இளைய ரான மாதர் - செம்பொன்
.. எழிலி ணைந்த வடிவும்
வளைய ணிந்த தோளும் - மாலை
.. மணிகு லுங்கு மார்பும்
விளையு மின்ப நூல்கள் - தம்மில்
.. மிக்க தேர்ச்சி யோடு
களையி லங்கு முகமுஞ் - சாயல்
.. கவினு நன்கு கொண்டோர் (190)
பதம் பிரித்து:
இளையரான மாதர் - செம்பொன்
.. எழில் இணைந்த வடிவும்
வளை அணிந்த தோளும் - மாலை
.. மணி குலுங்கு மார்பும்
விளையும் இன்ப நூல்கள் - தம்மில்
.. மிக்க தேர்ச்சியோடு
களை இலங்கு முகமும் - சாயல்
.. கவினும் நன்கு கொண்டோர்
அ. சொற்பொருள்: -
ஆ. இலக்கணம்: -
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.) பொருள் இன்னமும் முடியவில்லை. அடுத்த பாடலின் இரண்டாமடியில்தான் முடிகிறது. எனவே இது குளகம் (குளகச் செய்யுள்).
ஈ. பாடல் சொல்வது:
களையான முகமும், அழகும் கொண்டவர்கள்; வளைகளை அணிந்தவர்கள்; நல்ல மணிகளால் ஆன மாலைகளை அணிந்த மார்பகத்தினர்; இன்ப நூல்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பட்ட செம்பொன்னால் செய்யப்பட்ட பதுமைகள் போன்றவர்களான.......
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
அடுத்த பாடலில் காணவும்.
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
அடுத்த பாடலில் காணவும்.
ஆயி ரக்க ணக்கா - ஐவர்க்
.. கடிமை செய்து வாழ்வோர்
தாய முருட்ட லானார் - அந்தச்
.. சகுனி வென்று விட்டான்.
ஆயி ரங்க ளாவார் - செம்பொன்
.. அணிகள் பூண்டி ருப்பார்
தூயி ழைப்பொ னாடை - சுற்றும்
.. தொண்டர் தம்மை வைத்தான். (191)
பதம் பிரித்து:
ஆயிரக் கணக்கா - ஐவர்க்கு
.. அடிமை செய்து வாழ்வோர்
தாயம் உருட்டலானார் - அந்தச்
.. சகுனி வென்றுவிட்டான்.
ஆயிரங்கள் ஆவார் - செம்பொன்
.. அணிகள் பூண்டிருப்பார்
தூயிழைப் பொனாடை - சுற்றும்
.. தொண்டர்-தம்மை வைத்தான்.
அ. சொற்பொருள்: -
ஆ. இலக்கணம்: -
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)
ஈ. பாடல் சொல்வது:
.....அப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், பாண்டவர்களுக்குத் தொண்டு செய்து வாழ்பவர்கள், அவர்களை ஆட்டத்தில் யுதிஷ்டிரன் வைத்தான். அவர்களைச் சகுனி வென்றுவிட்டான். பொன்னால் ஆன அணிகலன்களை அணிந்த தொண்டர்களை ஆயிரக் கணக்கில் வைத்தான்.
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
"Yudhishthira said,--'I have a hundred thousand serving-girls, all young, and decked with golden bracelets on their wrists and upper arms, and with nishkas round their necks and other ornaments, adorned with costly garlands and attired in rich robes, daubed with the sandal paste, wearing jewels and gold, and well-skilled in the four and sixty elegant arts, especially versed in dancing and singing, and who wait upon and serve at my command the celestials, the Snataka Brahmanas, and kings. With this wealth, O king, I will stake with thee!'"
Vaisampayana continued,--'Hearing these words, Sakuni ready with the dice, adopting unfair means, said unto Yudhishthira. 'Lo, I have won!'
Yudhishthira said,--"I have thousands of serving-men, skilled in waiting upon guests, always attired in silken robes, endued with wisdom and intelligence, their senses under control though young, and decked with ear-rings, and who serve all guests night and day with plates and dishes in hand. With this wealth, O king, I will stake with thee!'"
இந்தப் பகுதி அப்படியே இரண்டு பாடல்களில் சுருக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
பின்னர் யுதிஷ்டிரர், 'என்னிடம் பணிவிடை புரிகின்ற அழகிய இலட்சம் பணிப்பெண்கள் உள்ளனர். அழகிய அணிகலன்களைப் பூண்டவர்கள்; ஆடலிலும் பாடலிலும் வல்லவர்கள். அவர்களைப் பந்தயப் பொருளாக வைக்கின்றேன்,' என்று கூறினார். காயை உருட்டிய சகுனி அவர்களையும் வெற்றி கொண்டான்.
