कंबम्निन इलक्किय नायं

0 views
Skip to first unread message

Rajaram Krishnamurthy

unread,
12:37 AM (5 hours ago) 12:37 AM
to Chittanandam V R, YM, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, Mani APS, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, thatha patty, Kerala Iyer, Societyforservingseniors, Sanathana group

KAMBANIN ILAKKIYA NAYAM

UVAMANA UVAMEYAM

BETTER THAN MILTON

BALAKANDAM SELECTIVE VERSES TO ENJOYINCLUDING……

----------------------------------------------------------

அஞ்சிலே ஒன்று பெற்றான்

அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக

ஆருயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கைக் கண்டு; அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்று வைத்தான்

அவன் நம்மை அளித்துக் காப்பான்

அநுமனுக்கு வணக்கம் தெரிவிக்கும் பாடல் இது. அஞ்சிலே ஒன்று பெற்றவன் எவன்? ஆஞ்சநேயன்; அநுமன். ஐந்து என்பது அஞ்சு என வழங்கப்பட்டது. ஐந்து எவை? ஐம்பெரும் பூதங்கள். நிலம், நீர், நெருப்பு, காற்று, வெளி என்பன. இவை முறையே பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்பன.

அஞ்சிலே ஒன்று பெற்றான் என்றால் ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று பெற்றவன் என்று பொருள். வாயு புத்திரன்; காற்றுத் தேவன் மைந்தன் என்பன அநுமனின் பெயர்கள்.

அநுமன் என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்றைத் தாவினான். அஞ்சிலே ஒன்று எது? நீர். அதாவது கடல். கடலைத் தாவினான் அநுமன்.

எப்படித் தாவினான்? அஞ்சிலே ஒன்று வழியாகத் தாவினான். அதாவது வான வீதி வழியே தாவினான். தாவி அயலார் ஊர் சென்றான்

அயலார் ஊர் எது? இலங்கை. எதற்காக சென்றான்? ஆருயிர் காக்க. யாருடைய ஆர் உயிர்? சீதையின் ஆருயிர்

சென்று என்ன செய்தான்? அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டான். ஐம்பெரும் பூதங்களிலே ஒன்று நிலம்; பூமி. பூமி தேவியின் மகளாகிய சீதையைக் கண்டான்.

அயலார் ஊராகிய இலங்கைக்குத் தீ வைத்தான். அத்தகைய அநுமன் நம் எல்லாரையும் காப்பானாக.

அஞ்சிலே ஒன்று—ஐம் பெரும் பூதங்களிலே ஒன்றாகிய காற்று; பெற்றான்—பெற்றவனாகிய அநுமன்; அஞ்சிலே ஒன்றைத் தாவி; பஞ்ச பூதங்களிலே ஒன்றாகிய நீரை (அதாவது கடலை) தாவி– அஞ்சிலே ஒன்று ஆறு ஆக—ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய வான் வழியாக; ஆருயிர் காக்க—சீதையின் அரிய உயிர் காத்தல் பொருட்டு; ஏகி—சென்று. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய பூமி தந்த செல்வியைக் கண்டு. அயலார் ஊரில்–மாற்றார் ஊராகிய இலங்கையில். அஞ்சிலே ஒன்று வைத்தான் — ஐம்பெரும் பூதங்களிலே ஒன்றாகிய தீயை வைத்தவனாகிய அவன் — அந்த அநுமன் நம்மை அளித்துக் காப்பான்—நாம் வேண்டுவனவற்றை அளித்து நம்மைக் காப்பானாக.

-----------------------------------------------------------------

நீரிடை உறங்கும் சங்கம்;

     நிழலிடை உறங்கும் மேதி ;

தாரிடை உறங்கும் வண்டு ;

     தாமரை உறங்கும் செய்யாள் ;

தூரிடை உறங்கும் ஆமை ;

     துறையிடை உறங்கும் இப்பி ;

போரிடை உறங்கும் அன்னம் ;

     பொழிலிடை உறங்கும் தோகை.

 இவ்வாறு அந்த ஆற்று நீர் பாய்வதனாலே கோசல நாடு செழித்து விளங்கிற்று.

எங்கு நோக்கினும் நீர் நிலைகள், அவற்றிலே சங்குகள் கிடக்கும், எருமைகள் மர நிழலிலே படுத்து உறங்கும், ஆடவரும் மகளிரும் சூடியுள்ள மலர் மாலைகளிலே வண்டுகள் மொய்த்து உறங்கும்.

ஆமை இருக்கிறதே! அது சேற்றிலே கிடக்கும் நீர்த்துறைகளிலே சிப்பிகள் இருக்கும், வைக்கோல் போர்களிலே அன்னம் படுத்து உறங்கும். தோப்புகளிலே மயில்கள் இருக்கும்.

தாமரை மலரிலே திருமகள் இருப்பாள்.

சங்கம் – சங்குகள்; தீரிடை உறங்கும். நீரிலே கிடக்கும் ; மேதி – எருமைகள்; நிழலிடை உறங்கும் – மர நிழலிலே படுத்து உறங்கும், வண்டு —வண்டுகள்; தாரிடை உறங்கும் — ஆடவரும் மகளிரும் அணிந்திருக்கும் மலர் மாலைகளிலே படுத்துறங்கும், செய்யாள் – திருமகள்; தாமரை உறங்கும் —தாமரை மலரிலே வீற்றிருப்பாள்; ஆமை — ஆமைகள்; தூரிடை உறங்கும் — சேற்றிலே உறங்கும்; துறையிடை – நீர்த்துறைகளிலே; உறங்கும் இப்பி — முத்துச்சிப்பிகள் கிடக்கும்; போரிடை – வைக்கோல் போர்களிலே அன்னம் உறங்கும் — அன்னப் பறவைகள் படுத்து உறங்கும். தோகை — மயில்கள்; பொழில் இடை – தோப்புகளிலே உறங்கும்—இருக்கும்.

------------------------------------------------------

வரம்பெலாம் முத்தம் ; தத்தும்

      மடை எலாம் பணிலம் ; மா நீர்க்

குரம்பெலாம் செம்பொன் ; மேதிக்

      குழி எலாம் கழுநீர்க் கொள்ளை

பரம்பெலாம் பவளம் ; சாலிப்

      பரப்பெலாம் அன்னம் ; பாங்கர்

கரம்பெலாம் செந்தேன் ; சந்தக்

      கா எலாம் களிவண்டுக் கூட்டம்.

கழனிகளின் வரப்பு எங்கும் முத்துக்கள்! நீர் பாயும் மடைகளில் எல்லாம் சங்குகள்! வாய்க்கால்கள் எங்கும் சிவந்த பொன் கட்டிகள்! எருமைகள் விழுந்து புரள்கிற சேற்றுக் குட்டைகளில் எல்லாம் செங்கழு நீர் மலர்கள்; குவியல் குவியலாக! பரம்பு அடித்துச் சமன் செய்யப்பட்ட வயல்கள் தோறும் பவளம்! நெல் பயிர்கள் நடுவே அன்னப் பறவைகள்! நறுமணம் வீசும் பூங்கா எங்கும் வண்டுக் கூட்டம்.

