வணக்கம்,
கடந்த 22ம் தேதி புதுக்கோட்டை கம்பன் கழக கவியரங்கத்தில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தலைமையில் "குறி தவறிய அம்புகள்" என்னும் பொதுத்தலைப்பின் கீழ் "மானுக்கு வைத்த குறி குரங்கை சாய்த்தது" என்ற தனித்தலைப்பில் கவிதை பாடினேன்.
மாரீசன் என்னும் மானை நோக்கி இராமன் அம்பு எய்கிறான்.
அந்த மானைக் கொல்லும் அம்பு அதோடு நில்லாமல் வாலி என்னும் குரங்கினையும் கொல்கிறது.
ராமாயணத்தில் இந்த சிறு துண்டை மையமாகக் கொண்டு "மானுக்கு வைத்த குறி குரங்கை சாய்த்தது" என்னும் தலைப்பை எனக்கு அளித்திருந்தார்கள்.
அரங்கில் வாசித்த கவிதையை இவண் சமர்ப்பிக்கிறேன்.
ஆன்றோர் கருத்தறிய விழைகிறேன்.
அன்புடன்,
நிரஞ்சன்
***********************************************************************************************
குறி தவறிய அம்புகள் - மானுக்கு வைத்த குறி குரங்கினைச் சாய்த்தது
பாற்கடல் பெருவெளியில்
பாம்பணை விரித்து
பாதம் நீட்டி
பள்ளி கொண்டு
பரம சுகமாய்
பாரை பராமரித்த
பரந்தாமன்
பாருக்கு வந்து
படாத பாடு பட்ட கதையை
பசுந்தமிழ் பாட்டால்
பாருக்கே தந்தருளிய
பாக்கடலாம்
கம்பன் என்னும்
கரையில்லா
கவிப்பெருங்கடலுக்கு முதற்கண்
என்
சிரவணக்கமும் கரவணக்கமும்;
கங்கையில்
நீராடுவதைக் காட்டிலும்
கம்பனில்
நீராடுவதல்லவோ புண்ணியம்
எனக்கு !!!
கடல் கொண்ட
தென்னாடு என்பார்
தமிழ்நாட்டை;
தமிழ்நாட்டைக் கொண்ட
புவிக்கடல்கள் பல;
கம்பனே!!
தமிழ்நாட்டை நித்தம் நித்தம்
கொள்ளும்
கவிக்கடல் நீ;
அழியும் இந்தப்புவி;
அழியாது உந்தன் கவி ;
பூமியில் உண்டு
சாக்கடல்;
ஆனால்
ஊழி நேரினும்
ஆழி சூழினும்
ஒருபோதும் சாகாக்கடல்
கம்பன் என்னும் பாக்கடல்;
தமிழ்மணம் வீசும் பூக்கடல்;
காலவெளியை நிறைத்த
கம்பமாக்கடலில் இருந்து
தனியொரு அலையாய்
எழுந்து ஆர்ப்பரித்து ஓடும்
கவிப்பேராறு
பாரதி என்னும்
பைந்தமிழ் ஏறு;
அந்தக் கரையில்லா ஆற்றுக்கு
அடங்கல் அறியா ஊற்றுக்கு
கவிஞர்கள் எல்லோரும் சுவாசிக்கும்
காற்றுக்கு
என் தலைவணக்கம்;
அந்தப் பேராற்றிலிருந்து
தெறித்து விழுந்த
துமிகளில் ஒன்றாய்
உங்கள் முன்
நிற்கும் நான்
பாரதியின் எள்ளுப்பேரன்
நிரஞ்சன் பாரதி;
பேரனின் பால்
பேரன்பு உடையவரின்
பேராசியும்
பேரன்பு கொண்டவரின்
பேராசான் பேரரளும்
அருவமாய் இந்த
அரங்கில் அமைந்திருப்பதால்
இந்த
எள்ளுப்பேரன் எவராலும்
எள்ளற்கரிய பேரனாய்
எண்ணற்கினிய கவி படைப்பான்
என நம்புவீர்களாக;
கவியரங்கத்தின் முதல்வர்
மரபின் புதல்வர்
முத்தானவர் - முறுவலே
முகமென்றானவர்;
சத்தானவர் - சற்றும் சலிக்காத
சாரமுள்ளவர்;
இவரைக் கண்டதும்
முத்துநகராம் தூத்துக்குடிக்கு
வந்துவிட்டோமோ என
ஐயுற்றேன்;
கம்பனைக் கண்டதும்
கோட்டை நகருக்குத் தான்
வந்திருக்கிறோம் என்று
தெளிவுற்றேன்;
குறி தவறிய
அம்புகளைப் பற்றி
நெறி தவறாது
பாடுக என்றார்;
குறி தவறிய அம்புகளைக்
குறி தவறாது
மக்களின் மனம்
பார்த்து எய்வேன்
என்றேன்;
கவிக்கணையைத் தொடுக்க
கம்பன் கவியரங்கம்
போந்தேன்;
பேருருக்கொண்டு வியனுலகம்
அளந்த பெம்மான்
செந்தாமரை மலர்ப்பாதம்
கொண்ட செம்மான்
பூதலத்து உயிர்களையெல்லாம்
பூப்போலக் காக்கும் பூமான்
கோதறு குணம்
கோவில்கொண்ட கோவிற்கெல்லாம்
கோவான கோமான்
தன்
பெண்மான் ஒரு
பொன்மான் கண்டு
அம்மான் வேண்டுமென
அடம் பிடிக்க
அடர்ந்த அடவிக்குள்
சென்றான்;
மனைவியர்
தங்கம் கேட்டால்
அதனை மறுதலிக்கும்
கணவன் மார் தான் உண்டோ?
