வாழிய பாரதம் 2
வளஙகளில் நிறைந்த நாடு
வாரிகள், பொய்கை, ஏரி
குளங்களில் நிறைந்த நாடு
கோயில்கள் சூழ்ந்த நாடு
களம்பல கண்ட நாடு
கண்ணியம் மிகுந்த நாடு
விளங்கிடும் அனைத்தும் நன்கு
விளைத்திடும் நமது நாடு
இந்தியா செல்வத் திற்கோர்
இருப்பிடும் என்றன் னாளில்
சந்தைகள் போட வந்த
சரித்திரம் மிகுந்த நாடு
இந்தியா மாற வில்லை
இந்தியர் மாறி விட்டார்
சொந்தமாய்க் கொண்ட மக்கள்
சுத்தமாய் மாறி விட்டார்
முன்னவர் வியர்வை சிந்த
முளைத்தநல் மரங்கள் கூட்டம்
அன்னையர் நதியில் ஆடி
அளைந்தநல் நதிகள் ஈட்டம்
மன்னிடும் மலைகள், காலை
வருடிய வயல்கள், சோலை
இன்னரும் பழமை காட்டி
இலங்கிடும் புதுமை வீச்சு!
மண்ணிலே வீழு கின்ற
மழைத்துளி யதனின் வீக்கம்
தண்ணென மேலே வீழ்ந்து
தடவிடும் குளுமை ஆட்சி
கண்படும் இடத்தி லெல்லாம்
கனிந்திடும் வண்ணக் காட்சி
விண்ணினை நெஞ்சுக் குள்ளே
விளைத்திடும் தேசம் வாழ்க!
கரிசலா, காளான் புற்றா
கருக்கிடும் களரா, மண்ணில்
விரிசலா, செம்மண் மேடா
விளிந்திடாப் பொட்டல் காடா
தரிசுகள் விரிவா, எந்தத்
தன்மைய தான போதும்
உரிமைகொள் சொந்த பூமிக்(கு)
ஒப்புயர் வேறொன் றேது?
வளங்களை வளர்த்தி டாமல்
வாரிசு வளர்த்து விட்டோம்
விளங்கிடும் தர்ம நீதி
விலக்கியே ஒதுக்கி விட்டோம்
எளிமையை மறந்து போனோம்
இரவலில் வாழுகின்றோம்
அளிப்பதற் கேற்ப நாமும்
அரங்கிலே ஆடு கின்றோம்!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBD_iMYmV6g1yOiei1DE493F2DehN7Z8vY-M_%2BRtKYKZcw%40mail.gmail.com.