Maaya - story from yoga vasishta

16 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Nov 12, 2025, 10:47:19 AMNov 12
to
நிழல் தான் நிஜமா? - நங்கநல்லூர் J K SIVAN 
இப்போ நான் ஒரு கதை சொல்றேன். நான் இட்டு க்கட்டி, சொந்தமாக யோசித்து சொல்ற கதை இல்லை.ஏழாயிரம் வருஷ பழங்கதை. ராமருக்கு அவர் குரு வசிஷ்டர் சொன்ன கதை. வசிஷ்டர் ராமருக்கு சொன்ன விஷயம் எல்லாம் ''யோக வாசிஷ்டம்'' அதில் வரும் சம்பவங்கள் நமக்கு பழசாக , புரியாத விஷயமாக இருக்கலாம். ஆகவே யாரும் அதிகம் இதெல்லாம் படிப்பதில்லை, பேசுவதில்லை.  
கதி ஒரு நல்ல சாது பிராமணன். கோசல ராஜ்யத்தில் வாழ்ந்தவன். வாழ்க்கை வெறுத்து போய் குடும்பத்தை விட்டு காட்டுக்கு போய்விட்டான். அங்கே ஒரு காட்டாறு. அதில் கழுத்தளவு நீரில் நின்று எட்டு மாதம் தவம் செய்தான். அந்த காலத்தில் கடும் தவம் செய்தால் கடவுள் நேரே வந்து வரம் தருவார் என்ற நம்பிக்கை.வீண் போனதில்லை. ஆகவே மஹா விஷ்ணு நேரில் வந்தார். 
''அப்பா, கதி, எதற்கு இப்படி கஷ்டப்பட்டு என்னை வேண்டிக்கொண்டு தவம் செய்கிறாய்?''கதி தண்ணீரிலிருந்து வெளியே வந்து மஹாவிஷ்ணு காலில் விழுந்தான்.
''பரமாத்மா, மஹாவிஷ்ணு, நீங்கள் இந்த லோகத்தை, மாயையை, படைத்து, , எல்லோரும் அதில் சிக்கி தவித்து ஜனன மரண துன்பம் அடைய செய்துவி ட்டீர்கள். எனக்கு ப்ரம்மத்தோடு ஐக்கியமாகி மோக்ஷம் பெற அருளவேண்டும். அதற்கு தடங்கலாக இருக்கும் மாயையை நான் அறிந்து, புரிந்து கொள்ள வும் அதை வெல்லவும் அருளவேண்டும்'' 
'பக்தா, நீ விரும்பியபடியே, மாயையை அறிந்து, உணர்ந்து அதன் பிடியிலிருந்து தப்பும் அனுபவம் சீக்கிரமே உண்டாகும்''வரமளித்து விட்டு மஹா விஷ்ணு மறைந்து விட்டார். 
''ஆஹா நான் கேட்டதை மஹா விஷ்ணு அருளிவிட் டார்' என்ற பேரானந்தத்தோடு கதி ஆற்றில் மறுநாள் காலை வழக்கம் போல் நீராடபோனான். மனதில் மஹா விஷ்ணு சொன்ன வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்ததால் அவன் மனது நித்ய கர்மாநுஷ்டா னத்தில் ஈடுபடவில்லை. தலையைக் கவிழ்த்து தண்ணீரில் முங்கினான் .
மனதில் சினிமா காட்சி ஓடியது. .....அவன் வீட்டில் அவன் ஏதோ வியாதி வந்து செத்து கிடக்கிறான். அவன் மனைவி கதறுகிறாள். சொந்தம் பந்தம் எல்லாம் வந்து வருந்துகிறது. கூட்டமாக நிற்கிறது . அவன் அம்மா அவன் உடல் மேல் புரண்டு புரண்டு அழுகிறாள். வாத்தியார்கள் வந்தாயிற்று சுடுகாட்டில் கட்டைகள் அடுக்கி அவனை வைத்து எரித்து சாம்ப லையும் கரைத்து அவனை எல்லோரும் மறந்து கூட போயாச்சு. (இது அத்தனையும் கதி, தலையை தண்ணீருக்குள் முக்கி எடுப்பதற்குள் தோன்றிய காட்சிகள். இன்னும் தொடர்கிறது) கதி இப்போது அடுத்த பிறவி எடுக்கிறான். யாரோ ஒரு அழுக்கு காட்டுவாசி பெண் கருவில் உருவாகிறான். அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த தாழ்ந்த வகுப்பு'' பெண் ஒருத்தி கருவில் பிறந்து வளர்ந்து அதே வகுப்பு பெண்ணை மணந்து குழந்தைகள் பெற்று சந்தோஷ மாக குடும்பம் நடத்துகிறான். சில காலம் அவனைத் தவிர எல்லோரும் மரணம் அடைந்தார்கள். அவன் சோகமாக தனிமனிதனாகி, மனம் கலங்கி வாடி எங் கெல் லாமோ அலைகிறான். கீரா என்கிற ராஜ்ஜியம் வருகிறான். அவன் அங்கே வந்த சமயம் கீரா ராஜ்ய மன்னன் மரணமடைந்து விட்டான். வாரிசு இல்லை என்பதால் மந்திரி பிரதானிகள் அடுத்த ராஜாவை தேர்ந்தெடுக்க ஏற்பாடு நடக்கிறது. கதி தாழ்ந்த குலத்தவனாகதெருவில் நடக்கிறான். எதிரே தும்பிக் கையில் மாலையோடு வந்த பட்டத்து யானை கதியின் கழுத்தில் மாலையிட்டு ராஜாவாகிறான். மந்திரி பிரதானிகள் அவனை அலங்கரித்து மரியா தை யோடு சிம்மாசனத்தில் அமர்த்தி அவன் நேர்மை யோடு ஆளாகிறான். எட்டு வருஷம் ஓடியது. 