மரம் தாவெனக் கேட்டால்
நீரினை வழங்காத வேர் தான்
உண்டோ?
பொன்மான் போன்ற
தன்மான் ஒரு
பொன்மான் கேட்டதும்
மண்மானைத் தேடி
கண்மானை ஓட விட்டு
அம்மானைக் கண்ணுற்றும்
அதை வீழ்த்த முடியாமல் அவன்
அம்பு எய்தான்;
அம்பு பட்டு
அம்மான் இறக்கையில்
அம்மான் ராவணனின்
அம்மான் என்றறிந்தான்;
அம்மானைக் கொன்ற
அவ்வம்பு அடங்கியிராமல்
அடுத்து
அரியே அரி மீது
தொடுத்த அம்பு என
ஓர்
அரிமா என
அம்புவியில் வலம் வந்த
அரியையும் கொன்றது ;
(அரி என்றால் குரங்கு என்றும்
பொருள்)
மாரிவண்ணன் தொடுத்த அம்பு
மாரீசன் என்னும்
பக்திமானையும் சாய்க்கிறது;
வாலி என்னும்
சக்திமானையும் சாய்க்கிறது;
மானிடம் சென்ற
மானிடன்
மான் இடர் தந்ததால்
எளிய மானிடர் போல்
மாறி அம்பு எய்தானா?
அன்றி
மாறா நோக்குடன்
மாரிமழையென சரத்தைத்
திட்டமிட்டுப் பெய்தானா?
நான் காட்டப்போகும்
"குறி தவறிய அம்புகள்" என்னும்
ஆக்ஷன் குறும்படத்தின்
கதைக்கரு இதுவே;
கதை
திரைக்கதை
வசனம்
தயாரிப்பு
இயக்கம்
- இறைவன்;
பாடல்கள் - கம்பன்
இறைவன்
தானே எழுதி இயக்கி
தானே நடித்த
பென்னம் பெரும் திரைப்படத்தின்
சின்னஞ் சிறு துண்டு இது;
குறும்படத்தின்
முதல் கதாநாயகன்
காகுத்தனின் கணை;
இரண்டாம் கதாநாயகனே
காகுத்தன்;
அவன் வள்ளல்
என்பதற்கு இதனினும்
வேறு சான்று உளவோ?
விண்ணீரை உண்டு
வாழ்வது சாதகப்பறவை எனில்
செந்நீரை உண்டு வாழ்வது
அம்பென்னும் பாதகப்பறவை ;
அது
மாரீசன் என்னும்
தங்க வளையலையும்
வாலி என்னும்
வெள்ளி வளையலையும்
அடுத்தடுத்து அணிந்த
ஒரே ஒரு விரல் கொண்ட
ஒற்றைப் பெரும் உலோகக்கை;
கண்ணிருந்தும் அதற்கு
கருணை இல்லை;
கண்ணோட்டமும் இல்லை ;
எத்துணை
தூரம் சென்றாலும்
வீரம் இழக்காத - குருதியின்
ஈரம் இழக்காத - கொலையின்
சாரம் இழக்காத
திண்மம் என்னும் தொன்மம்;
மனிதர்களின் நேரடியான வன்மம்;
பருவடிவம் கொண்ட
காற்றும் அது;
குறுவடிவம் கொண்ட
கூற்றும் அது;
ஒன்றையே எண்ணும்
ஒற்றை எண் அது;
ராகவன் தொட்டால் மலரும்
ஒற்றைக்கண் அது;
சாவில்
சரங்கள் சமரசம்
செய்வதில்லை;
சாவில்
சரங்கள் சமத்துவம்
மறப்பதில்லை;
பொன்மான் வேடமிட்ட
மாரீசனை பொன்னுலகிற்கே
துள்ளிப்போ என்கிறது;
வாலி என்னும்
வாலறிவு மிக்க
வானரத்தை வானுலகிற்கே
தாவிப்போ என்கிறது;
ராமபாணம் பட்டு
உயிர் போகாதா என்று ஏங்கி
மகிழ்ந்து மரிக்கிறான்
மாரீசன்;
மாரீசனுக்கு சரம்
வரம்;
ராமபாணம் பட்டா
என் உயிர் போனது
என்று அதிர்ந்து
அடங்குகிறான் வாலி;
வாலிக்கு சரம் அறம்;
குறி தவறிய
அம்பா அது?!!!
