19th day after mahabharata war

9 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Sep 16, 2025, 1:47:35 AM (10 days ago) Sep 16
to
படித்ததில் பிடித்தது!

பாரதப் போர் முடிந்த 19-ஆம் நாள்!
அந்தக் கால வழக்கப்படி, போரில் வென்ற மஹாரதர்களுக்கும், மன்னர்களுக்கும் மாலை- மரியாதை செய்யும் விழா ஒன்று நடக்கும்.

போரில் பங்கேற்ற தேர்கள் வரிசையாக நிறுத்தப்படும். 

தேரோட்டிகள் கீழே இறங்கி, மண்டியிட்டு நிற்பார்கள்.

மன்னன் அல்லது மஹாரதர்கள் கீழே இறங்கியதும், தேர்ப்பாகன் மன்னனை வணங்கி, மாலையிட்டு, வெற்றி கோஷம் முழங்குவான். 

அதன்பிறகு, போரில் வெற்றி தேடித்தந்த தேர்ப்பாகனுக்கு மன்னன் அல்லது மஹாரதர்கள் பொன்னும் பொருளும் சன்மானமும் தந்து கௌரவிப்பார்கள்.

குருக்ஷேத்திரப் போர் வெற்றிகரமாக முடிந்தபின், வெற்றி கண்ட பாண்டவ சகோதரர்களுக்காக இந்த விழா ஏற்பாடாகி இருந்தது.

தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐவரது ரதங்களும் வரிசையாக நின்றன.

மரியாதை விழாச் சடங்குகள் ஆரம்பமாயின.

தர்மனுடைய தேரின் முறை முடிந்தபின், பீமனது சாரதி அவனை வணங்கி வாழ்த்தினான்.

பரிசாக விலை உயர்ந்த ரத்தினமாலையை பாகனுக்கு அணிவித்து கௌரவித்தான் பீமன். 

மேலும், பூமியும் பொன்னும் பொருளும் வழங்கினான்.

வெற்றி கோஷங்கள் வானைப் பிளந்தன.

அடுத்தது, அர்ஜுனன் ரதம். சாரதியோ பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

'யாருக்கும் கிட்டாத மாபெரும் பேறு தனக்குக் கிடைக்கப்போகிறது. 

பகவான் கிருஷ்ணனே தன்னை வணங்கிப் பாராட்டப் போகிறான்’ என்று எண்ணி, ஒரு கணம் தன்னை மறந்த நிலையில் இறுமாப்போடு, அந்த அற்புத தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் அர்ஜுனன்.

 ஆனால், கண்ணன் தேரைவிட்டு இறங்கவில்லை.

அர்ஜுனன் திகைத்தான்.

'பெருமையோ சிறுமையோ பாராது, கடமையை நிறைவேற்ற வேண்டும்’ என்று கீதையில் தனக்கு உபதேசித்த கண்ணன், தேர்ப் பாகனுக்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்க வேண்டும் என்று நினைத்தான் அர்ஜுனன்.

அப்போது பகவான் கிருஷ்ணன், அர்ஜுனனின் அறியாமையை எண்ணி நகைத்தார்.

"அர்ஜுனா! இந்தத் தேர் மட்டும் இந்தச் சடங்குக்கு விதிவிலக்கு. 

முதலில் நீ இறங்கு!'' என்று கட்டளையிட்டார்.

கண்ணனின் வார்த்தையை மீறி அறியாத அர்ஜுனன், அக்கணமே தேரில் இருந்து கீழே இறங்கினான்.

அதேநேரம், 'தன் சகோதரர்களுக்குக் கிடைத்த கௌரவம் தனக்குக் கிடைக்கவில்லையே’ என ஒரு கணம் ஏங்கினான்.

"கர்மயோகம்’ என்ற பகுதியாகக் கடமையைப் பற்றி அத்தனை தத்துவங்களைச் சொன்ன கண்ணன், ஒரு தேர்ப்பாகனாக பணியாற்றுவதற்குரிய கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறான்?

இதனால் மஹாரதனான எனக்கு ஏற்படும் அவமானத்தை ஏன் அவன் எண்ணிப் பார்க்கவில்லை?