வரம்பு எலாம்—கழனிகளின் வரப்புகளில் எல்லாம்; முத்தம்—முத்துக்கள்; தத்து மடை எலாம்–நீர் தாவிப் பாய்கிற மதகுகளில் எல்லாம்; பணிலம்—சங்குகள்; மா நீர்க் குரம்பு எலாம்—பெரிய நீர்ப் பெருக்குடைய வயல் கரை எங்கும்; செம்பொன்—சிவந்த பொன் சட்டிகள்; மேதிக் குழி எலாம்—எருமைகள் விழுந்து புரள்கிற குட்டைகளில் எல்லாம்; கழுநீர்க் கொள்ளை—ஏராளமான செங்கழுநீர் மலர்களின் குவியல் பரம்பு எலாம்—பரம்பு அடித்துச் சமன் செய்யப்— பட்ட வயல்கள் எங்கும்; பவளம்–சாலிப் பரப்பு எலாம்—நெல் பயிராகிப் பரந்துள்ள இடங்களில் எல்லாம்; அன்னம்–அன்னப் பறவைகள்.

-------------------------------------------------------------

ஆலை வாய்க் கரும்பின் தேனும்

       அரிதலைப் பாளைத் தேனும்

சோலை வாய்க் கனியின் தேனும்

       தொடை இழி இறாலின் தேனும்

மாலை வாய் உகுத்த தேனும்

       வரம்பு இகந்து ஓடி வங்க

வேலை வாய் மடுப்ப உண்டு

       மீன் எலாம் களிக்கும் மாதோ !

கரும்பு ஆலைகளிலிருந்து பாய்கின்ற கரும்புச்சாறும், பாளைகளை நுனி சீவுதலால் அவற்றிலிருந்து வடிகின்ற கள்ளும் ஒன்று கலந்து பெருகி ஓடுகின்றன.

மலை உச்சியிலே உள்ள தேன் அடை மீது வேடர்கள் அம்பு எய்து தேன் எடுக்கிறார்கள். எப்படி எடுக்கிறார்கள்? அம்பிலே நூலைக்கட்டி வீசுகிறார்கள். அம்பு தேன் அடை மீது பாய்ந்து சொருகி நிற்கிறது. நூல் வழியே தேன் சொரிகிறது.

ஆடவரும் மகளிரும் அணிந்துள்ள மலர் மாலைகளில் இருந்தும் தேன் வழிகிறது. இப்படி வழியப் பெற்ற தேன் ஒன்றாகி, ஆறு போல் பெருகி, மரக்கலங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கடலில் கலக்கிறது. கடலில் உள்ள மீன்கள் எல்லாம் அத்தேனை உண்டுகளிக்கின்றன.

ஆலை வாய்க் கரும்பின் தேனும்—கரும்பு ஆலைகளிலிருந்து வழிந்து ஓடுகின்ற தேன் போல் இனிய கரும்புச் சாறும்; அரிதலைப் பாளைத் தேனும்—அரிந்து நுனிகளை உடைய பாளையினின்றும் தோன்றியகள்ளும்; சோலை வாய்க் கனியின் தேனும்—சோலைகளில் பழுத்து விழுந்த கனிகளின் சாறும்; தாடை இழி இறாலின் தேனும்—அம்பு வழியே பாயும் தேனும்; மாலை வாய் உகுத்த தேனும்—மலர் மாலைகளில் இருந்து வழிந்த தேனும்; வரம்பு இகந்து—எல்லையில்லாது பெருகி; ஓடி=ஓடி, வங்க வேலை வாய் மடுப்ப—மரக்கலங்கள் நிறுத்தப் பட்டுள்ள கடலை அடைய; மீன் எலாம்——(அக்கடலில் உள்ள) மீன்கள் எல்லாம் உண்டுகளிக்கும்—(அத்தேனை) உண்டு மகிழும்.

--------------------------------------------------------------

சேல் உண்ட ஒண்கணாரில்

     திரிகின்ற செங்கால் அன்னம்

மால் உண்ட நளினப் பள்ளி

     வளர்த்திய மழலைப் பிள்ளை

கால் உண்ட சேற்று மேதி

     கன்று உள்ளிக் கனைப்பச் சோர்ந்த

பால் உண்டு துயிலப் பச்சைத் தேரை

     தாலாட்டும் பண்ணை

சிவந்த கால்களை உடைய அன்னங்கள் தங்கள் குஞ்சுகளைத் தாமரையிலே படுக்க வைத்து விட்டு மகிழ்ந்து திரிந்து கொண்டு இருக்கின்றன. முழங்கால் வரை சேறு பூசிக்கொண்ட எருமைகள் கன்றுகளை எண்ணிக் கனைக்கின்றன; அப்படிக் கனைத்த உடனே பால் சொரிகின்றன தாமரை மலரிலே படுத்திருக்கின்ற அன்னக் குஞ்சுகள் தூங்கியவாறே அந்தப் பாலைக் குடிக்கின்றன. அவ்வாறு பால் குடித்துத் தூங்கும் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாட வேண்டாமா?

வயல்களிலே உள்ள பர்சைத் தேரைகள் எழுப்பும் ஒலி, அந்த அன்னக் குஞ்சுகளுக்குத் தாலாட்டுப் பாடுவது போல் இருக்கிறதால்.

பண்ணை—வயல்களில்; சேல் உண்ட ஒண் கணாரில்—சேல் மீன் போன்ற அழகிய கண்களை உடைய பெண்கள் போல்; திரிகின்ற—நடந்து திரிகின்ற; செங்கால் அன்னம்—சிவந்த கால்களை உடைய அன்னப் பறவைகள்; மால் உண்ட—மயங்குதல் உற்ற; நளினப் பள்ளி—தாமரை மலராகிய படுக்கையிலே; வளர்த்திய கண்—வளரச் செய்த; மழலைப் பிள்ளை—இளம் குஞ்ஈகள்; கால் உண்ட சேறு—முழங்கால் வரை சேறு பூசிய; மேதி—எருமை. கன்று உள்ளி— தன் கன்றை நினைத்து; கனைப்ப—கனைக்க; சோர்ந்த—சொரிந்த; பால் உண்டு—பாலை உண்டு; துயில—தூங்க; பச்சைந் தேரை—பச்சை நிறங் கொண்ட தவளைகள்; தாலாட்டுப்—தாலாட்டும் பாடும்.

---------------------------------------------------------------

குயிலினம் வதுவை செய்யக்

      கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை

அயில் விழி மகளிர் ஆடும்

      அரங்கினுக்கு அழகு செய்ய

பயில் சிறை அரச அன்னம்

     பன்மலர் பள்ளி நின்றும்

துயில் எழத் தும்பி காலைச்

     செவ்வழி முரல்வ சோலை

சோலைகள் நிறைந்த அந்தக் கோசல நாட்டிலே ஆணும் பெண்ணுமாகக் குயில்கள் இன்புற்று இருக்கின்றன. மகளிர் நடனம் ஆடுகின்றார்கள். அவர்களுக்கு அழகு தரும் விதத்திலே மரங்களிலே மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுகின்றன. தும்பிகள் ரீங்காரம் செய்கின்றன; ரீங்காரம் எப்படி இருக்கிறது ? விடியற் காலையிலே பள்ளி எழுச்சி பாடுவது போல் இருக்கிறது. அது வரை தாமரை மலரிலே தூங்கிக் கொண்டிருந்த அரச அன்னங்கள் அந்தப் பள்ளி எழுச்சி இசை கேட்டுக் கண் விழித்து எழுகின்றன.

