தலைப்பு: போராடவா இந்தப் போது!
பாவகை கலிவெண்பா
போராட வாஇந்தப் போதெனப் பற்பலர்
வாராய் எனவழைத்தால் வாரா திருப்பேனோ
வந்தேன் அவைமுன்னே வாடா மலர்தூவி
தந்தேன் வணக்கத்தைச் சந்த வசந்தத்தில்
அன்னை வயிற்றுள்ளே அல்லல் அடந்தோமே
பின்னர் பிறந்து பிதற்றித் திரிந்தோமே
எல்லை இலாத இறைவனே எங்குள்ளாய்
கல்லில் இருப்பாயோ காற்றில் இருப்பாயோ
கண்ணில் படுவாயா காண விழைகின்றேன்
மண்ணில் வரும்போரால் மந்தர் பெருதுன்பம்
பட்டே இறப்பாரே பச்சை மரமெல்லாம்
பட்டே விழுந்திடுமே பாவம் உயிரெல்லாம்
மாயும் அதனாலே வள்ளல் பெருமான்போல்
காயம் இறக்காத காலம் வரவேண்டும்
சாதி மதத்தாலே சண்ட இனிவேண்டாம்
சோதி வடிவாகத் தோன்றி யருள்வாயே
அன்பே வடிவான ஐயா அருள்வாயே
துன்பம் இனிவேண்டாம் தூயா அருள்வாயே
என்றும் இறப்பில்லா இன்பம் அருள்வாயே
உன்னை மறக்காத உள்ளம் அருள்வாயே
ஊனே உணவென்றே உண்டுத் திரிவோரும்
தானே மனம்மாறத் தாயே அருள்வாயே
கள்ளுக் கடையில்லா காலம் வரவேண்டும்
வள்ளல் பெருமானே மண்ணில் இனிமேலோர்
போரும் நடந்தால் புவியில் உயிரெல்லாம்
சோரும் அதனாலே சோதி வடிவாய்
இறைவா அருளாய் இசைந்து.