Paramapada sopanam game

11 views
Skip to first unread message

K.N.RAMESH

unread,
Dec 30, 2025, 6:31:54 PM (9 days ago) 12/30/25
to
பரமபத சோபனம் !

பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் தொன்மையான விளையாட்டு.

இவ்விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கருதுகிறார்கள்.

தொன்மையான பரமபதம் (துணியில் வரையப் பட்டது)

பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது.

ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் பன்னிரெண்டாம் இடம் உண்மையையும், ஐம்பத்தொன்றாம் இடம் நம்பிக்கையையும், ஐம்பத்து ஏழாம் இடம் பெருந்தன்மையையும், எழுபத்தாறாம் இடம் ஞானத்தையும், எழுபத்தெட்டாம் இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.

நாற்பத்தொன்றாம் கட்டத்தில் கீழ்ப்படியாமை, நாற்பத்து நான்காம் கட்டம் அகந்தை, நாற்பது ஒன்பதாம் கட்டம் ஈனம், ஐம்பத்து இரண்டாம் இடம் களவு/திருட்டு, ஐம்பத்து எட்டாம் இடம் பொய்/புரட்டு, அறுபத்து இரண்டு மதுபானம் அருந்துதல், அறுபத்து ஒன்பது கடன், எழுபத்து மூன்று கொலை, எண்பத்து நான்கு கோபம்/வெஞ்சினம்/வஞ்சம், தொண்ணூற்று இரண்டு கர்வம், தொண்ணூற்று ஐந்து பெருமை, தொண்ணூற்று ஒன்பது காமம் ஆகிய இடங்களில் பாம்புகள் காணப்பட்டன. பாம்புகள் ஏழ்மை, வறுமை, தரித்திரம், செல்வம்/அறிவு வற்றுதல், ஆதரவற்ற நிலை, பிச்சை போன்ற கட்டங்களைக் கொடுக்கும்.

இரண்டு முதல் நான்கு பேர் வரை விளையாடக் கூடிய இந்த விளையாட்டு, தாயக்கட்டை உருட்டி அதில் வரும் எண்ணுக்குத் தகுந்தவாறு கட்டங்களில் காயை நகர்த்திச் செல்ல வேண்டும். விளையாட்டை ஆரம்பிக்க 'தாயம்' அதாவது 'ஒன்று' விழ வேண்டும். முதலில் மோக்ஷம் பெற்றவர் வெற்றி பெற்றவராவார்.

நூறாம் கட்டம் நிர்வாணம் அல்லது மோக்ஷம் என்று அழைக்கப் பட்டது.

பரமபதத்தில் நாம் தாயத்தை உருட்டுகின்றோம். உருட்டிக் கொண்டு போனவுடனே 
1.முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும்.
2.இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம். 
3.இப்படி அதையெல்லாம் தப்பித்து மேலே போகும் போது அதை விடப் பெரிய பாம்பு கடிக்கிறது. மீண்டும் “திரும்பத் திரும்ப வந்து…!” பல சுழற்சிகள் ஆகி நாம் மேலே போகின்றோம்.
4.இன்னும் இரண்டே கட்டம்…! எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
5.பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே “ஜர்ர்ர்...” என்று கீழே இங்கே பன்றிக்குள் கொண்டு வந்து நம்மை விட்டுவிடும்.
6.ஆகவே கீழ் நிலைக்குக் கொண்டு வந்து மிக மோசமான சரீரங்களை எடுக்கும் நிலையை அது மீண்டும் உருவாக்கி விடுகின்றது. 
7.வாழ்க்கையில் நடக்கும் இத்தகைய பேருண்மைகளை நமக்கு நினைவுபடுத்தும் நாள் தான் ஏகாதசி.

பரமபதத்தை அடைய வேண்டும் என்றால் விருப்பு வெறுப்பு என்ற நிலை இல்லாதபடி ஒளியின் சரீரமாக நாம் பெற்று அந்த மெய் ஒளியின் எண்ணத்துடன் செல்வது தான் ஏகாதசி என்பது.