சோலை—சோலைகளில்; குயில் இனம். குயில் இனங்கள்; வதுவை செய்ய—ஆண் குயில்களுடன் கூடி இன்புற்று இருக்க; கொம்பு இடை—மரக்கிளைகளில்; மஞ்ஞை—மயில்கள்; குனிக்கும்—ஆடும். (அது எப்படியிருக்கிறது என்றால்) அயில் விழி மகளிர்—வேல் போலும் விழி படைத்த பெண்கள்; ஆடும் அரங்கினுக்கு—நடனம் செய்கிற அரங்கினுக்கு அழகு செய்ய—மேலும் அழகு செய்வது போலுளது. பயில் சிறை—நெருங்கிய சிறகுகள் கொண்ட; அரச அன்னம்—ராஜ ஹம்ஸங்கள்; பன் மலர்ப் பள்ளி நின்றும்—பல்வேறு தாமரை மலர்ப் படுக்கைளிலிருத்தும்; துயில் எழ—விழித்து எழ; தும்பி—வண்டுகள்: செவ்வழி—செவ்வழி எனும் ராகத்தைப்; முரல்வ—பாடுகின்றன.

----------------------------------------------------------------------

நில மகள் முகமோ ! திலகமோ !

        கண்ணோ ! நிறை நெடு மங்கல நாணோ !

இலகு பூண் முலைமேல் ஆரமோ !

        உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய

மலர் கொலோ மாயோன் மார்பின்

        நல்மணிகள் வைத்த பொற்

                பெட்டியோ! வானோர்

உலகின் மேல் உலகோ ஊழியின்

       இறுதி உறையுளோ யாது உரைப்பாம் !

இதுவரை கோசல நாடு பற்றிக் கூறினார் கம்பர். இப்போது அந்த நாட்டின் தலைநகராகிய அயோத்தி பற்றிக் கூறுகிறார்.

இந்த நகரம் என்ன பூமி தேவியின் திருமுகமோ ! அம்முகத்தில் விளங்கும் திலகமோ ! நில மடந்தையின் கண்ணோ திருமங்கலச் சரடோ மார்பிலே விளங்கும் ரத்தின மாலையோ! திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலரோ! திருமால் மார்பிலே உள்ள நல் மணிகள் வைத்த தங்கப் பெட்டியோ ! வைகுண்டமோ ! ஊழிக்காலத்திலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறோ !

இவற்றுள் எது என்று சொல்வது !

இவ்வாறு வியந்து கூறுகிறார் கம்பர்.

நிலமகள் முகமோ—பூமி தேவியின் திருமுகமோ; திலகமோ—அம்முகத்தில் விளங்கும் திலகமோ; கண்ணோ—அவளது கண்ணோ; நிறை நெடுமங்கல நாணோ—நிறைந்த நீண்ட மங்கலச் சரடோ; இலகுபூண் முலைமேல் ஆரமோ—மார்பிலே விளங்கும் ரத்ன மாலையோ; உயிரின் இருக்கையோ—உயிர் இருக்கும் இடமோ; திருமகட்கு இனிய மலர் கொலோ—திருமகள் இனிது வீற்றிருக்கும் தாமரை மலர் தானோ; மாயோன்—திருமாலின் மார்பில்—மார்பிலே விளங்கும் ; நல்மணிகள் வைத்த—உயரிய மணிகள் வைக்கப்பெற்ற; பொன் பெட்டியோ—தங்கப் பெட்டியோ; வானோர் உலகின்மேல்—தேவர் உலகுக்கும் மேலான; ஓர்—ஓப்பற்ற; உலகோ—வைகுண்டமோ, ஊழியின் இறுதி உறையுளோ—ஊழிக்காலத்தின் முடிவிலே எல்லாப் பொருளும் தங்கும் இடமாகிய திருமாலின் வயிறுதானோ; யாது உரைப்பாம்—இவற்றுள் எது என்று சொல்வது !

-----------------------------------------------------------------

கல்லாது நிற்பர் பிறர்

      இன்மையின் கல்வி முற்ற

வல்லாரும் இல்லை ; அவை

      வல்லர் அல்லாரும் இல்லை ;

எல்லாரும் எல்லாப் பெரும்

      செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை ; உடையாரும்

      இல்லை மாதோ !

மொத்தப் படித்தவர் என்போர் அங்கே இலர் ஏன் ? எல்லாருமே கல்வி வல்லவர். கல்லாது நிற்பவர் எவருமே இலர். அங்ஙனம் இருக்கும் போது ‘இவர் படித்தவர் இவர் படியாதவர்’ என்று சொல்வது எவ்வாறு ?

செல்வம் எல்லாரிடமும் சமமாக இருந்தது. எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று இருந்தனர். அதனாலே ஏழையும் இல்லை; பணக்காரரும் இல்லை. இல்லாதவர் என்போர் இலர்; அதாவது பொருள் இல்லாதவர் இலர்; மெத்தப் பொருள் படைத்தவரும் இலர்.

கல்லாது நிற்பர் பிறர் இன்மையின்—கல்வி கற்காமல் வீண் பொழுது போக்கித் திரிபவர் எவருமே இல்லாததால்; கல்வி முற்ற வல்லாரும் இல்லை—மிக்கப் படித்தவர் என்று கூறத்தக்கவர் எவருமே இலர்; அவை வல்லார் அல்லாரும் இலர்—கல்வியில்லாதவரும் இலர். எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தலாலே—எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்றிருத்தலாலே; இல்லாரும் இல்லை—செல்வம் இல்லாதவர் எவருமே இலர் உடையாரும் இல்லை—பெரும் செல்வம் உடையார் எவருமே இலர்.

----------------------------------------------------

கலம் சுரக்கும் நிதியம்

       கணக்கிலா

நிலம் சுரக்கும் நிறை வளம்

       நல் மணி

பிலம் சுரக்கும் ; பெறுவதற்கு

       அரிய தம்

குலம் சுரக்கும் ஒழுக்கம்

       குடிக்கு எலாம்

அந்த நாட்டு மக்களுக்கு வேண்டிய செல்வத்தை கொண்டு வந்து கொட்டிய வண்ணம் இருக்கும் கப்பல்கள். நிலமோ! நிறைந்த விளைச்சல் தரும். சுரங்கங்கள் நல்ல மணிகளைத் தரும். குடி மக்கள் நல்ல ஒழுக்கம் உடையவர்களாக இருந்தார்கள், காரணம் அவர்கள் நல்ல குடியிலே பிறந்தவர்கள்.

குடி எலாம்—அந் நாட்டுக் குடிமக்களுக்கு எல்லாம்; நிதியம்—செல்வத்தை கணக்கிலா—அளவில்லாமல்; கலம்—வாணிபம் செய்யும் கப்பல்கள்; சுரக்கும்—கொண்டு வந்து சொரியும். நிலம்—பூமி; நிறை வளம்—நிறைந்த விளைச்சலை; சுரக்கும்—தரும்; பிலம்—சுரங்கங்கள்; நல்மணி—சிறந்த ரத்தினங்களை; சுரக்கும்—அளிக்கும். பெறுதற்கு அரிய— பெறுவதற்கு அரிய; ஒழுக்கம்—நல் ஒழுக்கத்தை; தம் குலம் சுரக்கும்—அவரவர் தம் குலம் அளிக்கும்.

