வாழ்வறிவோம்!

3 views
Skip to first unread message

NATARAJAN RAMASESHAN

unread,
Oct 20, 2025, 6:20:51 AM (2 days ago) Oct 20
to santhav...@googlegroups.com
.            வாழ்வறிவோம்!

காற்றில் அசையும் உயர்மரங்கள்
   கற்றுக் கொடுக்கும் களிநடனம்
சேற்றில் மலரும் தாமரைப்பூ
   சிறக்க வாழ்வில் வழிசொல்லும்
ஊற்றுப் பெருக்கு வற்றாத
   ஊக்கம் பெருக்கும் முறைபகரும்
தோற்றுப் போவோம் எனத்தளர்ச்சி
   தோன்றும் வேளை இவைகாண்பீர்


கலைகள் அனைத்தும் கண்ணெதிரில்
   காணும் அவற்றுள் கலந்திருக்கும்
இலைகள் செய்யும் சலசலப்பில்
   இயற்கைத் தாயின் சிரிப்பிருக்கும்
அலைகள் துள்ளி ஆர்ப்பரிக்கும்
   அதிலே இன்பத் துடிப்பிருக்கும்
விலையே இல்லா விந்தைகளை
    விரியக் காண்போம் கண்முன்னே.


மயங்கும் மாலை ஓவியத்தின்
   வண்ணக் கலவைப் பேரெழிலை,
முயங்கும் இரவின் இருளழகை
   முகிழ்க்கும் நிலவின் வனப்பமுதை
தயங்கித் தயங்கிக் கண்சிமிட்டித்
   தாவித் திரியும் மீனினத்தை
வயங்கு கதிரின் கவினொளியை
   மகிழ்ந்து கண்டு வாழ்வறிவோம்!

                 — தில்லைவேந்தன்.
..
Reply all
Reply to author
Forward
0 new messages