![]() | |
இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட சர்வதேச பிரசாரத்தின் ஓரங்கமாக பிரித்தானியத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் மொரீஸியஸ் வெளிவிவகார அமைச்சர் தனஜே ராம்ஃபுல் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினம் இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை இலங்கை தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் அறிவித்துள்ளன.
அத்தீரமானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் இணையனுசரணை நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதுடன் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கும் இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளுக்குக்கும் கடிதங்களை அனுப்பிவருகின்றனர்.
அதேவேளை பிரிட்டன், கனடா, அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் இயங்கிவரும் தமிழர் அமைப்புக்களும் இணையனுசரணை நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
அதன் ஓரங்கமாகவே மொரீஸியஸ் வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றதாகவும், இலங்கையில் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்ட சர்வதேச பிரசாரத்தின் கீழான நகர்வாக இது அமைந்திருப்பதாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.