---------------------------------------------------------------------

தாய் ஒக்கும் அன்பில்

       தவம் ஒக்கும் நயம் பயப்பில்

சேய் ஒக்கும் முன் நின்று ஒரு

      செல்கதி உய்க்கு நீரால்

நோய் ஒக்கும் எனில் மருந்து

      ஒக்கும் நுணங்கு கேள்வி

ஆயப் புகுங்கால் அறிவு ஒக்கும்

      எவர்க்கும் அன்னான்.

இது வரை கோசல நாடு பற்றியும், அந்நாட்டின் தலை நகரான அயோத்தி மா நகர் பற்றியும் கூறினார் கம்பர்.

இப்போது அந்த நாட்டு அரசனைப் பற்றிச் சொல்கிறார். கோசல நாட்டு அரசனாகிய தசரதன் எப்படியிருந்தான்?

தனது குடிமக்களிடம் அன்பு செலுத்துவதிலே தாய் போலிருந்தான். அதாவது தாய் எப்படித் தன் சேயை அன்புடன் பேணிப் பாதுகாப்பாளோ அம்மாதிரி பேணிப் பாதுகாத்து வந்தான். யாரை? குடிமக்களே.

குடிமக்களுக்கு நன்மை செய்வதிலே தவம் போலிருந்தான். அதாவது தவமானது எப்படி அளவற்ற நலன்களைத் தருமோ அப்படி அளவற்ற நன்மைகள் செய்தான்.

தன் குடிமக்களை எல்லாம் நல்ல வழியிலே நடத்திச் செல்வதில் சத்புத்திரர் போலிருந்தான். சத்புத்திரர்கள் என்ன செய்வார்கள்? நல்ல காரியங்களைச் செய்து தங்கள் பெற்றோர் நற்கதி அடையச் செய்வார்கள். அம்மாதிரி நல்ல காரியங்கள் செய்து தன் குடிமக்களை நல்வழியில் செலுத்தினான் தசரதன்.

வழியலா வழிச்செல்வோர் நோய் வாய்ப்படுவர். நோய் என் செய்யும்? அவரை வருத்தும்; வாட்டும். அதே போல தீய வழிச்செல்லும் குடிமக்களைத் தசரதன் வருத்தினான்; வாட்டினான். எனவே நோய் போன்றவன் ஆக இருந்தான்.

இருப்பினும், நோயினால் வருந்துவோரின் வாட்டத்தைத் தீர்ப்பது மருந்து அன்றோ? அதே போலத் தீய வழியில் சென்ற குடிமக்களைத் தண்டித்துப் பின் அவர்க்கு அதனால் ஏற்படும் வாட்டத்தையும் போக்கினான். எனவே நோய் தீர்க்கும் மருந்து போன்றவனாக விளங்கினான்.

அன்னான்–அந்த தசரத மன்னன்; எவர்க்கும்—தனது குடிமக்கள் யாவருக்கும்; அன்பின்—மிகுந்த அன்பு பாராட்டுவதாலே; தாய் ஒக்கும்—பெற்ற தாய் போல இருந்தான்; நலம் பயப்பின்—வேண்டிய நன்மைகள் எல்லாம் செய்து தருவதில்; தவம் ஒக்கும்—தவம் போல இருந்தான்; முன் நின்று—தலைமை வகித்து முன்னே நின்று ஒரு செல்கதி உய்க்கு நீரால்—செல்வதற்குரிய நல்ல வழியில் நடத்திச் செல்வதால்; சேய் ஒக்கும்—மகனை ஒப்பான்; நோய் ஒக்கும்—தீய வழிச்செல்வோரை வருத்துவதில் நோய் போல இருப்பான்; எனின்—என்றாலும்; மருந்து ஒக்கும்—கருணை காட்டுவதில் அந்நோய் போக்கும் மருந்து போல இருந்தான்.

இவ்வாறு நல்லாட்சி செய்து வந்த தசரதன், தனக்கு மகப்பேறு இல்லாமை குறித்து மிக வருந்தினான்; குல குருவாகிய வசிஷ்ட முனிவரிடம் தனது குறையை வெளியிட்டான். வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகப்பேறு கருதி யாகம் ஒன்று செய்ய முடிவு செய்தான் தசரதன்.

--------------------------------------------------------------------

வருகலை அறிவு நீதி

      மனு நெறி வரம்பு வாய்மை

தருகலை மறையும் எண்ணில்

      சதுமுகற்கு உவமை சான்றோன்

திருகலையுடைய இந்தச்

      செகத்துளோர் தன்மை தேரா

ஒரு கலைமுகச் சிருங்க

      உயர் தவன் வருத வேண்டும்.

ரிசிய சிருங்கர் என்ற கலைக்கோட்டு முனிவர் வேதநூல் வல்லவர்; மனுதர்ம சாத்திரம் நன்கு அறிந்தவர்; கலை ஞானம் நிரம்பியவர்; பிரமதேவனுக்கு ஒப்பானவர்; ஆண் பெண் என்ற இந்த உலக வேறுபாடுகளை ஒரு சிறிதும் அறியாதவர்; முகத்திலே மான் கொம்பு உடையவர்; தவத்தில் சிறந்தவர். அவர் இங்கே வரல் வேண்டும்.

வருகலை அறிவு—பலவாக உள்ள கலை அறிவிலும்; நீதி மனு நெறி வரம்பு—நீதிகளை விளக்கும் மனு தர்ம விதிகளிலும்; வாய்மை தரு—உண்மைப்பொருள்களை எடுத்துக்கூறும்; கலை மறையும்—பல பிரிவுகள் கொண்ட வேதங்களிலும்; எண்ணில்—ஆராய்ந்து பார்க்குங்கால்; சதுமுதற்கு—நான்முகனாகிய பிரமதேவனுக்கு; உவமை சான்றோன்—ஒப்பானவரும்; திருகலை உடைய—ஆண் பெண் என்ற வேறுபாடு கொண்ட; இந்தச் செகத்துனோர்—இந்த உலக மக்களின் இயல்புகளை; தேரா—சிறிதும் அறியாதவரும்; ஒரு கலை சிருங்கமுகம்—ஒற்றை மான் கொம்பு பொருந்திய முகம் உடையவரும் ஆன; உயர் தவன்—மேலான தவ முனிவர்; வரல் வேண்டும்—இங்கே வரல் வேண்டும்.

-----------------------------------------------------------

எய்தனர்; எறிந்தனர்; எரியும் நீருமாப்

பெய்தனர்; பெருவரை பிடுங்கி வீசினர்;

வைதனர். தெழித்தனர்; மழுக்கள் ஓச்சினர்;

செய்தனர் ஒன்றல தீய மாயமே.

யாகத்தைப் பாழ்படுத்த எண்ணிய அரக்கர்கள் அம்புகளை எய்தார்கள்; ஈட்டிகளை எறிந்தார்கள்; நெருப்பைக் கொட்டினார்கள்; நீரைப் பெய்தார்கள்; மலைகளைப் பிடுங்கி வீசினார்கள்; வைதார்கள்; அச்சுறுத்தினார்கள் இன்னும் பல தீய செயல்களைச் செய்தார்கள்.

