(வெருளி நோய்கள் 421-425 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 426-430
உயரம் அல்லது உயரமான இடங்களை அண்ணாந்து பார்ப்பதால் ஏற்படும் பேரச்சம் அண்ணாத்தல் வெருளி.
உயரமான இடங்களை அண்ணாந்து பார்க்கும் பொழுது தலைசுற்றல், கிறுகிறுப்பு, மயக்கம் வரலாம் எனப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். hyps என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம். இதனை முதல் பதிப்பில் உயர வெருளி(Hypsiphobia) எனத் தனியாகக் குறித்திருந்தேன். என்றாலும் உயரம் குறித்த பேரச்சம் உயர்வு வெருளி எனத் தனியாகக் குறிக்கப் பெற்றுள்ளது. எனவே, மேல் நோக்கி அண்ணாந்து பார்ப்பது குறித்த பேரச்சம் என்பதால் இதை அண்ணாத்தல் வெருளி என இப்போது பகுத்துள்ளேன்.
00
உயரமான கட்டடங்களின் அருகில் இருக்கும் பொழுது ஏற்படும் அளவு கடந்த காரணமற்ற பேரச்சம் உயரண்மை வெருளி.
உயரமான கட்டடம் அருகில் இருந்தால், அக்கட்டடம் இடிந்து விழும், இடிபாடுகளில் சிக்க நேரிடும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். மாடி வீடுகளில் அல்லது படி, மின்னேணி உள்ள கட்டடங்களில் குடியிருக்கப் பெரிதும் அஞ்சுவர். மாடி இல்லாத வீடுகளில் மட்டுமே வசிக்க விரும்புவர்.
batos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு வழிச் செல்லுதல்/கடந்து செல்லக்கூடிய/அண்மைப்பாதை எனப் பொருள்கள். உயரமான கட்டடங்கள் அண்மையில் செல்லுதல், இருத்தல் ஆகிய பொருள்களை இங்கே உணர்த்துகிறது.
00
உயர் கூரை குறித்த வரம்பற்ற பேரச்சம் உயர் கூரை வெருளி.
தாழ்கூரை வெருளி(Minicelarophobia), உட் கூரை வெருளி (Celarophobia) உள்ளவர்களுக்கு உயர் கூரை வெருளி வரும் வாய்ப்புள்ளது..
00
உயரமான இடங்களைப் பார்த்தால் வருவது உயர்பு வெருளி.
உயரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது கீழே விழுந்து விடுவோம் என்று பேரச்சம் கொள்கின்றனர. இவ்வச்சம் வீழ்பு வெருளி(Basophobia/Basiphobia) எனத் தனியாகக் குறிக்கப்பெற்றுள்ளது.
ஏணிகள் அல்லது வீட்டுக்கூரைகளில் ஏறவும் மலையில் அல்லது பாலத்தில் வண்டி ஓட்டவும் அஞ்சுவர். படிக்கிணறுகளில் இறங்கவும் அச்சம் கொள்வர்.
உயரமான இடங்கள் கண்டு அஞ்சாதவர்களும் உள்ளனர். அவர்கள்தாம் மலையே றுதல், வானளாவிய கட்டடங்கள் கட்டுதல், பேணுதல் போன்றவற்றில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார்கள்.
ஏறத்தாழ 5% மக்கள் உயரவெருளியால் பாதிப்புறுகிறார்கள். இவர்களில் பெண்கள் ஆண்களைவிட இரு மடங்கு எண்ணிக்கையில் உள்ளனர்.
உயர்நிலை வெருளி(Altophobia)யும் இதுவும் ஒரே பொருண்மையின. எனவே, தனித்தனியாகக் குறிக்காமல் இணைத்துத் தரப்பட்டுள்ளது.
. உயரண்மை வெருளி(Batophobia), ஏறுவெருளி(Climacophobia), மலை வெருளி(Orophobia), நெட்டை வெருளி(Procerophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது.
akron என்னும் கிரேக்கச் சொல்லிற்கு முகடு, உச்சி, விளிம்பு எனப் பொருள்கள்.
alto என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயரிடம் எனப் பொருள்
00
உயர்ந்த திறந்த வெளியைக் கண்டு ஏற்படும் பேரச்சம் உயர்வெளிவெருளி.
உயர்பு வெருளி(Acrophobia) யுடன் தொடர்புடையது.
