ஆங்கு, ஊங்கு:
-----------------
கோதை மோகன் ஆங்கு என்ற சொல் பற்றிய ஒரு கருத்தைச் சொன்னார்:
<<<
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குப் பெறும் கல்வி சிறந்தது ! ✅
காரைக்குடி நல்ல ஊர் ; அங்குப் பெறும் கல்வி சிறந்தது ! ❌
காரைக்குடி நல்ல ஊர் ; அங்குச் சென்றேன் ! ✅
காரைக்குடி நல்ல ஊர் ; ஆங்குச் சென்றேன் ! ❌
இப்போது , ‘ அங்கு ’ , ‘ ஆங்கு ’களுக்குள்ள வேறுபாடு விளங்கியதுதானே!.
தொல்-எழுத்து-குற்றியலுகரப் புணரியல் - நூற்பா 22 இல்,
'ஆங்கு’ என்ற சொல்லை,
“ஏழாம் வேற்றுமை இடப் பொருளுணர நின்ற இடைச் சொல்’’ எனக் குறிக்கிறார் இளம்பூரணர்.
("இதுவும், அவ் வாறீற்றில் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர நின்ற இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது." என்பது அவர் கூற்று.).
ஆங்கு என்ற சொல்,
ஏழாம் வேற்றுமை உருபாகிய கண் இடப்பொருளில் வரும் என்பது கருத்து.
இஃது இன்றியமையாத குறிப்பு!.
‘அங்கு’ வேறு ; ‘ஆங்கு’ வேறு !
அங்கு என்பது சுட்டுப் பெயர்.
ஆங்கு என்பது ‘அவ்விடத்து’ என்னும் பொருளில் வரும் ஓர் இடைச் சொல்.
சுட்டிக் கூறும் பொருள் கொண்டது, ‘அங்கு’.
இடப் பொருள் கொண்டது, ‘ஆங்கு’.
' அங்குச் சென்றேன்' என்பது காரைக்குடிக்குச் சென்றேன் என்ற பொருளையும்,
' ஆங்குக் கற்றேன்' என்பது காரைக்குடியின்கண் கல்வி கற்றேன் என்ற பொருளையும் தரும்.
The difference between அங்கு and ஆங்கு is very subtle as per Ilampooranar.
உரையாசிரியர்கள் இல்லையாயின் தொல்காப்பியத்தில் நாம் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!
ஏனெனில் , மனப்பாடம் செய்வதற்கு ஏற்ற சுருக்கச் சூத்திரங்களே தொல்காப்பியம். அதில் விளக்கத்தை எதிர்பார்க்க இயலாது!.
(முனைவர்.S.சௌந்திர பாண்டியன்).
>>>
திராவிட மொழிகளில், சொன்முதல் எழுத்தாய் நெடிலும், குறிலும் மாறிவரும் என்பார் மொழியியல் முனைவர் ப. கிருஷ்ணமூர்த்தி (ஆஸ்மானியா பல்கலைத் துணைவேந்தராய் இருந்தவர்). அங்கு/ஆங்கு, இங்கு/ஈங்கு, உங்கு/ஊங்கு. ஆங்கு என்பது அவ்விடம் என்றும், ஈங்கு என்பது இவ்விடம் என்றும், ஊங்கு என்பது உவ்விடம் என்றும் பொருள்தருவன. இளம்பூரணர் உரை அச்சாவதன் முன்னரே, நாவலர் விளக்கியுள்ளார்கள். ஆறுமுக நாவலர், இலக்கணச் சுருக்கம்:
"124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து என்னும் இடைச் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உ-ம். அன்று கண்டான் பண்டு பெற்றான் இன்று தந்தான் முந்து கொண்டான் என்று சென்றான்
ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு, ஆங்கு, இங்கு, ஈங்கு, உங்கு, ஊங்கு, எங்கு, யாங்கு, யாண்டு என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும். உ-ம். அங்குக்கண்டான் ஆங்குக்கண்டான் இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான் உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான் யாண்டுப் பெற்றான்
ஏழன் உருபுப் பொருளில் ஊங்கு என்னும் இடைச்சொல்:
(1)
https://www.tamilvu.org/slet/l1200/l1200uri.jsp?book_id=21&song_no=145 காமர் கொண்கன் நாமவெங் கேண்மை
அமைந்தே தில்லா ஊங்கு நம்மொடு
கண்டோர் விரும்புந் தன்மையுடைய கடல் நாடனாகிய நங்காதலனுடைய; நாம வெம் கேண்மை - அச்சந்தரும் வெய்ய நட்பானது; அமைந்து ஏது இல்லா ஊங்கு - பண்டு பொருந்தியிருந்து இப்பொழுது யாதொரு தொடர்பும் நம்பால் இல்லாத கண்ணும்/இடத்திலும்(ஊங்கு - உங்கண்). Here, uungu stands for Space limit.