பின்னர் தருமபுத்திரன் இலட்சம் வேலைக்காரர்களைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார்.
சோர னங்க வற்றை - வார்த்தை
.. சொல்லு முன்னர் வென்றான்.
தீர மிக்க தருமன் - உள்ளத்
.. திடன ழிந்தி டாதே
நீரை யுண்ட மேகம் - போலே
.. நிற்கு மாயி ரங்கள்
வார ணங்கள் கண்டாய் - போரில்
.. மறலி ஒத்து மோதும் (192)
பதம் பிரித்து:
சோரன் அங்கு அவற்றை - வார்த்தை
.. சொல்லும் முன்னர் வென்றான்.
தீரம் மிக்க தருமன் - உள்ளத்
.. திடன் அழிந்திடாதே
நீரை உண்ட மேகம் - போலே
.. நிற்கும் ஆயிரங்கள்
வாரணங்கள் கண்டாய் - போரில்
.. மறலி ஒத்து மோதும்
அ. சொற்பொருள்: சோரன்: திருடன். வாரணம்: யானை. மறலி: எமன்.
ஆ. இலக்கணம்: -
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.) பொருள் இன்னமும் முடியவில்லை. அடுத்த பாடலின் இரண்டாமடியில்தான் முடிகிறது. எனவே இது குளகம் (குளகச் செய்யுள்).
ஈ. பாடல் சொல்வது:
அந்தத் தொண்டர்களைத் திருடனான சகுனி அடுத்த வார்த்தை பேசுவதற்கு முன்னால் வென்றான். தைரியம் மிக்கவனான தருமன் (இவ்வளவு இழந்த போதிலும்) உள்ளத்தின் திண்மையை இழக்காதவனாகி நீருண்ட மேகங்களைப் போல் திரண்டு நிற்பனவாகிய ஆயிரக்கணக்கான யானைகள், போரின் போது எமனைப் போல் எதிரிகளோடு மோதக் கூடியவை...
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
அடுத்த பாடலில் காணவும்.
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
அடுத்த பாடலில் காணவும்.
என்று வைத்த பணயம் - தன்னை
.. இழிஞன் வென்று விட்டான்.
வென்றி மிக்க படைகள் - பின்னர்
.. வேந்தன் வைத்தி ழந்தான்.
நன்றி ழைத்த தேர்கள் - போரின்
.. நடையு ணர்ந்த பாகர்
என்றி வற்றை எல்லாம் - தருமன்
.. ஈடு வைத்தி ழந்தான். (193)
பதம் பிரித்து:
என்று வைத்த பணயம் - தன்னை
.. இழிஞன் வென்றுவிட்டான்.
வென்றி மிக்க படைகள் - பின்னர்
.. வேந்தன் வைத்து இழந்தான்.
நன்று இழைத்த தேர்கள் - போரின்
.. நடை உணர்ந்த பாகர்
என்று இவற்றை எல்லாம் - தருமன்
.. ஈடு வைத்து இழந்தான்.
அ. சொற்பொருள்: இழிஞன்: இழிவான தன்மை உடையவன். இகழத் தக்கவன்.
ஆ. இலக்கணம்: வென்றி: வெற்றி என்பதன் மெலித்தல் விகாரம்.
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)
ஈ. பாடல் சொல்வது:
நீருண்ட மேகங்களைப் போல நிற்கும் ஆயிரம் யானைகள்..... என்று தருமன் வைத்த பணயங்களை இகழத்தக்க குணம் உடையவனான சகுனி வென்றான். வெற்றியையே பெறக் கூடிய படைகளை தருமன் வைத்து இழந்தான். நன்றாக இழைக்கப்பட்ட வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்கள், போரின் போது அவற்றைச் செலுத்த வேண்டிய விதங்களை உணர்ந்த தேர்ப்பாகர்கள் என்று இவற்றை எல்லாம் தருமபுத்திரன் பந்தயமாக வைத்து இழந்தான்.
வியாசரின் மூலத்தை (மொழிபெயர்ப்பை) ஊன்றிப் படியுங்கள். 'நீருண்ட மேகங்களைப் போன்ற யானைகள்' என்ற உவமை உட்பட வியாசரின் மூலத்தில் இருப்பதைக் காணலாம். பந்தயப் பொருள்களை வைக்கும் வரிசை முறையைக் கூட பாரதி மாற்றவில்லை என்பது கவனிக்கத் தக்கது.
(இவற்றை எல்லாம் ஏன் நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறேன் என்று தோன்றலாம். Master stroke வருகின்ற நேரத்தில் சொல்கிறேன்.)
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
"Yudhishthira said,--'I have, O son of Suvala, one thousand musty elephants with golden girdles, decked with ornaments, with the mark of the lotus on their temples and necks and other parts, adorned with golden garlands, with fine white tusks long and thick as plough-shafts, worthy of carrying kings on their backs, capable of bearing every kind of noise on the field of battle, with huge bodies, capable of battering down the walls of hostile towns, of the colour of new-formed clouds, and each possessing eight she-elephants. With this wealth, O king, I will stake with thee.'"
Vaisampayana continued,--"Unto Yudhishthira who had said so, Sakuni, the son of Suvala, laughingly said, 'Lo, I have won it!'
Yudhishthira said,--'I have as many cars as elephants, all furnished with golden poles and flag-staffs and well-trained horses and warriors that fight wonderfully and each of whom receiveth a thousand coins as his monthly pay whether he fighteth or not. With this wealth, O king, I will stake with thee!'"
Vaisampayana continued,--"When these words had been spoken, the wretch Sakuni, pledged to enmity, said unto Yudhishthira, 'Lo, I have won it.'
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
போரில் தோல்வி என்பதையே அறியாத சிறந்த ஆயிரம் யானைகளைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார். பின்னர் ஆயிரம் தேர்களைத் தோற்றார்.
எண்ணி லாத கண்டீர் - புவியில்
.. இணையி லாத வாகும்
வண்ண முள்ள பரிகள் - தம்மை
.. வைத்தி ழந்து விட்டான்.
நண்ணு பொற்க டாரம் - தம்மில்
.. நாலு கோடி வைத்தான்.
கண்ணி ழப்பவன் போல் - அவையோர்
.. கணமி ழந்து விட்டான். (194)
பதம் பிரித்து:
எண் இலாத கண்டீர் - புவியில்
.. இணை இலாத ஆகும்
வண்ணம் உள்ள பரிகள் - தம்மை
.. வைத்து இழந்துவிட்டான்.
நண்ணு பொற்கடாரம் - தம்மில்
.. நாலு கோடி வைத்தான்.
கண் இழப்பவன் போல் - அவை ஓர்
.. கணம் இழந்து விட்டான்.
அ. சொற்பொருள்: கடாரம் - கொப்பரை. பொன்னாலான பெரிய கொப்பரைகள். (கடாரம் என்பது பர்மாவுக்கு - தற்போதைய ம்யான்மார் - இன்னொரு பெயர். இது இன்னொரு பொருள். இங்கே பொருந்தாது.)
ஆ. இலக்கணம்:
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)
ஈ. பாடல் சொல்வது:
இந்தப் புவியில் இவற்றுக்கு இணையில்லை என்னும்படியான, எண்ணிக்கையில் அடங்காத குதிரைகளை வைத்து இழந்தான். பொன்னால் செய்யப்பட்டு, பொன்னால் நிரப்பப்பட்ட கொப்பரைகள் நாலு கோடி வைத்தான். கண்ணை இழப்பதைப் போல் அவற்றை ஒரே கணத்தில் இழந்துவிட்டான்.
இந்தப் புவியில் இணையற்ற குதிரைகள் என்பதை வியாசர் எப்படிச் சொல்லியிருக்கிறார் என்று மொழிபெயர்ப்பில் பாருங்கள்.
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
Yudhishthira said.--'The steeds of the Tittiri, Kalmasha, and Gandharva breeds, decked with ornaments, which Chitraratha having been vanquished in battle and subdued cheerfully gave unto Arjuna, the wielder of the Gandiva. With this wealth, O king, I will stake with thee."
Vaisampayana continued, "Hearing this, Sakuni, ready at dice, adopting unfair means, said unto Yudhishthira: 'Lo, I have won!'
.... .... .... ....
Yudhishthira said,--'I have four hundred Nidis (jewels of great value) encased in sheets of copper and iron. Each one of them is equal to five draunikas of the costliest and purest leaf gold of the Jatarupa kind. With this wealth, O king, I will stake with thee.'"
Vaisampayana continued,--"Hearing this, Sakuni ready at dice, adopting foul means, said unto Yudhishthira, 'Lo, I have won it!'"
