அன்புடையீர் வணக்கம்,
தமிழ் இணையக் கல்விக்கழகம், அயலகத் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இதில், 36 நாடுகளில் உள்ள 167 தொடர்பு மையங்கள் மூலம் இணையவழியாகச் சான்றிதழ்க் கல்வி முதல் இளநிலைத் தமிழியல் பட்டக் கல்வி வரை வழங்கி வருகின்றது. மேலும், தமிழ்ப் பரப்புரைக்கழகத்தின் கீழ் பின்வரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
o அகரம், இகரம், உகரம், ழகரம், சிகரம் என்ற 5 நிலைகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் இணையவழியில் கட்டணமின்றி வழங்கப்படுகின்றது.
o தமிழ்மொழியை எளிமையாகக் கற்பதற்கேதுவாக கற்றல் துணைக்கருவிகளான ஒலிப்புத்தகம், காணொலிப் புத்தகம், அசைவூட்டுக் காணொலிகள், ஒலி உச்சரிப்புடன் கூடிய புத்தகம், பல்லூடக பயிற்சிப் புத்தகம், மின்னட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
o இணையவழித் தமிழ் வகுப்புகள் மற்றும் தேவார வகுப்புகள் கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகின்றன.
o தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ் கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கான ஆசிரியர் பட்டயப் பயிற்சி வழங்கப்படுகிறது.
Ø தமிழ்ச் சங்கங்கள் / பள்ளிகளுக்கு வகுப்புகளுக்கான வாடகை, ஆசிரியர் ஊதியம், முதலிய நிதியுதவிகள் வழங்கப்படுகின்றன.
Ø த.இ.க.வின் தொடர்புமைய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையுடன் இணைந்து இணையவழிப் போட்டிகளை நடத்தி, பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாணவர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், தமிழார்வலர்கள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழ் மின்னூலகம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுமார் 95,00 நூல்கள், 8,02,000 ஓலைச்சுவடி பக்கங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தளம் இதுவரை 6 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது.
கணினித்தமிழுக்குத் தேவையான உரையாடி (Chatbot), மின்-அகராதி (e-dictionary), பிழைதிருத்தி (Spell checker), கல்வெட்டுப் படிப்பான் (Inscription Reader), முதலிய பல மென்பொருட்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எனவே, அயலகத் தமிழர்களின் தமிழ்மொழி சார்ந்த தேவைகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கண்ட முன்னெடுப்புகளின் மூலம் நிறைவு செய்து வருகிறது. இவற்றை www.tamilvu.org என்ற இணையதளம் மூலம் எவ்வித கட்டணமின்றி பயன்படுத்தலாம்.
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இந்த சேவைகள் அயலகம் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு வழங்கப்படவும், மேலும் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் இதன் மூலம் பயன்பெறவும் tpk...@gmail.com அல்லது +91 8667822210 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
இயக்குநர் (மு.கூ.பொ.)