மடவளாகம் இலக்குமண பாரதியார் (1767 - 1859) பழையகோட்டை
வள்ளியம்மன் அவர்களுக்கு
எழுதிய சீட்டுக்கவி என் இலக்கியத் தேடலில் கிடைத்தது.
கி.பி. 1800 வாக்கில் சிவராத்திரிக்குச் சற்றுமுன்னர் எழுதிய அந்த
நிருபத்தையும்,
ஒப்பீட்டுக்கு உதவுமுகமாக மகாகவி பாரதியார் மே திங்கள் 1919 வரைந்த
கடிதத்தையும் இணையத்தில் ஏற்றியுள்ளேன்.
படித்தருள்க! உங்கள் கருத்தறிய அவா.
http://nganesan.blogspot.com/2009/07/chittukkavi.html
அன்பிணை,
நா. கணேசன்
திருமருவு பழநிமலை முருகேசர் அரவிந்த,
செங்கமல பாத தியானம்
திரிகின்ற தண்டுமிண் டுகள்கொண்ட கவிமலை
செகுத்திடச் செய்வச் சிரம்
செய்யகார் காலமழை என்னவே மதுரித
செழுந்தமிழ் கொழிக்கும் மேகம்
தென்பரவு மங்கைபுர இலட்சுமண பாரதி
தெளிந்தெழுதி விட்ட நிருபம்
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டிற் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது! பொருள்புதிது! வளம்புதிது!
சொற்புதிது! சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை என்று நன்கு!
பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறகு மாங்கே
விராவுபுகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவியென்றன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்
இருவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்வதில் ஒரே மாதிரி கம்பீர தொனியில் பேசுகிறார்கள் . என்ன ஒற்றுமை! இதைப் படிக்கும்போதே "கப்பலோட்டிய தமிழன்" திரைப்படத்தில் சுப்பையா பாரதி வேடத்தில் நீதிமன்றத்தில் "எமக்குத் தொழில் எழுத்து" என்று நெஞ்சுயர்த்தி கண்களில் பெருமிதமெல்லாம் கூட்டி சொல்கின்ற காட்சி கண்முன்னே விரிகிறது. இந்தப் பாடல்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி.
2009/7/20 N. Ganesan <naa.g...@gmail.com>:
--
சுதாவேதம்
கவியரசர் கவிமடலைத் தந்தெம்மைக்
களிப்புறச் செய்ததிரு கணேசர் அவர்களுக்கு
நவிலுமென் உளமார்ந்த நன்றி உரித்தாக.
நிச்சயமாய் இதுவென்றன் சிந்தனையைக் கிளப்பிவிடும்.
கவியெழுதும் ஆவலினைத் தூண்டிவிடும் ஐயமில்லை.
காவியமும் பிறந்திடலாம், களிப்பூட்டும் நினைத்தாலே!
அவியாத ஊக்கமூட்டி அரும்பணி செய்துவரும்
அன்பர் கணேசன் அவர்களுக்கு மிக்க மிக்க நன்றியே!
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
சந்த வசந்தம்
http://groups.google.com/group/santhavasantham
கவியரங்கம் -28
தொடக்கம்
25 ஏப்ரல் 2008
1.
கவியரங்கம் 28-
25 -4-2008 ல் தொடங்குகிறது.
தலைவர்-. கவிஞர் நடராஜன் சீனிவாசன்
தலைப்பு; சீட்டுக்கவி(கடிதத்தில் கவிதை)
மின்னஞ்சல் வந்த பிற்பாடு கடிதக் கலையின் அழகு சற்றே நசித்துவிட்டது.
கவிதையில் அதை மீண்டும் நிமிர்த்திப்பார்க்கலாமே!
எதைப்பற்றி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும்(கடவுளுக்குக் கூட)
கவிதைக் கடிதம் எழுதலாம்.
சீட்டுக்கவியின் அமைப்பு நான்கு பிரிவாக அமையும்
1 முதலில் தன்னைப் பற்றிய அறிமுகம். - தற்புகழ்ச்சியாகக் கூட இருக்கலாம்
2 யாருக்கு எழுதுகிறோமோ அவரைப் பற்றி!
3 செய்தி
4 வேண்டுதல்
இலந்தை
==================
அனைவருக்கும் வணக்கம்.
தாமத மதமாற்றத்துக்கு மன்னிக்கவும். மீண்டும் சாதாரண மதத்துக்கு வந்துவிட்டேன்.
சீட்டுக்கவி என்ற தலைப்பில் வரும் 25-4-2008 அன்று தொடங்கும் இணையக்
கவியரங்கத்திற்கு தலைவராக இருக்கும் வாய்ப்பை அன்புக்குரிய பெருங்கவிஞர்
இலந்தை அவர்கள் எனக்கு வழங்கியுள்ளார். எல்லோருடைய அன்பினாலும் ஆசியாலும்
ஆதரவாலும் இக்கவியரங்கினை செவ்வனே நடத்த விழைகிறேன்.
இந்த சுட்டியில் சீட்டுக்கவி பற்றி அறியலாம்.
http://www.visvacomplex.com/cittu_kavi1.html
சந்தவசந்தத்திற்கு என் சீட்டுக்கவி:
சிசுக்கவி என்னை சிரசாக்கி மன்றில்
பொசுகென் றமர்த்திப் போற்றி - உசுப்பிய
சந்த வசந்தமே சிந்தனை ஊற்றெடுக்கும்
முந்துகவி முற்றத்தைத் தா.
அன்புடன்
நடராஜன்.
===============
கவியரங்கிற் கணிசெய்யக் கவிஞரெலாம் வருவீரே
புவிவந்த வேனிலெனும் புதுப்பருவம் பொருத்திடுவீர்
தவிக்கவைக்கும் பணிச்சுமையின் தாக்குதலும் தாங்கிடுவீர்
குவிந்திடவும் நாளுளதோ? கூப்பிட்டேன் பதிவதற்கே!
கவியரங்கம் - 28
சீட்டுக்கவி கவியரங்கத்திற்கு இதுவரை ஒப்புதல் அளித்தவர்கள்:
1. கவிஞர் இலந்தை இராமசாமி அவர்கள்
2. கவிஞர் பசுபதி அவர்கள்
3. கவிஞர் அனந்த் அவர்கள்
4. கவிஞர் அகிலாராமசாமி அவர்கள்
5. கவிஞர் தங்கமணி அவர்கள்
6. கவிஞர் கவியோகி வேதம் அவர்கள்
7. கவிஞர் வித்யா அவர்கள்
8. கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்கள்
அனைத்து கவிஞர்களையும் ஒப்புதல் அளிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.
அன்புடன்
நடராஜன்.
==============
2.
கவியரங்கம் - 28
கலைமகள் வாழ்த்து:
மண்ணுலகம் வாழ மயக்கங்கள் மாறிட
கண்ணெனும் ஞானம் கனிந்தளிக்கும் தேவே
கலைமகளே உன்மகனைக் கண்டெடுத்துக் காத்துத்
தலைமைத் தகுதியைத் தா
அவை வணக்கம்.
நூறாம் புலவரும் நூல்பல கற்றோரும்
ஆறாம் அறிவுக் கணிசெய் பெரியோரும்
கூறும் கவிகளைக் கூட்ட வாணியெனை
நாறாகச் செய்தாள் நயந்து.
எனது சீட்டுக்கவி:
காட்டுத் தலைவனுக்கொரு சீட்டுக்கவி
முல்லையைத் திருத்திய மருதத்தின் மைந்தன்நான்
எல்லையில் தண்குறிஞ்சி எழில்நெய்தல் கொண்டாலும்
மேய்ப்பவனில் கானகத்து மாயோனில் மயங்கியவன்
வேய்துளையில் காற்றுசெயும் வேணுகானக் காதலன்நான்
வன்காட்டு விளைபொருட்கள் வக்கனையாய் உண்ணுபவன்
மென்பூக்கள் சிந்துமணம் மேனியுள்ளே நிரப்பினவன்
ஓடையினால் வளர்த்தீயால் சூடுசுகம் சொக்கியவன்
காடைமுதல் கருடனொடு கருங்குரங்கு கடுவனொடு
மீனடர்ந்த தடாகத்தை மானுலவும் சோலையினை
கானடர்த்தி பின்னலினை ககனமுயர் மரத்தோற்றை
கண்ணுறவே கண்ணுறவே சளைத்ததிலன் சலித்ததிலன்
எண்ணற்ற செல்வத்தால் ஐம்புலனும் சுகித்தவனாய்
கற்பகத்தின் தருவொத்த காட்டுநிலத் தலைவனுக்கு
அற்பநரன் நடராசன் அடக்கமுடன் வரையுமடல்:
அன்றொருநாள் பாலகனாய் மண்தின்ற மாயோனே!
மண்ணுலகின் பெருஞ்சொத்து மறைகாக்க மீனானாய்
மண்ணானாய் வடவரையாம் மத்திற்குக் கூர்மமமாகி
மண்ணுருண்டை தன்கோட்டு மத்திவைத்த வராகனே
மண்மரியா ரண்ணியனை மடிமரித்த நரசிங்கா
மண்முழுதும் ஓரடியாம் மாவுருவ வாமனனே
மண்ணற்ற வானவர்காண் மாதரிந்த கோடலியே
மண்மகளை மண்முடித்து மண்ணாண்ட சீராமா
மண்ணுழவு ஏர்க்கலப்பை மேலணிந்த பலராமா
மண்பெறவே மாயுத்தம் மழுவின்றி செய்தகண்ணா
மண்ணழியும் போதினிலே மண்காக்க வருந்தேவா
மண்புழுவாம் நானுனக்கு மடலொன்று தருகின்றேன்!
ஏனிந்த பிறவிதனை எனக்களித்தாய் பரந்தாமா?
நானிந்த நானிலத்தில் நடந்துவந்த பாதையிலே
ஆறுதலை வேண்டுநிலை அடையாமல் எனைக்காத்தாய்
கூறுகின்ற குறையாக குறிப்பிடவும் ஒன்றுமில்லை
மாண்டுவிடும் நாள்வரையில் மாளாத ஆசைகளால்
ஆண்டுகளும் சென்றிடுமோ வாநாளும் கழிந்திடுமோ
இறைநீயும் கேட்டதெலாம் ஈந்திட்டாய் ஆனாலும்
நிறையென்ன என்வாழ்வில் நிதங்கழியும் வெறுநாளால்
வேடிக்கை மனிதனென வீழேனனே இங்கென்றே
பாடியொரு புரட்சிதனை பன்னிய பாரதியால்
தவிக்கின்ற தென்மனமும் தாளாத ஆர்வமதால்
கவிச்சீட்டால் நானுன்னைக் கேட்பதுவும் இதுதானே!
துர்ப்புறத்தில் சேருதற்கு துன்பங்கள் துரத்தியதால்
நிர்பந்தத்த் துட்டனையும் நீசேர்ந்து எதிர்செய்து
மண்புதைந்த மரக்காலில் மரணிக்கும் போதினிலே
மண்ணின்று விண்முட்டி மாவுருவக் காட்சியினால்
ஆட்கொண்ட பரந்தாமா அடியேனுக் கருள்செய்வாய்
கேட்கின்றேன் கேசவனே கேள்விதனைத் தீர்த்திடுவாய்
இன்னமும் நின்னருளே புரிந்திலேனே என்றறிவேன்
என்னவுன் திருக்குறிப்பே என்னேக்கம் தீர்த்திடுவாய்
அறிவூனம் கொண்டதனால் ஆற்றுதலும் அறிகிலேனே
அறியாமை நீக்கியென்றன் அறிவினுட் புகட்டுவையே
நடராசன்
சென்னை
25-04-2008
=========
காட்டுத் தலைவன் நம்வாழ்வில்
. காட்டும் ஜாலம் யாவிற்கும்
. . கார ணத்தைச் சொல்லென்று
சீட்டுக் கவிதை ஒன்றளித்தார்
. சீனி வாசன் நடராஜன்
. . திறமும் நயம் ஒன்றிணைத்து .
பசுபதி
25-4-08
============
கேட்ட அனைத்தும் தந்தளித்த
கேசவன் ஞாலம் நான்வந்த
கேள்விக்கும் பதில் சொல்வாரோ?
பசுபதி ஐயா, மிக நன்றி.
அன்புடன்
நடராஜன்.
=====================
அருமையாய் சொன்னீர்..
அவதாரங்கள் அனைத்தையுமே..
ஆசை மயக்கதிலிருந்து நாம் தெளிய..
அருமருந்தாய் அறிவை புகட்டின உம்கவியுமே
அன்புடன்
அகிலா ராமசாமி
==================
நால்வகை நிலப்பகுப்பும்
பத்து அவதாரங்களும்
அறிவியலோடு அப்படியே ஒத்துப் போகும்
ஆச்சர்யத்திலிந்து நான் விடுபடவே விரும்புவதில்லை!
நன்றி அகிலா அவர்களே!
அன்புடன்
நடராஜன்.
=============
கேட்டதெலாம் பெற்றபின்னும்
கிஞ்சித்தும் மகிழ்ச்சியில்லை
கேட்டதிலே பிழையா, முன்
கிட்டியதில் தான் பிழையா?
வாட்டமுறும் மனத்தினொடு
வனத்தலைவர் தன்னிடமே
கேட்டவரம் நல்லபடி
கிடைத்திடவே எம்வாழ்த்து
நூறாம் என்றால் இரண்டு பொருள்- நூறாவது, துண்டுபட்ட அல்ல நொறுங்கிய
நாறாய் என்பது நாராய் என இருக்கவேண்டுமோ?
கூட்ட வாணியெனை - தளைதட்டுகிறது
இலந்தை
==================
நூறாம் என்பதற்கு 'நூற்றெண்ணிக்கையில்' என்ற பொருளிலேயே எழுதினேன்.
அதற்கு இன்னொரு பொருள் இருப்பதை இப்போது அறிந்து கொண்டேன்.
நாறாய் என்பது நாராய் என்றே இருக்கவேண்டும்.
கூட்ட வாணியெனை - 'கூட்டிட வாணியெனை' என்று மாற்றிவிடுகிறேன்.
பிழை சுட்டலுக்கு மிக நன்றி, இலந்தை ஐயா.
கேட்டதெலாம் பெற்றதனால்
கிஞ்சித்தும் குறையுமிலை
கேட்டதிலே பிழையுமிலை
கிட்டியதில் பிழையுமிலை
வாட்டமென்றும் மனத்திலிலை
வனத்தலைவர் கட்டளையை
கேட்டறிய ஆசைகொண்டேன்
கிடைத்திலவே வார்த்தைகளும்!
அன்புடன்
நடராஜன்.
=====================
நாறாய் என்று இருப்பதில் பிழை இருப்பதாகத் தோன்றவில்லை. எதுகை நோக்கி
ரகரத்தை றகரகமாக்கும் வழக்கம் பலகாலமாகவே இருந்திருக்கிறது.
கற்காலத்திலேயே இதற்குப் பல எடுத்துக் காட்டுகளைத் தந்திருக்கிறேன்.
இன்றைக்கு ஓர் எடுத்துக் காட்டு:
அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே, திருவே வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.
திருவாசகத்தில் இப்படி ஒருசில இடங்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.
முன்னர் எடுத்தளித்த காட்டுகளில் பெரிய புராணம், கம்ப ராமாயணம்
எல்லாம்கூட இருந்ததாக நினைவு.
--
அன்புடன்,
ஹரிகி.
=================
எதுகைகளை மாற்றிப் பயன்படுத்துவதில் இருவகை உண்டு. 'ன்' க்கு 'ண்' ர
வுக்கு ற வும் பயன்படுத்திய பாடல்கள் அறிவேன். ஆயினும் வேண்டுமென்றே
எதுகைக்காக மாற்றிப் பயன்படுத்துகிற போது புலவன் அறிந்தே
ப்யன்படுத்துகிறான். ஆனால் இங்கே 'நாறாக' என்ற சொல் அப்படிக்
கையாளப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை. எழுதிய கவிஞரும் நாறாய் என்பது
நாராய் என்றே இருக்கவேண்டும் என்று சொல்வதன் மூலம் ஒத்துக்கொள்கிறார்.
இலந்தை
===============
நாறாய் என்பதும் நாராய் என்றிடின் நாறாதாதோன் நாராய்
கூறாநின்ற கவிஞர் ஒப்பின் ஆவேனோ நான் வேறாய்
நாராய் நாராய் நாராய் நாராய் நாராயணஓம் நமவே...
ஹரிகிருஷ்ணன்
==============
////கூறாநின்ற கவிஞர் ஒப்பின் ஆவேனோ நான் வேறாய்///
அறிந்து செய்யவும்நான் அத்தனைப் புலவனா?
நறுமைப் பொருளை நாருக்கு உரைத்ததும்
அறியாமற் செய்பிழை என்றறிக அண்ணாவே
நடராஜன்
=============
நடராசன் தலைமையிலே நயமானக் கவித்தேராம்!
வடமிழுக்கும் சான்றோர்கள் வல்லமைக்குச் சிரம்சாய்ப்போம்!
கன்னனுக்கு அருள்செய்த கண்ணனையே வேண்டுகிற
தென்னரசன் நடராசன் திறமையைநாம் மெச்சிடுவோம்!
என்னப்பன் திருமாலின் ஈடில்லா மகிமைதனைச்
சொன்னக் கவியழகு!சொன்னமாய்த் திகழ்கிறதே!
கேட்டவரம் கேட்டபடிக் கிடைத்திடவும் தடையுண்டோ?
காட்டுகிற கருணையினில் கார்வண்ணன் மிஞ்சிடுவான்!
அன்புடன்,
தங்கமணி.
================
இலந்தை ஐயா
நான் எழுதிய சீட்டுக் கவியை
அனுப்புனர் அறிமுகம், பெறுபவர் பெருமைகள்,
விளம்பிடும் விடயம், விரும்புகின்ற விடை
என்ற வகையில் அமைத்திருக்கிறேன்.
இவ்வமைப்பு இக்கவியரங்க அறிவிப்பில் நீங்கள் காட்டிய படி அமைந்திருப்பதாக
எண்ணுகிறேன்.
சில சீட்டுக்கவிகளில் இந்த வரிசை மாறியும் காணக்கிடைக்கிறது.
என்னுடைய அமைப்பிலும் சொன்ன விதத்திலும் ஏதேனும் குறையோ அல்லது
மேம்படுத்தலோ இருந்தால் அறியத்தருமாறு வேண்டுகிறேன்.
அன்புடன்
நடராஜன்.
=============
சீட்டுக்கவிகள் கடிதங்களாக பெறுநர், விடுநர், செய்தி சுமந்து வரவேண்டும்
அவ்வளவே.
அந்த நாட்களில் புலவர்கள் பரிசு வேண்டியே பெரும்பாலும் சீட்டுக்கவி
எழுதினர். அந்தகக் கவி வீரராகவரின் சீட்டுக்கவி "ஏடாயிரம் கோடி எழுதாது
தன் மனத்தை எழுதிப்படித்த விரகன், எதுசொலினும் அதுவே எனச் சொலும் கவி
வீரராகவன்' எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார்.சீட்டுக்கவியில்
தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் போடு தன்னைப் பற்ரித் தற்புகழ்ச்சியாகக்
கூட எழுத அனுமதியுண்டு. (யாருக்கு எழுதுகிறோமோ அவரை மட்டம்
தட்டிவிடக்கூடாது அவ்வளவுதான்)
முதலில் பெறுநரைச் சொல்வதா, அனுப்புநரைச் சொல்வதா? இரண்டு வகையிலும்
பாடல்கள் இருக்கின்றன. பாரதியின் சீட்டுக்கவி பிரசித்தம். பாரதியின்
முதல் கவிதையே அவர் இந்துக்கல்லூரியில் மாணவனாக இருந்த காலத்தில்
எட்டையபுரம் மன்னருக்கு உதவி கேட்டு எழுதிய சீட்டுக்கவிதான் என்கின்றனர்.
1919ல் எழுதிய சீட்டுக்கவி மிக உன்னதமான இலக்கியம்.
கடிதமாக இருக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு எழுதினாலே போதும்.
புதிய உத்திகளை
நாமும் அறிமுகப்படுத்தலாமே!
1993ம் ஆண்டு அகில இந்திய வானொலியில் சுதந்திர தினத்தன்று(அப்பொழுது நான்
பம்பாயில் இருந்தேன்)"இந்திய வாசல் இதயம் ' எனும் தலைப்பில் பம்பாயைப்
பற்ரிக் கவிதை எழுதச் சொன்னார்கள். அகில இந்திய வானொலியின் தமிழக
னிலையங்களிலும் டெல்லியிலும் ஒலிபரப்பினார்கள். அப்போதைய நிலைய இயக்குனர்
கேட்டுக்கொண்டதற்கிணங்க என் தம்பிக்குக்
கடிதம் எழுதிப் பம்பாயைப் பற்ரித் தெரிவிப்பதாக எழுதியிருந்தேன். சிறந்த
வரவேற்புப்பெற்றது.
அமன் ஓலிநாடாவில் 'சிட்டி ஆயிஹை ஆயிஹை சிட்டி ஆயிஹை ' என்ற பாடல்
மிகப்புகழ்பெற்றது. ஒரு கடிதம் ஏற்படுத்திய தாக்கத்தை அதில் மிக
அற்புதமாகச் சொல்லியிருக்கின்றனர்.
நவரசங்களையும் உள்ளடக்கியும் கடிதங்கள் எழுதலாம்.
ஆண்டவனுக்கு, அரசியல்வாதிக்கு, உறவினர்க்கு, நண்பர்க்கு, காதலர்க்கு,
கழிசடைக்கு ---யாருக்கு வேண்டுமானாலும் எழுதலாம்.
இலந்தை
================
நல்ல கருத்துள்ள தலைமைக்கவிதை நடராஜ!
வெல்லம்போல் இனித்தது இது.
வாழ்க!
யோகியார்
==========
3.
கவியரங்கம் - 28
முதல் அழைப்பு: கவிஞர் இலந்தை
தோள்தூக்கி அமர்த்தியதால் தலைவனாக என்னை
தோன்றவைத்த பெருங்கவிஞர் இராமசாமி இங்கே
நாள்தோறும் அருங்கவிகள் அனுப்பிவைத்து நாமும்
நாள்முழுக்க தமிழ்மணமும் கவிமணமும் துய்க்க
ஆள்முதலாய் இருக்கின்ற ஆசுகவி வருக!
அரங்கினிலே ஒருசீட்டுக் கவிச்செண்டு தருக!
தாள்சிறக்க எழுதுகவி தனிச்சிறந்த இலந்தை
தாங்கிடுக முதலழைப்பை தந்திடுக கவிதை
நடராஜன்
===========
ஏற்ற தலைமை சிறப்பாக
இயற்று கின்றார் நடராஜன்
போற்று கின்றோம், அவருடைய
புலமை காட்டும் வெளிப்பாடு,
ஆற்றல், செய்யும் செயலினிலே
ஆர்வம், கவனம் எல்லாமும்
ஊற்றமாக இவ்வரங்கை
உயர்த்தும், அவர்க்கென் வணக்கங்கள்!