இராமனின்
இதயத்தை சுமந்துசென்றதால்
ஒருபோதும்
குறி தவறாத அம்பது;
இலக்கை எட்டும் வரை
நெறி தவறாத அம்பது;
இலக்கே இயம் என்ற
ஒற்றை வரி தானே
அம்பு
ஆரம்ப நாள் தொட்டு
எழுதி வரும் இலக்கியம்;
இந்த
"இலக்கி"யம் தானே
அதன் இலக்கணம்;
ஒரு சொல்லுக்குள்
பிறிதொரு சொல்
தெரிவதைப் போல்
மானுக்குள்
மர்க்கடத்தைக்
கண்டது
காகுத்தனின் கண்ணான
கணை;
வளிமண்டலத்தைக் கடந்தும்
வழி தவறாமல்
வீட்டு வாசற்படிக்கே
வந்து சேரும்
தீக்கதிரோனின்
தீச்சரம் போல்
மானை
சாய்த்த
மானிடர்கோன் அம்பு
நொடியேனும் நில்லாமல்
மானிட மூதாதையாம்
குரங்கினையும் சாய்த்தது;
நெருப்புச்சூரியனின்
வெஞ்சரத்துக்கு
இந்த குணமென்றால்
நெருப்புச்சூரியனின் குலத்துதித்த
கருப்புச்சூரியனின் வெஞ்சரத்துக்கும்
இக்குணம்
இருப்பதில் வியப்பேதும் உண்டோ?
குளத்தின் மீது
எறியப்படும் கல்
குளத்தையும் தாக்கி
குளத்தில் தெரியும்
வானத்தையும் தாக்கும்
விந்தை போலல்லவா இது?!!!
அண்ணலின் அம்பு
குறி தவறாத
அம்பு மட்டுமன்று;
குறித்தவனின் குறிப்புணர்ந்த
அம்பும் ஆம்;
கம்பனின்
கண்களில்
ரகுகுல ராமன்
சரத்தின் நாயகன்
மட்டுமல்ல;
வானளாவிய
வரத்தின் நாயகனும்
கூட;
அளவிறந்த
அறத்தின் நாயகனும்
கூட;
வரத்தையும்
அறத்தையும்
திறத்தையும்
தன்
சிரத்திலும்
சரத்திலும்
கரத்திலும் வைத்த
கண்ணியன் ராமன்;
அறத்தை
அடாது அரவணைத்ததால்
அறத்தை
விடாது வலியுறுத்திய
வள்ளுவனின் ஆதிரசிகன்
அந்த இராமன்;
வரம் பிறழ்ந்தவன்
அல்லன் அவன்;
அறம் பிறழ்ந்தவனும்
அல்லன் அவன்;
மரத்தால்
செய்யப்பட்ட சரம்
குறி தவறலாம்;
ஆனால்,
அறத்தாலும் வரத்தாலும்
செய்யப்பட்ட ராமனின் சரம்
குறி தவறுவதில்லை;
ஒருபோதும் தான் கொண்ட
நெறி தவறுவதில்லை;
இலக்கினை வழுவாத
இராமபாணம் வாழ்க;
இதயத்தை வழுவாத
இராமபிரான் வாழ்க;
இதிகாசத்தை வழுவாத
இராமாயணம் வாழ்க;
குளத்தின் மீது
எறியப்படும் கல்
குளத்தையும் தாக்கி
குளத்தில் தெரியும்
வானத்தையும் தாக்கும்
விந்தை போலல்லவா இது?!
நல்ல வரிகள்