ஒரு நாள் அரண்மனையிலிருந்து தெருவை பார்க்கி றான். அவன் சாதிக்காரர்கள் ஏற்கனவே தெரிந்தவர் க ள், நாய் மாமிசம் உண்பவர்கள் தெருவில் கூட்டமாக செல்கிறார்கள். அவன் அவர்களை நோக்கி ஓடுகி றான். ராஜ உடை, நகை கிரீடம் எல்லாம் எறிந்து விட்டு தனது கூட்டத்தாரோடு சேர்கிறான். அவர்களும் அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அவனை அணைத்து முடித்தமிடுகிறார்கள். அவனுக் கும் அவர்களைக் கண்டதில் பரம சந்தோஷம். 
இதெல்லாம் அரண்மனை உப்பரிகையிலி ருந்து பார்த்த ராஜகுல பெண்மணிகள் அதிர்ச்சி அடைந்து '' ஒரு நீசனா , தாழ்ந்தவனா, நமக்கு ராஜா? அதற்குப் பிறகு எவரும் ராஜா அருகில் போகவில்லை . இப்படி ஒரு தவறு யானையால் நிகழ்ந்ததற்கு நாமெல் லோரும் பரிகாரமாக தீக்குளிப்போம் என்று மந்திரி பிரதானிகள் ராஜ வம்சத்து ராணிகள் தீக்குளித்து விட்டார்கள். ராஜா அழுது கொண்டு தானும் நெருப்பில் விழுந்து சாம்பலானான்.
++++
''அட, அட , அட, என்ன விசித்திரம் கதி ஆற்றில் தண்ணீருக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்து மலங்க மலங்க சுற்று முற்றும் பார்த்தான். தன் உடம்பையே வெறித்துப் பார்த்தான். இது வா எரிந்த து? நானா சண்டாளன்? நானா ராஜா?சில நாழிகை களில் எது மாயை, நிஜம்போல் நம்மை வாட்டுகிறது என்று புரிந்து போயிற்று கதி என்ற அந்த துறவிக்கு. மஹா விஷ்ணு மாயையின் சக்தியை புரிய வைத்து விட்டார். மாயை எவ்வளவு வலிமை கொண்டது?.'
' +++
கதி காட்டில் சிலநாட்கள் மீண்டும் தவம் புரிந் தான். ஒருநாள் அவன் குடிசைக்கு ஒரு துறவி வந்தார். அவரை உபசரித்து, தேன் , கிழங்குகள், பழங்கள் கொடுத்தான். அப்போது சாயம் சந்தியா காலம். பொன்னிற சூரியன் எல்லாவற்றையும் தங்க நிறமாக்கி இருந்தான். சந்தியா வந்தனம் பண்ணி விட்டு இருவரும் அவன் ஆஸ்ரமத்துக்கு திரும்பினார் கள். ஆத்ம விசாரம், வேதாந்த விஷயங்கள் எல்லாம் பேசினார்கள். கதி அந்த துறவியிடம் அப்போது கேட்டான்;
''சுவாமி உங்கள் தேகம் ஏன் இப்படி எலும்பும் தோலுமாக வற்றி, வாடி இளைத்து காண்கி றது?'
'''அதை ஏன் கேட்கிறீர்கள். கீரா என்கிற தேசத்துக்கு போனேன். அந்த ஊரில் ஒரு நல்ல ராஜா பட்டத்து யானையால் தேர்ந்தெடுக் கப்பட்டு நேர்மையாக எட்டு வருஷம் ஆண்டானாம். ஒருநாள் தாழ் குலத்த வன் காட்டு வாசி என்று ஊர்மக்களுக்கு, தெரிந்து அனைவரும் பாபம் தீர அக்னி பிரவேசம் பண்ணிவிட் டார்களாம். அந்த ராஜாவும் தீயில் இறங்கி சாம்பலா னா னாம். அந்த ஊரில் சென்ற பாபத்துக்காக நான் பிரயாகை சென்று த்ரிவேணியில் ஸ்னானம் பண்ணி விட்டு அதுவரை எதுவும் ஆகாரம் சாப்பிடவில்லை.''