பாரதிக்குச் சீட்டுக் கவி
சிந்திக்கும் உள்ளத்தில் வந்தித்துப் போற்றிடும்
செந்தமிழ்க் கவிதை வல்லான்
திகழ்சந்தம் தன்னிலே புகழ்வந்து தங்கிடும்
சித்துகள் பெற்ற நல்லான்
சந்திக்கும் சொற்களைத் தந்தித்த தாமென
சந்த வசந்தங்களாய்த்
தண்பொருநை வெள்ளமாய்ப் பண்ணொளிரத் தந்திடும்
சாதனை செய்கின்றவன்
வந்திக்கத் தக்ககுரு சிந்தனை அ.சீ.ரா
மாணவன், இலந்தையூரான்
வண்ணங்கள் சந்தங்கள் வெண்பா கலித்துறை
வாரிக் கொடுக்கின்றவன்
எந்தக் கணத்திலும் கந்தனைப் போற்றிடும்
இலந்தை சு இராமசாமி
எண்ணம் நிறைவேறும் வண்ணம் அருள்பெற
எழுதிடும் இந்த ஓலை
இத்தமிழ் நாட்டுக்குச் சொத்தென வந்தவன்
இந்தியன், உலக ஞானி
ஏமாந்திருந்த நம் சாமானியர்களை
எழுச்சி பெறச்செய்தவன்
வித்தகன், செந்தமிழ்ச் சித்தனாய்க் கவிதைகள்
வீறு கொளச் செய்தவன்
வேர்த்திடும் மக்களின் ஊர்ப்புறச் சிந்திலே
விந்தைக் கவி நெய்தவன்
எத்தனை காலமோ சத்தெலாம் குன்றியே
இளைத்துக் கிடந்ததமிழில்
இன்னுயிர் ஏற்றியே மின்னிடச் செய்தவன்
இணையிலாக் கவிநாயகன்
பத்திர காளியின் பக்தனாய்க் கண்ணனின்
பாதம் பணிகின்றவன்
பாரதி, கவிஞர்க்குச் சாரதி, மகாகவி
பரிவுடன் கண்க காண்க!
அமரனே, என்றும் நீ குமரனே, யானுன்றன்
ஆசியை வேண்டுகின்றேன்
ஐயனே, செந்தமிழ் மெய்யனே, உன்சரிதை
யானெழுத அருள்செய்குவாய்
தமைவியந் துன்சரிதை அமைந்திடப் படைப்பவர்
தாராளப் பொய்சொல்கின்றார்
தாம்கண்டு கேட்டதாய்த் தேன்கொண்ட வார்த்தையில்
சரடுகள் தான்விடுகிறார்
எமையுன்றன் கவியினால் தமரெனக் கொண்டவா
எனக்குள்நீ தங்கவேண்டும்
என்மனத் தேரினில் உன்னதமாகஉன்
எழுத்துகள் பொங்கவேண்டும்
அமுதமென் எழுத்தினால் தமிழினை உயர்த்திய
அண்ணலே, கவிதைவேந்தே
அடியனிவன் அகமதனில் பிடிபடவே நினதுபுகழ்
அமைந்திடவே அருள்புரிகவே!
இலந்தை சு இராமசாமி!
==========================
பாட்டுப் பறவையாம் பாரதியின் வரலாற்றைத்
தீட்ட விரும்புகின்ற திருவிலந்தைக் கவிராயர்
சித்திரித்தார் சிறப்பாகச் சீட்டுக் கவியினிலே!
சித்திக்கும் நிச்சயமாய்ச் செருகலற்ற வரலாறு!
பசுபதி
28-4-08
============
ஒவ்வொரு அரையடியிலும் 1-3 சீர்களுக்கு இடையே எதுகை அமைத்தது ஒலிநயத்தைக்
கூட்டுகிறது.
முதல் பகுதியில் (சிந்திக்கும் உள்ளத்தில்) 3 அடிகளே இருக்கின்றன.
பொதுவாக 4 இருக்கவேண்டாவா?
"தமையுயர்த்திட" என்றதால் "தாம்கண்டு" என்றிருக்கவேண்டுமோ?
"அடியனிவன் அகமதனில்" என்பது "அடியனென(து) அகமதனில்" என்றால்
இன்னும் நேரடியாக இருக்குமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
=================
அன்புள்ள சுப்ரமண்யன்,
தங்களின் கூர்ந்த கவனிப்புக்கு நன்ரி.
வெட்டி ஒட்டுவதில் நிகழ்ந்த கோளாறால் ஓரடி விழுந்துவிட்டது.
சரிசெய்திருக்கிறேன்
தாம்கண்டு என்றிருக்கவேண்டும் என்பது சரிதான்.
தன்னைப்பற்றி மிகுந்த செருக்கோடு கடிதத்தைத் தொடங்கியவன், பாரதியிடம்
வேண்டுகோள் வைக்கத்தொடங்கியபோது படிப்படியாக் அந்த முனைப்பு அடங்கி
கடைசி அடியில் ஆண்டானோடு அடிமை பேசுவதுபோலப் பேசத்தொடங்கிவிடுகிற
தன்மையை அடியனிவன் என்று தன்னை தன்னிலைப்படுத்தாமல் படர்க்கையில் கூறுவது
காட்டுகிறது.
அன்புடன்
இலந்தை
===============
ஆமாம்!..யானும் பசுபதியோ டகமகிழ்ந்து,
...தேன்மா போல இலந்தைநூல் திகழவே
.....
வாழ்த்து கின்றேன் மனதாரவே!
நல்ல "சீட்டு" இன்று கிட்டியதே!
வாழ்க இலந்தை!
யோகியார்
==================
பாரதி நீ வந்து
பிறக்க மாட்டாயா... என்று பலர் கூற கேட்டு இருக்கிறேன்..
ஆனால்..
எனக்குள்நீ தங்கவேண்டும்
என்மனத் தேரினில் உன்னதமாகஉன்
எழுத்துகள் பொங்கவேண்டும்
மிக அருமையான ஒரு சிந்தனை..
அன்புடன்
அகிலா ராமசாமி
================
இலந்தைகவி மாமணியாம் இணையில்லாப் பெருங்கவிஞர்
கலங்கரையின் விளக்கமவர் கவியுயர்வை சொலப்போமோ?
கவிநேர்த்திப் போற்றிடவும் கனிந்திடவும் கரைந்திடவும்
தவமாகச் சிறிதேனும் சிறுமதியேன் அறியேனே!
எடிசனின் சரித்திரத்தை எளிமைமிக எழுதியவர்!
படிபுகழ் பாரதியின் பாங்கான சரிதைசெய்வார்!
அன்புடன்,
தங்கமணி.
===========
சீட்டிலே திறமையைக் காட்டிய பாரதி
.. சிந்தையில் வந்துநிற்கத்
தீட்டினார் இலந்தைசொற் கூட்டியே இங்கொரு
.. சித்திரப் பொற்கலத்தை
நாட்டிளோர் இதுவரை தேட்டிய செய்தியில்
.. நடந்தவை மட்டும் கொண்ட
பாட்டிலே வல்லவன் மாட்டுடைச் சரிதையைப்
.. பார்க்கநாம் காத்திருப் போம்
..அனந்த்
7-5-2008
==================
சீட்டொலை தாருமென நீட்டோலை நான்நீட்ட
செந்தமிழ்க் கவிதைவல்லான்
செருகலற்ற சீரோடு சரிதமொன்று பாரதிக்கு
செய்திட ஓலையிட்டார்
பாட்டாலே செயலாலே பாரதத்தை உசுப்பிவிட்ட
பாரதி வாழ்க்கையினை
படித்துநாம் பயனுறவே பட்சமற்ற ஒருநூலை
பார்க்கநாம் காத்திருப்போம்.
நடராஜன்.
==================
4.
பாட்டுகோரு பாரதிக்கு அருமையான சீட்டுக்கவிதந்த
கவிஞர் இலந்தை ஐயா அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
இரண்டாம் அழைப்பு: கவிஞர் பசுபதி
கனடாவாழ் கவிஞரிவர் கலக்குகின்ற ஆசான்
கற்பித்த இலக்கணங்கள் கவிதைபல பேசும்
எனதறிவில் இவராற்றல் எட்டியதும் துளியாம்
என்றாலும் என்வியப்பில் ஏராளம் அதுவாம்
மனதாலே இவர்வாழ்வின் மார்க்கமதைப் பற்றி
மதிப்புவைத்து பின்செல்லத் தக்கவரே வருக!
நனவினிலே வைத்திருக்கும் நல்லோலை தருக!
நடராசன் தலைமைக்கும் நல்லாசி நல்க!
நடராஜன்
=======
கவியரங்கம் - 28
தலைவர் வாழ்த்து
===============
அவனியரங் காளும் அரசனின் பேரைத்
தவத்தால்பெற் றாரோ தலைவர்? -- சுவையான
சீட்டுக் கவியரங்கம் சீராய் நட'ராஜ
பாட்டை'யில் போகுது பார்!
அகத்தியர்க்கொரு சீட்டுக் கவி
==========================
ஆய்வுக்கும் ஆசிரியப் பணிக்குமொரு,
. அரைக்குமேல் வாழ்வதனைக் கழித்துவிட்டு,
ஓய்விற்குப் பின்தமிழைப் படித்துவக்க
. உத்தேசம் செய்துநிற்கும் பித்தன்யான்.
வலையில் பார்த்தேன் பட்டியலை;
. வாங்கிக் குவித்தேன் பலநூல்கள்;
மலைத்து நின்றேன்; தோன்றியது
. மலைய முனியே! உம்நினைவு!
இலக்க ணத்தின் தந்தையே!
இலங்கை ஆண்ட மன்னனை
இசையில் வென்ற முனிவரே!
இங்கென் ஓலை காண்கவே!
தலைமைச் சங்கச் சூழலில்
இலங்கு மொழிவ ளர்த்தியே
புலம்பெ யர்ந்த நாடதின்
தலையை நிமிர வைத்தனை!
மலைய மலையின் மீதிலே
மறைந்த நூலுக் கிணையென
மாற்று நூலி யற்றிய
மாண வனைநீ பயிற்றினை!
அன்னை மகுட மணிகளை
எண்ணி எண்ணி வியக்கிறேன்!
சொன்ன நிதிகள் குணங்களை
உன்னிச் சொல்வேன் சிற்சில !
தொல்காப் பியமெனும் சொல்லார் நிதியும்
தெட்பம் கொண்ட எட்டுத் தொகையும்
வித்தம் உடைய பத்துப் பாட்டும்
கீழ்க்க ணக்குச்சொல் வாழ்க்கை நீதியும்
சொலிக்கும் இசைநூல் சிலப்பதி காரமும்
அணியாய் அறஞ்சொல் மணிமே கலையும்
தேவா ரத்தின் மூவாப் பாடலும்
உருக்கத் துறைவிடம் திருவா சகமும்
மாலோன் புகழ்நூல் நாலா யிரமும்
சிந்தா மணியில் முந்தும் விருத்தமும்
பாப்புனைய உதவும் யாப்பருங் கலமும்
தம்பிக்க வைக்கும் கம்பனின் கவிதையும்
வெல்லும் நடையுடை வில்லி பாரதமும்
சித்தர் தந்த தத்துவ நிதியும்
கந்தனைப் பாடும் சந்தப் புகழும்
தாயுமா னவரின் வாய்மைப் பாக்களும்
வள்ள லாரின் தெள்ளு தமிழும்
இலக்கியக் கடலென என்முன் விரியுதே!
எஞ்சிய வாழ்வினில் எப்படிப் பருகுவேன்?
பாரதி, கவிமணி, பாரதி தாசன்,
வண்ணச் சரபம், கண்ண தாசன்
நாமக் கல்லார், நாணல், சுரதா
எண்ண முடியா இன்னும் பலபேர் !
உரைநடை நூல்களில் உ.வே.சா, திருவி.க
டி.கே.சி, கி.வா.ஜ, சேதுப் பிள்ளை
என்றே நீளும் என்றன் பட்டியல் !
என்று படிப்பேன்? என்று முடிப்பேன்?
என்று தணியும் என்றன் வேட்கை?
கடல்நீர் முழுதும் கையிலே ஏந்திக்
குடித்து முடித்த கும்ப முனியே!என்
முன்விரி நூற்கடல் மொண்டு குடித்திடும்
வித்தை ஒன்றை விரைவில் சொல்லுக!
உம்மையே நம்பினேன், உதவி புரிவீரே!
பசுபதி
1-5-08
==================
பசுபதி ஐயா அவர்களுக்கு
கற்றது கைமண் அளவு..
கல்லாதது உலகளவு.. இல்லை இல்லை கடலளவு..
கற்க வேண்டியது இத்தனை இருக்க..
காலம் போதுமா...
கலங்கியே நிற்கிறேன்..
"கடல்நீர் முழுதும் கையிலே ஏந்திக்
குடித்து முடித்த கும்ப முனியே!என்
முன்விரி நூற்கடல் மொண்டு குடித்திடும்
வித்தை ஒன்றை விரைவில் சொல்லுக!
உம்மையே நம்பினேன், உதவி புரிவீரே!"
என்ன அருமையான ஒரு சிந்தனை தூண்டும் சீட்டுகவி...
anbudan
akilaramasami
================
இலக்கணம் கொண்டு கலக்கிடும் பசுபதி
இலக்கியம் உண்டு கலக்கிடப்போகிறார்.
முதலில் அகத்தியர் மொழிந்த அகத்தியம்
அகப்பட்டிடவே அவர் அருளட்டும்.
பசுபதி நல்கும் பட்டியல்படியே
(பட்டியல் போடப் பலநாள் ஆகும்)
இலக்கியம் இலக்கியம் இயலிசை நாடகம்
அவர்விருப்பம்போல் அகத்தியர் அருளுக!
இலந்தை
======================
அகத்தியரை வேண்டுகிற அருஞ்சீட்டுக் கவியழகு!
மகத்துவமாம் தமிழ்க்கடலில் மண்டியுள்ள இலக்கியங்கள்!
அத்தனையும் அறிகின்ற ஆர்வமுண்டு வயதிலையே!
நத்தினிய வரியசில நாமறிந்து உயர்ந்திடுவோம்!
கொட்டிக் கிடக்கும் கோகினூர் வைரங்களோ?
மட்டில் பொக்கிடமாய் வாய்க்கின்ற இலக்கியங்கள்!
வாழ்வின் நெறிகாட்டும் வகைவகையாம் இலக்கியங்கள்
மூழ்கி முடிந்தவரை முத்தனய தறிந்திடுவோம்!
அன்புடன்,
தங்கமணி.
===========
ஆகா! புதுவித சீட்டுக் கவியழகை
வாகாய் பசுபதிகண் கண்டுகொண்டேன்! நற்தேன்!
..
அகத்தியர் மூலம்பெற்ற வரத்துடன்'நீர்" குடித்தாலும்
பகபகவென இங்கே கவிகளும், நூலும் பெருகிடுமே!
..
எப்படி மண்டையில் இவற்றைத் தேக்கி
செப்படி வித்தை காட்டிடுவீர்? தெரியலையே!
..
பசுபதி கவிதை இவண் பலரைச் சிந்திக்க வைத்திடுமே!
வாழ்க! அவர்,
யோகியார்
====================
காவிரியைக் கமண்டலத்தில் அடைத்தவரைத் தமிழ்நூல் வெள்ளத்தையும் சுருக்கி
நாம் பருகத் தாரீர் என்றது அழகு.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
=================
குறுமுனியின் அருஞ்செயலை ஒத்த ஒரு விந்தையைத் தாமும் செய்ய விரும்பியதை
விளம்பிய அழகும் அமைத்த வடிவும்
அருமை.
காசினி உள்ளநற் காவியம் யாவையும்
மாசறக் கற்றிட மனத்தினில் தோன்றிடும்
ஆசையே பிழையெதும் அற்றதாம் ஆகையால்
நேசர்நம் பசுபதி நினைத்தது நடக்குமே!
..அனந்த்
7-5-2008
===================
அசுவதியே முதலாகும் அணிவகுக்கும் தாரகைக்கு
பசுபதியார் இடுசீட்டோ பைந்தமிழின் முதல்வருக்கு
சிசுவான தமிழ்மொழியை சீராட்டிப் பாராட்டி
விசுவத்தின் பெருமொழியாய் விளங்கிடச் செய்தவராம்
கும்ப முனிக்குமோர் குறுஞ்செய்தி அனுப்பிடாமல்
நம்ப வியப்புதரும் நற்செய்தி அனுப்பினாரே
இன்பத் தமிழ்தந்த இலக்கியங்கள் கற்பதற்கே
உம்பர் வாழ்த்துவரே உயர்வான சீட்டின்படி!
நடராஜன்
============
5.
இலக்கியங்கள் அனைத்தும் கற்றுவிட வேண்டுமென்று
அகத்தியருக்கு சீட்டுக் கவி எழுதிய
கவிஞர் பசுபதி ஐயா அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
அத்தாழநல்லூர் கிருஷ்ணன் வரதராஜன் என்பவர் முதன்முறையாக தம் கவிதையை
அனுப்பி வைத்திருக்கிறார். ஆர்வத்துடன் அவர் தமது கவிதையை இங்கு
அளித்துவிட்ட போதிலும் அவருக்கு முறைப்படி ஓர் அழைப்பை அனுப்ப
விரும்புகிறேன். அவையின் அனுமதியுடன் அவருக்கு இக்கவியரங்கின் மூன்றாவது
அழைப்பை அனுப்புகிறேன். அதன் பிறகு முன் குறித்த வரிசையின் படியே
அழைப்புகள் தொடரும்.
அன்புடன்
நடராஜன்.
கவியரங்கம் - 28
மூன்றாம் அழைப்பு: கவிஞர் வரதராஜன்.
தமிழகத்தின் தென்முனயில் தழைக்கிறது தமிழே
தலசிறந்த புலவர்களைத் தருவதந்த நிலமே
அமிழ்தமொழி கவிசொலவே அத்தாழ நல்லூர்
அனுப்பியது ஒருகவியை அவ்வூரின் நல்லார்
நிமிர்ந்துயர்ந்த நீலவண்ன நெடுங்கடவுள் பெயரார்
நீர்க்காத ஆர்வத்தார் வரதராஜன் வந்தார்!
உமியுற்ற அரிசியைப்போல் உள்ளுளதைத் தந்தீர்,
உமையிங்கு அழைப்பதிலே ஓகைமிகக் கொண்டோம்!
அவர் இணைப்பாக அனுப்பிய கவிதை:
சீட்டுக் கவி : நமக்கு
சிங்கை வரதன்
(அத்தாழநல்லூர் கிருஷ்ணன் வரதராஜன் ( அ. கி. வரதராஜன்) )
இறை வணக்கம்:
சீட்டுக் கவியும் சிறப்பாய் அமைந்திட
போட்டேன் கரணம் பொழுதெல்லாம் - நாட்டமுடன்
போற்றிக் கரிமுகத்தைப் பூசிப்பேன் நாடோறும்
ஆற்றும் துயரை அது.
அவை வணக்கம்:
நடராசன் தலைமையிலே நட்டமுண்டோ கவிதைக்கு?
தடமென்னக் கொண்டார் தமிழ்போற்றல் தம்வாழ்வின்.
புடமிட்ட பொன்னெனவே பொலிந்திடுவார் புவியில்.
விடமுண்ட விடையவனும் விலக்கிடுவான் துயரெல்லாம்.
என்னைப் பற்றி:
நெல்லை மண்ணிலே நேர்ந்த தென்பிறப்பு.
நெல்லை மண்விட்டு நீங்கிப்பல் நாளாச்சு.
வில்லின் அம்பெனவே விரைந்தேன் சிங்கைக்கு;
அல்லும் பகலுமாயிங் காயிற்று பல்லாண்டு.
வயதும் அறுபத்துக் கப்பால் ; வளர்சிங்கை
நியதியை நானும் நிறைவேற்றி , நித்தம்
வயிறும் கழுவுகிறேன் வாய்த்திட்ட வேலையில்;
கயிறும் கண்டிடக் காலம் இன்னுமுண்டு.
படித்தது பொறியியல். பைத்திய மெனக்குப்
பிடித்தது பாரதியில் ; பாக்கள் ஒன்றிரண்டு
கடித்தது முண்டு கம்பனி லதுகொண்டு
நடித்தது முண்டு நாவல்ல லென்பதுவாய்.
புதியவன் நானுமே, புகுந்திட்டே னும்மிடையே.
விதிமுறைகள் யாவை; விபரம் யானறியேன்.
பதிந்திடுவேன் என்னெண்ணம் , பாவென்ற வடிவினிலே.
முதிர்ந்த அறிஞர்கள் முனியாது பொறுத்திடணும்.
சீட்டுக் கவிஎழுதி சிரந்தாழ்த்தி நானும்,
நீட்டுவேன் நம்மிடமே ; நாமன்றோ பெறுனரிங்கு.
பாட்டுக்குள் நானும் பகர்ந்ததைக் கொள்வீரோ?
போட்டு மிதித்தென்னைப் புரட்டி யெடுப்பீரோ?
நமக்கொரு சீட்டுக் கவி :
நரகனை அன்றொருநாள் நாரணன் வதைத்துப்
பரலோகம் அனுப்பியதாய் பாட்டிகதை சொல்லிட்டாள்.
நரகனை மிகுஅசுரர் நம்மிடையே பலறின்று,
உரமோ டுலவிடும் உண்மை உணர்ந்திடுவோம்.
தன்னல மென்பானும் தலைவிரித் தாடுகின்றான் ;
இன்னல் பலவிழைத்து இன்பம் கெடுக்கின்றான்.
தீராவினை யெல்லாம் தினந்தோறும் கூட்டுகின்ற
பேராசை எனுமசுரன் பேயாட்ட மாடுகின்றான்.
அடியோடு நம்மவரை அழித்திடவே அவதரித்த,
குடியென்னும் நாமத்தான் கும்மாள மிடுகின்றான்.
வஞ்சக மென்பானும் வளமோடு வாழ்கின்றான் ,
நெஞ்சம் முழுதுமாய் நிறைந்துள்ளான் பலருள்ளும்.
ஏதொரு தடையுமின்றி இணக்கமாய் நம்மிடை
சூதென்னும் அசுரனும் சுகமாக வாழ்கின்றான்.
அழுக்காறு எனுமசுரன் ஆடாத ஆட்டமில்லை;
விழுக்காடு நூறும் விளையும் தீதவனாலே.
சினமென்னு மொருவன் சிதைக்கின்றான் நம்நலம் ;
தினந்தோறு மிவன்தொல்லை தீராத தொன்றாகும்.
பாதையை மாற்றிப் பல்வே றிளைஞரையும்
போதைப் பழக்கம் புகுந்தடிமைப் படுத்துகின்றான்.
களவு, கற்பழிப்பு, காமக் களியென்று
அளவுக் கதிகமாய் அசுரர் கூட்டமுண்டு.
நரகனை மிகுஅசுரர் நாட்டினில் இவ்வாறாய்
உரமோடு நாடோறும் உலவிடுதல் நன்றாமோ?
