பாட்டி சொல்லைத் தட்டாதே - நங்கநல்லூர் J K SIVAN
''பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;-கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்?22
நமது வாழ்வின் பெரும் பகுதி பணம் சம்பாதிப்பதில் கழிந்து விடுகிறது. மீதி நேரத்தில் தேடிய களைப்பில் தூங்குகிறோம். பாடு பட்டோ , சாமர்த்தியமாகவோ, ஏமாற்றியோ, சேர்த்த பணத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க படாத பாடு படுகிறோம். பினாமி என்று மற்றவன் பேரில் அதை காட்டி ஏமாந்து போகிறவர்களும் உண்டு. பழைய காலத்தில் பேங்க் பெட்டகம் எல்லாம் கிடையாது என்பாதால் யாருக்கும் தெரியாமல் ரஹஸ்யமாக புதைத்து வைத்தார்கள் . சேர்த்ததை செலவழிக்காமல், அனுபவிக்காமல், மறைத்து வைத்து மறந்து போனவர்கள், மறைந்து போனவர்கள் அநேகர். பின்னால் எவனுக்கோ அது புதையல். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டு விட்டு உங்கள் ஆவி போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள்'' என்கிறாள் பாட்டி.
வேதாளம் சேருமே வெள் எருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை.23
பொதுமக்கள் கூடியிருக்கும் மன்றத்தில் நடு நிலையோடு, பாரபக்ஷமின்றி சாட்சியோ, தீர்ப்போ கூறவேண்டும். அப்படிக் கூறாமல் வாதாடுவோரில் ஒருவர் பக்கம் அவரது நன்மையை மட்டும் கருத்தில் கொண்டோ, செல்வாக்கைக் கருதி அவரிடம் அச்சம் கொண்டோ ஓரவஞ்சனையாக எதுவும் சொல்லக்கூடாது. இப்படி ஓரம் சொன்னால், அவர் வீட்டில், தீய சக்திகொண்ட ஆவிகள் குடியேறும். வேதாளம் போன்றவை வந்து சேரும். வீட்டை சுற்றி எங்கு பார்த்தாலும் வெள்ளை எருக்க்கம் செடி புதராகும். பூக்கும். பாதாள மூலி (பாசி, பாசான்) படரும். செல்வச் செழிப்பைச் சேரவொட்டாமல் தடுக்கும் மூதேவி வலியச் சென்று இது நம்ம வீடு என்று அங்கு இருந்துகொண்டு வாழ்வாள். பாம்புகள் குடியேறும். இப்படி யெல்லாம் நாம் கட்டிய பங்களா பாழாகப் போய்விடும்'' என்கிறாள் பாட்டி..
நீறில்லா நெற்றிபாழ்; நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ்; பாழே
மடக்கொடி இல்லா மனை.24
காலையில் எழுந்து குளித்து, தெரிந்த ஸ்லோகம் சொல்லிவிட்டு மனத்தில் பக்தியோடு இறைவனை வணங்கிவிட்டு நெற்றியில் சிறிது விபூதியை இட்டுக்கொள்ளும் வழக்கம் வேண்டும். திருநீறு இல்லாத நெற்றி பாழ். நெய் இல்லாத உணவு பாழ். பாயும் ஆறு இல்லாத ஊருக்கு அழகு பாழ். கருத்து மாறுபாடு இல்லாத உடன்பாறப்பாளர் இல்லாத உடம்பு பாழ். மனைவி இல்லாத ஒருவன் வீடு பாழ். எல்லாமே வேஸ்ட் என்கிறாள் பாட்டி.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.25
எப்போது வரவை விட செலவு அதிகமாகிறதோ அங்கே நிம்மதி இருக்காது. தேடி முதலாக வைத்திருக்கும் பொருளை விட அதிகமாக ஒருவன் செலவு செய்தால் என்ன ஆகும்?. தன்மானம் அழிந்துபோகும். புத்தி கெட்டுச் செயல்படுவான். அவன் எங்கே போனாலும் அங்குள்ள அனைவர்க்கும் அவன் திருடனாகத் தென்படுவான். ஏழு பிறப்பிலும் கொடியவனாக மாறிவிடுவான். எண்ணிப்பார். உண்மை விளங்கும் என்கிறாள் பாட்டி இந்த செய்யுளில்.
மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.26
தன்மான உணர்வு வேண்டும். தனது முன் னோர், குலப்பெருமை பற்றிய சிந்தனை கொஞ்சமாவது இருக்கவேண்டும்.கற்ற கல்வியின் திறமையை பிறருக்கு உதவியாக பயன்படுத்த வேண்டும். உடல் வளம், அறிவுடைமை , நல்லது கேட்டது என்று யோசித்து எண்ணிப் பார்க்கும் அறிவு, தானம் தர்மம் செய்யவேண்டும் என்ற மனப்பான்மை, அவ்வப்போது நேரம் கிடைத்த பொது தனிமையில் சில நிமிஷமாவது தியானம். இதெல்லாம் வேண்டும். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை விட்டாலே ஒருவன் மோக்ஷம் அடைந்ததற்கு சமம். பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.