நம் முன்னோர்கள் பண்டிகைகளை குறித்துக்கொண்ட தன்மைகளையும், வானியல் காலநிலைமாற்றங்கள் பற்றிய பண்புச்சுட்டிகளை பற்றியும் முழுமையான ஒரு ஆராய்ச்சி செய்து கண்டுகொள்ளவேண்டிய விடயமாக உள்ளது.
பொதுவாக பூமியின் முழுமையான ஒரு சூரியச் சுற்றோட்டத்தில், பூமி மீது அதன் கடக ரேகை, மற்றும் மகர ரேகைகளுக்டையில் சூரிய உச்சங்கள் நகர்ந்துகொண்டிருக்கும் (இதற்கு காரணம் பூமி 23 அரைப்பாகை சற்று சரிந்திருப்பதாம்) இந்த வகையில் மகர ரேகையில் இருந்து சூரியன் புவி மத்தியகோடை நோக்கி நகர ஆரம்பிக்கும் தினம் ஜனவரி 14, 15களில் ஆரம்பிக்கின்றது என்பதை வானியலே சொல்கின்றது.
இதேபோல காலநிலை மாற்றங்களில் எல்லா இனங்களும், சகல பிரதேச வலய மக்களும் வசந்தகாலங்களை தங்கள் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற காலமாக மனதார ஏற்றுக்கொள்கின்றனர். இந்த காலங்கள், மனதில் குதூகலிப்பையும் புதுவித தெம்பையும் தமக்குள்ளே விதைப்பதாக அவர்கள் கருதியதாலேயே இந்த வசந்த விழாக்களை தொடங்கினர். அந்த வகையில் மத்திய தரைக்கோட்டிற்கு அண்மையில் இருக்கும் எமக்கு சித்திரை, வைகாசி மாதங்கள் வசந்தகாலமாக இருக்கின்றன. அந்த வகையிலேயே நாம் சித்திரை விழாவை எமக்கான புதுவருடமாக கொண்டாட தொடங்கியிருக்கின்றோம்.
இங்கே கேள்வி என்னவெனில் தை பொங்கலை தமிழர்கள் புதுவருடமாக கொண்டாடலராமா என்பதுதானே?
கருணாநிதியும் சில அமைப்புக்களும் புதிய கண்டுபிடிப்புக்களை கண்டு இதை கண்டிப்பாக கடைப்பிடிக்க முனைந்தார்கள் அனால் அது சரிவரவில்லை. பரம்பரைகள் பல கடந்த விழாக்களை புதிய சிந்தனைகளால் மாற்றுவது என்பது என்னைப்பொறுத்தவரை பேதமையே.
அதுதவிர தமிழன் நன்றி கெட்டவன் என்ற பேச்சுக்கு ஆதாரமற்றதாக்க தைத்திருநாள் அமைந்துள்ளது, நன்றி சொல்லும் பண்டிகையாக இது இருக்கின்றது வரவேற்கத்தக்கதே அதையும் ஏன் புதுவருடமாக்கி இல்லாது செய்வான்?
சித்திரை புதவருடமே எமக்கு பொருத்தமானது.
சிங்களவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதா? தமிழ் சாத்திரம் பார்க்குமா? என்ற வியாக்கியானங்களை விட்டுவிட்டு, காலநிலைக்கேற்றவகையில் ஒத்தகாலமாக சித்திரையே உள்ளதால் அதை கொண்டாடலாம் என்பதே என் கருத்து...
எப்போதும் ஒரு உண்மையை புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்களின் நிர்ணய கலாச்சாரம் ஒன்றை நாம் முறிக்க முற்பட்டால் அது எமது மரபணுவையே முறிப்பதற்கு சமனாகாதா என்ன?