போரொன்று தொடுத்திடணும் பொல்லாயிவ் வசுரர்மேல்
சீர்மிகவே நம்வாழ்வைச் செம்மைப் படுத்திடணும்.
யாரிதைச் செய்திடணும் ? யார்தலைமை ஏற்றிடணும்?
"நீரெ"ன்று பிறர்தம்மை நீள்விரலால் சுட்டிடவே,
பார்முழுதும் நம்மிடையே பலகோடிப் பேருண்டு.
"ஊர்த்தலைமை ஏற்றிடுவேன் ; உரமோடு செயல்படுவேன் ;
பார்த்திடுவீ ரென்திறமை" - பகர்வதற்கோர் ஆளில்லை.
" மார்தட்டி வழிநடத்த மாலவனும் வந்திடுவான்;
கார்மேகக் கண்ணனும் கட்டாயம் காத்திடுவான்;
தேர்கட்டி இழுத்திடுவோம் ; தெருவெல்லாம் பஜித்திடுவோம்;
ஊர்கூட்டி அவன்நாம மோயா தொலித்திடுவோம்"
கூறிடும் கூட்டமும் குறையின்றி இங்குண்டு.
காரணம் பலகூறிக் காலம் கழிப்போமோ?
நாரணன் வருமளவும் நாமும் காப்போமோ ?
நாரணனும் வந்திட்டான், நம்முள்ளே அமைந்திட்டான்.
பூரணமா யிவ்வுண்மை புரிந்திடவும் வேண்டாமோ?
நாரணன் அம்சமே நாமென் றுணர்ந்திடுவோம்.
வாரணப் படையெனவே வரிசை பிடித்திடுவோம்.
சீரணியாய் அசுரரை சினங்கொண் டழித்திடுவோம்.
பாரத தேசத்தைப் பாரில் உயர்த்திடுவோம்.
தனிமனிதன் நானென்ற தயக்கம் தவிர்த்திடுவோம்.
தனியொருவன் படைத்திட்டான் தரணியில் சரித்திரமே.
"வேறுஇடம் உமக்கெல்லாம்; வெள்ளையர்க்கே இந்தவிடம்"
கூறியது கேட்டுக் கொதித்தெழுந்தான் தனிமனிதன்.
"மாறிடேன் வேறுஇடம் ; மனிதரெலாம் சமமன்றோ ?
"யார்வந்த போதிலும் யான்நீங்கேன் இந்தவிடம்.
சீட்டும் வைத்துள்ளேன்; சரியான ததுவும்தான்".
நீட்டிய போதும் நிராகரிப் பவன்கண்டான்.
"மாட்டேன் வண்டிமாற" ; மறுத்திட்டான் இறுதிவரை.
ஆட்டங் காணாத அசலமே அவனுறுதி.
தூக்கி யெறிந்திட்டார் ; தூரப் போஎன்றிட்டார்
நீக்கினார் வண்டி ; நியாயமும் நீங்கிடவே.
நட்ட நடுநிசி. நலம்பேணு வாரில்லை.
கிட்டத்துச் சொந்தம் கிடையாது யாருமங்கே.
பெட்டி படுக்கையுடன் பிளட்பாரம் தன்னில்.
கொட்டும் குளிர். குலைந்திடான் இவனனுந்தான்.
தனித்து விடப்பட்டான் ; தளர்ந்திடான் மனவுறுதி.
வினத்திட்ப மதுகண்டு வியந்தது உலகுந்தான்.
பாக்கியம் விளைந்தது பாருக் கக்கணமே.
ஆக்கியது மனிதனை மகாத்மா அந்நொடியும் !
"இனியும் இதுசகியேன். இறுதி இதுகாண்பேன்".
முனிவு கொள்ளவில்லை , முற்றும் முறுவலே.
கனிவே கைக்கொண்டான் கடுமையான ஆயுதமாய்.
நனிசிறந்த தலவனை நானிலமும் பெற்றதன்று.
"என்னால் இதுமுடியும்" எடுத்தான் அவ்வுறுதி.
பின்னாளில் பெற்ற பெருமைக் கடித்தளமாய்.
தனிமனிதன் நானென்ற தயக்கமவன் கொள்ளவில்லை.
தனியொருவன் படைத்திட்டான் தரணியில் சரித்திரமே.
"என்னால் இயலும்" என்பதே வேதம்
முன்னால் இதுதன்னை முற்றாய் உணர்ந்திடுவோம்.
தன்னாலே மாறுதல் தரணியில் நிகழாது.
அன்னான் காட்டினான் அகிலத்துக் கோர்வழி.
தன்னந் தனியாளாய் தன்பின்னால் யாருமின்றி ,
முன்னாள் நடத்திட்டான் முறையான போரொன்று.
நம்மால் முடியும் நம்புவோம் முதலில்.
அம்மா இதுநமக்கு ஆகுமோ எனஅஞ்சோம்.
சிறிய உளியதுவும் சிதைக்கும் பெரும்பாறை.
சிறிய உளிநாமே. சிறுதுளியே பெருவெள்ளம்.
அறிவோம் இவ்வுண்மை; அடங்கா தெழுந்திடுவோம் .
புரிவோம் நம்கடமை. புகழும் நாமுறுவோம்.
என்னால் முடியும் இக்கொடுமை போக்க
உன்னிடுவோம் அதுதன்னை , உணர்ந்திடுவோம் நம்கடமை.
தன்னந்தனி என்றாலும் தயங்காமல் முயன்றிடுவோம்
சொன்னதையுள் வாங்கினோமா? சொல்லிடும் காலம்பதில்.
சிங்கை வரதன்
03-05-08
=====================
கன்னிச் 'சீட்டில்' மின்னும் வரதர்
இன்னும் பலவாய் இங்கே கவிதை
பன்னி இடுதல் பார்ப்போம், உறுதி!
அன்னார் வளர்ச்சிக்(கு) அடியேன் வாழ்த்து!
..அனந்த்
3-5-2008
===============
நிழலில் நடக்கும் நடப்புகள்
வெளிச்சம் போட்டு காட்டியே
வேள்வி ஒன்று தொடுப்பொம் என்றே
வீரு கவி படைத்த
சிங்கை வரதன் அவர்களை
சிரம் தாழ்த்தி வனங்குகிறேன்
அன்புடன்
அகிலா ராமசாமி
================
கவிஞர் வரதராஜனை வசந்தக் குழுவினுள்ளே
'வருக! வருக!' என்று வரவேற்கிறேன்.
'வரத ஹஸ்தம்' வழங்கட்டும் வண்டமிழ்க் கவிதைகளை!
மனிதருக்குள் மறைந்திருக்கும் மகாத்மாக்கள் வெளிவந்தால்
பனியாவும் பகலவனைப் பார்த்தவுடன் மறைவதுபோல்
புவியிலுள்ள இன்னல்கள் போகாதோ எனக்கேட்கும்
கவிவரதர் பாட்டோலை கன்னலென இனித்ததுவே!
பசுபதி
5-5-08
===============
சமுதாயம் முன்னேற,சட்டென நாடுமுன்னேற
அமைதிப்படை திரட்டும் அழகுஅத்தாழை வரதன்
சீட்டுக்கவி ரசித்தோம் சிறந்ததெனப் போற்றி,
நாட்டுகிறோம் வாழ்த்து வரதன் வாழ்க!
யோகியார்
=================
சிங்கைக் கவிஞர் வரதராஜனின் கவிதைகளைத் தமது சிம்மக் குரலில் அவரே
படிக்கக் கேட்டவர்கள்தாம் அவற்றின் முழுத் தாக்கத்தை உணர்வார்கள்.
கேட்பவரைத் தம்வயப்படுத்தும் ஆற்றல் மிக்க அவரது சீட்டுக் கவியை அவரே
முழங்குவதாகக்
கற்பனை செய்தவாறு நான் படித்தேன்!
எதுகையிலும் மோனையிலும் ஏற்றமிகு அரசரிவர்
புதுவகையில் சீட்டுவழி புகட்டுகிறார் போதனையை
எதுவரினும் யார்வரினும் இராக்கதராய் இருப்பவரைச்
சிதைப்பதற்கு நாம்துணிதல் தேவையென முழங்குகிறார்!
..அனந்த்
7-5-2008
=================
கன்னலாய் சுவையில்கற் கண்டுதாம்ர வருணிஆடும்
தின்னவேலிக் காரவுக தேனாய்த்தேன் எளுதுவாக!
நடக்கின்ற தீம்புகளை "நமக்காக" சீட்டுக்கவி
தடக்கென்று "நச்"சென்று தனிமனித சரிதைசொன்னார்!
நம்மால் முடியுமென நம்பியுடன் முயன்றிடவே
தம்மால் செய்கடமை சிறபுடனே செய்திடுவோம்!
சிங்கை வரதராசருக்கு என் வாழ்த்துகள்!
அன்புடன்,
தங்கமணி.
===============
6.
நாட்டினில் நல்லதிட்டம் நமக்குநாமே திட்டம்
சீட்டினில் அதுதந்தார் சிங்கைநகர்க் கவிஞர்.
அவருக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
நான்காம் அழைப்பு: கவிஞர் அனந்த்.
பிரதோஷம் வந்திட்டால் பிரசாதம் தருவார்
பிழையொற்றுப் பிரச்சனையை சிறிதாக்கி விடுவார்
வரமாக்ப் பெற்றவர்தாம் வாய்த்தநகைச் சுவையை
மரபாக அதைத்தருவார் மணமிகுந்த செயுளாய்!
பரமசிவன் அருளாகப் பாட்டோலை படிக்க
பாமரனின் தலைமையிலும் பாவரங்கு சிறக்க
அரனவனின் துதிதனையே அனுதினமும் மறவா
அனந்தையா தன்கடிதம் அரங்கிற்குத் தருக!
நடராஜன்
==================
சினந்தே பார்த்தறியேன் ; சீலமே மிகவுடையார்
அனந்தின் கவிவரும் அந்நாள் அதுநோக்கி ,
தினந்தோறும் காத்திருந்தேன், தீர்த்திட்டீர் காத்திருப்பு.
மனந்தோறும் பெருக்கிட்டீர் மன்பதையில் மகிழ்வொன்றே .
சிங்கை வரதன்
===============
கவியரங்கம் - 28
*********************
<> தலைவர் வாழ்த்து <>
சிவனார் துவக்கிவைத்த சீட்டு வடிவில்
இவண்நாம் கவிதை இயற்ற - அவன்பெயரைத்
தாங்கும் அரசர் தலைமை வகிப்பதனால்
ஓங்கும் அரங்கம் உயர்ந்து.
<> கனடா நாட்டின் தலைமை ஆளுநர்க்கு வரையும் சீட்டுக் கவி <>
குறிப்பு: இஃது, கனடாவில் கலைகளும் கலாச்சாரமும் வளர உதவி செய்யும்
குழுவானது (Canada Council for Arts and Culture) 'தலைமை ஆளுநர் நிதி'
(*Governor General's fund) என்னும் தலைப்பில் வழங்கும் பொருளுதவியை
நாடிக் கனடா நாட்டின் தலைமை ஆளுநர், மேன்மைதங்கிய (திருமதி) மிஷால் ஜீன்
(Michaelle Jean) அவர்களுக்கு நேரடியாக எழுதும் விண்ணப்பமாக (grant
application) அமைக்கப்பட்ட சீட்டுக் கவி.
<> <> <> <> <>
விரிவிசும்புக் கிணையிதென மிகப்பரந்த நிலமதனில்
சொரிமழையின் துணையில்வளர் செழும்பயிர்கள் தருவளமும்
எரிபொருளும் கனிப்பொருளும் இனும்பலவாய் இயற்கைதரும்
வரிசைகளும் நிறைந்துசனம் மகிழ்கனடா நாட்டினிலே
அறவழியில் ஒழுகுகுணம் அமைந்தவர்தம் ஆட்சிதனில்
மறமொழிந்து மனிதர்தமை மதிப்புடனே நடத்துவதால்
பிறமொழியார் எவருமவர் பிறந்தநிலம் அனையஇதை
உறவுகொளும் வகையினிலே உயர்ந்தவழி முறைநிலவும்;
இத்தகைய அமைப்பினுக்கோர் இதயமெனத் திகழ்ந்துவரும்
மெத்தவுமே மேன்மைமிகு ஆளுநராம் பதவியிலே
இத்தரையில் இதுவரையில் இல்லாத புதுமையென
வித்தகராய்ப் பெண்ணினத்தின் விடிவிளக்காய் அமர்ந்தவரே!
எத்தனையோ இடர்நடுவே இளமையினில் இனவெறியின்
கத்திமுனை மழுங்குதற்குக் கங்கணந்தான் பூண்டுபல
பத்திரிகை வழியாகப் பாதையொன்றை வகுத்தவரே!
நித்தம்'எங்கள் ஜீன்'எனஇந் நாடுபுகழ் நேர்மையரே!
இலக்கிய நாட்டம் கொண்டு
.. இளமையில் பட்டம் பெற்றுத்
துலக்கிய மொழிகள் ஐந்தைத்
.. தூய்மையோ டுரைக்க வல்ல
நலத்தினைப் பெற்ற நீவிர்
.. நாட்டிலே கலையைப் பேணும்
இலக்குளீர்! இதனை எண்ணி
.. ஈண்டுமை நாடி வந்தேன்.
இந்திய மண்ணில் பிறந்ததனால்
.. இயல்பாய் அறிவும் கலையுணர்வும்
சொந்தத் தனமாய்ப் பெற்றவன்யான்
.. தொடர்ந்தென் ஆய்வு வளர்ச்சியுற
வந்தேன் கனடா நாடியென்றன்
.. மனையாள் மக்க ளுடன்முன்னம்
அந்த நாள்தொட் டின்றுவரை
.. ஆன தாண்டு நாற்பதுமே.
இதுவரையில் இந்நாட்டில் யான்கண்ட
புதுமையினைச் சற்றிங்குப் புகன்றிடுவேன்....
பல்வகை நாட்டுத் தொல்குடி மக்கள்
கல்வியுஞ் செல்வமும் மல்கிப் பெருக
மேலை நாட்டினில் காலை வைத்து
வாழ்வைத் துவக்கையில் தாழ்வெது மின்றித்
தத்தம் மொழியைத் தத்தம் கலையைப்
பயின்றிட வாய்ப்புக் குன்றிடா வண்ணம்
'பல்கலைச் சமூக' நன்முறை* யொன்றைத் (*multicultural society)
தனக்கே உரிய குணமெனக் கொண்ட
கனடா நாட்டை எனதாய்க் கண்டேன்;
கனிகள் பலவும் இனிதாய் ஒருங்கே
கூடை யொன்றில் வாடை வீசித்
தமக்கெனத் தனியே அமைந்துள சிறப்புக்
குறையா திருக்கும் முறையில் அமைந்த
ஆட்சிக் கொள்கையின் மாட்சியை அறிந்தோர்
போற்றுவர் அதுநம் ஆற்றலுக் கறிகுறி.
இந்தச் சூழலில்..
முன்னைப் பழமைக்கும் பின்னைப் புதுமைக்கும்
சின்ன மெனநிற்கும் செம்மைத் தமிழ்மொழியைப்
பன்னும் பலர்இங்குப் பரந்து வதிகின்றார்
அன்னார் அகத்தினிலே உறையும் தமிழ்ப்பற்று
தன்னை வெளிப்படுத்தத் தக்க வழிகளைநாம்
உன்னல் அவர்திறனை ஊக்கும் செயலாகும்
என்னும் கருத்தினிலே என்றன் பணியகத்தில்* (*மக்மாஸ்டர் பல்கலைக் கழகம்)
முன்னம் முனைந்திட்டார் மூத்த அறிஞர்பலர்.
அன்னார் முயற்சியிலே அழகார் தமிழ்ப்பண்பின்
சின்னம் எனத்திகழும் தில்லைத் தலநூலும்
அன்னை தேவிபுகழ் விளக்கும் பெருநூலும் [1]
கன்னல் அனையதிரு வாச கத்துரையும் [2]
இன்னும் தமிழினத்தின் ஏற்றப் புகல்இதழ்கள்
முன்னி இளைஞர்தம் முனைவர் ஆய்வுரைகள் [3]
மன்னும் சைவரின்சித் தாந்த அரும்நூல்கள் [4]
மன்னிக் கிடக்குமெங்கள் 'மக்மாச் டர்'நடுவே!
நூல்நிலையம் தன்னில்பல நூறுவகைத் தலைப்புகளில்
மேலான இலக்கியங்கள்! விதவிதமாய் இலக்கணங்கள்!
காலமெல்லாம் சேர்த்துவைத்த கணக்கற்ற பொக்கிஷங்கள்
ஏலாதாம் இனும்விரிக்க எனஇணைப்பில் சிலதந்தேன்.
இத்தகைய செல்வங்கள் எம்மிடம் சேரவைத்த
வித்தகர்கள் சிலரிந்நாள் விலகவுள்ளார் ஓய்வெடுக்க
முத்தனைய தமிழிங்கு முன்போலத் தழைப்பதற்கு
வைத்தனன்நான் உம்முன்னே விண்ணப்பம் ஒன்றிங்கே:
தோமில் தொண்டுசெய்த மாமேதை தமிழ்த்தாதை
சாமி நாதன்பேர் தாங்கும் இருக்கையொன்றை* (*Name Chair)
ஆமில் டன்நகரில் அருமைத் தமிழ்செழிக்க
நேமித் திடல்வேண்டும், நீவிர் துணைபுரிவீர்! (நேமித்தல்- நியமித்தலின்
திரிபாகக் கொள்க)
அவ்விருக்கை தன்னைஇன்று அலங்கரிக்கத் தகுந்தவரை
இங்குநாம் கொணர்ந்திடுவோம் எம்மிடையே அவர்வழியே
தங்குதடை யின்றிஅவர் தமிழ்வளர்க்கத் துணைபுரிவோம்
இங்கிதற்கு வேண்டுவன ஈரிலட்சம் டாலர்கள்.
இத்தகைய வேண்டுதலை இதுவரையில் வேறெவரும்
வைத்துளதாய் யாமறியோம் மிக்கதயை கொண்டவராய்
எத்தனையோ வகைகளிலே இந்நாட்டின் கலைஞர்க்கு
நித்தமும்நீர் நிதியுதவி புரிவதனை நெஞ்சிறுத்தி,
நாட்டுக் கலைவளர நற்றமிழர் நன்றிகிட்டக்
கூட்டும் ஒருமையின்னும் கூடுதலாய் மேலோங்கச்
சீட்டுக் கவிவழியே செப்புமென்றன் விண்ணப்பம்
கேட்டுப் பொருளுதவி கிடைக்க வழிசெய்வீர்!
இங்ஙன்,
வே.ச. அனந்தநாராயணன், ஆமில்டன், ஒந்தாரியோ மேத்திங்கள், ஐந்தாம் நாள்,
ஈராயிரத்தெட்டு ஆண்டு.
<> இணைப்புகள் <>
I. விண்ணப்பத்தில் சுட்டப்பட்ட நூல்கள்:
1. அ) பேரா. டேவிட் கின்ஸ்லி {(Late) Prof. David Kinsley}, "Hindu
Goddesses: Visions of th Divine Faminine in the Hindu Religious
Tradition", University of California Press, 1988.
ஆ) பேரா. டேவிட் கின்ஸ்லி The Portrait of the Goddess in the
Devi-mahatmya, Journal of the American Academy of Religion vol. XLVI,
pp. 489-506, 1978.
2. அ) பேரா. பால் யங்கர் (Prof. Paul Younger), "The Home of Dancing
Sivan: The Traditions of the Hindu Temple in Citamparam", Oxford
University Press, 1995;
ஆ) பேரா. பால் யங்கர் "Tamil Identity; Hindu Identity: Why So
Separate?" Presentation at the Tamil Studies Conference, May 15 - 17,
2008, Toronto, Canada
3. Ph.D. theses, Department of Religious Studies, McMaster University, 1974-2008
4. (மறைந்த) பேராசிரியர் கி.சிவராமன் "Saivism in Philosophical
Perspective A Study of the Formative Concepts, Problems and Methods
of Saiva Siddhanta", Motilal Banarsidas Publishers Pvt. Ltd. (2001).
II. மக்மாஸ்டர் பல்கலைக் கழக நூல்நிலையத்தில் தமிழும் தமிழ்
தொடர்பானவையாகவும் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களில் சில:
சொல்பொருள் யாப்புத் தொல்காப் பியநூல்
வீர சோழியம் முத்து வீரியம்
நேமி நாதம் நற்பாட் டியல்கள்
காக்கைபா டினியம் காரிகை நூல்கள்
இலக்கண விளக்கம் அவிநயம் இவற்றுடன்
உரைகள் பலவும் உளவாம்; மேலும்,
மங்காப் புகழ்சேர் சங்கத் திலக்கியம்
காலங் கடந்தும் தோலா ஐம்பெருங்
காப்பிய முண்டு; கணக்குகள் உண்டு;
கம்பர் வள்ளுவர் காரைக் காலார்
திருமுறைப் பெரியோர் அருண கிரியார்
அருட்பெருஞ் சோதியார் தாயு மானவர்
வைணவப் பெரியோர் ஆகியோர் நூல்களும்
துள்ளும் நடைபயில் பிள்ளைத் தமிழ்களும்
தூது பலவாய் ஓதும் நூல்களும்
இன்ன பலவும் ஈங்குள; பாவலன்
பாரதி படைத்த சீர்மிகு கவிதைகள்
இன்றைய கவிஞர்தம் இன்கவி இவையொடு
கல்கி முதலாக் கலைஞர்தம் கதைகளும்
உள்ளவாம் இனும்யான் சொல்லின் பெருகும்.
<><>* <><>* <><>* <><>
..அனந்த்
5-5-2008
=================
அனந்த் கவிதையின் நோக்கமும் ஆக்கமும அருமை.
சீட்டுக் கவிதையில் தன்னைக் கொஞ்சம் இன்னும் அதிகம் முன்னிறுத்தல்
நல்லது. உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் அதிகம் சொல்லியிருக்கவேண்டும்.
அப்பொழுதுதானே அதைப் படிப்பவர்க்கு இதை எழுதியவர் இப்படியொரு வின்ணப்பம்
அளிக்கத் தகுதியானவர் என்ற எண்ணம் ஏற்படும்.?
நூல்நிலையம் தன்னில்பல நூறுவகைத் தலைப்புகளில்
மேலான இலக்கியங்கள்! விதவிதமாய் இலக்கணங்கள்!
காலமெல்லாம் சேர்த்துவைத்த கணக்கற்ற பொக்கிஷங்கள்
ஏலாதாம் இனும்விரிக்க எனஇணைப்பில் சிலதந்தேன்.
இந்தப்பாடலில் எதுகைகள் ஒரேவகையாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
இலந்தை
===============
இலந்தை,
உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி. என்னைப் பற்றி இன்னும் எழுத
நானும் நினைத்ததுண்டு, ஆனால் ஏற்கனவே நான் நான் முதலில் எண்ணியதற்கு
மேலாகச் சீட்டுக் கவியை (தேவையான செய்திகளைச் சேர்த்து) வளர்த்த வேண்டிய
கட்டாயம் நேர்ந்ததால், அப்படிச் செய்யவில்லை.
நீங்கள் சுட்டிய பகுதியை கீழ்க்கண்டவாறு மாற்றுகிறேன்:
நூலகத்தில் காணுமிங்கு நூறுவகைத் தலைப்புகளில்
மேலான இலக்கியங்கள்! விதவிதமாய் இலக்கணங்கள்!
காலமெல்லாம் சேர்த்துவைத்த கணக்கற்ற பொக்கிஷங்கள்
ஏலாதாம் இனும்விரிக்க எனஇணைப்பில் சிலதந்தேன்.
..அனந்த்
8-5-2008
பின்குறிப்பு: இக்கவிதையை எழுதியதில் என் முக்கிய நோக்கம் (-உங்களுக்கும்
இன்னும் சிலருக்கும் அது முன்னமே தெரியும்-) எனது பல்கலைக் கழகத்தில்
தமிழ் பற்றிய ஆய்வும் நூல்களும் மிகுந்துளதைப் பிறர்க்குத்
தெரியப்படுத்துதலே. துரதிர்ஷ்ட வசமாக, பேராசிரியர் சிவராமன் மறைந்த
பின்னர் தமிழில் ஆர்வமும் வர வரத் தேய்ந்து கொண்டு வருகிறது. இதைத்
தடுத்து, இங்கிருக்கும் பொக்கிஷங்களைக் காக்க யாரேனும் முன்வர மாட்டாரா
என்று நான் ஏங்குகிறேன். இடப்பற்றாக் குறையால் ஏராளமான தமிழ் நூல்கள்
நூல்நிலையத்திலிருந்து ஒரேயடியாக அகற்றப்பட்டு வருகின்றன... என்னுடைய
சீட்டுக் கவியை நிஜமாகவே ஆளுநர்க்கு அனுப்பினால் என்ன என்று கூடத்
தோன்றுகிறது! (:- இதை ஓரளவு ஈடுகட்டும் வகையில் டொராண்டோப் பல்கலைக்
கழகத்தில் தமிழார்வம் கூடி வருவது சற்று மனச்சாந்தியை அளிக்கிறது.
=================
ஒவ்வொரு சொல்லும்
தேர்ந்தெடுத்து கோர்த்த மாலையாய்..
தெரியாத பல நடப்புகளும்
தெவிட்டாத தமிழிலே..
தெரிவித்த..அனந்த் அவர்களே..
கவிதை படித்தேன்..என்பதைவிட..
கவிதை மூலம் கற்றேன்..
கனடா நாட்டு விஷயங்களை..
அன்புடன்
அகிலா ராமசாமி
================
அருந்தமிழைப் பரப்பிடவோர் அண்ணல்தம் பெயர்கொண்ட
இருக்கையொன்றை வேண்டுகிறார்; உருக்கமுள்ள வேண்டுகோள்!
கனடாவின் ஆளுநர்க்கோர் கடிதத்தில் நான்கேட்பேன்:
'தனமேதும் கேட்காமல் தண்டமிழ்க்குப் பணிசெய்யும்
அனந்தரை அங்கே அமர்த்து!'
பசுபதி
8-5-08
===============
ஆகா! ரொம்பப் பிரமாதம்.
அநந்த் கவிதை மிகப் புதுமையும், சமுதாய வழிச் சிந்தனையும் கொண்டு
புதிய ருசி படைத்தது. யாரும் எதிர்பாரா வேண்டுகோள்சீட்டில்l.வாழ்க அநந்த்!
யோகியார்
===========
கண்ணெனும்நல் தமிழ்நூல்கள் கனடாவின் நூலகத்தில்
எண்ணற்ற சொல்லரிய இலக்கியத்தைப் பேணுதற்கு
நண்ணியங்கும் மேதைகளின் நல்லூக்கம் உன்னதமாம்!
கண்ணியமாய்ச் சீட்டுக் கவியினிலே அனந்தரவர்,
பண்ணிடும் விண்ணப்பம் படித்துதவி செய்திடுவார்!
புண்ணியமே மேவுகின்ற பொன்கனடா ஆளுனராம்!
பெருநிதியம் இலக்கியங்கள் பேணுதற்கு விண்ணப்பம்
தருமனந்தர் வேண்டலினில் தமிழ்நூல்கள் வளர்ச்சிபெறும்!
அன்புடன்,
தங்கமணி.
===================
நல்ல சீட்டுக் கவி. உயர்ந்த பணிக்கு உதவி கோரியுள்ளீர். எண்ணம் நிறைவேறட்டும்.
1) // மெத்தவுமே மேன்மைமிகு ஆளுநராம் பதவியிலே //
மெத்தவுமே என்றபின் மிகு என்பது பொருந்துமா? 'உடை' எனலாமோ?
2) அரையடி முடிவில் ஓர் இடத்தில் குற்றியலுகரப் புணர்ச்சி
விடுபட்டிருக்கிறதே. வழுவமைதியா?
3) // நூல்நிலையம் தன்னில்பல நூறுவகைத் தலைப்புகளில் //
தன்னில்பல் எனலாமோ?
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
===================
7.
கனடாவின் ஆளுநர்க்குக் கடிதத்தை செலுத்துகிறார்
அனந்தகவி தமிழ்தழைக்க அரசுதவி கேட்கின்றார்
தனியான இச்சிந்தை தரணியிலே யார்க்குவரும்?
இனிதான விருப்பமிதும் இறையருளால் நிறைவேறும்!
அனந்த் ஐயா அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
ஐந்தாம் அழைப்பு: கவிஞர் அகிலாராமசாமி.
பேரதிட்டம் மாமியராய்ப் பெற்றவரும் இவரே
பெயரினிலே இவ்வுலகைக் கொண்டவரும் இவரே
பாரதியின் புதுமைப்பெண் என்பவரும் இவரே
பாக்களிலே பாரதியைப் பதிப்பவரும் இவரே
சீரகத்தைக் கொண்டிருக்கும் சிறந்தகவி அகிலா
சீட்டதனில் உம்கருத்து செப்பிடவே வருக!
தேரதூனின் நன்னங்கை தேர்ந்தகவி தருக!
தெள்ளமுது தேனமுது இவ்வரங்கம் பெறுக!
நடராஜன்
============
அழைக்கின்ற பாடலிலே கவியாக்கம் அருமை
அகிலாவுக்(கு) இவ்வழைப்பு சேர்க்கிறது பெருமை!
இலந்தை
==================
நந்தவனமாம்.. சந்தவசந்தத்தில்
நாளும் மலரும் கவிதைபூக்கள்.
காகிதப்பூக்களாய் கசங்காமல்
கடிதப்பூக்களும் மலருட்டுமெனெ..
சீட்டுகவியில் சிந்தைசொல் அவைக்கு வணக்கம்
சிதம்பரத்தான் தில்லையம்பதி தலைமைக்கு வணக்கம்
கணவருந்தான் வல்லுநர்
அணைகள் கட்டுவதில்..
நானோ..
உறவுகளை இணைக்கும்
சிறுபாலமாக இருக்கிறேன்.
நட்புவலை நாற்புரமுண்டு..
ஆனால்..
உலகம் என்பது
உவகையூட்டும் என்மக்கள்தான்..
தனிமையைத்தான் விரட்ட..
கவிதையை துணைக்கழைக்கும்
அகிலாஎன் சீடுக்கவி.
விடுகதைக்கு விடைகொடுங்கள்
வரைந்த சீட்டுக்கவி யாருக்கென விளங்கும்..
மூன்று சகோதரர்களாம்..
முழுநேரம் சுற்றுவாராம்..
மூடியுள்ள கண்ணாடியிலே..
மூவுலகும் ஆட்டுபவராம்.
பூவுக்கு பொலிவுண்டு- ஆனால்
முள்ளும் மோட்சங்கண்டதிங்கே..
கால சக்கரத்தை
காலில் சக்கரங்கட்டி
களைப்பென்ற ஒன்றில்லா
கடிகாரம் அதனுக்கே
கவிதருவேன் சீட்டுக்கவி..
சிறிதும் பெரிதுமாய்
வட்டமாய் சதுரமாய்
மாறுபட்ட வடிவங்கொண்ட
மனிதனவன் முகம்போல
காலங் காட்டும் கடிகாரமே...
சுவரிலும் இருப்பாய்
கையிலும் இருப்பாய்
மேசையிலும் இருப்பாய்
மணிக்கூண்டிலும் இருப்பாய்
யாதுமாகி நின்றாய்..
கடவுள்தான் நீஎனக்கு
காலங்காட்டும் கடிகாரமே..
துளிதுளியாய் நகர்ந்தாலும்..
துள்ளியோட வைப்பவன் நீ..
டிக்டிக்கென சத்தமிட்டே..
திக்திக்கென பதறவைப்பவன்நீ..
காதலன் காத்திருப்பில் ...
கண்ணெல்லாம் உன்மேலே!!!!!!!
காதலியின் கடைக்கண்தான்
காலமதை மறக்கடிக்குமே!!!!!!!!!
ஏனிந்த முரண்பாடோ?
எடுத்துசொல்லு கடிகாரமே?
விடாமல் துள்ளியோடும்
விளையாட்டு பிள்ளையென- வினாடிமுள்.
இடமாறுமே இடைவிடாது
நிமிடத்திற்கு குடும்பத்தலைவனாய்- பெரியமுள்
அமைதிகாத்து நகருமே..
அன்னையாய் அன்புடனே- சின்னமுள்.
கடமையினை சுட்டிக்காட்டும்
கடிகாரத்தின் திறனன்றோ???
மும்முள்ளும் இயங்கினால்தான்
முழுப்பயணம் தொடருமிங்கே..
கூடிவாழும் நெறிவழியை
கற்றுத்தரும் கடிகாரமே...
கடந்திடும் காலமிது
கடத்தாதே இதைவீணாய்
காசைவிட கணக்குபார்த்து
காலத்தை கழித்தவன்தான்
ஞாலத்தில் உயர்வடைந்தான்..
சாலங்கள் பல செய்தான்.
செய்திபல சொன்னாயே..
செலவிடத்தன் நற்பொழுதாய்..
வேண்டுதலும் இதுதானே..
முக்காலமாகி எனையே
மூச்சுமுட்ட செய்பவனே..
கண்சிமிட்டும் நேரம்
கண்மறையும் காலமே...
வந்தவழி பின்னோக்க
மனமில்லை உனக்கேனோ??????
தித்திக்கும் கணங்களுந்தான்
நகராமல் நிற்கட்டுமே..
நோகவைக்கும் நிமிடமுந்தான்
நொடியெனவே பறக்கட்டுமே..
நிழலென தொடர்பவனே..
சூறாவளி சுற்றுப்பயணம்
சுலபத்தில் முடியாததேன்?
மாற்றமுடியாதது ஏதுமில்லை
மார்தட்டுவோர் பலரிங்கு
தோற்றாரே உன்னிடந்தான்
நேர்மைவழி செல்பவனே..
மனமிரங்கு நீயும்..
மனம்போல் உனைமாற்ற..
அன்புடன்
அகிலா ராமசாமி
===================
சீட்டுக் கவியினிலே தரளமாய் அகிலாவின்
தேட்டமுறு கருத்துக்கள் ,சொற்குவியல் அம்மம்மா!
கண்சிமிட்டும் காலமே கண்மறையும் காலமென்றும்
கண்ணிமையாக் காதலர்கள் கடிகார நேரத்தையும்,
தீட்டும் கவிதையினில் சித்திரமாய் காலத்தை,
காட்டும் ஆளுமையைக் கடிகையில் உணர்த்திவிட்டாய்!
காலச் சக்கரந்தான் கடிகார ஓட்டந்தான்!
ஞாலத்தை ஆட்டுவித்து நடத்துகின்ற நாடகமே!
வேண்டுவது கிட்டிவிட்டால் வேதனைகள் இல்லையம்மா
தாண்டிவெளி வருகின்ற சாத்தியங்கள் உள்ளதம்மா!
அன்புடன்,
தங்கமணி.
============
'திருவிளையா டல்'படத்தில் சிவன்பாட்டை நிறுத்தியதும்
ஒருபொருளும் அசையாமல் ஒடுங்கியது போலிங்கே
அகிலாவின் கவிதைகண்(டு) அகமகிழ்ந்து கடிகாரம்
நகராமல் நின்றதனால் நான்வாழ்த்தத் தாமதித்தேன்!
..அனந்த்
10-5-2008
=================
தாமதித்துச் சொல்லுகையில் தாமதித்தால் தானென்ன
தாமதி வாழ்த்தல் தகும்
தாம் மதித்து- தாம்மதித்து என்பதன் இடைக்கிறை தாமதித்து
தாமதி- தாம்+அதி- தாம் அதிகமாக வாழ்த்தல்
இலந்தை
அகிலாவின் கடிகாரம் தந்த சிந்தனை
காலம் ஓடிப் போகிறதைக்
காட்டுகின்ற கடிகாரம்
காலம் தன்னை நல்லபடி
கழிக்க வேண்டிச் சொல்கிறது
கணத்தைக் கனக்க வைக்கையிலே
காலம் சுமையாய் ஆகாது
கணத்தை விரயம் ஆக்கிவிடில்
காலம் சும்க்க வைக்கிறது
காலி ஓட்டம், கனவோட்டம்
காலத்தின்கை இல்லையடா
காலம் உன்கை வருமுன்னர்க்
கையை மூடல் தொல்லைய்டா!
இலந்தை
================
ஆரம் தொடுத்தார் அகிலா; அதில்கடி
காரம் இனித்ததே காண்.
பசுபதி
11-5-08
========
பரீட்சை நேரம்..
பறந்து போனது காலம்..
முடிவு தெரியுமுன்..
முட்கள் நகராமல் பிடிவாதம்..
பாமரத்தமிழ் கவிதை..
பாங்காய்..இருந்ததா..
பதறி இருந்த என்னை..
பெருமனங் கொண்டே ..
நற்சான்றிதழ் தந்த..
அனைவருக்கும் என் நன்றிகள்..
அன்புடன்
அகிலா ராமசாமி
==========
காரமிட்ட கடிதமொன்று கடிகாரம் பெற்றதம்மா!
ஆரக்கால் மூன்றிங்கும் அனுதினமும் சுற்றிகாட்டும்
நேரத்தை இட்டம்போல் நியமிக்க ஆசைகொண்டீர்
யாரந்த வல்லமையும் ஞாலத்தில் பெற்றவரே?
நடராஜன்.
==========
8.
சீட்டுக்கவி - ஒரு புதிர்
காட்டுப்பூக் காதலன் கானகம் விரும்பினன்
வாட்டு பற்பல வசதிகள் கொண்டு
கட்டிய மனிதரைக் கட்டியே வைத்திடும்
கட்டடக் கூட்டுடைக் கடுநகர் வெறுத்தேன்
கடுங்கோடை வந்ததிடக் கடுப்பதன் உச்சத்
தொடுநிலை பெற்றநான் தூரமா யேகினேன்.
காட்டு வாசம் காட்டும் நிலமாம்
நாட்டுப் புறத்தில் நல்லுற வொருவர்
வீட்டுக் கேகினேன் விடுதலை பெற்றவன்
ஏட்டில் யெழுதிட ஈடுபட்ட நேரத்தில்
அங்குள இருவர் அவரோ சிறுவர்
இங்கேட்டில் அப்படி என்னதான் எழுதுவீர்
என்றார்க்கு சொன்னேன் எழுதுவது பாட்டென
நின்றவர் அதுபடித்துச் நிமிர்ந்தார் சிரித்தார்
பட்டெனப் பகர்ந்தார் பாட்டன்(று) இதுவென
சட்டெனப் புரிந்தது சரக்கெனக் கிலையென
ஒப்பிட மனமிலா ஒடுங்கியன் கேட்டேன்
தப்பெது கண்டீர் தம்பியர் நீவிரும்
அப்படி யிருந்தால் அதுசெயு ளென்றார்
அப்பாடா வெனநான் ஆறுதல் பெற்றேன்
நிப்பாட்டா சிறுவன் நீட்டி முழக்கினான்
இப்பாட்டின் பெயர் இதுவென உண்டா
சீட்டில் வருகிற சிட்டுக் கவியென்றேன்
வீட்டுச் சிறுவன் வேட்டொன்று விட்டான்
காசுக்குக் கிட்டும் கவியிதே யென்றான்
யோசித்துப் பார்க்க ஒளியெதும் வராததால்
பையா நீயும் பொய்யா சொன்னாய்?
ஐயா என்சொல் அத்தனை மெய்யாம்
நீயே சொல்வாய் நின்சொலின் பொருளென
வாய்நிறை பல்லான் வழக்கொன்று வைத்தான்
ஒருபொழு துமக்கு உவந்தளித்தேன் நான்
உறுபொருள் ஏதென உணர்ந்துநீர் சொல்க
கொடுத்தீர் விடையெனில் கொடுக்கா புளிதந்தேன்
விடுத்தீர் எனிலோ விட்டீர் உம்பெட்டி
நடுக்கம் கொடுக்கும் கிடுக்கிக் பிடியிதை
விடுக்கும் நோக்கில் விற்பனர் சபையில்
தொடுத்தேன் இப்புதிர் துலக்கிடு வீரே!
நடராஜன்.
9.
கடிகாரத்துக்கு வேண்டுகோளாய் சீட்டுக்கவி அனுப்பிய
அகிலாராமசாமி அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
ஆறாம் அழைப்பு: கவிஞர் தங்கமணி.
சின்னதாகத் தொடங்கியிவர் செயுள்பலவும் செய்தார்
செறிவுகளைச் சேர்த்துசேர்த்து சிறப்புகளைப் பெற்றார்
முன்னேற்றம் கண்ணெதிரே காட்டியவர் இவரே
முயற்சிக்கு இலக்கணமாய் இருந்தவரும் இவரே
சொன்னதெலாம் சொன்னமாகும் தங்கமணி இவரே
சொல்கடிதம் யார்க்கெனவே சொல்லிடவும் வருக
இன்னமுது தோற்றுவிடும் இனியகவி தருக
இவ்வரங்கம் இன்புறவே எழுந்தகவி தருக!
நடராஜன்
==========
சீட்டுக்கவி--மனத்தை வேண்டுதல்.
-----------------------------------
தலைவர் வாழ்த்து.
--------------------
அமிழ்தினிய தமிழரங்கில் அருந்தலைமை தாங்கிடுவார்
தமிழறியும் ஆர்வமிக தண்டமிழ்பாப் புனைந்திடுவார்
நடராசன் அவர்தலைமை நன்றென்று வாழ்த்திடுவோம்
நடராசப் பெருமானின் நற்கருணை என்றுமுண்டு.
சீட்டுக்கவி--மனம்--மனத்தை வேண்டல்.
---------------------------------------
ஏட்டுச் சுவடியினில் இனிதாய் வளர்ந்தகலை!
சீட்டுக் கவியாக செய்தியைத் தரும்கவிதை!
வாட்டும் வறுமைதனை மாற்றிடும் இயல்கவிதை!
பாட்டில் கவிநிலையைப் பகர்கின்ற கவிவகையாம்!
கொள்ளைகொள்ளும் காவியங்கள் கொடையினால் பெற்றசெல்வம்!
வள்ளலினால் இலக்கியங்கள் வளர்நிலையை அறிந்திடுவோம்!
என்னைப்பற்றி
-----------
சீர்கந்தா சிரமம்சூழ் சேலம்நகர் அருகினிலே
ஆர்கொண்ட கைலைநாதர் ஆலயமும் பசும்வயலாம்!
பேர்பெற்ற தாரைநகர் பிறந்த ஊர் என் ஊராம்!
காருற்ற மலைகள்சூழ் கவின்கொங்கு வளநாடாம்!
கண் அவராம் கணவரில்லாக் கைம்பெண்ணாய் மக்களுடன்
பெண்ணிவளாம் தங்கமணி பெரிதாக என்னசொல்ல?
மின்சார அலுவலக மின் எழுத்தர் வேலையிலென்
சம்சார வாழ்வென்னும் சகடுருண்டே ஓடியதே!
அக்கறையாய் மகள்,மகன்கள் அன்பான மருமக்கள்
சக்கரையாய் வாரிசுகள் சந்தோசம் நிறைஞ்சிருக்கு!
கற்றிடும் நிலையினில் கவி இயற்ற ஆசையுண்டு!
உற்றிடும் வாழ்வினில் ஓர்துளி கற்பேனே!
நல்ல இசை நல்லனவே நாட்டுகின்ற எழுத்துகள்
நல்விருந்தாய் ஓவியங்கள் நான்விரும்பி ரசித்திடுவேன்
கணினியினில் செந்தமிழில் கண்டதெல்லாம் உன்னதமாம்!
அணியமைந்த குழுமத்தில் கொண்டதெல்லாம் விழுப்பந்தான்!
சோதரரும்,மகன்களும்,சொந்தமுள்ள மகள்களும்
ஆதரவாம் உறவுகளாய் ஆனதிலோர் விந்தையுண்டோ?
குமிழியென்னும் இவ்வாழ்வில் குலைந்திடாத பந்தமாக
தமிழ்தந்த சொந்தமிது! தமிழ்ச்சொந்தம் வளர்கவென்பேன்
சிதாகாசம் மனமுனக்குள் சித்துவிளை யாடிடுமே!
நிதானத்தைப் பயிலுகின்ற ஞானத்தை அளித்திடுவாய்!
இமயமாம் மலைகளிலும் இயற்கையிலும் தவசீலர்
அமையுமன உணர்வலைகள் அருள்செய்த தேசமிது!
வான்வெளியில் பறக்கின்ற வண்ணப் பறவைபோல்
**நானெண்ண வெளிபறக்க நத்திடுவேன்! நல்மனமே!
மனமேநீ! தோணி! மக்களைக் கரைசேர்ப்பாய்!
மனமே நீ!ஆழி! மந்திரமாம் உன்னொலியே!
மனமே நீ சக்தி! உழைப்பே உயர்வென்பாய்!
மனமேநீ ஆலயம்! வரம்தர இறைவருவான்!
மனம்உன்னை வேண்டுகிறேன் வளம்பெருக்க வேண்டுமென்று
தனமொன்றே எண்ணமதாய்த் தடுமாறும் மானுடத்தைத்
தரமான நிலையாக்கு! தகவாகும் வலுவாக்கு!
உரமான உளமாக்கு! உயர்வாக்கு உனைகேட்டேன்!
உன்னுள்ளில் ஒலிக்கின்ற உணர்வலைக்கு வண்ணமுண்டு!
வன்கண்ணும், வன்மமும், வன்மையும் வண்ணந்தான்!
உவகையும், சாந்தமும், உயர்த்திடும் வன்னமாம்!
தவமென்னும் சத்துவம் தரும்நிலையே உன்னதம்!
வளர்ச்சியில் பலநிலைகள் மனமே!நீ! இருக்கின்றாய்!
தளர்ச்சியில் ஆறுதல் தந்தென்னைத் தாங்கிடுவாய்!
இளமையில், நடுவயதில், இரங்கிடும் முதுமையில்
வளந்தரும் வாழ்வாக மனமே!நீ! அமைந்திடுவாய்!
