ஐக்கிய இராட்சியத்தில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட "வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களுக்காக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்"
ஊடக அறிக்கை - 30/08/2025
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நாள் நிகழ்வின் ஓர் அங்கமாகவும், எம் பூர்வீக தாயக நிலப்பரப்பில் எம் மக்களின் பேரெழுச்சியுடன் கூடியதாக 'வடக்குக் கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கம்' முன்னெடுக்கும் மிகப் பேரெழுச்சியான போராட்டத்திற்குப் பலம் சேர்க்கும் வகையிலும், பிரித்தானியாவைத் தளமாகக்கொண்டு செயற்படும் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மத்திய லண்டனில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை 30.08.2025 சனிக்கிழமையன்று மதியம் 01:00 மணியிலிருந்து மாலை 05:00 மணிவரை முன்னெடுத்தது.
ஸ்ரீலங்காவின் முப்படைகளாலும் நிகழ்த்தப்பட்ட பேரவலத்தின் குறியீடாக, பிரித்தானியாவிற்கான ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கண்டன ஆர்ப்பாட்டமானது, "சர்வதேச நீதி விசாரணையே எமது ஒரே கோரிக்கை" என்பதனை அடையாளப்படுத்தும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற சுற்றுவட்டம் வரை பேரணியாகச் சென்று, பிரித்தானியப் பிரதமர் பணிமனையின் முன்பாகவும் தொடர்ச்சியாகப் போராட்டம் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா அரசின் உள்ளகப் பொறிமுறை விசாரணையை மறுத்தும், எமக்கான நீதியானது சர்வதேச தலையீட்டுடன் கூடிய நீதி விசாரணைப் பொறிமுறைக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதுடன், குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனையை வழங்குவதனூடாக எம் மக்களுக்கெதிரான இவ்வாறான குற்றங்கள் மீள்நிகழாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எம் மக்களினுடைய ஒரே கோரிக்கையாக உள்ள நிலையில் அதனையே இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினூடாக சர்வதேசத்திடம் 'தமிழீழ சுயநிர்ணய அமைப்பு' வலியுறுத்தியுள்ளது.
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு இந்தப் பேரணியை ஒருங்கிணைத்திருந்த நிலையில், பிரித்தானியாவில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படுகின்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகள், புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புகள் மற்றும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்புகளின் பங்கேற்புடன் இந்தப் போராட்டமானது மக்கள் பேரெழுச்சியாக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடகப்பிரிவு
தமிழீழ சுயநிர்ணய அமைப்பு