நான் கண்ணனை என்னுடைய தேர்ப்பாகனாக ஏற்றுக்கொண்டதால்தானே, எல்லோர் முன்னிலையிலும் எனக்கு இந்தச் சிறுமை ஏற்பட்டுள்ளது?' என்று எண்ணி, மனம் குமுறினான் அர்ஜுனன்.

அர்ஜுனனின் மனோநிலையைத் தன் ஞானத்தால் அறிந்தார் ஸ்ரீகண்ணன்.

அடுத்த விநாடியே தேரிலிருந்து கீழே இறங்கினார்.

அதே விநாடியில், தேர்க் கொடியில் இருந்த ஆஞ்சநேயரும் விலகி மறைந்தார்.

கண்ணன் தேரைவிட்டு இறங்கிய மறுவிநாடியே அர்ஜுனனின் தேர் குபீரென்று தீப்பிடித்து, அக்னி ஜுவாலையுடன் எரிய ஆரம்பித்தது.

எல்லோரும் திகிலோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தனர்.

யாருக்கும் எதுவும் புரியவில்லை.

''அர்ஜுனா! இந்த பாரத யுத்தத்தில் உன் எதிரிகள் அனைவரின் தாக்குதல்களும் உன் ரதத்தின் மீதுதான் குறிவைத்து நிகழ்த்தப்பட்டன.

அவர்கள் போரில் எய்த அஸ்திரங்கள், ஏவிவிட்ட தீய மந்திரங்கள், அனுப்பிய தீய சக்திகள் அத்தனையையும் தடுத்து நிறுத்தி, யுத்தம் முடியும்வரை இந்தத் தேருக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

நான் சாரதியாக அமர்ந்துகொண்டிருந்ததால்தான், இந்தத் தீய சக்திகள் இதுவரை செயலற்றிருந்தன.

படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்துக்கும் ஆரம்பமும் முடிவும் உண்டு.

இந்தத் தேரின் முடிவு ஏற்படும் தருணம் வந்ததை உணர்ந்தேன்.

நான் முதலில் இறங்கினால் இந்தத் தீய சக்திகள் செயல்படத் தொடங்கிவிடும்.

அந்த விநாடியே தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகும் என்பதையும் அறிந்தேன்.

இப்போது புரிகிறதா, நான் முதலில் இறங்கியிருந்தால், நீ இந்தத் தீயில் சிக்கியிருப்பாய்.

இப்போதும் உன்னைக் காப்பாற்றவே இந்தத் தேரை விதிவிலக்காக்கி, உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்!

தேர்ப் பாகனாகப் பணிபுரிந்த நான் உன்னை வணங்கி, வாழ்த்தி, நீ தரும் சன்மானத்தைப் பெறத் தயங்குவதாக நீ நினைத்தாய்.

என் எல்லாச் செயல்களுக்கும் ஒரு காரணம்- காரியம் உண்டு என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நீ அறிய வாய்ப்பளித்து இருக்கிறேன். 

இருந்தாலும், 

உன்னுடைய சுயகௌரவத்தால் உன் சிந்தனை சற்று நேரம் கலங்கி இருந்தது.

அது தவறு.

இதோ... 
உன்னை வணங்க நான் சித்தமாயிருக்கிறேன்'' என்று, 
நீண்ட விளக்கம் தந்தார் ஸ்ரீகண்ணன்.

அவர் கூறிய கடைசி வார்த்தைகள் அர்ஜுனன் காதில் விழவில்லை. காரணம்

அவர் கால்களில் அர்ஜுனன் வேரற்ற மரம் போல விழுந்துகிடந்தான்.

வாழ்க்கை எனும் ரதத்தினில், 
கடவுளை சரணடைந்தால், 
இறுதி வரை துன்பத்தையும் தடைகளையும் களைந்து, பிறவிப்பிணியினை கடந்தேற, 
சாரதி போல் நம்மை நடத்தி செல்வார். 

எனவே அவனை கேள்வியேயில்லாமல் சரணடைவோம்.
 *மனதை கவர்ந்த பதிவு*

👉சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

👉பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

👉தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

👉பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

👉இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*👉பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

👉செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

👉வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

👉பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*👉இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*🙇ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*🙏மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!* ********ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்********
Reply all
Reply to author
Forward
0 new messages