Krishna eating sand

4 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Aug 28, 2025, 7:08:45 AM (10 days ago) Aug 28
to
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  நங்கநல்லூர்  J K SIVAN 
20  ''  உடனே  வாயைத் திற டா...''
கண்ணன்  என்றால்  உடனே  நாம் நினைக்கும் ஸ்தலங்கள், கோகுலம், பிருந்தாவனம், மதுரா, பர்ஸானா ,துவாரகை. இதில் கோகுலம்  அவன் சிறு குழந்தையாக  இருந்தபோது புரிந்த லீலைகள்  நிறைந்த க்ஷேத்ரம்.   கோகுலத்தில்  நான் கண்டு அதிசயித்த  ஒரு க்ஷேத்ரம்  பிரம்மாண்ட  காட். இங்கே தான் அகில பிரபஞ்சத்தையும் ப்ரம்மாண்டத்தையும்,  தனது வாயில் யசோதைக்கு கிருஷ்ணன் காட்டிய ஸ்தலம். எனவே  பிரம்மாண்ட காட்  என்று இதற்கு பெயர்.  யமுனைக்கரையில் உள்ளது.  மதுராவிலிருந்து 15 கி.மீ.  பஸ்ஸில் சென்றோம்.  பஸ்ஸிலிருந்து  பிரம்மாண்டமான யமுனை, அதன் ஒரு கரையில் படித்துறை தெரிந்தது.  இது நந்தபவன் எனும் கிருஷ்ணன் வீட்டிலிருந்து  அருகாமையில் உள்ளது. இங்கே  கிருஷ்ணன்  தோழர்களுடன் விளையாடினான். அங்கே  ஆல , அரச, நாவல்பழ  மரங்கள் அநேகம் உண்டு. இங்கே  பிரம்மாண்ட பிஹாரி ஆலயம் உள்ளது.ஒருநாள் நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது.  நம் ஒவ்வொருவர் வீட்டிலும்   பொடிசுகள் இருக்கிறதே.  பெண்ணோ  ஆணோ. அடடா  ஒன்றைரை  ரெண்டு வயசான  அதுகள்  பண்ணுகிற   விஷமம்  தாங்க முடியாது.  அதே சமயம்  அவற்றின் விஷமம்  பார்ப்பதற்கு  ஆனந்தமாகவும் இருக்கும்.  அவர்கள் இல்லாமல் வீடு  சோபை  இழந்துவிடும்.   பெரிசுகளால்  அவற்றோடு  ஓடி  ஆடி  சமாளிக்க முடியா விட்டாலும்  தூக்கிக் கொஞ்சுவதில் எந்த குறைவும் இருக்காது.  துறுதுறுவென்று இருக்கும்  அந்த சிறு குழந்தைகளே இப்படி என்றால்  கிருஷ்ணனின்  விஷமம், அதுவும் அவன் நண்பர்களோடு  மொத்தமாக  அவர்கள் ஒன்று சேர்ந்தால்  எப்படி இருக்கும் ??   கோகுலத்தில்  யசோதாவுக்கு  ஒவ்வொரு வினாடியும் ஏதாவது ஒரு  கிருஷ்ண விஷம சமாச்சாரம் தான். அவளால்  அந்தப்  பொடியனின்  விஷமம்  தாங்கமுடியவில்லை.  கொஞ்சம்  பெரிய  பையன்கள்  விளையாடும்போது  தானும் அவர்களோடு  இணைவான். அவர்களோ முதலில்  அவனை  லட்சியம் செய்ய வில்லை.  போகப் போக  மூர்த்தி சிறிதானாலும்  விஷம  கீர்த்தி   பெரியதாக  தென்படவே  இந்தப் பயலை  கூட்டு  சேர்த்து கொண்டார்கள். அவன் அம்மாவுக்கும்  இது சௌகர்யமாக இருந்ததே.   வெளியே  சென்றுவிடுவானே,  கொஞ்ச நேரமாகவாவது  அவன் விஷமம்  வீட்டில் இருக்காதே. கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாமே என்று. 