(2)
http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/purananuru/purananuru376.htmlஅற்றை ஞான்றினோடு இன்றின் *ஊங்கும்*,
இரப்பச் சிந்தியேன், நிரப்படு புணையின்;
அன்றிலிருந்து இன்று *வரையிலும்* பிறரிடம் இரந்து உண்ண நினைக்கவே இல்லை. Here, uungu stands for Time limit. See Arumuka Navalar mentioning both Time and Space usages.
ஊங்கு - கால எல்லை காட்டுவதாய், புறநானூற்றுப் பாடலில் வருகிறது. இட எல்லை காட்டும் உதாரணம்:
http://www.linguist.univ-paris-diderot.fr/~chevilla/sup/TIPA_2l/D04.htmlபொரு, உறழ்பொருவும் உவமப்பொருவும் என இரு வகைப் படும். ஏதுவும், காரகம் ஞாபகம் என இருவகைப்படும். காரக ஏது, அச்சம் ஆக்கம் என்பவற்றான் பெறப்படும். நீக்கப் பொருண்மை, தீர்தல் பற்றுவிடுதல் என்பவற்றான் பெறப் படும். ஏனைய பொருவும் எல்லையும் ‘இதனின் இற்று இது’ என்பதனான் பெறப்படும்.
எ-டு : காக்கையின் கரிது களம்பழம் - காக்கையைவிடக் கரிது எனப் பொருள்செய்யின், உறழ்பொரு.
காக்கையைப் போலக் கரிது எனப் பொருள்செய்யின், ஒப்புப் பொரு.
கருவூரின் கிழக்கு இவ்வூர் - இதனின் *ஊங்கு* - எல்லை.
இவையும் ‘இற்று’ என்னும் பொருள. (தொ. சொ. 78, 79 நச். உரை)
------------------------
பாவலர் ப.எழில்வாணன் ஐயா அவர்கள் என் பதிவு தொடர்பாக எனக்கு அனுப்பிய செய்தியைப் பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன். - கோதை மோகன்
-------------------------------------
ஐயா,
தொல்காப்பிய ஆய்வு நன்றே.
மகிழ்ச்சி.
தங்கள் பதிவில்
ஒரு திருத்தம்.
அன்புடன் ஏற்பீர்.
அங்கு -என்பது சுட்டுப் பெயரன்று.
சுட்டு வினையெச்சம்.
அது, அவன், அவர் போன்றன சுட்டுப் பெயர்கள்.
எ-கா:
அங்குப் படுத்தான்.
ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர
நின்ற இடைச்சொல்லாம்.
படுத்தான் என்ற வினைமுற்று கொண்டு முடிந்த
வினையெச்சம்.
ஆங்குப் படுத்தான்.
இதுவும் அத்தன்மையதே.
(அங்கு)-ஆங்கு-
சுட்டுச்
சினை நீடிய இடைச்சொல்லாம்.
இரண்டிற்குமான
வேறுபாடு:
ஆங்கு-அசைநிலையாகவும் வரும்.இடப்பொருளவாகவும் வரும்.
உவம உருபாகவும்
வரும்.
சான்று-
(நன்னூல்:437)
"அந்தில் ஆங்கு அசைநிலை இடப்பொருள் அவ்வே"
(அந்திலாங் கசைநிலை
யிடப்பொரு ளவ்வே).
உவம உருபுக்குச் சான்று குறள்:247.
இலக்கியச் சான்றுகள் பற்பல உண்டு. கண்டறியலாம்.
--------
நா. கணேசன்