திருமகள் அருள்விழி மகிமை
(கலிவிருத்தம்)
தெறிகடல் திரையெனத் திரிமனம் திருகறும்
சிறுமைவெஞ் சிறையறச் செறிவிருள் திரிவுறும்
தெறுதுயர் செறவெழுந் திறலொடு தெருள்மிகும்
சிறவுறு திருமகள் திருவிழி திறக்கவே.
பதவுரை:
சிறவு உறு திருமகள் = சிறப்பு மிகுந்த திருமகளின்
திருவிழி திறக்க = கடைவிழிப் பார்வை காட்டி அருள் பாலித்தால் -
தெறி கடல் திரை எனத் = தெறித்து எழுகின்ற கடல் அலைகளைப் போல
திரி மனம் = அலைந்து திரிகின்ற மனம்
திருகு அறும் = கோணல் நீங்கும்
சிறுமை வெஞ் சிறை அற = மூடத்தனத்தால் நமக்கு நாமே எழுப்பிக் கொண்ட கொடிய மனச் சிறை நீங்கும்
செறிவு இருள் = அடர்ந்த இருள்
திரிவு உறும் = அழிந்து விடும்
தெறு துயர் = சுடுகின்ற துயரை
செற எழும் திறலொடு = அழிக்க எழுகின்ற வலிமையுடன்
தெருள் மிகும் = தெளிவு மிகும்
- இமயவரம்பன்