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
பின்னர் ஆயிரம் தேர்களைத் தோற்றார். அர்ச்சுனன் வசம் உள்ள கந்தர்வ லேகத்துக் குதிரைகளைப் பந்தயப் பொருளாக வைத்துத் தோற்றார். இவ்வாறு இன்னும் பலவற்றைத் தொடர்ந்து யுதிஷ்டிரர் தோற்றுக்கொண்டே வந்தார்.
மாடி ழந்து விட்டான் - தருமன்
.. மந்தை மந்தை யாக
ஆடி ழந்து விட்டான் - தருமன்
.. ஆளி ழந்து விட்டான்
பீடி ழந்த சகுனி - அங்குப்
.. பின்னும் சொல்லு கின்றான்.
நாடி ழக்க வில்லை - தருமா
.. நாட்டை வைத்திடென்றான். (195)
பதம் பிரித்து:
மாடு இழந்து விட்டான் - தருமன்
.. மந்தை மந்தையாக
ஆடு இழந்து விட்டான் - தருமன்
.. ஆள் இழந்து விட்டான்
பீடு இழந்த சகுனி - அங்குப்
.. பின்னும் சொல்லுகின்றான்.
நாடு இழக்கவில்லை - தருமா
.. நாட்டை வைத்திடென்றான்.
அ. சொற்பொருள்: -
ஆ. இலக்கணம்: -
இ. யாப்பு:
நாலடி எழுசீர்ச் சிந்து. (நாலடி எண் சீர்ச்சிந்து என்று தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் ஆய்வுப் பதிப்பு குறித்திருந்தாலும், அப்படிக் கொள்வதற்கு ஏது இல்லை.)
ஈ. பாடல் சொல்வது:
மந்தை மந்தையாக மாடுகளை வைத்து இழந்தான். ஆடுகளை வைத்து இழந்தான். ஆட்களை வைத்து இழந்தான். பெருமை தரத்தக்கனவற்றை எல்லாம் இழந்தவனான சகுனி அவனைப் பார்த்துச் சொன்னான். 'தருமா, இன்னும் நாட்டை இழக்கவில்லை. நாட்டைப் பந்தயமாக வை.'
இணையான இடத்தில் வியாச பாரதம் (கிஸரி மோஹன் கங்கூலியின் ஆங்கில மொழிபெயர்ப்பு):
'Yudhishthira said,--'I have, O son of Suvala, immeasurable kine and horses and milch cows with calves and goats and sheep in the country extending from the Parnasa to the eastern bank of the Sindu. With this wealth, O king, I will play with thee.
Vaisampayana said,--"Hearing this Sakuni, ready with the dice, adopting unfair means, said unto Yudhishthira, 'Lo, I have won!'
Yudhishthira said,--'I have my city, the country, land, the wealth of all dwelling therein except of the Brahmanas, and all those persons themselves except Brahmanas still remaining to me. With this wealth, O king, I will play with thee.'
(இடையில் விதுரனுக்கும் துரியோதனன் போன்ற மற்றவர்களுக்கும் நடக்கும் வாதப் பிரதிவாதங்களை பாரதி விட்டுவிட்டான்.)
இணையான இடத்தில் வியாச பாரதம் (வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள தமிழ் மொழிபெயர்ப்பு):
பின்னர் தருமர் சிந்து நதியின் கிழக்கே பர்ணாசி என்னும் இடத்தில் உள்ள பசு மந்தைகளையும், குதிரைக் கூட்டங்களையும், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் போன்றவற்றையும் சூதில் வைத்து விளையாடித் தோற்றார்.
பின்னர் தருமர், நாடும், நகரமும் என்னுடைய உடைமைகள். பிராமணர் அல்லாத மக்களும் என்னுடைய உடைமைகள். தற்போது இவையே பந்தயப் பொருள்கள்,' என்றார். சகுனி காய்களை உருட்டினான். வெற்றி பெற்றான்.
நாட்டை வைக்கும் பகுதியில் பாரதி எதனைக் குறிப்பாக விட்டிருக்கிறான் என்பதைக் கவனிக்கவும்.
மாடிழந்துவிட்டான், ஆடிழந்து விட்டான் என்பனவெல்லாம் ஏதோ எதுகை நோக்கிப் போடப்பட்டவை அல்ல. வியாசரின் மூலத்தில் உள்ளவை அப்படி அப்படியே தமிழ்க் கவிதை வடிவம் பெறுகின்றன.
தொடர்வேன்...
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.