Valmiki Ramayana part 52 in Tamil

51 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Dec 6, 2021, 7:51:49 AM12/6/21
to
🌹 ஆதிகாவியம் இராமாயணம் 🌹
🌹 வால்மீகி ராமாயணம் 🌹 - சோ - பாகம்-52.
🍁 அத்தியாயம்-23.
    🍂 பரதன் கண்ட கனவு 🍂
🌿 விடியற்காலையில் மன்னரை எழுப்புவதற்காக, வாத்தியங்கள் இசைக்கப் பட்டன. வந்திகள் பாடினார்கள். புரோகிதர்கள் மந்திரங்களைக் கூறினார்கள். மன்னரின் உத்திரவுகளை நிறைவேற்றுவதற்காக பணியாட்கள் தயாராக நின்றனர். இவற்றைத் தொடர்ந்து வழக்கம்போல மன்னர் வெளியே வராததைக் கண்டு, அரண்மனைப் பெண்மணிகள் அவர் அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சித்தார்கள். மன்னரின் நாடித் துடிப்பு நின்று விட்டிருந்தது என்பதையும், இதயம் ஓய்ந்து விட்டது என்பதையும் அப்போது அவர்கள் உணர்ந்தார்கள். மன்னர் மரணம் அடைந்து விட்டார் என்பதை அறிந்த அவர்கள் ஓ” வென்று கதறி ஓலமிட்டார்கள். முந்தைய தினம் மன்னர் உறங்கிய போது, தாங்களும் உறங்கி விட்ட கௌஸல்யையும், ஸுமித்திரையும் தூக்கம் கலைந்து எழுந்து, நடந்ததை அறிந்து கதறி அழுதார்கள்.
🍊 துக்கத்திலேயே மன்னர் உயிர் பிரிந்தது என்றசெய்தி அரண்மனை முழுவதும் பரவியது. கைகேயி உட்பட எல்லாப் பெண்களும் ஓலமிட்டு அழுதனர். அந்தப் புறம் அழுதது. அரண்மனை அழுதது. அனைவரும் அழுதார்கள்.
 🌿 ( தசரதரின் உயிர் பிரியும் கட்டமும் கூட கம்ப ராமாயணத்தில், வால்மீகி ராமாயணத்திலிருந்து கொஞ்சம் மாறுபட்டு காணப் படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் நாம் இந்த அத்தியாயத்தில் பார்த்த மாதிரி, தான் சாபம் பெற்ற வரலாற்றையெல்லாம் விவரித்து விட்டு, நள்ளிரவில் தசரத மன்னர் உறங்கியபோது அவருடைய உயிர் பிரிகிறது. ஆனால் கம்ப ராமாயணத்தில் இந்தச் சாபம் பெற்ற வரலாறு ராமர் காட்டுக்குப்போவதற்கு முன்பாகவே கூறப் படுவது மட்டுமல்ல, ஸுமந்திரர் காட்டிலிருந்து திரும்பி வந்து, தன்னுடன் ராமன் நகருக்குத் திரும்பவில்லை என்ற செய்தியைக் கூறியவுடனேயே தசதரரின் உயிர் பிரிந்து விடுகிறது. ராமர் வரவில்லை” என்ற செய்தி கேட்டவுடனேயே தசரதரின் உயிர் பிரிந்தது என்று காட்டுவதற்காகவே கம்பர் இந்த நிகழ்ச்சிகளை இப்படி மாற்றி அமைத்திருக்கிறார்” என்ற கம்ப ராமாயணத்தை நன்கு ஆராய்ந்துள்ள பண்டிதர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள்.
🔥 காட்டில் இருந்து திரும்பிய ஸுமந்திரர், முதலில் வசிஷ்டரிடம் விஷயத்தைத் தெரிவிக்கிறார். அப்பொழுதே வசிஷ்டர் இதன் பின் மன்னர் வாழ மாட்டார் என்று கூறுகிறார். இதையடுத்து ஸுமந்திரரும், வசிஷ்டரும் தசரத மன்னரிடம் செல்கிறார்கள். அவர், ராமன் திரும்பி வந்தானா” என்று வசிஷ்டரின் கேட்கிறார். அந்தக் காட்சியைக் கம்பர் இவ்வாறு வர்ணிக்கிறார். ராமன் வரவில்லை என்று சொல்ல முடியாதவராக வசிஷ்ட முனிவர், மனம் வருந்திப்பேசாமல் இருந்தார். தவம் என்ற பலத்தைப் பெற்ற வசிஷ்டரின் முகமே, ராமன் திரும்பி வரவில்லை என்கிற சொல்லை தசரதருக்குக் கூறி விட்டது. தசரத மன்னர் சோர்ந்து போனார். துயர் கொண்ட முனிவர் வசிஷ்டர், இந்தத் துன்பத்தைக் காணும் சக்தி எனக்கில்லை என்று சொல்லி, அங்கிருந்து அகன்று போகிறார்.
🔥 இப்படி வசிஷ்டர் அங்கிருந்து நகர்ந்து போன பிறகு, தசரதர் ஸுமந்திரரிடம் ராமனைப் பற்றி விசாரிக்கிறார். நாயகனாகிய தசரதர் பின்னர் தன்னுடைய தேரோட்டியாகிய ஸுமந்திரரைப் பார்த்து, ராமன் வெகு தூரத்தில் உள்ளானா, அல்லது அருகில் உள்ளானா என்று கேட்க ஸுமந்திரர் ராமனும் , லக்ஷ்மணனும், மிதிலையின் செல்வமாகிய ஸீதையும் மூங்கில்கள் உயர்ந்து வளர்ந்திருந்த வனத்துக்குச் சென்று விட்டார்கள்” என்று கூறிய போதே, தசரதர் உயிர் நீத்தார்.
🔥 துன்பக் கடலில் வீழ்ந்து விட்ட கௌஸல்யை, தசரதரரின் தலையை கைகளில் பிடித்துக் கொண்டு கதறினாள். பின்னர் கைகேயியைப் பார்த்து, தீயவளே! கெட்ட எண்ணம் கொண்ட வளே! இனி நீ நிம்மதியாக ஆட்சியை அனுபவிக்கலாம். உனக்குப் போட்டியாக வரக் கூடியவர்கள் இனி எவரும் இல்லை. ராமன் காட்டுக்குச் சென்று விட்டான். என் கணவரோ மேல் உலகத்திற்கே சென்று விட்டார். மந்தரையின் சொல்கேட்டு, ரகு குலத்தையே நீ அழித்து விட்டாய். மன்னரின் உடலுக்குத் தீ வைக்கப் படும் பொழுது, நான் அவரோடு உடன் கட்டை ஏறுவேன்” என்று கூறினாள்.
 ⚡ உயிரற்ற உடலைப் பாதுகாக்கக் கூடிய எண்ணெய் நிரம்பிய தொட்டியில், தசரத மன்னரின் உடல் வைக்கப் பட்டது. அந்த நிலையில் கடைப் பிடிக்கப் பட வேண்டிய வழி முறைகள், வசிஷ்டரும், குடும்ப புரோகிதர்களும் எடுத்துச் சொன்னவாறு செய்யப் பட்டன. மன்னரின் மகன்களில் ஒருவர் கூட இல்லாமல் இறுதிச் சடங்குகள் செய்ய முடியாது என்பதால், அவருடைய உடல் பாதுகாக்கப் பட்ட நிலையில் வைக்கப் பட்டது.
🔥 அயோத்தி நகரம் கணவனை இழந்த பெண்போல் ஆகியது.
🔥 பொழுது விடிந்தவுடன், உடனடியாக நிறைவேற்றப் பட வேண்டிய அரசு காரியங்களைக் கவனித்துக் கொண்டிருந்த பெரியவர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள். மார்க்கண்டேயர், மௌத்கல்யர், வாம தேவர், கச்யபர், காத்யாயனர், கௌதமர் மற்றும் புகழ் பெற்ற ஜாபாலி ஆகியோரும் அங்கே அமர்ந்திருந்தனர். அனைவரின் முகங்களும் வசிஷ்டரை நோக்கியே திரும்பி இருந்தன. அவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வசிஷ்டரிடம், அந்த நிலையில் கடைப் பிடிக்கப் பட வேண்டிய அணுகுமுறை பற்றிய தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
🌿 மன்னர் மறைந்து விட்டார். மூத்த மகனாகிய ராமனோ காட்டுக்குச் சென்று விட்டான். பெரும் சக்தி படைத்த லக்ஷ்மணனும் ராமனுடன் சென்று விட்டான். எதிரிகளை அழிக்கவலல்ல பரதனும், சத்ருக்னனும் தாய் வழிப் பாட்டன் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். தசரத மன்னரின் மகன்களில் ஒருவனுக்குஉடனடியாகப் பட்டாபிஷேகம் செய்விக்கப் பட வேண்டும். ஏனெனில் அரசன் இல்லாத ராஜ்யம் அழிந்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  
🔥 அரசன் இல்லாத நாட்டில் விவசாயம் நடக்காது.  
🔥 மகன் தந்தையின் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி இருக்க மாட்டான்.  
🔥 மனைவி, கணவனின் கட்டுப் பாட்டுக்குள் அடங்கி இருக்க மாட்டாள்.  
🔥யாராலும் தங்களுடைய சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. 
🔥 பொது மக்கள் வசதிக்காக பொது இடங்களை யாரும் நிர்மாணிக்க மாட்டார்கள். 
🔥 வழக்குகள் தீர்த்து வைக்கப் பட மாட்டாது. 
🔥 பெண்கள் நல்ல நகைகள் அணிந்து நந்தவனங்களுக்குச் செல்ல முடியாது. 
🔥 வீட்டின் கதவை த் திறந்து வைத்து யாரும் உறங்க முடியாது. 
🔥 வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்காக பொருளை எடுத்துக் கொண்டு பிரயாணம் செய்ய மாட்டார்கள்.  
🔥 சேனைகள் விரோதிகளை எதிர்த்து நிற்காது 
🔥 .ஆயுதப் பயிற்சி நடக்காது-  
🔥 சாத்திர ஆராய்ச்சியும் நடக்காது.  
🔥 எந்த ஒரு மனிதனும், எந்தப் பொருளையும் தன்னுடையது என்று நினைக்க முடியாமற்போய்விடும். 
🔥 மனிதர்கள் மீன்கள்போல ஒருவரை ஒருவர் அழிப்பார்கள்.  
🔥 நாத்திகர்கள் தங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்வார்கள்.
🔥 ரதத்திற்குக் கௌரவம் கொடி, 
🔥 நெருப்பை அறிவிப்பது புகை,  
🔥 நமக்கு ஆராதம் மன்னர்,  
🌹 அரசன் இல்லாத ராஜ்யம் தண்ணீர் இல்லாத நதி, செடிகளற்ற காடு. மடியற்ற பசு. 
🌹 அரசனே மக்களுக்குத் தாய்!  
🌹அரசனே அவர்களுக்குத் தந்தை!  
🌹அரசனே அவர்களுக்கு நன்மை புரிபவன். 
🌹 அரசனே சத்தியம்.  
🌹 அரசனே தர்மம். நன்மை தீமைகளை வகுத்துப் பிரித்து, ஒழுங்கு முறையை நிலை நிறுத்தும் அரசன் இல்லாவிடில், உலகை இருள் சூழ்ந்து விடும். அந்தணர்களில் சிறந்த வசிஷ்டரே! இஷ்வாகு குலத்தில் பிறந்த ஒரு மகனுக்கு உடனடியாக பட்டாபிஷேகம் செய்து அரச பதவியில் அமர்த்துங்கள்.
 🌹 இப்படி பெரியவர்களும், ராஜ தந்திரிகளும், மந்திரிகளும் கூறிய கருத்தை வசிஷ்டர் ஏற்றார். பரதனையும், சத்ருக்னனையும் உடனடியாக அயோத்திக்கு தருவிப்பதாகக் கூறி அவர், சித்தார்த்தன், விஜயன், ஜெயந்தன்,அசோகன், நந்தனன் என்பவர்களை அழைத்து ஒரு உத்திரவு பிறப்பித்தார். தனது மாமன் வீட்டுக்குச் சென்றுள்ள பரதனையும், அவனுடன் இருக்கும் சத்ருக்னனையும் விரைந்து சென்று அழைத்து வாருங்கள். என்னுடைய கட்டளை என்று கூறி, இந்தச் செய்தியையும் பரதனுக்குத் தெரிவியுங்கள். வசிஷ்டர் உன்னுடைய நலனைப் பற்றி விசாரித்தார். மந்திரிகளும் அவ்வாறே உனது நலன் கோருகிறார்கள். சற்றும் தாமதம் செய்யாமல், நீ உடனடியாக ப் புறப் பட்டு அயோத்திக்கு வந்து சேர்வாயாக! நீ அவசரமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியம் அங்கே உன் வரவுக்காகக் காத்திருக்கிறது. பரதன் அங்கிருந்து புறப் படும் போது அவனுக்கு, அவனுடைய தந்தை இறந்து விட்ட விஷயமும், ராமன் காட்டுக்குச் சென்றுவிட்ட செய்தியும் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
