நான் யார்? நான் யார்? நீ யார்?
அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
நான் யார் தெரியுமா? – இந்தக் கேள்வி பெரும்பாலும் சண்டைகளில்தான் வெளிப்படும். தான் யார் என்பதை எதிரில் இருப்பவர் அறியவில்லையே என்ற கோபம் மற்ற காரணங்கள் எல்லாவற்றையும் பின் தள்ளி இந்தக் கேள்வியாய் முன் வந்து நிற்கும். எம்ஜிஆர் பாடல் மூலம் பிரபலமான நான் யார்? நான் யார்? நீ யார் என்ற பாடல் தெரியும்தானே!
நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர் யார் யார்
இப்பாடல் மூலம் தான் யார் என்பதை தமிழ் திரை உலகம் தெரிந்து கொண்ட்து புலமைப்பித்தன் என்ற ஒரு நல்ல கவிஞரை. தான் கால் வைத்த இடமெல்லாம் தன் கைவைத்து தன்னை உயர்த்தியவர் என எம்ஜிஆரின் புகழ் பாடியவர் அவர்.
தான் யார் என்று தெரியாமல் இசை மூலம் காதல் சேர்ந்த கதை தெரியுமா? அது சீவக சிந்தாமணியில் வருகிறது. கதாநாயகி காந்தருவதத்தை யாழ் மீட்டிப் பாடுவதே ஒரு அழகுதான் பாருங்கள். அவளின் நெற்றி சிறிய வில் போல் வளைந்திருக்குமாம். கொல்லிப் பாவை போல் யாழினை மீட்டிப் பாடினாள். அது கேட்டு இலை மலர் எல்லாம் வளைந்தனவாம். தூண்களில் தளிர் முளைத்தன். இசையறிவில் சிறந்த மிதுனம் என்னும் பறவைகள் தம்மை மறந்து நிலத்தில் வீழ்ந்தனவாம். பார்க்காமல் காதல் வருவதற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்? சீவகனுக்கும் வந்தது.
சீவகன் யாழ் மீட்டிப் பாடியதையும் சற்றே பார்க்கலாம். அந்த யாழ் பவளத்தால் ஆகிய ஆணியையும், யானைத் தந்தத்தால் கடையப் பெற்ற ஒளி மிகு வயிரமாய் விளங்கியது. சுவையான தேன் போன்ற அமுதத்தை ஒத்த நரம்பினையும் உடைய யாழை, இசை நூலறிவில் தேர்ந்தவர் புகழும் காளையாகிய சீவகன், கையிலேந்திக் கடல்சூழ் உலகினைத் தன் இன்னிசையால் பாடி வயப்படுத்திய கதை அங்கே சொல்லப்படுது.
அதே போல் தான் யார் என்பதை அவர் பேசிய வார்த்தைகள் கோண்டே கண்டுபிடித்த்தினை நளவெண்பா நமக்குச் சொல்கிறது. நளன் மாறு வேடத்தில். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் தன் பிள்ளைகளைப் பார்த்தவுடன் பாசம் பீரிட்டு எழுகிறது. அதையும் அடக்கி அவர்களுடன் உரையாடுகிறார்.
‘உங்கள் அரசொருவன் ஆளநீர் ஓடிப்போந்து
இங்கண் உறைதல் இழுக்கன்றோ? – செங்கை
வளவரசே!’ என்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி எடுத்து.
நளன் மிக்க தவத்தால் பெற்றெடுத்த தன் மகனாகிய இந்திரசேனனைப் பார்த்து, ‘அரசே, உங்களுகே உரிமையாகிய அரசாட்சியை வேறொருவன் ஆள நீங்கள் வேறு இடத்தில் வாழ்வது மானக் குறைவன்றோ?’ என்று கேட்டான். இக்கேள்வியே போதுமானதாய் இருந்தது தமயந்திக்கு. வந்திருப்பது தன் ஆசைக் கணவன் என்று.
கம்பன் காப்பியத்தில் தான் யார் என்று சொல்லும் சூழல் சூர்ப்பநகைக்குக் கிடைக்கிறது. அவரின் விசிட்டிங் கார்டில் பெயர் கடைசியில்தான் அச்சாகி உள்ளது. இப்பாடலில் மூன்று நீளமான பெயர்கள் கிட்டியது.
1. பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி - பிரமன் மகனாம் புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் சூர்ப்பநகை.
2. சேவலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை - சிவபெருமானின் நண்பனான குபேரனின் தங்கை சூர்ப்பநகை.
3. திக்கின் மாஎலாம் தொலைத்து வெள்ளிமலை எடுத்து உலகம் மூன்றும் காவலோன் பின்னை - இராவணனின் பின் பிறந்த தங்கை சூர்ப்பநகை.
இதோ கம்பர் பாடல்:
பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி; முப்புரங்கள் செற்ற
சே-வலோன் துணைவன் ஆன செங்கையோன் தங்கை; திக்கின்
மா எலாம் தொலைத்து, வெள்ளிமலை எடுத்து, உலகம் மூன்றும்
காவலோன் பின்னை; காமவல்லி ஆம் கன்னி' என்றாள்.
பிரமனின் மகனான புலத்தியரின் மகன் விச்சிரவசுவின் மகள் ஆவேன்; சிவபெருமானின் நண்பனான குபேரனின் தங்கை ஆவேன்; இராவணனின் பின் பிறந்த தங்கை ஆவேன்; காம வல்லி என்ற பெயரையுடைய கன்னி என்று கூறினாள்.
(ஆரணிய காண்டம் – சூர்ப்பணகைப் படலம்)
-- அந்தமான் கிருஷ்ணமூர்த்தி
***********************************************
சூர்ப்பநகை எனில் 'முறம் போன்ற நகங்களை உடையவள்' என்று பொருளாம்.
சித்தானந்தம்