மனிதனுக்குள் உள்ளுணர்வாய் மனமுனது சாட்சிஉண்டு!
தனிமனித உயர்வினுக்கு சந்ததமும் கைகொடுப்பாய்!
மனிதனுக்கும் மனமுனக்கும் மாறாத போராட்டம்
மனைறுக்கம் மனமுளைச்சல் வரிசையாய் இவ்வுலகில்!
இன்றைய வாழ்க்கைமுறை இயங்குகின்ற வேகத்தில்
சென்றிடுமிந் நிலைமையினைத் தாங்குகியருள்! ஓ!மனமே!
படிகின்ற மாசுகளைப் பக்குவமாய் நீக்கிவிட
முடிகின்ற விந்தையினை வரமாகக் கொடு!மனமே!
கள்ளமின்றிக் கபடின்றிக் களங்கமில்லாப் பிள்ளைமனம்
வெள்ளையுள்ளச் சிரிப்பினிலே வியந்திறைவன் குடிபுகுவான்!
பிஞ்சு வயதினில் பிள்ளைமனம் தெய்வீகம்!
அஞ்சும் ஆர்ப்பரிப்பில் அடங்காது வளர்ந்தமனம்!
கெஞ்சியுன்னைக் கேட்பதெல்லாம் கெடுதியில்லா நன்றினுக்கே!
தஞ்சமென்பேன்! இறையுணர்வில் தளைத்திடவை! என்மனமே!
குழந்தைமனம் வேண்டுகிறேன்!கொண்டிடு நீ! கருத்தினிலே
வழங்கிடுவாய் இவ்வரத்தை மனமே நீ! வாழ்க!வாழ்க!!
அன்புடன்,
தங்கமணி.
====================
நெஞ்சொடு கிளத்தல் என்னும் நியதிபின் பற்றிச் சீட்டில்,
வஞ்சமும் சூது மற்ற வாழ்க்கைதாம் எய்த முன்னம்
பிஞ்சிலே இருந்த பாங்கைப் பெற்றிட வைப்பாயென்று
கெஞ்சியே தம்ம னத்தைக் கேட்டுநற் கவிதை தந்தார்.
..அனந்த்
18-5-2008
===============
அழகான கருத்துடனே ஆதங்கம் ஒலிக்கின்ற
விழைவதனைத் தங்கமணி வெளியிட்டார் கவிதனிலே.
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலென்பர்;
குழவியுள்ளம் வந்துவிடின் குறையாவும் தீராவோ?
பசுபதி
18-5-08
==============
கள்ளமில்லா பிள்ளை உள்ளம்..
கடவுள்வாழும் ஒரு இல்லம்..
வைர வரிகளால்..
தங்கமணி கோர்த்தார்..
ஆழம் அறிய முடியா..
அருமை மனம் பற்றி..
வாழ்த்துக்கள்..
அன்புடன்
அகிலாராமசாமி
============
அழகான பாடல் தங்கம் அணிஆடல்.!
குழந்தைமனம் கேட்டார்;குதுகலத்தில் ஆழ!
..
கசடுகளை நீயே போக்கென்றார்.கற்கண்டாம்
நல்ல குணங்கள் நாளும் நிரப்பென்றார்!
..
இறைமணம் கொண்டேநீ என்னை இன்புறவை,(என்றார்)
சிறிதும் சஞ்சலம் வேண்டா! சீர்தூக்கி
..
த்யானம் சித்தித்தால் இவையெல்லாம் கிட்டுமே!
தங்கமணிக்கு இவைதர யானும் வேண்டுவன்!
வாழ்க!,
யோகியார்
===================
சீட்டுக் கவியில் தங்கமணி
சிறப்பாய் மனத்தை வேண்டுகிறார்
கூட்டும் வாழ்வில் தோணியென
குதித்த லைக்கும் ஆழியென
ஓட்டும் சக்தி கோயிலென
ஒவ்வொன்றாகத் தான் சொல்லி
வேட்கும் குழந்தை மனம்வேண்டி
விரும்பும் வண்ணம் கவிநெய்தார்.
இலந்தை
================
தன்மனதுக் கேயிட்டார் தாக்கலொன்று தங்கமணி
பொன்மனது கொண்டிருக்கும் பொக்கைவாய் பிள்ளைமனம்
அன்பொழுக கேட்டிட்டார் ஆண்டவரும் தந்தருள்வார்
சின்மயத்தைப் பெற்றுதரும் சிக்கலிலா இவ்வழியை!
அன்புடன்
நடராஜன்.
==============
10.
அன்புடையீர்,
சந்தவசந்தத்தின் 28வது கவியரங்கத்தில் பங்கேற்க மேலும் இருவர் ஒப்புதல்
அளித்திருக்கிறார்கள்.
கவிஞர்களின் பட்டியல்:
பங்குபெற்றவர்கள்
1. கவிஞர் இலந்தை இராமசாமி அவர்கள்
2. கவிஞர் பசுபதி அவர்கள்
3. கவிஞர் வரதராஜன் அவர்கள்
4. கவிஞர் அனந்த் அவர்கள்
5. கவிஞர் அகிலாராமசாமி அவர்கள்
6. கவிஞர் தங்கமணி அவர்கள்
பங்கேற்க இருப்பவர்கள்
7. கவிஞர் கவியோகி வேதம் அவர்கள்
8. கவிஞர் வித்யா அவர்கள்
9. கவிஞர் ஹரி கிருஷ்ணன் அவர்கள்
10. கவிஞர் சுப்ரமணியன் அவர்கள்
11. கவிஞர் சௌந்தர்அவர்கள்
இந்த வரிசையில் கவிஞர்களை தொடர்ந்து அழைக்கிறேன்
அன்புடன்
நடராஜன்.
=============
தன்மனக் குழந்தையை தட்டி எழுப்பினாரோ தங்கமணி?
பிள்ளைமனம் கேட்ட தங்கமணிக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
ஏழாம் அழைப்பு: கவிஞர் கவியோகிவேதம்.
வேகத்தைக் குறைத்ததை வன்மையென மாற்றும்
வித்தைதனை கைகொண்ட வேதகவி யிந்த
யோகத்தை அழைக்கின்ற யோகமதைப் பெற்றேன்
யாசித்தும் கிட்டிடுமோ யான்பெற்ற யோகம்
தேகத்தை தெளிவிக்கும் ஞானத்தைப் பெற்ற
தெய்வமனக் கவியோகி வேதம்நீர் வருக
ஏகிடுமோர் ஏட்டோலை யார்க்கெனவே சொல்க
ஏற்றிமிகு நும்கவிதை இவ்வரங்கம் பெறுக!
நடராஜன்
===========
ஆளைத் திருத்த ஓர் சீட்டுக்கவி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&(கவியோகி வேதம்)
"ஆட்டுவிக் கின்றான் நடராஜன்
..அம்பலத்தே"- என்றால் அழுவோமா?
ஆட்டிடும் போதே வினைகளைந்தே
..அகம்சேர அன்றோ அழைக்கின்றான்!
வாட்டிடும் கவலை மறந்தேநாம்
..வனப்புள(அவ்)ஆட்டம் பார்ப்பதனால்
"ஆட்டமும் நடரா ஜனும்ஒன்றே"-
..அந்தஓர் ஞானம் உதிப்பதனால்
..
"வேகத்தைக் கெடுத்தோன் அடிவெல்க!"--
..'மெய்உணரச்' சொன்னார் வாசகனார்!
வேகத்தை வேதம் கெடுத்ததுவாய்
..விளம்பினார் நம்நட ராஜனுமே!
மோகமாய்க் கவிமேல் கவிமோத
..முத்துக்கள் சேர்த்தார் ஆடரங்கில்!
வேகமாய்ச் சீட்டுக்' கவிகுலுக்கும்
..வேந்தனார் ராஜன் பணிவாழ்க!
**********************************************
நாபியில் இருந்தே மூச்சு(உ)லுக்கி
..நல்லதோர் "யாமம்' செய்வதனால்,
வாபியில் இருக்கும் நீரைவற்ற
..வல்லவன் ஆவேன் யான்ஒருநாள்!
சாபத்தி னாலே பிணிஉலுக்கும்
..தளர்ந்தவ னையுமே மீட்பேன்யான்!
'கோபமே' "பதி" யாய் மணந்துகொண்ட
..'குணலக்ஷ்மி'* வாழ்வை மீட்பேனா?(*-எங்கள் வேலைக்காரி)
மூட்டியஎன் மூச்சும் இவள்கணவன்
..மூர்க்கத்தைப் போக்க விலைஎனினும்,
சீட்டுப்பா ஒன்றை இவண்விட்டுச்
..சிந்தையைத் திருத்தப் பார்க்கின்றேன்!
ஆட்டுப்பால் உண்ட காந்தியாநான்?
..அனைவரை யும்என்றன் வசப்படுத்த?
கோட்டுக்குள் சிக்கும் கோலம்போல்
..குறிவைக்கின் றானே 'விதி' ஒருவன்!
..
சீட்டுக்கவி யாலேனும் திருந்துவையோ நீ?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடேய்!
..இலக்குமி என்றன் வேலைக்காரி!
....எந்தஒரு வேலை இருந்தாலும்,
கலக்கமோ,மறுப்போ செய்யாமல்
..காட்சிகள் "டீ',வி' பார்க்காமல்,
துலக்கிய குத்து விளக்கைப்போல்
..தூய்மையாய் வேலை முடிப்பளடா!
கலக்கிய கள்மேல் கொண்டபற்றில்(நீ)
..கடுகேனும் இவள்மேல் வைக்கலையே!
..
தச்சனாய் வேலை செயத்தெரிந்தும்,
..தளர்ந்துநீ போனாய் கள்குடியால்!
எச்சிலை நக்கும் நாயைப்போல்
..இவள்காசு பறித்தே உண்கின்றாய்!
மிச்சமாம் கொஞ்சம் திறன்மதித்து
..வேலைசிலர் கொடுத்தும் செய்யாமல்
துச்சமாய்க் கலையை எண்ணியேநீ
..தூரவே ஒதுக்கி 'மிதக்' கின்றாய்!
..
காலையில் எழுந்தே நீர்பிடித்துக்
..கஞ்சியை உனக்காய் உலைவைத்து,
சேலை' என் றிருக்கும் பழந்துணியைத்
..தோய்த்தேஉ லர்த்திக் குளித்தபின்பே
ஆலைவாய்ச் சக்கை எனக்கிட்க்கும்
..'அகம்'மிகும் உன்னைத் தோள்கிடத்தி
கோலம்இன்(று) இருக்கும் உனைத்துடைத்துக்
..கொஞ்சமாய் உணவைப் புகட்டியபின்,
..
என்வீடு வருவாள் வேலைசெய்ய!
..ஏனடா இவளைப் படுத்துகின்றாய்?
தின்னவே எதுவும் இல்லையென்றால்
..திட்டியே இவளை அடிக்கின்றாய்!
தின்பதில் கொஞ்சம் ருசிகுறைந்தால்
..தட்டினை வீசிப் போர்செய்வாய்!
என்னமாய் அக்கம் பக்கத்தார்
..இனிமைச்சொல் சொல்வார்! பகைமைகொண்டாய்!
..
சிலநாள்யான் உனக்கே 'உரை' சொன்னால்
..திருந்தினேன் என்பாய்! மறுநாளே
நிலவினை மறைக்கும் மேகம்போல்
..நீள்குடி உன்றன் குணம்மறைக்கும்!
பலகாசு புளிப்பா னைக்குள்ளும்
..பதுங்கியே கிடந்தால் திருடுகின்றாய்!
உலவிடும் பாம்பும் சாதுவாகும்!
..உன்மத்தன் நீதான் திருந்துவையோ?
..
பாதையில் பலநாள் விழுந்திருந்தாய்!
..பத்தினி லக்ஷ்மி இல்கொணர்ந்தாள்;
பாதகம் இவள்மேல் செய்தாலும்.
..பாவைஉன்மேல் கருணை செய்கின்றாள்!
மோதகம் படைத்தே சாமிக்கு
..முற்றும்நீ திருந்த வேண்டுகின்றாள்(இவள்)
வேதனை உணர மாட்டாயோ?
..விந்தையும் ஒன்று நிகழாதோ?..
பொன்னை அடித்தால் புத்திவரும்!
..புதிதாய் நகைகள் செய்யவரும்!
மின்னல் அடித்தால் முகில்சேரும்!
..மேலும் முளையை அதுவளர்க்கும் !
கன்னல் அடித்தால்,சாறுதிரும்!
..கனலால், இரும்பும் வீடுவரும்!
உன்னை அடித்தால் என்னவரும்?
..உதிரம் கொட்டும்!-திருந்துவையோ?
..
இவள்சம்பா திக்கும் வரையில்தான்
..இரையுமே கிடைக்கும் உன்வாய்க்கு!
இவள்படுக்கா திருக்கும் வரைக்கும்தான்
..இளம்கள்ளும் கிட்டும் திமிர்'துள்ள!
சுவைஅடங்கும் நீரும் பயன்கொடுக்கும்
..துளிநீரில் கிருமி புகும்வரைக்கும்!
நவைகெட்ட 'குடியா!' புரிந்துகொள்வாய்!
..நல்சீட்டுக்' கவியால் திருந்திடுவாய்!
&&&&&&&&&&&&&&&&&(சீட்டு அனுப்பினோர்;-- வேதம்)
அன்புள்ள கவியோகி,
அற்புதமான வரிகள். குறிப்பாக:
" கலக்கிய கள்மேல் கொண்டபற்றில்(நீ)
கடுகேனும் இவள்மேல் வைக்கலயே "
"எச்சிலை நக்கும் நாயைப்போல்
இவள்காசு பறித்தே உண்கின்றாய்"
பாதையில் பலநாள் விழுந்திருந்தாய்
பத்தினி லக்ஷ்மி இல் கொணர்ந்தாள்
பாதகம் இவல் மேல் செய்தாலும்
பாவைஉன் மேலகருணை செய்கிறாள்
மோதகம் படைத்தே சாமிக்கு
முற்றும் நீ திருந்த வேண்டுகின்றாள்
வேதனை உணர மாட்டாயோ?
விந்தையும் ஒன்று நிகழாதோ?
வார்த்தைகள் வந்து விழுகின்ற வேகம் ,அபாரம்.
இவ்வளவு தூரம் ஆத்மார்த்தமாக வேண்டுகிறீர்கள்.
விந்தை கண்டிப்பாக நிகழும்.
அ. கி. வரதராஜன்
=================
அன்புள்ள வேதம்,
உங்கள் சீட்டுக் கவி அற்புதம்.
அக்கவியின் தாக்கம் இதோ:
இலக்குமி பலபேர் இருக்கின்றார் நாட்டில் ;
இன்னல்கள் மாத்திரமே இவர்கண்டார் வீட்டில் .
வலக்கரம் பற்றி வாழ்விக்க வந்தான் ;
வடுவது ஒன்றே வக்கணையாய்த் தந்தான்
விலக்கிட வேண்டும் இவளுறு வேதனை,
விடுத்தார் கவியில் வேதமும் போதனை.
இலக்குமே கொள்வார் இலக்குமிக்கு வாழ்வு
இறையும் அருள்வான் இவளுறாள் தாழ்வு.
குடித்தனம் பற்றிக் கொண்டதோ கனவு;
கோதை இவள்பாவம் கண்டதோ சிதைவு.
அடித்தளம் அவளில்லம் அன்றாடம் ஆட்டம் ;
அவனுக்குக் குடிமேல் அளப்பரு நாட்டம்.
“குடிதினம் வேண்டும்” கொண்டவன் சொல்வான்;
கொடேன் காசென்றால் குத்துதை கொள்வாள்.
அடுத்தவர் வாழ்வென்று அகலார் வேதம்.
அவளுக் கென்று அவர்போவார் காதம் .
கோலைக் கையில் எடுக்கின்றார், (எழுது கோலைக்)
குமறும் உள்ளம் திறக்கின்றார்.
வேலைக் காரி படுகின்ற
வேதனை பற்றிப் பகர்கின்றார்.
ஆலைக் கரும்பு என்பதுவாய்
அவளுறு அவலம் வடிக்கின்றார்.
பாலைச் சுண்டக் காய்ச்சிட்ட,
பக்குவம் போல இனிக்கின்றார்.
அ.கி. வரதராஜன்.
சிங்கப்பூர்.
மே- 22- 2008
==========================
கருணை பொங்கி வழிகையிலே
கவிதை தாளம் இட்டுவரும்
தருணம் பார்த்துத் தக்கபடி
சாட்டை வீச்சுத் தந்துள்ளீர்
ஒருவன் திருந்த இதுபோதும்
உங்கள் தமிழின் உயிர்த்துடிப்பு
திருப்பம் கொணரும், தெளிந்திடுவான்
சிறப்புப் பெறுவாள் இலட்சுமியே!
இலந்தை
பொன்னை அடித்தால் புத்திவரும்!
..புதிதாய் நகைகள் செய்யவரும்!
மின்னல் அடித்தால் முகில்சேரும்!
..மேலும் முளையை அதுவளர்க்கும் !
கன்னல் அடித்தால்,சாறுதிரும்!
..கனலால், இரும்பும் வீடுவரும்!
உன்னை அடித்தால் என்னவரும்?
..உதிரம் கொட்டும்!-திருந்துவையோ?
மிகச் சிறப்பான வரிகள்
இலந்தை
================
கள்ளம் அற்ற பணியாள்மேல்
கருணை கொண்ட கவியோகி
கள்ளில் மிதக்கும் கணவனுக்குக்
கவியில் சாட்டை அடிகொடுத்தார்
துள்ளும் வரிகள் அள்ளுதையே!
சொல்லில் வேகம் சொக்குதையே!
உள்ளம் அவனை உந்திவிடும்;
உணர்வான், தெளிவான் நிச்சயமாய்!
பசுபதி
22-5-08
============
விடியல் நோக்கும் பெண்களெல்லாம்
...விரைவில் நன்மை பெற்றிடணும்!
குடியைக் கெடுக்கும் குடியழிய
...கொள்வோம் உறுதி செயலினையே!
முடிவில் லாதத் துன்பினுக்கே
...முடிவென்? குடிப்போர் திருந்திடனும்!
இடியாய் முழங்கி சவுக்கடியாய்
...எழுதும் வேத கவிவெல்லும்!
அன்புடன்,
தங்கமணி.
===============
பாடல் உணர்ச்சிபூர்வமாக உள்ளது. வாழ்த்துகள்.
ஓர் ஐயம். சீட்டுக்கவியில் தன்னைப் பற்றிச் சற்றுச் சொல்லிப்,
பெறுபவர்க்கு ஒரு வேண்டுகோளாக அமைக்கவேண்டாவா?
// மின்னல் அடித்தால் முகில்சேரும்! //
முகில் சேர்ந்தால்தானே மின்னல் அடிக்கும். இங்கே முரணாக உள்ளதே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
==========
கண்ணெதிரே நடக்கும் அநியாயத்தை
கண்டும் காணாமல் போகிறோம்..
சீட்டுகவி மூலம்..
தட்டி கேட்ட பாங்கு அருமை..
எப்படி ஐயா, உங்களுக்கு இப்படி ஒரு தனிப்பட்ட சிந்தனை
எண்ணி வியக்கிறேன்..
அன்புடன்
அகிலாராமசாமி
==============
கவியோகி வேதத்தின் கவிதை உணர்ச்சி வேகமும் உயர்ந்த நோக்கமும் கொண்டு
சீட்டுக் கவியில் ஒரு மாறுபட்ட வகையாக அமைந்துள்ளது. பெறுபவரை அடேய்
என்று அதட்டும் விதமும் சீட்டுக் கவியில் இதுவரை காணாதது! சிவசிவா மணி
சொன்னதுபோல, சீட்டு வரையும் கவிஞர் தம்மை அறிமுகப் படுத்திக் கொள்ளல்
நலம்.
அனந்த்
23-5-2008
=================
கவியோகியின் சீட்டுக் கவி
அடியுதை ஒன்றே அனுபவித்தாள் லட்சுமி
குடிகாரன் நாளும் கொடுக்க - தடியதனால்
தாக்கியது ஒப்பத் தமிழ்க்கவி ஒன்றினை
ஆக்கியது அற்புதமே ஆம்.
தவறே தினமிழைப்பான் தப்பான கொண்டான்
அவனும் திருந்திடவே அம்மா - கவின்மிகும்
சீட்டுக் கவிதந்தார் ; சீர்திருத்தம் கொண்டுதரும்
சூட்டுக்கோ லென்றதனைச் சொல்.
அ.கி. வரத ராஜன்,
சிங்கப்பூர்.
மே- 24 - 2008
=========
அடேயென் றழைக்கும் ஆச்சர்ய ஓலையிது!
பொடேரென் றறைந்துவிடும் பொங்குமொழிக் கவிதையிது!
மடேரென மடேரென மண்டையில் சாத்தியும்
விடேனென்பான் இதுகேட்டு விட்டேனென் பானைய்யே!
நடராஜன்.
===============
11.
யோகத்தில் பெற்றவேகம் பலவாகப் பெருக்கி அதை
நன்னோக்கில் செலுத்திய பாக்களாக அளித்திட்டார் கவியோகிவேதம்!
அவருக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
எட்டாம் அழைப்பு: கவிஞர் வித்யா.
சீதைக்கேன் நவமியென்ற சிறப்புமிலை என்றே
சீரியதோர் கேள்விவைத்த அமெரிக்க தமிழார்
பாதையொன்று புதிதாகப் போட்டிங்கு பதிலும்
பெற்றுவிட்டார் பாரதியின் பெயர்கொண்ட மகளார்
கோதைநிகர் பெண்ணிவரும் பின்னிவரும் கவியில்
கொண்டிருக்கும் செய்திகளைக் கொணர்ந்திங்கு வருக!
காதுகளைத் திறந்துவைத்தோம் கவிவித்யா வருக!
கன்னலெனும் பாச்சரமும் இவ்வரங்கம் பெறுக!
நடராஜன்
=========
12.
கவிஞர் வித்யாவின் கவிதை சற்று தாமதமாவதால்
அடுத்த கவிஞரை அழைக்கிறேன்
கவியரங்கம் - 28
ஒன்பதாம் அழைப்பு: கவிஞர் ஹரி கிருஷ்ணன்.
வள்ளுவரைக் கம்பனொடு பாரதியைப் பற்றி
வழிசொல்லும் கண்ணெனவே கொண்டிருப்பார் இவரே
தெள்ளுதமிழ் சொல்லிடவே முக்கண்ணால் கண்டு
தேர்ந்தமொழி நமக்களிக்கும் ஹரியண்ணன் இவரே
பிள்ளைமனப் பெருங்கவிஞ்ர் மொழியறிஞர் ஹரிகி
பிறப்பிக்கும் சேதியென்ன ஓலையொடு வருக!
வெள்ளைத்தாள் விரித்தோம்யாம் வண்ணமென வருக!
விந்தையொடு சிந்தையொடு விளைகவிதை தருக!
