இழையும் இனிமை!
(நேரிசை வெண்பாக்கள்)
வெளியாய் விரிந்தாய்,விளக்கம் அறிந்தாய்,
களியாம் நறவு கலந்தாய்,- அளியாம்
மழையைப் பொழிந்தாய், மனத்தில் நுழைந்தாய்,
இழையும் இனிமை இனி!
(அளி -கருணை)
இழையும் இனிமை இறையுன் நடத்தில்,
குழையும் உளமும் குளிர்ந்து, - விழியில்
வழியும் புனலில் வருத்தம் கரையும்,
அழியும் அகந்தை அது!
அகந்தை அதுவாய் அழியும், இகலும்
அகலும், விளையும் அமைதி,- பகலும்,
இரவும் நடனம் இயற்றும் சிவனால்
விரவும் மறுவில் வெளி!
(மறு - குற்றம்)
( வெளி - தூய்மை)
(மறுவில் வெளி - குற்றமிலாத தூய்மை)
பிரதோஷம். —தில்லைவேந்தன்.
(19/09/2025)
…,