எய்தனர் – அம்புகளை எய்தனர்; எறிந்தனர்—ஈட்டிகளை எறிந்தார்கள். எரியும் நீரும் ஆகப் பெய்தனர் — நெருப்பும் நீரும் சொரிந்தனர். பெருவரை பிடுங்கி வீசினர் — பெரிய மலைகளை வேருடன் பிடுங்கி வீசினர்; வைதனர் — பலவித வசைச் சொற்களால் ஏசினர்; தெழித்தனர் — அதட்டினர். மழுக்கள் ஓச்சினர் — மழு ஆயுதங்களை எறிந்தனர்; ஒன்று அல தீய மாயம் செய்தனர்—இவ்வாறு அவர்கள் செய்த தீய செயல் ஒன்றன்று; பல மாயம் ஒன்றன்று; பற்பல.------------------

----------------------------------------------------

தடுத்து இமையால்

        இருந்தவர் தாளின்

மடுத்தும் நாண் நுதி

        வைத்ததும் நோக்கார்

கடுப்பினில் யாரும்

        அறிந்திலர் கையால்

எடுத்தது கண்டார்

        இற்றது கேட்டார்.

 

இந்த இளங்குமரன் என்ன செய்வானோ என்ற வியப்புடன் கண் இமையாமல் இராமனையே நோக்கிய வண்ணம் இருந்தார்கள். அந்த வில்லைத் தன் கால் விரல் நுனி கொண்டு மிதித்ததும் கையில் வாங்கியதும் நாண் ஏற்றியதும் கண்டிலர். ஏன் ? அவ்வளவு விரைவில் எல்லாம் நடந்தன. வில்லைக் கையில் ஏந்தியது ஒன்றே கண்டார். அடுத்த நொடியில் ‘படார்’ என்ற சப்தம் கேட்டனர். வில் ஒடிந்தது.

இமையாமல் தடுத்து - கண் இமைக்காமல் தடுத்து; இருந்தவர்-விழித்த கண் விழித்தபடியே பார்த்துக் கொண்டு இருந்தவர் (சபையோர்) தாளில் மடுத்ததும்--இராமன் தன் கால் கட்டை விரலால் மிதித்து எழச் செய்ததும்; நாண் நுதி வைத்ததும் - நாணேற்றியதையும்; கடுப்பினில் - அச்செயல்கள் விரைவாக நடந்ததினால், நோக்கார்- காணார்; அறிந்திலர்-அறியவும் இலர்; கையால் எடுத்தது கண்டார்; கைகளால் எடுத்தது ஒன்றே கண்டார்; இற்றது கேட்டார் - ஒடிந்த சப்தம் கேட்டனர்.

இராமன் அந்த சிவ தனுசை நாணேற்றி விட்டான். வில் முறிந்தது என்ற செய்தி கேட்டு மிதிலை வாழ் மக்கள் மட்டிலா மகிழ்ச்சியில் மூழ்கினார்கள். சீதா கல்யாணமும் உறுதி ஆயிற்று.

-----------------------------------------------------------------------

தயரதன் புதல்வன் என்பார்

        தாமரைக் கண்ணண் என்பார்

புயல் அவன் மேனி என்பார்

        பூவையும் பொருவும் என்பார்

மயல் உடைத்து உலகம் என்பார்

        மானுடன் அல்லன் என்பார்

கயல் பொரு கடலுள் வைகும்

        கடவுளே காணும் என்பார்



இவன் தசரத சக்கரவர்த்தி திருமகன். அதனாலேதான் இவ்வளவு லகுவாக இந்த வில்லை ஒடித்தான் என்பர் சிலர், இவன் வடிவழகு காண்பீர்! இவன் சாதாரண மனிதன் அல்லன். செந்தாமரைக் கண்ணனும் காயாம்பூ மேனியனும் ஆகிய கார்மேக வண்ணன், பாற்கடலில் துயிலும் பரந்தாமன் இவன். இவனை மனிதன் என்று சொல்லும் உலகம் அறியாமை உடையது என்பர் மற்றும் சிலர்.

தயாதன் புதல்வன் என்பார் — தசரத சக்கரவர்த்தியின் திருமகன் என்பார் சிலர் , தாமரைக் கண்ணன் என்பார் – செந்தாமரைக் கண்ணனாகிய திருமால் போலும் என்பார் வேறு சிலர் புயல் அவன் மேனி என்பார்—அக்குமரனுடைய திருமேனி மேகமே என்பார் இன்னும் சிலர். பூவை பொருவும் என்பார்அவன் திருமேனிக்குக் காயாம் பூவே பொருந்தும் என்பார் மற்றும் சிலர். மானுடன் அல்லன் என்பார் இவன் மனிதன் அல்லன் என்பார் வேறு சிலர். (பின்ன எவன் எனில்) கயல் பொரு கடலுள் வைகும் கடவுளே காணும் என்பார் கயல் மீன்கள் ஒன்றுடன் மற்றொன்று பொருதற்கு இடமான திருப்பாற் கடலிலே பள்ளி கொண்ட பரந்தாமனே என்பார். உலகம் மயல் உடைத்து என்பார் இவன் மனிதன் என்று கூறும் இவ்வுலகம் அறியாமை உடையது என்பார்.

-------------------------------------------------------------\

நம்பியைக் காண நங்கைக்கு

        ஆயிரம் நயனம் வேண்டும்

கொம்பினைக் காணுந் தோறும்

        குரிசிற்கும் அன்ன தேயால்

தம்பியைக் காண்மின் என்பார்

        தவமுடைத்து உலகம் என்பார்

இம்பர் இந்நகரில் தந்த முனிவனே

        இறைஞ்சும் என்பார்.

புருஷோத்தமனாகிய அந்த இராமனைக்‌ கண்டுகளிக்க ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌ சீதைக்கு” என்றனர்‌ சிலர்‌.

சீதைதான்‌ என்ன ? அழகில்‌ குறைந்தவளா ? அவளைக்‌ கண்டுகளிக்க அவனுக்கும்‌ ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌” என்றனர்‌ மற்றும்‌ சிலர்‌.

அஃதிருக்கட்டும்‌ அவன்‌ தம்பியைப்‌ பாருங்கள்‌. அவனும்‌ அழகில்‌ குறைந்தவனா ?” என்றனர்‌ வேறு சிலர்‌.

இவர்களைப்‌ பெற்ற இந்த உலகம்‌ பெரிதும்‌ தவம்‌ செய்திருக்க வேண்டும்‌” என்றனர்‌ இன்னும்‌ சிலர்.

இவர்களை இந்த நகருக்கு அழைந்து வந்த முனிவனை வணங்குங்கள்‌” என்றனர்‌ மற்றும்‌ சிலர்‌..

நம்பியை – புகுஷோத்தமனான; இவனை காண—முழுவதும்‌ காண்பதற்கு ; தங்கைக்கு — நம்‌ சீதைக்கு; ஆயிரம்‌ நயனம்‌ வேண்டும்‌ — ஆயிரம்‌ கண்கள்‌ வேண்‌டும்‌ (என்பார்‌ சிலர்‌) கொம்பினை — பூங்கொடி போன்ற சீதையை ; காணும்‌ தோறும்‌ — பார்க்கும்‌ நேரம் ஒவ்வொன்றிலும்‌ ; குரிசிற்கும்‌ — அரசிளங்குமரனுக்கும்‌ அன்னதே—அவ்வாறே ; ஆயிரம்‌ கண்கள்‌ வேண்டும்‌ ; (இது கிடக்கட்டும்‌) தம்பியைக்‌ காண்மின்‌ — இராமனுடைய தம்பியைப்‌ பாருங்கள்‌ அவனும்‌ இவனில்‌ குறைந்தவன்‌ அல்லன்‌ என்பார்‌ ; உலகம்‌ தவம்‌ உடைத்து என்பார்‌ — இவர்களைப்‌ பெறுதற்கு இவ்வுலகம்‌ நல்ல தவம்‌ செய்துளது என்பார்‌, (இவ்வளவுக்கும்‌ மேலாக), இம்பர்‌ — இவ்வுலகத்திலே ; இந்நகரில்‌ – இந்த மிதிலை மாநகரிலே ; தந்த முனிவனை — இவர்களை அழைத்து வத்த விசுவாமித்திர முனிவனை; இறைஞ்சும்‌ என்பார்‌ — வணங்குங்கள்‌ என்பார்‌.

----------------------------------------------------

மானினன்‌ வருவ போன்றும்‌

      மயில்‌ இனம்‌ திரிவ போன்றும்‌

மீனினம்‌ மிளிர்வ போன்றும்‌

      மின்‌ இனம்‌ மிடைவ போன்றும்‌

தேன்‌ இனம்‌ சிலம்பி ஆர்ப்பச்‌

      சிலம்பினம்‌ புலம்ப எங்கும்‌

பூனனை கூந்தல்‌ மாதர்‌ ‘பொம்‌’

      எனப் புகுந்து மொய்த்தார்‌.

தேர்‌ மீது அமர்த்து அந்த மிதிலை மாநகரின்‌ வீதி வழியே உலா வருகிறான்‌ இராமன்‌. அவனைக்‌ காணும்‌ பொருட்டு அந்த நகரத்துப்‌ பெண்மணிகள்‌ ஒருவரை மற்றொருவர்‌ முட்டித்‌ தள்ளிக்கொண்டு முன்வரிசையில்‌ நெருங்கினார்கள்‌ எப்படி ? தலையிலே மலர்‌ கூடியதால்‌ நனைத்த கூந்தலுடன்‌. காலிலே அணிந்த சிலம்பு கலீர்‌ கலீர்‌ என்று ஒலிக்க மலரிலே மொய்த்த வண்டுகள்‌ ரீங்காரம்‌ செய்ய, மான்கள்‌ கூட்டமாக வருவன போன்றும்‌, மயில்கள்‌ கூட்டமாகத்‌ திரிவன போன்றும்‌, மீன்கள்‌ கூட்டமாக நீரிலே நீந்துவன போன்றும்‌, மின்னல்‌ கொடிகள்‌ பளிச்சிடுவன போன்றும்‌ ஒருவரை ஒருவர்‌ நெருக்கித்‌ தள்ளிக்‌ கொண்டு வந்தார்கள்‌; கூட்டம்‌ கூட்டமாக வந்தார்கள்‌.

பூ நனை—பூச்‌ சூடியதால்‌ நனைந்த ; கூந்தல்‌–கூந்தலை உடைய; மாதர்‌—பெண்‌ மணிகள்‌; மானினம்‌ வருவபோன்றும்‌—மான்‌ கூட்டங்கள்‌ வருவன போலும்‌; மயில்‌ இனம்‌ திரிவ போன்றும்‌–மயில்‌ கூட்டங்கள்‌ திரிவன போலும்‌; மீன்‌ இனம்‌ மிளிர்வ போன்றும்‌—மீன்கள்‌ கூட்டம்‌ கூட்டமாக ஒளி வீசி நீரில்‌ நீந்துவன போலவும்‌; மின்‌ இனம்‌ மிடைவ போன்றும்‌—மின்னல்‌ கொடிகள்‌ பளிச்சிடுவன போலவும்‌; தேன்‌ இனம்‌ கிலம்பி ஆர்ப்ப—தேன்‌ வண்டுகள்‌ ரீங்காரம்‌ செய்து ஆர்ப்பரிக்க; சிலம்பினம்‌ புலம்ப—காலிலே அணிந்த சிலம்பும்‌. மணிகளும்‌ ‘கலீர்‌ கலீர்‌’ என்று ஒலிக்க; எங்கும்‌—எங்கும்‌; பொம்‌ என—கூட்டம்‌ கூட்டமாக; புகுந்து—ஒருவரை ஒருவர்‌ முட்டிப்‌ புகுந்து; மொய்த்தார்‌—இராமனைக்‌ க௱ண நெருங்கினர்‌.

-----------------------------------------------------------------------

விரிந்து வீழ்‌ கூந்தல்‌ பாரார்‌

      மேகலை அற்ற நோக்கார்‌

சரித்த பூந்துகில்கள்‌ தாங்கார்‌

      இடை தடுமாறத்‌ தாழார்‌

நெருங்கினர்‌ நெருங்கிப்‌ புக்கு

      நீங்குமின்‌ நீங்குமின்‌ என்று என்று

அருங்கலம்‌ அனைய மாதர்‌

      தேனுகர்‌ அளியின்‌ மொய்த்தார்‌.

தெருவிலே தேர்மீது அமர்ந்து வருகிறான்‌ என்ற செய்தி கேட்டார்கள்‌ பெண்கள்‌, அவ்வளவுதான்‌. ஓடோடி வந்தார்கள்‌, அப்படி ஓடி வந்த வேகத்தில்‌ கூந்தல்‌ அவிழ்ந்து விட்டது, ஆடை குலைந்து சரிந்து விட்டது. மேகலாபரணங்கள்‌ அறுந்து சிதைந்து விட்டன, இவற்றைச்‌ சிறிதும்‌ பொருட்படுத்தினார்‌ அல்லர்‌. ‘விலகுங்கள்‌ விலகுங்கள்‌’ என்று சொல்லி ஒருவரை ஒருவர்‌ முட்டித்‌ தள்ளிக்கொண்டு வந்து தேரைச்‌ சூழ்ந்து கொண்டனர்‌, அது எப்படியிருந்தது. தேன்‌ அருந்தும்‌ பொருட்டு வண்டுகள்‌ ‘பொம்‌’ என மொய்ப்பனபோல்‌ இருந்ததாம்‌.

       அரும்‌ கலம்‌ அனைய மாதர்‌—அருமையான அணிகலன்கள்‌ போன்ற பெண்கள்‌ ; (பரபரப்பினால்‌) விரிந்து வீழ்‌ கூந்தல்‌—அவிழ்ந்து வீழ்ந்த தங்கள்‌ கூந்தலை; பாரார்‌ பாராமலும்‌; மேகலை அற்ற நோக்கார்‌—மேகலா பரணம்‌ அறுந்து சிதறிப்‌ போவதைப்‌ பொருட்படுத்தாமலும்‌; சரிந்த—இடையினின்றும்‌ நழுவிய; பூந்துகில்கள்‌—பூம்‌

பட்டாடைகளை; தாங்கார்‌—தாங்கிப்‌ பிடித்துக்‌ கொள்ளாமலும்‌; இடை தடுமாற—மெல்லிய இடைவருந்தவும்‌; தாழார்‌—அதன்‌ பொருட்டு காலம்‌ தாழ்த்தாமலும்‌; நெருங்கினர்‌—மிகவும்‌ நெருங்கினவர்களாய்‌; நீங்குமின்‌ நீங்குமின்‌ என்று—விலகுங்கள்‌. விலகுங்கள்‌ என்று சொல்லிக்கொண்டு; நெருங்கிப்புக்கு— இராமன்‌ வரும்‌ தேரை அணுகி; தேன்‌ நுகர்‌ அளிமின்‌—தேன்‌ உண்பதற்கு கூடும்‌ வண்டுகளே போல்‌; மொய்த்தார்‌—மொய்த்துக்‌ கொண்டார்கள்‌.