நடராஜன்
=========
உலையேற்றி வைப்பதன்முன் உண்ண அழைக்கும்
அலையடிக்கும் என்றா அறிந்தேன்! - நிலைபார்த்து
வேளைக்குள் பொங்கி விரைவில் முடித்திங்கே
நாளை படைத்திடுவேன் நான்.
ஒருநாள் வாய்தா. வாய்-தா இல்லை. வாய்தா. வந்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்.
--
அன்புடன்,
ஹரிகி.
=============
ஒருநாள் அதுவன்றி ஓராண்டும் காப்போம்,
அருமையாம் அப்பா அதற்கு- கரும்பெனத்
தித்திக்கும் தீஞ்சுவை தேர்ந்தெடுத்துத் தந்திடுவீர்
எத்திக்கும் போற்றும் இனிப்பு.
அ.கி.வரதராஜன்
சிங்கப்பூர்
மே- 26-2008
=====================
மனநிறைந்த அழைப்புக்கு நன்றி தலைவரே. இந்தக் கவியரங்கில் என்னுடைய
நெடுநாள் கனவொன்று நிறைவேறுகிறது. எழுத்தோடு குரல்வழியாகக் கவிதையைத்
தரவேண்டும் என்று 1999 முதல் நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.
இந்தக் கவிதையை இடும் தருணத்தில் ஜிமெயிலின் அளவற்ற இடமளிப்பு நினைவுக்கு
வந்ததால், குரல்வழியிலும் கவிதையைப் பதிந்திருக்கிறேன்.
கேட்டுக்கொண்டும் வாசிக்கலாம். வாசித்தபடியும் கேட்கலாம்.
அவைக்கு
வித்யாவின் பீடத்தில் மின்னல் சிரிப்புடனே
வித்யாநீ என்நெஞ்சில் வித்திடுக - வித்யா
விலாசத்தார் முன்னென்றன் விண்ணப்பம் நெஞ்சக்
கிலேசத்தை நீக்கட்டும் கீண்டு.
இது வித்யா (ஜெயராமன்) அமரவேண்டிய பீடம். வித்யாதேவியின் அருள்
ததும்புவதும் அவளுக்கே உரியதுமான இடம். இந்த இடத்தில் நான் அமர
வித்யாதேவி துணை நிற்கட்டும். 'இதைச் செய்யமுடியுமா' என்று சதா தயங்கும்
என் கிலேசம் நீங்கட்டும்.
இறைக்கு
கோடைநகர் வேலுண்டு; கொண்ட மனமுண்டு;
வாடையிலே உன்னருள்நீ வார்ப்பதுண்டு - கூடுமொளி
வீணைத் திருக்கரத்தி மின்கடைக்கண் பார்வையுடன்
நாணைத் துறக்கின்றேன் நான்.
கோடைநகர்: வல்லக்கோட்டை. வல்லக்கோட்டை முருகனுடைய அருளை அனுபவித்தும்,
அம்மை சாரதையின் அருட்பார்வையில் நனைந்தும், சீட்டுக்கவியில் தன்னைக்
குறித்துப் பேச நேர்வதால் ஏற்படும் நாணத்தை இப்போது துறக்கின்றேன்.
வாரானை; பருவத்தே வாரானை
.....வந்தபின்னும் மனமொன்றக் கவியேதும்
தாரானை; செங்கடம்பின் தாரானை
.....தன்நெஞ்சில் வைத்ததனால் கொஞ்சம்போல்
பேரானை; உன்பக்தி பேரானை
..... பேசிநிற்க அழைக்கின்றார் பெம்மானே
கூராணை; பேச்செதுவும் கூறானை
..... குன்றேற்றி வைப்பதுமுன் கருணையல்லோ.
அம்மாவும் அப்பாவும் கையை நீட்டி 'வா வா' என்று அழைக்கும் வாரானைப்
பருவத்தில் அவர்களிடத்தில் 'வரமாட்டேன்' என்று ஓடிப் போகும்
குழந்தையைப்போல் வாரானை என்றும் கொள்ளலாம். அவையில் அனைவரும் வாவா
என்றழைக்கும் நேரத்தில், உரிய தருணத்தில் வந்து சேராதவனை என்றும்
கொள்ளலாம். கூர்ஆணை: உன் கூரிய வேலின்மேல் ஆணை.
தலைமைக்கு
தம்பி நடராஜத் தங்கத் தலைமைக்கே
தும்பி எனநானும் துள்ளிவந்தேன் - தம்பி
தலையசைக்க நான்பாட சந்த வசந்தம்*
நிலைபெற்று நிற்கவென் நெஞ்சு.
* சந்தவசந்தத்தில் என்ற பொருளில் சொல்லப்பட்டது. நான் அண்ணா என்று
அழைப்பவர்களுக்கு நடுவில் என்னை அண்ணா என்று அழைக்கவும் ஒருவர்
இருக்கிறார் அல்லவா.
சீட்டுக் கவி
கண்மூடி இமைவிரியும் போதுக்குள் கவிநூறு
............... கனமாகப் பொழிகின்றவன்
..........கவினான வெண்பாவில் கதிதுள்ளும் வ்ருத்தத்தில்
............... கணக்கான சித்ரகவியில்
எண்ணாரும் உரைநடையில் இருமொழியில் என்னாளும்
............... எழுதிக்கு விக்கின்றவன்
.......... ஏதுக்குச் சிரிக்கிறாய், உன்னருட் பெருக்கத்தில்
...............என்னகுறை இங்கெனக்கு!
பண்தொட்ட பாதத்தை இளவயதில் நெஞ்சுக்குள்
............... பதித்தெனை ஆண்டுகொண்டாய்
..........பச்சைமயில் ஆடுகிற விச்சைமிகு கோடைநகர்
............... பண்வளர மேவுகுகனே,
அண்ணாம லைக்குன்றில் அருணகிரி நாதகுரு
...............ஆட்பட்ட தன்மையைப்போல்
..........ஹரிகிருஷ்ண கவிகேட்டுன் ஜபமாலை தரவேண்டும்
............... அடநானுன் மகவல்லனா!
அன்றென்றன் உள்ளத்தில் நீவைத்த பொற்பாதம்
............... அகலாமல் நிற்கவேண்டும்
..........அன்புமிகு இல்லமும் அதைச்சூழு நண்பருமுன்
...............அருளோடு பெருகவேண்டும்
என்றென்றும் இனிமீதம் உளகணம் ஒன்றேனும்
...............எய்த்துவீண் ஆகிடாமல்
..........எழுத்தோடு கல்வியினில் எப்போதும் நானொன்றி
............... இருத்தலும் தொடரவேண்டும்
துன்றிமிகச் சூழ்ந்தெனைக் கொல்கின்ற சோர்வினொடு
...............சோம்பரும் தொலையவேண்டும்
..........ஜோதிவேல் என்சிந்தை சூழ்ந்தென்றும் மாறாமல்
...............தூண்டியே நடத்தவேண்டும்
மன்றார என்னாணை; வழிமாற எனைவிடினான்
...............வையவும் தயங்கமாட்டேன்.
..........வந்தித்த வாயிலுனை நிந்தித்த போதுமெனை
...............வாழ்விக்க நின்றகுகனே.
நெஞ்சக் குகையிருளை நீக்கப் பொறிவேலும்
பஞ்சுட் கனல்போல் படர்ந்திடுக - மிஞ்சியநாள்
அத்தனையும் உன்திருக்கை ஆணைவழி ஏகிடநான்
சித்தம் நிறைக சிவம்.*
*அறுமுகச் சிவம்
--
அன்புடன்,
ஹரிகி.
===========
மிக அருமையாக உள்ளது!
"வாரானை" பாட்டில் மடக்கு அழகு!
(இதில் வந்த 'பேரானை' என்ற சொல், பதினொன்றாம் திருமுறையில், சிவபெருமான்
அந்தாதியில் ஒரு பாட்டை என் நினைவுக்குக் கொண்டுவந்தது.
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.
)
சில ஐயங்கள்:
1) "கருணையல்லோ" என்பது "கருணையன்றோ" என்று இருக்கலாமோ?
2) உங்கள் பாடலில் அரையடியின் கடைசியில் வருவது கனிச்சீரா அல்லது இரு
மாச்சீர்களா? (சில இடங்கள் இவ்விரு விதமும் ஆகாதது போலவும்
தோன்றுகின்றன).
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும்
பாடல்கள் வேறு உளவா?
த.பி: "என்னாளும்" - "எந்நாளும்"
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
======================
அன்புள்ள ஸ்ரீ. ஹரிகிருஷ்ணன்,
அனுமனின் வார்ப்பும் வனப்பும் படித்து உங்கள் ரசிகனானேன். என் நண்பர்
அ.கி.வரதராஜனுக்கு நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்(இத்தகைய அருமையான
புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக)
இப்படிபட்ட கவிஞரின் சீட்டுக்கவியை மிக அழகாக உங்கள் குரலில்
கேட்டுக்கொண்டே படிக்கும்போது , அப்பப்பா- என்ன சுகம்! என்ன சுகம்!!
வாழ்த்துகள்.
அன்புடன்,
குமார்(சிங்கை)
================
ஹரிகிருஷ்ணன் தன்வாழ்வில் மங்கலங்கள் சேர்ந்திடவே
. அரன்மகனை வேண்டு கின்றார்;
குருவருளும் கலைமகளின் திருவருளும் இருப்போர்க்குக்
. குறையேதும் சகத்தில் உண்டோ ?
விருத்தமதில் ஓசைநயம் வெள்ளமெனப் பாயஹரி
. வேண்டுகின்ற நிலைகள் கண்டு
முருகனவன் தண்டமிழின் சந்தத்தில் மகிழ்வுற்று
. முறுவலுடன் தருவான் யாவும் !
பசுபதி
27-5-08
========
பன்னிருகை தோள்களுடன் பன்னிருகண் இறைவனுக்குப்
.. பன்னிருசீர் விருத்தங்களில்
.... பழமோடு தேன்பாகுப் பஞ்சாமி ருதமன்ன
..... பாக்களை நைவேத்தியம்
மின்னலெனத் துலங்கிடும் வாக்கென்னும் கற்பூர
... வீச்சுடன் ஹரிபடைத்தார்
.... "வேலனே! என்னுளே மேவுமென் தெய்வமே!
..... மேதினி தனிலெனக்கு
மன்னிடுநல் லெண்ணங்கள் மலர்கின்ற மனத்தோடு
... மதிநிதியும் மனையுந்தந்து
.... மணியான கவிதைகள் வழங்கிடும் திறனையும்
.... வரமாக அருளுவாயே"
இன்னபடி தன்னுளே இருந்திடும் வேட்கையை
... இறைவனின் முன்னம்வைத்தார்
... இவர்வேண்டும் யாவையும் தவறாது சண்முகன்
.... ஈவன்;இதில் ஐயமேது?
அனந்த்
27-5-2008
==============
2008/5/27 Siva Siva <naya...@gmail.com>:
மிக அருமையாக உள்ளது!
"வாரானை" பாட்டில் மடக்கு அழகு!
மிக்க நன்றி.
சில ஐயங்கள்:
1) "கருணையல்லோ" என்பது "கருணையன்றோ" என்று இருக்கலாமோ?
அல்லோ என்பது அல்லவா என்பதன் வட்டார வழக்கு. குறிப்பாகக் கோவைப்
பகுதியில் பெரிதும் வழங்கி வருகிறது. கண்ணதாசனுக்கு இது ஃபேவரிட்.
'அன்று ஊமைப் பெண்ணல்லோ இன்று பேசும் பெண்ணல்லோ' பாடல் நெடுக அல்லோ
வருகிறதல்லோ?
இடைக்கால இலக்கியங்களிலும் இந்த ஆட்சி உண்டு. கொஞ்சுவதுபோன்ற நெருக்கமான
உணர்வுகளைத் தரும் ஆட்சி. ஆகவே விரும்பித்தான் பயன்படுத்தினேன்.
2) உங்கள் பாடலில் அரையடியின் கடைசியில் வருவது கனிச்சீரா அல்லது இரு
மாச்சீர்களா? (சில இடங்கள் இவ்விரு விதமும் ஆகாதது போலவும்
தோன்றுகின்றன).
பொதுவாக எனக்குக் காதுதான் யாப்பு. கேட்ட பழக்கத்தால், வாய்விட்டுப்
படித்த பழக்கத்தால் மட்டுமே விருத்தங்கள் இயற்றத் தொடங்கினேன். பின்னர்
யாப்பு பயிலவும் செய்தேன். மேற்படிக் கவிதையில் யாப்பைக் காட்டிலும்
காதுக்கே அதிக கவனம் கொடுத்துச் செய்தேன். அதிகம்போனால் சீர்பிரிப்பதில்
மாற்றம் இருக்கலாம். அப்படியே இருக்கட்டும் என்று இட்டுவிட்டேன்.
'அங்கிங்கெ னாதபடி எங்கும்ப்ர காசமாய் ஆனந்த பூர்த்தியா கி' என்று ஒற்றை
எழுத்தைத் தனியாகப் பிரித்து ஒருசீர் ஆக்குவதுபோல,"பொழிகின்ற வன்,
சித்ரகவி யில்." என்பனபோல் பிரித்துப் போட்டுவிட்டால் சமனாகிப் போகும்.
அறுசீர்ச் சந்தவிருத்தங்களிலேயே கனிச்சீரோடு முடியலாம் என்பது வீரபத்திர
முதலியார் தரும் சூத்திரம். நான் எழுதியிருப்பவை அந்தப் பிரிவில்
சேரமாட்டா.
3) "அண்ணாம லைக்குன்றில்" - இது போன்ற பிரயோகம் (அண்ணாமலை மலையில்) வரும்
பாடல்கள் வேறு உளவா?
பரங்கிமலை என்பது ஊர்ப்பெயர். அந்த ஊரில் உள்ள மலையில் தோமையர் ஆலயம்
இருக்கிறது என்றால், அதை எப்படிச் சொல்வது. பரங்கிமலைக் குன்றில் என்று
சொல்லலாம் அல்லவா? திருவண்ணாமலை என்பதும் ஊர்ப்பெயர். திருவண்ணாமலையில்
உள்ள குன்றத்தில்.
இப்படி வேறுயாரும் செய்திருக்கிறார்களா என்பது நினைவில்லை. கொஞ்சம்
யோசித்தால் கிட்டலாம். தேடிப் பார்க்கிறேன்.
====
யோசித்ததில் அண்ணாமலை கிரிவலம் கிடைத்தது. பொதுவழக்கு. இதுபோன்ற வேறு
ஆட்சிகள் கிடைக்கும். தேடிப் பார்க்கிறேன்.
--
அன்புடன்,
ஹரிகி.
=============
த.பி: "என்னாளும்" - "எந்நாளும்"
ஆம். எந்நாளும்.
--
அன்புடன்,
ஹரிகி
========
ஒலியும் மிக அழகு! உள்ளிட்ட கவியுமழகு.
.....உள்ளார்ந்த பொருளுமழகு ஹரீ!
வாழ்க!
யோகியார்
===========
உங்கள் குரலோடு ஒவ்வொரு சொல்லும் உயிர் பெற்று எழுந்து என்னுடன் பேசுவது
போல இருந்தது..
மிக அருமை.
இந்த வரிகள் என் மனதை மிகவும் கவர்ந்தது..
'அன்றென்றன் உள்ளத்தில் நீவைத்த பொற்பாதம்
> ............... அகலாமல் நிற்கவேண்டும்
> ..........அன்புமிகு இல்லமும் அதைச்சூழு நண்பருமுன்
> ...............அருளோடு பெருகவேண்டும்
anbudan
akilacsr
=========
ஒருமுருகன் திருவருளை உணர்ந்தபடி ஹரிகிருஷ்ணன்
உயர்விருத்தக் கவிதைவழியே
பெருகுதமிழ் ஒழுகுமிசை வருமடியில் எழுமிரட்டை
பிறங்கிவரக் கடிதமெனவே
அருமைபெரும் வரமதனை அறமுகனின் திருச்செவியில்
அணிபெறவே உரைத்துமகிழ
திருமுருகன் தனதுதயை விரும்பியதோர் வகையினிலே
சிறப்புடனே அளித்திடுகவே!
இலந்தை
====================
சிந்தை உருகுமெழில் செந்தமிழில் சந்தமழை
சிந்தும் குரலோ செவிக்கினிமை!--முந்துதமிழ்க்
கந்தன் அருள்வேண்டிக் காதலுடன் பாடியதை
எந்த விதம்புகழ்வேன் யான்?
அன்புடன்
தங்கமணி.
===============
ஹரி,
இந்த ஒலிக்கோப்பு வடிவம் மிக அருமை. இலந்தை அய்யா, pErA.பசுபதி இவர்கள்
கூறும் ஓசை நயம் இது போன்ற கவிதைகள் படிப்பதைக் கேட்டால் தான்
புரிகிறது.. இப்படி எல்லாம் ஓசை ததும்ப பாடல்களைக் கேட்டு
பல நாட்கள் ஆகிவிட்டன. செவியில் தேனை ஊற்றினீர். மிக்க நன்றி..
-வித்யா
==================
குன்றத்தூர் ஏதெனினும் கோயில்கொண் டங்கருளும்
கூர்வேலன் சன்னிதிக்கே கும்பிட்டு சீட்டுவிட்டார்
கொங்குதமிழ்ச் சொல்லெனினும் கோநகரின் சொல்லெனெனும்
கொண்டுதரும் பாங்கினிலே கோனான ஹரிகிருஷ்ணன்!
நடராஜன்
===============
13.
அழைப்பு விடுத்த நடராஜன் அவர்களுக்கு நன்றி.
காலதாமதத்திற்கு மனிக்கவும்..அவர் சொன்னபடி அரங்கத்தில் இடுகிறேன்.
-தில்லை அரசன் திரைபின் நிற்பவன்
எல்லை இல்லா ஏகாந்த மூர்த்தி
அவன்பெயர் கொண்டவர் அழைப்பு விடுக்க
அவைமுன் வணங்கி அளித்தேன் சிறுகவி
அனுப்புபவரைப் பற்றி:
எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொள்வார்
பெண்மை என்றால் பேதமை என்பார்
நாற்குணம் நாய்குணம் நாற்படை என்றும்
காற்குழல் அவளுடல் கூறுகள் மலிந்த
புறமும் அகமும் புரியாது போயினும்
குறளை யாத்தோர் கூறாது போயினும்
விண்ணைத் தொடும் விதங்கள் தேடி
மண்ணை நோக்க மறுக்கும் பெண்நான்.
மணிமேகலைக்கு:
வாணிகன் சாத்தன் சீராய் படைத்த
வாணியாம் மேகலை வடித்தேன் உனக்கொரு சீட்டுக்கவி..
பரத்தை தலைவி பிரிவால் வாடுதல்
கரத்தைப் பிடிப்போர் கருத்தே கொண்டு
சிந்தனை இல்லாது சிறப்பும் இழந்து
வெந்தனர் வேங்கை விரட்டிய மாதர்
கிழமை பூண்டால் கவியாய் மாறும்
பழமை முறைகள் பதறாய்த் தள்ளி
அரசனும் ஆடலும் அறவே ஒதுக்கி
முரசாய் ஒலித்த முதற்குரல் உனதே
இளமையில் கல்லென இனிமை பகன்று
வளமை சுரபியும் வாழ்வும் தந்தாய்
தத்துவம் விவாதம் தனியாய் யாத்திரை
உத்தம தானம் எல்லாம் செய்தனை
சமயம் பெண்ணை சுமையாய்க் கூற
இமயம் போலே உயர்ந்து நின்றாய்
கண்ணகி மாதவி க்ற்பில் சிறந்தவர்
மண்ணில் வாதம் செய்யும் மானிடர்
சிலைகள் சினிமா சிறந்த கவிகள்
கலைகள் எல்லாம் கூவாத பெருமை
உனதாய் இருப்பினும் மனத்தில் அமர்ந்தாய்.
இனிதாய் எங்கள் இதயம் திறந்தாய்.
தெளிந்த திறமும் தெறிக்கும் தேர்ச்சியும்
அளிக்கும் மனமும் அகன்ற அன்பும்
எதிர்க்கத் தயங்கி ஏசுகள் கேட்போர்
கதியை மாற்ற புதிதாய் பிறப்பாயா?
- வித்யா
===========
உண்டி கொடுத்தே உயிரைக் கொடுத்த
பெண்டிர் திலகம், பெருமைத் துறவி,
மாதவி பெற்ற மணிமே கலையின்
சாதனை சொல்லி, தாமதம் இன்றிஅந்
நல்லாள் மீண்டும் ஞாலம் வந்திட
வெல்லும் கவியில் வித்யா வேண்டினார்.
பசுபதி
30-5-08
========
மணிமேகலை தோன்ற வரம்கேட்ட பாடல்
அணிசெய்த திந்த அவை
இலந்தை
===========
பெண்மைக்கோர் புதுமையெனப் பாருலகம் போற்றுகின்ற
எண்மையான தவ உருவை ஏற்றமணி மேகலையின்
அன்புமனம் பொங்கிடவே அமுதளிக்கும் சுரபியினால்
புன்பசியாம் பிணிதீர்க்கும் புனிதமய வேள்விசெய்தாள்!
பெண்குலத்தின் உயர்வினுக்கோர் பெற்றியென திகழ்மணியை
மண்ணுதிக்க வேண்டுகின்ற வித்யாவின் கவிவாழ்க!
அன்புடன்,
தங்கமணி.
==========
அள்ளக் குறையா அமுத சுரபியில்
தீதிலாக் கற்பினள் ஆதிரை கரத்தால்
உண்டியை வாங்கி உடனது கொண்டு
சுற்றிலும் கண்ட வற்கடம் தீர்த்த
மணிமே கலையின் பணியினை மீண்டும்
வேண்டி அழைத்த வித்யா கவிதை
தூண்டிய தெம்முள் தூயதோர் லுணர்வே.
அனந்த்
==========
அன்புள்ள வித்யா..
மறந்து போன மணிமேகலையை
மனதிலே கொண்டு நிறுத்தி- உள்ளம்
கவர்ந்து விட்டீர் ..
நல்லதொரு கவிதையிலே..
anbudan
akilacsr
===========
உயர்தனி மனிதம்
மணிமே கலையை மனதில் நினைத்திட
அணிவரும் எண்ணம் அவளோர்
உயர்தனி மனிதம் உன்னதப் பெண்மகள்
பயிர்தரு உணவைப் பலருக் களித்து
தனியொரு வழியை சகலர்க் குரைத்த
கனிமொழி மங்கை காப்பியத் தலைவி
அவள்வர வித்யா அழைத்தார்
தவமகள் அவளும் தரணியில் வருகவே!
நடராஜன்.
==========
14.
வித்யாபீடம் தமக்கு வந்ததென விதந்துரைத்தார் ஹரிகிருஷ்ணன்.
வித்யாபீடம் உமக்கு வந்ததில் வியப்பும் எமக்கில்லை ஹரியண்ணா!
விஞ்சுகவி தந்து ஒலியுடன் ஓதிய ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு
அரங்கின் சார்பில் நன்றி.
தாமதமாக வந்தாலும் தனிச்சுவை கவிதந்தார்
மணிமேகலைக்கு இப்படியோர் மடல்வர
மண்கண்ட மாதவச் செல்வியும் எதிர்பார்த்திருப்பாரோ!
கவிஞர் வித்யா அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
பத்தாம் அழைப்பு: கவிஞர் சுப்பிரமணியன்.
சேயோனின் பெயர்கொண்ட சிவபக்தர் செய்யும்
செய்யுள்கள் அனைத்திலுமே சிவமிருக்கும் தங்கிப்
பேயாடும் காட்டாடும் சிவனார்க்குப் பாடும்
பாட்டிலெல்லாம் புகழுரைக்கும் பழுத்தசிவ பக்தர்
ஓயாத உழைப்பதனால் எவ்வகையின் சந்தம்
உருவாக்கும் உயர்கவிசுப் பிரமணியன் வருக!
வாயார வரவேற்றேன் விடுகவியைத் தருக!
வாசமுறு சந்தகவி இவ்வரங்கம் பெறுக!
நடராஜன்
===========
சந்தவசந்தக் கவியரங்கம் - 28 - சீட்டுக்கவி
2008-05-13
சிவனுக்கொரு சீட்டுக்கவி
-------------------------------
0-1) -- இறைவணக்கம் --
ஓலை காட்டிவந்(து) உய்விப் பவனும்நீ! **1
ஓலை தந்தே உதவு பவனும்நீ! **2
ஓலை ஒன்றை உனக்கே அனுப்புமென்
மாலைத் தீர்த்தருள் செய்வாய் மதிசூடீ!
0-2) -- அவை வணக்கம் --
என்சீட் டுக்கவி கேட்கவந் தீரெலாம்
என்சீட் டுக்கவி ஈதென எண்ணாமல்
அன்போ டுங்கள் கருத்தினைக் கூறுவீர்
என்பேன் உம்மை இருகரம் கூப்பியே.
1)
பொன்னி ஆற்றின் புனலொடு செந்தமிழ்க்
கன்னி சேரக் கவினுறு கோலம்
மன்னி நெஞ்சை மயக்கும் சிராப்பள்ளி
தன்னில் பள்ளிப் படிப்பை முடித்தவன்
2)
இந்தி யாவில் இருந்(து)அயல் நாட்டினை
வந்த டைந்தும் வழியை மறவாது
சிந்தை செய்து சிவசிவ என்கிற
அந்தச் சொல்லை அளியோ(டு) உரைக்கும்நான்
3)
கயிலை, காசி, கடல்அலை மிக்(கு)ஒலி
மயிலை, ஒற்றி, மதுரை, பொழில்களில்
குயில்கள் கூவும் பராய்த்துறை மேவிய,
எயில்கள் மூன்றை எரித்த பெருமானே!
4)
வேலை கக்கும் விடத்தினுக்(கு) அஞ்சிநின்
காலைப் பற்றி அமரர்கள் கைதொழப்,
பாலைப் போல்அதை உண்(டு)அருள் பாலித்த
நீல கண்ட! நினக்குச்செய் விண்ணப்பம்.
5)
மொழியொன் றின்றியே மோனத்தால் நல்லற
வழியை நால்முனி வர்கட்(கு) உரைத்தவா!
விழியென் றாகி எவற்றையும் காண்கிற
அழிவி லாய்நீ அறியாத(து) ஒன்றுண்டோ?
6)
வருத்தும் நோய்களும், வாதை கொடுக்கிற
செருக்கும், பொங்கும் சினமுமின்றி, இங்கே
இருக்கும் காலம் இனிதாய்க் கழிய,என்
கருத்தில் நின்றெனைக் காத்தருள் செய்வாயே;
7)
வயதும் ஆகி மறதியும் எய்திஉன்
பெயரும் செப்பாது பேரிடர் உற்றுநான்
அயரும் காலம் அடல்விடை மேல்வந்(து)என்
துயரைத் தீர்த்துத் துணையாகி நிற்பாயே.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
**1 ஓலை காட்டி வந்து உய்வித்தது - சுந்தரர் வரலாறு;
**2 ஓலை தந்து உதவியது - பாணபத்திரர் வரலாறு - (திருமுறை 11.1 - "மதிமலி
புரிசை...");
மன்னுதல் - நிலைத்து இருத்தல்; மிகுதல்;
அந்தச் சொல் - அச்சொல்; அழகிய சொல்;
அளி - அன்பு;
ஒற்றி - திருவொற்றியூர்;
எயில் - கோட்டை;
வேலை - கடல்;
அடல் - வலிமை; வெற்றி;
=============================
இந்தியா விட்டும் வழி மறவாது..
சிவ சிவ என்று சிந்தை சொல்லும்
வரிகள்..
இருக்கும் காலம் இனிதாய் கழிய
வேண்டும் வரங்களும்..
இறைவனிடம்.. நேரில் பேசுவது போன்ற ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது என் மனதில்.
anbudan
akilacsr
==============
வெண்பா)
சிவனின் திருவடிச்சீர் சிந்தித் திரட்டைச்
சிவனின் றவற்களித்தார் சீட்டொன் - றவமில்
தவருக் ககத்தொளியாந் தாணு தவறா
தவருக் களிப்பான் அளி.
வெண்பா விரும்பி
=================
உடல்சாயும் போதில் உடன்வந்து காக்க
மடலொன்றை இங்கு வரைந்தார் - அடர்ந்துதம்
உள்ளத்தில் என்றும் உறையும் சிவனுக்குத்
தெள்ளு தமிழில் 'சிவா'.
..அனந்த்
4-6-2008
==========
ஆட்டத்தில் நாட்டமுள்ள ஐயன்புகழ் சிந்திக்கும்
கூட்டத்தை நாடுகின்ற குணங்கொண்ட சிவா!வெல்க!
தேட்டமிகு சிவனருளாம் தெள்ளறிவும், எமவாதை
மூட்டமிடு முன்வரவும் வேண்டுகின்ற கவியுயர்வாம்!
அன்புடன்,
தங்கமணி.
=========
எஞ்சிய வாழ்க்கை இனிதாய்க் கழிந்திடத்
துஞ்சிடும் போதில் துணைதர -- நெஞ்சினில்
மாட்சி புரியும் மகேசருக் கிட்ட'சிவா'
சீட்டுக் கவிதை சிறப்பு.
பசுபதி
4-6-08
========
அன்பு சிவா,
உங்கள் கவி படித்து மெய்சிலிர்த்தது.
சிவனுக்கே ஒரு சீட்டா? சீட்டு(ஓலை) காட்டியோனுக்கே!
பொருத்தமே.
வாழ்க சிவா.
யோகியார்
============
இப்பாடல்கள், திருக்குறுந்தொகைப் பாடல்களின் அமைப்பை ஒட்டி எழுதப்பெற்றன.
======================
முன்னர் இலந்தையும் மற்றவர்களும் அளித்த திருக்குறுந்தொகை இலக்கண விளக்கம்:
இவை கலிவிருத்தங்கள். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுவென்றால் அரைக்
கட்டளைக் கலிப்பாக்கள். கட்டளைக்கலிப்பாவின் இலக்கணம்.
முதற்சீர் மாச்சீர்,
இரண்டாம் சீரின் முதல் அசை நேரசையாகத்தான் இருக்கவேண்டும்.
அதன்பின் வரிக்குள் வெண்டளை பயின்று வரவேண்டும்.
நேரசையில் தொடங்க வரிக்குப் 11 எழுத்துகள். நிரையசையில் தொடங்க வரிக்கு
12 எழுத்துகள்.
1, 3ல் மோனை வருதல் நன்று. வாராமலும் இருக்கலாம்.
கட்டளைக்கலிப்பாவில் அடிக்கு எட்டுச் சீர்கள் வரும்.
அரைக்கட்டளைக்கலிப்பாவில் நான்கு சீர்கள் வரும். அரைக்கட்டளைக்கலிப்பா
என்று பொதுவாகச் சொல்வதில்லை. கலிவிருத்தம் என இயம்பப்படும்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
===================
எவனுக் கனுப்பினால் ஏற்புடைத்தோ அந்தச்
சிவனுக் கனுப்பினார் சீட்டு
இலந்தை
===========
இறுதி இன்னல் இற்றிட ஈசனவன்
உறுதி ஊட்டி உயிருக்(கு) உதவிடக்
கருதிக் கல்லும் கரையும் கவிதந்தார்!
அறுதி ஆனவன் அன்பர்க்(கு) அருள்வனே
நடராஜன்.
=================
15.
பேச்சும் மூச்சும் சிவனென்றே இருப்பவர்
அனுப்பிய சீட்டுக்கவியும் சிவனுக்கே!
கவிஞர் சுப்பிரமணியன் அவர்களுக்கு அரங்கின் சார்பில் நன்றி.
கவியரங்கம் - 28
பதினொன்றாம் அழைப்பு: கவிஞர் சௌந்தர்.
இதுவரை வந்தனர் ஒருபத்துக் கவிஞர்
இயற்றித் தந்தனர் பலசீட்டுக் கவிகள்
புதுமையில் சிறந்ததோர் ஜேன்கதையைச் சொன்ன
புன்னகை மன்னராம் சௌந்தரவர் வந்து
எதுதரப் போகிறார் எனயூகம் செய்ய
இடமேதும் தாராமல் இடுமோலை தந்தார்
முதுகவி அவர்தந்த முத்தான கவிதை
முன்வைத்தேன் அவர்சார்பில் இவ்வரங்கில் இனிதே!
* * * * * * * * *
Dear Natarajan,
I am traveling all next week and won't be accessing mails regularly.
Attached is the poem for KA-28. Please post the attached on my behalf
when you decide to call me.
Thanks
Soundar
-------------------------------------------------
விலைவாசி ஏற்றம், உணவுப் பற்றாக்குறை, எதனால்*
கணபதி வணக்கம்
தீரத்திலே படை வீரத்திலே-நெஞ்சில்
. . ஈரத்திலே உப சாரத்திலே
சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு
. . தருவதிலே வுயர் நாட்டினிலே. . 1
பிறந்திட்ட நற்கார ணத்திலே- உள்ளம்
. . பீறிட் டெழுகின்ற வேட்கையிலே
அறம்மிகு சிந்தை அறிவுசேர்-ஆக்கம்
. . அமைத்து நடத்துமோர் வேள்வியிலே. . 2
சந்த வசந்த வரங்கினிலே -ஓங்கும்
. . தாய்மொழி தந்த வரத்தினிலே
தந்திமு கற்கு வணக்கமுடன்-ஈங்கு
. . சௌந்தர ராஜன் எழுதியது. . 3
தலைவர் வணக்கம்
அம்பலத் தாடும் அரசனும்-தண்மை
. . அருவிபாய் வேங்கட வள்ளலும்
தம்பெயரில் தாங்கும் தலைவருக்குச்-சிரம்
. . தாழ்த்தி வணங்கி எழுதியது. . 4
சீட்டுக்கவி
அரங்கன் அடிவருடும் பொன்னி-நதியின்
. . அமுதநீர் தந்த இனிப்பினிலே
சுரங்கத் தமிழின் சுவைகண்டேன்-தோன்றும்
. . சுகமும் தொடர்ந்து வந்ததுபோல் 5
கனடாக் குளிரின் வெடவெடப்பிற்-கிதமாய்க்
. . கணினித் தமிழின் அரவணைப்பில்
கனவோ நிசமோ நானறியேன்-கண்முன்
. . காவிரி வைகை வெள்ளமெனப் 6
பெருகும் பெரியவர் ஆசியிலே-மீண்டும்
. . பிறந்ததோர் நல்லதாம் ஆர்வத்திலே
தருணத்திற் கேற்ற கவியொன்றை-மன்றில்
. . சௌந்தர ராஜன் எழுதியது. 7
ஐக்கிய நாட்டுத் தலைவருக்குப்-பொறுப்பாய்
. . அக்கறை யுடனே எழுதியது
முக்கிய மான விடயமிது- ஐயா
. . முந்தி முடிக்க வேண்டியது . . 8
உலக நலனில் அக்கறையால்-துடிக்கும்
. . உள்ளம் உந்தித் தள்ளுவதால்
விலகிச் சென்று வருந்தாமல்-கொள்ளும்
. . வேட்கை யதனால் எழுதியது . . 9
வையம் காப்ப தெம்கடனே-என்று
. . வரிந்து கொள்ளும் வல்லரசு
செய்யும் தொழிலோ விபரீதம்- சற்றே
. . செவியைச் சாய்த்துக் கேளீரோ! . .10
பசுமை புனிதம் என்றிடுவார்-ஆயின்
. . பாரோர் பசியைப் புறக்கணிப்பார்
விசுவம் காக்க விரைந்திடுவார்-ஏனோ
. . விறகாய் வையம் பொசுக்கிடுவார் . .11
பச்சை இல்லம்** வாயுவகை- பாரில்
. . பாங்காய்த் தணிக்க வழிமுறைகள்
நச்சுத் தன்மை நீக்கிடவே- நலமாய்
. . நாடு தழுவும் நடைமுறைகள் . . 12
அறிவுப் பாதை வழிநடத்த- ஆங்கே
. . அமைச்சர் அணிகள் அதிகாரம்
செறிந்து கிடந்த போதிலுமே-சீராய்த்
. . திருந்தச் செய்யத் தயங்குவதேன்? . .13
எதனால்* என்றோர் எரிபொருளை-இவர்கள்
. . எண்ணை யுடனே கலந்திட்டார்
கதம்பம் ஆக்கி இவ்விதமாய்
. . காப்போம் உலகை என்றிட்டார் . . 14
சோளப் பயிரைச் சுவைக்காமல்- அதனைச்
. . சோதனைச் சாலைத் தீயிலிட்டுக்
கோளைப் பொசுக்கும் எரிபொருளாய்- ஏனோ
. . கொணர்ந்தார் புவியில் இந்நாளில்? . . 15
பச்சைப் புல்லோ பசுவிற்கே- ஆயின்
. . பங்கு கேட்பார் அதிலுந்தான்
மிச்சம் ஏதும் வைக்காமல்- மேலும்
. . வெகுவாய் எல்லாம் தான்கொள்வார். . 16
ஏழை நாட்டார் விளைநிலங்கள்-இவர்கள்
. . எண்ணை நிலமாய்க் காண்பதுமேன்?
கூழைக் குடித்தே வாழ்ந்திருக்கும்-மக்கள்
. . குறையைக் களைவ தெந்நாளோ? . .17
விரைவு வலிமை உயர்வெல்லாம்-வாழ்வில்
. . வேண்டும் வெற்றி கொள்ளத்தான்!
விரைவே வாழ்வின் இலக்கானால்-விசுவம்
. . மீட்சி இன்றிக் குலைந்திடுமே! . . 18
பசியைப் போக்கும் பயிர்தன்னைப் பேணப்
. . பாங்காய் சட்டம் செய்திடுவீர்!
விசுவம் காக்கத் தலைப்படுவீர்-ஐயா
. . விவரம் அறிந்து செயல்படுவீர். . .19
சௌந்தர்
* Ethanol (a type of petrol additive)
** Greenhouse gas
========================
'மக்கள் வயிற்றில்தீ என்றெரியும் - விலை
.. வாசி உயர்வுக்குக் காரணமாய்
அக்கறை யின்றிப் பயிரழிக்கும் - கொடும்
.. அக்கிர மத்தை அடக்கும்'என்று
இந்த உலகின் அரங்கத்தினை - இன்று
.. ஏற்று நடத்தும் தலைவருக்குச்
சிந்து கவியினில் சீட்டெழுதி - சௌந்தர்
.. சிந்தினார் தம்மனத் தாங்கலைத் தான்
..அனந்த்
8-6-2008
=================
விளைபொருளும் எதனால் என்றே மாறும்
.. விலைவாசி அதனால் இங்கே ஏறும்
களையிழந்து புவனம் கெட்டுப் போகும்
.. காப்பதற்கு விரைவீர் நன்மை ஆகும்.
என்று நல்ல கருத்தைச் சீட்டுக்கவியில் சொன்னீர். வாழ்த்துகள்.
அன்புடன்,
வி.சுப்பிரமணியன்
=============
தரணியில் விளையும் பொருளெல்லாம்
. தன்னலத் தீயில் பொசுங்குவதை
விரைவினில் ஐ.நாத் தடுத்திடவே
. வேண்டுதல் ஒன்றை விடுத்துநின்றார்.
கருத்துகள் எழுப்பும் கவலையுடன்
. காரணம் சுட்டிக் கேட்கின்றார்.
உருப்படி யாக உலகிற்கு
. யோசனை இங்கே கொடுத்துள்ளார்
பசுபதி
8-6-08
===========
பயிர்பச்சை விளைநிலத்தைப் பாதுகாத்துப் பேணி,மக்கள்
உயிர்காத்து உதவுகின்ற உலகநலன் குறிக்கோளாய்
அருமைகவிச் சீட்டினிலே ஐ.நா.வின் தலைமைக்குக்
கருதிசெயல் வேண்டுமெனும் கவிசௌந்தர் கவியுயர்வே!
அன்புடன்,
தங்கமணி.
============
சொந்த நலனை வேண்டாமல்- புவி
சூழும் நலனைத் தான்வேண்டி
சௌந்தர் செய்த கவிநன்று-வையம்
தழைக்க வேண்டும் இறையருளால்
இலந்தை
==============
பாருண்ணும் பச்சைப்புல் பல்வகைத் தானியம்
சீருந்தும் தின்னல் சிறப்புடைத்தோ - பேருலகின்
மாமன்றம் சீர்திருத்த சீட்டெழுதி யாசிக்கும்
பாமன்றில் நம்சௌந்தர் பண்.
நடராஜன்.
===========
16.
எதனாலைச் செய்வது எதனால்
முதலாகும் உணவாலே என்றால்
முடித்திடுங்கள் இம்முயற்சியென
ஐநாவிற்கு அனுப்பினார் செய்தி நம் சௌந்தர்
அவருக்கு அரங்கின் சார்பில் நன்றி.
பதினோரு கவிஞர்கள் பங்கெடுத்து சிறப்பித்த இக்கவியரங்கில்
நம் சந்தவசந்தக் கவியரங்க மரபுப்படி இப்போது பொது அழைப்பை வைக்கிறேன்.
இதுவரை எழுதாதவர்கள் எழுதும்படி அன்புடன் அழைக்கிறேன்.
எழுதியவர்களும் வேறுபல கவிகள் எழுதவும் அழைக்கிறேன்.
கவியரங்கம் 28 - பொது அழைப்பு:
சீட்டெழுதி தம்கவியால் சிந்தைதங்கு செய்தி
செப்பிவிட்டார் பதினோரு கவிவல்லார் ஆயின்
பாட்டினிலே சொல்லுதற்கு விடயமின்னும் உண்டு
பஞ்சமிலை அதைச்சொல்ல பாவல்லார் இங்கு
ஏட்டினிலே எழுதாத எண்ணங்கள் எழுத
எழுதுதற்கும் தயங்கிநிற்கும் எழுகவிகள் எழுத
நீட்டுகின்றேன் பொதுவழைப்பை எல்லோரும் எழுத
நிறைவுசெய்வேன் அதன்பின்னே நல்லரங்கை நலமாய்!
நடராஜன்
==========
அனைவருக்கும் நமஸ்காரம். நம் ஆடலரசரின் தலைமையிற் கூடிய சொற்சபையில்
"சீட்டு" (seat) வாங்கிச், சீட்டு வழங்கும் உத்தேசம் எனக்கு முதலில்
இல்லை. ஆயினும், என் சிறிய தந்தையார் அகத்தியருக்கு விடுத்த மடலைப்
படிக்கையில், அதில் அவர் பல பெரியோர்களைக் குறித்திருந்தும்,
பிள்ளையவர்களின் பெயரைச் சொல்லாமல் விட்டாரே என்ற குறை தோற்றியமையால்,
அக்கவிஞர் பெருமானின் ஆசிகளைக் கோரும் வகையில், ஐந்து பாடல்களாலான சிறு
கடிதம் ஒன்றை அவருக்கு எழுதத் துணிந்தேன். பின் வருவதாகிய இம்மடற்
பஞ்சகத்திற் குற்றங்கள் காண்பின், எடுத்துச் சொல்லுமாறு அன்பர்களை
வேண்டுகிறேன். நன்றி.
******************************
மகாவித்துவானுக்கு ஒரு மடல்
******************************
1. (வெண்பா)
கற்றறிந்தோர் மெச்சுகவிக் கார்மலியே இற்றையுற்குச்
சிற்றறிவார் யான்வரைந்த சீட்டிதனைப் -- பெற்றடியேன்
அற்றமிலாப் பொற்றமிழில் அப்பழுக்கில் பாட்டியற்ற
நற்றயைகூர்ந் தாசிநனி நல்கு.
கார்மலி=கடல்; அற்றம்=கேடு
********************
2. (அறுசீர் விருத்தம்)
நல்லடியார் பார்புகழுந் திருத்தொண்டர் சீரையுறு
...நறவ[ம்] மேவு
சொல்லலராற் கோத்தளித்த சேக்கிழார் என்றென்றுந்
...துலங்கு மாறீ(டு)
இல்லழகார் மாளிகையோர் அரும்பிள்ளைத் தமிழிங்கண்
...எழுப்பி வைத்த
வல்லமைசால் மீனாட்சி சுந்தரனே நயந்தாசி
...வழங்கு வாயே.
உறு நறவம்=மிகுந்த வாசனை
********************
3. (கட்டளைக்கலித்துறை)
வாக்குன் உரியாக வித்தமுன் சீராக மாண்புமிகு
நோக்குன் இயல்பாக்கொள் மீனாட்சி சுந்தர நொய்வறியாப்
போக்குந் தனிப்பாங்குஞ் சேர்பல பாடல் புனைந்துதரு
பாக்குன் முறையாயெற்(கு) ஆசிகள் ஈவாய் பரிவுடனே.
உரி=உரிமை; வித்தம்=அறிவு; சீர்=செல்வம்; தருபாக்கு=தருவதற்கு; உன்
முறையாயெற்கு=உனது (செய்யுள் இயற்றும்) முறையை ஆயும் எனக்கு
********************
4. (அறுசீர் விருத்தம்)
புவிதந்த பொருளெதுவுஞ் செய்யுளில்வைத் ததற்குகந்த
...பொருள்சேர்த் திங்குச்
செவிதந்த புலவரிது சிறப்பெனுமா றிருந்தமிழிற்
...செப்ப அன்றி
ரவிதந்த குறுமுனியின் மறுவடிவாய் வந்திக்கி
...ரசத்திற் றோய்த்த
கவிதந்த மீனாட்சி சுந்தரவுன் நல்லாசி
...கனிந்தீ வாயோ.
அன்றி ரவி=அன்று இரவி (இரவி=மலை; பொதிய மலையைக் குறித்தது); வந்திக்கி
ரசம்=வந்து இக்கு இரசம் =வந்து கரும்பு ரசம்
********************
5. (அறுசீர் விருத்தம்)
கும்பமுனி தந்துவந்த தங்கமெங்குந் தங்கவைக்குங்
...குருவாய்த் தோன்றிப்
பம்பரமென் றம்பலத்தா டெம்பெருமான் ஒண்பதச்சீர்
...பரவி என்றும்
நம்படியார் நெஞ்சகலா மீனாட்சி சுந்தரவென்
...நாவால் நாளும்
அம்பதமார் செந்தமிழ்ப்பா நின்வழியா நன்குரைப்பான்
...ஆசி தாராய்.
படி=உலகம்; அம் பதம் ஆர்=அழகிய சொற்கள் நிறைந்த; உரைப்பான்=உரைப்பதற்கு
...பரவி என்றும் நம்படியார் நெஞ்சகலா=சிவபெருமானின் பதச்சீரைக் கூறி,
என்றும் நம் உலகத்தார் நெஞ்சை விட்டு நீங்காத என்பது ஒரு பொருள்.
சிவபெருமானின் பதச்சீரைக் கூறி, (அப்பதத்தை) என்றும் நம்பும் அடியார்
நெஞ்சை விட்டு நீங்காத என்பது மற்றொரு பொருள்.
********************
வெண்பா விரும்பி
===============
சீர்த்த அறிவுடனே செல்வாக்காய் நாவன்மை
கூர்த்த கவியுணர்ந்து கூறுகின்ற திறனியல்பாய்,
தமிழன்னை தவப்புதல்வர் தமிழ்த்தாத்தா குருநாதர்
தமிழ்வாரி மீனாட்சி சுந்தரனார் அருள்வேண்டி
செப்பரிய நல்லாசி வேண்டுவெண்பா விரும்பியவர்
ஒப்பரிய தண்டமிழில் உரைத்தகவி உயர்வென்போம்!
அன்புடன்,
தங்கமணி.
===============
1. >கற்றறிந்தோர் மெச்சுகவிக் கார்மலியே இற்றையுற்குச்
. . // . //
முற்றிலுமே உற்றமுடுக் கற்புதமே; கற்றுணர்ந்தோர்
சுற்றமிதைப் பற்றிடுமே காண்.
2. >நல்லடியார் பார்புகழுந் திருத்தொண்டர் சீரையுறு
...நறவ[ம்] மேவு
. . // . //
பெரியபுரா ணப்பெரியார் பிள்ளைத் தமிழாம்
அரியநூல் யாத்தவர்க்கே தீடு?
(சேக்கிழார் - மூவசையாக மாற்றினால் வாய்பாடு சிறக்கும்)
3.>வாக்குன் உரியாக வித்தமுன் சீராக மாண்புமிகு
. . // . .
ஆயிரமாய்ப் பாடல் அளித்தவரின் ஆசிபெறப்
பாயிரம் யாத்தீர் பல.
4. >புவிதந்த பொருளெதுவுஞ் செய்யுளில்வைத் ததற்குகந்த
. . // . .
வளம்செறிந்த பாயாத்த மாமேதை ஆசி
உளம்கனிந்து ஈவார் உமக்கு.
5. > கும்பமுனி தந்துவந்த தங்கமெங்குந் தங்கவைக்குங்
>. . // . .
ஆசிரியர்க் காசிரியர் ஆனவரைப் பாடிஅவர்
ஆசிஎன்றோ பெற்றுவிட்டீர், ஆம்!
அனந்த்
13-6-2008
=============
பொது அழைப்பை ஏற்றுக் கொண்டு கவியளித்த கவிஞர் வெண்பாவிரும்பி
அவர்களுக்கும் எல்லே சுவாமிநாதன் அவர்களுக்கும் நன்றி.
பொது அழைப்பு விருத்தத்தில் சில பிழைகள் அனந்த் ஐயா சுட்டி காட்டினார்.
பிழை திருத்திய பாடலை மீண்டும் இடுகிறேன்.
சீட்டெழுதித் தம்கவியால் சிந்தைதங்கு செய்தி
செப்பிவிட்டார் பதினோரு கவிவல்லார் ஆயின்
பாட்டினிலே சொல்லுதற்கு விடயமின்னும் உண்டு
பஞ்சமிலை அதைச்சொல்லப் பாவல்லார் இங்கே!
ஏட்டினிலே எழுதாத எண்ணங்கள் எழுத
எழுதுதற்கும் தயங்கிநிற்கும் எழுகவிகள் எழுத
நீட்டுகின்றேன் பொதுவழைப்பை எல்லோரும் எழுத
நிறைவுசெய்வேன் அதன்பின்னே நல்லரங்கை நலமாய்!
நடராஜன்
=============
கற்றறிந்தோர் மெச்சுகவிக் கார்மலியே இற்றையுற்குச்
சிற்றறிவார் யான்வரைந்த சீட்டிதனைப் -- பெற்றடியேன்
அற்றமிலாப் பொற்றமிழில் அப்பழுக்கில் பாட்டியற்ற
நற்றயைகூர்ந் தாசிநனி நல்கு.
நற்றயைகூர்ந் தாசிநனி நல்கிடவும் கேட்டவரே!
அற்புதமாம் சொற்றமிழின் ஆசானும் தந்தருளக்
குற்றமிலா பாமலர்கள் கூரறிவால் செய்தொடர்வீர்
விற்பனர்வெண் பாவிரும்பி வென்று.
நடராஜன்.
===============
17.
எல்லே சுவாமிநாதன் எனக்கு தனிமடலாக தன் கவிதையை அனுப்பியதைக் கவனிக்காமல்
இருந்துவிட்டேன். இப்போது அதை இங்கே இடுகிறேன்.
தவறுக்கும் தாமதத்துக்கும் வருந்துகிறேன்.
அன்புடன்
நடராஜன்.
கடவுள் வாழ்த்து
எழுதும் சீட்டுக்கவி எல்லார் காதிலும்
ஏறிட அருள்தாரும் ஆனை முகத்தோனே..
தலைவருக்கு வணக்கம்
கோட்டைக்குள் கவிதை அரங்கக் கொண்டாட்டம்
ஓட்டைவழியே பார்த்து மகிழ்ந்து இருந்தேன்
கேட்டைச் சாத்து முன்னே சீட்டுக்கவி
கேட்ட தலைவர்க்கு போட்டேன் சலாம்.
அரங்குக்கு அறிவிப்பு
சிறப்பாய்க் கவிதையும் கணினியும் கற்றோர்க்கு
சிறியேன் எழுதத் துணிந்த சீட்டுக்கவியிது
சீரும் தளையும் தேடிச் சீறாதீர்
சிற்சில இலக்கணப் பிழைகண்டு பதறாதீர்
நீட்டோலை வாசிக்க அறிவேன் அல்லன்
நிற்கின்றேன் சபையின் நடுவே நெடுமரமாய்
புதிதாய்க் கிடைத்த பேப்பர் துண்டில்
புழுக்கைப் பென்சிலால் நுணுக்கி எழுதுகிறேன்.
சீட்டுக்கவி
கணினியும் கவிதையும் கற்ற பண்டிதர்க்கு
கவிதைக் கைநாட்டான் வரையும் மடலிதுவாம்.
சீட்டுக் கவியின் சாரம் வருமுன்
சிறிதளவு காட்டுவேன் காட்சிகள் சில.
(காப்பி மெசின்)
காப்பி தந்திடும் மெசினொன்று கண்டேன்
காசுகள் போட வினாக்கள் வந்தன.
கப்பின் அளவு பெரிசா ? சிறிசா ?
கருப்பா ? வெளுப்பா ? சூடா ? குளிரா ?
வெள்ளைச் சர்க்கரையா ? வெல்லச் சர்க்கரையா ?
வெறுங்காபியா ? சாக்ரீனா ? சாக்லெட்டா ? தேனா ?
தேர்ந்து உள்ளிட்டுப் பொத்தானை அழுத்த
கிடைத்தது நான்கேட்ட காப்பி.
(வங்கி மெசின்)
வங்கியில் தானியங்கி இயந்திரம் கண்டேன்
கார்டை உள்ளிட விரிந்தன கேள்விகள்
சேமிப்போ ? செக்கிங்கோ ? டிபாசிட்டோ ? கடனோ ?
கைச்செலவுக்கு எடுப்போ ? கடன்கள் அடைப்போ ?
தேவையோ நாற்பது ? நூறு ? வேறெதோ ?
தேர்ந்து உள்ளிட்டு பொத்தானை அமுக்க
கொட்டியது கேட்ட பணம்.
(விமான டிக்கட்)
வெளியூர் போய்வர விரும்பினேன் விமானத்தில்.
வேறெதும் வேண்டாம் வலையில் தளமுண்டு.
கிளம்பும் ஊரென்ன ? சேரும் இடமென்ன ?
கிளம்பும் தேதி ? திரும்பும் தேதி ?
முதல் வகுப்போ ? சிக்கன வகுப்போ ?
மூத்தோரா ? முதியோரா ? இளையரா ? சிறாரோ ?
காலையா ? மதியமா ? மாலையா ? இரவா ?
ஒரேயடித் தாவலா ? இடையே இறங்கலாமா ?
இருக்கை சன்னலருகே ? விளிம்பில் ? நடுவிலா ?
எந்த நிறுவன விமானம் ஏற்பு ?
சைவமா ? முட்டை ? பசும்பால் ?அசைவமா ?
தங்கிட ஓட்டல் ? காரேதும் தேவையா ?
கட்டணம் எப்படி செலுத்த உத்தேசம் ?
கடனட்டையா ? காசா ? காந்திக் கணக்கா?
கிடைத்த மைல்களா ? கூப்பான் கைவசமா ?
மாஸ்டர் கார்டா ? விசாவா ? வேறெதுமா ?
தேர்ந்து உள்ளிட்டு பொத்தானை அமுக்க
வந்தது சீட்டு விரைவில்.
(வரன் தேடல்)
திருமண மையத்தில் தேடினேன் வரனை.
தேடும் வரனும் பெண்ணுக்கா ? பிள்ளைக்கா ?
விவாகமே ஆகாதவரோ ? விவாகமே தொழிலோ ?
விவாக ரத்தா ? முடிந்ததா ? நிலுவையிலா ?
வயது விவரம் எதிலிருந்து எதற்குள் ?
உயரம் என்ன ? எடை என்ன ?
படிப்பு இளங்கலை ? முதுகலை ? முனைவர் ?
வேலை விவரம் சம்பள விவரம்
வளர்ந்தவிடம் வசிக்குமிடம் குடியுரிமை விசாவென்ன
மதமென்ன ? எம்மதமும் உமக்கு சம்மதமோ ?
ஜாதி கோத்திரம் உட்பிரிவு ஊர்ப்பிரிவு
ஜாதகம் வேண்டுமா ? பொருத்தம் வேண்டுமா ?
புகைப்படம் வேண்டுமா ? டிஜிட்டலா பிரிண்டா?
தேர்ந்து உள்ளிட்டு பொத்தானை அமுக்க
வந்தது வரன்களின் பட்டியல்
(வறுவல் பொட்டலம்)
கேவலம் வறுவல் பாக்கெட் மெசினாம்
கேட்கும் பணத்தைப் போட்டால் விழுங்கும்
கேள்விகள் காட்டும் விரைவாய் வரிசையாய்
உருளைக் கிழங்கா? வெளுப்பா ? சிவப்பா ?
தோல்நீக்கி வெட்டியதா? தோலோடு வெட்டியதா?
வட்டமாய் வெட்டிய வில்லையா ? நீளத்துண்டா ?
மெலிதாய்ச் சீவியதா ? மொத்தையாய் வெட்டியதா ?
வழுவழுப்பு வில்லையா ? வரிக்கோடு போட்டதா ?
உப்பு இட்டதா ? உப்புப் போடாதா ?
உறைப்பு போட்டதா ? அதிகாரமா ? மென்காரமா ?
எண்ணெயில் பொரித்ததா ? அடுப்பில் சுட்டதா?
தேர்ந்து உள்ளிட்டு பொத்தானை அமுக்க
திடீரென வந்திடும் பாக்கெட் !
(சுவாமி தரிசனம்)
ஈ-தரிசனம் ! ஈயின் தரிசனம் அல்ல
ஈசனை இருந்த இடத்தில் காண
இருவது டாலர்கள் மட்டும் தட்சிணை !
தந்திடக் கேள்விகள் வந்திடும் சரமாய்
பிறந்த நாளா ? பண்டிகையா ? வேண்டுதலா ?
வினாயகரா ? வேல்முருகரா ? அம்மையா ? அப்பனா ?
தேர்ந்து உள்ளிட்டு பொத்தானை அமுக்க
வேண்டிய சன்னிதி திறக்கும் வினாடியில்
வேண்டும் அளவு ஒலிக்கும் துதிகள்
ஆண்டவர் திரையில் காட்சி தந்திட
ஆராதனைத் தட்டு சுழலும் மும்முறை !
இருந்த இடத்துக்கு இறைவன் வருகிறான் !
இதுவன்றோ சாதனை இன்று ?
இன்னமும் முன்னேற்றம் வரவிருக்காம் வருநாளில்
பத்தி சாம்பிராணி மணமும் வருமாம்
விபூதி குங்குமம் ஈமெயில் இணைப்பாம்
புகைப்படம் அனுப்பிட முடியை மழித்த
புகைப்படம் வருமாம் முடிகாணிக்கை முடித்திட !
கணினிப் புரட்சி காட்டிய வழியிது
கத்தியின்றி ரத்தமின்றி சத்தமின்றி வந்தது
கேட்டது கிட்டியதால் வாழ்க்கை எளிதானது
தேர்வு சலித்தாலும் தேடுவது வந்தது
வாய்க்குக் காப்பி, வங்கிக்காசு, விமானப் பயணம்,
வரன்தேடல், வறுவல், விரும்பும் தரிசனம் !
வாழ்வில் எல்லாம் வந்தது இன்று.
வாராதது ஒன்று மட்டும் உண்டு.
கவிதை கணினி கற்ற மக்காள்
காது கொடுத்துக் கேளும் கேட்பதை
கேட்கும் பொருளும் என்ன தெரியுமா ?
கவிதை தந்திடும் தானியங்கி இயந்திரம் !
கற்கும் காலத்தில் கடலை வறுத்து
கற்காமல் காலத்தைக் கழித்து விட்டேன்
முற்றிய காலமிது மூப்பும் வந்தது
குற்றிய லிகரம் கற்கவேது நேரம் ?
ஏடறியேன் எழுத்தறியேன் இலக்கணமும் அறியேன்
எதுவுமின்றிக் கவிதையில் கைநாட்டு ஆனேன்.
கவிதைவண்டி கிளம்பிக் கதவினைச் சாத்துமுன்
கைப்பிடியில் தொங்கியபடி 'சீட்டு'ப் போடுகிறேன்.
கனவை, களத்தை, கருத்தை உள்ளிட்டால்
கவிதை தந்திடும் மெசினைத் தயாரிப்பீரா ?
குறளோ ? வெண்பாவோ ? கலிப்பாவோ ? சிந்துவோ ?
கேட்கும் பாடல் வகைகள் கிடைக்குமா?
எதுகையும் மோனையும் இயல்பாய் அமையுமா ?
சீர்களும் தளையும் சிறப்பாக வருமா ?
வல்லுனரே கவிதை மெசினை வார்த்திட
வேண்டிய வேலையை விரைவில் செய்யும்.
========================================
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
ஜூன் 14, 2008
=============
காசட்டைப் போட்டால் கவிதரும் ஓர்பொறி
யாசித்தார் இன்றுதித்த எல்லேயார் - பேசுகவி
ஆம்பாடிப் போற்ற அலுக்கா அரசியலார்
தாம்பெறுவார் பத்தாம் பொறி.
(ஆம்பாடி = ஆமாம் போட்டு)
நடராஜன்.
===========
அன்புள்ள எல்லே,
அற்புதமான அசத்தல் !!. இனி அசத்தப்போவது யாரு ??
அன்புடன்,
குமார்(சிங்கை)
===========
சொல்லாலே நகைச்சுவையைத் தந்துநம்மை மகிழ்விக்கும்
எல்லேயார் வரவுக்கு எல்லோரும் வாழ்த்து சொல்வோம்!
நகைக்கவைக்கும் நகைச்சுவையில் நாமறிய பலதகவல்
வகைபெறவே சொன்னவிதம் மனமகிழ்வைத் தந்திடுதே!
மரபுப்பா தானாக வந்துவிழும் இயந்திரத்தை
தரவேண்டி அறிஞரை வேண்டுகின்ற கவிநயம்தான்!
அன்புடன்,
தங்கமணி.
===============
'செம்ம'க் கவியப்பா! சிந்தைப் பொறியப்பா!
எம்முன்னே வேண்டுகிறார் எல்லே.எஸ் - சும்மா
ஒரு'பட்டன்' தட்டினால் ஊற்றெனவே பாக்கள்
தருகின்ற யந்திரத் தை.
பசுபதி
18-6-08
==============
பட்டனைத் தட்டிவிட்டாச்
சட்டெனத் தாளிலே பாட்டு
கொட்டணும். அக்கருவி
கிட்டணும் என்பார்
பட்டண வாசியாரே!
வாழ்த்துகள்! இனிய பாடல்.
அன்புடன்,
வி. சுப்பிரமணியன்
=================
கவிதை தந்திடும் மெஷினும் வரும்..
பட்டன் தட்டியதும்..
பட்டெனெ கேட்குமே..
வெண்பாவா?கலிப்பாவா?????
ஒரடியா? ஈரடியா???
தானாக எழுதனுமா?//
தளத்திலிருந்து காபியடிக்கணுமா???
ஹைக்கூ வேண்டுமா???
ஹாஸ்யம் வேண்டுமா??
புரட்சி வேண்டுமா???
புதுக்கவிதை வேண்டுமா?/
தலைப்பு சொன்னவுடன்..
தலை ஆட்டி..
தேடி புறப்படும்..
தெந்தமிழ் கவிதைதான்..
தலையும் சுற்றியே..
தொங்கித் தான் போயே..(hang)
கையை விரித்திடுமே..
கவலை ஏதுமின்றி..
சரிதானா.. சுவாமினாதரே????????
என் மகளும் கூட புரிந்து கொண்டு ரசித்த.. ஒரு அருமையான கவிதை..
ஒவ்வொரு வார்த்தைகளும்..
நகைச்சுவையின் உச்சகட்டம்..(FM radio மாதிரி )
anbudan
akilacsr
=============
>புதிதாய்க் கிடைத்த பேப்பர் துண்டில்
>புழுக்கைப் பென்சிலால் நுணுக்கி எழுதுகிறேன்.
விரும்பிய கவிதையை விரைவில் தருமொரு
கருவியைப் பெற்றுக் கவிவகை பலவும்
அழுகை இன்றி அடைந்திடும் ஆவலை
'புழுக்கைப் பென்சிலால் நுணுக்கி' எழுதிய
காரணம் என்ன? கணினியின் உள்ளே
பூரண மாகப் புகுந்திட அச்சமா?
கவலை வேண்டாம்! கவிதைக் கருவி
சவலை வெண்பா* தொடங்கிச் சந்த
விருத்தமும் இன்னும் விதவித மான
உருவுடைக் கவிதையை உயர்ரகப் பேப்பரில்
தரும்படி அமைப்போம் தாங்கள் அதன்பின்
வருத்தம் தீர்ந்து மகிழ்ச்சியில் திளைப்பீர்!
:-))
அனந்த்
19-6-2008
*குறள் வெண்பாக்கள் இரண்டை இணைத்து அமைக்கப்படுவது சவலை ('இலக்கணம்
மெலிந்த') வெண்பா.
==========================
வங்கி மெஷினும், விமானப் பதிவும்
வறுவல் போடும் எந்திரமும்
தங்கு தடையே இன்றிச் செயல்கள்
தந்து சேவை செய்கையிலே
இங்கே இன்னோர் எந்தி ரத்தை
எல்லே சாமி கேட்கின்றார்
பொங்கும் கவிதை, கேட்கும் வண்ணம்
பொழியும் மெஷினும் உண்டோகொல்?
எல்லோரும் போலவே இன்றிச்சிந் தித்தார்நம்
எல்லே சுவாமி இனிது.
வாழ்க!
இலந்தை
================
18.
கவியரங்கமே நிறையுநேரமே
செவிநிறைந்ததே மதிநிறைந்ததே
தனிச்சிறப்புகள் உறுகவிஞரும்
கனிச்செறிவுள கவிபெருக்கினார்
கடிதமாகவே கனவுசெப்பினார்
படிமமாகவே பதிந்ததிங்கவை
தருணமிதிலே
கைகள் கூப்பினேன் கண்கள் சுரக்கிறேன்
கவியரங் கினைநன் நிறைவு செய்கிறேன்.
அன்புடன்
நடராஜன்
====================
நெஞ்சுளோர்நிறை வெய்துமாறுநீர்
செஞ்சொலோர்களின் விஞ்சுபாக்களை
வஞ்சியாலுரைத் தின்றுவாழ்த்தினீர்!
உங்கள் அருமையான தலைமையை மிகவும் இரசித்த எனது மனமார்ந்த பாராட்டுடன்,
அனந்த்
================
இந்த அரங்கம் இனிதே நடப்பதற்கு
வந்த தலைமை வரமாகும்- முந்தும்
திடமான சிந்தை தெளிவாகக் கொண்ட
நடராஜன் வாழ்க நலம்
இலந்தை
==============
~*~o0O0o~*~
கவியரசர் கவிமடலைத் தந்தெம்மைக்
களிப்புறச் செய்ததிரு கணேசர் அவர்களுக்கு
நவிலுமென் உளமார்ந்த நன்றி உரித்தாக.
நிச்சயமாய் இதுவென்றன் சிந்தனையைக் கிளப்பிவிடும்.
கவியெழுதும் ஆவலினைத் தூண்டிவிடும் ஐயமில்லை.
காவியமும் பிறந்திடலாம், களிப்பூட்டும் நினைத்தாலே!
அவியாத ஊக்கமூட்டி அரும்பணி செய்துவரும்
அன்பர் கணேசன் அவர்களுக்கு மிக்க மிக்க நன்றியே!அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
புலவர் தனக்கு கம்பராமயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமாயண கருப்பொருளுரைஎன்னும் நூலை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சீட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சீட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமயணக் கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார். அச்சீட்டுக் கவி வருமாறு:
அரிய பகிர்வு. நன்றி திரு கணேசன்.
துரைசாமி மூப்பன் அவர்களுடைய கம்பராமாயண கருப்பொருளுரை நூல் இருக்கிறதா?
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சுவைமிக்க இழை ! தொடங்கியதற்கு நன்றி.
On Monday, 17 August 2015 00:16:34 UTC+5:30, N. Ganesan wrote:புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலி லாலாக்கடை அல்வா என்றால் மிகவும் பிரியம். ரகுநாதன் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்லி விட்டுப் போனார். சில தினத்துக்குள் புதுமைப்பித்தன் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது.
எனவே, தான் புறப்படும் தினத்தைக் குறிப்பிட்டு விருதுநரில் தன்னைச் சந்த்¢க்கும்படி கூறி ரகுநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் வெறுங் கடிதமல்ல; இரண்டு பாட்டுக்களைக் கொண்ட சீட்டுக்கவி.
''அல்வா எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! - அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.‘கெடி’ என்றால் என்ன ?ரயில் நிலையமா ?தேவ்