Vaishnavism and tamil part 3

3 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Jun 19, 2024, 5:15:56 AM (11 days ago) Jun 19
to
*வைணவமும் தமிழும் - 3*

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காண்போம்.



(ஈ) *அகநானூறு :*

 (i) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர, அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.


இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர். 

திரிகடுகம் (கடவுள் வாழ்த்து) சிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும் (209) திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் (2.30:3) அப்பர் தேவாரத்திலும்(6,310) வருகின்றன. 

ஆழ்வார் பெருமக்களும் இச்செய்தியைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுவர்.[19]

(ii) அகம் -70 இல்,


வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த
வல்வீ லாலம்போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே
என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி : 

இராமன், தானும் மற்ற வானர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது. 

இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.

(iii) அகம் -220இல் வரும் வரலாறு : 

பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது. பரசுராமன் திருமாலின் பத்து அவதார மூர்த்திகளில் ஒருவன்.

(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது. பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில், 

“இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும் இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது” என வருதலான் அறியப்படும்.

(2) *புறநானூறு :* 

புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம் 

(i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[20] இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை. 

இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன. அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை; அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன. அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான். 

இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.


(ஊ)  *நற்றிணை :*

இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்) எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்) அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம். 

இங்ஙனம் தமிழ் முன்னோர் கண்ட கருத்துகள் பின்னர் ஆழ்வார்களின் கருத்துகளாக மலர்ந்தன என்று கருதுதல் பொருத்தமாகும். 

எடுத்துக் காட்டாக திருமங்கையாழ்வாரின்,
'பவ்வநீர் உடையாடை ஆகச் சுற்றி
பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்' (6:6:3)
என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம்.

இவ் விரண்டிலும் வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர - சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

(எ) *பதிற்றுப்பத்து :*

பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் (நான்காம் பத்து-1) ஒரு குறிப்பு காணப்படுகின்றது. 

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய இப்பாடற் பகுதியில் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாவின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப் பெறுகின்றது. 

திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது. கோயிலில் தொங்கும் மணியை இயக்கிக் கல்லெனும் ஒசையை உண்டாக்குவர்; 

உண்ணா நோன்பு மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி மார்பில் புதிதாகத் தொடுக்கப் பெற்ற திருத்துழாய் மாலையையும், காண்பவர் கண்கூசும் ஒளி திகழ் திருவாழியையும் உடைய செல்வனான திருமாலை வணங்கி வாழ்த்தி நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் தத்தம் இருப்பிடம் திரும்பிச் சேர்வர். 

இப்பாடலில் செல்வன் என்பது திருவனந்தபுரத்துத் திருமாலை என்று கூறுவர் பழைய உரைகாரர்.
Reply all
Reply to author
Forward
0 new messages