த அறிவுள்ள இரண்டொரு பெரிய ஆசிரியர்கள் மட்டுமே அவரைப் பேர் சொல்லியழைப்பார்கள்.

அப்பா எல்லா வகையிலும் எல்லாருக்கும் பெரியவர். அறிவைக் கொடுப்பதில் மட்டுமல்ல. ஏழைப்பட்ட மாணவர்களுக்குப் பணத்தைக் கொடுத்தவர் என்று மாணவர்களிடையே பெருமையும், நன்றியும் பெற்றவர். பணத்தைப் பொறுத்தவரையில் பிறருக்கு உதவத் துணிந்த அளவு பிறரிடம் உதவி பெறத் துணியாத தன்மானமுள்ளவர் அப்பா. அவருடைய வலதுகை கொடுப்பதற்காக உயருவதுண்டு! வாங்குவதற்காகக் கீழ் நோக்கித் தாழ்ந்ததே இல்லை. கீழான எதையும் தேடத் துணியாத கைகள்கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம்அப்பா நினைப்பிலும், நோக்கிலும், பேச்சிலும், செயலிலும் ஒழுங்கான வரையறைகளை வைத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

ஒரு சமயம், தமிழ் மொழியில் பிழையாகப் பேசுவதையும் பிழையாக எழுதுவதையும் தவிர்க்க ஓர் இயக்கம் நடத்த வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள்.

எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்லவேங்கடம் முதல் குமரி வரை தமிழ்வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும்அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்‘ என்று புன்னகையோடு பெருமிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா – அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய் சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும் அவருக்கு அவ்வளவு பற்று; நம்பிக்கை.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது. சரியான அலைவரிசையில்  வைக்கப்பெறாத வானொலிப் பெட்டி மாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோயில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள்.

பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங்குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற நகரப்பேருந்துகளில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோட தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருப்பரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும், கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றத்துக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்றுதோறாடும் குமரன் கோயில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமையளித்தான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages