Two parents for Krishna

11 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Aug 27, 2025, 7:09:36 AM (11 days ago) Aug 27
to
பிருந்தாவனமும் நந்தகுமாரனும் -  #நங்கநல்லூர்_J_K_SIVAN 

19.  இரு பெற்றோர்கள்   

வசுதேவர் யதுகுல  மன்னன்.  போஜ மன்னன் குலத்தில் பெண்ணெடுத்து  அவருக்கும்   தேவகிக்கும் கல்யாணம் ஆன அன்றே  ஊர்வலத்தில் மனைவியின் சகோதரன் கம்சன் தானே  ஊர்வலத் தேரை ஓட்டினான்.  அப்போது தான்  அவன் அசரீரி ஒன்றை கேட்க  நேர்ந்தது.    ''அடே கம்சா,  நீ தேரை ஒட்டிக்கொண்டு போகிறாய், அதில் அமர்ந்திருக்கும் உன் சகோதரி தேவகியின் எட்டாவது மகனால் தான் உனக்கு மரணம்''..  இதன் விளைவாக சகோதரியையும்  அவள் கணவனையும் கல்யாண ஊர்வலத்தன்றே  சிறையில் அடைத்தான். அவர்களுக்குப்  பிறந்த ஆறு குழந்தைகளும்  கம்சன் வாளுக்கு பலியாயின. 

ஸ்ரீ மந் நாராயணனே மதுராபுரி சிறையில்  வசுதேவரின் எட்டாவது   பிள்ளை  கிருஷ்ணனாக  வந்து பிறந்ததும்  நாராயணன் இட்ட கட்டளைப்படியே வசுதேவர்  அவனை இரவோடு இரவாக  கோகுலத்தில் நண்பன் நந்தகோப மஹாராஜா வீட்டில் யாருக்கும் தெரியாமல் கொட்டும் மழையில் யமுனை வழிவிட  அங்கே  யசோதை அருகே  அவனை விட்டு விட்டு  அவளுக்குப்  பிறந்திருந்த  பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு  மதுராவுக்கு  கம்சன் அரண்மனைச் சிறைக்கு திரும்பினான்.  இப்படிப்பட்ட  துர்பாக்கிய நிலை உலகில் எவருக்குமே ஏற்பட்டதில்லை.  ஆனால்  எல்லாமே  நாராயணன் கிருஷ்ணனாக பிறந்து அவன் இட்ட கட்டளைப்படி நடந்தது.

கோகுலத்தில் நந்தமஹாராஜா வாழ்ந்த  நந்த பவன் நந்தகிராமத்தில் மதுரா ஜில்லாவில்  அழகாக ஒரு கோவிலாக இருக்கிறது.   நந்திஸ்வரர் மலையில் உள்ள பிரதான அரண்மனை.  அங்கிருந்து பர்ஸானா 9 கிமீ.  லக்ஷக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிக்கும் இடங்கள் இவை.  நந்தகோபன் யசோதை இருவரும் வழிபடப்படும் ஒரே கோவில் இது. 
5000 வருஷ முந்தைய சம்பவம் இது.  இப்போது இருக்கும் சிவப்புக்கல்  மாளிகை  ராஜா ரூப சிங்  கட்டியது. இந்த வீட்டை பற்றி முன்பே விவரமாக எழுதி இருக்கிறேன்.  84 தூண்கள் கொண்டது.கிருஷ்ணன் பலராமன் விளையாடிய வீடு. அந்த வழ வழ தூணை கட்டிக்கொண்டு சுற்றி சுற்றி கண்ணன் விளையாடியதால்  அத்தனை பக்தர்களும் தூண்களைக் கட்டிக்கொண்டு பிரிய மனமில்லாமல் ஆனந்த கண்ணீருடன் திரும்புகிறார்கள்.  ராதா வா வந்து கிருஷ்ணனோடு விளையாடு என்று யசோதை அழைத்து பலமுறை  பர்ஸானாவிலிருந்து  ராதை இங்கே வந்து வீட்டில் விளையாடி இருக்கிறாள். கண்ணனுக்கு உணவு சமைத்திருக்கிறாள்.  இந்த வீட்டில்  தான் பூதனை வந்து கண்ணனை மடியில் இட்டுக்கொண்டு விஷம் தடவிய முலைப்பால் ஊட்டி இருக்கிறாள்.  கிருஷ்ணனைக் கொல்ல வந்த அந்த அரக்கியை  கிருஷ்ணன் கொன்று மோக்ஷத்துக்கு அனுப்பினான்.  சிவனே  கிருஷ்ணனை பார்க்க இங்கே வந்து நந்தீஸ்வர மலையாக நிற்கிறார்.
ஒரு சம்பவம் சொல்கிறேன்; 
வசுதேவருக்கும்  சேர்த்து  கோகுலத்தில்  நந்த பவனத்தில்   நந்தகோப மஹாராஜா தனக்கு பிள்ளை பிறந்ததை விமரிசையாக கொண்டாடினார்.   அவரது  பெண் குழந்தை மாற்றப்பட்டு  கிருஷ்ணன் அங்கே வளர்வது  வசுதேவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது.  வேத கோஷங்கள் முழங்கின. பிரதான ஜோசியர்களை கூப்பிட்டு ஜாதகம் கணிக்க சொன்னார்.   எல்லோரும் குளித்து புத்தாடைகள் உடுத்து பலவித உணவு பண்டங்கள் பரிசுகள் அனைவருக்கும்  விநியோகித்து ஆர்வமாக ஜோசியர் என்ன சொல்லப்போகிறார் ஜாதகம் கணித்து என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.   ஏராளமான பிராமணர்கள்  தானம் பெற காத்திருந்தார்கள். ரெண்டு லக்ஷம் பசுக்களை அலங்கரித்து தங்க வெள்ளி நகைகள் பூட்டி  தானம் பண்ணினார்  நந்த மஹாராஜா.பித்ருக்கள், தேவதைகள் எல்லோருக்கும் திருப்தியாக  மரியாதை பண்ணினார்.மலை மலையாக  எங்கும்  தானியங்கள், நவமணிகள். எல்லோருக்கும்  வழங்கினார்கள். . மேள தாள வாத்தியங்கள் முழங்கின.  கம கமவென  பன்னீர்  கலந்த சந்தனம் அள்ளி அள்ளி வாரி தெளித்தார்கள்.

தெருவெல்லாம் அழகிய மாக்கோலம் வண்ண வண்ண கண்கவரும்  ஓவியங்கள். எங்கும் பூக்கள், மாவிலை தோரணங்கள்.  பசுக்கள், கன்றுகள் காளைகள் எல்லாம் குளித்து கொம்புகளில் வண்ணம் பூசிக் கொண்டு  கழுத்தில் மாலைகளோடு
நடந்தன. கோகுலம் கிராமம்  பூரா எல்லோர் இல்லத்திலும்  விழா கோலம். ஊரே  திரண்டு நந்த மஹாராஜா வீட்டில் தான் காணப்பட்டது.  எல்லோரும்  கண்ணனைப் பார்த்துவிட்டு  ''செல்வமே  நீ நீடூழி வாழ்ந்து எங்களையெல்லாம் ரக்ஷிக்க வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்கள்.  ஒருவர் மேல் ஒருவர் வெண்ணையை கட்டி கட்டியாக  வீசி விளையாடி மகிழ்ந்தார்கள்.எங்கும் சங்கீத வித்துவான்கள்  சுகம் சங்கீத்.  வாத்தியங்கள் விதவிதமாக ஒலித்தன.நாட்டிய பெண்கள் நர்த்தனமாடினார்கள்.

''நாராயணா மஹா விஷ்ணு, என் குழந்தைக்கு தீர்க்காயுசு கொடுத்து காப்பாற்றப்பா''என்று நந்தகோபன் வேண்டிக் கொண்டபோது மஹாவிஷ்ணு, நாராயணன் தான் தனது மகன் கிருஷ்ணன் என்று  அவருக்கோ  யசோதைக்கோ  வேறு யாருக்குமே தெரியாதே.  வசுதேவன் மனைவி ரோகிணியும் அங்கே இருந்தாள்.  கண்ணன் பிறந்ததை அவளும் கொண்டாடினாள் . அவள் மகன் பலராமனும் அவளோடு குட்டி தம்பியைப் பார்த்து  பூரித்து  போனான். மகிழ்ந்தான்.

குழந்தை பிறந்தநாள் கொண்டாடிய பிறகு நந்தகோபன் பேரரசன் மதுரா ராஜ்ய கம்சனுக்கு கப்பம் கட்ட  புறப்பட்டார் .
ஒரு விஷயம்:

தேவகிக்கு  எட்டாவது குழந்தை ஒரு பெண் என்று தெரிந்தும் அவளைக் கொல்ல  முயற்சித்து யோகமாயாவே அந்த  குழந்தையாதலால் அவனிடமிருந்து  தப்பித்து ''முட்டாள் கம்சா,  உன் யமன் எங்கோ வளர்கிறான். அனாவசியமாக  உன் சகோதரியை வதைக்காதே'' என்று  எட்டு கரங்களோடு காட்சி தந்து எச்சரித்த போது கம்சன் ஆடிப்போய்விட்டான். வசுதேவரையும் தேவகியையும்  சிறையிலிருந்து விடுவித்து  அவர்கள் வீட்டுக்கு அனுப்பி காவலில் வைத்தான்.

நண்பன்  நந்தகோபன்  மதுராவுக்கு  வந்ததை அறிந்து வசுதேவர் நந்தகோபனை  சந்திக்க  அவன்  தங்கியிருந்த  இடம் சென்றார். நந்தகோபன் வசுதேவரைக்  கட்டி அணைத்தார் .  வசுதேவரின் இரு மகன்களும்  (பலராமனும் கிருஷ்ணனும்) நந்தகோபன் வீட்டில் வளர்கிறார்கள். அவர்களை பற்றி அறிய ஆவல். ஆனால் நேரடியாக கிருஷ்ணனைப் பற்றி கேட்க முடியாதே. பரம ரஹஸ்யம் அல்லவா?   ஊரில் எல்லோரும் சுகமா, வீட்டில் எல்லோரும் சுகமா.  நாட்டு மக்கள் நலமா என்று சுற்றி வளைத்து கேட்டார்.  எல்லோரும் சுகம் என்று அறிந்து மகிழ்ந்தார்.

''நண்பா, வசுதேவா ,  பாவம்  நீயும்  தேவகியும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் நான் அறிவேன்.ஊரில் எல்லோரும்  பேசுகிறார் களே.  பிறந்த பிள்ளைகள் அனைவரையும்  கொடியவன் கம்சனுக்கு இரையாக கொடுத்த பெற்றோர்களாச்சே நீங்கள். எட்டாவது கடைசி குழந்தை பெண்  என்றும் பார்க்காமல் கொல்ல  முயன்றானாம். அது காளி அம்சமாம். அவன் கையிலி ருந்து நழுவி வானில் பறந்ததாம். நமது கர்ம வினைகள் தாம் நம் வாழ்வை இப்படி சிதறடிக்கிறது. இதை எல்லாம் உணர்ந்த ஞானி நீ. அதனால்  வந்த துன்பம் அனைத்தும்  ஏற்றுக்கொண்டு  எங்கள் ஊரிலிருக்கும் அனைவரின் நலம் பற்றி அன்போடு
ஆர்வமாக  விசாரிக்கிறாய்.. நாங்கள் யாவரும் நலம், என் வீட்டில் என் குழந்தைகள் சந்தோஷமாக வளர்கிறார்கள். ஊரில் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை'' என்கிறார் நந்தகோபர்.

''ரொம்ப  நன்றி நந்தகோபா,  கம்சனை சந்தித்து  கப்பம் கட்டியாகிவிட்டதா? அப்படி  என்றால் உடனே  ஊர்  திரும்பு.  எனக்கு  என்னவோ  கோகுலத்திற்கு நீ உடனே திரும்ப வேண்டும் என்று தோன்றுகிறது.  அங்கே  நீ இல்லாத நேரம்  ஏதோ சில அசம்பாவிதங்கள் நேரலாம் என்று மனதில் படுகிறது. உடனே போ''

வசுதேவர் வீடு திரும்பினார்.  நந்தகோபனும்  கோகுலம் திரும்பினார். கம்சன் அனுப்பிய பூதகி ஏற்கனவே  வீட்டில் இருப்பது அவருக்கு  வீட்டில் நுழைந்தபோது தான் தெரிந்தது. வசுதேவர் சொன்னது எவ்வளவு உண்மை என்று புரிந்தது.
Reply all
Reply to author
Forward
0 new messages