🌹 வசிஷ்டரால் நியமிக்கப் பட்ட தூதர்கள் சிறப்பான குதிரைகளில் ஏறிப் புறப் பட்டனர். அவர்கள் பரதன் இருந்த ராஜக்ருஹம் என்ற நகரத்தை அடைந்த இரவில், பரதன் ஒரு கனவு கண்டான். அதை நினைத்து அவன் மனச் சங்கடத்துடன் காணப் பட்டான். நண்பர்கள் அவனுக்கு உற்சாகமூட்டுவதற்காகச் செய்த முயற்சிகள் வீணாயின. தன்னுடைய கவலைக்கான காரணத்தைப் பற்றி விசாரித்த அவர்களுக்கு,  
🌹 பரதன் தான் கண்ட கனவை விவரித்தான். தலை விரி கோலமாக, அழுக்கடைந்தவராக, எனது தந்தை தசரத மன்னர் ஒரு மலை உச்சியிலிருந்து, மாட்டுச் சாணம் நிரம்பிய ஒருகுட்டையில் விழுவதாகக் கனவு கண்டேன். அந்தக் குட்டையில் மிதந்து கொண்டு, அவர் தன்னுடைய கரங்களில் வைத்திருந்த எண்ணெயைக் குடிப்பதைப் பார்த்தேன். கடல் வறண்டு போகக் கண்டேன். சந்திரன், தரையில் விழுவதைப் பார்த்தேன். பட்டத்து யானையின் தந்தம் முறிவதைக் கண்டேன். பூமி தீப்பற்றி எரிவதைப் பார்த்தேன். உலகை இருள் சூழக் கண்டேன். அந்த நிலையில், ஒரு இரும்பு ஆசனத்தில், கறுப்பு உடை அணிந்து அமர்ந்திருந்த என் தந்தையை மஞ்சள் நிறமுடைய பல பெண்கள் கேலி செய்தார்கள். கழுதை பூட்டிய ரதத்தில் ஏறி, என் தந்தை தெற்கு நோக்கி செல்லக் கண்டேன். ஒரு ராக்ஷஸி அவரைப் பிடித்து இழுப்பதையும் பார்த்தேன்.
🌹 பரதன் மிகவும் மனம் நொந்தவனாக மேலும் பேசினான். எனக்குப் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் கனவு இரவு முடிகிற நேரத்தில் என்னால் காணப் பட்டது.ஆகையால் இதற்குப் பலன் உண்டு என்று நான் அஞ்சுகிறேன். தசரத மன்னர், ராமர், லக்ஷ்மணன் ஆகியோரில் ஒருவரோ அல்லது நானோ மரணத்தைச் சந்திக்க நேரிடலாம். கழுதை பூட்டிய வண்டியில் ஏறி ஒருவன் செல்லும் நிகழ்ச்சி கனவில் தோன்றினால், அந்த மனிதனுடைய சிதையிலிருந்து வெகு சீக்கிரம் புகை கிளம்பும். இதையெல்லாம் எண்ணித் தான் நான் உற்சாகம் இழந்திருக்கிறேன். எனது நா வறண்டு விட்டது. என்னுடைய தொண்டை உலர்ந்து விட்டது. என் மனம் ஒரு நிலையில் இல்லை. எனது ஒளி குன்றி விட்டது. என்னையே நான் வெறுக்கிறேன். அதற்கு என்ன காரணம் என்றும் புரியவில்லை. என் மனதில் இருக்கும் பயத்தை என்னால் அகற்ற முடியவில்லை.
🌹 இவ்வாறு முந்தைய இரவு தான் கண்ட கனவை, தன்னுடைய நண்பர்களிடம், பரதன் வர்ணித்துக் கொண்டிருந்த போது, வசிஷ்டரால் அனுப்பப் பட்ட தூதர்கள் அரண்மனையை வந்து அடைந்து, அந்த மன்னரிடம் உடனடியாக பரதனைக் காண வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத்தெரிவித்தனர். பரதன் தருவிக்கப் பட்டான்.
⚡ ஜயராம ரகுராம சீதாராம தசரதராம 
தொடரும்… 
ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.
Reply all
Reply to author
Forward
0 new messages