---------------------------------------------------------------------------------------------------

தோ கண்டார்‌ தோளே கண்டார்‌

       தொடு கழல்‌ கமலம்‌ அன்ன

தாள்‌ கண்டார்‌ தாளே கண்டார்‌

       தடக்கை கண்டாரும்‌ அஃதே

வாள்‌ கண்ட கண்ணார்‌ யாரே

       வடிவினை முடியக்‌ கண்டார்‌

ஊழ்‌ கண்ட சமயத்து அன்னான்‌

       உருவு கண்டாரை ஒத்தார்‌.

இராமனின்‌ தோள்‌ அழகு கண்டவர்கள்‌ அதிலேயே ஈடுபட்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்‌. அவனது திருவடிகளைக்‌ கண்டவர்கள்‌ வைத்த கண்‌ வைத்தபடி அதையே பார்த்துக்‌ கொண்டிருந்தார்கள்‌. அவனது அழகிய நீண்ட கை கண்டார்‌ கையையே பார்த்து நின்றனர்‌. ஆக இராமனின்‌ திருவுரு முழுதுங்‌ கண்டவர்‌ எவருமிலர்‌. அது எப்படியிருந்தது? பரம்‌ பொருளை ஒவ்வொரு சமயத்திலும்‌ ஒவ்வொரு கூறாகப்‌ பார்த்தவர்‌ அதுவே முற்ற முடிந்த ஒன்று என்று வாதிப்பது போல்‌ இருந்தது.

தோள்‌ கண்டார்‌—இராமனது தோள்‌ அழகு சுண்டவர்கள்‌; தோளே கண்டார்‌— அதன்‌ அழகில்‌ ஈடுபட்டவர்களாய்‌ அதையே பார்த்துக்கொண்டு இருந்தார்கள்‌; தொடுகழல்‌—வீரக்‌ கழல்‌ அணிந்த; கமலம்‌ அன்ன—தாமரை மலரை ஒத்த; தாள்‌ கண்டார்‌—திருவடிகளைக்‌ கண்டவர்கள்‌; தாளே கண்டார்‌—அத்‌திருவடிகளையே பார்த்து நின்றார்கள்‌; தடக்கை கண்டாரும்‌—பெரிய திருக்கரங்களின்‌ அழகைக்‌ கண்டவரும்‌; அஃதே—அவ்வாறே; வாள்‌ கொண்ட கண்ணார்‌—வாளினை ஒத்த கூறிய கண்‌ கொண்ட மகளிர்‌; எவரே—எவர்தான்‌; வடிவினை முடியக்‌ கண்டார்‌ —இராமபிரானின்‌ திருமேனி முழுவதும்‌ கண்டார்‌? (அங்ஙனம்‌ அப்‌பெருமானின்‌ திருவுருவம்‌ முழுவதும்‌ காணாமல்‌ ஒவ்வொரு பகுதியை மட்டும்‌ கண்டவர்‌) ஊழ்‌ கண்ட சமயத்து—பல்‌வேறு வகையான சமயங்களில்‌; அன்னான்‌ உருவு கண்டாரை—இறைவனின்‌ ஒரு பகுதியை மட்டும்‌ பார்த்துவிட்டு இதுவே முற்ற முடிந்த உரு என்று வாதிடுவோரை ஒத்தார்‌—ஒப்ப இருந்தனர்‌.

--------------------------------------------------------------

தோரண நடுவாரும்‌

        தூணுறை இடுவாரும்‌

பூரண குடம்‌ எங்கும்‌

        புனை துகில்‌ புனைவாரும்‌

காரணி நெடு மாடம்‌

        கதிர்‌ மணி அணிவாரும்‌

ஆரண மறை வாணர்க்கு

        அமுது இனிது அடுவாரும்‌.

அயோத்திக்குத்‌ தூதுவரை அனுப்பினான்‌ ஜனகன்‌. இராமன்‌ வில்‌ ஒடித்ததையும்‌ சீதையைத்‌ திருமணம்‌ செய்து கொடுக்கத்‌ தான்‌ சித்தமாய்‌ இருப்பதையும்‌ தெரிவித்தான்‌. தசரத மன்னனை அழைத்தான்‌. அவ்வாறே தூதுவர்‌ சென்றனர்‌. தசரத மன்னனுக்கு ஜனசன்‌ கூறியவற்றைத்‌ தெரிவித்தனர்‌. சேட்டான்‌ தசரத மன்னன்‌. மகிழ்ந்தான்‌. மந்திரி பரிவாரங்களுடன்‌ மிதிலைக்குப்‌ புறப்பட்டான்‌.

மிதிலை மாதகர்‌ திருமண விழாக்கோலம்‌ பூண்டது.

மிதிலை வாழ்‌ மக்கள்‌ நகர்‌ எங்கும்‌ தோரண கம்பங்களை நட்டார்கள்‌. தூண்களை உறையிட்டு அலங்கரித்தார்கள்‌. எங்கும்‌ பூரணகும்பம்‌ வைத்தார்கள்‌, சித்திரச்‌ சீலைகளால்‌ அணிசெய்தார்கள்‌. வீடுகளை மணிகளால்‌ அழகு செய்தார்கள்‌. அந்தணர்க்கு அளிக்கும்‌ பொருட்டு இன்சுவை அமுது தயாரித்தார்கள்‌.

தோரணம்‌ நடுவாரும்‌—தோரண கம்பங்களை அவற்றிற்குரிய இடங்களிலே நடுபவரும்‌; தூண்‌ உறை இடுவாரும்‌—பட்டினால்‌ ஆன உறைகளைத்‌ தூண்களுக்கு இடுவாரும்‌; எங்கும்‌—எவ்விடத்தும்‌; பூரண குடம்‌—பூரண கும்பங்களாலும்‌; புனை துகில்‌—சித்திரச்‌சீலைகளாலும்‌; புனைவாரும்‌—அழகு செய்பவர்களும்‌; கார்‌ அணி நெடுமாடம்‌—மேகங்கள்‌ தங்குவதால்‌ அழகு தரும்‌ நீண்ட உயர்ந்த மாளிகைகளிலே; கதிர்‌ மணி அணிவாரும்‌—ஒளிமிக்க மணிகளால்‌ அழகு செய்வாரும்‌; ஆரணம்‌ மறைவாணர்க்கு பல சாகைகள்‌ கொண்ட வேத நெறிவாழ்‌ அந்தணர்க்கு (அளித்தற்‌ பொருட்டு) இனிது அழுது அடுவாரும்‌—இனிய உணவு சமைப்போரும்‌.

--------------------------------------------------------------

அன்ன மெல்‌ நடையாரும்‌

        மழு விடை அனையாரும்‌

கன்னி நல்‌ நகர்‌ வாழை

        கமுகொடு நடுவாரும்‌

பன்னரு நிரை முத்தம்‌

        பரியன தெரிவாரும்‌

பொன்‌ அணி அணிவாரும்‌

        மணி அணி புனைவாரும்‌

அன்னம்‌ போன்ற நடை கொண்ட இளம்‌ பெண்களும்‌; காளை போன்ற இளம்‌ பிள்ளைகளும்‌, வாழைகமுகு இவற்றைக்‌ கொண்டு வந்து அவற்றிற்குரிய இடங்களில்‌ நட்டார்கள்‌; பருமனான முத்து ஆரங்களைத்‌ தெரிந்து எடுத்து அணிந்து கொண்டார்கள்‌; பொன்‌ ஆபரணங்களாலும்‌, இரத்தின ஆபரணங்களாலும்‌ தங்களை அலங்கரித்துக்‌ கொண்டார்கள்‌.

