007. வெண்பாவில் சங்கத் தமிழ்
நற்றிணை 069: சேகம்பூதனார்
(திணை: முல்லை: தோழி கூற்று)
இயற்கை உயிர்கள் இன்புற்றிருக்கத் தான் மட்டும் தனிமையில் துன்புறும் தலைவிக்குத் தோழி கூறியது.
பல்கதிர் வேந்தன் பகல்வினை ஆற்றியே
செல்வழி செம்மையாய்ச் சையம் மறையப்
பறவைதன் குஞ்சுகள் கூட்டில் படியப்
புறவில் கலைமான் துணையை உடல்தழுவ
முல்லை அரும்புகள் மோனமாய் வாய்திறக்க 5
புல்லிதழ்ச் செங்காந்தள் பூத்து விளக்கேற்ற
ஆவின் கழுத்துறும் மாசில் ஒலிமணி
கோவலர் ஊதும் குழலொடு ஒன்றியே
மெல்லிசை யாரும் அருளிலா மாலைபோல்
செல்வத்தை நாடியெ சென்ற தலைவனின் 10
நாட்டிலும் நாளிதுவே என்றால் திரும்புவான்
ஈட்டிவரும் எண்ணம் விடுத்து.
[புறவு: காடு; ஆரும்: நிறையும்]
பல்கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச்
சேய்உயர் பெருவரைச் சென்றவண் மறைய
பறவை பார்ப்புவயின் அடையப் புறவில்
மாஎருத்து இரலை மடப்பிணை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின்
தோன்றி தோன்றுபு புதல்விளக்கு உறாஅ
மதர்வை நல்ஆன் மாசுஇல் தெண்மணி,
கொடுங்கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐதுவந்து இசைக்கும் அருள்இல் மாலை
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்
வினைவலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!
—நற்றிணை 069, சேகம்பூதனார்
’அருளிலா மாலை’ ஒன்றில் அனைத்துயிர்களும் இன்புற்றிருக்கத் தலைவி மட்டும் தனிமையைல் துன்புறுகிறாள்.
தலைவர் நாட்டிலும் அவருக்கு இதே நிலையென்றால், அவர் அங்கிராது மீண்டு வரைவு கடாய்வார்.
, பல கதிர்கள் கொண்ட சூரிய மண்டினல் பகற்பொழுதைச் செய்து முடித்து
, தொலைவில் உயர்ந்த பெரிய மலையில் சென்று மறைய.
, பறவைகள் தம் குஞ்சிருக்கும் கூட்டினை (வயின்) அடையக் காட்டில் (புறவு)
, கரும்பிடரிக் கலைமான் இளைமையான தன் பெண்மானைத் தழுவியிருக்க.
, முல்லை யரும்புகள் மலர, பலவிடங்களில் உள்ள
, புதர்தோறும் காந்தள் தழைத்துத் தன் மலராகிய விளக்கேந்தி நிற்க,
, அகம் மலரும் நல்ல பசுவின் குற்றமற்ற மணியின் தெளிந்த ஓசை,
, வளைந்த கோலையுடைய ஆயர்களின் குழலோசையோடு சேர்ந்து,
, மெல்லிதாக வந்து ஒலிக்கும் அருள் இல்லாத இம்மாலைப் பொழுதானது
, பொருளீட்டு முயற்சியால் நம்மைக் கைவிட்டு அகன்ற தலைவர் சென்ற நாட்டிலும்
, இத்தன்மையாகத் தோன்றுமாயின்,
, அவர் தாம் மேற்கொண்ட செயலில் உறுதிகொண்டு தங்கியிருப்பார் அல்லர்;
, அது கழிந்தது என் செய்வேன் என்றபடி.