ஒருநாள்   நந்த மஹாராஜா வீட்டிலிருந்து  அருகே யமுனைக்கரையில்  இருந்த  எத்தனையோ மரங்களில்  ஒரு  நாவல் பழ மரம்  அந்த விஷமக்கார  சிறுவர்களிடம்   மாட்டிக்  கொண்டது.   மரத்தில்  நிறைய  பழங்களை  பார்த்து விட்டார்கள்.  பெரிய  பையன்கள்  மரம் ஏறினார்கள்.   சிறுவன் கண்ணன்  மரத்தில்  ஏற  முயற்சி செய்தபோது. அந்த விஷமக்கார சிறுவர்களின் தலைவன்   ஒரு கட்டளை இட்டான்.
 "டேய் ,கிருஷ்ணா,  நீ  சின்னவன்,  மரத்தில்  ஏறாதே.  நாங்கள்  மேலே  ஏறி  கிளைகளை உலுக்கும் போது கீழே  பழங்கள் நிறைய  விழும் .  நீ  அந்த பழங்களை எல்லாம்  பொருக்கி சேகரி. பிறகு  நாங்கள்  இறங்கி வந்தவுடன் அனைவரும்  பங்கு போட்டு  திங்கலாம்."
"சரி"  என்று தலையாட்டிவிட்டு  பழங்கள்  மேலேயிருந்து கீழே மண்ணில்  உதிர்ந்ததும்  ஒவ்வொன்றாக  அப்படியே  மண்ணுடன்    சேர்த்து கிருஷ்ணன்  தின்று கொண்டிருந்ததை ஒரு  பயல்  மரத்திலிருந்து  பார்த்து விட்டான். 
 "டேய்,  எல்லாரும்   அங்கே  கீழே  நடக்கிற அக்ரமத்தை பாருங்கடா.  முக்காவாசி  பழத்தை  அந்த  கிருஷ்ணன்  எடுத்து  வேகமாக  தின்று கொண்டிருக்கிறான். ''
தலைவனுக்கு கோபம் வந்தது.  
"இந்த கிருஷ்ணன் ரொம்ப  மோசம். எவ்வளவு  சாமர்த்தியம்  பார்த்தாயா. எப்போ  இவன்  நம்பளை ஏமாத்தினானோ  அவனை பத்தி அவன்  மண்ணு திங்கறான் என்று அவ அம்மாவிடம்  போய் சொல்லிடறேன். அவள்  அவனுக்கு   நல்லா  முதுகிலே டின் கட்டிடுவா" என்று  தனது  திட்டத்தை  சொன்னான் .

மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்ததும்  மீதி பழங்களை எடுத்து தின்றார்கள்.   தலைவன் ஓடிச்சென்று  கிருஷ்ணன் வீட்டில் நுழைந்து  அவன் தாயிடம்  மரத்தடியில் நடந்ததை சொன்னான். 
யசோதைக்கு  கோபம் வந்ததை விட   ''ஐயோ, இந்த சின்ன குழந்தை கிருஷ்ணன் மண்ணை தின்றுவிட்டானே,  உடம்பில்போய் அது என்ன கோளாறு செய்யுமோ.  அவனுக்கு ஏதாவது நோய் வந்தால் என்னால்  தாங்க முடியாதே என்ற கவலையும் வேறு சேர்ந்துவிட்டது.  வேகமாக  அவனோடு  நாவல் மரத்தடிக்கு வந்தாள் .
மரத்தடியில்  பையன்கள்  கூட்டம்.  நடுவே  தரையில்  கிருஷ்ணன்   நடு  நாயகமாக   அமர்ந்திருந்தான்.  வாய்  நிறைய  பழங்கள்.   ஏற்கனவே கருப்பு பையன்.   உதடு  கன்னம், தாடையில் எல்லாம்  கருநீல  நாகப்பழ   கலர்  மண்ணோடு கலந்து  சாறு அப்பி கிடந்தது.
" கிருஷ்ணா, உன்னோடு  ஒரு நாள்  கூட  நிம்மதி கிடையாது எனக்கு  . எப்பவும்  ஏதாவது  ஏடாகூடம் பண்ணுகிறாய். .  வாய்  நிறைய  இவ்வளவு  மண்ணு  தின்றால்   உடம்பு என்னத்துக்கு  ஆகும்.  திற  வாயை'' ''அம்மா  நான் மண்ணு  தின்னவில்லை '  என்று  தலையாட்டினான்.  