Aero என்பது காற்றுவெளியைக் குறிக்கும் கிரேக்கச் சொல்.
acro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உயரம், உயர் முனை.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
(அ. பழமையும் புதுமையும் – திருத்துறைக் கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
௯. வரலாற்றையே மாற்றும் வந்தேறிகள்
வரலாற்று அறிஞர்கள், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து ஆடு மாடுகளை ஓட்டிக் கொண்டு கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக இந்தியாவிலுள்ள செழிப்பான சிந்துசமவெளியில் புகுந்தார்கள் என வரலாறு எழுதியுள்ளனர். இன்றுள்ள ஆரியக் குஞ்சுகள், ஆரியர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு வந்ததை எவன் கூரை மீதிருந்து பார்த்தான் என்றும், பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்த ஆங்கிலேயர் ஆரியர், திராவிடர் என்று பிரித்து வரலாறு எழுதிவிட்டனர் என்றும், தாங்கள் நடத்தும் ஆங்கிலம், தமிழ் நாளேடுகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கின்றனர்.
17.12.1994 ஆம் ஆண்டு வெளிவந்த “இந்தியன் எக்சுபிரசு” என்னும் ஆங்கில நாளேட்டில் டாக்டர் எசு.குப்தா என்பவர் ஆரியர் இந்தியக்குடி மக்களே! வந்தேறிகள் அல்லர், என ஒரு கட்டுரை எழுதியுள்ளார். ஏன்? தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தார் வெளியிட்டுள்ள வரலாற்றுப் பாடநூலில் வரலாற்றை ஆரியர் வாழ்ந்த பாரத, ராமாயண காலந்தொட்டுத் தொடங்கியுள்ளனர்;. தமிழர்களின் தொல்பழம் வரலாற்றை இருட்டடிப்பு செய்துவிட்டனர். தமிழரின் தடுமாற்றம் தமிழுக்குக் கேடே!
கடல் கொண்ட தென்னாடாம் குமரிக்கண்டந்தொட்டு தொடங்கவேண்டிய தமிழர் வரலாற்றை அடியோடு மறைத்துவிட்டனர். வடவர்க்கு அடிமைப்பட்ட தமிழர், அவர்கள்ஆணைப்படி அமைதியாக இருக்கின்றனர். அதை மறுப்பதற்கு இற்றைத் தமிழர்களுக்குத் துணிவு துளியுமில்லை.
திரு. சவகர்லால் நேரு அவர்கள் தம் வரலாற்று நூலில் பாரத, ராமாயணக் கதைகள். “ஆரியர் – திராவிடர் போர்கள் பற்றியவை” என எழுதியுள்ளார். வரலாற்றறிஞர்கள், ‘சிந்துசமவெளி நாகரிகம், தமிழரதே’ என இன்னமும் கூறுகின்றனர். உலக வரலாற்றறிஞர் யாவரும் குமரிக்கண்டம் தொல்பழந்தமிழர் வாழ்ந்த இடமென்றும், அது கடல் கொள்ளப்பட்டபின், தமிழர் வடக்கு நோக்கிப் போந்து பனிமலைவரை குடியேறி வாழ்ந்தனர் என்றும் கூறுகின்றனர்.
இலெமூரியாக் கண்டம் (Lemuriah Continent) என்னும் ஆங்கில நூலை பன்மொழியறிஞர் கா.அப்பாத்துரையார் தமிழில் மொழி பெயர்த்து, “குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு” எனப் பெயர் சூட்டியுள்ளார்.
வான்மீகியும், வேத வியாசரும் வடமொழியில் எழுதிய இராமாயணமும், பாரதமும் வரலாறுகளல்ல. கட்டுக்கதைகள். புதுவது புனைதல் (Novel) போன்ற கதைகள். அவற்றில் காணப்படும் கதைகள் யாவும் கற்பனையானவை. வரலாற்றுக்குரிய தகுதிகள் இல்லாத வெற்றுரைகள். ஆரியக் குஞ்சுகள் அவற்றை உண்மையென நம்பி, “இராம சென்ம பூமி”, “கிருட்டினன் பிறந்த துவாரகை” – க்கும் உரிமை கொண்டாடுகின்றனர். இராமன் பிறந்த இடத்தில்தான், “பாப்ரிமசீத்” பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளதென்று கருதி, 1992- ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் 6 – ஆம் நாள் பள்ளிவாசலை இடித்துத் தள்ளிவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்குக் கோயில் கட்ட மதவெறியர்கள் அடிப்படை போடுகிறார்கள். இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் இந்துமதமாகிய “இராமராச்சியம்” நிறுவ முயல்கின்றனர். இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டின் அடிப்படையில்தாம் இந்தியாவில் எல்லாம் அமைந்துள்ளனவென்று கற்பனைகளை மக்களிடையே பரப்ப வானொலி, தொலைக்காட்சிகள் ஏவப்பட்டுள்ளன.
அன்றியும், வேதங்களில் சொல்லப்பட்டவையே இன்றைய அறிவியல் கோட்பாடுகள் என்றும் இடையிடையே செப்புகின்றனர். மேலும், இந்தியாவைப் “பாரதம்” என்னும் இழிபெயரால் அழைக்கின்றனர். இந்தியாவின் பழையபெயர் நாவலந்தீவு (சம்புத்தீவு) என்பது. சகுந்தலைக்குக் காட்டில், களவில் பிறந்த பரதன் பெயரில் உண்டானதே பாரதம் என அறிக.
இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இப்பொழுது தமிழ்நாட்டிற்குத் தெற்கில் உள்ள “சிறீலங்கா” என்கிற இலங்கையல்ல! பனி மலைப் (இமாசல) பக்கமுள்ள “லங்கா” வாகும்.
சிங்களர்கள் பழைய நாட்டுப் பெயர் “சிறீலங்கா” என்பதையே ஈழத்திற்கும் இட்டனர். ஈழம், ஏழகம் என்பன குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியாகும். யாழ்ப்பாணம் என்பது, யாழிசை வல்லபாணர் வாழ்ந்திருந்த கடல்கொண்ட தென்னாடாம். குமரிக்கண்டத்தின் ஒரு பகுதியாகும். குமரிக்கண்டம் ஐந்து முறை கடற்கோளுக்குள்ளாகி அழிந்தனபோக எஞ்சிய சிறு பகுதியே ஏழகம் என்ற ஈழம்.
“பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்னும் சிலப்பதிகார அடிகள் கடல்கொண்டமைக்குச் சான்றாகும். இன்றுள்ள சிறீலங்கா என்கிற இலங்கையில் இராவணன் என்று ஓர் அரக்கன் ஆண்டான் என்பதற்கு எத்தகைய சான்றுமில்லை. பனிமலை (இமாசல)ச்சாரலில் இருந்த இலங்காபுரியே இராவணன் இருந்த இடமாக வான்மீகி கற்பனை செய்திருக்கலாம். அவர் இராமாயணம் எழுதிய காலத்தில் ஆரியர் தென்னாடு வரவில்லை!
எனவே, இன்றைய இலங்கைக்கும், இராவணனுக்கும், இராமனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அறிக. ஆரியர்கள் தமிழகத்தில் குடியேறிய பிறகே, இராமாயணக் கதைக்கேற்ப இராவணன் வாழ்ந்த இலங்கை இது எனப் பிறழ உணர்ந்தோ தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டக் கருதியோ இராமன் பெயரால் பல ஊர்களை உண்டாக்கி விட்டனர். அவற்றுள் இராமநாதபுரம், இராமேசுவரம், இராமகுன்றம் முதலியவை குறிப்பிடத்தக்கன.
கோடியக்காட்டில் ஒரு மண்முட்டு (மண்குன்று) எழுப்பி அதன் உச்சியில் “இராமர் பாதம்” எனப் பெயரிட்டு பசை மண்ணால் (cement) இரண்டு பாதங்கள் கட்டி வைத்துளர். அதனைப் பார்க்க ஒவ்வொருவர்க்கும் முன்னர்க் காலணா (மூன்று சல்லி) இன்று மிகுதியாயிருக்கும். இராமர் பாதம் பார்க்க வழியில் விளம்பரமும் செய்துளர்.
சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போனபிறகு இராமனும் இலட்சுமணனும் சீதையைத் தேடியலைந்து கோடியக்காட்டிற்கு வந்து இந்த மண்முட்டின் மேல் ஏறி நின்று இலங்கையைப் பார்த்தனராம். என்ன கட்டு?
இராமாயணத்தில் இராமன் கோடியக்காட்டிற்கு வந்ததாகக் கூறப்படவில்லையே! எல்லாம் கட்டுக்கதையே! இராமன் குரங்குகளின் துணையால் இராமேசுவரத்திலிருந்து இலங்கைக்குப் போக மலைகளைப் போட்டுப் பாலங்கட்டினான் என்பதுவும் கற்பனையே!
நிலநூல் வரலாற்றில் குமரி முனையிலிருந்து கிழக்குத் தொடர்மலை இல்லை! அதுவும், குரங்குகள் மலைகளை உடைத்துப் போட்டனவாம். இராமேசுவரம் தீவு தமிழ்நாட்டினின்றும் பிரிக்கப்பட்டது. அதற்குத் தென்பால் கடலுள் மூழ்கிக் கிடக்கும் நிலப்பகுதியையே இராமன் கட்டிய பாலம் என்று கதைகட்டி, வடக்கிற்கும் தெற்கிற்கும் முடிச்சுப் போடுகிறார்கள்! எனவே, இராமனுக்கும் இராவணனுக்கும் தெற்கில் உள்ள சிறீலங்காவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அறிக! எல்லாம் ஆரியப் பார்ப்பனர் நம்மீது ஏறிச் சவாரி செய்யச் செய்த சூழ்ச்சியேயாகும்.
இராமன் இலங்கைக்குப் போகப் பாலம் போட்ட இலங்கா இமாசலப் பிரதேசம் பக்கம் உளதே. மகேந்திர மலையும் அங்குளதே. வான்மீகியின் கற்பனை குமரி முனைக்கு வந்திலது!
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை