ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 28 January 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 1031-1035: இலக்குவனார் திருவள்ளுவன்)
வெருளி நோய்கள் 1036-1040+
சிரிப்பு குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் சிரிப்பு வெருளி.
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள். நோய் நமக்கு மருந்து போன்றது. எனினும் சிலருக்குச் சிரிப்பும் சிரிப்பவர்களும் எமனாகத் தெரிவார்கள்.
பிறர் சிரிப்பதைப் பார்த்தால் நம்மைப்பற்றித்தான் கேலிசெய்து நகைக்கிறார்களோ என்று அஞ்சுவோர் உள்ளனர். இத்தகையோர் சிரிப்புக்கதைகளைப் படிக்கவோ சிரிப்புத் திரைப்படங்களைப் பார்க்கவோ சிரிப்பவர்கள் அருகில் இருக்கவோ சிரிப்புத் துணுக்குகளைக் கேட்கவோ விரும்பாமல் தவிர்ப்பர்.
சிரித்தால் சிக்கல்களை எளிதாக்கலாம் என்பதால்தான் மே முதலாம் ஞாயிற்றுக்கிழமையை உலகச் சிரிப்பாளர் நாளாகக் கொண்டாடுகின்றனர். மதன் கதரியா(Madan Kataria) என்னும் இந்தியாவிலுள்ள மும்பைவாசிதான் 1998இல் உலகச்சிரிப்பாளர் நாளை உருவாக்கினார்.
gelo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சிரிப்பு.
00
குருதிநாளங்கள் ஆகிய சிரைகள் குறித்த அளவுகடந்த பேரச்சம் சிரை வெருளி.
நரம்பிற்குள் ஊசி செலுத்தப்படுவது போன்ற சூழலிலும், நரம்பு தெரியக்கூடிய மணிக்கட்டு, கையகம்(inner arm), பின் கால்கள்,புறங்கால், கழுத்து முதலிய பகுதிகளைப் பிறர் தொடுவதாலும் அளவுகடந்த எரிச்சலுக்கும் வெறுப்பிற்கும் ஆளாவர்.
00
சிலந்தி, சிலந்திப்பேரினவகையைச் சேர்ந்த உயிரிகள், தேள் முதலான எட்டுக்காலிகள் மீதான வரம்பு கடந்த பேரச்சம் சிலந்தி வெருளி.
Arachno என்னும் கிரேக்கச் சொல்லிற்குச் சிலந்தி எனப் பொருள்.
00
சிலந்தியன்(சிலந்தி மனிதன்/Spiderman) குறித்த வரம்பற்ற பேரச்சம் சிலந்தியன் வெருளி.
தொலைக்காட்சி, திரைப்படம், படக்கதைகள், கதை முதலியவற்றில் சிலந்தியனைப் பார்த்தும் கேட்டும் அவன் வலிமையைக் கண்டு வியப்பவர்களும் உண்டு. கயவர்களுக்கு எதிராகப் பாய்ந்து சென்று துணிவாகச் செயற்படுவதைப் பார்த்துப் பேரச்சம் கொள்பவர்களும் உண்டு.
சிலந்தி வெருளி உள்ளவர்களுக்குச் சிலந்தியன் வெருளி வர வாய்ப்புள்ளது.
சிலந்தி மனிதன் எனப் பிறர் கூறினாலும் ஒற்றைச் சொல்லாகச் சிலந்தியன் எனக் குறிப்பிட்டுள்ளேன்.
00
சிலிர்ப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் சிலிர்ப்பு வெருளி.
உடலைச் சிலிர்க்கச்செய்யும் செயல்கள்மீது ஏற்படும் பேரச்சம் சிலிர்ப்பு வெருளி எனப்படுகிறது.
உடலைச் சிலிர்க்கச்செய்யும் செயல்கள்மீது ஏற்படும் பேரச்சமும் சிலிர்ப்பு உணர்வு மீது ஏற்படும் பேரச்சமும் சிலிர்ப்பு வெருளி எனப்படுகிறது.rp
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5