பேசவில்லை. பேசமுடியாதவாறு  வாய் நிறைய  நாகப்பழம்.

'' அடம்  பிடித்தால்  பிச்சுடுவேன்  பிச்சு.  மரியாதையா  வாயை த் திற.''  அவன் முகத்தருகே இரு கைகளை  அவன் கன்னங்களில் வைத்து   உட்கார்ந்து கொண்டாள்  யசோதை. '''திறடா  வாயை . சீக்கிரம் ''
 கண்கள் மலங்க மலங்க நீர் சேர,  அவளைப்  பார்த்தன.  தலையை  மீண்டும்  முடியாது என்று அசைத்தான். 
'' பிடிவாதமா  பண்றே.  இப்ப பார்''
 யசோதா  கிருஷ்ணன்  வாயை  கையால்  அழுத்தி திறந்தாள்.  வாயை  நன்றாக  இறுக்கமாக மூடிக்  கொண்டான். எதிர்ப்பு தெரிவித்தான்.  பலமாக  அவன் உதடுகளை  இரு கைகளாலும் பிரித்தாள் .  வாய் மெதுவாக திறந்தது.  உள்ளே  எவ்வளவு  மண் இருக்கிறது  என்று கவலையோடு குனிந்து  பார்த்தாள் யசோதை. . 

மண்ணைத்தேடிய  அவளுக்கு  மார்பு  படபட என்று  அடித்துக்கொள்ள,  கண்கள் இருள, கை கால்  நடுங்க,  தலை சுற்றியது. கிருஷ்ணன்  வாயில்  மண் அல்ல மண்ணுலகம் விண்ணுலகம் இந்த  பிரபஞ்சமே தெரிந்தது.  அனைத்தும்  சுழன்றது.  இதோ  தெரிகிறது,  இந்த ஊர்  யமுனை,  எங்கோ இருக்கும்  கங்கை,  ஹிமாசலம்,  இதோ  ஆயர்பாடி  கூட  தெரிகிறதே  அவள்  வீடு, நந்தபவனம், யமுனை நதிக்கரை,  அந்த மரம், அதன் கீழே  அவள்,  எதிரே  தரையில் உட்கார்ந்து கொண்டு  கிருஷ்ணன், திறந்த  வாய்,  அந்த  திறந்த வாய்க்குள்  மீண்டும்  பிரபஞ்சம்,  திரும்ப திரும்ப  அளவில்லாத  பிரபஞ்சம்.. எல்லாம்  ஏதோ ஒரு வேகத்தில்  சுழல்கிறதே. மேலே சூரியன்  வானம் மேக மண்டலங்கள் எல்லாமே  சுற்றுகிறதே .." 
 யசோதை  கையை  அவன் வாயில் இருந்து  எடுப்பதற்குள்  அவளே  தரையில்  மயங்கி விழுந்தாள்.  அவன்  மீண்டும்வாயை மூடிக் கொண்டு சிரித்தான்.  சற்று நேரத்தில்  தெளிவு பெற்ற  யசோதா   தானே  சுதாரித்து கொண்டு எழுந்தாள்.    எதிரே  சாதுவாக உட்கார்ந்திருக்கும்  பூனை போல  அசையாமல் இருந்த  கிருஷ்ணன் மேல் பார்வை போயிற்று.  சிறு குழந்தை, ஆசைமகன்  அவளைப்  பார்த்து சிரித்தான்.  
''என்  கிருஷ்ணா, நீ  யார்...? யசோதாவின்  வாய்  மெதுவாக  நடுக்கத்தோடு  தழுதழுத்தது.  பேச்சு தடுமாறியது.  கைகள் அவனை  அணைத்தது...  கண்களில்  வழிந்தது  ஆனந்தக் கண்ணீராகத்தான் இருக்கவேண்டும். நிச்சயம் இவன் தெய்வம்  என்று வாய் அவளுக் குள் முணுமுணுத்தது.   ஹரே கிருஷ்ணா...நாமும் வணங்குவோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages