வணக்கம்.
இந்த வருடம் 2025 கலைமகள் தீபாவளி மலரில் வெளியான "சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ சங்கராச்சார்யாள் அனந்தஶ்ரீ
விபூஷித ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மகா ஸ்வாமிகள் பற்றிய கட்டுரையை முகநூல் அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
*******************************************
“எல்லோருக்குமான ஞான குரு”
(மீ. விசுவநாதன்)
ஞான பூமியான பாரத தேசத்தில் பரம்பரையாக ஞானிகளும் மகான்களும் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். மக்களுக்கு தர்ம வழியில் நடந்து காட்டி அவர்களை மேம்படச் செய்வார்கள். அப்படியோர் மகான் ஸ்ரீ ஆதிசங்கரர். கேரள மாநிலம் காலடி என்ற கிராமத்தில் எட்டாம் நூற்றாடில் அவதரித்தார். சனாதன தர்மத்தைக் காக்க வேண்டி ஸ்ரீ பரமேஸ்வரனே சங்கரராகப் பிறத்ததால் அவரை அவதாரம் என்கிறோம். வேத தர்ம நெறிகளை உலகெங்கும் பரப்ப எண்ணி சங்கரர் நிறுவிய நான்கு ஆம்னாய பீடங்களில் முதல் பீடம் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடமாகும். அந்தப் பரம்பரையில் வந்தவர் 34ஆவது பீடாதிபதியாக அருளாட்சி செய்த ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாசுவாமிகள் ஆவார்கள்.
மகாசுவமிகளின் பூர்வாஸ்ரமப் பெயர் நரசிம்மன். பிறந்த ஊர் சிருங்கேரி. அவரது பிறப்பே தெய்வீக மானதாகும். தந்தையார் கோபாலகிருஷ்ண சாஸ்த்ரிகள். தாயார் லெஷ்மி அம்மாள். இந்த தம்பதியருக்கு பதினான்கு குழந்தைகள். அதில் பதிமூன்று குழந்தைகள் பிறந்து சில காலத்திலேயே இறந்து போய் விடுகின்றன. மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் பெற்றோர். மீண்டும் கர்ப்பமான லெஷ்மி அம்மாள் ஒரு நவராத்திரி காலத்தில் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதியில் நடக்கும் சுகாசினி பூஜைக்குச் சென்றிருந்தார்கள். அங்கு வரிசையாக அமர்ந்திருந்த சுகாசினிகளுக்குத் தீர்த்தம் போட்டுக் கொண்டு வந்த அப்போதைய 33ஆவது பீடாதிபதிகளாக விளங்கிய ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நிருசிம்ஹ பாரதீ மகாசுவாமிகள் அங்கிருந்த லெஷ்மி அம்மாளைப் பார்க்கிறார். அந்த அம்மாளில் கண்களில் நீர் கோத்துக் கொண்டிருக்கிறது. என்னம்மா என்கிறார். “எனக்கு இதற்கு முன்பு பிறந்த பதிமூன்று குழந்தைகளும் இறந்து விட்டன. இந்த கர்ப்பமாவது தங்க வேண்டும் குருநாதா” என்று வேண்டுகிறார். “ “சரி..இந்தக் குழந்தையை மடத்துக்குத் தந்து விடு. சௌகர்யமாக இருபப்பான்” என்கிறார். குழந்தை நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அந்தத் தாய் “சரி தருகிறேன் “ என்றார். 1892ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்த அந்தக் குழந்தைதான் நரசிம்மன்.
சிறுவயதிலேயே அவனுக்கு வேத மந்திரங்களுடன் ஆங்கிலப் பாடமும் கற்பிக்கும் ஒரு பள்ளியில் சேர்த்தனர். நன்றாகப் படிக்கின்ற நரசிம்மனின் மனத்தில் எப்போதும் இறை சிந்தனையே இருந்தது. ஒரு நாள் அவரது அம்மா ஒரு பொருளை வாங்கி வரச்சொல்லி கடைக்கு அனுப்பினார். அவரோ மனத்தில் “மூகபஞ்சதசி” ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே புற உலகத்தை மறந்து அந்த குறிப்பிட்ட கடையையும் தாண்டிச் சென்று விட்டார். இளம் வயதிலேயே இப்படி இறைச் சிந்தனையோடும், புறப் பொருள்களில் விருப்பம் இல்லாமலும் இருந்ததைக் கண்டு ஸ்ரீ மகாசுவாமிகள் சிருங்கேரி மடத்தின் பாடசாலையிலேயே சேர்த்துக் கொண்டார். படிப்பிலே கெட்டிக் காரனாக விளங்கிய நரசிம்மனை பங்களூரின் உள்ள சிருங்கேரி மடத்தின் பாடசாலைக்கு மேல்படிப்பிற்காக அனுப்பினார். சிறந்த திறமையான மாணவனாகவும், புறவுலகில் பட்டற்ற தன்மையோடும் இருக்கும் நரசிமனையே தனக்குப் பிறகு ஸ்ரீ சாரதா பீடத்தில் பீடாதிபதியாக வர வேண்டும் என்று ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நிருசிம்ஹ பாரதீ மகாஸ்வாமிகள் ஸ்ரீ சாரதாம்பாளிடம் மூன்று ஸ்லோகங்கள் மூலமாகப் பிராத்தனை செய்து கொண்டார்.
அவர் ஸித்தி அடைந்த பிறகு குருநாதரின் விருப்பப் படியே 1912ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ஸ்ரீ நரசிம்ம சாஸ்திரிகளுக்கு சன்யாசம் கொடுத்து ஸ்ரீ சந்திர சேகர பாரதீ என்ற யோகப் பட்டமும் தந்து மறுநாள் ஸ்ரீ சிருங்கேரி வியாக்யான ஸிம்ஹாசனத்தில் மிகவும் கோலாகலமாகப் பட்டபிஷேகமும் நடந்தது.
தனது குருநாதரின் காலத்தில் கட்டத்தொடங்கிய ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயத்தையும், தனது குருநாதரின் சமாதியில் ஒரு அழகான ஆலயத்தையும் கட்டி கும்பாபிஷேகமும் முடித்தார். ஆசார்யாள் எப்பொழுதும் இறை தியானத்திலேயே இருக்க விரும்பினார். அவர் ஸ்ரீ சாரதா சந்திர ,மௌலீஸ்வரர் பூஜை செய்ய ஆரம்பித்தால் எப்பொழுது முடிப்பார் என்றே தெரியாது. தன்னை மறந்து அந்த பிரும்மத்திலேயே ஒன்றி இருப்பார். நரசிம்ம ஜெயந்தி அன்று மதியம் ஆரம்பிக்கும் பூஜை சந்தியா காலத்தில் முடிப்பார். அதுதான் ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தி தோன்றிய நேரம் என்று களிப்பார்.
அவர் யாத்திரை சென்றது 1924ஆம் ஆண்டு முதல் 1927 ஆம் ஆண்டு வரையான நான்கு வருடங்கள்தான். கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா என்று அவர் சென்ற இடங்களில் எல்லாம் பக்தர்களை ஆட்கொண்டார். நாத்திகம் பேசிய நாக்குகளெல்லாம் இவரை தரிசித்தபின் ஆத்திக நாமம் சொன்னது சரித்திரம்.
மதுரைக்கு விஜய யாத்திரை செய்த சமயம் ஆசார்ய பக்தரான ஒரு வக்கீல் தனது நண்பரையும் தரிசனத்திற்கு அழைத்தார். அந்த நண்பருக்கு சன்யாசிகளைப் பிடிக்காது. அதனால் அவரைப் பார்க்க வரமாட்டேன் என்றார். ஒருமுறை வா. பிறகு நீ வர வேண்டாம் என்றார் வக்கீல். சரி...உனக்காக வருகிறேன். ஆனால் அவரை நமஸ்கரிக்க மாட்டேன். சட்டையைக் கழற்ற மாட்டேன் என்று சொன்னார். சரி. என்று அந்த நண்பரை ஆசார்யாள் தங்கி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். மதியம் மணி இரண்டு. ஆசார்யாள் பிக்ஷைக்குப் புறப்படும் நேரம். எல்லோரும் அவரை நமஸ்கரித்தார்கள். ஆசார்யாள் நடந்து அவரது அறைக்குச் செல்லும் நேரம் தன் பின்னல் திரும்பிப் பார்த்தார். அவரது பார்வைக்கு நேராக வக்கீலின் நண்பர் நின்று கொண்டிருந்தார். அடுத்த நொடியில் அந்த அதிசயம் நேந்தது. வக்கீலின் நண்பர் தன் சட்டையைக் கழட்டி இடுப்பில் கட்டிக் கொண்டு நெடுஞ்சாண்கிடையாக ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்தார். நமஸ்கரித்த அந்த பக்தரை “எழுந்திருங்கோ” என்றார் குருநாதர். “ இந்தப் பாவியை மன்னித்தேன் என்று சொல்லுங்கள்..அப்புறம்தான் எழுந்திருப்பேன்” என்றார் வக்கீலின் நண்பர். “சரி எழுந்திருங்கள். நாளைக்கு தரிசனத்திற்கு வாருங்கள்” என்று சொல்லிச் சென்றார் ஆசார்யாள். மறுநாள் குடுமி, பஞ்சகச்சம் சகிதம் தரிசிக்க வந்த அந்த நண்பர் தனது இறுதிக் காலம் வரை குருநாதரின் நினைவிலேயே, தொண்டிலேயே வாழ்ந்தார். அந்த நண்பர்தான் ஸ்ரீமந்திரேச சர்மா என்பவர். குடியரசுத் தலைவர் உயர்திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஆசார்யாளை தரிசனம் செய்ய வந்த பொழுது இந்த மந்திரேச சர்மாதான் ஆசார்யாளுக்கும் குடியரசுத் தலைவருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
இதுபோல எண்ணிக்கையில் அடங்காத நிகழ்ச்சிகள் குருநாதரின் கருணை மழையால் நடந்துள்ளதை அவரோடும், அவரது குருநாதரோடும், அவரது சீடரான ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள், ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளோடும் மிகுந்த பக்தி பூர்வமாகத் தொண்டு செய்த ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகள் ஸ்ரீ குருகிருபா விலாசம் என்ற நூலிலே பதிவு செய்திருக்கிறார்கள்.
ஒரு பக்தர் ஆசார்யாளை தரிசனம் செய்ய வந்தார். குருநாதா எனக்கு நீங்கள் மந்திரோபதேசம் அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கேட்ட பக்தரை குருநாதர் பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்த கணம்,” உமக்கு மாத்ரு தேவோ பவ” என்றால் என்ன என்று தெரியுமா” ....தெரியும் குருநாதா.....” பித்ரு தேவோ பவ” என்றால் தெரியுமா?...தெரியும் குருவே....” ஆசார்ய தேவோ பவ” தெரியுமா? ...தெரியும் குருநாதா.. என்ற பக்தரிடம் “ முதலில் உங்கள் அம்மா, அப்பாவை கவனியுங்கள். அப்புறம் குருதரிசனம் பண்ணலாம்” என்றதும் அந்த பக்தர் பதறிப் போனார். “நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். அவர்கள்தான் என்னுடன் ஒத்துப் போவதில்லை” என்றதும் “ உங்களோடு கடமை பெற்றோருக்குப் பணி செய்வதுதான். பலனைப் பற்றிக் கவலைப் படவேண்டாம்...” என்று அவருக்கு ஆசி கொடுத்தது சமுதாயத்தில் பெற்றோர்களுக்கு எந்த இடம் என்பதை குருநாதர் காட்டினார்.
ஸ்ரீ சந்திர சேகர பாரதீ மகாஸ்வாமிகள் 13 வயதான சீனிவாசன் என்பவரைத் தனது சீடராகத் தேர்வு செய்து ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வமிகள் என்ற யோகப் பட்டமளித்து சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 35ஆவது பீடாதிபதி ஆக்கினர்.
“தான்” என்ற எண்ணமில்லாத உன்னதத் துறவியாக விளங்கி எல்லா உயிரினங்களிடமும் கருணை காட்டி 1954ஆம் ஆண்டு நவராத்திரிப் பண்டிகைத் தொடங்கும் முந்தைய நாளான மகாளய அமாவசை தினத்தில் பிரும்ம ஒளியானார்.
“சதாத்மத் தியான நிரதம் விஷயேப்யப் பரான்முகம்
நொளமி சாஸ்ரேஷு நிஷ்ணாதம் சந்திரசேகர பாரதீம்”
“எப்பொழுதும் தியானத்தில் இருப்பவரும், புற விஷயங்களில் விருப்பமில்லாதவரும், வேத சாஸ்திரங்ளை நன்கு தேர்ந்து உணர்ந்தவருமான ஸ்ரீ சந்திர சேகர பாரதீயை வணங்குகுறேன்” என்ற பொருளில் அவரது தியானஸ்லோகம் அமைந்துள்ளது.
*********************************************************************************