கன்னி நல்‌ நகர்‌—இளமை நலம்‌ மிக்க அந்த நகரத்திலே; அன்னம்‌ மெல்‌ நடையாரும்‌—அன்னம்‌ போன்ற மெல்‌ நடையுடைய இளம்‌ பெண்களும்‌; மழவிடை அனை யாரும்‌—இளங்காளைகள்‌ போன்ற இளைஞர்களும்‌; வாழை—வாழை மரங்களை; கமுகொடு – பாக்கு மரங்களோடு—கொண்டு வந்து நடுபவராயிருத்தனர்‌; பன்ன அரு–விலை மதிக்க முடியாத; நிரை முத்தம்‌—வரிசையான முத்து வடங்சளிலே; பரியன தெரிவாரும்‌—பருமனானவற்றை (அணிந்து கொள்ளம்‌ பொருட்டு) தெரிந்து எடுப்பவராயிருந்தனர்‌; பொன்‌ ஆணி அணிவாரும்‌. பொன்னாலாகிய அணிகலன்களால்‌ தங்களை அலங்கரித்துக்‌ கொள்பவராயிருந்தனர்‌; மணி அணி புனைவாரும்‌–மற்றும்‌ சிலர்‌ இரத்தின ஆபரணங்கள்‌ அணிந்து கொள்பவராய்‌ இருந்தனர்‌.

---------------------------------------------------------------

சந்தனம்‌ அகில்‌ நாறும்‌

      சாந்தொடு தெரு எங்கும்‌

சிந்தினர்‌ திரிவாரும்‌

      செழுமலர்‌ சொரிவாரும்‌

இந்திர தனு நாணும்‌

      எரிமணி நிறைமாடத்து

அந்தமில்‌ விலையாரக்‌

      கோவைகள்‌ அணிவாரும்‌

வாசனை மிக்க சந்தனக்‌ குழம்பு அகில்‌ குழம்பு இவற்றையெல்லாம்‌ தெரு வெங்கும்‌ தெளித்துக்‌ கொண்டு திரிந்தார்கள்‌. மலர்களைக்‌ கொண்டு வந்து குவித்தார்கள்‌. வானவில்லைத்‌ தோற்கடிக்கும்‌ வகையில்‌ பல நிறங்‌ கொண்ட மணிகளால்‌ தங்கள்‌ மாளிகைகளின்‌ மேல்‌ மாடங்களை அணி செய்தார்கள்‌.

நாறும்‌—நறுமணம்‌ வீசும்‌; சந்தனம்‌—சந்தனக்‌ குழம்பை; அகில்‌ சாந்தொடு—அகில்‌ கட்டை தேய்த்த குழம்போடு; தெரு எங்கும்‌—தெருக்களில்‌ எங்கும்‌, சிந்தினர்‌ திரிவாரும்‌—தெளித்துக்‌ கொண்டு செல்பவர்களும்‌; செழுமலர்‌—சிறந்த புதிய மலர்களை; சொரிவாரும்‌—கொண்டு வந்து அங்காங்கே குவிப்பாரும்‌; இந்திர தனி—வானவில்‌; நாணும்‌—வெட்கங்‌கொள்ளத்தக்க; எரிமணி—ஒளிவீசும்‌ பல நிற மணிகள்‌ பதித்த; திறை மாடத்து—வரிசையான மேல்‌ மாடங்களிலே; அந்தம்‌ இல்‌ விலை—அளவிட முடியாத மதிப்புடைய; ஆரம்‌ கோவைகள்‌; அணிவாரும்‌—முத்து மாலைக்‌ கொத்துக்களைத்‌ தொங்க விடுவாரும்.

----------------------------------------------------------------

ஆர்த்தன பேரிகள்

        ஆர்த்தன. சங்கம்

ஆர்த்தன நான்மறை

        ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை

        ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம்

        ஆர்த்தன அணடம்

முரசுகள் ஒலித்தன; சங்குகள் முழங்கின; மறைகள் எங்கும் முழங்கின; தேவர்கள் ஆரவாரம் செய்தார்கள்; பல் கலைகளும் ஒலித்தன; பல்லாண்டு முழங்கியது; வண்டுகள் ஒலித்தன; அண்டங்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன.

பேரிகள் ஆர்த்தன— மங்கல முரசங்கள் எங்கும் அதிர்ந்தன; சங்கம் ஆர்த்தன—சங்குகள் முழங்கின; நான் மறை ஆர்த்தன வேத கோஷங்கள் எங்கும் நிரம்பின. வானோர் ஆர்த்தன—தேவர்கள் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தார்கள்; பல்கலை ஆர்த்தன – பல்கலைகளின் ஆரவாரமும் ஒலித்தது; பல்லாண்டு ஆர்த்தன – பல்லாண்டு பல்லாண்டு என்று வாழ்த்தொலி வான முட்டியது; வண்டு இனம் – வண்டுக் கூட்டம்; ஆர்த்தன—ரீங்காரம் செய்து ஒலித்தன ஆர்த்தன அண்டம்—அண்டங்கள் எல்லாம் மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தன.

இராமனுக்கும் சீதைக்கும் திருமணம் நிகழ்ந்த அதே வேளையில் இராமனுடைய சகோதரர்களுக்கும் அங்கேயே திருமணம் நடைபெற்றது.

சனகனின் மகளாகிய ஊர்மிளையை இலட்சுமணன் திருமணம் செய்து கொண்டான். சனகனின் சகோதரன் ருசத்துவன் எனும் பெயர் கொண்டவன். அவனுடைய பெண்கள் இருவர். அந்த இருவரையும் பரத சத்துருக்கினருக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

ஆக பங்குனி உத்திர நன்னாளிலே, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கினன் ஆகியோர் நால்வருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு வந்திருந்தவர்களுக் கெல்லாம் ஏராளமான தான தருமங்கள் செய்தான் தசரதன்.

நான் வந்த வேலை முடிந்தது. செல்கிறேன்” என்று கூறினார் விசுவாமித்திரர். விடை பெற்றார். இமய மலைக்குச் சென்று விட்டார்.

அயோத்திக்குப் புறப்பட்டான் தசரத மன்னன்.

क रा जा रा म  एय़े अरर एस  16726

Rajaram Krishnamurthy

unread,
12:51 AM (5 hours ago) 12:51 AM
to Chittanandam V R, YM, Dr Sundar, Ravi mahajan, Venkat Giri, SRIRAMAJAYAM, Mani APS, Rangarajan T.N.C., Srinivasan Sridharan, Mathangi K. Kumar, Venkat Raman, Rama, thatha patty, Kerala Iyer, Societyforservingseniors, Sanathana group
THANK U VENKAT YOUR OE VERSE GAVE ME 4 ARTICLES I WOULD LIKE TO ADD HERE TANKS KR IRS  WHY ALL PEOPLE IN ALL GROUPS REMAIN SILENT PATTING A SMALL NUMBERS EACH OTHER WITHOUT HIGHLIGHTING OR CRITICISING OR EXPLAINING FURTHER OR APPRECIATING ON AY DAY? AGE IS A NUMBER CORRECT SINCE ITS AGE MUST BE 1 OR 2 YRS OLD  K RAJARAM IRS 16726
Reply all
Reply to author
Forward
0 new messages