அன்றைய நாளில் சொர்க்கவாசல் என்று கோவில்களை எல்லாம் திறந்து வைப்பார்கள். நமக்கு இதைக் கதையாகச் சொல்லி ஏதோ பேருக்கு சொர்க்க வாசல் வழியாகச் சென்று சாமியைக் கும்பிட்டோம்… போனோம்… வந்தோம்… இராத்திரியெலாம் விழித்திருந்தோம்… இரவு பரமபதம் விளையாடினோம் என்ற எண்ணம் தான் இருக்கும். (இன்று உள்ள சிலருக்கு இந்தப் பரமபதம் படம் என்றால் கூட என்ன…! என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை)

இந்தப் பரமபதத்தின் இரகசியம் தான் என்ன…!

மனதின் குணங்கள் பதின்மூன்று

1 - ராகம்
2 - துவேஷம்
3 - காமம்
4 - குரோதம்
5 - உலோபம்
6 - மோகம்
7 - மதம்
8 - மச்ச்சரம்
9 - ஈரிஷை
10- அசூயை
11- டம்பம்
12- தர்பம்
13- அஹங்காரம்

குணங்களை மாற்ற கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள்

1 - சகுனம்
2 - ஸ்தோத்திரம்
3 - தியானம்
4 - யாகம்
5 - மெளனம்
6 - பக்தி
7 - சித்தி
8 - சிரத்தை
9 - ஞானம்
10- வைராக்கியம் .

இந்த பதின்மூன்று குணங்களையும் ,அவற்றை செம்மை படுத்தி நாம் பரவசு தேவனின் பரம பதத்தினை அடையும் வழிகளையும்,உதாரணங்களுடன் விளக்குவதே நாம் வெறும் சதுரங்க கட்டைகளை உருட்டி பாம்பு, ஏணி என விளையாடும் பரமபத சோபன படம்.பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம் .

நம் வாழ்க்கையில் எல்லாம் நல்லதைச் செய்வோம். அதே சமயம் நம்மை அறியாதபடி வேதனை என்ற நிலைகள் வரப்படும் போது அந்த விஷமான நிலைகள் “கொத்தப்பட்டு…!” நம் உடலுக்குள் நோய்களாகி விடுகின்றது.

நோயாகி விட்டால் இந்த மனிதச் சரீரத்தை இழந்து மீண்டும் இழி நிலையான சரீரத்தைப் பெற்று விடுகின்றோம். 
1.அதிலிருந்து மீண்டு மீண்டும் மனிதனாக வளர்ச்சியாகி பல கோடி சரீரங்களைப் பெற்று… 
2.மீண்டும் இழந்து மீண்டும் வளர்ச்சி பெற்று… 
3.இப்படியே இழந்து இழந்து… இன்று நாம் இந்தச் சுற்றிலேயே தான் இருக்கின்றோமே தவிர
4.மெய் வழியின் தன்மையை அடையும் தன்மை (பரமபதத்தை) இல்லாது நாம் இருக்கின்றோம். 
5.அந்த மெய் வழி செல்வதற்கு என்ன வழி…? என்ற நிலையைத்தான் அன்று மெய் ஞானிகள் பரமபதத்தின் மூலம் உணர்த்தினார்கள்.

பரமபதம் அடைவது என்றால்…
1.பரிணாம வளர்ச்சியில் கீழான உயிரினங்களிலிருந்து அடுக்கடுக்காகச் சென்று 
2.மனித நிலைகள் பெற்று மனித நிலைகளிலிருந்து 
3.உயிரை ஒளியாக மாற்றி உச்சியிலே செல்லும் போது தான் 
4.அதாவது இந்த உடலை விட்டு (வெளியிலே) விண்ணிலே சென்று ஒளியாக நிற்க கூடிய நிலையைப் பரமபதமாகக் காட்டி
5.அதற்குகந்த நாளாக நாம் ஏகாதசியைக் காட்டினார்கள் ஞானிகள்.

பரமபத சோபன படம் என்பது பரமனின் பதத்தை அடையும் வழியை காண்பிக்கும் (சோபிக்கும்) படம்.

*ஓம் நமோ நாராயணாய...*
Reply all
Reply to author
Forward
0 new messages