'கதி ஆச்சரியப்பட்டான். ஆஹா இந்த துறவி என் கதையை அல்லவா சொல்கிறார்?. அப்படியென்றால் நடந்தது எல்லாம் நிஜம் தானா? மனதின் கற்பனை யில் லையா? மாயை நிஜமா? அப்படித்தான் எல்லோரு ம் நம்புகிறோமா?.
 கதி தானும் கீரா ராஜ்ஜியம் சென்றான் விசாரித் தான். தான் பிறந்த இடம், தாழ் குலத்தோர், யானை வந்து மாலை அணிவித்து. ராஜாவானது, நீச உறவுக ளை சந்தித்தது, அக்னி பிரவேசம் .... எல்லாமே அந்த ஊர் மக்கள் சொல்வது நிஜம் என அறிந்தான். இருந்தாலும் தான் நீச குலத்தவன் இல்லையே, துறவியாக இருப்பதும் மஹா விஷ்ணு அளித்த வரத்தால் அவனுக்கு மாயை தான் அதெல்லாம் என புலப்பட்டது. 
 கதி மீண்டும் தவத்தில் ஈடுபட்டான். மறுபடியும் மஹா விஷ்ணு தரிசனம் கிட்டியது. அவரிடம் கேட்டான்.
''பரமாத்மா, உங்கள் அருளால் மாயை புரிந்து கொண் டேன். எப்படி அது நிஜமாகவே உருவமெடுக்கிறது. நம்பாமல் இருக்க முடியவில்லையே. எப்படி ஏன்?''
''அன்பா, கதி, சொல்கிறேன் கேள். இந்த பிரபஞ்சம், உலகம், அதில் காணும், நிகழும், சர்வமும் உண்மை யல்ல, இருப்பவை அல்ல, இல்லாதவை. மனத்தால் உருவாகுபவை. மனது செயலழிந்தவனுக்கு உலகம் பிரபஞ்சம், மக்கள் எதுவும் எவரும் கிடையாது. மனம் செயல் படாதவனை, எதிலும் நிலைக்காதவனை பித்தன், பைத்யம் என்கிறோம். அலையும் மனதில் தான் உலகம் பிரபஞ்சம் திகழ்கிறது. நிகழ்கிறது. அதுவே உன்னை மரணமடைய வைத்தது, நீசனாக் கியது, ராஜா வாக் கியது, தீக்குளிக்க வைத்தது, மீண்டும் நீ கதி எனும் துறவி என்றும் புரியவைத்தது. 
உன் மனதில் என்னைப் பதிய வைத்துக் கொண்டால் மற்ற காட்சிகள் மறையும். உன்னிடமிருந்து நீ அனுபவித்த மாயக் காட்சிகள் உன்னை சந்திக்க வந்த துறவிக்கும் ஒட்டிக்கொண்டு அவரும் அதை நிஜமென நம்பினார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. உன்னால் துறவி மட்டும் அல்ல உன் அனுபவத்தை பங்கேற்ற எல்லோருமே அந்த அனுபவம் அடைந்தவர்களாக காணப்பட்டார்கள். கனவு ஒன்று நிஜமாக காணப்பட்டது. 
உண்மையில், நிஜமாக, எல்லாமே நான், என்னில் அனைத்தும், அனைத்துமே நான் என உனக்கு புரிந்தால் மற்ற காட்சிகளுக்கு மனதில் இடம் ஏது? நீ யார் என்பதை புரிந்து கொள்ளாமல் மற்றவைகள் எல்லாம் நீ என்றும் மற்றவை என்றும் பிரித்து பார்த்து அவஸ்தை பட்டாய்.''
மோகம் என்னும் மாய சக்ரத்தின் அச்சாணி தான் மனம். மனம் வெறுமையானால் அதில் எதுவும் உருவாகாது. அது தான் மனோநாசம் DESTRUCTION OF MIND. புரிந்து கொண்டாயா? எழுந்திரு மீண்டும் பத்து வருஷம் மலைக்குகையில் அமர்ந்து தவம் செய்து மனதை அடக்கு. ஆத்ம ஞானம் பிறக்கும். ''
மஹா விஷ்ணு மறைந்தார். 
கதி மீண்டும் தவம் செய்ய புறப்பட்டான். பத்து வருஷம் ஆனது. ப்ரம்ம ஞானியாக மௌனி யாக வெளி வந்தான்.பேரானந்தத்தில் திளைத்தான். அவன் மனத்தில் பௌர்ணமி போல் ஞான ஒளி. ஜீவன் முக்தன். 
யோக வாசிஷ்டத்தில் ஒரு கதை இது. எப்படி இருக்கிறது. இன்னும் சொல்லட்டுமா?
Reply all
Reply to author
Forward
0 new messages