கந்த ஷஷ்டிப் பாடல் [27 அக்டோபர் 2035]
வண்ணச் சந்தம் (138]
[தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன
……தான தந்தன தான தந்தன தனதான]
[மூல மந்திர மோத லிங்கிலை - எனத் தொடங்கும் திருப்புகழ் சந்தம்]
நங்கைநல்லூர!
நான கன்றிலை நாவ டங்கிலை நாம மென்குர லார வந்திலை
……நாண மின்றிய றாத வங்களை நசையோடு
……நாடி இன்பென வேய லைந்தவென் நாளு ருண்டிட மூவ டர்ந்திட
……ஞான மென்றிசை காண வஞ்சிடு மரிபோலே!
தீன ரெங்குள ரோவ வண்பரி சேவ லுஞ்சொலி வேல்ம ருங்கமர்
……தேவி மங்கைய ரோடி தஞ்செய விரைவோனே!
……தீர வன்புய மாறி ரண்டொடு சீரி லங்கிடு பாத அன்பொடு
……தேயு மென்றனை மூலை கண்டருள் புரிவாயோ!
தேன ருந்தினை யோட ருந்தொளிர் தேக வஞ்சியர் கூட அங்கொரு
……சீர்மி குங்குற மாதி னங்கர மடைவேலா!
……தேச மெங்கிலு மேவு குன்றுறை தேவ குஞ்சரி நாத சண்முக
……சீல சுண்டெலி மீத மர்ந்தவ னிளையோனே!
வான ளந்தவி மால யந்தரு மாது மம்புலி சூடு மெந்தையு(ம்)
……வானி னும்பர்கள் வாழ வென்றரு ளியசேயே!
……மாய தந்திர சூர னின்படை மாள வென்றவ மாசி லன்பர்கள்
……வாழு நங்கைந லூர சுந்தர பெருமானே!
‘நான்’ அகன்றிலை; நா அடங்கிலை; நாமம் என் குரல் ஆர வந்திலை;
……நாணம் இன்றி, அறாது அவங்களை நசையோடு
……நாடி, இன்பு எனவே அலைந்த என் நாள் உருண்டிட, மூவு அடர்ந்திட,
……ஞானம் என் திசை காண அஞ்சிடும் அரி போலே!
[‘நான்’ = அகந்தை; அவங்கள் = பாவச்செயல்கள்; அறாது = இடைவிடாது; நசை = ஆசை; இன்பு = இன்பம்; மூ/மூவு = மூப்பு; அடர்ந்திட = நெருங்கி வர; அரி = எதிரி]
[என் அகந்தை நீங்கவில்லை; என் நாக்கில் அடக்கம் இல்லை;; என் குரல் உயர்த்தி உன் திருநாமம் சொல்ல வருவதில்லை; ஆசையினால், நாணமின்றி, இன்பம் அவைதாம் என்று எண்ணிப் பாவச் செயல்களையே இடைவிடாமல் விரும்பிச் செய்து கொண்டிருப்பதிலேயே என் நாட்கள் உருண்டோடி விட, மூப்பு நெருங்கி வரும் போது, மெய்ஞ்ஞானம் என்னை எதிரியாய்க் கருதுவது போலும் என் திசையைக் காணவும் அஞ்சுகிறது!]
தீனர் எங்கு உளரோ அவண் பரி, சேவலும் சொலி வேல், மருங்கு அமர்
……தேவி மங்கையரோடு இதம் செய்ய விரைவோனே!
……தீர! வன்புயம் ஆறு இரண்டொடு, சீர் இலங்கிடு பாத! அன்பொடு
……தேயும் என்றனை மூலை கண்டு அருள் புரிவாயோ!
[தீனர் = ஏழை எளியவர்; அவண் = அங்கு; பரி = வாகனம்/மயில்; மருங்கு = பக்கத்தில்]
[எளியோர் எங்கு உள்ளாரோ, அங்கு உனது மயில், சேவல், சொலிக்கின்ற வேல், பக்கத்தில் மனைவிகள் சேர, உதவி செய்ய விரைந்து செல்லும் இயல்பு கொண்டவனே! தீரனே! வலிமையான பன்னிரண்டு புயங்களோடு அழகு விளங்கும் பாதங்களை உடையவனே! ஒரு மூலையில் தேய்ந்து கொண்டிருக்கும் என்னை அன்போடு கண்டு அருள் புரிய வருவாயோ?!]
தேன் அரும் தினை யோடு அருந்து ஒளிர் தேக வஞ்சியர் கூட, அங்கு ஒரு
……சீர் மிகும் குறமாதின் அங்கரம் அடை வேலா!
……தேசம் எங்கிலும் மேவு குன்று உறை தேவ! குஞ்சரி நாத! சண்முக!
……சீல! சுண்டெலி மீது அமர்ந்தவன் இளையோனே!
[வஞ்சியர் = இளம் பெண்கள்; குஞ்சரி = தேவயானை/தெய்வானை]
[தேனை அருமையான தினையோடு சேர்த்து உண்ணுகிற பிரகாசமான உடலை உடைய இளம்பெண்களின் கூட்டத்திலிருந்த அழகு மிகுந்த குறத்திப் பெண்ணின் (வள்ளியின்) கரம் பற்றி (மனைவியாய்) அடைந்த வேலவனே! தேசமெங்கும் காணும் குன்றுகளிலெல்லாம் விளங்கும் தெய்வமே! தெய்வானையின் கணவனே! சண்முகனே! உயர்ந்த குணமுடையவனே! சுண்டெலி மீது அமர்ந்தவனான கணபதிக்கு இளையவனே!]
வான் அளந்த இமாலயம் தரு மாதும், அம்புலி சூடும் எந்தையும்,
……வானின் உம்பர்கள் வாழ என்று அருளிய சேயே!
……மாய தந்திர சூரனின் படை மாள வென்றவ! மாசில் அன்பர்கள்
……வாழும் நங்கைநல்லூர! சுந்தர! பெருமானே!
[வான் அளந்த = வானளாவிய; இமாலயம் = இமயமலை; உம்பர்கள் = தேவர்கள்; சூரன் = சூரபத்ம அசுரன்; மாசில் = மாசு இல்லாத]
[வானளாவிடும் இமயமலை தந்த பெண்ணாகிய உமாதேவியும், சந்திரனைச் சூடிய தந்தையாகிய சிவபெருமானும் சேர்ந்து, தேவர்களின் நல்வாழ்வுக்காகப் படைத்தருளிய பிள்ளையே! மாயாஜால தந்திரங்களில் வல்லவனான சூரபத்மாசுரனின் படையைப் போரில் அழித்து வெற்றி பெற்றவனே! குற்றங்குறை இல்லாத அன்பர்கள் வாழும் நங்கைநல்லூருக்கு உரியவனே! அழகான திருமுருகப் பெருமானே!]