தீபாவளிப் பண்டிகையை, 'பகவத் கீதையின் தம்பி' என்பார் ஸ்ரீகாஞ்சி மகா ஸ்வாமிகள். கீதைகள் பல இருந்தாலும், பகவத் கீதை தனிப்பெருமை பெற்றதாக எப்படி உள்ளதோ, அதேபோல் பண்டிகைகள் பல இருப்பினும் தனிப் பெருமையுடன் திகழ்கிறது தீபாவளித் திருநாள்.
கண்ணன், நரகாசுர சம்ஹாரம் செய்ததைக் கண்டு, நரகாசுரனின் தாயாருக்கு துக்கம் பொங்கியது. 'என் பிள்ளை போய்விட்ட துக்கம் உண்டு. இருப்பினும் உலகத்தாருக்கு எந்த துக்கமும் வரக் கூடாது. இந்த நாளில், அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்' என வேண்டினாள்! இந்த வேண்டுகோள்தான், தீபாவளிப் பண்டிகைக்கு தனிப்பெருமை சேர்த்தது. ''நாம் துன்பப்பட்டாலும் பரவாயில்லை. உலகம் க்ஷேமமாக இருக்க வேண்டும்' எனும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வதுதான் தீபாவளியைக் கொண்டாடுவதன் தாத்பர்யம்'' என்று அருளியுள்ளார் ஸ்ரீமகா சுவாமிகள்.
இந்தியா மட்டுமின்றி அயல்நாடுகளில்கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்தியாவில், பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நரகாசுரனுடைய தேசத்துக்கு பாதுகாவலாக கிரி துர்கம், அக்கினி துர்கம், ஜல துர்கம், வாயு துர்கம் எனும் நான்கு கோட்டைகள் இருந்தன. இந்த நான்கு கோட்டைகளையும் அழித்து நரகாசுரனை சம்ஹாரம் செய்தார் கண்ண பரமாத்மா! பஞ்சபூதங்களால் ஆன நம் உடலுக்குள் புகுந்து, தீயவற்றை விலக்கி, நமக்கெல்லாம் அருள்புரிகிறார் கண்ணன் என்பதைக் குறிக்கிறதாம் இது!
கிரி துர்கம் - மண்; அக்கினி துர்கம் - நெருப்பு; ஜல துர்கம் - தண்ணீர்; வாயு துர்கம் - காற்று! ஆக, நிலம், நெருப்பு, நீர், காற்று எனும் நான்கையும் சொல்லியிருப் பதால், ஐந்தாவது பூதமான ஆகாயமும் இதில் சேரும்.
பஞ்ச பூதங்களால் ஆன நம் உடலில், பகவானைக் குடியேற்ற வேண்டும். பகவானுக்கு நம் உள்ளத்தில் இருக்க இடம் கொடுத்தால், அவன் நமது உள்ளத்தில் உள்ள அறியாமையை நீக்குவான்; ஞான ஒளி பிரகாசிக்கும். இதுவே தீபாவளியின் உட்பொருள்.
ரமண மகரிஷி சொல்லும் தீபாவளியும் இதுவே!
''தீய எண்ணங்கள்தான் நரகன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, தானாக ஆவது- அதாவது, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி'' என்கிறார் பகவான் ரமணர்!
ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர். இது தொடர்பான கதை...
நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி!
தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம். மார்வாடி பெருமக்கள், தீபாவளியன்று புது வருடக் கணக்கு தொடங்குவதும், இந்தத் திருமகள் வழிபாட்டை முன்னிட்டே நடைபெறுகிறது.
அயோத்தியில் தீபாவளி:
ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.
ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!
இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள்... தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் 'எம தீபம்' எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உண்டு.
ஆக, தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள்; அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம்... 'கெட்டவை நீங்கி நல்லதை அடைய வேண்டும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி' என்கின்றனர் சான்றோர்.
--
ப்ரியமுடன்,
ஜனார்த்தனன்